Saturday, February 20, 2016

பிரம்மராஜனின் கவியுலகம் : இயங்குதளங்களும், இயக்குவிசைகளும்

பிரம்மராஜனின் கவியுலகம்

இயங்குதளங்களும், இயக்குவிசைகளும்  லதா ராமகிருஷ்ணன்


 [*எனது ’வரிகளின் கருணை’ என்ற தலைப்பிட்டநவீன தமிழ்க்கவிஞர்களை முன்வைத்து எழுதப்பட்ட 19 கட்டுரைகளைக் கொண்ட நூலில்வெளியீடு: சந்தியா பதிப்பகம்முதல் பதிப்பு ஆகஸ்ட் 2005) இடம்பெற்று கட்டுரை இது.]

*இக்கட்டுரை புதிய நம்பிக்கை (1997), கணையாழி ஆகிய இதழ்களில் வெளியான பிரம்மராஜன் கவித்துவம் பற்றிய எனது கட்டுரைகள், பிரம்மராஜன் பற்றிபொருநை இந்தியாஅமைப்பு நடத்திய ஒருநாள் கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட என் கட்டுரை ஆகியவற்றின் ஒருங்கிணைப் பில் உருவானது.

 (* தரமான படைப்பாளியை அவர் வாழும் காலத்திலேயே அங்கீகரித்து  மரியாதை செய்வதுதான் அவருக்கு நாம் செய்யக்கூடிய குறைந்தபட்ச மரியாதை. எனவே, கவிஞர் பிரம்மராஜனை நவீன தமிழ்க்க் கவிதை இயக்கத்தின் முன்னோடிகளில் குறிப்பிடத்தக்க ஒருவராக நம்பும் நானும் சில நண்பர்களும் ஒரு கவிஞராக மொழிபெயர்ப்பாளராக, சிற்றிதழா சிரியராக, அவருடைய பங்களிப்பை எடுத்துக்காட்டும் கட்டுரைகளடங்கிய தொகுதி ஒன்றைக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். ஆர்வமுள்ள எவரும் மார்ச் 31ஆம் தேதி வரை கட்டுரைகள் அனுப்பலாம். நூலின் பிரதிகள் ஐந்து கட்டுரையாளருக்குத் தரப்படும். மின்னஞ்சல் முகவரி: ramakrishnanlatha@yahoo.com)

 

‘I should say my health as a poet lies in my mistrust of the comfortable point, of rest –‘

ROBERT GRAVES

(*யதேச்சையாகப் படிக்கக் கிடைத்தது)

 

அய்யனார்

 

அப்பனுக்குக் கல் குதிரைகள்

மகனுக்கு மண் குதிரைகள்

எனக்கு மனிதக் குதிரைகள்.

 

இந்த மூன்று வரிக்  கவிதை கவிஞர் பிரம்மராஜனின் ‘ஞாபகச் சிற்பம்’ தொகுப்பில் இடம்பெறுகிறதுஇந்த வரிகளில் எதுவுமே புரியவில்லை என்று சொல்ல முடியுமாஇல்லைஎல்லாம் புரிந்துவிட்டது என்று சொல்லி

விட முடியுமா?

 இந்தபுரிந்தும் புரியாதநிலையே பிரம்மராஜனின் கவியுலகினுடைய இயங்கு தளமாகத் தோன்று கிறது. ஒருவகையில் ஒரு கவிமனதின் இயங்குதளங்களும், இயக்குவிசைகளும் ஒன்றையொன்று ஊடுருவிச் செயலாற்றுபவை யாகின்றன. அவையே அவருடைய கவிதையின் இயங்குதளங்களாகவும், இயக்குவிசை களாகவும் இயல்பாக இடம்பெயர்க்கப்பட்டுவிடுவதும் நிகழ்கிறது. இதில் ஊடகமாய் செயல்படும் மொழி வெறும் ஊடகம் மட்டும்தானா? அப்படியில்லை யெனில், மொழி இயங்கு தளமா? இயக்கு விசையா….? இதையே வேறு கோணத்தில் அவதானிக்க, நனவிலி மனதின் மொழி, கவிதை மொழியை இயக்குகிறதா? அல்லது, அதில் இயங்குகிறதா? கற்பனை அல்லது நனவிலி மனதின் இயங்குதளங்கள் அதன் பிரக்ஞாபூர்வ மனதின் இயக்குவிசைகளாகின் றன எனவும், பிரக்ஞாபூர்வ மனதின் இயங்கு தளங்கள் அதன் கவித்துவ இயக்கு விசைகளாகின்றன எனவும் சொல்லலாமா?

 

அதீத வலி, நுட்பமாக வலியுணரும் பிரக்ஞை, நிரந்தர நிறைவின்மையின் பிரக்ஞை, எதிர்கவிதையாளன் பிரக்ஞை, மனது நெகிழ்ந்து தளும்பும் தருணங்கள்அதற்கான காரணகாரியங்கள் குறித்த பிரக்ஞை, ‘ஒரு வாழ்வில் பல உயிர்களாய் வாழ முடியாது என்ற பிரக்ஞையும், அப்படி வாழ்ந்தே தீரும் வேட்கை குறித்த பிரக்ஞையும், கனவுப் பிரக்ஞை, கனவுப் பிரக்ஞை குறித்த பிரக்ஞை, இயற்கை, அறிவியல், தொழில்நுட்பம் முதலிய நடப்பியல் வாழ்க்கையோடு தொடர்புடையவை குறித்த பிரக்ஞை, அவற்றில் கனவைத் தேடும் பிரக்ஞை, தன் கல்வி, கேள்வி, தேடல் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ள பிரக்ஞை, அது குறித்த பிரக்ஞை என பிரம்மராஜனின் கவிமன இயக்குவிசைகள் துல்லியப் பிரக்ஞைகளால் கட்டமைக்கப் பட்டுள்ளன. கவிதையில் இந்தப் பலவிதமான பிரக்ஞைகள் முரணும் ஒத்திசைவும் கூடிய நிலையில் இயங்குகின்றன. எனவே, கவிதையின் இயங்குதளம் அறிவும், உணர்வும் ஊடுபாவாய்க் கலந்த பரப்பாய் விரிந்திருக்கிறது. வலியின் தன்மையை, தற்காலிகத்தின் தன்மையை எத்தனைக்கெத்தனை துல்லியமாகக் கவிமனம் உணர்கிறதோ அதேயளவாய் அவற்றை வரிகளில் பதிவுசெய் கிறது. ’அதேயளவாய்என்ற பிரயோகம் அடிக்கோடிடப்பட வேண்டியது. ஏனெனில், கவிமனதின் இயக்கமாகும் நுண்ணுணர்வு அவர் கவிதைக்கு இயக்குவிசையாகும் போக்கில்அதேயளவாய்என்ற வார்த்தைஉள்ளது உள்ளபடிஎன்பதைத் தாண்டிய பரிமாணத்தைப் பெறுகிறது _ இவருடைய கவிதைகளில், அவற்றில் இடம்பெறும் பூகோளரீதியிலான விஷயங்களி லாகட்டும், இசை, புராணிகம், இலக்கியம் முதலிய குறுக்குக் குறிப்புகளிலா கட்டும், தனது வலியின், இழப்பின், துக்கத்தின், நிரந்தரத்தின், மரணத்தின் வீச்சை உணர்வதிலாகட்டும், ஒரு காலாதீதமான, உலகளாவிய மனிதன் தென்படுகிறான். காலங்காலமாய் மனிதனை இயக்கிவரும் இந்த வாழ்வம்சங்களை வெகு நுட்பமாய் உணர்ந்து பல்வேறு கலைவடிவங்களில் வெளிப்படுத்துகிற அத்தனை ஆத்மாக்களையும் தன்னுள் வாங்கிக்கொண்டதாய் இந்தக் கவிமனம் அவர்களுடைய வாழ்க்கைகளைத் தன் மீது ஏற்றிக்கொண்டும், தன்னுடைய வாழ்க்கை அல்லது வாழ்க்கைகளை அவர்கள் மேல் ஏற்றியும் ஒரு நீள்தொடர்ச்சியாகத் தன்னை உணர்ந்துகொள்கிறது. இந்த நீள்தொடர்ச்சி உணர்வின் ஒரு அங்கமாகவே அவருடையகடல் பற்றிய கவிதைகள்உருப்பெற்றிருப்பதாய் தோன்றுகிறது:

 

அனுஷ்டானம் அதற்கில்லை

எச்சில் மேல் கீழ் உன்னதம் விலக்கு…..’

 

என்று கடலின் மேன்மைகளைக் கொஞ்சமும் மிகைப்படாத, எனில், மிகத் துல்லியமான வார்த்தைகளில் சொல்லிக்கொண்டே வரும் கவிஞர் திடீரென்றுநிறுத்துங்கள் ரெனே மெகரித்என்றுதாங்க முடியாமல் கூறுவதாய்எழுதும்போது அந்தரெனே மெகரித்யாரென்று தெரியாது போனாலும் அந்த மனிதன் அத்தனை நேரமும் இந்தக் கவிமனதிற்குள்ளிருந்து ஒலித்துக் கொண்டிருக்கிறான் என்பது புரிகிறது. அல்லது, காலவரையறைகளற்ற ஒரு கரையில் கூப்பிடு தூரத்தில் நீரில் கால்களை நனைத்துக்கொண்டு கடலோடு பேசிக்கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. ‘ரெனெ மெகரித்என்ற பெயர் இயல்பாக அந்தக் கவிதையில் வந்து விழுகிறது என்பது கவிஞர் பிரம்மராஜனை அறிந்தவர்களுக்குத் தெரியும். வெறும் பெயர்களைப் பட்டியலிடுவது என்றில்லாமல் எல்லாவற்றையும் ஒருமுறைக்கு இருமுறையாக அனுபவித்துப் படித்து எழுதுபவர்A voracious reader, having updated knowledge of world literature. பதினைந்து ஐரோப்பிய நவீனவாதிகள் என்ற தனது நூலின் முன்னுரையில் ஒன்றிரண்டு எழுத்தாளர்களின் படைப்புக்களை தான் திரும்பத் திரும்பப் படித்து புதிதாக அவர்களைப் பற்றிய கட்டுரைகளை வடித்ததாக வெகு சாதாரணமாகக் குறிப்பிட்டுச் செல்கிறார்! அத்தனை அறிமுகங்களும், பரிச்சயங்களும், அவற்றின் வழியான அந்நியோன்யங்களும் மனதில் சதாசர்வ காலமும் விழிப்புடன் அலைமோதிக்கொண்டிருக்க, கால தேச வர்த்த மானங்கள் கடந்த நிலையில், நிகழில் வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்களைப் போலவே அவர்களும் கவிஞரின் படைப்புகளில் வெகு இயல்பாக வந்துபோகிறார்கள். தவிர, ஒருவகையில் தனது மனத் தளும்பல்களுக்கு கனகச்சித வடிவம் தர உதவும் இயங்குதளங்களு மாகிறார்கள்.

