Friday, October 6, 2017

உங்கள் தோழமைக்கு நன்றி, பத்மினி மேடம்.

உங்கள் தோழமைக்கு நன்றி
பத்மினி மேடம்.


 












5.7.2017
அன்புமிக்க பத்மினி மேடம்,
இன்று காலை நான் ஃபேஸ்புக்கைத் திறந்தபோது நாமிருவரும் அதில் நட்பினராகி இரண்டு வருடங்களாகிவிட்டதாக ஃபேஸ்புக் அறிவித்திருந்தது. அதைப் படித்ததும் நினைவுப்பாதையில் நடக்க ஆரம்பித்து, (பொதுவாக அப்படிச் செய்வது என் வழக்கமில்லை) உங்களோடான நட்பு குறித்த சில இதமான எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதை (அப்படியானால் இதமற்ற கணங்களும் உண்டு என்று அர்த்தமில்லை. நம் நட்பில் அப்படி எதுவும் இருந்ததில்லை!) என்னால் தவிர்க்க முடியவில்லை. ஏனெனில், சக மனிதர்களை நிஜமான அக்கறையுடனும் மரியாதையுடனும் அணுகும், மிகச் சில மனிதர்களில் நீங்களும் ஒருவர்

மேலும், இதை நான் எழுத விரும்பியதற்கு இன்னுமொரு காரணம் - இதுபோல் இன்னுமொரு தருணம் வாய்க்காமலே போய்விடக்கூடும். (நான் மரணத்தைப் பற்றிப் பேசவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். நம் இருவருக்குமே அஞ்சலிக்கூட்டங்கள் உவப்பானதாக இருப்பதில்லை!)
உங்களைப் பற்றி நான் எழுதுவதை நீங்கள் விரும்பமாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால், என்னால் எழுதாமலிருக்க முடியவில்லை. நான் உள்நோக்கத்தோடு, சுயலாபத்திற்காக ஒருவரைப் பாராட்டமாட்டேன் என்பது உங்களுக்குத் தெரியும்.
‘’சிறைதிரைப்படம் குறித்து எல்லோரும் பரபரப்பாகப் பேசிக்கொண்டிருந்த சமயம், நான் கணையாழியில், அந்தக் கதையில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகும் பெண்ணை ஏற்க மறுத்து அவளை துரத்திவிடும் கணவனை வில்லனாக சித்தரித்து (அவனும் சமூக நியமங்களால் கட்டமைக்கப்பட்டவன்தானே என்பதைக் கணக்கிலெடுத்துக்கொள்ளாமல்) அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவனை மேலானவ னாகச் சித்தரிக்கும் போக்கை எதிர்த்து ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதைப் படித்துவிட்டு நீங்கள் என்னைப் பார்க்க வந்தீர்கள் (அப்பொழுது நான் சென்னை அபிராமபுரத்தில் ஒரு சிறிய வாடகைவீட்டில் குடியிருந்தேன்). என் கட்டுரையையும், அதில் நான் முன்வைத்திருந்த கோணத்தையும் பாராட்டினீர்கள். அன்று தொடங்கியது நம் நட்பு.
உங்களிடமிருக்கும் தீராத் தேடலும், சக மனிதர்களுடன்தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் _ இடையறாது உரையாடல் நிகழ்த்துவதில் உங்களுக்கு இருக்கும் ஆர்வமும், மனித இருப்பின் அழிவுகள், அலைக்கழிப்புகள், கனவுகள், கலவரங்களின் அடியாழத்திற்குச் சென்று பார்க்கும் உங்கள் முடிவற்ற அலசலும் என்னை மலைத்துப்போக வைக்கிறது. மகாத்மா காந்தி மீது உங்களுக்கிருக்கும் அளப்பரிய மரியாதையை நானறிவேன். வாழ்க்கையில் முடிந்தவரை பொய்யே சொல்லக்கூடாது என்ற கொள்கையை நீங்கள் இன்றுவரை கடைப்பிடித்து வருவதையும் நானறிவேன்.
