Sunday, September 2, 2018

காட்சி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


காட்சி

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)



வீதியெங்கும் கண்ணன் விளையாடிக்கொண்டிருந்தான்.

மரவண்ண ப்ளாஸ்டிக் தொட்டிலில் அமர்ந்தபடி அவனளவு இருந்த ஒரு பானைக்குள் கையைவிட்டு வெண்ணெயை எடுத்துக்கொண்டிருந்தான்.

பொம்மையென்றாலுங்கூட அருகில் சென்று அந்தக் குட்டிவாயைத் திறந்து
அகில உருண்டையைக் காணவேண்டுமாய் எழுந்த ஆவலைக் கட்டுப்படுத்திக்கொண்டேன்.

மயிற்பீலி சூடிக்கொண்டு புல்லாங்குழல் இசைத்துக்கொண்டிருந்தான்.
மௌனமாய் அதிலிருந்து பெருகிய இசையை உள்வாங்கியவாறு நகர்ந்தபோது
எதிர்ப்பட்ட பெண்களெல்லாம் ராதைகளாகத் தென்பட்டார்கள்.

அவர்களிடையே நானும் கோலாட்டமாட
அழுகையா உவகையா என்று பிரித்துணரவியலா
அனர்த்தம் வாழ்வென்ற ஞானம் அரைக்கணம் கைகூடியது.

அங்கே விற்கப்பட்டுக்கொண்டிருந்த மயிற்தோகையை விலைகேட்டேன்.
மயிற்பீலியின் தனித்தனி இழைகள் நிஜமோ நெகிழியாலானதோ….

ஒவ்வொரு தனியிழையும் ஒரு மயிலைக் கூட்டிவந்து
என் சின்னவீட்டின் பின்கட்டிலொரு நந்தவனம் கட்டி யதில் எத்தனையெத்தனையோ
மயில்களை தோகைவிரித்தாடச் செய்யும்போது
தெருவின் இந்த முனையில் ஒற்றைப் பீலியிழை இருபது ரூபாய்க்கும்
அந்த முனையில் பத்துரூபாய்க்கும் விற்கப்படுவதை யறிந்தும்
பேரம் பேச எப்படி மனம் வரும்?

பீலிவிற்கும் பெண்ணொருத்தி தோளில் சுமையோடு
தன் சிறுபிள்ளையைத் தரதரவென்று இழுத்துச்சென்றுகொண்டிருந்தாள்.

அவள் காலில் செருப்பிருந்தது;
பையன் வெறுங்காலில்.

குட்டிக் கிருஷ்ணன் காலை வெயிலின் வெந்தனல் சுட்டுப்பொசுக்குமா?
பொசுக்கத்தான் விடலாமா?

கையிலிருந்த காசில் குத்துமதிப்பான அளவுகளில் இரண்டு ஜோடி செருப்புகள் வாங்கிக்கொண்டு
திரும்பினால் _

கண்ணனைக் காணவில்லை.

எத்தனை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

என்னோடு எடுத்துக்கொண்டுவந்துவிட்ட காலணிகளை
மாட்டிக்கொள்ள
ஊரெங்குமுண்டு நீலவண்ணக்கண்ணன்கள்.

என்னிடமிருப்பதோ நான்கு செருப்புகள் மட்டுமே.





No comments:

Post a Comment