Thursday, May 31, 2018

மாறும் அளவுகோல்களும் மொழிப்பயன்பாடுகளும் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

மாறும் அளவுகோல்களும்
மொழிப்பயன்பாடுகளும்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


இல்லை இல்லை எங்கப்பன் குதிருக்குள் இல்லை” 
என்று திரும்பத் திரும்பக் கூறத்தொடங்கிவிட்ட
வர்களைப்பார்த்தபடி 
குதிருக்குள் எட்டிப்பார்க்கச் 
செல்லத்தொடங்கிவிட்ட மக்களை _


மாக்கள் என்று சொல்லிவிட்டார் உங்களை
இனியும் பேசாதிருக்கப் போகிறீர்களா?” 
என்று கேட்டவர் அச்சு ஊடகங்களின் 
இரண்டறக் கலந்த அம்சமான அச்சுப் பிழைகளைச் 
சுட்டிக்காட்டுவதில் கைதேர்ந்தவர்.


அவருக்குத் தெரியும் மக்கள் மாக்களானது பிழை
பார்ப்பிலான விடுபடல் என்று
ஆனாலும் அது சொன்ன வாயின் 
மாலயத் தவறென்றுதிரும்பத் திரும்ப 
உருவேற்றிக்கொண்டிருப்பதோடு _

சுப்பர் என்று சொல்லாமல் சுப்பன் என்று 
பெயர் வைக்கச் சொன்னது 
என்னவொரு மரியாதைகெட்டதனம்
என்றுவேறு சொன்ன கையோடு _

அப்பர் என்னாமல் அப்பன் என்று நாங்கள் சொல்வது 
மரியாதைகெட்ட தனமல்ல 
மிகு அன்பில் விளைந்த உரிமை
என்று, கேளாமலே ஒரு விளக்கத்தை 
வைத்ததைக் கேட்டபடியே _


குதிரிருக்கும் இடத்தை 
மேலும் நெருங்கிக்கொண்டிருக்கும் மக்களை 
எப்படி தடுத்துநிறுத்துவது என்று புரியாமல் _


கடித்துப் பார்த்து கனியில்லை காயே என்று 
அத்தனை திமிராய் தன் கருத்தை யுரைக்கும் 
அந்த நாயே கல்லில் அடிபட்டுச் சாகும் தன் விதியை 
இப்படிக் குரைத்துக்குரைத்து எழுதிக்கொண்டாயிற்று 
என்றொருவர் அத்தனை பண்போடு தன் கருத்துரைக்க _

அதிகார வர்க்க அடிவருடி என்று அதி காரமாய் 
தப்புக்குறிபோட்டு ஆயிரம் முறை 
காறித்துப்பியும் ஆத்திரம் தீராமல் _

பன்றி பொறுக்கி நன்றி கெட்ட நாசப்பேயே நாலுகால் 
நரியை விடவும் நீசநெஞ்சக்கார ஆண்டையே 
இன்னும் நாண்டுகிட்டு சாகவில்லையா நீ 
பேண்டு முடித்தபின்னாவது போக உத்தேசமுண்டோ 
   முழக்கயிறு வாங்க?” வென 
நயத்தக்க நாகரிகமொழியில் 
மூத்திரத்தை சிறுநீர் என்றெழுதும் கவிதைவரிகள் 
காற்றில் பறந்துபோக 
வார்த்தைக்கற்களை வீசிக்கொண்டேயிருக்கும் 
படைப்பாளிகள் சிலரும் _

 ”உடை உடை யந்தக் கடைந்தெடுத்த நீச மண்டையை 
என்று
ஆன்றோர்கள்
ஆசிரியப் பெருமக்கள்
அரசியல்வாதிகள்,
இன்னும் இன்னுமாய் 
அத்தனை அமைதிப்புறாக்களைப்
பறக்க விட்டபடி யிருக்க


ஒவ்வொரு புறாவின் காலிலும் 
கூர் கத்தி
அரை ப்ளேடு,
பாட்டில் துண்டு
தகரத் தகடு, 
அமில பலூன்  என
பார்த்துப்பார்த்துக் கட்டப்படுவதை 
திரும்பித் திரும்பிப்
பார்த்தபடியே _

 மக்கள் இன்னுமின்னும் 
முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள்
குதிருக்குள் எட்டிப்பார்த்துவிட.



Ø  

Friday, May 25, 2018

நாமெனும் நான்காவது தூண் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


நாமெனும் நான்காவது தூண்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


வயிற்றுப்பிழைப்புக்கென இழவுவீடுகளில்
ஒப்பாரி வைப்பவள் ‘ருடாலி


அப்படியும்
வாய்விட்டுக் கதறிமுடித்துக்
கூலியை வாங்கிமுடிந்துகொண்டு
வழியேகும்போதெல்லாம்
ஒவ்வொரு வீட்டின் ஆற்றொணாத் துயரமும் 
அவள் மீதும் தவறாது ஒட்டிக் கொள்ளும்.