நம்மிருவருக்கும் பொதுவான தோழியொருவர் பகிர்ந்துகொண்ட செய்தி நினைவுக்கு வருகிறது. யாரோ உங்களிடம்நீங்கள் ஏன் நகையே அணிவதில்லை?” என்று கேட்டபோது, நீங்கள் அளித்த பதில் – ”ஏன் அணிய வேண்டும்?”
நாம் சந்திக்கும்போதெல்லாம் ஏதாவதொரு சமூக அநீதி, பிரச்னை, நடப்பு குறித்து அக்கறையும் கவலையுமாய் அலசியாராய்ந்து பேசுவீர்கள். ஒருமுறைகூட உங்கள் தனிப்பட்ட பிரச்னை என்று எதையுமே (அப்படி ஏதேனும் இருக்குமெனில்) நீங்கள் பேசியதேயில்லை. இன்னொரு நிகழ்வு எனக்கு நினைவுக்கு வருகிறது. ஒருமுறை உங்களுக்குத் தெரிந்த ஒருவர் உங்களிடம் உங்கள் குடும்பம் தொடர்பாக ஏதோ அற்பக் கேள்வியைக் கேட்டுதெரியாதேஎன்று நீங்கள் சொன்னதற்கு, ‘இதுகூட நினைவில்லையா?’ என்று கேட்டபோது உங்கள் தோழியொருவர், ‘பத்மினிக்கு மானுடந்தழுவிய, சர்வதேச, தேசிய, மாநிலப் பிரச்னைகள்தான் நினைவிருக்கும், இதெல்லாம் இருக்காதுஎன்று குறிப்பிட்டார்! எனக்கு அந்த வாசகங்களை சரியாக நினைவுகூர முடியவில்லை. ஆனால் உங்களை அறிந்தவர்கள் அந்தக் கூற்று எத்தனை உண்மையானது என்று அறிவார்கள்!
யாரேனும் உங்களிடம் வந்து தெரிந்தவர் அல்லது உறவுக்காரர் ஒருவருடைய மகள் திருமண தினத்தன்று இன்னொருவனோடு ஓடிப்போய்விட்டதாக கண்கள் பளபளக்க மகிழ்ச்சியோடு வம்புபேச முன்வந்தால், அந்த விஷயத்தை, அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்படும் உளைச்சலை, அத்தகைய சம்பவம் யார் வீட்டிலும் நேரக்கூடும் என்ற உண்மையை அகல்விரிவாக நீங்கள் பேச, வம்புபேசத் தொடங்கியவர் கவலையும், பீதியுமாய் அவமானமாய் உணரும்படியாகிவிடும்!
ஒரு விஷயம் நம் மனதை அலைக்கழிக்கிறதென்றால் அந்த விஷயத்தைப் பிரக்ஞாபூர்வமாக மனதிலிருந்து தள்ளிவைத்துவிட வேண்டும் என்று நீங்கள்தான் என்னிடம் சொன்னீர்கள். ‘சொல்வது எளிது,’ என்று முதலில் நான் இடக்காக நினைத்துக்கொண்டாலும், இத்தனை வருடங்களில் இந்தசிகிச்சைஎனக்கு உண்மையாகவே நிவாரணமளித்திருக்கிறது.
எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் பொதுப்படையான, மேலோட்டமான கருத்துரைப்பது உங்களுக்குப் பிடிக்காது. .ஐந்தாறு வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்த பின் கணவன் - மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுப் பிரிவு ஏற்படுமெனில் அந்தத் திருமணமே தோல்வி என்று ஒட்டுமொத்தமாக எப்படி முத்திரை குத்த முடியும்?” என்று நீங்கள் அடிக்கடி கேட்பதுண்டு.
