Thursday, January 22, 2015

[விமர்சன] வெறுமாண்டி _ சிறுகதை

சிறுகதை
[விமர்சன] வெறுமாண்டி
அநாமிகா
[கவிதாசரண் ஏப்ர-ஜூன், 2005இல் வெளியானது]






’விமர்சன வீரன்’ என்ற பட்டம் வழங்கப்பட்டிருந் தால் அவர் வலுக்கட்டாயமாக மறுத்திருப்பார். வெறும் எதுகை மோனைக்காக ‘கட்டாயமாக’ என்பதை நான் ‘வலுக்கட்டாயமாக்கியிருப்பதாக உங்கள் வாசகப் பிரதிக்குப் பட்டால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. சிறு பத்திரிகைகள், பெரும் பத்திரிகைகளையெல்லாம் தொடர்ந்து படித்துவருபவர் நீங்கள் என்ற வகையில் ‘கட்டாய மாக மறுத்திருப்பார்’ என்பதற்கும் ‘வலுக்கட்டாய மாக மறுத்திருப்பார்’ என்பதற்கும் இடையேயான வேறுபாடு உங்களால் கட்டாயமாக உள்வாங்கப்பட் டிருக்கும். கவனிக்கவும் _ கட்டாயமாக; வலுக்கட் டாயமாக அல்ல. வீரன் என்பது கிட்டத்தட்ட பழந் தமிழ்ச்சொல். வெகுஜனங்களோடு, திராவிடக் கட்சி களோடு தொடர்புபடுத்திப் பார்க்கப்படும் சாத்தியப் பாட்டைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ‘விமர்சனச் செம்மலு’ம் வலுக்கட்டாயமாக மறுதலிக்கப்பட்டி ருக்கும். ‘விமர்சன வள்ளல்’ என்பதும் வெகுஜன வாடை வீசுவதாக இருந்தாலும் அது தனக்குப் பொருத்தமாக இருக்கும் என்று அவர் உள்மனத் திற்குப் பட்டது. எட்டாவது அதிசயம், ஒன்பதாவது அதிசயம் என்பதாக இன்று புதிதாகச் சேர்க்கப்படு வதைப் போல், பாரி, ஓரி, காரி முதலான கடையேழு வள்ளல்களின் வரிசை எண்ணிக்கையை இடம் மாற்றுவதால் தன் பெயர் இனி வரலாற்றில் இடம்பெறலாம்.

அதுவும் எப்படிப்பட்ட வள்ளன்மை! வேண்டியவர்களுக்கு அதீதப் புகழுரை களும், வேண்டாதவர்களுக்கு அதலபாதாளக் குழிகளுமாய் இரு துருவ சஞ்சாரங்களுக்கிடையேயான விரிபரப்பு அவருடைய வள்ளன்மையின்  அளவு. அந்தக் காலத்திலிருந்து அவர் ஆடிக்கொண்டிருக்கும் ’கூத்தை’ பம்மாத்து என்று சொல்லுகிறவர்கள் ஆத்தோடு போவார்கள். அதாவது, நதியில் முங்கிச் சாவார்கள். அப்படி நேரிடையாகச் சொன்னால் ‘சாப மிடுகிறவர்’ என்று நம்மை மற்றவர்கள் சரியாக, எளிதாக அடையாளங் கண்டு, காட்டிவிடுவார்கள். நாம் இலக்கியத்தில் இருண்மையைப் பழிக்கலாம். ஆனால், உள்ளத்தின் இருளைப் போற்றிப் பேணிவர வேண்டும். மற்றவர்க ளையும் அவ்வாறே நம் மனதின் இருளை மேதைமையாக இனங்காணப் பழகச் செய்ய வேண்டும்.

