Monday, January 22, 2018

எது ஆபாசம்?

எது ஆபாசம்?
லதா ராமகிருஷ்ணன்


கவிஞர்கள் என்றால் எந்த அதிகார வர்க்கத்தோடும் தங்களை இணைத்துக்கொள்ளாமல் சமூகத்தின் நலிந்த பிரிவினருக்காகக் குரல் கொடுத்தால் நலம். ஆனால் இங்கு தங்களை ஒரு அதிகார வர்க்கத்தோடு வெளிப்படையாக இணைத்துக்கொண்டு அதன் மூலம் கிடைக்கும் ஆதாயங்களை அனுபவித்துக்கொண்டு தங்கள் மத அடையாளங்களோடும் வளைய வருபவர்கள் இந்து மதத்தை எள்ளிநகையாடுவதுதான் வழக்கமாக இருக்கிறது. இது வருத்தத்திற்குரியது.

ஆண்மையற்றவர்கள் என்று சொல்வதுதான் ஆபாசமா? ஒரு பெயர்பெற்ற எழுத்தாளரின் வாரிசு இந்தியப் பிரதமர் மோடி ஏதோ கண்காட்சியில் புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருப்பது போல் இருக்கும் புகைப்படத்தை தன்டைம்-லைனில்போட்டு இந்த சனி எப்பொழுதுதான் படமா தொங்கப் போகுதோ என்று எழுதுகிறார். இது அவரையும் அவரொத்தவரையும் பொறுத்தவரை முற்போக்கு சிந்தனை; அறிவுஜீவித்தனம்.

இப்படித்தான் இருக்கிறது இந்துமத நிந்தனையும்.

இன்று உலகமே ஒரு கிராமமாகிப்போன நிலையில் இந்தியாவில் மட்டுமே இருக்கிறது இந்துமதம். ஒருவகையில் இது சிறுபான்மையினத்தவர்களின் மதம். இதைத் திரும்பத்திரும்பக் கேவலப்படுத்திக்கொண்டேயிருப்போம், இது கருத்துச் சுதந்திரம் என்றால் எப்படி?
நாத்திகவாதம் பேசும் எத்தனை தலைவர்களின் வீட்டினர் கோயிலுக்குச் செல்லாமல் இருக்கின்றனர்? கடவுள் வேண்டா ஆனால், பேய், பிசாசு சீரியல்களாக வைப்பேன் என்றுதானே இவர்கள் நடத்தும் சேனல்கள் போட்டிபோட்டுக்கொண்டு செயல்படுகின்றன.

நயத்தக்க விதத்தில் நாத்திகக் கருத்துகளை முன்வைத்த எத்தனையோ உலக அறிஞர்கள் உண்டு. ஆனால் பொதுவாழ்வில் இருக்கும் திரு.வைரமுத்து போன்றோர் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இப்படியெல்லாம் கருத்துரைப்பது தெருச்சண்டை, வீட்டுச்சண்டைகளிலெல்லாம் உன் பெண்டாட்டி உத்தமியா, உன் அம்மா தட்டுக்கெட்டவ என்று பழிக்கும் ஆணாதிக்கசிந்தனைப் போக்கையே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இதற்காக மேரி மாதாவைப் பேசுவார்களா, கதீஜாவைப் பேசுவார்களா, இந்திரா காந்தியைப் பேசுவார்களா என்று நான் கேட்கமாட்டேன். அப்படிப் பேசலாகாது, இப்படிப் பேசுவதுதான் ஆபாசம் என்பதே என் கருத்து.

இந்த நிகழ்வையும் இந்தியப் பிரதமர் மோடியைப் பழிக்கக் கிடைத்த வாய்ப்பாக சிலர் எழுதுவதைப் பார்க்க வேதனையாயிருக்கிறது. மோடியின் அப்பா, அம்மா யார் என்று (அவருடைய வயதான தாயார் உயிரோடிருக்கும் நிலையில்)கேட்ட அறிவுசாலிகள் நம்மிடையே உண்டுதானே.

மறைந்த எழுத்தாளர்-கவிஞர் சதாரா மாலதி ஆண்டாளின் பாசுரங்களை முன்வைத்து எழுதிய நூல் உயர்பாவை என்ற பெயரில் சந்தியா பதிப்பக வெளியீடாக பிரசுரமானது நினைவுக்கு வருகிறது. ஆய்வுநோக்கில், ஒரு சக பெண்ணாக ஆண்டாளைப் பார்த்து எழுதிய கட்டுரைகளடங்கிய நூல் அது.
எந்தவிதமான மாற்றுக்கருத்துகளையும் மற்றவர்களை மதிப்பழிக்காமல், கண்ணியமான வழிகளில் முன்வைக்க முடியும். அது பிற்போக்குத்தனம் என்று கருதியோ என்னவோ, அந்த வழியைக் கைக்கொள்ள சிலர் முன்வருவதில்லை. அதனால்தான் எல்லாப் பிரச்சினையும்.

படிப்பும் இலக்கியமும் மனிதனைப் பண்படுத்தவேண்டும்; மேம்படுத்த வேண்டும். அப்படித்தான் செய்யும் என்று இன்றுவரை நம்பிக்கொண்டிருக் கிறேன்.

மனிதர்களிடையே மாற்றுக்கருத்துகள் இருக்கலாம். வெறுப்புகூட இருக்கலாம். ஆனால், திட்டமிட்டரீதியில் மக்களின் உணர்வுகளோடு விளையாடி ஊர் இரண்டுபட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு செயல் படுபவர்கள் உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறர்கள்.

சமீபத்தில் நியூஸ்18 தமிழ்நாடு சேனலின் சார்பில் சமீபத்திய ஆண்டாள் சர்ச்சை தொடர்பாக நடைபெற்ற தொலைக்காட்சி விவாதமொன்றில் தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலயப்பிரவேச்தை பெரியார் அவர்கள் எதிர்த்தார் என்று சொல்லப்பட்ட கருத்து இப்போது முன்னும் பின்னும் வெட்டப்பட்டு வலம்வந்துகொண்டிருக்கிறது. தமிழின் பெயர்பெற்ற கவிஞரும் இதைப் பகிர்ந்திருக்கிறார்.

இப்படி மக்களிடையே வெறுப்பை விதைப்பவர்கள் தங்கள் கோபுர மாளிகைகளுக்குள் பாதுகாப்பாய் இருப்பார்கள். வீதியில் எளிய மக்கள் இரண்டுபட்டுப் பகைமை பாராட்டி மோதிக்கொள்வார்கள். எத்தகைய போலி மனிதநேயக் காவலர்கள் நம்மிடையே என்று நினைத்து மிகவும் வருத்தமாக இருக்கிறது.

No comments:

Post a Comment