Monday, May 21, 2018

மேதகு மொழிபெயர்ப்புத் திறனாய்வாளர்கள் _ லதா ராமகிருஷ்ணன்



(*முன்குறிப்பு:
நியாயமான, தகுதிவாய்ந்த விமர்சகர்கள் என்றுமே மதிக்கப்பட வேண்டியவர்கள்; மதிப்புக்குரியவர்கள். இலக்கியம் சார்ந்த, மொழிபெயர்ப்பு சார்ந்த உண்மையான அக்கறையோடு அவர்கள் விமர்சனத்தை கண்ணியமாகமுன்வைக்கும் விதமே வேறு. இந்தக் கட்டுரை அவர்களுக்கானதல்ல)

மொழிபெயர்ப்பாளர்களின் 300 பக்கங்களில் 3 தவறுகளை, அதுவும் தப்புத்தப்பாய், சுட்டிக்காட்டுவதன் மூலமே மேதகு மொழிபெயர்ப்பு விமர்சகர்களில் முக்கியமான ஒருவராக வலம்வந்துகொண்டிருக்கும் பெருந்தகை ஒருவர் விரைவிலேயே மொழிபெயர்ப்பு தொடர்பான பல Ten Commandments – பிறப்பிக்கும் வாய்ப்புகள் தெளிவாகவே தெரிகின்றன. அவை குறித்த ஒரு Teaser:

அ)
மொழிபெயர்ப்பாளர்களுக்கான அவருடைய முதல் பத்துக் கட்டளைகள்:

1.நீ 30 நூல்களை மொழிபெயர்த்திருந்தால் என்ன? 300 நூல்களை மொழிபெயர்த் திருந்தாலென்ன? அடிப்படை மரியாதை கூட இல்லாமல் நான் உன்னைக் கேள்வி கேட்டால் கையைக் கட்டிக்கொண்டு பதில் சொல்லக் கற்றுக்கொள். இல்லை யென்றால், அடிப்படை முகாந்திரம் எதுவும் இல்லாமலேயே உன் மொழிபெயர்ப்பின் மீது சேறு வீசியடிக்க என்னால் முடியும். எச்சரிக்கிறேன்.

2.           Out of context இல் உன் வரிகள் சிலவற்றை எடுத்துக்காட்டி என்னை நல்ல மொழிபெயர்ப்புக்காக உயிரையும் கொடுக்கத் தயாராயிருக்கும் அப்பாவி வாசகராகவும் உங்களை (இல்லையில்லை உன்னை) மொழிபெயர்ப்புக்கலையைப் பழிக்கவந்திருக்கும் படுபாவியாகவும் மேடைக்கு மேடை முழங்க முடியும்.

3.   ஆம், அடிப்படை மரியாதையில்லாமல் உன் மொழிபெயர்ப்பைக் கொச்சைப்படுத்தி என் நிலைத்தகவலில் கிசுகிசுப்பேன். அதே மூச்சில் உனக்கு ’நட்புக்கோரல்’ அழைப்பு அனுப்புவேன். மரியாதையாக ஏற்றுக்கொண்டால் பிழைத்தாய். இல்லையோ, முன்னிலும் கேவலமாக உன் மொழிபெயர்ப்புகளை மதிப்பழிப்பேன். நவ விமர்சகக் கலையின் நெறி இது. புரிந்து கொண்டால் உனக்கு நல்லது.

4.ஒவ்வொரு வரியை மொழிபெயர்ப்பதற்கு முன்பாகவும் என்னை தொலைபேசி யிலோ, மின்னஞ்சலிலோ ஒப்புதல் கேட்கத் தவறாதே. மொழிபெயர்ப்பில் உனக்கு இருபது வருடங்களுக்கு மேல் அனுபவம் இருந்தால் என்ன? விமர்சனம் என்ற பெயரில் ஆள்காட்டி விரலை அப்படியும் இப்படியும் ஆட்டி, ஒற்றைப் புருவத்தைச் சற்றே உயர்த்தி உதடுகளுக்கிடையில் இளக்காரச் சிரிப்பொன்றை க்விக்ஃபிக்ஸ் போடாத குறையாய் நிலைத்திருக்கச் செய்து நான் மைக் முன்னே நின்றாலே போதும் – உனக்கு சமாதிதான்.