இதற்கென்று விமர்சன வீரன், இல்லை, விமர்சனச் செம்மல், இல்லை விமர்சன வள்ளல், இல்லை, விமர்சன மேதை, இல்லை, விமர்சனச் சக்கரவர்த்தி, இல்லை, விமர்சன வைபோகன், இல்லை, விமர்சன வித்தகன், இல்லை, வி….(அ) வி…., (அ) வி….., (அ) வி….. சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், பேசப்படுவோர் பெருமையைப் ஏசாமல், பேசுவோன் புகழைப் பறைசாற்றுவதாக ஆகிவிடும். அது முறையல்ல. அதைவிட முக்கியமாக, அது விமர்சனாதி பதியின் தனி பாணி. நான்காவது அல்லது ஐந்தாவது படித்த கட்சித்தொண்டர் ஒருவர், அல்லது, தொண்டர்களின் தளபதியாகப் பதவி உயர்வு பெற்றிருப்பவர், ஹெலன் கெல்லரின் பிறந்த நாள் விழாவில் தனது உரையில் ஒவ்வொரு பத்திக்கும் ஒரு தரம் தன் தலைவருக்கு அடைமொழி களை உச்சரித்துத் தன்னை உயர்த்திக்கொள்ள முயல்வதைப் போல்(பல நேரங்களில் இந்த முயற்சிகள் விழலுக்கிறைத்த நீராகி விடுமென்றாலும் விண்ணுலகில் அரைவட்டங்களும் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுகின்றன என்ற உண்மை நம் நினைவிலி ருந்து நீங்கிவிடலாகாது. சம்பந்தப் பட்ட ‘விமர்சன விற்பண்ணல்’ பேச எடுத்துக்கொண்ட புத்தகத்தைப் பற்றி, அதை எழுதியவரைப் பற்றி இரண்டொரு வரிகளும்,மற்ற வரிகள் பத்திகள், பக்கங்களில் தனது ஆப்பிரிக்கப் பயணம், அர்ஜெண்டீனியாப் பரிச்சயம் பேசப்படும் படைப்பாளி சின்னப்பையனாயிருந்த போது தன் மடியில் அமர்ந்து பம்பரம் கேட்டது (விமர்சனம் வசைபாடலாக இருக்கும்போது, ‘அந்தப் பையன் பள்ளிக்கூட வாத்தியார் கேட்ட ஒன்னாம் வாய்ப்பாட்டை ஒப்பிக்க முடியாமல் முட்டி போட்டது’ என்பதாய் மூளை பிறவேறு அடுக்குகளி லிருந்து நினைவு களை வெளிக்கிளப்பும்) என்று தன் புராணமுமாய் பாடிவருவதன் விளைவா கவே ‘விமர்சனாழ்வார்’ என்ற பட்டமும் அவருக்குப் பரிந் துரைக்கப்பட்டது.

வழக்கொழிந்த நாட்டியக் கலைஞர்கள் சிலர் நடாப் பயிற்சி மையங்கள் ஆரம்பிப்பதைப் போல் இந்த ‘விமர்சனச் சித்தரு’ம் ஒரு பள்ளியை நாக்பூரி லும், இன்னொரு பள்ளியை நாகாலாந்திலும் திறந்திருக்கிறார். மூன்றாவது பள்ளி ‘நோய்டா’வில். விரை வில் ‘நியூயார்க்’கிலும் திறக்கலாம்.

அந்தப் பயிற்சிப் பள்ளிகளின் ஒரே பாடத்திட்டம் இதுதான்: நிர்வாணமாக ஒருவரைக் குதிரையில் ஏற்றி வலம்வரச் செய்வார்கள். பயிற்சி மாணவர்கள அந்த மனிதர் எந்த நிறத்தில் ஆடையணிந்திருக்கிறார், என்னவிதமான அணிகலன்கள் அணிந்திருக் கிறார் என்று கவனித்துப் பார்த்துச் சொல்லவேண் டும். அவர் ஒருவரே ‘விமர்சன விசுவரூபி’யாய்த் திகழும் காரணத்தால் பன்மையில் குறிக்கப்படுகிறார் ’ஆசிரியர்கள்’ என்பதாய்.  ஒருமை, பன்மை இலக்கணப் பிழைகளைக் கவிதைகளில் தோண்டித் துருவிக் கண்டெடுப் பவர்கள் இந்த ‘விமர்சன தேவனி’ன் ‘பன்மை’ அந்தஸ்தைப் பற்றிக் குரல் எழுப்புவதேயில்லை. எளிய கவிஞனை எவ்வளவு வேண்டுமானாலும் எள்ள லாம். மேல்மட்டத்தாரோடு மோதாமலிருப்பதே நயத்தக்க நாகரிகம்.

