Thursday, January 14, 2016

கண்காட்சி - ரிஷி


கண்காட்சி

ரிஷி
பாவம், ஏனோ தெரியவில்லைசாக்கடைக்குள் நின்றபடி
அந்தப் போக்கத்த பித்துக்குளிப் பேதைக் கழுதை
தன்னைப் படைப்புக்கடவுளாகக் கூவிக்கூவி விற்கும் எத்தனத்தில்
எழுதுகோலைப் பின்னங்காலாக்கிக்கொண்டு
அவரிவரெவரொருவரையும் விடாமல்
எட்டியுதைக்கப் பிரயத்தனப்பட்டுக்கொண்டேயிருக்கிறது….
மனதின் நோய்மை எலும்பு மஜ்ஜை வரை பரவி
பலவீன நோஞ்சானாயிருக்கும் தன்னை மாபெரும் பயில்வான் என்று
கற்பூரம் அடித்துச் சத்தியம் செய்யாத குறையாய் நம்பச் சொல்லி
ரம்பக் குரலில் கத்திக்கொண்டு புரண்டு விழுந்து எழுந்தழுதபடி
பொழுதைக் கழித்துக்கொண்டிருக்கிறது.
 ‘கரெண்ட்’டில் கைவிட்டதுபோல் வரட்டு வரட்டென்று
வாய்கோணக் கத்தும் அதை பார்த்து
கடந்து செல்பவர்கள் எல்லாம்
கழுதையல்லாக் கழுதை இஃதென்ன விசித்திரப் பிராணி
என்று விசனத்தோடு உச்சுக்கொட்டியபடி
தம் வழியேகிக்கொண்டிருக்கிறார்கள்.


(* ஜனவரி 2016 பதிவுகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது)

No comments:

Post a Comment