Monday, May 21, 2018

வழக்கு - ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)


ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)


இல்லையென்பதற்கும் பார்த்ததில்லை யென்பதற்கும்
இம்மிக்கும் பலமடங்கு மேலான வித்தியாசம்…….
எனவே இன்னொரு முறை சொல்லச் சொல்லிக் கேட்டேன்.
குருவி என்று எதுவும் கிடையாது என்றார் திரும்பவும்.
இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவர்.
புத்துசாலிதான்…..
குருவியைப் பார்த்ததில்லை யென்றால் புரிந்துகொள்ளலாம்.
குருவியென்று எதுவுமே இல்லையென்றால்…..
படங்களைக் காட்டினால்க்ராஃபிக்ஸ்என்றார்.
ஓவியங்களைக் காட்டினால் வரைந்தவரின்கிரியேட்டிவிட்டிஎன்றார்.
குருவிகள் சாகாவரம் பெற்று சிறகடித்துக்கொண்டிருக்கும் கவிதைகளை வாசித்துக்காட்டினால்
கவியின் மெய் பொய்தானேஎன்று கண்ணடித்தார்.
நானே பார்த்திருக்கிறேன் என்றேன்.
காட்சிப்பிழை என்றார்.
குருவி யொரு குறியீடு மட்டுமேஎன்றார்.
தூலமல்ல; சூக்குமமேயென்றார்.
ஆன்மா சூக்குமமா தூலமாயென்றேன்
அப்படியென்றால் குருவி ஆன்மாயென்கிறாயா?
ஆமென்றால் உன் கேள்விக்கு பதில் அதுவேஎன்றார்
அதிமேல்தாவியாய்.
பதிலுக்கு
குருவியின் குட்டிமூக்கு எத்தனை அழகு!’ என்றேன்.
தொட்டுப்பார்த்திருக்கிறாயா என்ன? கத்தாதேஎன்றார்.
கண்ணால் வருடிச் சிலிர்த்திருக்கிறேன்;
என் காமராவில் சிலையாய் வடித்திருக்கிறேன்என்றேன்.
யாருடைய கைக்கூலியாகவோ பொய்சாட்சியம் பகர்கிறாய்என்றார்
விட்டுவிடுதலையாகி நிற்பாய்என்ற பாரதி வரியை மொழியத்தொடங்குவதற்குள்
வசனம் பேசாதே, நிரூபிக்கும் வழியைப் பார்என்றார் வெற்றிப்புன்னகையோடு.
அன்றுமுதல் அலையோ அலையென அலைந்து,
ஏழு கடல் ஏழு மலை எத்தனையோ பாதாளம் வேதாளம் தாண்டி,
ஒரு குகைக்குள்ளிருந்த குருவியைக் கண்டுபிடித்து
இருநூறு இறக்கைகளை யதற்குப் பொருத்தி
ஒரே சமயத்தில் நாலாபக்கங்களிலும் அங்கிங்கெனாதபடி சிறகடித்துப் பறந்துகொண்டேயிருக்க
அதற்குக் கற்றுக்கொடுத்தேன்.
கச்சிதமாய் எச்சமிட்டுத் தன் இருப்பை
முற்றிலும் உண்மையென நிரூபிக்க
அந்த மனிதரின் உச்சிமண்டையை அடையாளங்காட்டியிருக்கிறேன்
.


No comments:

Post a Comment