ஒருமுறை கட்டுவிரியன் பாம்பைப் பற்றிய கதை யொன்று அந்த ‘விமர்சன சிங்க’த்தின் கைகளில் கிடைத்தது. வெகு கவனமாய், தான் அதுகாறும் நேர்கொள்ள, எதிர்கொள்ளவேண்டியிருந்த சட்டை யுரித்த பாம்பு, பெருமாளின் படுக்கைப் பாம்பு, சிவன்தலைப் பாம்பு, பல்பிடுங்கிய பாம்பு, மிருகக் காட்சிச்சாலைப் பாம்பு, மற்றும் நெடுஞ்சாலைப் பாம்பு, குறுக்குத் தெருப் பாம்பு என எல்லாவற் றையும் பட்டியலிட்டுக் காட்டி ‘இந்தப் பாம்பு மகோன்னதமாகச் சட்டையுரிக்கிறது என்று புக ழாரம் சூட்டியதில் மட்டற்ற மகிழ்ச்சியடைந்த கட்டுவிரியன், புத்தகத்தின் பக்கங்களிலிருந்து படம் விரித்தாடிக்கொண்டே வந்து ‘விமர்சனக் கோமகனை’க் கட்டிக்கொண்டுவிட்டது! ஆனால், மாணிக்கம் ஒன்றும் தராமல் வெறுமே ‘ஜங்கிள் புக்’ ‘மோகிளி’யிடம் கண்கிறங்கக் கிசுகிசுத்து வசியம் செய்ய முயலும் தளுக்குப் பாம்பைப் போல் நடந்துகொண்டு போய்விட்டதே என்று உள்ளுக்குள் பொருமிக்கொண்டார் ’விமர்சன வாள்’. பல்லியின் வால் வெட்டப்படவேண்டியதே என்பார். ‘பல்லியும் முதலையே; முதலையும் பல்லியே’ என்பார். ஆனால், வெகு கவனமாக முதலையின் வாலை வெட்டுவது பற்றி மூச்சு விட மாட்டார். வெட்டுப்பட்ட பகுதி தன் கைக்கு வருமா, அதைத் தன்னால் விற்க முடியுமா, எவ் வளவு விலை பெறும் என்பதெல்லாம் திட்ட வட்டமாகத் தெரியாத நிலையில் எதற்கு முதலையின் வாலைப் பற்றிக் கருத்துத் தெரிவிப் பது! அவரால் வாழ்த்தப்பட்டவர்கள் அவரை ‘விமர்சனச் செங்கோலன்’ என, அவரால் வெட்டி வீழ்த்தப்பட்டவர்கள் அவரை ’விமர்சனக் கடுங் கோலன்’ என்றார்கள். அதைப்பற்றி அவருக் கென்ன? விமர்சனச் சக்கரவர்த்தியோ, விமர்சனச் சர்வாதிகாரியோ _ பீடம் கிடைத்துவிடுகிறது. அது தான் முக்கியம்.

முன்னுக்குப் பின் முரணாக இருந்தாலும், தன்னி கரற்ற விமர்சனப் பயிற்சி மையம் நடத்திவந்த அவரே அந்தப் பள்ளியின் பாடபுத்தகங்களுக்கான கோனார் உரை நூல்களையும் எழுதினார். ‘ஊரெங் கும் நடப்பது தானே, இதில் என்ன முரணைக் கண்டோம்? வெங்காயம்’ என்று நீங்கள் சொன் னால் எதிர்த்துச் சொல்ல என்னிடம் எதுவு மில்லை என்பது உண்மை. ஆனால், ’விமர்சன வேந்தனி’ன் பயிற்சி மைய அடிப்படைக் கோட் பாட்டின்படி பார்த்தால் ‘என்னிடம் எதுவுமில் லா ததே என்னை எல்லாம் இருப்பவராக்குகிறது அல் லவா!

‘விமர்சன பூபதி’யின் [சம்பந்தப்பட்ட திரைப்படத் தில் ‘ஆள்தோட்ட பூபதி’ பாடல் எப்படி கதைக்கு சம்பந்தமேயில்லாத போதிலும் சக்கை போடு போட்டது என்பதை நினைவுபடுத்திப் பார்க்கவும்] தனித்தன்மை வாய்ந்த நபும்சகத்தனத்தை, இல் லையில்லை, நிபுணத்துவத்தைப் பற்றிக் கேள்விப் பட்டு ஒருநாள் சூரியனும் நிலாவும் அவரைத் தேடி பூலோகம் வந்தார்கள். அவர்கள் வந்த சமய த்தில் அவர் ஒரு சிறுகதைத் தொகுப்பைத் தனது தனித்துவம் வாய்ந்த தராசுக்கோலில் நிறுத்திப் பார்ப்பதில் மும்முரமாய் இருந்தார். முப்பது படைப்பாளிகள் கொண்ட நூல் இது. தொகுப்பாசி ரியர்கள் தங்களது முன்னுரையில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்கள் :”சிலர் அவர்களுடைய சிறு கதைகளைத் தர விரும்பவில்லை. சிலருடைய முகவரிகள் எங்களுக்குக் கிடைக்கவில்லை. இன்னொரு தொகுப்பில் இதில் காணும் குறை பாடுகளை நிவர்த்தி செய்வோம்.”

