Wednesday, August 8, 2018

வரலாறு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


வரலாறு

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


சில தலைகள் எப்போதும் கைவசம் தேவை.
குட்டக் குட்டக் குனியவைக்க;
பட்டப்பகற்கொலைகொள்ளைக்கெல்லாம் பொறுப்பேற்கச் செய்ய;
தட்டுவதாலேயே தன் கையை மோதிரக்கையாக்கிக்கொள்ள;
தன் முதலாளித்துவத்தை சாதுர்யமாய் மனிதநேயவிரிப்பின் கீழ் தள்ள;
சரித்திரக் குற்றவாளியாக்கி  சரேலென்று அறுத்தெறிய;
பொருத்தமற்ற பொய்யுரைத்து புழுதிவாரியிறைக்க;
பேயரசைப் போர்த்திமறைக்க;
பிணந்தின்னும் சாத்திரங்களை ஒருசாராருக்கே உரித்தாக்க;
அவரவர் அதிகாரவெறியை அருவமாக்கித் திரிய....

வலியோரும் தம்மை எளியோராய் காட்டிக்கொள்ள வாகாய்;
மலிவாகும் வாழ்வுமதிப்புகளுக்கெல்லாம் கழுவேற்றத் தோதாய்;
பொத்தாம்பொதுவாய் போகிறபோக்கில் குண்டாந்தடியால் ஒரு போடு போட்டு உயிர்போக்க;
ஊருக்காயதைச் செய்ததாய்த் தன்னைக் கொலைக்குற்றத்திலிருந்து சுலபமாய்க் காக்க;
தத்தம் தீவினைகளையெல்லாம் தார்மீக எதிர்வினையாக நிலைநாட்ட….


எளிய தலைகளாய் எப்போதும் நான்கைந்து தலைகளைத் தயராய்க் கைக்கொள்ளத் தெரியவேண்டும்.
போலவே, மொந்தைகளாக்கப்பட்ட எளிய தலைகளை
மந்தைகளாக்கப்பட்ட மூளைகளில் 
முதன்மை எதிரிகளாக மிகச் சுலபமாய் சுட்டிக்காட்டவும்.


நேரங்கிடைக்கும்போதெல்லாம் ஆள்காட்டி அடையாளங் காட்டி உருவேற்ற மறக்கலாகாது.


பெரிதாக எதையும் செய்யத் தேவையில்லை.
பலிகடாக்களாக வாகாய் சில எளிய தலைகளை எப்போதும்
வன்முறையார்ந்த சொற்களால் எட்டித்தள்ளி யுருட்டிக்கொண்டே போகத் தெரிந்தால் போதும்.
ஏற்றத்தாழ்வுகளுக்கெல்லாமான சகலரோகத்தொற்றாகக் 
காட்டத் தெரிந்துவிட்டால் போதும் -
பல்லக்குகளையும் பல்லக்குத்தூக்கிகளையும் உங்கள் உடைமைகளாக
பலகாலம் பத்திரப்படுத்திக்கொண்டுவிட முடியும்.








No comments:

Post a Comment