 

 ரோப்பியக் கவிதைகள் எழுதுபவர்என்று சொல்வதன் மூலம்வேடதாரி’, ‘மக்களுக்குப் புரியாமல் எழுதுவதையே பெருமையாகக் கொள்பவர்’, வெட்டிக்குபாக்’ (BACH) இசை, பீத்தோவன் என்று, சொந்த மண்ணை மறந்து அந்நிய மண்ணை ஏற்றித் திரிபவர், அவ்வகையில் தன்னைப் பிறப்பித்து வாழ்விக்கும் மண்ணுக்கு விசுவாசமாயிராதவர் என்பதாய் இவரைப் பற்றி பலப்பல எதிர்மறைக் கருத்துக்கள் குறிப்பாலுணர்த்தப்பட்ட காலம் உண்டு இவ்விதமாய், ‘இந்தக் கவிஞனைப் படிக்காதே’, ’படிப்பது வீண்’, ’படிப்பவர்கள் போலிஎன்பதாக வெல்லாம், ஒரு படைப்பாளியை அணுகவொட்டாதபடிக்கு, அணுகிப் படித்தறிந்து அவருடைய கவித்துவம் பற்றிய ஒஎரு சுயமான முடிவுக்கு வரவொட்டாதபடி வாசகர்கள் அச்சுறுத்தப்பட்டுவருவது நடந்தேறுகிறது. ஐரோப்பிய தன்மை என்பது வாழ்க்கை என்பதன் அர்த்தத்தோடு அத்தனை முரண்பட்டதா என்பது ஒருபுறமிருக்க, கவிஞர் பிரம்மராஜனின் கவிதைகள் அத்தனையளவா தமிழ் மனங்களிலிருந்து விலகி நிற்பவை? 1980இல் வெளியான அவருடைய முதல் தொகுப்பானஅறிந்த நிரந்தரத்தில் பின்வரும் கவிதை இடம்பெறுகிறது:

 

அரங்கத்தில் அடிக்கடி இருள்

எங்கோ ஒரு நாள்

நரம்புகளில் லயத்துடன் இழைகிறது

வானவில்

காதுகளை அற்றவர் அசைவில்

கழுதைகளை

மனதில் நிறுத்திவிட்டு மறைகின்றனர்

அன்னையின் கைகள்

சிரசில் ஊர்வதை மீண்டும் எக்கிக் கேட்பது போல்

வீணையின் விரலில்

தரிசனம் தேடி வருகையில்

காலின் சகதி

குவித்த விரல்களின் குவளையில்

கங்கையின் நீர்

தகரத்தின் பிய்ந்த குரல்கள்

கழுவாத முகங்கள் போன்ற கட்டிடங்களின்

வாயில் நாறும்

ஆயினும் மீட்டலொன்று போதும்

குருதி கசியும்

மனதின் சுவர்களில்

தளிர்கள்

உதயமாகும்.

 

_ ’எதிர்கொள்ளல்என்ற தலைப்பிலான இந்தக் கவிதைகள் பேசும் உணர்வுகள் நமக்கு அறிமுக மற்றவையா? அந்நியமானவையா?

 

தெருக்களில் தீப்பற்றியது போல் சாலையில்

விளக்குகள் எரியும் இப்பெருநகர் என்னை விழுங்கிவிட்டது.

அழுக்கின் ஆறு எனக்குள் வழிவதாகிறது

 

_ என்பதாய் விரியும்அழுக்கின் ஆறும் அலுமினிய மனிதர்களும்என்ற கவிதையில் வேலை நிமித்தம் நகருக்கு இடம்பெயரும் இளைஞனின் இயந்திர வாழ்க்கைக் கசப்பைஅவன் கனவுகளுக்கும், நனவுகளுக்கும் இடையேயான அகழியை நன்றாகவே உணர முடிகிறது.

 

மரத்தில் கிடைத்த புத்த முகத்தை

வான்கோவின் சுய போர்ட்ரெய்ட்டின்

பதற்றக்கோடுகளுடன் ஒப்பிடு.

இரண்டிற்கு மிடையில் நான்.’

 

 என்ற வரிகள் (’ஞாபகச் சிற்பம்தொகுப்பிலுள்ள பிரயாணத்திலிருந்து ஒரு கடிதம்கவிதையில் இடம்பெறும் வரிகள்) விரித்துவைக்கும் நெரிசல்மிக்க நவீன வாழ்க்கையில் பெறக் கிடைக்கும் மன அவசம் மறுதலிக்க முடியாதது.

 

புற சிந்தனைகள், செயல்பாடுகளால் ஆனதே மனிதமனம். சுயநலமும், பொதுநலமும் கொண்டியங்குகிறது அது. பொதுநலம் பேணுவதிலும் சுயநலம் இருக்கிறது என்பதும் உண்மை. மேலும், சமூகக் கட்டுப்பாட்டிற்குள் வாழும்போது சாத்தியமாகாத, சாத்தியமாகக் கூடாத சில பல விஷயங்களும் நம் மனதில் வாழப்படுகின்றன. அவற்றை எவ்வளவு முயன்றாலும் நம்மால் அடக்க முடிவதில்லை. அடக்க வேண்டிய அவசியமில்லை என்ற வாதத்திலும் அவ்வளவு பிழையில்லை என்பதையெல்லாம் விலகி நின்று யோசித்தால் நாம் ஏற்றுக் கொள்வோம். இப்படியான சில ஆழ்மனப் புதையல்கள், ஷணப்பித்தம், காலத்துணுக்குகளி லொன்றான கொலையற்ற கொலையெல்லாம் கவிதைகளில் பேசப்படுவது மனிதவிரோதச் செயலல்ல. இத்தகைய அணுக்கண நெருடல்களெல்லாம் பிரம்மராஜனின் கவிதைகளில் with great passion and integrity and also in a unique style பதிவு செய்யப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. கவிதைகளின் தலைப்புகளே வித்தியாசமாக, வித்தியாசமான படிமச் சேர்க்கைகளுடன், கவிதையின் அங்கமாக, கவிதையின் பரிமாணத்தை விரிவுபடுத்துவதாக அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. உபயோகிக்கும் சொற்களில், சொற்சேர்க்கைகளில், படிமங்களில், படிமங்களை வித்தியாசமாகக் கையாள்வதில் இவர் கவிதைகள் பிரத்யேகமாகத் தெரிகின்றன.

 

 எள் மிஞ்சுமோ சொல் மிஞ்சுமோ

எவனோ அவன் எழுதிச் செல்கிறான்

புதைத்த முகம் என்று முளைக்குமோ

பதற்ற மனம் மூச்சழுந்தக் காத்திருக்கும்.’

 

(புராதன இதயம்தொகுப்பிலுள்ளஉலோகத் தாலாட்டு’)

 

தலையுள்

தட்டுப்பட்டுக்கொண்டே

யிருக்கும் முள்ளுச்சொட்டு

(புராதன இதயம்தொகுப்பிலுள்ளஉலோகத் தாலாட்டு’)

 

_ இத்தகைய வரிகள் வரவாக்கும் அனுபவத் தாக்கம் நுட்பமானது. அனுபவத்தின் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துவது என்பது வேறு. அனுபவத்தையே நேரிடையாக வார்த்தைகளில் தருவது என்பது வேறு. இரண்டாவது mere reporting. எந்தவொரு விஷயமும் அது தரப்படும் விதத்தைப் பொறுத்தே கவிதையாகிறது; ஆகாமல் போகிறது. உலகத்திலேயே மொத்தம் ஏழே ஏழு அடிப்படைக் கதைக்கருக்கள்தான் இருக்கின்றன என்பார்கள். சொல்லும் விதத்தில்தான் ஒரு விஷயம் புதிதாகிறது; தனித்துவம் பெறுகிறது. ‘இவரது பாணி படிமங்களின் அழகில் நின்றுவிடுவது. படிமங்களைப் படிமங்களுக்காகவே உருவாக்குகிறார். வேண்டுமென்றே. கவிதை ஒரு தொடர்ந்த இயக்கம் என்ற எண்ணம் இவருடைய முதல் கவிதையிலிருந்து மூன்றாம் கவிதைத்தொகுப்பு வரை இல்லையென்பதாகவே படுகிறது,’ என்கிறார் தமிழவன். ( மீட்சி 32 / 1990 – ‘நான், நீ, புதுக்கவிதை மொழியடிப்படை விமர்சனம்). இந்த விமர்சனப் பார்வை வாசகருக்கு வாசகர் மாறுபடலாம். ஒரு படைப்பில் நாம் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தது அது.

 

பிரம்மராஜன் கவிதைகளில் அந்நிய மண்ணளவு நம் மண்ணின் பழங்கதைகள், பழமொழிகள், இதிகாச புராணங்கள், கர்நாடக இசை, இயற்கை வளம் முதலிய பலவற்றிலிருந்து விஷயங்களும், குறிப்புகளும், குறியீடுகளும் எடுத்தாளப் படுகின்றன. சமயங்களில் இரண்டுமண்களும் சரிசம விகிதத்தில் சேர்வதும் நேர்கிறது.

 

யாழ் உருகிக் கரைந்த பாறையில்

உறங்கும் தேரை’.

 

(கயிலாயத்திற்கடியில் பத்து தலைகள்’ – புராதன இதயம் தொகுப்பிலிருந்து)

சுயசித்திரத்தில் வான்கோ

வெட்டிக்கொண்டான் ஒரு காதை

கட்டிப்போட்டு அதையும் படமெழுதி

சுக்கான் பிடித்துப் புகை விட்டான்

அந்தணர்க்கந்தணன் சொன்னான்

பிட்டும் பிடி சாம்பலும்

சொந்த மண்ணும்

சமமே சமம்.

(நிலவின் இதயத் தாளம்புராதன இதயம் தொகுப்பிலிருந்து)

 

பிரம்மராஜனின் கவிதைகளில் காணப்படும் படிம அடர்த்தியும், குறிப்புகளும் பல நேரங்களில் அவருடைய கவிதைகளை முற்றுமாய் உள்வாங்கவிடாமல் அலைக்கழிக்கின்றன என்பது ஓரளவு உண்மையே. என்றாலும், இதில் வாசகனின் பங்கேற்புத் திறன் என்ற விஷயமும் அடங்கியிருக்கிறது. தவிர, ‘இலக்குஇங்கிருந்து வெளியேஎன்பதாய் அந்தக் கவிதைகளில் அடிநாதமாய் இழையும் உணர்வுகளை உள்வாங்கிக்கொண்டுவிட முடிகிறதுஓரளவுக் கேனும். உதாரணத்திற்கு, ‘புராதன இதயம்தொகுப்பிலுள்ளபுகைப்படத்தில் ஒரு புகைப்படம்கவிதையை எடுத்துக்கொண்டால் அதன் எல்லா வரிகளும், அவற்றிற்கிடையே இருக்கக்கூடிய அர்த்தத் தொடர்ச்சியும் பிடிபட்டுவிட்ட தாகக் கூறமுடியாதென்றாலும் கவிதையில் அடர்ந்திருக் கும் துயரத்தை, துயர் போன்ற ஒன்றை உட்கிரகிப்பது எளிதாகவே இருக்கிறது. உதாரணத்திற்கு, பின்வரும் கவிதை:

பித்தமும் பிரம்மமும்

அரைக்கனவு துளிர்பிறை

கயிற்றரவு கங்கையாறு

சர்ப்பக்காற்று சலனிக்காது

மூன்றாவது கண் மூடியே நோக்கும்

பித்தமும் பிதற்றலும்

கவிதையே ருத்ரமூர்த்தி

ஆறாத புண் அது என்றும் நாறும்.

 

புராதன இதயம்தொகுப்பில் கவிதைகளில் வரும் சில பல சொற்களுக்கு அடிக்குறிப்புகள் தரப்பட்டிருந்தது கவிதைகளை அணுகுவதற்கு நிறைய உதவி செய்தது. இப்படி அடிக்குறிப்புகள் தருமளவு ஒருவர் அத்தனை படிமங்களையும், சாதாரணப் புரிதலுக்கு அப்பாற்பட்ட வார்த்தைகளையும் அள்ளித் தெளிப்பது அவசியமா என்ற கேள்வி அனாவசியமாகத் தோன்றுகிறது. இது அவரவர் மனசாட்சி சம்பந்தப்பட்ட, அல்லது, படைப்பாக்கத்திற்காய் ஒருவர் தேர்ந்தெடுக் கும் வடிவம் சம்பந்தப்பட்ட விஷயம்.

