Thursday, May 31, 2018

மாறும் அளவுகோல்களும் மொழிப்பயன்பாடுகளும் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

மாறும் அளவுகோல்களும்
மொழிப்பயன்பாடுகளும்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


இல்லை இல்லை எங்கப்பன் குதிருக்குள் இல்லை” 
என்று திரும்பத் திரும்பக் கூறத்தொடங்கிவிட்ட
வர்களைப்பார்த்தபடி 
குதிருக்குள் எட்டிப்பார்க்கச் 
செல்லத்தொடங்கிவிட்ட மக்களை _


மாக்கள் என்று சொல்லிவிட்டார் உங்களை
இனியும் பேசாதிருக்கப் போகிறீர்களா?” 
என்று கேட்டவர் அச்சு ஊடகங்களின் 
இரண்டறக் கலந்த அம்சமான அச்சுப் பிழைகளைச் 
சுட்டிக்காட்டுவதில் கைதேர்ந்தவர்.


அவருக்குத் தெரியும் மக்கள் மாக்களானது பிழை
பார்ப்பிலான விடுபடல் என்று
ஆனாலும் அது சொன்ன வாயின் 
மாலயத் தவறென்றுதிரும்பத் திரும்ப 
உருவேற்றிக்கொண்டிருப்பதோடு _

சுப்பர் என்று சொல்லாமல் சுப்பன் என்று 
பெயர் வைக்கச் சொன்னது 
என்னவொரு மரியாதைகெட்டதனம்
என்றுவேறு சொன்ன கையோடு _

அப்பர் என்னாமல் அப்பன் என்று நாங்கள் சொல்வது 
மரியாதைகெட்ட தனமல்ல 
மிகு அன்பில் விளைந்த உரிமை
என்று, கேளாமலே ஒரு விளக்கத்தை 
வைத்ததைக் கேட்டபடியே _


குதிரிருக்கும் இடத்தை 
மேலும் நெருங்கிக்கொண்டிருக்கும் மக்களை 
எப்படி தடுத்துநிறுத்துவது என்று புரியாமல் _


கடித்துப் பார்த்து கனியில்லை காயே என்று 
அத்தனை திமிராய் தன் கருத்தை யுரைக்கும் 
அந்த நாயே கல்லில் அடிபட்டுச் சாகும் தன் விதியை 
இப்படிக் குரைத்துக்குரைத்து எழுதிக்கொண்டாயிற்று 
என்றொருவர் அத்தனை பண்போடு தன் கருத்துரைக்க _

அதிகார வர்க்க அடிவருடி என்று அதி காரமாய் 
தப்புக்குறிபோட்டு ஆயிரம் முறை 
காறித்துப்பியும் ஆத்திரம் தீராமல் _

பன்றி பொறுக்கி நன்றி கெட்ட நாசப்பேயே நாலுகால் 
நரியை விடவும் நீசநெஞ்சக்கார ஆண்டையே 
இன்னும் நாண்டுகிட்டு சாகவில்லையா நீ 
பேண்டு முடித்தபின்னாவது போக உத்தேசமுண்டோ 
   முழக்கயிறு வாங்க?” வென 
நயத்தக்க நாகரிகமொழியில் 
மூத்திரத்தை சிறுநீர் என்றெழுதும் கவிதைவரிகள் 
காற்றில் பறந்துபோக 
வார்த்தைக்கற்களை வீசிக்கொண்டேயிருக்கும் 
படைப்பாளிகள் சிலரும் _

 ”உடை உடை யந்தக் கடைந்தெடுத்த நீச மண்டையை 
என்று
ஆன்றோர்கள்
ஆசிரியப் பெருமக்கள்
அரசியல்வாதிகள்,
இன்னும் இன்னுமாய் 
அத்தனை அமைதிப்புறாக்களைப்
பறக்க விட்டபடி யிருக்க


ஒவ்வொரு புறாவின் காலிலும் 
கூர் கத்தி
அரை ப்ளேடு,
பாட்டில் துண்டு
தகரத் தகடு, 
அமில பலூன்  என
பார்த்துப்பார்த்துக் கட்டப்படுவதை 
திரும்பித் திரும்பிப்
பார்த்தபடியே _

 மக்கள் இன்னுமின்னும் 
முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள்
குதிருக்குள் எட்டிப்பார்த்துவிட.



Ø  

No comments:

Post a Comment