Thursday, June 25, 2015

மதிப்புரையின் மறுபக்கம்! - சிறுகதை - அநாமிகா

மதிப்புரையின் மறுபக்கம்!

அநாமிகா

{*பன்முகம் ஜூலை-செப்டம்பர், 2006 இதழில் வெளியானது}





ந்தப் பாடலை நீங்கள் அடிக்கடியோ, அபூர்வமாகவோ கேட்டிருக்கக் கூடும். குறிப்பாக, பின்வரும் பத்தியை அல்லது பகுதியை:

பருவம் வந்த அனைவருமே காதல் 

கொள்வ தில்லை;

காதல் கொண்ட அனைவருமே 

மணமுடிப்ப தில்லை;

மணமுடித்த அனைவருமே சேர்ந்து

வாழ்வ தில்லை;

சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து 

போவ தில்லை.

இதையே சற்று நவீனமாக மாற்றிப் பாருங்கள். சந்தம் இல்லாவிட்டால் பரவாயில்லை.

பிரசுரமாகும் புத்தகங்கள் எல்லாமே 

மதிப்புரை பெறுவ தில்லை;

மதிப்புரை பெறும் எல்லாமே 

நியாயமான 

மதிப்புரை பெறுவதில்லை;

மதிப்புரையாளர்கள் எல்லாமே 

நடுநிலையாளர்க ளில்லை;

நடுநிலையானவர்களுக்கோ 

மதிப்புரைக்க வாய்ப்ப தில்லை.

‘அனைவருமே’ என்ற வார்த்தையில் உள்ள அர்த்தக் குழப்பமும் அப்ப டியே ‘எல்லா மே’யிலும் தொடர்வதையும் அடிக்கோடிட்டுக் காட்டியாக வேண்டும்.


திப்புரைக்கு உரியதாகும் வாய்ப்புப் பெற்ற நூல்களில் ஒன்று அந்த வட்டமேஜையின் மத்தியில் கிடக்க, அதைச் சுற்று அந்த நாலு பேரும் அவரவருக்கேயுரிய கோணங்களிலும் கோலங்களிலும் அமர்ந்திருந் தனர். தவிர்க்கமுடியாத தேனீர்க்கோப்பைகளும் அவர்களுக்காய் அந்த மேஜையில் ஆஜராகியிருந்தன.

சம்பந்தப்பட்ட புத்தகத்தை எழுதிய படைப்பாளி மேற்படிக் குழுவினரின் அருள்வட்டத்திற்குள் இடம்பெறாதவர் என்பதோடு மட்டுமல்லாமல் எதிர்க்குழுவினரின் அன்புக் கும் ஆளாகியிருப்பவர். எனவேதான், அவர் படைப்பை மதிப்புரைப்பதா, வேண்டாமா என்ற வாதப் பிரதிவாதம் அத்தனை முனைப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

“நம்முடைய இதழில் அந்தப் புத்தகத்தை மதிப்புரைக்கு எடுத்துக் கொள் வதே அதற்கு ஒரு இலக்கிய அந்தஸ்தை நாம் தருவதாகிவிடுகிறது.” என்பது ‘கலியுகவாதி’யின் வாதம்.

“ஆனால், தீவிர வாசக வட்டத்தின் பரவலான கவனத்தைப் பெற்றிருக் கும் இந்தப் புத்தகத்தை நாம் கண்டுகொள்ளாமல் விட்டால் நம் குழு மனப்பான்மை அம்பலமாகி விடும்.” என்றாள் ‘திரிலோகசுந்தரி’.

“அதோடு, நம்மிடம் புத்தகம் குறித்து எதிர்க்கருத்து ஒன்றும் இல்லை என்பதாகப் புரிந்துகொள்ளப்பட்டு, அவ்விதமாய் புத்தகத்திற்குக் கூடுதல் மதிப்பு ஏற்பட்டுவிடவும் வாய்ப்பிருக்கிறது.” _ இது ‘அண்டசராசரன்’.

எதிர்ப்பதற்காகவே உருவாவதே எதிர்க்கருத்து என்பது இங்கே எழுதப் படாத விதி.

ஆனாலும், எல்லோரும் மக்களாட்சியில் மலர்ந்தவர்கள் என்பதால் ‘பெரும்பான்மைக் கருத்தை புறக்கணிக்கத் தலைப்படவில்லை.