இருபது வருடங்களுக்கும் முன்னால் ஸ்வச்சித் (SWACHID _ soldiers of war against corruption, hunger, ignorance and disease) என்ற பெயர் கொண்ட சமூகநல இயக்கம் கணையாழியின் நிறுவனரும் எழுத்தாளருமான திரு.கஸ்தூரி ரங்கனால் துவங்கப்பட்டது. நான் 1990இல் மேற்கு சைதாப்பேட்டைக்கு குடிபெயரும்வரை நாம் அதில் முனைப்பான உறுப்பினர்களாகச் செயல்பட்டுவந்தோம். நீங்கள் எப்பொழுதுமே ஏதாவதொரு சமூகப்பணியில் உங்களை ஈடுபடுத்திக்கொண்டவண்ணமே; உங்களால் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்தவண்ணமே. விளம்பரமோ, தம்பட்டமோ அறவே கிடையாது.
நீங்களும் உங்கள் நட்பினரும் சமூகத்தின் நலிந்த பிரிவுகளைச் சேர்ந்த, சென்னை மாநகராட்சி மழலையர் வகுப்புக்குழந்தை களுக்குச் செய்துவரும் பணி போற்றத்தக்கது. நகரின் சில அரசுப் பள்ளிகளில் அந்த ஏழைக் குழந்தைகளுக்கு தரமான மாண்டிசோரி கல்வி கிடைக்க உங்கள் சேவை நிறுவனமான ஸ்ரீ ராமசரண் அறக்கட்டளை மூலம் வழிசெய்திருக்கிறீர்கள். இந்தப் பணியை மேற்கொள்வதில் நீங்கள் எதிர்கொண்ட இடையூறுகள், அவமானங்கள், சிக்கல்களை நானறிவேன். ஆனாலும், உங்கள் எண்ணம், சிந்தனை முழுக்க அந்தக் குழந்தைகளுக்குத் தரமான கல்வி கிடைக்கவேண்டும் என்பதிலேயே இருந்தது. அந்தப் பள்ளிகள் சிலவற்றில் உங்கள் 50+ ஆசிரியைகள் மாணாக்கர்களுக்கு தமிழ்மொழியைப் பிழையறப் பேசவும், எழுதவும் கற்றுத்தந்தார்கள். உங்கள் அறக்கட்டளையைச் சேர்ந்த ஆசிரியைகளுக்கும் உங்களுடைய சமுதாயப் பணியில் உத்வேகத்தோடு பணீயாற்றும் புரிதலையும் கடமையுணர்வையும் ஏற்படுத்தியிருக்கிறீர்கள். சமுதாயத்தின் அடித்தட்டு மக்களுக்காகப் போராடுவதாகச் சொல்லும் அரசியல் கட்சிகள் அந்தப் பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைப்பதையும், தரமான சுகாதாரச் சூழல் கிடைப்பதையும் உறுதிசெய்ய போதிய கவனம் செலுத்துவதில்லையே, இந்தப் பள்ளிகளை அந்தக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடிக்கொருதரம் வந்து பார்வையிடலாம்,, எவ்வளவோ செய்யலாம் என்று நீங்கள் அடிக்கடி வருந்திக் கூறுவதுண்டு.