 

அறிந்த நிரந்தரம்என்ற தலைப்பில் நிரந்தரமில்லாதவை என்று அறிந்த வைகளை நிரந்தரமாக உள்ளடக்கியிருப்பதைக் காண முடிகிறது.

 

_ ‘இல்லாமல் இருந்தது ஒன்று தான்

மகிழ்ச்சியான கடல் அது

 

நினைவுக்கென வெட்டிக் கொடுத்து

பின் காயங்களில் சாசுவதம் கண்டு

வரும் நாட்கள் கழியும்

 

_ ‘மாற்றுவதென்பதே முடியாமல் மலைக்க

உயிர் கரைத்து உண்டு வாழ்கிறது

கபாலத்தில் மின்னல் புழு.’

 

_ என கவிஞரின் எல்லாத் தொகுப்புகளிலும்நிரந்தரமில்லாததன் நிரந்தரத்தைப் பற்றிய உணர்வுக்குறிப்புகளும், காட்சிப்படுத்தல்களும் ஏராள மாக உள்ளன.

 

ந்தவொரு கவிஞனிடமும் காணக் கிடைப்பது போலவே பிரம்மராஜனின் கவித்துவத்திலும் ஒரு சில அடிப்படைக் கருப்பொருள்களை, திரும்பத் திரும்ப வருவதான பாடுபொருள்களைக் காண முடிகிறது. திரும்பத் திரும்ப வருவதானபாடுபொருள்களைக் காண முடிகிறது. முக்கியமாக மூன்று. ஆண்பெண் உறவின் உடல்ரீதியான, உளவியல் ரீதியான பல நிலைகளை, பல பரிமாணங் களைப் பற்றிப் பேசும் கவிதைகள். நடப்பிலுள்ள வெகுஜனப் பார்வை குறித்தும், இதுதான் கவிதை என்று வெகுஜன ஊடகங்களும், அரசு அதிகாரங்களும் அங்கீகரிக்கும் கவிதைகளைக் குறித்துமான எதிர்ப்புக் குரல்.

 

ஒரு நகராமனிதனாபுத்தகமா

பெயரா அல்லது புனிதனா எதுவென்று புரியவில்லை

நான் சொல்லுவது உனக்கு

 

(மணற்கரையில் திரியும் மனிதன்‘ - வலி உணரும் மனிதர்கள்தொகுப்பிலிருந்து)

 

 

உன் பெயரற்ற எலும்பு

கரிக்கும் அலை ஒளிரும்

ஒரு கவிதை அறிவை நிர்தாட்சண்யமாய்

நிராகரிக்கட்டும் மனதும்உலகும்

பிணையும் சங்கிலி காற்றில் ஊசலாடும் காகிதம்

நிகழ்ச்சியின்தொடர்ச்சியின்

ஒளிப்படமல்ல சமுத்திரத்தின் பாஷை

 

(நெய்தல் தேசம் –’ புராதன இதயம்தொகுப்பிலிருந்து)

 

வெறும் சொற்கள் நகர் கதை வரி

கேட்டோர் முன் ஜொலிக்கப்பட

அரண்கள் சரிவிற்கு அப்பால்

வானிலிருந்து வீசப்படுகிறது ஏரி?

 

(நுரையீரல் அமைதி – ’மகாவாக்கியம்தொகுப்பிலிருந்து)

கவிதையா

 – விதையா?

வினைச் சொல்லாக கவிதை

மீள் எல்லையின் கேள் என்ன?

சொல் செல்லவில்லை மில் அல்ல கவிதை

ஃபில்லரும் இல்லை

 

(எதிர்கவிதையாளருடன் ஒரு பேட்டிஞாபகச் சிற்பம் தொகுப்பிலிருந்து)

என பல வரிகளை பரவலாக அங்கீகரிக்கப்படும் mediocre poetry குறித்த கவிஞரின் எதிர்ப்புக்குரலாகவும், கவிதை பற்றிய அவருடைய பார்வைகளை முன்வைக்கும் கவிதைகளா கவும் உதாரணங் காட்டலாம்.

 இரண்டாவது முக்கியச் அடிச்சரடு மனிதனின் முழு முடிவான தனிமையை, பெயரிட்டுச் சொல்ல முடியாத சோகவுணர்வை, நிறைவின்மையைப் பற்றியது. ‘மகாவாக்கியம்தொகுப்பில் இடம்பெறும் அதே தலைப்பிலான கவிதை இதற்கு மிகச் சிறந்த உதாரணமாகிறது.

 

வியர்த்தும் விளங்கவில்லை களைத்தல்

வீண் எனினும் சுருண்டுவிடுகிறேன்

விரியும் அர்த்தத்தின் மடியில்

 

_ என முடியும் இக்கவிதை மேற்குறிப்பிட்டநிரந்தரமாய்த் தொடரும் ஒருநிறை வின்மைஎப்படி கவிமனதின் இயக்குவிசையாகிறது என எடுத்துக்காட்டுகிறது.

நனவிலி மனமும் அவருடைய நனவு மனதுடன் தொடர்புறவாடிக்கொண்டே யிருப்பதை rational vs irrational என்ற அளவிலும்கூட, அவருடைய கவிதைகள் பலவற்றில் காணக் கிடைக்கிறது. குறிப்பாக, கவிஞருடைய முக்கியக் கருப்பொருள்களில் ஒன்றான, பெண்ணுடனான தொடர் புறவை மையமாகக் கொண்ட கவிதைகளில் இந்நிலையைப் பார்க்க முடிகிறது.

 

என் உடம்பின் விமோசனியும் நீ தானாக

தாந்தேவின் காதலியும் நீ தானாக

(சித்ரூபிணி – 4 : ‘மகாவாக்கியம் தொகுப்பிலிருந்து)

இங்கேஆகஎன்ற சொல் ‘You are’ என்பதாகவும், ‘Let you be’ என்பதாகவும், யதார்த்தத்திற்கும் fantasyக்கும் இடையே ஒரு திரிசங்கு தளத்தில் இயங்குவதையும், இங்கு fantasyஐயும் நிஜம் போல் பாவித்துக்கொள்ளும் நனவிலி மனதையும், நிஜத்தையும் fantasyயாகச் செய்யும் பிரக்ஞாபூர்வ மனதையும் நம்மால் உணர முடிகிறது. இதைஆகஎன்ற ஒரு சிறு வார்த்தையின் கனதிருத்தமான இடப்பிரயோகத்தில் நிறுவுகிறார் கவிஞர்! நனவிலி மனமும் ஒரு வகையில் கனவுமனம்தான் என்று கொள்ளலாமெனில் இவருடைய கவிதைகளில் பலவற்றில் கனவுமனம் பிரதிபலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பான  வலியுணரும் மனிதர் களில் கற்பனை நிகழ்வின் யதார்த்தம் என்ற தலைப் பிட்ட கவிதை, இன்றைய கற்பனை இன்னொரு நாளின் நடப்பாவதை விவரிக்கிறது. அல்லது, கற்பனை என்பதை நடப்பின் நீட்சியாகவே பார்க்கிறது. ‘எதுவும் முன்பு போல் இருக்காதுஎன்று சொல்லியவாறே கவிதை பட்டியலிடும் விஷயங்களெல்லாம், நாளை நடக்கப்போகும் அபாயங்களாக பட்டியலிடு வதெல்லாம் இன்று நடந்துகொண்டிருப்பவை யாகவும் உள்ளன:

இன்று உறிஞ்சப்படுவது

அன்று சிந்துவது சில துளி குறையும்

நீரை விட எளிதாய் மனிதர் குருதி காய்ந்து மொய்க்கும்

புண்ணாய்ப் பிளந்திருக்கும் சுவர்கள்

விரிசலில்

சிறு புல் முளைக்கும் கிளி நிறத்தில்

களைத்திருக்கும் உடல்களில்

வியர்வை வைரப்பொடியாகும்

கழற்றப்படும் சட்டையென

உன் தோல் சோதனைக்கு

ஈக்களின் ரீங்காரம் யாரும்

பாட முடிவதாயிருக்காது….

கதவுகள் தகர்க்கப்படும்

கனிகள் கனவுகள் நீரில் மூழ்கும்

தெருக்களில் தாற்காலிகச் சாவுகள் முளைக்கும்.’

பிரம்மராஜனின் கவிதைகள் எல்லாமே ஆரம்ப வரி,  முடிவு வரி என்ற வரிசைக் கிரமத்தில் உருக்கொள்வதில்லை என்று சொல்லிவிட முடியாது என்றாலும் பல கவிதைகளில் இந்த ‘முடிவு நோக்கிய விரைவுப் பயணம் என்பது இல்லாமல் ( வழக்கமான கவிதை பாணியில்அந்தந்த வரியில் பயணம் புதிதாய் ஆரம்பமாகி முடிகிறது எனவும்கவிதை கவிதைவரிகளில் எதிலிருந்தும் சுழல ஆரம்பிக் கிறது எனவும் கூறலாம். இதற்குகற்பனை நிகழ்வின் எதார்த்தம்’   என்ற கவிதை ஒரு தெளிவான உதாரணமென்றால் வேறு சில சிக்கலான கவிதைகள் பூடகமான அளவில் உதாரணங்களாகின்றன. ‘புராதன இதயம்தொகுப்பில் வரும்நிலவின் இதயத்தாளம்என்ற கவிதையைக் குறிப்பிடலாம்.

 

அந்தணர்க் கந்தணன் சொன்னான்

பிட்டும் பிடிசாம்பலும்

சொந்த மண்ணும் சமமே சமம்.

 

என்ற இறுதிவரிகள் ஒரு வகையில் திட்டவட்டமாய்ப் புரிபடும் அதே சமயம் அது இல்லாமலும் கவிதை நிறைவு பெறுகிறது. அல்லது, அது இருந்தும் கவிதை முத்தாய்ப்பை எட்டவில்லை எனவும் கூறலாம்.

 

இந்தமுடிவின் முடிவின்மைஎன்பது பிரம்மராஜன் கவிதைகளின் இன்னொரு இயங்குதள மாகிறது.

 

 

பிரம்மராஜனின் கவிதை ஓர் அடர்தனிமையை, அதன் வழியான அடர்தனித் தன்மையைக் கொண்டு விளங்குகிறது. இதன் காரணமாகவே அவருடைய கவிதைகளையோ, அவற்றால் உத்வேகமளிக்கப்பட்டு எழுதப்படும் கவிதைகளையோ அல்லது பிரம்மராஜனுடைய கவிதைகளின் நகலெடுப்புக ளையோ எங்கு பார்ப்பினும் சட்டென அடையாளங்கண்டு கொள்ள முடிகிறது. இந்ததனிமுத்திரைபதிக்கும் உத்வேகமும் கவிஞர் பிரம்மராஜனுடைய கவித்துவத்தின் இயக்குவிசைகளில் ஒன்றாகிறது. தவிர, தீவிர உணர்வு நிலையிலேயே சஞ்சரிக்கும் மனநிலை வாய்க்கப்பெற்றவர் இவர் என்பதும் இவருடைய கவிதைகளிலிருந்து காணக் கிடைக்கிறது. இதனால்தான் சாதாரண விஷயமென்று அவரால் எதையும் ஒதுக்க முடியாமலிருக்கிறது. மின்மினிப் புழுவிலிருந்து கார்ட்டூன் சிறுவன்சார்லி ப்ரவுன்வரை அவர் மனதில் ஒரு தளும்பல் நிலையை வரவாக்குகின்றன. ஊனமுற்றவர்களைக்கூட கேலிப்பொருளாக்கும் இன்றைய சூழலில் வேடிக்கைச் சிறுவன் சார்லி ப்ரவுனை எத்தனை வாத்சல்யத்தோடு இவர் கவிதை அணுகுகிறது என்பதைப் பார்க்க வியப்பாயிருக்கிறது.

