Monday, August 20, 2018

அவள் அழுதுகொண்டிருக்கிறாள் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


அவள் அழுதுகொண்டிருக்கிறாள்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

அந்த நள்ளிரவில் 
அவள் அழும் விசும்பலொலி கேட்டு
கூட்டம் கூடிவிட்டது.
ஆச்சரியத்துடன் சிலர்;
அனுதாபத்துடன் சிலர்;
அக்கறையுடன் சிலர்;
சுடச்சுடச் செய்தி சேகரிக்கும்
ஆர்வத்தில் சிலர்;
தேர் சரிந்த பீதியில் சிலர்;
பாதி புரிந்தும் புரியாமலுமாய் சிலர்;
பெருங்குரலெடுத்து அட்டகாசமாய்
இளக்காரத்தோடு சிரித்தபடி சிலர்;
இதென்ன புதுக்கதை என்று
வரிந்துகட்டிக்கொண்டு
களத்திலிறங்கியவர்கள் சிலர்….
;அங்கிங்கெனாதபடியானவள்
ஆற்றொணாத் துயரத்தில்
பொங்கியழக் காரணமென்ன?
ஆளாளுக்குக் கேட்க ஆரம்பித்தனர்;
இவர் அவரின் அன்னையை
தாசியென்று பேச
பதிலுக்கு
அவர் இவரின் அன்னையை
வேசியென்று ஏச
ஆராரோ பாடி ஊட்டிவளர்த்த
அன்னையரெல்லாம்
யாராராலோ இப்படித் தம்
அந்திமக் காலத்தில்
தீராப் பழிசுமக்கும்
கோராமையை என்ணியெண்ணி
ஆறவில்லையே எம் மனது
என்று கூறியவள்
அழுகை
நின்றபாடில்லை.


No comments:

Post a Comment