உங்களுடைய இந்தப்பணி மிகவும் முக்கியமானது. நாளைய தலைமுறையின் நலனை மனதில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுவரும் இந்தத் தொலைநோக்குப் பார்வையுடைய பணிக்காக உங்களுக்கும், உங்கள் தோழியர்க ளுக்கும், ஸ்ரீராமசரண் அறக்கட்டளை நிறுவனர்களுக்கும், உங்கள் ஆசிரியர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நீங்கள் எதிலும், எல்லாவற்றிலும் உண்மையைத் தேடுபவர். அதுவே உங்கள் இயல்பாக, வாழ்நெறியாக இருக்கிறது. ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல், எப்பொழுதுமே வாழ்வு குறித்த ஒரு தீவிரத் தேடல் உங்களிடம் இருந்துகொண்டேயிருக்கிறது. எல்லா நேரமும் சக மனிதர்களுடன் அல்லது உங்களுடனேயே இடையறாது உரையாடிக்கொண்டேயிருக்கிறீர்கள். என்னுடைய ஒரே வேண்டுகோள்உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் நீங்கள் ஏதேனும் நிலைத்தகவல் தரும்போது அது பூடகமாக இல்லாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். அந்த நிலைத்தகவலை ஏன் வெளியிடுகிறீர்கள், அது குறித்த உங்கள் பார்வை என்ன என்பதை ஓரளவுக்கேனும் தெளிவுபடுத்துங்கள். பூடகமாகப் பேசும் கவிதைகள் உங்களு உவப்பானதல்ல என்று எனக்குத் தெரியும். அப்படியிருக்கும்போது உங்கள் நிலைத்தகவல்களை மட்டும் ஏன் பூடகமானதாக வெளியிடுகிறீர்கள்? உதாரணமாக, சமீபத்தில் நீங்கள் வெளியிட்டுள்ளநிகழாத சந்திப்பில்காந்தியும் ரமண மகரிஷியும் பேசிய குறிப்பு. அவ்விரு மகத்தான மனிதர்களின் அந்த வாசகங்களின் ஆழத்தையும் விரிவையும் எடுத்துக்காட்டுவதாய், தெளிவுபடுத்துவதாய் நீங்கள் இன்னும் குறிப்பாக, துல்லியமாக அவை குறித்துப் பேசியிருக்கலாம். அப்படிச் செய்யவில்லை யானால் அந்த இரு மனிதர்களையும் ஒப்புநோக்கல், மதிப்பழித்தல் போன்ற தேவையில்லாத வேலைகளுக்கு வழிவகுப்பதாகிவிடும்
நாம் நட்பினராகி ஏறத்தாழ 30 வருடங்களுக்கும் மேலாகிறது. எனக்கு 29 வயதான சமயம் உங்களுக்கு 58. இருமடங்கு. இன்று நான் 59இலிருந்து 60க்குப் பொகிறேன்.(அல்லது, போயாகிவிட்டதோ! எனக்கு ஷோபா டேயின் எழுத்துகள் பிடிக்காது. மேலோட்டமான வையாகத் தோன்றும். ஆனால் அவர் ஒரு கட்டுரையில் இன்றைய உலகில் 60 வயது என்பது கடந்த உலகின் 40 வயதிற்குச் சமம் என்று குறிப்பிட்டிருந்ததைப் படித்தபோது அந்த எழுத்தாளர் மேல் எனக்கு அன்பு பெருகியது!) உங்களுக்கு இப்போது 85, 86 வயதிருக்கலாம். ஆனால், வயதென்பது நம் நட்பில் என்றுமே முட்டுக்கட்டையாக இருந்ததில்லை. தலைமுறை இடைவெளியை நாம் என்றுமே உணர்ந்ததில்லை. அவ்வப்போது கருத்து வேறுபாடு தோன்று வதுண்டு (எடுத்துக்காட்டாக, நீங்கள் எவரொருவர் ஒரு நல்ல கருத்தைக் கூறினாலும்யார் கூறினார்கள்என்று பார்ப்பதை விட்டு கருத்தின் மேன்மையை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பீர்கள். நான், எந்தக் கருத்தானாலும் யார் சொல்கிறார்கள் என்பதும் சம அளவு முக்கியமானது என்பேன்.) ஆனால் நாம் என்றுமே மற்றவர் கருத்திற்கு, அப்படி வேறுபட்ட கருத்துரைக்க மற்றவருக்குள்ள உரிமைக்கு மதிப்பளித்திருக்கிறோம். சில (தற்போது அதிகரித்துவரும்) ‘போலி அறிவுசாலிகளைப் போல் மாறுபட்ட கருத்துடையவர்களைக் கேவலமாகப் பார்த்து, பேசி, முகத்தில் எல்லாநேரமும் ஓர் இளக்கார, அதிமேதாவிப் புன்சிரிப்பைப்படரவிட்டபடி, நமக்கு மட்டுமே எதைப் பற்றியும் கருத்துரைக்க உரிமையும் தகுதியும் இருக்கிறது, மற்றவர்க ளெல்லாம் முட்டாள்கள் என்ற நினைப்போடு ஒருவரை யொருவர் மட்டம்தட்டிக்கொண்டதில்லை; வார்த்தைகளுக்கு எத்தகைய அழிவாற்றல் உண்டு என்று தெரிந்திருந்தும், பிறர் மதிக்கும் தரமான மனிதர்களை மூஞ்சூறு முதலாளிகள்’,’ முனகும் முதலைகள்’, ’முட்டாள் கோட்டான்கள்’, நடுத்தர வர்க்க நாய்கள்என்றெல்லாம் அடைமொழி சூட்டி மதிப்பழிக்க முனைவதில்லை. (அப்படிச் செய்பவர்கள் தங்கள் செயலின் மூலம் வெளிப்படுத்துவது தங்கள் தராதரத்தையே.)
