Friday, January 15, 2016

சூழல் மாசு - 'ரிஷி’


சூழல் மாசு


'ரிஷி’



காறித் துப்பத் தயாராய் வன்மம் நிறை வார்த்தைகளை
யெப்போதும் குதப்பியவாறிருக்கிறாய்.

தப்பாமல் கொஞ்சம் அந்தப் பக்கம் திரும்பித் துப்புகிறாய்;

கொஞ்சம் இந்தப் பக்கம் திரும்பித் துப்புகிறாய்;

காழ்ப்பேறிய உன் நுரையீரல், உணவுக்குழாய்
குரல்வளை யெங்கிலும்
பரவிக்கொண்டிருக்கும் குரோத நஞ்சு.

நீ அப்பிக்கொள்ளும் பவுடர்,
வெட்டிக்கொள்ளும் புருவங்கள்,
கன்னத்து ரூஜ்,
உதட்டுச்சாயம்,
இன்னும் பலவற்றை மீறி
அகத்தின் அழுகல் முகத்தில் தெரிகிறது பார்.

உடல் பொருள் ஆவியாகும்
அகங்காரம், ஆங்காரம் கொப்பளிக்க
ஆங்காலம் போங்காலம் உன்னிலிருந்து கிளம்பும்
காறித்துப்பல்களில்
கணிசமாய் உன் மீதே பட்டுப் படர்ந்திருப்பதை
என்றேனும் உன்னால் உணரமுடியுமோ
சந்தேகம்தான்.

உன்னிடம் ஒரேயொரு வேண்டுகோள்:
நீ எதிரே வந்தாலே நாசியைப் பொத்திக்கொண்டு
நீங்கிச் செல்பவர்களை
நாசமாய்ப் போக என்று ஏசுவதற்கு பதில்
உன் ஊத்தை உள்ளிருப்பில் எங்குபார்த்தாலும் 
சிதறிக்கிடக்கும்
மாசுகளை  சுத்தம் செய்யச்
சிறிதேனும் முனைப்பு காட்டு.

(* ஜனவரி 2016 பதிவுகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது)

No comments:

Post a Comment