 

 

நாள் ஒரு நினைவும்

பொழுதொரு கவலையுமாய் கவனித்துவருகிறேன் அவனை

பட்டம் தின்னும் மரத்திடம் சிக்கிக்கொண்டான்

பட்டத்தையும் மரம் கவ்வ இவன் இப்பக்கத்து நூலை இழுக்க

  இப்படி காலில் நூல் சுருக்கி தலைகீழாய்த் தொங்கினான் மரத்திலிருந்து

 

(கார்ட்டூன் வாழ்வும் காஃப்க்காவும்ஞாபகச் சிற்பம் தொகுப்பிலிருந்து)

 

 

னிமனித அனுபவமாகவும், மானுடத்தின் பொதுவான உந்துவிசையாகவும் நிறைவின்மை களின் குறியீடாகவும், அல்லது, அதனளவிலேயே நிறைவின்மையைப் பேசுவதாகவும் இவருடைய கவிதைகளில் பாலியல் சார் கருத்தோட்டங்களும், விவரிப்புகளும் தொடர்ந்த ரீதியில் இயங்கி வருவதைக் காண முடியும்.

நீருக்கடியில் முதலை

உமிழ்கிறது உலகின் முதல் 

கொடியோடி பூ விரிந்து

பறவைகள் பெருகி

புணர்ந்து புறப்பாட்டான ஜீவன்

வீழ்கிறது மீண்டும்

மண்ணில் ஒரு செல் உயிரியாய்

மீண்டும் புறப்பாடு

போதம் புலப்படாது

 

(போதந்தேடி / போதத் தேடி’ – ஞாபகச் சிற்பம் தொகுப்பிலிருந்து)

_ இந்த வரிகளில் மானுடத்தின் உயிர்ப்புவிசையாக உடலுறவு பேசப்படுகிறது.

அப்பொழுது பாடும் தசையின் ஒளியில்

தொடைகளுக்கிடையில் கிடந்த சுடர் மடிய

இப்பொழுது வெளிரும் மத்ய காலத்தை

முன்பே வழிமறித்து பழசாகும் நினைப்பு

 

(தோரணமாகும் காரண இருள்புராதன இதயம் தொகுப்பிலிருந்து)

_ என்ற கவிதைவரிகளில் வயதேற ஏற உடலுறவின் நினைப்பும் நடப்பிலுமான மாற்றங்கள் கோடிகாட்டப்படுகின்றன.

 

மழைக்குள் முற்றிய தூறல்

வளர்முலை எனக்குள் வார்க்கும் உயிர்

 

எனவும்,

முற்றிலும் சரண் எனும்

இளம் காலையில் மறுவிரல்

உன்னைக் கோடையாய் விரிக்கும்

 

எனவும் புராதன இதயம் தொகுப்பிலானஎன்பதும் ஒன்பதும்என்ற கவிதை பெண்ணுடலை நேயத்தோடும், நன்றியோடும் பேசுகிறது. அவ்வண்ணமேநெபக்கோவின் ஒட்டுச் செடிகள்என்ற தலைப்பில்ஞாபகச் சிற்பம்தொகுப்பில் இடம்பெறும் கவிதையில்,

வென்று வென்று வேரறிந்து

நின்மரம் நீர்சொரியும்

கண் மூடும் என் பாதம்

 

என்பதாகவும்

முலை முகிழ்க்கும்

இலை துளிர்க்கும்

நரைத்து ஒடியும்

நடுவயதின் மரம்

ஒட்டுக்கு அழைக்கும்

உன் கன்றினை

 

என்பதாகவும் பெண் தேகமும், அதனுடன் நினைப்பில், அல்லது, நடப்பிலான சம்போகமும் நெகிழ்வோடு பேசப்படுகின்றன.

ஆடைகளறியாத பெண் உருவம்

அணியாது

மனதின் சுழற்படிகளில் இறங்குகிறது

 

(கழுகுகளின் காதற்காலம்ஞாபகச் சிற்பம் தொகுப்பிலிருந்து)

 

_ என்ற வரிகளில்பெண்ணுடனான சம்போகம் பாவனைகளற்று இருக்க வேண்டும், அல்லது, பாவனைகளற்ற பெண்ணின் உறவு கிடைக்கவேண்டும், அல்லது ஆடைகள் அறிமுகமாகாத காலகட்டப் பெண் கிடைக்கவேண்டும் எனப் பலவாக உடலியல் சார் பொருள் கிடைக்கிறது. அந்தக் காலகட்டப் பெண் சாத்திய மில்லாததே போல் பாவனைகளற்ற உறவும், சம்போகமும் சாத்தியமில்லை என்பதாகவும் உட்பொருள் கொள்ளலாம். ஆடை என்பது பாவனைகளுக்கும், அம்மணம் என்பது நிஜம், உடலுறவு ஆகியவற்றுக்கும் குறிப்புச் சொற்களாக இடம்பெறுவது நவீன கவிதைகள் பலவற்றில் காணக்கிடைக்கிறது.

 

பொதுவாக பிரம்மராஜன் கவிதைகளில் உடலுறவு என்பது அதனளவேயான தேவைக்காகப் பேசப்படுவதை விட அதன்வழி சாத்தியமாகக்கூடிய ஒரு உணர்வுரீதியான நிறைவுக்காகவே அதிகம் பேசப்படுகிறது. இந்த அணுகுமுறை நவீன கவிதைகள் பேசும் பொதுவான அம்சமாகவும் புரிபடுகிறது. (பாலியலின் தாத்பர்யமே இதுதான் என்றும் கூறலாம்). பாலியல் வாழ்வின் முக்கியமான உந்துவிசை; அடிநாதம்; பிணைப்புக்கண்ணி. இன்னும் பல. இந்தமைய அச்சு இடம்பிரம்மராஜன் கவிதைகளில் பாலுறவுக்குத் தொடர்ந்து தரப்பட்டு வந்திருப்பதை அவருடைய எல்லாத் தொகுப்புகளிலும் காண முடிகிறது.

உடலினால் உண்டான உபமொழி

நிற்பதாயில்லை

 

_ என ஏங்கும் கவிதை,



புதல்வரைப் பெறுதல் நிற்பட

ஓய்வின் சாகரமாகவே மாறின படுக்கைகள்

உலை ஊதும் துருத்திகளாயின மூச்சுக்களின்

உறுப்புகள்

கரிந்த புற்களின் பீடபூமி

நீர் வற்றிய நிழல்களில்

முகம் பார்க்கும்

இடை கீழ்ப்பட்டு

மீன்கள் அழிந்ததால் சாதலின் ஏரிகளிலிருந்து

மீட்டுப் பறந்த நாரையாகித் தேடும்

இன்றும் குச்சிப்பூச்சிகளை

என் நீலவானத்தின்

நித்தியத்தில் ஏக்கம்

காலத்தின் ஸ்வரூபமாய்

மனதிற்குள் கிரகிக்கப்பட்டிருக்கிறது

இந்த சரீரம் என்பதால்

 

என்று மனதையும், உடலையும் இரண்டறக் கலந்து, இரண்டிற்கும் சம அந்தஸ்து தந்து முடிகிறது. மனிதனின் அடிப்படை உந்துவிசையான பாலுறவு வெறும் இனவிருத்திக்காய் மட்டுமாகச் சுருங்கிவிடும் சோகமும், பாலுறவின்பழகப் பழகப் புளிக்கும்அவலத்தன்மையும், அதையும் மீறி நிற்கும் நித்திய ஏக்கம் ஆகிய எல்லாமும் இந்தக் கவிதையில் பதிவு செய்யப்படுகிறது.

 

கரையில் உவர் மணல்

ஆடல் புரிந்து ஆடினார்

ஒருவர்

அரைகெழு கோவண ஆடையில்

பாம்பு இரைக்க _

 

இலங்கை மன்னன்

இருபது தோள் றுபடும் கஹ்டிபட

இளமை கைவிட

 

பிறகு ரேயும் , பாலசரஸ்வதியும்.

 

_ என உடலுறவின் காலப்போக்கையும், அதன் வழியான மன அதிர்வுகளையும், ஒருவித தத்துவ நோக்குடன் என்றுகூடச் சொல்லலாம், சொல்லிச் செல்லும் கவிதை, ‘கடல் இடை மலைகள்என்ற தலைப்பிலானது

 

உமை முலை அவர் பாகம்

இருளாய கரையில்

அருளாகும் நின் தேகம்

எண்ணற்ற வண்ணத்து

ஒளிர்வதாகும் என் அகம்

 

என்று முடியும்போது பாலுறவின் நிறைவமைதி தாற்காலிகமாகவேனும் கைகூடி விடும் தருணத்தை நெகிழ்வும், மகிழ்வுமாக நம்மோடு பகிர்ந்து கொள்வதாக அமைகிறது.

 

நீயமர்ந்த சிம்மாசனம் நானானேன்

ஷணங்களில் செருகிய கிறக்கம்

ஸ்தூல நானிலிருந்து சாட்ஷாத் நானை

கொத்திக்கொண்டுபோயிருக்கிறது

இறைச்சி உண்ணும் அரக்கப் பறவை

என்னை என் படுக்கையில் இறக்கிவைக்கையில்

சாகரத்தின் என் பாகம்

ஏரிக்கு ஒப்பானதாய்

அலை வரி கொள்ளாது

படிகமாய்ச் சமையும்

மீண்டும் அழைக்கும் வரை.

 

 

பாலுறவுக்கான ஏக்கம், அதில் வரவாகும் நிறைவின்மை, கூடுவதில் நேரும் அவசரம், அதன்வழியான அதிருப்தி, எதிர்பாலினம், அதனிடமிருந்து பெறப்படும் நேயம், நெருக்கம் முதலியவை பற்றியெல்லாம் மனதில் நிலைபெற்றுவிட்ட ஒரு Utopion conceptக்கும்யதார்த்த உண்மைக்குமான இட்டு நிரப்பலாகா இடைவெளி, இந்த இடைவெளி இட்டு நிரப்ப முடியாதது என்ற பிரக்ஞையும் அதை ஏற்க மறுக்கும் ஒரு பிரக்ஞாபூர்வமான ‘willing suspension of disbelief நிலையும், என பிரம்மராஜனின் பாலியல் கவிதைகளில் பாலுறவின் பன்முகங்கள் பேசப்படுகின்றன. ’நீயமர்ந்த சிம்மாசனம் நானானேன்என்ற வரியும், ‘சாகரத்தின் என் பாகம் / ஏரிக்கு ஒப்பானதாய்என்ற வரியும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவும் இருக்கலாம், இல்லாமலும் போகலாம்இந்தக் கவிதை அதன் முதல் பாதியில், ‘நேர்ந்த உடலுறவின் ஏதோ ஒருவித நிறைவின்மையைப் பேசுவதாகவும், இறுதிப்பகுதி மீண்டுமான அழைப்புக்கான (உடலுறவுக்கான) ஏக்கத்தை வெளிப்படுத்துவதாகவும் பாலியலின் முரண் தன்மைகளை, அந்த முரண்களின் ஒத்திசைவுகளை முன்வைப்பதாய் அமைந்துள்ளது.