5.           எனக்கு இருமொழிப்புலமை இருக்கிறதா என்றா கேட்கிறாய்? -– என்ன திமிர்? எனக்கு இருமொழிப்புலமை இருக்கிறதோ இல்லையோ உன்னை அறிவுகெட்ட அரைகுறை மொழிபெயர்ப்பாளர் என்று அவ்வப்போது முழங்க அரங்கங்கள் கிடைத்துவிடுகின்றன. அதுவே முக்கியம்.

6.   வேறு சிலரின் பெயர்களைச் சொல்லி அவர்களுக்கு விமர்சனம் செய்யும் தகுதி இருக்கிறது – எனக்கு இல்லை என்கிறாயே – பித்துக்குளி, தகுதி என்பது தானாக வருவதில்லை. நானாக எடுத்துக்கொள்வதுதான். நான் உன்னை மட்டமான மொழிபெயர்ப்பாளர் என்று பழிக்கலாம், மதிப்பழிக்கலாம் – நீ என் விமர்சகத் தகுதியைப் பற்றிப் பேசினாலோ உன் ரியாக்‌ஷனை ஆக்‌ஷனாகக் காட்டி உன்னை ஆணவக்காரியாக அரைநொடிக்கும் குறைவான நேரத்தில் என்னால் ’ஃப்லிம்’ காட்டிவிட முடியும் தெரியுமா?

7.   நான் கவிதையை சிறுகதை என்று கூறலாம். குறுநாவலை நாவல் என்று கூறலாம். அது என் உரிமை. அதை நீ சுட்டிக்காட்டினாலோ, கேள்வி கேட்டாலோ – உன் மொழிபெயர்ப்பை இன்னும் இரண்டு தட்டுத்தட்டுவேன். பார்க்கிறாயா?

8.           நீச்சல்குளம் வரும் கதையை மொழிபெயர்க்கப் புகுமுன் நீச்சல் கற்றுக்கொண்டு வா. இதையே நீட்டித்தால் – கொலை இடம்பெறும் கதையை மொழிபெயர்க்குமுன் ஒரு கொலையாவது செய்துபார்.

 நீ மொழிபெயர்க்க எடுத்துக்கொண்ட ஆங்கில மொழியாக்கமும், நான் உன் மொழி பெயர்ப்பைப் பழித்துரைக்க எடுத்துக்கொண்ட ஆங்கில மொழியாக்கமும் இருவேறு நூல்களாக இருந்தால்தான் என்ன? இதுக்குப் போயி அலட்டிக்கலாமா?

10.       சீட்டாட்டமே தெரியாமல் சீட்டாட்டம் பற்றிய நூலை மொழிபெயர்த்த தற்காய் உனக்கு மரணதண்டனை விதிக்கிறேன். அதுசரி, உனக்கு சீட்டாட்டம் தெரியும் என்கிறாயே – எப்படி நம்புவது? வெறும் வாய் வார்த்தையாய் ஆர்ட்டின், க்ளாவர், ஸ்பேடு, டையமண்ட் என்று சொன்னால் ஆயிற்றா? உன் மண்டையை உடைத்து மூளையின் எந்த இடுக்கில் அவற்றின் பிம்பங்கள் நினைவலைகளாக அசைந்து கொண்டிருக்கின்றன என்று காட்டு பார்க்கலாம். அதன் பிறகு, உனக்கு சீட்டாட்டம் தெரியும் என்று ஒப்புக்கொள்வதைப் பற்றி யோசிக்க முடியலாம்.