நால்வரில் ’இரண்டேகால்’ பேர் அந்தப் புத்தகத்திற்கு ‘இதழில் மதிப்புரை வழங்கவேண்டும் என்ற கருத்தை முன்வைத்ததால், அப்படியே செய்வது என்று முடிவாயிற்று.

மூன்றாவது நபரின் மனசாட்சி கால்பங்கு இன்னும் உயிர்ப்போடிருந் ததால் அவர் ‘கால்’ நபராகக் கொள்ளப்பட்டார். மற்ற இருவரில் ஒருவர், சம்பந்தப்பட்ட படைப்பாளியை பழிக்குப் பழி வாங்க அந்த மதிப்பு ரையைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று முன்கூட்டியே திட்ட மிட்டிருந்தார். அடுத்தவர் ‘ஜால்ரா’ தட்டித் தட்டிக் கைசோர்ந்து போன வராய் ‘போனால் போகட்டும் போடா’ என்று வேலையை விடத் தயாரா யிருந்தார். நியாயம், அதிநியாயம் என்று மலையுச்சியில் நின்று முழங்கும் அந்த இதழில் பணிபுரிவோருக்கு நாலு மாதங்களாக சம்பளம் தந்தபாடில்லை. மதிப்புரை வழங்கக் கூடாது என்று வெகு திட்ட வட்டமாகச் சொன்ன நபர் இதழின் நிறுவனர். நிறுவனர் குடும்பத்திற்கு நண்பராக இருக்கும் காரணத்தால் மட்டுமே இதழின் முக்கியக் கருத்துரை யாளர்களில் ஒருவராகப் பீடமேறியிருப்பவர். இப்போது மதிப்புரைக்கப்படவேண்டிய படைப்பாளி அந்தப் பீடத்தையே ஒருமுறை செம்புள்ளி, கரும்புள்ளி குத்தி கழுதைமேல் ஏற்றி அனுப்பியவர். குற்றத் திற்கு ஏற்ற தண்டனையாகவே அது பரவலாகக் கருதப்பட்டாலும்கூட அவ்விதத்தில் தான் தாழ்த்தப்பட்டுவிட்டவனாக்கப்பட்டுவிட்டதாகக் கொதித்துப்போனார், சமூகத்தில் உண்மையாகவே தாழ்த்தப்பட்டுவிட்ட வர்களாக்கப்பட்டு பலவிதங்களிலும் கேவலப்படுத்தப்பட்டுவரும் மக்க ளைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாத மேற்படி பீடாதிபதி முக்காலும் காலுமாய் பிளவுண்டுநின்ற மற்றொருவரின் ‘விழித்துக் கிடந்த’ கால் வாசி மனசாட்சி சம்பந்தப்பட்ட படைப்பாளியின் இலக்கிய வீர்யத்தை’த் துல்லியமாக உணர்ந்திருந்ததால் அது பேசப்பட்டவேண்டியதுதான் என்ற கருத்தைப் பிடிவாதமாக முன்வைத்தது.


ம்பந்தப்பட்ட படைப்பை மதிப்புரைக்கு எடுத்துக்கொள்வது என்று முடி வாகிய பின், மதிப்புரையாளராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற கேள்வி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

“நாசநாக்கரசந்தான் சரியான நபர்.”

“அவர் அனாவசியத்திற்கு விஷம் கக்குவாரே…”

“அதுதான் நமக்கு வேண்டியது.”

”இல்லை. அவர் விஷம் கக்குவது அப்பட்டமாகத் தெரியும். அப்படித் தெரிந்தால் காரியம் கெட்டுவிடும்.”

“அப்படியானால், வஞ்சப்புகழ்ச்சியாக எழுதுவதில் சக்கரவர்த்தியான ‘உட்புறத்தான்’ஐ எழுதச் சொல்லலாம். மனுஷன் சந்தர்ப்பம் தரச் சொல்லி காலில் விழாத குறையாகக் கெஞ்சுகிறார்.”

“உட்புறத்தான் ஒத்துவராது. புகழ்ச்சியோ, வஞ்சப்புகழ்ச்சியோ – இரண் டுமே வெளிப்படையாகத் தெரியக்கூடாது.”

“ஆமாம், ஆழ்ந்த இலக்கிய வாசிப்புக் கூடிய பார்வையுடனான பார பட்சமற்ற அவதானிப்பு மிக்க மதிப்புரையாகக் காணவேண்டியது அவசியம்.”