இந்த மடலை நான் கம்ப்யூட்டரில்டைப்செய்துகொண்டி ருக்கும்போது என்னுடைய அம்மா இதோ உறங்கிக் கொண்டிருக்கிறார். , அவருக்கு 81 வயதாகிறது. துணிச்சலான பெண்மணி. அவர் கவிதை வாசிப்பதோ எழுதுவதோ கிடையாது. ஆனால், தினசரி அருகிலுள்ள கோவில்களுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஒருமுறை (பல வருடங்களுக்கு முன்பு) அச்சு அசலான போலி அறிவுசாலியாய் நான் அவரிடம் கேட்டேன்: “கடவுள், அப்படி ஒருவர் இருப்பாரெனில், அவர் ஒருவரே என்னும்போது நீ ஏன் தினமும் வேறு வேறு கோவில்களுக்குச் செல்கிறாய்?” “உனக்குப் புத்தகங்கள் எப்படியோ, எனக்குக் கோவில்களும் அப்படியேஎன்று மட்டும் சொல்லி முடித்துக்கொண்டார். பிறகு, சில நாட்கள் கழித்து, ”நாற்பது வயதை எட்டாத நிலையில் ஒரு பெண் (என் அப்பா இறந்த போது அம்மாவுக்கு 38 வயது இருக்கும்) பாதுகாப்பாய் அமர்ந்துகொள்ள முடிந்த இடம் கோயில். அங்கே என்னைப்போன்ற பல பெண்களைப் பார்க்க முடியும். பல்வேறு சிரமங்களிலும் துயரங்களிலும் எதிர்நீச்சல் போட்டு அவர்கள் வாழ்வதைப் பார்த்து எனக்கும் வாழ்வில் நம்பிக்கையும் உத்வேகமும் பிறக்கும். நான் கோயிலுக்குச் செல்வதுஇதைத் தா அதைத் தாஎன்று கடவுளைக் கேட்க அல்ல. என் இரு குழந்தைகளையும் பார்த்துக்கொள்ள உதவியாய் எனக்கு மனவலிமையும் உடல் நலனும் இருக்கும்படி செய்ததற்காகக் கடவுளுக்கு நன்றிசெலுத்தத்தான்”, என்று எடுத்துரைத்தார். என் அம்மா கவிதை எழுதாவிட்டால் என்ன? வாசிக்காவிட்டால் என்ன? அவரே ஓர் அதிநுட்பமான கவிதை!
நீங்களும் அப்படித்தான் பத்மினி மேடம். உங்களிடமும் என் அம்மாவிடமும் நான் பேசும்போதெல்லாம், நீங்கள் எனக்கு நெருக்கமானவர்கள் என்பதாலேயே உங்களை ‘take it for granted’ தோரணையில் நடத்திவிடக்கூடாது என்ற நினைப்பு எனக்குள் இருந்துகொண்டேயிருக்கும்.
நீங்கள் எப்பொழுதுமே புத்தகங்களை நேசிப்பவர். தீவிர வாசிப்பாளி. பலவகையான நூல்களையும், அவற்றில் உண்மையும் சாரமும் இருக்குமெனில், வாசிப்பவர். ஜெயகாந்தன், பாரதியார், காந்தியின் சத்திய சோதனை, மணி பௌமிக், பெர்ட்ராண்ட் ரஸ்ஸல், க்வாண்ட்டம் தியரி, ராமாயணம் Thich Nhat Hanh இன்னும் எத்தனையோ உங்கள் மனதுக்குப் பிடித்த நூல்கள் உள்ளன. 80, 90களில் நீங்கள் தமிழ் இலக்கிய இதழ்களை நிறையவே வாசிப்பவராக இருந்திருக்கிறீர்கள். இலக்கியக் கூட்டங்களுக்கும் செல்வீர்கள்.
