Monday, May 21, 2018

’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்






ஊருக்கு உபதேசம்


நாவடக்கம்
வேண்டும்
நம்மெல்லோருக்கும்.


ஆபத்தானவர்கள்

அவரவர் கோபுரத்துள் அமர்ந்தபடி
அக்கிரமக் கருத்துரைத்து
அமைதியிழக்கும் ஊருக்காகவும்
அடிபட்டுச் சாவும் சகவுயிர்களுக்காகவும்
கவனமாய்
’க்ளோசப்’ பில் கண் கலங்குபவர்கள்.

Ø

புதிர்விளையாட்டு.

காயம்பட்ட ஒருவரை
ஸ்ட்ரெச்சரில் ஏந்தி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வதற்கும்
பாடையில் தூக்கி சுடுகாட்டிற்குக் கொண்டுசெல்வதற்கும்
இடையே
குறைந்தபட்சம் ஆறு வித்தியாசங்களாவது உண்டுதானே.

Ø

முகமூடி

அதிவேகத்தில் விரையும் ரயிலின் அருகில் நின்று ஸெல்ஃபி எடுத்துக்கொண்டால் ஆபத்து.
அன்பே உருவாயொரு களங்கமில்லாக் குழந்தையாய்
என்றேனும் சிரிக்கக் கிடைத்திருந்தால்
அதை மறவாமல் ஸெல்ஃபி எடுத்துவைத்துக்கொள்ளுங்கள்.
தேவைப்படும்போதெல்லாம் அதை வெளியிட்டுக்கொள்ளலாம் –
ரத்தவெறிபிடித்த கோரமுகத்தைக் உள்ளுக்குத் தள்ளி.

Ø

பார்வைப்பரப்பு

அரைக்கோப்பை நிறைந்திருக்கிறதென்றார் ஒருவர்.
அரைக்கோப்பை காலியாக இருக்கிறது என்றார் ஒருவர்.
வாழ்க்கை குறித்த அவரவர் பார்வை என்று
உளவியலாளர் கூறுவது
அவர் பார்வையென்றுரைக்க
இன்னொருவர்…….

Ø

கவிமூலம்

இவர் சில வார்த்தைகளை உதிர்க்க
அவர் சில வார்த்தைகளை உதிர்க்க
ஒரு வரி உருவானது….. வரிவரியாய்
இருநான்கு பத்திகளைக்கொண்டமைந்த
அக்கவிதையில்
இரண்டறக் கலந்திருந்தவர்கள்
இன்று எங்கெங்கோ….
எதிரெதிர்துருவங்களாய்…
இறுகிப்பிணைந்திருக்கும் சொற்களாலான
கவிதை
சப்பரமாய் நின்றபடி.

Ø

அஷ்டாவதானம்

அன்பை ஒரு கையால் எழுதியவாறே
மண்டையையொன்றைப் பிளக்க
மறுகையால் கோடரியைத் தேடிக்கொண்டிருக்க,
வாழ்வின் நிலையாமையை வாய் போதிக்க
வகையாய் சிக்க ஏதேனும் பெண் கிடைப்பாளா
என்று கண் அலைய,
சமூகத்துத் துர்வாடைகளுக்கெல்லாம்
எதிர்ப்புகாட்டுவதாய் மூக்கு சுளித்து,
காதுகள் கவனமாய்
ஊர்வம்பை உள்வாங்கியபடி….


No comments:

Post a Comment