“ஆமாமாம், அப்படி இருக்கவேண்டியது அவசியமில்லை. காணவேண்டி யதுதான் மிக அவசியம்!”

“ஹ!ஹ!ஹ!ஹ! – உண்மை கசக்கும் என்று சொல்வது தவறு. உண்மை எத்தனை வேடிக்கையானது!”

“பரவாயில்லை. வாழ்வின் இத்தனை நெரிசலிலும் நம்மிடம் இன்னமும் நகைச்சுவையுணர்வு எஞ்சியிருப்பது எத்தனை அற்புதமான விஷயம்!”

இங்கு ஒரு விஷயம் சொல்லித்தான் ஆகவேண்டும். இப்பொழுதெல்லாம் நகைச்சுவை உணர்வு என்பதே “பன்னி மூஞ்சி,” “பரங்கித் தலையா” என்பதையெல்லாம் தாண்டி, மூக்கு – காதுகளிலிருந்தெல்லாம் ரத்தம் கொப்புளித்துப் பெருகியோடும்வரை ஆயுதமற்ற அல்லது ஆயுதமுற்ற கைகளால் அடித்து நொறுக்குவதும், ஒருவன் தவறுதலாக இஸ்திரிப் பெட்டி யின் மீது உட்கார்ந்து பெருஞ்சூடு போட்டுக்கொள்வதும், அல்லது, ‘குண்டு’ வெடித்து புதைக்குவியலாக எழுந்துநடப்பதும் என்று ஆகிவிட் டதே. அப்படிப்பட்ட நகைச்சுவையுணர்வின் பிரதிபலிப்புத்தான் நம்மிடம் உள்ளதுவுமா? என்ற கேள்வி நம்முள் தவிர்க்கமுடியாமல் எழத்தான் செய்யும். இலக்கிய விமர்சனங்களில்கூட இத்தகைய நகைச்சுவையுணர் வின் வெளிப்பாடுகளை நம்மால் இனங்காண முடியும்…..


லக்கிய இதழ்களில் உமி மெல்லும் வாயால் அக்கப்போர் எழுதியே விமர்சன வித்தகராகத் திகழும் நபரைக்கொண்டு சம்பந்தப்பட்ட புத்தகத் தைப் பற்றி மதிப்புரை எழுதச் செய்வது என்பதாய் முன்வைக்கப்பட்ட கருத்திற்குப் பரவலான வரவேற்பிருந்தது.

வட்டமேஜையைச் சுற்றி அமர்ந்திருந்தவர்களில் ஒருவருடைய  ‘முன் சொன்ன’ கால்வாசி மனசாட்சி ஆட்சேபம் தெரிவித்தது. “அந்த மனிதருக் கும் நவீன இலக்கியத் திற்கும் என்ன சம்பந்தம்? அவரால் எப்படி இந்தப் படைப்பிற்கு விமர்சனம் எழுதமுடியும்?”

“அவரால் எந்தப் படைப்பிற்கும் விமர்சனம் என்ற பெயரில் என்ன வேண்டுமானாலும் எழுத முடியும் என்பதுதான் விஷயமே!”

மறுபடியும் ‘கால்வாசி’ மனசாட்சி அந்தத் தேர்வை மறுதலித்தது.

“இல்லை, அவரைக்கொண்டு எழுதச்சொல்வது சரியல்ல. ’பின் – நவீனத்துவம் என்ன ’பிசாத்து’ என்று பிதற்றிக்கொண்டிருப்பவர் அவர்.”

“அதுதானே நமக்கு வேண்டியது!”

“எது?”

“பின் – நவீனத்துவம் பற்றித் தெரியாமல் பிதற்றுபவர் ஒருவரைக் கொண்டு இந்தப் புத்தகத்தைப் பற்றிப் பேசவைப்பது. தவிர, இவருக்கு ‘பின் – நவீனத்துவம்’ தெரியாது என்பதை இப்போது மதிப்புரைக்கப்பட உள்ள படைப்பாளி முன்பு ஒருமுறை ’புட்டுப்புட்டு’ வைத்துவிட்டார். அதைப் படித்ததுமுதல் அந்த விமர்சகர் படைப்பாளிமீது சாபமிட்டே தீருவது என்று சபதமெடுத்துக்கொண்டிருப்பதாகக் கேள்வி.”