நீங்கள் சில நல்ல நவீன கவிதைகளும் எழுதியிருக்கிறீர்கள்! உங்கள் நட்பினர் யாராவது அவற்றைப் பிரசுரித்துவிடுவார்களோ என்று அஞ்சி அவற்றை எங்கோ ஒளித்துவைத்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்! உங்களுக்கு எழுபது எழுபத்தியைந்து வயதிருக்கும்போது கணினி வகுப்பு மையத்தில் சேர்ந்து அடிப்படை கணினி இயக்கம் கற்றுக்கொண்டீர்கள். இன்று நீங்கள் கம்ப்யூட்டரிலும், ஆண்ட்ராய்ட் கைபேசியிலும் இயல்பாய் இயங்கிக்கொண்டிருக்கிறீர்கள்.
உங்களுக்கு உங்களுடைய மதிப்பார்ந்த முன்னோர் குறித்த கர்வமோ, பிரக்ஞையோ என்றுமே இருந்ததில்லை, அந்தஸ்து, அதிகாரம், செல்வம், செல்வாக்குஇவையெல்லாம் உங்களை என்றுமே பிரமிக்கவைத்ததில்லை. ‘நாம் அர்த்தமுள்ள வாழ்வு வாழ்ந்து சுவடற்றுச் சென்றுவிடவேண்டும்என்று நீங்கள் எப்போதுமே கூறுவீர்கள். உங்கள் நட்பினருக்காகவும், அறக்கட்டளைப் பணிகளுக்காகவும், அர்ப்பணிப்புள்ள ஆசிரியைகளுக்காகவும், அடித்தட்டுமக்களின் குழந்தைகளுடைய நலவாழ்வுக்காகவும் நீங்கள் நீண்டகாலம் நலமாக வாழவேண்டும்.
எழுதுவதற்கு இன்னும் எவ்வளவோ உள்ளது. இப்போதைக்கு முடிக்கிறேன். 2005இல் வெளியான என் கவிதைத்தொகுப்பில் உங்களுக்கு நான் சமர்ப்பணம் செய்திருக்கும் கவிதையொன்று இதோ.
உங்கள் தோழமைக்கு நன்றி, பத்மினி மேடம்.
அன்புடன்
லதா
நெல்லிக்கனி
அகலிகையின் அடிபணிந்த ராமனை அறிமுகம் செய்தாய்.
ஜானகியின் கரம் பற்றிக் கானகமெங்கும் திரிந்த
காதல் மணாளனைப் பரிச்சயமாக்கினாய்.
நாதவெளியில் மிதக்கும் நற்றவம் கற்றுத் தந்தாய்.
பாதிப்பாதியாய் ஆளுக்கொரு முனையிலிருந்து
இழைபிரித்த கனவுச்சிடுக்குகள், நனவு முடிச்சுகள் நிறையவாய்.
சிக்கவிழ்த்தோம் சில மார்க்கங்களின் திக்குகளை.
ஒருபோதும் அதிராத உன் அடிமனக் குரல் எனக்கொரு
பிடிமானமாய்.
அவரவர் வெந்தழலுக்குள் கனன்றபடி
நந்தலாலாவைச் சொந்தமாக்கிக் கொண்டோம்.
நிறைமாத கர்ப்பிணியின் எதிர்பார்ப்பும் குறைப்பிரசவக் கையறு
நிலையுமாய்
நம்முடைய கலந்துரையாடல்கள்
மூன்று புள்ளிகளோடே முற்றும் திறம் வரமாய்ப் புரியப்
பெருகுமாக் கடலொரு பரிசாய் உனக்கு என்றும்
.
(’
பத்மினி மாடம்க்கு)





No comments:

Post a Comment