ஆ 
திருமிகு மொழிபெயர்ப்புத் திறனாய்வாளர் தனக்குத்தானே தந்துகொள்ளும் பத்துக் கட்டளைகள்:

[*நடுக்குறிப்பு:மற்றவர்களுக்குச் சொல்லித்தராமல் ரகசியமாய் வைத்துக்கொண்டி ருக்கும் விமர்சக சூத்திர முத்திரை வாசகங்களில் பத்தை  வழக்கம்போல் இன்றிரவும் உறங்கச் செல்லும்முன் தனக்குத் தானே உச்சாடனம் செய்துகொண் டார் – பிறருடைய மொழிபெயர்ப்பைப் பிய்த்துப் பிய்த்தே திருமிகு திறனாய்வாளராகிவிட்டவர்:

1.அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்ற பழமொழியை  நினைத்துப்பாரு.
அச்சுப் பிழைகளையும் மொழிபெயர்ப்புக் குறைபாடாக அடித்துக்கூறு..

2.           பெரிய பெரிய மான்யங்களெல்லாம் வாங்கி பெரிய பெரிய பதிப்பகங்கள் வெளியிடும் மொழிபெயர்ப்புகளை மறந்தும் விமர்சிக்க முற்படாதே. நடுநிலை யாளராகக் காட்டிக் கொள்ளத்தான் வேண்டுமென்றால் செல்லமாய்த் திட்டு; வலிக்காமல் இரண்டு தட்டு தட்டு. (உன் எழுத்துகள் அவர்களால் புத்தகமாக்கப்படலாம் ஒருநாள். ஆதலால், வாலைச் சுருட்டிக்கொண்டிருப்பதே புத்திசாலித்தனம்.)

3.அந்தக் குழு இந்தக் குழுவில் இருப்போரெனில் பதிப்பாளரையும் மொழிபெயர்ப் பாளரையும் பற்றி முடிந்தால் அடைமொழிகளிட்டுப் பாராட்டு – இல்லை வாயைப் பொத்திக்கொண்டு அடங்கியிரு. எந்தக் குழுவிலும் இல்லாதவரெனில் எட்டியுதைக்கத் தவறாதே.

4.சாமான்யர்கள் அண்டா குண்டா அடகு வச்சு கொண்டாரும் மொழிபெயர்ப்பு நூல்களைக்  குத்திக் குதறு. அவர்கள் கதறியழுது உன் காலடியில் விழவில்லை யாயின் உணர்ச்சியற்ற துக்கிரி என்று கொக்கரி. ‘_ இது என்ன எழவு மொழிபெயர்ப்பு வரி? குடித்ததேயில்லை இப்படியொரு குமட்டலெடுக்கும் காப்பி, எத்தனை கசப்பு, எத்தனை சிக்கிரி, எப்படித்தான் குடிப்பார்களோ வாசகர்கள்? இது லாகிரி யிழந்த மொழிசெய்துகொள்ளும் ஹரகிரி (அ) ஹராகிரி’ என்று வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் எதுகை-மோனையோடு காறித்துப்பிவிட்டு குரலெடுத்துச் சிரி. பெரிய திறனாய்வாளனாய் அறியப்பட்டுவிடுவாய். நினைப்பு தான் பொழப்பைக் கெடுக்கும் என்று அசரீரி போல் ஏதோ அடியாழ மனதிலிருந்து கேட்டால் புறக்கணித்து மேலே செல்.)

5.மற்றவர்கள் வருவார்கள் என்ற முன்னெச்சரிக்கையோடு மூல நூலையும் மொழி பெயர்ப்புநூலையும் மேசை மீது அருகருகே வைத்துக்கொள்.

6.           மறவாதே ஆறேழு பூதக்கண்ணாடிகள் எப்பொழுதும் கையிலிருக்கட்டும். Said, told என்று சுலபமான இரண்டு சொற்களை மொழியாக்க நூலிலிருந்து எடுத்துக்கொண்டு சொன்னார் , கூறினார் இரண்டில் இது சரி அது சரியில்லை என்று பலவிதமாய்ப் பேசி, யேசி மொழிபெயர்ப்பின் அக்மார்க் திறனாய்வாளராக உன்னை அடையாளம் காட்டிக்கொள்.

