Tuesday, July 7, 2015

கடந்துவிடும் இதுவும்……’ரிஷி’யின் கவிதைகள்

’ரிஷி’யின் கவிதைகள்

            கடந்துவிடும் இதுவும்……

ரிஷி


1.   அறிவிப்பு

அடுத்தவேளை சோற்றுக்காக
அவசர அவசரமாய் எழுதிக்கொண்டிருக்கிறேன்.
அழைக்கும் தொலைபேசியின் மறுமுனைப் பெண்குரல்
தன் தத்துப்பிள்ளையை சிலமணிநேரங்கள்
எனக்குக் காதலனாய் குத்தகைக்கு விடுவதாய்
அறிவிக்கிறது.
என்ன மாதிரியான விளம்பர உலகம் இது….
வசதிபடைத்தவர்களின் வாய்வழி
எப்படியெல்லாம் வக்கரித்துப்போகிறது அன்பு…
உப்புக்கரிக்கும் துக்கத்தை என் செய்வது….


2.   இடைவெளி

ஒரு ஊடகத்தின் மூலம் உணர்த்தப்படுகிறது அன்பு.
ஊடகம் உயிருள்ளதென்கையில்
உணர்த்தப்படும் அன்பா, ஊடகமா
எது முன்னிலை பெறுகிறது…?
என்றெழும் கேள்வி
தவிர்க்கமுடியாமல்
திணறும் சுவாசமாக.


3.நரமாமிசம்

அன்பிலூறிய மனம் ஒன்றை
அறுபது துண்டங்களாக வெட்டி யெடுத்து
அவற்றில் ஒரு சிலவற்றை
அண்டங்காக்கைகளுக்குத்  தின்னக் கொடுக்கிறார்கள்.
பரஸ்பரம் பகிர்ந்துகொள்ளும் பெருவிருப்பில்
அலைபேசியில் படம்பிடித்துக்கொள்கிறார்கள் அதை.
நாக்கைச் சப்புக்கொட்டியவாறு சொல்லிக்கொள்ளவும் கூடும்:
 “நரமாமிசம் தனிருசிதான்”.


4.எச்சில்

வேலை, வெய்யில் அன்னபிற வரவாக்கும் மிகு அயர்வில்
வாடிச் சோர்ந்து
சற்றே இளைப்பாற நாடிவந்தேன்
நதியோரமாய் அந்தரத்தில் நீண்டகன்ற திண்ணைப்பக்கம்.
மடியில் கனமில்லை.
மனமே தலையணையாய்
கண்ணயர்ந்துபோனேன் காற்றின் தண்வருடலில்.
போகிறபோக்கில் ஏனோ அத்தனை வன்மமும் அலட்சியமுமாய்
என்மீது துப்பிவிட்டுச் செல்கிறார்கள்.


5.ஊழ்வினை.

மேலோங்கி வளர்ந்திருந்த மரத்தின் கிளைகளை
மும்முரமாய் உலுக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
மலர்மழை பொழியச்செய்யவோ
என்று ஒருகணம் மனம் நெகிழ்ந்துபோகிறது….
இல்லை, இலைகளிடையே சிக்கிக்கிடக்கும் அம்பு
நேரே என் நெஞ்சில் பாயும்படியாக
விரைவாய் விழச் செய்தபடி
அவர்களது ஒருநாள் நிறைவடைகிறது.


6. செத்தகாட்சிச்சாலை

வளிமண்டல அடுக்கொன்றில் கரியமிலவாயு அடர்ந்துகொண்டே போகிறது.
இரண்டு பிரும்மாண்ட விமானங்கள் மாயமாய் மறைந்துவிட்டன.
நட்சத்திரங்கள்கூடத் தொடர்ச்சியாகக் களவாடப்பட்டுவருகின்றன என்று கேள்வி…..
செத்தகாட்சிசாலையின் கூண்டுகளெங்கும் கம்பிகளுக்குப் பின் மனிதர்கள்
எட்டுக் காலும் ஈரிரண்டு வாலுமாய்….
ஆயினும் இந்த எளிய மனம் மட்டும் இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறது
புல்லின் நுனியில் காணும் பனித்துளி நிரந்த மென்று.


 7. நான் கட்டிவளர்த்திருந்த உலகு

உண்மைதான், பெயரில் என்ன இருக்கிறது……
புனைப்பெயரில் மட்டும்….
எட்டும் அறிவிற்கப்பால்
என் புனைப்பெயரில் நான் கட்டிவளர்த்திருந்த உலகின்
வெட்டுக்கிளிகளும் வண்ணத்துப்பூச்சிகளும்
விவரிக்கவியலா அவசங்களும் பரவசங்களும்
புதிதாய் என் புனைப்பெயரில்
சிற்றிதழ்வெளியில் களமிறக்கப்பட்டிருக்கும்
(சட்டச்சிக்கலுக்கு ஏதும் வழியில்லை என்பதாலோ)
கவிதைகளைக் கண்டு
நேயம் பொய்த்த நெஞ்சின் பாங்கில்
கூடிழந்து, நட்ட நடு வெளியில் நிலைகுத்தி நின்றவாறு…..

8. பன்மடங்கு

என் னொரு வார்த்தைப் பட்டு வெட்டுப்படலாகும் இதயத்திலிருந்து
கசியும் ரத்தச்சொட்டு
இன்னுமின்னும் என்னைப் பட்டுப்போகச் செய்யும்.
அன்பைத் துண்டாடும் வன்முறைப் பிரயோகமாய்
அடுத்தடுத்துக் கிளம்பும் வீச்சரிவாள்களோ
என் ஆன்மாவைப் பிளந்தவண்ணம்….


 9. நீள்பயணம்

பத்துவருடத்தை நீட்டிப்போட்டதிலான
பல்லாயிரங் காத தூரமெல்லாம்
பிரளயங்கள் _
உருள்பாறைகள் _
முறிமரங்கள் _
பெருவாகனத் தடம்புரளல்கள் _
பசிவயிறுகள் _
பிரிவின் உதிரப்பெருக்கு _
இறந்தவர்களின் அழுகிய உடலங்கள் _
சிறிதுசிறிதாக அழிந்துபடும் வழித்தடங்கள்…..
கண்டுருகிச் சோர்ந்திறுகிச்
சிதையும் இதயம்
இன்னும் போகவேண்டும் நீள்பயணம்.


10.   இயக்கவியல்

எத்தனைமுறை எண்ணினாலும்
கிடைக்கும் விடை பூஜ்யமாகிறது.
”கணக்குத் தெரியவில்லை யுனக்கு
வடிகட்டின மக்கு” எனக்
கைகொட்டிச் சிரித்தபடி செல்கிறார்கள்
‘காட்டேஜு’க்கு.
மடைதிறக்கும் கையறுநிலை.

மீட்டெடுக்கும் ‘CODE NAME GOD’.


(மலைகள்.காம் ஜூலை முதல் இதழில் வெளியாகியுள்ளது)
 Ø      

No comments:

Post a Comment