“ஓர் இதழின் சுவாரசியத்திற்கு இத்தகைய ’ஆல் - இன் – ஆல் விமர் சகர்கள் இன்றியமை யாதவர்கள்!”

”அந்த இதழ் ‘ஊத்தி மூடுவதற்’கும் இவர்களே காரணமாகிறார்கள் என் பதை நாம் மறந்து விடக் கூடாது,” என்று மீண்டும் கண்டிப்புடன் சுட்டிக் காட்டியது ‘கால்வாசி’ மனசாட்சி!

ஆனால், மீண்டும் பெரும்பான்மைக்கருத்திற்குத் தலைவணங்க வேண்டி வந்தது. பெரும்பான்மைக் கருத்து அந்த ‘திறனாய்வுத் திருவாளருக்கே ஆதரவாக அமைந்தது.

அந்த அவர்களுடைய ஒருமித்த தேர்வு குறித்த் ஒவ்வொருவரிடமும் அவரவருக்கான தனித்தனிக் காரணங்கள் இருந்தன:

  • “பின் – நவீனத்துவம் என்றால் என்னவென்றே தெரியாத ஒருவரால் சம்பந்தப்பட்ட படைப்பின் வெளிப்படையான உயர்வுகளைக் கூட உணர முடியாது; உரைக்கவும் இயலாது.”

  • “இலக்கியத்தில் உத்வேகமாக இயங்கிவரும் ஒருவரைக்கொண்டு மதிப்புரை எழுதவைப்பதைவிட, இத்தகைய ‘வெத்து’களைக் கொண்டு எழுதவைப்பது நம்பிக்கைக்குரிய விஷயம். ஏனெனில், படைப்பாளிகளைக் கண்டால் என்றுமே இத்தகைய ‘வெத்துவேட்டுக ளு’க்கு எக்கச்சக்கத் தாழ்வு மனப்பான்மை. எனவே, படைப்பாளியை விட தன்னை ஒரு படி மேலாகக் காட்டிக்கொள்ளும் முனைப்பில் மதிப்புரை, படைப்பாளியை படைப்புக்குப் புறத்தளவாய் மட்டம் தட்டு வதாகவே முதலும் முடிவுமாய் அமையும். எனவே, படைப்பைப் பற்றி ஒரு நல்ல வார்த்தையும் மதிப்புரையில் இடம்பெறாது!”

தற்குமேலும் காலதாமதமின்றி, தொலைபேசியில் அவர் தொடர்பு கொள்ளப்பட்டார். மதிப்புரைக்கப்பட வேண்டிய படைப்பாளியின் பெயர் இரண்டுமுறை அடிக்கோடிட்டுக் காண்பிக்கப்படுவதாய் அழுத்தமாய் எடுத்துரைக்கப்பட்டது. மதிப்புரையாளரை முன்பொரு சமயம் அந்தப் படைப்பாளி (நியாயமாய்) மூக்குடைத்தது நைச்சியமாய் நினைவுகூரப் பட்டது. கூடவே, விமர்சகப் பெருமகனாரை விரைவிலேயே தங்கள் இதழில் ஆஸ்தான விமர்சகராக்கிக்கொள்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாகவும் தகவல் தரப்பட்டது. பின்குறிப்பாய், விரைவிலேயே அண்டார்ட்டிக்காவில் பனிக்கரடி பக்கத்தி லிருக்க இலக்கியப்பயணம் மேற்கொள்ளவும் விமர்சகருக்கு ஆவன செய்யப் படும் என்றும் கோடிகாட்டப்பட்டது!