தாற்காலிக நிறைவமைதி, தாற்காலிக சந்துஷ்டி, தாற்காலிகக் கிளர்ச்சி, பரவசம் முதலானதாற்காலிக நிரந்தரங்களுக்குஅப்பால் மனதில் என்றுமான நிரந்தரமாக (பிரம்மராஜன் மொழியில் சொல்வதென்றால்அறிந்த நிரந்தரம்’) வேர்விட்டிருக்கும் ஒரு திருப்தியின்மை, தேடல், தவிப்பையெல்லாம் வறட்டுத் தத்துவமாக்காமல் பாலின்பத்தை முதன்மைப்படுத்தி எழுதப்பட்டிருக்கும் பிரம்ம ராஜனின்மகாவாக்கியம்என்ர கவிதை அவருடைய பாலியல் கவிதை களின் magnum opus உச்சம் எனலாம்

 

என்ன செய்யலாம்

எழுதப்படாமலிருக்கிறது

இஷ்டிக்கும் பசலைப் பெண்ணின் திளைப்பின் உச்சமாய்

வான் நோக்கி நிமிர்ந்தும் நிரம்பாத திருவோடாக

தீராது நோகிறது வலி

தீர்ந்தும் விடுகின்றன நிவாரணிகள்

களஞ்சியத்தின் காலி வெறுமை

எறும்புகளின் பொறுக்குமணிகளால் நிறையப் போவதில்லை.

முத்தத்தின் மகத்துவம் விளங்கவே இல்லை

தீர்ந்தொழியும் முத்த எண்ணிக்கை மீறியும்

பெண்ணுக்குள் விண்ணொடு மண்ணும் கண்டவர்

தந்திலார் எனக்காகும் தகவுகளை

ஈசனாய்த் தோற்றமெனக்குள் என்ற பாரதியும்

முடிக்கவில்லை மீதங்களை

வண்ணத் திகட்டல்கள் கெட்டிப்படு முன்

தீட்டப்பட்டிருக்கவில்லை

மேலும் காதறுத்த ஓவியமே

சபை ஏறும் மறைநாயகக்க் அருவியின் சுருதியின் முன்

தளர்ந்துவிடுகின்றன தாளங்கள்

வியர்த்தும் விளங்கவில்லை களைத்தல்

வீண் எனினும் சுருண்டுவிடுகிறேன்

விரியும் அர்த்தத்தின் மடியில்’.

 

_ கவிதையின் முடிவாய் வரும் இரு வரிகள் பாலுறவையும், பூமியிலான அக, புற வாழ்க்கையையும்  ஒருசேரப் பேசுகின்றன. அவற்றிற்கான மனித மன தாகத்தையும் கூட.

 

மீறல் டிசம்பர் – 1991 இதழில் வெளியானயுக அந்தத்தில் ஒரு ஹரன்என்ற கவிதை உடலுறவை அதன் இயக்க அளவிலேயே, கவித்துவம் குறையாமல் விவரிக்கிறது.

பேனாவை பிடிக்கக் கூம்பும்

சுட்டும் பெருவிரலும் சிறிதே இடைவெளியாகுமாய்

தாய் ஆகுமப்பிறப்பிடம்

வெளிர் ஊதா சிவப்பின்

நூலைக் கோர்த்திரா

ஊசிக்காது போலாகும்

விளைச்சல் புரிந்த புல்

உயிர்ச்சாறு உலர்ந்த

சிலந்தி உடல் ஒக்கும்

காற்றின் திசையில் குமிழும்

எழிலற்ற பாராசூட்

இமை முடிகளில் அழுந்தப் படியும்

இடைமேற்பட்ட பூகோளம்

குருதியில் பிராணனை ஏற்றும்

நாள நதிக் கிளைகள்

திட்டமிட்ட குன்றுகள்

முடியைச் சுழலும் கோரைகள்

பயின்றுன்

பியூட்ரின் செய்திகள்

ஒரு பாகனை அடைந்த மாது

நீ.

 

_ உடலுறவின் மறுமுனை உயிருக்கும் முழுமையாகக் கிடைக்கவில்லை.. இயங்குபவனின்நான்’. பெண்ணுக்கு ஆணும், ஆணுக்குப் பெண்ணும் ஒரு ஒரு பாகம்தான். இரண்டு அரை வட்டங்களென்று சொல்வாரும் உண்டு. இந்தக் கவிதை குறிப்பாலுணர்த்துவது அரைவட்டங்க ளையா? பின்னங்களையா? ‘ஆக்கியோன் பிரதிசொல்வது எதுவோ? வாசிப்போன் பிரதி சொல்வது எதுவோ? ஒரு ஆக்கியோனே பலராய், பல வாசிப்போனே ஒருவராய்கற்றது கையளவாய் காற்றாடிக்கொண்டிருக்கிறது கவிதை!

 

அபயம் கேட்கும்

மனம் நித்ய கன்னியிடம்

பேசா மடந்தையெனில்

(மகாவாக்கியம் – ‘தீவினைப் பூக்கள்’)

 

என பெண்ணை, பெண் உடலை தனக்கான வலிநிவாரணமாக மட்டுமாய் பாவிக்கும்ஆண்பெண்மையப் பார்வையே இவருடைய ஆண்பெண் உறவு குறித்த கவிதைகளில் பொது வாகக் காணக் கிடைக்கிறது என்றாலும்

 

என்னை மலர்த்து

நீ பகிரும் பொருட்டாவது

(சித்ரூபிணிமகாவாக்கியம்)

என்பதாகவும்,

 

யாதுமே விளங்காது விழிபிதுங்க வழிவேண்டி நிற்கும்

உன் நீயோ நான்

என்றுமே உன் நீயோதான்

(சித்ரூபிணி 2 – மகாவாக்கியம்)

எனவும்,

 

உன் உடலார்ந்த பரிமளம் இழந்த வெற்றம்பலம்

பற்றி அறிந்துவிட்டதாக

ஏதோ ஒரு கற்பகாலத்தில்

ஒருவன் இங்கிருப்பதாக

(சித்ரூபிணி 4 – மகாவாக்கியம்)

எனவும் மொழியும் பல வரிகள் ஆண்பெண் உறவில் பெண்ணின் இடத்தை வேறு தளங்களுக்கு உயர்த்துவதையும் காண முடிகிறது. பெண்ணின்  அண்மை என்பதுகாலத்தை நிர்ணயிக்கும், பிரதிநிதித்துவப்படுத்தும் விஷய மாகவும் இவர் கவிதைகளில் இடம்பெறுகிறது.

 

பாப் தலைப் பெண்ணின் ரோமகேசங்கள்

என் கன்னங்களை வருடிக் கொள்ள

காலத்தின் ஸ்வரூபமே

தானே என்றாள்

 

(அணில் யுவதியுடன் ஒரு கனவில்மகாவாக்கியம்)

அவரவர் ஆடைகளுக்கடியில் அனைவரும் நிர்வாணமே

என்று முணுமுணுத்து

முதல் நனைவு தொண்டையில் இருந்து சிலிர்க்க

உன் உடல் மனதுக்கு மட்டுமென்றும்

உன் ஸ்னேகம் உயிருக்கு நேர் என்றும்

அதிர்ந்துகொண்டேயிருக்கிறது.’

(பின்பனி இரவு ஸ்ருதிமகாவாக்கியம்)

இந்தக் கவிதையில் வரும்என்றும்என்ற ஒற்றைச் சொல், ‘எனவும்’, ‘என்றைக்குமாய்என இருபொருளைத் தருவதாகி கவிதையின் பாடுபொருளை அடர்செறிவாக்குவது பிரம்மராஜனின் மொழியாளுமைக்கும், கவியாளுமைக்கும் ஒரு சான்று. அவ்வாறே, கடல் பற்றிய கவிதைகள் என்ற தலைப்பில் வரும்பற்றியகடலைக் குறித்துப் பேசும் கவிதைகள் என்பதாகவும், கடல் இறுகப் பற்றிய, கடலை இறுகப் பற்றிய கவிதைகள் என்பதாகவும் அர்த்தச் செறிவு கூடியதாய் அமைந்திருப்பதையும் கவனங்கொள்வது தவிர்க்கமுடியாததாகிறது.

ஆண்பெண் உறவுநிலைகளைப் பற்றிய கவிதை பெண்ணைப் பற்றிய அளவிலான ஒரு love-hate மனோபாவமாக மாறி மாறி வருவதையும் இவர் கவிதைகளில் இனங்காண முடிகிறது.



புண்மையும் தெரியாதநன்மையும் அறியாத

சிறு பெண்ணிடம் யாசிக்கிறான்

பூச்சி ஆராய்ச்சிக்காரன்

(உலோகத் தாலாட்டு – புராதன இதயம்)

பெண்ணுக்குள் விண்ணோடு மண்ணும் கண்டார்

தந்திலார் எனக்காகும் தகவுகளை

(மகாவாக்கியம்)

 

யற்கை அதன் பல நிலைகளில், நிறங்களில், பரிமாணங்களில் கவிஞரின் வரிகளில் தொடர்ந்த ரீதியில் இடம்பெற்றுவருகிறது. என்ற அணுகுமுறையும் நிறைய கவிதைகளில் காணக் கிடைக் கிறது. இயற்கையின் பல்வேறு காட்சிகள் கவிமனதிற்கு வலிநிவாரணியாகின்றன. ‘வயல்கள் காக்கும் பசிய மௌனம்’ (வயல்களின் மௌனம்புராதன இதயம்)

 

எல்லாம் மறந்துவிடும்

என்னை அழைத்துச் சென்றதும்

என் தகுதியின்மையும்

பசும் குருத்துக்கள் மண்ணை உடைத்து கண் திறக்கும் போது

 

( வலியின் முகம்வலியுணரும் மனிதர்கள்)

காதல் முட்டாள்கள் செதுக்கிச்

சென்ற

தேதிகள் பெயர்களுடன் பெரிதாகும்

மரம் கனத்துச் சொல்கிறது

வெட்டிக் கிழித்தலின் வலியை விட

வடுவின் வளர் வேகம்

பொருக்குச் சேதம்

பொறுத்தல்

கொலையின் முடிவற்ற நீள் கோடாகும்.

(மரம் சொன்னது - - ஞாபகச் சிற்பம்)

 

என்னை நானே தொலைத்துக்கொண்டு

தேட வேண்டிய முகாந்திரம் இருந்தும்

புரட்டிப் புரட்டிக் கொண்டுவந்து சேர்க்கிறது

 

(கடலின் காருண்யம்மகாவாக்கியம் தொகுப்பு)

 

இயற்கையிலிருந்து இத்தனை வலிநிவாரணம் கிடைப்பதாக உணரும் மனது இயற்கைச் சூழலில் உண்டாகும்மாசுகுறித்து கவலைப்படுவது இயல்பே. இந்தக் கவலை பிரம்மராஜனின் பல கவிதைகளில் காணக் கிடைக்கிறது.

இசைஎன்ற படிமமும் இவருடைய கவிதைகளில் தொடர்ந்து கிடைக்கப் பெறுகிறது. இசைவழி ஏற்படும் தாக்கத்தை, ‘பசிய மௌனத்தை நோக்கியே தன் கவிதைகளை தான் கட்டமைப்பதாக சென்னையில்பொருநை இந்தியாஎன்ற அமைப்பின் சார்பில் நடந்தபிரம்மராஜனின் கவித்துவம் பற்றிய முழுநாள் கருத்தரங்கம் ஒன்றில் குறிப்பிட்டார் கவிஞர். பிரம்மராஜனின் பல கவிதைகள்வக்கிர ராகத்தைப் போன்றவைஎன்றும், வக்கிரம் என்றால் அசிங்கம், அத்துமீறல் என்று அர்த்தமல்ல என்றும், இசைப்பயிற்சியில் வக்ர ராகத்தைக் கற்காமல் மேலே போக முடியாது என்றும் அந்த அரங்கில் மூத்த கவிஞர் ஞானக்கூத்தன் குறிப்பிட்டது நினைவுகூரத்தக்கது.

 

பியானோப் பழங்களை எண்ணிறந்த வர்ணங்களில்

விதேசி வித்தகன் அறிந்தபடியே என் இருட்குளத்தில்

மூழ்க விடுவாய் சிற்றலைகள் சிற்பமாக

 

(கடைசியாக நீ கேட்டுக்கொண்ட புரியும் கவிதைமகாவாக்கியம் தொகுப்பிலிருந்து)

 

கடலின் தாட்சண்யமற்ற

கோரஸ் குரல்களில் என் பாடல்

கள்ளக் குரலாகி உப்புச் சிரிக்கிறது.

