Saturday, February 20, 2016

புரியும்போல் கவிதைகள் சில….. ‘ரிஷி’

புரியும்போல் கவிதைகள் சில…..


‘ரிஷி’


1.
குட்டை குளம் ஏரி ஆறு கடல் சமுத்திரம்
இன்னும் கிணறு வாய்க்கால் நீர்த்தேக்கங்கள்
எல்லாமும் மழையுமாய்
எங்கெங்கும் நீராகி நிற்கும் நிலத்தில்தான்
தண்ணீர்ப் பற்றாக்குறையும் குடிநீர் கிட்டாநிலையும்
எனத் தெள்ளத்தெளிவாய்த் தத்துவம் பேசுவோர்க்குத்
தெரியுமோ
ஒரு துளி நீரில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையும்
அவற்றின் அலை-துகள் நிலையும்
களி நடனமும் பிறவும்….?

 2.
ஒன்றிரண்டு மூன்றுநான்கு ஐந்தாறு எட்டுபத்து….
ஏழும் ஒன்பதும் விட்டுப்போனதேன்
என்று வாய்ப்பாடு ஒப்பித்தலாய்க் கேட்பதற்கு முன்
இரண்டான ஒன்றின் நான்கான மூன்றின்
ஆறான ஐந்தின் பத்தான எட்டின்
நேர்க்கோடுகள், நெளிவு சுளிவுகள்
வாத்தின் எலும்பு மார்பக வளைவு
வாலுடன் காத்தாடி சிரசாசன நிலை
உள்வாங்கிய சறுக்குமரம்
இருவட்டச்சிறைகளுக்குள்ளிருந்து
வெளியேறும் வழி –
என எண்ணிப்பார்த்துக்கொள்ள
எத்தனையோ இருக்கு பார்.

3.
சிட்டுக்குருவி காக்கை புறா கோழி குயில் கழுகு மயில்
வான்கோழி இன்னுமுள ஈராயிரத்திற்கு மேலான
பறவையினங்களில்
விரும்பித் தேன்குடிப்பது எது
தேன்குழலைக் கடிப்பது எதுவெனத்
தெரியுமோ எவருக்கேனும்…?
அட, தெரியாவிட்டால்தான் என்ன?
ருசியறியாதவரை தேன் வெறும்
 பிசுபிசுப்பானஅடர்பழுப்புநிற திரவம்தான்.
அருந்திய பறவை ஆனந்தமாய்ச் சிறகடிப்பதைப் பார்த்து
அடித்துப்பிடித்து உண்டிவில்லைத் தேடிக்கொண்டிருப்போர்
கண்டிலரே வெளியெங்கும் பறத்தலின் காற்றுத்தடங்களை.
உண்டல்லோ அவ்வண்ணமாய் புரியாக் கவிதையும்!

4
ஸ்கூட்டி, பைக், கார், லாரி, குப்பை லாரி
மினி பஸ், மாம்பலம் – டு – லஸ் மாக்ஸி பஸ்
ரயில் கப்பல் ஆகாயவிமானம்……
எல்லாம் இருந்தும் கடற்கரையில்
கையைத் தலைக்கு அண்டக்கொடுத்தொருவன்
அண்டவெளிக்குள் பல உன்னதங்களைக் கண்டவண்ணம்
படுத்திருக்கிறானே….
அந்த வேளையில் பயணம் என்ற சொல்லின் அர்த்தம்
அவனுக்குப் பிரத்யேகமானது.
அவன் நகர்வதாகவே தெரியவில்லையே என்று
அங்கலாய்த்து
அத்தனை முனைப்போடு
அங்கொன்றும் இங்கொன்றுமாய் கற்களைத் திரட்டி
அவன் மீது குறிபார்த்து எறிவதில் காட்டும் அக்கறையில்
ஒரு துளி கவிதை மீது காட்டினாலும் போதும் –
நிறையவே புரிந்துவிடும்.