சிக்கெனப் புரிந்துகொண்டு பரபரவென்று எழுதிக்கொடுத்துவிட்டார் விமர்சன வேந்தர். இணைய வெளியில் எல்லையற்று எழுதிப் பழகி யதில் இங்கே சிக்கனமாக எழுபது பக்கங்கள் மட்டுமே மதிப்புரை எழுதவேண்டியிருந்ததுதான் சற்று சிரமமாக இருந்தது. ‘எடிட்டிங்’ என்ற பெயரில் அறுபது பக்கக் கட்டுரை அரைப் பக்கமாவதும், அதுவே ‘’நேரிடை’யாகவும், ’‘எதிரிடை’யாகவும்,  நடைபெறுவதும், அதாவது, வேண்டியவர்களாயிருப்போர் விஷயத்தில் அரைப் பக்கம் அறுபது பக்கமாவதும் இலக்கிய நடப்புதானே! ‘தனி மனிதத் தாக்குதலைத் தவிர்க் கவும்’ என்று அந்த ‘நால்வர் குழாம் – இன்னும் சரியாகச் சொல்வ தென்றால்,  ’இரண்டேகால்வர் குழாம்’ வேண்டுகோள் விடுத்திருந்தது விமர்சனக் கோமகனை அதிர்ச்சி யடையச் செய்தது என்றாலும் அதை யடுத்து அடைப்புகுறிகளுக்குள் தரப்பட்டிருந்த {தனிமனிதத் தாக்குதலாக வெளிப்படையாகத் தெரியாத அளவில் தனிமனிதத் தாக்குதலைக் கட்டமைக்கவும்} என்பதான விளக்கம் ‘தன்னிலை விளக்கமாகவே’ தோற்றம் கொண்டு அவரை ஆசுவாசமாக உணரச் செய்தது.


மதிப்புரையிலிருந்து (ஒரு) ‘மாதிரி’ வரிகள் சில:

  • முன் – நவீனத்துவம் என்று ஒருமுறைகூட சொல்ல முனைவ தில்லை. படைப்பாளி. பின் – நவீனத்துவம் என்று பிடிவாதமாய்ச் சொல்லிக்கொண்டே போவது அவருடைய படைப்பாற்றலின் பின்தங்கிய நிலையைப் படம்பிடித்துக்காட்டுகிறது;

  • கதையின் நான்காவது அத்தியாயத்தின் ஆரம்பப் பத்தி ‘எல்லோரும் நல்லவர்களே’’ என்று தொடங்குகிறது. ‘எல்லாமும் நல்லவையே’ என்றோ, ‘எல்லாம் நன்மைக்கே’ என்றோ ஆரம்பிக்காதது ஏன்?

  • படைப்பாளி சின்னப் பையனாக இருந்தபோது அவருக்கு ‘பம்பரம்’ விடக் கற்றுக்கொடுத்தது நான். ஆனால் அவரோ ‘சின்னப் பையன்’ என்று எழுதாமல் ‘சிறுவன்’ என்றே எழுதுகிறார். இதை அவர் திருத்திக்கொண்டால் அவருடைய படைப்புத்திறனும் இலக்கிய வெளியாகிய பேரண்டத்தில் சுழன்றுகொண்டேயிருக்கும் மாய பம்பரமாய் முத்திரை பதிக்கும்! இந்த படைப்பில் அந்த முயற்சிக் கான ஒளிக்கீற்றைக் காணமுடிகிறது. அல்லது, முடியவில்லை (’என, அவர் என்னிடம் நடந்துகொள்ளும் முறையை வைத்துத்தான் தீர்ப்பளிக்க முடியும்’ என்பன வரியிடை வரிகள்!)

  • ‘தக்க திமி தா’ என்று எழுதாமல் ‘தக்க மிதி தா என்று சொற்குற்றம், பொருட்குற்றத் தோடு ஒரு படைப்பை உருவாக்கலாமா? தொல்காப் பியருக்கு துரோகம் செய்யலாமா? மேற்குறிப்பிட்ட இமாலய மொழிப் பிழையை அச்சுப்பிழையாக வாசகர்கள் இனங்காணலாம்.. அதுதான் ‘பாமர’ வாசகருக்கும், விவேகம்நிறை விமர்சகருக்கும் உள்ள வேறு பாடு என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை!

  • என் இளமைக் காலத்திலிருந்தே இங்கிதமும் இலக்கியமும் என்னு டைய இரண்டு கண்களாக விளங்கிவருகின்றன. இருந்தாலும், மூன்றாவது கண்ணைத் திறந்து எரிக்கவேண்டிய விஷயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் மிக முக்கியமானது, இந்தப் படைப்பு. அதனால்தான், இந்தப் படைப்பைப் படித்துப்பார்த்து என் மனதை விகாரமாக்கிக்கொள்ளாமல் விமர்சனம் எழுதுகிறேன் நான்!

  • நானே படித்துப் பார்த்து இந்தப் படைப்பு குறித்த சுயமான முடிவுக்கு வருவேன் என்று நீங்கள் சொல்ல முற்பட்டால் நாசமாய்த்தான் போகும் இலக்கியம். நீங்களும்கூட.


Ø   








No comments:

Post a Comment