 

(கடலின் மனநிலை மாற்றங்கள்மகாவாக்கியம்)

மீதமாகும் ஒரு குரல் பிசிர்’ (சமன் நிலை சாகித்யம்மகாவாக்கியம்), வீணை விழா நடக்கும் நாய்கள் தூங்கும்(கல்பழமும் கரும்புப் பூவும்புராதன இதயம்), சாகும் குரல் குளம்படி / பற்றி ஸ்வரம் எடியும் ஷணம்’ (முதலைக்குப் பல்தேய்க்கும் பறவைகள் பற்றி’ – புராதன இதயம்), என பல வரிகளில் இசை பின்புலமாகவும், குறியீடாகவும், வாழ்வின் இயக்குவிசையாகவும் இடம் பெறுகிறது.

துண்டித்த நரம்புகளுக்கு சிகிச்சை வேண்டி

உன்னிடம்

யாசித்தது யதுகுல காம்போஜி

தாலாட்டிக் கரைத்தாய்

என்னை நீலாம்பரியில்

(’அது ஒரு ராகம்’ – ‘அறிந்த நிரந்தரம்தொகுப்பிலிருந்து)

கர்நாடக இசை அறிந்தவர்களுக்கு, அதாவது, காம்போஜியும், நீலாம்பரியும் எந்த மனோநிலையில் / எந்த மனநிலைக்காய் இசைக்கப்படுகின்றன என்பது தெரிந்தவர்களுக்கு இந்த வரிகளை இன்னும் அதிகமாக நெருங்க முடியும். கவிஞனுக்குத் தெரிந்திருக்கிறது. தெரிந்ததை உரிய இடத்தில் நினைவுகூரல், உபயோகப்படுத்துதல் தவிர்க்கமுடியாமல் போகிறது.

 

_”என் கவிதை பெரும்பாலும் ஆழ்மனதில் இருந்துதான் உருவாகிறது. இந்தக் கவிதை ஒரு உணர்விலிருந்தோ, ஒரு காட்சிப் படிமத்திலிருந்தோ உருவாக லாம். எழுதுவதற்கு சற்று முன்பான மனநிலை விளக்கிச் சொல்லப்படக் கூடியது அல்ல. அது எழுதப்பட்டால்தான் எழுதுபவனுக்கே தெளிவாகும். ஒரு முதல் பிரதியை எழுதிமுடிக்கும்போது அது பெரும்பாலும் ஆழ்மனதின் பிரதிபலிப்பா கவே இருக்கும். நினைவு மனநிலைக்கு வந்த பின்புதான் அதை சரி செய்கிறேன். இதில் நினைவு மனநிலையின் பங்கு என்பது மிகக் குறைவானது. ஆழ்மனத்திலிருந்து எழுந்த எண்ணங்கள்  எழுதப்பட்ட பிறகு அந்தப் பிரதியில் உள்ள இடைவெளிகளை மூடுவதற்குத்தான் நினைவுமனம் பயன்படுகிறது. ஆழ்மனதின் மொழிப்பயன்பாடு என்பது எழுதுபவன் எழுதும் வரை அவனுக்குப் புரியப் போவதில்லை”, (புதிய பார்வை நேர்காணல்பிப்ரவரி 1997), என்று சொல்லும் கவிஞர் அதே சமயம் நினைவிலி மனதிலிருந்து எழுதுவதையும், ‘என் பேனா எழுதுகிறதுஎன்பதையும் இங்கு குழப்பிக்கொள்ளக்கூடாது. இரண்டும் வேறு வேறானது”, 

எனத் தெளிவுபடுத்தவும் செய்கிறார்.

 

மொழிப் பிரக்ஞை, அதன் வீச்சு, சாத்தியப்பாடு, அதன்வழி பெறக்கூடிய வலி நிவாரணங்கள் பற்றிய அளப்பரிய விழிப்பும் பிரம்மராஜனின் இயக்குவிசைகளில் ஒன்றாகிறது. இவருடைய கவிதைகளில் இடம்பெறும் வெறும் பெயர்ப்பட்டியலாக நின்றுவிடுவதில்லை என்பதும் கவனத்திற்குரியது. ‘நெபக்கோவின் ஒட்டுச்செடிகள்என்று தலைப்பிட்ட கவிதையை இதற்கு உதாரணங்காட்டலாம். (’ஞாபகச் சிற்பம்தொகுப்பில் இடம்பெறுவது).

ஞாபகச் சிற்பம்தொகுப்பில் இடம்பெறும்பிரயாணத்திலிருந்து ஒரு கடிதம்கவிதையிலுள்ள வரிகள் இவை:

 

வருகிறேன் கொண்டு

இன்னும் சில நாட்கள்

கவிதையின் முட்டாள் வரிகள் நீலப் பூச்செண்டு

நிறையும் மறதி

தெருக்களின் விதிவழிகள்

கோதுமை வயல்களில் வளைந்து வந்த குவாலியர் சங்கீதம்

காலாவதியான ரயில் டிக்கெட்டுகள்

கண்ணில் வழியும் உறக்கமின்மை

தேய்ந்து போன காலணிகள் காந்தி தகர்க்கச் சொன்ன

கஜ்ராஹோவின் கல்சிற்பங்களின் கண்பதிவுகள்

கடல்

எல்லையின்மை

மற்றும்

 

_இந்த வரிகளின் ஆரம்பத்தில்கொண்டு வருகிறேன்என்ற வழக்கமன் சொற்றொடரைவருகிறேன் கொண்டுஎன்பதாக மாற்றித் தருவதன் மூலம் கவிஞர் மேற்குறிப்பிட்ட விஷயங் களையெல்லாம் தான் மனதில் உள்வாங்கிக்கொண்டுவிட்டதையும், அவற்றையெல்லாம் தன்னுள் சுமந்துகொண்டு வருவதையும், மகளுக்கு அவற்றை எடுத்துக்கொண்டுவருவ தையும்என பலவிதமாய் அந்த வரிகள் அர்த்தமாகி, கூடுதலாகத் துலக்கம் பெற வைக்கிறார்.

 

ரு இலக்கியப் பிரதியை அலசுவது என்பது அது எழுதப்பட்டதற்கு சற்று முந்தைய கவிஞரின் மனநிலையைச் சென்றடையும் இலக்கை நோக்கியே செயல்பட்டுவருவதான விமர்சன மரபைமறுதலித்து, ‘கவிதையின் அர்த்த உற்பத்தியை எடுத்துக்கொண்டால்இதில் என்ன சொல்கிறான் கவிஞன்?’ என்ற கேள்விக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்தக் கேள்வியால் கவிதையில் வாசகன் இடம்பெறும் பங்கு சாதாரணப்படுத்தப்படுகிறது. அர்த்தங்கள் தரப் படுபவையல்ல. வாசிக்கும்போது விடுவிக்கப்படுபவையே அர்த்தங்கள்”, என்கிறார் பிரம்மராஜன் (’மேலும்இதழ்ஆகஸ்ட் 1991)”சில சமயங்களில் தவறான விளக்கத்திற்கும் ஒரு கவிதை உட்படலாம். ஒரு கவிதையின் மிக நெருக்கமான அர்த்தத்திற்கு வாசகன் செல்வது எளிதான காரியம் அல்ல,” என்பதைச் சுட்டும் கவிஞர், தொடர்ந்து, “அர்த்தம் மொழிவழியாகவே சாத்தியமாகிறது என்பதை ஏற்றுக்கொள்வோமானால் மொழி மாறுதலுக்கு ஆளாகிறது என்பதையும் நாம் ஏற்கவேண்டும். மொழி மாறுதலடையும்போது அர்த்தமும், ஒவ்வொரு வாசகனுக்கும், காலங்களுக்கும் ஏற்பவும் மாறுத லடையும்,” என்று கூறுகிறார்.

 

ரசியல் என்ற வார்த்தை அதன் நேரடி அர்த்தத்திலும் சரி, குறியீட்டளவிலான பொருளிலும் சரி, கட்சிகள், தேர்தல்,அரசாங்கம், அதன் அதிகாரம் என்பதான சங்கதிகளோடு முடிந்துவிடு வதில்லை. The Politics of Experience என்ற தனது நூலின் முதல் அத்தியாயமான என்பதில் உளவியல் மருத்துவரும், கவிதையை ஆக பாவித்தவருமான R.D.Laing பின்வருமாறு கேள்விகளை அடுக்குகிறார்:

_”Can human beings be persons today? Can a man be his actual self with another man or woman? Before we can ask such an optimistic question as ‘What is a personal relaitonship’, we have to ask if a personal relationship is possible, or, are persons possible in our present situation? We are concerned with the possibility of Man. This question can be asked only through its facets. Is love possible? Is freedom possible?

 

_ எத்தனை கேள்விகள்! ஒவ்வொன்றும் அரசியல்தன்மை வாய்ந்தது. கேள்வி கேட்பது என்பதே கலக முனைப்பாக காலங்காலமாகக் கருதப்பட்டு வந்திருப்பதை அறிவோம். ‘கேள்வி கேட்பது அறிவின், சுயத்தின் வெளிப்பாடு, ஊக்குவிக்கப்படவேண்டியது,’ என்றெல்லாம் வாயாரச் சொல்லப்பட்டாலும்மனதாரஅப்படி ஆக்கபூர்வமான விஷயமாக வரவேற்கப்படுவதில்லை. குறிப்பாக, அதிகார மையத்தை எதிர்த்து முன்வைக்கப்படும் கேள்விகள்.

பன்முகம்இதழொன்றில் வெளியான பேட்டியில் தன்னை a-political, non-political என்று கூறிக்கொள்ளும் பிரம்மராஜனின் கவிதைகளில் பல்வேறுவிதமான அரசியல் கூறுகளைத் தெளிவாகவே காண முடிகிறது. அரசியல் பிரக்ஞை அற்றிருப்பதற்கும், அரசியல் பிரக்ஞை யோடு அதை மறுத்து இயங்குவதற்கும் வேறுபாடு உண்டு. பிரம்மராஜனின் கவிதைகள் சமூக, கலாச்சார, அரசியல் தளங்களின் அதிகாரக் கட்டமைப்புகளுக்கு எதிராகப் பல கேள்விகளை எழுப்புகின்றன. ஒரு அகவயமான, தனிமனித அளவிலான நிகழ்வாய் முன்வைக்கப்படும் கேள்விகளும், பதில்களும் கூட அதேவிதமாய் சமூகதளத்தில் சுயமாய் கேள்விகள் கேட்கப் படவும், பதில்கள் பெறப்படவும் வழியமைத்துத் தருவதாகலாம்.

 

நியான் விளக்குகளைத் தாண்டியும்

எனது உனது பாஷை

ரத்தமும் சதையும் –

மொழி வெறும் சங்கேதக் குறிகளாய்

கம்ப்யூட்டர்களின் கைகளில் சிக்கிய பின்னும் –

(மெஷின்களுக்குப் பின்னாலும் மனிதர்கள் – ‘அறிந்த நிரந்தரம்தொகுப்பிலிருந்து)

திரை நனைந்து எலுமிச்சை நிறத்தில்

விடிகிறது கடற்கரை

கோயிலில் கடவுளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்

(கடவுளும் ஒரு கனவின் கருவும்அறிந்த நிரந்தரம் தொகுப்பிலிருந்து)

 

கடலும், கடவுளும் பெண்என்ற தலைப்பிட்ட கவிதை, (மகாவாக்கியம் தொகுப்பில் இடம்பெறுவது) அதன் ஒட்டுமொத்த அர்த்தமாக அகவயமானதாக, ஆண்பெண் உறவார்த்தத்தைப் பேசுவதாகக் கொண்டாலும்,

 

பாலித்தருள் தெரிந்தும் தெரியாமலும்

கதிரியக்கக் கப்பல்களின் மூன்று சமாதிகள்

உன் கருவறையில் செலுத்தி நாளாகிறது

 

என்ற அதன் வரிகளில்சூழல் மாசுமுதல் பல சமூக விஷயங்கள் குறிப்பாலுணர்த்தப்படுகின்றன.