 5.
திருக்குறள் நாலடியார் குறுந்தொகை
நற்றிணை தேவாரம் திருவாசகம்
சித்தர் பாடல்கள் சிலப்பதிகாரம்
எல்லாம் புரிந்துவிட்டதுபோலும்
புரியாக் கவிதை எழுதுகிறான் என
புகார் மேல் புகார் அளித்தவண்ணம்
அண்டவெளியைக் கூண்டிலேற்றி
குறுக்குவிசாரணை செய்ய
முடிந்தால் நிலவறைக்குள் அடைத்துவிடவும்
அன்றும் இன்றுமாய் அவர்கள்
ஆயுதபாணிகளாய் வந்தபடி வந்தபடி…..
காக்கும் கவிதை காக்க
அகாலத்தின் விரிபரப்பில்
காற்றுச்சித்திரங்களைத் தீட்டிக்
களித்திருப்பானே கவிஞன்!

6
இந்த வாசகருக்குப் புரியுமென்று
வெந்த சாதம் பற்றி எழுதினார்’
வந்ததே கோபம் வேறொருவர்க்கு.
பச்சைக் காய்கறிகளே சத்துள்ள உணவு
என்று கடித்துக்குதறிவிட்டார்.
வம்பெதற்கு என்று
நெல்லிக்கனியின் மகத்துவம் குறித்தொரு
கவிதை எழுதினார்.
பாகற்காயைப் பற்றிப் புனையத் தோன்றவில்லையே என்று
கண்டனத்தைப் பதிவு செய்தார் இன்னொரு வாசகர்.
ஆகா மறந்துவிட்டேனே என்று அளப்பரிய வருத்தத்துடன்
மருந்துக் கசப்புக்கோர் எடுத்துக்காட்டு பாகற்காய்
எனக் கவிதையெழுத
சுண்டைக்காயின் கசப்பைச் சொல்லாமல் விட்ட பாவி
என மண்ணை வாரித் தூற்றிச் சென்றார்
மா வாசகரொருவர்.
என்ன செய்வதென்றே தெரியாமல்
எழுதியவற்றையெல்லாம் கிழித்தெறிந்துவிட்டு
உறங்கச் சென்றார் கவிஞர்.
கனவிலும் அந்த வாசகர்கள் வந்து
அவர் உருகியுருகி யெழுதியதையெல்லாம்
உள்வாங்க மனமின்றி
கருகக் கருகக் கண்களால் எரித்து
சாம்பலை காலால் கெந்திவிட்டு
கெக்கலித்துக்கொண்டிருந்தார்கள்.

7
இரவு இரண்டுமணியைத் தாண்டிவிட்டது.
உறக்கம் வந்தும் உறங்க முடியாமல்
வரிகள் சில மனதிற்குள் குறுகுறுக்கின்றன.
கொஞ்சுகின்றன.
ஏந்திக்கொள்கின்றன.
வெளியே கூட்டிக்கொண்டுபோயேன் என்று கையைப்
பிடித்திழுக்கின்றன.

எழுதத் தொடங்கும் நேரம்
எழுதும் நேரம்
எழுதி முடிக்கும் நேரம்
நானே கவிதையின் பாடுபொருளாய்
இலக்கு வாசகராய் –
விலகிய பார்வையில்.
அதிவிழிப்பு நிலையில்…..

சாதியின் பெயரால் சக கவிஞர்களைச் சிரச்சேதம் செய்பவர்கள்
தமிழ்க்கவிதைத் தாளாளர்களாய்
கண்டம் விட்டுக் கண்டம் தாண்டிச் சென்றவண்ணம்.
இன்னும் ராமேசுவரத்தைக்கூடக் கண்டிலேன் நான்.
என்றாலும், ”குறையொன்றுமில்லை” எனச் சொல்வேன் –
மறைமூர்த்திக் கண்ணனிடம் இல்லை -
மனம் நிறைக்கும் கவிதையிடம்.
பின் ஏன் திண்ணைக்கு அனுப்புகிறாய் என்பார்க்கு:
”கல்லுக்குள் தேரைக்கு உணவிருக்கையில்
என் கவிதைக்குள் கரைபவரும் எங்கோ இருக்கக்கூடும்தானே!”



* * *

(14.2.2016 தேதியிட்ட திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ளது)

No comments:

Post a Comment