7.   மூலநூலையும் மொழிபெயர்ப்புநூலையும் நீ முழுவதும் படித்திருக்கிறாயா? ஒரு மொழியாக்க நூலுக்கு ஆங்கிலத்தில் பல மொழியாக்கங்கள் உண்டு அறிவாயா? அந்த மொழியாக்க நூல்களனைத்தையும் படித்திருக்கிறாயா? முக்கியமாக, மூல ஆசிரியரின் மற்ற நூல்களையெல்லாம் படித்திருக்கிறாயா?’ என்று யாரேனும் எதிர்க்கேள்வி கேட்டால் அவரை விமர்சன விரோதி என்று அடையாளம் காட்டப்பார். ‘ வா சண்டைக்கு’ என்று பின்வாங்கியபடியே வீரமுழக்கம் செய்.

8.           கையில் கிடைத்த அப்பாவி மொழிபெயர்ப்பாளர் மண்டையைக் கால்பந்தாய் உருட்டிக்கொண்டே போ. இலக்கியவுலகின் முடிசூடா விமர்சக ஒலிம்பிக்ஸ் வீரராய் சுலபமாய் அறியப்பட்டுவிடலாம்.

 9.அறம் என்று ஒருவேளை மனசாட்சி முனகினால் அதைக் கழற்றி மரத்தடியில் எறிந்துவிட்டு மேலே செல்.

 10.மொழிபெயர்ப்பு விமர்சகரென்றால் சும்மாவா? இல்லாத ஒளிவட்டத்தை ஆடியில் தினம் தலைக்குப் பின்னால் எல்லாநேரமும் இருப்பதாகக் காணும் இன்பம் _ அட, அம்மாவோ!

 பத்துக் கட்டளைகள் – சக விமர்சகர்களுக்கு

மற்றவர்களுக்குச் சொல்லித்தராமல் ரகசியமாய் வைத்துக்கொண்டிருக்கும் விமர்சக சூத்திர முத்திரை வாசகங்களிலிலிருந்து மொழியாக்க விமர்சகராக விரும்பும் பிறருக்கு போனால் போகட்டும் என்று எடுத்துக்கொடுக்கும் பத்துக் கட்டளைகள்:

1.ஒரு படைப்பாளியின் ஒரு படைப்பை மொழிபெயர்க்க அந்தப் படைப்பாளி எழுதியுள்ள மற்ற அத்தனை படைப்புகளையும் படித்திருக்கவேண்டும் என்பதோடு அவர் படைக்க நினைத்த படைப்புகளையும் படித்திருக்கவேண்டும் என்பது மொழியாக்கத்தில் ஈடுபடுவோ ருக்கான எழுதப்படாத விதி என்று முகத்தில் தீவிர பாவத்தோடு கூறவேண்டும். இதற்காக நிலைக்கண்ணாடி முன் நின்று நான்கைந்து நாட்கள் ஒத்திகை பார்க்கவேண்டியிருக்கும்.

2.அதுவே, ஒரு மொழிபெயர்ப்புப் பிரதியை விமர்சிக்க ஒருவருக்கு இருக்கவேண்டிய குறைந்தபட்சத் தகுதியென்ன என்று யாரேனும் நாக்கு மேல பல்ல போட்டு கேட்டாலோ –பதிலளிக்கத் தேவையில்லாத அரைக்கிறுக்கன் கேள்வியது என்பதுபோல் முகபாவம் தாங்கி அதைப் புறக்கணித்துச் செல். அடுத்த முறை (போயும் போயும்) உன்னிடம் திறனாய்வு குறித்த கட்டுரை எழுதச்சொல்லி கேட்கப்பட்டால் மறவாமல், மொழிபெயர்ப்புத் திறனாய்வு என்ற போர்வையில் மிக வன்மமாய், மிக வக்கிரமாய் அந்த மொழிபெயர்ப்பாளரை மட்டையடி அடி..