இரவு கயிற்றுக்கட்டிலில் படுத்தபடி
ஒரு கையறுநிலை மனதை சுருக்கிட்டி இறுக்க
அண்ணாந்து வானத்தை வெறிக்கும் அவள் கண்களில்
மாட்டிக்கொண்டு பதறும் காலம் உருண்டிறங்கும்
நீர்த்துளிகளாய்.


இழவுவீட்டில் அலறியழும்போதெல்லாம்
இறந்துவிட்ட கணவன்,
இரண்டு பிள்ளைகள்,
இளமையதன் இனிய மாலைகள்
வெள்ளம் அடித்துக்கொண்டுபோய்விட்ட தன் ஊர்மக்கள்
பள்ளத்தில் விழுந்து காலொடிந்து மடிந்த ஆட்டுக்குட்டி
மெள்ள மெள்ள அடங்கிப்போன பொன்னியின் உயிர்
எல்லாமும் உள்ளே தளும்பித் தளும்பி மேலெழும்பி
சொல்லுக்கப்பாலான பிளிறலாய் வெளிப்படும்
அவளைப் பிளந்து.


இன்றுமொரு இழவுவீட்டில் அழுதுமுடித்து வந்தவள்
கலைந்த கூந்தல் முடியாமல்,
கசங்கிய சீலையின் கிழிசலோடு
ஒரு கவளமும் உண்ணப்பிடிக்காமல்
ஒரு மூலையில் சுருண்டபோது_


கையெட்டும் தொலைவிலிருந்த எதிர்வீட்டின்
விரியத்திறந்த கதவுவழியே தெரிந்த
தொலைக்காட்சிப்பெட்டியினுள்ளே
அழுது புலம்பிக்கொண்டிருந்த
அந்த நான்குபேர்
அத்தனை திருத்தமான ஆடையணிகளில்
 அத்தனை நரையையும்
அறவே காணதொழித்தகருப்புச்சாயத்
தலைமுடி மின்ன
ஒத்திகை பலமுறை பார்க்கப்பட்டதான
அதிதீவிர முகபாவங்களோடு
ஆக்ரோஷமாய் பேசிக்கொண்டிருந்தார்கள்.


அமைதி திரும்புதல்’ என்றொருவர்
சொல்லி முடிப்பதற்குள்
திரும்பலாகாது எதுவும் –
எப்போதும் முன்னேறிச்செல்லவேண்டும்
என்று அடுத்திருந்தவர்
மனப்பாடமாயிருந்த வாசகத்தை எடுத்துவீச
கணநேரம் வாயடைத்துப்போன நெறியாளரை
ஆசுவாசப்படுத்த
கடமை தவறாமையில் கதிரோனையும் விஞ்சும்
அட அட  என்ன அழகு’ விளம்பரம்
அரையாடையில்
காலகட்டி வீறிட ஆரம்பித்தது.



Ø  

Thursday, May 24, 2018

உள்வட்ட எதிரிகள் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)


 உள்வட்ட எதிரிகள்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


தயாராக சில வார்த்தைகள் வாக்கியங்களை 

சிலர்

எப்போதும் கைவசம் வைத்திருக்கிறார்கள்.


தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும்

துல்லியமாய்ச் சொல்லத் தெரிந்த அவர்கள்

ஊரில் நிலவும் குழப்பங்கள் 

துயரநிகழ்வுகள்

இயற்கைச்சீற்றங்கள் 

என

ஒன்றுவிடாமல்

தங்களுக்கான பயிற்சிவாய்ப்பாகப் 

பயன்படுத்திக்கொள்வார்கள்.


தேர்ச்சியே நோக்கமாய்

குறிபார்த்து அவர்கள் எறியும்

வார்த்தைகுண்டுகள்

தங்கள் இலக்கையடையத் தவறுவதேயில்லை.


அவர்கள் எறியும் சொற்குண்டுகள் உண்டாக்கும் 

ரணங்கள் 

ஆறாக்காயங்கள் 

நிவர்த்தியற்ற ஊனங்கள் 

உயிர்போகும் வலி

எதுவும் வெளிப்பார்வைக்குத் தெரியா

உட்காயங்களாய்.


நிராயுதபாணிகளின் உயிரை உறிஞ்ச இங்கே

நிறைய நிறைய பேர்.


சிலரின் அடையாளம் தெளிவாய்த் தெரிய



இன்னும் சிலருடையதோ 

பலவகையான நேயங்கள்பரிவுகளின் பெயரால்

நெய்யப்பட்ட போர்வையில்

பொதியப்பட்டிருக்கிறது.


வெடிகுண்டின் திரியில் தீவைக்கவேண்டிய

லைட்டரையோ

அல்லது எலெக்ட்ரிக் பொத்தானையோ

தன்னுள் ஒளித்திருக்கும்

அந்தப் பொதியின் மிக அருகே அமர்ந்தபடி நாம்


அடையாளம் தெரிந்தவர்களை

அறம்பாடிக்கொண்டிருக்கிறோம்.


அடையாளம் தெரிந்தவர்களை மட்டும்.