அனுஷ்டானம் அதற்கில்லை

எச்சில் மேல் கீழ் உன்னதம் விலக்கு

(கடலின் அனுமதி – மகாவாக்கியம்)

 

என்ற வரிகள் சாதிபேதமற்றதாய் கடலை உயர்த்துவதன் மூலம் சமூகத்தைச் சாடவில்லையா என்ன?

வீடு சென்று தேடு

பாக்கிச் சொத்துக்கள் எனது என்னவென்றும்

திண்ணைப்புறம் கிடக்கும் ஆற்றங்கரைக் கூழாங்கல்

பச்சைப்புதரில்

வெறும் விரலில் பிடுங்கிய மூங்கில்கிளை ஒன்று.’

(முடிவுரை : தாற்காலிகமாக’ _ ‘அறிந்த நிரந்தரம்’ தொகுப்பிலிருந்து)

 

இந்த வரிகள் பொருள் பிரதான வாழ்க்கைக்கு எதிரான குரலல்லவா?

 

பிரம்மராஜனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பானவலியுணரும் மனிதர்களில் இடம் பெறும்விசாரம் வேண்டும் மனித இறப்புகள்என்ற கவிதையும், மூன்றாவது தொகுப்பானஞாபகச் சிற்பத்தில் இடம்பெறும்தலைமறைவுக் கவிதைஎன்ற தலைப்பிட்ட கவிதையும் நேரடியான, எனில், கவித்துவம் மிக்க அரசியல் கவிதைகள்.

 

உன் காடுகளில் திரிந்த புலியை

பரவிக் கிடந்த முட்பரப்பை

அகற்றி

தசைகளில் உலவிய ஜ்வாலையைப் பிழிந்து

குடிசைக் கலயங்களின்

கூழ்நிலையுடன் மாறினாய்

இருளின்

கவியும் ஆக்கிரமிப்புகளைக் கிழித்துச் சென்ற

உன் பாதங்கள்

காலணிகள் காணாதவை

காய்ந்த அருகம்புல்லில்

படரும் நெருஞ்சிக் கொடியில்

ஒற்றைத் தடங்கள்

கிராமங்களை இணைத்த மனிதனே

நாளை பார்ப்போம்’ எனக் கூறிச் சென்றாய்

 

 _என்றும்

காலங்களின் முதுமையைச் சுமந்தது

அவர்கள் பிரயோகித்த ஆயுதம்

கற்கள் உன் மூட்டுக்களின்

பாஸ்பேட்டுக்களைத் தேடியிருக்க வேண்டும்

திரவ ஒலியுடன்

உன் அணுக்களை ஒழித்திருப்பார்கள்

 

_ என்றும்

 

ரணங்களை ஆற்றாமல்

ரத்தப் பொலிவுடன் வெளியேற்றியது

அரசாங்க மருத்துவமனை

 

_ என்றும் நகர்கிறதுவிசாரம் வேண்டும் மனித இறப்புகள்கவிதை. இது எந்தவொரு கிளர்ச்சி யாளனின் மரணத்திற்கும் பொருந்துமல்லவா? அப்படியேதான் பின்வரும்தலைமறைவுக் கவிதைஎன்ற தலைப்பிட்ட கவிதையும்:

தலைமறைவுக் கவிதையை

முள் படுக்கையில் புல் படுகையில் எழுதினாயா

பூவின் நாக்கிலிருந்து ஒழுகியதை ஓற்றி எடுத்தாயா

புழுதியில் கால் தடங்கள் அழுந்தி

எழுதிச் சென்றதை சொற்களிடம் சேர்த்தாயா

புகைப்படங்கள் நிலைப்பட்ட புன்னகைகள்

புகையும் விமானம்

தப்பும் சக சாவுகளின் மூச்சுப் பதிவு

வீறிட்டதா உன் பைத்தியத்தில்

105 டெஸிபிள் மனிதர்கள்

காது கேட்கும்படி

கேள் கதையை கதையின் கவிதையை

மௌனத்தின் ஊடாய் விழும் மௌனங்களைத் தொகுத்தாயா

புயல் பார்ப்பின் சுழிவின் நடுவில் இருந்தாயா நீ.

 

_ ஒரு கவிதை என்பது உண்மையில் பல கவிதைகளாலானது எனலாம். குறிப்பாக, பிரம்மராஜன் கவிதைகளில் இந்தத் தன்மை அதிகமாகக் காணக் கிடைக்கிறது. ஒரு முழுக் கவிதை என்ற அளவில் அகவயமான விஷயமொன்றைச் சுற்றி அமைந்ததாய் புரிபடும் கவிதை கூட, அதன் தனித்தனி வரி அளவில், அல்லது சில பல வரிகளின் ஒருங்கிணைப்பில் சமூகம் பற்றிய, சமகால அரசியல் பற்றிய பார்வைகளாக, பதிவுகளாகக்கட்டமைவதை இவரு டைய பல கவிதைகளில் காண முடிகிறது என்பதை நிறைய உதாரணங்களைக் கொண்டு நிறுவ முடியும்.

 

_ “I took everything as seriously as if I were immortal” என்ற சார்த்தரேயின் வரிகளைத் தனது முதல் தொகுப்பின் ஆரம்பத்தில் இடம்பெறச் ச்ய்திருக்கும் கவிஞர் பிரம்மராஜன் உலக இலக்கியங்கள், கவிதைப் போக்குகள், பழந்தமிழ் இலக்கியப் பரிச்சயம் என்பதாய் விரியும் தந்து பரந்துபட்ட, நுட்பமான அறிவுத்திறனில் மிகுந்த நம்பிக்கையும் பெருமிதமும் கொண்டவராய், அறிவும், உணர்வும் இருவேறு விஷயங்கள் அல்ல என்ற பிரக்ஞையோடு, பிரக்ஞாபூர்வமாகவே கவிதை வெளியில் பல பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டு நவீன தமிழ்க்கவிதையின் முன்னோடிக் கவிஞர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.

 

வெல்லும் வெல்லும் என நிற்கிறேன்

என் சொல்லும் சொல்

(சொல்லும் சொல்ஞாபகச் சிற்பம்)

 

இவ்வளவு அறிவினால் என்ன பயன் என்பது பொய்த்திருக்க

வேண்டும்

(தருணமிதுமகாவாக்கியம்)

 

செப்பியா நிற ஆல்பம் ஒன்றில்

விரல் சுட்டி முகம் காட்டிப்

புத்தகங்கள் விட்டுச் சென்றவன் எனக்கு

என்று ஒரு பெண் சொல்லலாம்.

(இவ்விதமாகவும்அறிந்த நிரந்தரம் தொகுப்பு)

 

சொல்வாய் அப்படி ஒரு மனிதன் இருந்தானென்று

இல்லை நினைத்துக்கொள்வாய்

சிதறல்களில் செழிப்பை செதுக்கிய கடவுள் ஒருவன் என்று

(எனக்கு எதிராய் என் நிலைக் கண்ணாடியில் உனக்கு ஒரு சித்திரம்’ – அறிந்த நிரந்தரம்)

 

_ என இவருடைய எல்லாக் கவிதைத் தொகுப்புகளிலும் கவிஞன் என்ற தன்னுணர்வும், பெருமிதமும் நிறைய வரிகளில் வெளிப்படுகின்றன.

 

பிரம்மராஜன் கவிதைகளைப் பற்றிக் குறிப்பிடுமிடத்தில் கவிஞர் அபி தன்னு டையகவிதை புரிதல்என்ற கட்டுரையில்பிரம்மராஜனின் உண்மையான தீவிரத்தன்மையை உள்வாங்கிக் கொண்டு, அவரது கவிதைகளை நெருங்குவதற் கான அணுகல் முறையை இன்னும் எவரும் எடுத்துக்காட்டவில்லை என்பதே உண்மை. ஆகவே இக்கவிதைகளின் புரிதலுக்காகக் காத்திருப்பதில் அலுப்படைய வேண்டியதில்லைஎன்று கூறுகிறார். “ஒரு பிரதியின் முழு அர்த்தம் நமக்குக் கிடைத்துவிட்டதென்றால் அது காலாவதியாகிவிட்டது என்று அர்த்தம்என்கிறார் கவிஞர் பிரம்மராஜன். “வாழ்க்கை புரியவில்லை என்பதும் கவிதை புரியவில்லை என்பதும் சமமான வருத்தங்களேஎன்ற கவிஞர் அபியின் கூற்று இங்கே நினைவுகூரத்தக்கது.

 

பிரம்மராஜனின் கவிதைகள் சில:

 

 

1.   எனக்கு எதிராய்

       என் நிலைக்கண்ணாடியில்

                        உனக்கு ஒரு சித்திரம்

 

சொல்வாய்

அப்படி ஒரு மனிதன் இருந்தானென்று.

இல்லை

நினைத்துக்கொள்வாய்

சிதறல்களில் செழிப்பைச் செதுக்கிய

கடவுள் ஒருவன் என்று.

இல்லை

காட்சிகொள்ளும் உன் மனது

செலவுக்கென்று சுதந்திரத்தின் கட்டுகளை

முறிக்காத அதீத மனிதன் இருந்தானாவென்று.

அலையலையாய்

இனி உன் கரை மாந்தர் கோஷமிடுவர்

கொஞ்ச நாளாய் வாழ்ந்து வந்த

மௌனத்தைக் கொன்று.

தோட்டமும் கரையும் பாதையும் அலையும்

நுரையும்.

இமைக்காதிருந்து

நிமிஷங்களை வலையில் பிடித்து

சதையில் சதை திருடும் சரித்திரம் உயிர்த்ததில்லை

என்றும்.

சொற்கள் விலகித் தெரிந்திருக்கலாம் தோட்டம்.

துளையிடப்பட்ட ஜீனியா மலர்கள்

கட்டளையிடும்.

கம்பி வேலியின் நக்ஷத்திரங்களில்

பச்சை நிற வெட்டுக்கிளிகள்

கழுவேற்றப்படும்.

கோடுகள் மட்டும் வழிவதில்லை என் விரல்களில்

சில சமயம் துரப்பணக்கருவிகளும்

கூர்நுனிப் புற்களும்.

 

நட்டுப் பதினைந்து நாட்கள்

நாற்று கண் விழிக்கவில்லை.

கவலை கொள்ளும் ஊர் சென்ற மனது.

வாரத்தின் இறுதியில்

அன்புடன் டேலியாக் கிழங்குகளின்

கழுத்தில் விழும் நகக்குறி.

கிழங்கிற்குள்ளும் ஒரு மிருகம்

சதை தின்று வாழும்

என நினைக்கிறாய்.

நானில்லை.

ஆனால் அழுத்தமாய் மூச்சிழுத்து

அரைவட்டம் போய்வந்து

சாம்பல் பனி விலக்கித் தெரியவிட்டேன்

சதையும் புகையுமாய்

தினம் ஒரு பிணம் எரியும்

என் வழியை.

ஓய்வற்றுத் திரியும்

பத்தாம் கபால நரம்பு

அமில ஆறுகளை நினைத்துப் பிளந்த நாக்குகளைச்

சுழற்றும்.

நுரையீரல் மரக்கிளையில்

கூடுவளர்க்கும் சுதை நெருப்பு.