3.மொழிபெயர்ப்பாளரா மொழிபெயர்ப்புத் திறனாய்வாளரா – யாரையாவது பட்டிமன்றம் நடத்த வைத்து அதில் நீ மொழிபெயர்ப்புத் திறனாய்வாளருக்கு சார்பாய் வாதிடு. முன்னூறு பக்கங்களில் எங்கேயாவது ஒளிந்திருக்கக்கூடிய ஒரு சில பிழைகளை அல்லது ஒரேயொரு பிழையை தேடிக்கண்டுபிடிப்பது என்றால் சும்மாவா? அதுவும் தவிர, பிழையில்லாததையும் பிழையாகத் திரித்துக் கூற ஒரு சாமர்த்தியம் தேவையல்லவா? அது உன்னிடம் இருக்கும்படி பார்த்துக்கொள்.

4.இப்பொழுதெல்லாம் இலக்கியவாதிகளை கௌரவிப்பதாய் நடத்தப்படும் பல விழாக்கள் உண்மையில் விழா நடத்துபவர்கள் மேல் வெளிச்சம் விழச்செய்வதற்காகவே நடத்தப்படு கின்றன என்பது வெட்டவெளிச்சமாகவே தெரிவதால் நான்குவார்த்தைகள் நல்லபடியாக விழாக்குழுவைப் பாராட்டிப் பேசுவாய் என்று தெரிந்தால் போதும் – உனக்குக் கட்டாயம் சிறப்புரையாற்ற அழைப்பு விடுக்கப்படும். ஒரு பிரதி குறித்துத் திறனாய்வு செய்வதற்கான தகுது உனக்கிருக்கிறதா என்பதில் அக்கறை காட்ட மாட்டார்கள். எனவே, உன் பாடு கொண்டாட்டம்தான்.

5.வெட்ட வாகாய் ஒரு மொழிபெயர்ப்பாளர் தலையைக் கையோடு பொதிந்து கொண்டுபோ. ரத்தம் சொட்டச் சொட்டக் கொண்டுபோனால் மறுநாள் தலைப்புச் செய்தியாகிவிடுவாய். இப்பொழுதெல்லாம் கொலைகாரர்களும் கொள்ளைக்காரர்களும் தானே அச்சு, ஒலி – ஒளி ஊடகங்களிலெல்லாம் அங்கிங்கெனாதபடி…… எனவே, உனக்குப் பேரும் புகழும் கிடைப்பது காலத்தின் கட்டாயத் தேவையாகிவிடும்

6.கழுவேற்றப்போகும் மொழிபெயர்ப்பாளர் மேல் கல்லடித்துக்கொண்டே எந்த மொழிபெயர்ப் பாளரின் கடைக்கண் பார்வை பட்டால் நல்லது என்று தோராயமாகக் கணக்கிட்டிருக்கிறாயோ அவருடைய மொழிபெயர்ப்பை ஆஹா ஓஹோ என்று புகழப் பழகவேண்டும். அதற்காக வாவது, சம்பந்தப்பட்ட மூலநூல்களின் அரை முக்கால் பக்கங்களை சிரமம் பார்க்காமல் படித்துக்கொண்டுவிடு. அப்படியே மொழிபெயர்ப்புநூலின் ஒரு சில பக்கங்களையும் படித்துக் கொண்டுவிடு.

7.கண்ணுக்குப் புலனாகும் அளவில் பிழைகள் இருப்பின் ‘கப்’பென்று பிடித்துக்கொள் – அவற்றைக் கொண்டு மொத்த மொழியாக்கத்தையுமே ‘கண்றாவி’ என்று அருவருப்பாக முகத்தைச் சுளித்துக்கொண்டு கரித்துக்கொட்டுவது எளிது.

