Sunday, June 24, 2018

வழிச்செலவு ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


வழிச்செலவு
ரிஷி
(
லதா ராமகிருஷ்ணன்)
(*24.6.2018 திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ளது)

ஓருகாலத்தில் அதியற்புதமான வனாந்திரத்தில்
எனக்கேயெனக்கான நிழலை 
குடைவிரித்துப் பரப்பியிருந்த மரத்தடியில்
இன்று
நிற்க இடமில்லாமல் முண்டியடித்துக்கொண்டு பலர்.
சிலர் கிளைகளைப் பிடித்தாட்டி இலையுதிர்த்துக் களித்தபடி;
சிலர் தருமேனியெங்கும் தத்தமது காதலிகளின்
திருப்பெயர்களைச் செதுக்கியபடி;
சிலர் எக்கியெக்கி குதித்துக் கனிபறித்து ருசித்தபடி;
சிலர் தலவிருட்சமாய் பிரதட்சணம் செய்து
நெடுஞ்சான்கிடையாய் விழுந்து கும்பிட்டபடி.
சிலர் சலசலத்திருக்கும் பறவைகளைப் 
பலகோணங்களில் படமெடுத்தபடி…..
உணவிடுவார்களோ உரமிடுவார்களோ, தெரியவில்லை.
மரத்தின் பச்சையம் மாற்றுக்குறையாமலிருக்கிறதா
அறியேன்.
வனாந்திரம் மரத்தின் விருப்பா? அன்றி 
விபத்தாயமைந்த இருப்பா?
கனாக்கண்டு முடித்தபின் கண்விழித்த கதையாய்
பயணப்பொதி சுமந்துவழியேகும் தருணம் 
விழிநிரம்பும் நீர் வழியும்
மரம் வாழப் பொழிமழையாய்.


No comments:

Post a Comment