வர்ணத்திட்டுகளை செதிலாய் வளர்த்தும்

விருப்பத்தைச் சிலிர்த்து உடைத்துவிட்டுத்

திசுக்கள் அழிந்து மிஞ்சிய மூளைச் சிற்பத்தை

மொகஞ்சாதரோ எனக் கண்டெடுத்து

புதிய தூண்கள் தேடிச் செல்கையில்

நீ மீண்டும் சொல்வாய்

இப்படியும்

ஒரு மனிதன்

இருந்தானென.

[*பிரம்மராஜனின் முதல் கவிதைத் தொகுதி [1980]யான  அறிந்த நிரந்தரத்திலிருந்து]

2.பிரயாணத்திலிருந்து ஒரு கடிதம்

 

…………………………………………………….மகளுக்கு

கோடிட்ட இடத்தில் எனக்கான குணச் சொல்லை

நீ நிரப்பிக்கொள்ரயில் மாற வேண்டும்.

தங்களை அனுப்பக் காத்திருப்போருடன் நான்.

மனிதப் புழுக்கமும்  புழுதியும் பிரதேசமும்

மொழியும் பிரயோகமும் புரியாதது புதிது.

காலொடிந்த பெஞ்சில் என் கால் தாங்கி எழுதுகிறேன்.

உன் பதினாலாம் பிறந்த தினம் மறந்துபோய்

சூர்யக் கதிர்கள் பிளக்கும் நெடுமரக்காடுகளை

அனுப்ப மறந்தேன்.

பால் வெலேரியை நினைத்துக்கொண் டிருந்தேன்

அவனது பதினெட்டு வருட எழுத்துமௌனத்தை.

பேதார் கணவாயில் பிரதியின் பிரதியிலிருந்து

பிரதியான புத்தரின் சிலையை வாங்கினேன் பளிங்கில்.

6 ½ “ உயரம்விலை ரூ.132.

சத்னா ரயில் நிலையத்தில் தூசி தட்டி பெட்டி திறந்து

பணம் தந்தேன்.

என் ப்ரௌன் நிறச் சட்டையில்

[உன் பாஷையில் மெரூன் கலர்]

வெண்பளிங்கு மாவுத் தூசி.

கல் முற்றவில்லைகல் பழுக்கும் காலத்தில்

நர்மதையில் நகரும் மனித வியர்வைப் படகுகள்

மறைந்துவிடும்.

அணுத்துடுப்பிலோ அதற்கெடுத்தென்னவோ

அதிலோ எதிலோ

நீ செல்வாய்-

ஆற்றின் அடிவயிற்று முனகல்

உனக்குக் கேட்காமல் போகும்.

மட்கும் மண் கனவுகள் கரைந்துவிடும்.

மரத்தில் கிடைத்த புத்த முகத்தை

வான்கோவின் சுய போர்ட்ரெய்ட்டின்

பதற்றக் கோடுகளுடன் ஒப்பிடு

இரண்டிற்குமிடையில் நான்.

 வருகிறேன் கொண்டு

இன்னும் சில நாட்கள்

கவிதையின் முட்டாள் வரிகள்

நீலப் பூச்செண்டு

நிறையும் மறதி

தெருக்களின் விதிவழிகள்

கோதுமை வயல்களில் வளைந்து வந்த

குவாலியர் சங்கீதம்

காலாவதியான ரயில் டிக்கெட்டுகள்

கண்ணில் வழியும் உறக்கமின்மை

தேய்ந்து போன காலணிகள்

காந்தி தகர்க்கச் சொன்ன

கஜூரஹோவின் கல்சிற்பங்களின் கண் பதிவுகள்

கடல்

எல்லையின்மை

    மற்றும்.....

 

[*பிரம்மராஜனின் ஞாபகச்சிற்பம் என்ற தலைப்பிலான மூன்றாவது கவிதைத் தொகுதியிலிருந்து]

 

 

3. மரம் சொன்னது

 

வலியின் துவக்க முகமும்

ஒரு சாதாரணம்தான்

என ஒரு முட்சொல் கிழிக்கிறது.

இல்லாத ஓவியத்தைச் சட்டகத்ஹ்டினுள்

பொருத்திப் பார்ப்பதுபோல்தான்

அதன் அளவு என்பார்

வலியறியா வறியோர்.

எனினும் வலியின் வயது

தொன்மையின் முன்மை

பரசுராமனின் உடல் உறக்கத்திற்கு

முன் தன் விழிப்புடல் தடையை

வண்டுத் துளைப்புக்குத் தந்த

கர்ணத் தன்மை.

மரப்பட்டையை மகிழ்ச்சிப்படுத்தவே

முடியாது

பாம்பின் சட்டையை மாற்றுதல் போல்

மாறுதலுக்கு மாற்றுதல் முடியாது

என்றவனுக்கு

காதல் முட்டாள்கள் செதுக்கிச்

சென்ற

தேதிகள் பெயர்களுடன் பெரிதாகும்

மரம் கனத்துச் சொல்கிறது

வெட்டிக் கிழித்தலின் வலியை விட

வடுவின் வளர் வேகம்

பொருக்கு சேதம்

கொலையின் முடிவற்ற நீள்கோடாகும்.

 

[*பிரம்மராஜனின் ஞாபகச்சிற்பம் என்ற தலைப்பிலான மூன்றாவது கவிதைத் தொகுதியில் இடம்பெறும்  கவிதை  ]

 

4.கடலின் அனுமதி

 

அனுஷ்டானம் அதற்கில்லை

எச்சில் கீழ்மேல் உன்னதம் விலக்கு

உருப்படி செ ருப்பின் தீட்டு

வகுத்த கோடு மீறப்படினும்

பற்றி எழாது தண்டனைத் தீ

காலடிகளின் அழுத்தமே பிரதானம்

ஏன்கால் யார் அணிகிறார்

பாகுபடுத்தியதில்லை

பாதங்கள் கழுவும் சாதியுமற்று சமயம் துறந்து

தோணியும் எரிந்த தீக்குச்சியும்

துரப்பணக் கப்பலின் அமானுஷ்யமும்

மிதவைகள்தான்

தராசு முள்ளின் மையத் துல்லியமாய்

பூக்கொண்டும் போகலாம்

திக்கெட்டிலும் திறந்தே வைக்கலாம்

பூட்டலாம்

திறவுகோல் மறந்த உலோபிக்குத் திறன்பிக்கவில்லை

கடலின் கதவு

உருண்டைப் பாசிமீது  படிந்த கோட்டை

அந்தரத்திலிருந்து கடலில் விழுந்த வண்ணமாய்

நிறுத்துங்கள் ரெனே மகரித்

உரைநடை எழுதத் தெரியாதவனும்

பெயர்ந்த மொழி சரளிக்காதவனும்

விதேசி பாஷையில் லகு கிடையாது இவனுக்கு

இருப்பினும்

இக்கடையோரும்

தென்னாடு உடைய சிவனும்

கால்வைக்க அனுமதியும்

கரையில் நுரை விரித்து

 

[*பிரம்மராஜனின் ஞாபகச்சிற்பம் என்ற தலைப்பிலான மூன்றாவது கவிதைத் தொகுதியில் இடம்பெறும் கவிதை].

 

 

5. மிச்சம் பத்துக் கட்டளைகள்

 

தளரும் நூற்றாண்டிறுதியில் அறுபத்து வருடம் அழிபடும்

பிராயத்தில் இளமையின் ஊற்றினைச்

சேர்ந்திலேன் கண்டு

என் வடிகலன் நிறைந்து கொதிக்கும் கசப்பில்

பூமிப் பூச்சிகளின் ரசாயனக் கொல்லிகள் விளையும்

தைத்து அறுபட்ட வடுமுட்கள் விரல்கள்

அதிரும் தந்திகள்

அர்த்தம் உற்பத்தியாகும் அவருக்கும் இவருக்கும்

வேனில்  கயிற்றில்

காரை விடுதியில்

கன்னத்து மச்சத்தில்

மலக்கலசத்தில்

நற்றுணை ஆகட்டுமெனக் காதல் உதயம் செய்து

கண்ணைப் புண்ணெறு உணர்ந்தவுடன்

பறத்தல் மறந்த பறவையின் அக்குள்

வலிக்கும் எனக்குள்

வாழ்ந்திருப்பவை அனைத்திலும் வாழும் தகுதி

அதிகமில்லாதவை பட்டியலில்

பூமி செருமிக்கொள்ளக் குரலெடுக்கு முன்

சொல்ல

வேண்டும் சொற்கள் சில

விண்ணின் சாட்டை சொடுக்கி

மிச்சம் பத்துக் கட்டளைகள்.

 

[பிரம்மராஜனின் மஹா வாக்கியம் என்ற தலைப்பிட்ட ஐந்தாவது கவிதைத் தொகுதி[2000]யிலிருந்து]

 

 

6.சித்ரூபிணி _ 2

 

நீ தானா வலி முற்றிய துயர் மிகுந்த விலங்குகளை

கொல்லக் கட்டளை கொடுத்தது

நீதானே கடைசிக்கனி விட்டதும் கறையான்கள் அரித்து

இடுப்பு இற்றுவிழ குடை சரியவிட்டதும்

ஐன்றியுன் அரூபப் பிரதிகளில் ஒன்றின் மலர் மிசையில்

என்னை மயக்கத்தின் சுழலில் வீழ்த்தியது

அல்லது நீயோதான் பகாபகத்தினை மகிமைப் படுத்த

திசைப்படுத்தியது

விண்மீன்களையும் நோக்கவிடாது உன் வளர்முலையை

வணங்கச் சொன்னது நீயோ யாரோ

நானோ எதைப் பிடித்தாலும் அதுவாகும் வடிவ வஸ்துவாகி

உன் பாதத்தினைப் பற்றும் முதலைப் பிறவியானவன்

நீயே தான் உன் குளிர் மழையை எனது தூப ஸ்தம்பத்தின்

கடுந்தழல் மீது அவிய வைத்தது

நீயே தான் நீ என்று முதன்முதலில் உணரும் பருவகாலம்

வந்த போது நீ நீயோ வாகினாய்

அங்கில் நான் ஏதற்ற குழந்தையாய் உன் மடி நோக்க

தாம்பூல அதரங்கள் சிவக்க கச்சைகளை இறுக்கி நடனமிடத் தேர்ந்தாய்

நீயோ என் கனவுகளின் ஒளிக்கிரணங்களை மலடாக்கி உன்

சிற்பமுகத்தினை நோக்கி நிமிர்த்தியது

நீயோதானா உறங்காது போலிருந்த போலி உறக்கங்களை

நித்திரையாய் மாற்றி நிர்மலம் தந்தது

அன்றி என் சமுத்திர இருட்கரையில் ஒரு வருடமும் சூரியன்

பார்க்காத கிருமிநுண்ணிகளுடன் வீழ்படிவமாய்ச் சமைந்தது

உன் நிழல் யோனியா நிஜத்தின் கல்லறை யாளியா

நீ தானே தைத்த முள்ளினை சதையுடன் நிணமாக வளர்த்து

வலி தடவி நினைவு புகட்டியது

என் குரல் நடுங்கக் கூப்பிட்டது உன் குரலேயல்லவா

நீயாகும் நீதான் ஒரு ஹிந்தோள ராகத்தின்

பிரஸ்தாரங்களில் ஆணில் பெண்ணாய் லயமொகித்தது

யாதுமே விளங்காது விழிபிதுங்க வழிவேண்டி நிற்கும் உன்

நீயோ நான்

என்றுமே உன் நீயோதான்.

 

 

[பிரம்மராஜனின் மஹா வாக்கியம் என்ற தலைப்பிட்ட ஐந்தாவது கவிதைத் தொகுதி[2000]யிலி ருந்து]

 

 

 

No comments:

Post a Comment