Wednesday, September 13, 2017

கவிதைச் சர்வாதிகாரிகளுக்கு

கவிதைச் சர்வாதிகாரிகளுக்கு
ரிஷி
(
லதா ராமகிருஷ்ணன்)


ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்துச்சாம்
ரெண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டே பூ பூத்துச்சாம்
மூணு குடம் முப்பது குடம் மூவாயிரம் குடம்…”
என்று பாடிக்கொண்டே வந்தவர்
குடமும் நானே தண்ணீரும் நானே பூவும் நானே
பைந்தமிழ்க்கவியும் நானே யென
ஆலாபிக்கத் தொடங்கியபோது
கலங்கிநின்றவர்களை
குவளையும் குளிர்ச்சியும், திவலையும், தளும்பலும்
தென்றலும் மழையுமிருக்க
கவலையெதற்கு என்று
கைபிடித்துத் தன்னோடு அழைத்துச் செல்கிறது
காலாதிகாலம் வற்றாக் கவித்துவ நீரூற்று.

v

காக்கா காக்கா கண்ணுக்கு மைகொண்டுவா
குருவீ குருவீ கொண்டைக்கு பூ கொண்டுவா
எனக் குழந்தை பாட்டுப் படிக்க,
கவிதை கொண்டு வாயென
வளர்ந்தவர்கள் கேட்பதில் தவறில்லைதான்.
அதற்காக
காக்காய் பிடித்து
கவிதைச் சிம்மாசனத்தில்
கொடுங்கோலோச்சப் பார்த்தால்
சும்மாயிருக்கலாமோ சொல்
வல்லமை கொள் கிளியே.

v

தோ தோ நாய்க்குட்டி, துள்ளி வாவா நாய்க்குட்டி
உன்னைத்தானே நாய்க்குட்டீ, ஓடிவாவா நாய்க்குட்டீ
யெனத்
தேடித்தேடிக் குழந்தைப்பாடல்களைச் சொல்லிச்
சக கவிகளையெல்லாம் செல்லம் கொண்டாடுவது
தன்னை பழுத்து முதிர்ந்த கவியாகவும்
பிறர் வரிகளைக் குழந்தைப் பிதற்றல்களாகவும்
நிறுவத்தான்
என்று புரிய நீண்டகாலமாயிற்று.

v

தோசையம்மா தோசை, அம்மா சுட்ட தோசை
அரிசி மாவும் உளுந்த மாவும் அரைச்சு சுட்ட தோசை
யெனக்
கரைந்து கரைந்து தன் கவிதையை
கனியமுதென்றுரைக்கப்
பிரயத்தனப்பட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு:
கேழ்வரகுக்கூழ் முதல்
பர்கர் பீட்ஸா வரை
வாய்க்கு ருசியாய்
இங்கே வகைவகையாய்
இருப்பது நன்றாகவே தெரியும் எமக்கு.
v
நிலா நிலா ஓடி வா, நில்லாமல் ஓடி வா,
மலைமேல ஏறி வா, மல்லிகைப்பூ கொண்டுவா ......
! தெரியுமா!
ஓயாமல் ஓடியோடி மலைமேல் தாவியேறி மல்லிகைப்பூ கொண்டுவரும் அந்த நிலா என் கவிதை:” யெனப்
பதவுரை சொல்ல ஆரம்பித்த பெருந்தனக்காரக் கவியை
இடைமறித்து
என் நிலா பறந்துவரும், மலையாகவே மாறிவிடும்
குறிஞ்சிப்பூவனைய அரிய பூக்களையே அதிகம் கொய்துவரும்
என்று கூறி
கொட்டாவி விட்டுத் தூங்க ஆரம்பித்தது குழந்தை.


No comments:

Post a Comment