8.அப்படி பிழையெதுவும் தெரியாவிட்டாலும் பரவாயில்லை – ’ஒரு மொழிபெயர்ப்பு இயல்பாக நகர வேண்டும், மூல நூலை நான் படிப்பது போன்ற உணர்வை எனக்கு ஏற்படுத்தவேண்டும்’, ’இரு கலாச்சாரங்களும் இரண்டறக் கலந்திருக்கும் (அல்லது கலந்திருக்காத) மொழிபெயர்ப்பே மேம்பட்டது’, என்று பொத்தாம்பொதுவில் சில வாசகங்களைக் கூறி அந்த மொழிபெயர்ப்பை ‘வெத்துவேட்டாக’ கையடித்து சத்தியம் செய்யாத குறையாக திரும்பத் திரும்பக் கூறலாம் – முன்மொழிவது, வழிமொழிவது எல்லாப் பொறுப்புகளையும் சிரமேற் தாங்குபவராய்.

9.தமிழகமே கேட்கிறது, தமிழகமே அழுகிறது, இந்தியாவே அஞ்சுகிறது, இகபரலோக மெல்லாம் கெஞ்சுகிறது என்பதாக ஒற்றை நபர் தன்னையொரு பிரபஞ்சமாக பாவித்துப் பேசுவது இப்பொழுதெல்லாம் ‘ட்ரெண்டிங்’ ஆகியிருக்கிறதல்லவா. யார் இதற்காக ’ரகசிய வாக்கெடுப்பு’ நடத்தி ஆதாரம் தேடப்போகிறார்கள்? அதனால் தைரியமாக அதைப் பின்பற்றி நாமும் ‘இந்த மொழிபெயர்ப்பு அசிங்கமானது என்று ஆயிரமாயிரம் வாசகர்கள் ஆவேசப் படுகிறார்கள்’ என்றோ ’அத்தனை பக்கங்களும் குத்தம் குறை நிறைந்தது’ என்றோ கைபோன போக்கில் எழுதிவிடலாம்; கம்பீரமாய் அரங்கில் வாசித்துக்காட்டலாம். சரியான ஏற்ற இறக்கங்களோடு குரல் கமறாமல் முன்கூட்டியே தண்ணீர் குடித்து, படித்தால் கண்டிப்பாகக் கைத்தட்டல் கிடைக்கும்.

10.       ஒரு வரியின் மொழிபெயர்ப்பு சரியில்லை என்று மட்டும் சொல். அதை எப்படி சரியாக மொழிபெயர்ப்பது என்று சொல்லிவிடாதே – (’அது எனக்குத் தெரியாதே, அதைச் செய்தால் நான் அம்பலப்பட்டுவிடுவேனே’ என்று நீ சொல்லாமல் சொல்வதை உன் முகமே காட்டு கிறது. ஆனால், அது அரங்கிலுள்ளோருக்கு அல்லது அச்சு ஊடக, கணினித்திரை வாசகர் களுக்குத் தெரிந்துவிடலாகாது. மொழிபெயர்ப்பு மேல் அத்தனை அபிமானமுள்ளவராகக் காட்டிக்கொண்டேயிரு. ஆனால், மறந்தும் நீ ஒரு சிறுகதையைக்கூட, ஏன் சிறு கவிதை யைக்கூட மொழிபெயர்த்துவிடாதே. செய்தால், நீ இரக்கமற்றுக் கழுவேற்றிய மொழிபெயர்ப் பாளர்களின் ஆவிகள் கூட்டமாய் வந்து, உன் திறனாய்வு வார்த்தைகளைக் கொண்டே உன் தலையை சீவிவிடும் (சீவிவிடுமென்றால் சீப்பால் வாரிவிடுவதில்லை, வாளால் வெட்டிவிடுவது!) சாத்தியப்பாடுகள் அதிகம். ஆகவே ஆபத்தை விலைகொடுத்து வாங்காதே. அவ்வளவுதான் சொல்லமுடியும்.



No comments:

Post a Comment