தப்புக்குறியைத் தாளின் ‘நடுமையத்தில்’ போட்டு விட்டு எழுதத் தொடங்கினார் ’விமர்சன வேதா ளம்’. [ஒரு விஷயம், வேதாளம் என்பது வஞ்சப் புகழ்ச்சியல்ல. அதே சமயம் இந்த விமர்சனப் பெருச்சாளி’ வஞ்சப் புகழ்ச்சிக்குப் பெரிதும் தகுதி வாய்ந்தவரே]. ’இங்கே விடுபட்டுப் போயிருக்கும் படைப்பாளிகள் ஏன் இடம்பெறவில்லை? நான் அவர்களை எப்படியெல்லாம் எள்ளிநகையாடியி ருக்கிறேன் என்பது இங்கே தேவையில்லாத விஷயம்… இப்பொழுது அவர்கள் உரிமைக்காக நான் போராடுவதை நீங்கள் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்… இதில் இருபது முப்பது நல்ல படைப்பாளியைத் தொகுப்பாசிரியர்கள் புறக்க ணித்தது ஏன்? இதிலுள்ள உள் நோக்கம் என்ன? (மற்ற இருபது பேரைக் குறிப்பிடவில்லையே என் கிறீர்களா? அதனால் எனக்கு என்ன பயன், மன விகாரம் பிடித்தவர்களே!)

இப்படியே இருபது வரிகள் நீட்டிய பின், சிறு கதைக் கோட்பாடு என்பதாய் இரு வரிகளைப் போட்டு, ‘அடுத்த முறை அதிக கவனத்தோடு தொகுப்பு உருவாக்கப்படுவது அவசியம்,’ என்ற ‘அக்மார்க்’ வாசகத்தோடு(அப்படியொரு கோட் பாடே கிடையாது என்று யார் மறுத்தாலும், அது வெளியாக குறைந்த பட்சம் ஒரு மாதம் ஆகி விடும். தவிர, இப்பொழுது வெளியாகும் இலக் கிய இதழ்களில் சிலபல நின்றுபோய்விடும் வாய்ப்புகளும் அதிகம்.)

தன்னுடைய திருத்தமான மனக்கணக்கை சிலா கித்தவாறே, பேனாவை மூடி, நெட்டி முறித்து நிமிர்ந்தபோது, எதிரே நிலவும் சூரியனும் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார்.

“என்ன வேண்டும் உங்களுக்கு?”

“எங்களைப் பற்றி நீங்கள் என்ன எழுதுவீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் இங்கு வந்தோம், ‘விமர்சன சற்குருவே’,” என்றது நிலவு.

“எத்தனை பயபக்தியோடு பேசுகிறாய்!” என்று மகிழ்ந்து கூறினார் ‘விமர்சன சீமான்’. “என்னு டைய பயிற்சி மையத்தில் சேர்ந்து பயின்றால் விமர்சன ஏணியின் மேல்படிக்கு நீ விரைவில் சென்றுவிடலாம்!”

“மேலே இருந்து அலுத்துப்போய்த் தானே இங்கே வந்திருக்கிறோம்” என்று நறுக்கென்று சொன்னது சூரியன்.

“ஆவேசப்படாதே, அமைதியாயிரு.” என்றார் விமர் சன விற்பன்னர்.

“நான் அழுத்தமாய் என் கருத்தைப் பதிவுசெய்வது உனக்கு ஆவேசமாய் படுகிறது. உமி மெல்வதாய் எப்பொழுதும் ‘கிசுகிசுப் பேச்சே உனக்குப் பழகி விட்டதால் அப்படித்தான் தோன்றும்.”

“அப்படியா சொல்கிறாய்?.... உன்னைப் பற்றிய என் மதிப்புரை எப்படி யிருக்கும் தெரியுமா?”

“சொல், கேட்கிறோம்,” என்று சமாதானப்படுத்து வதாய் மென்மையாய் கூறியது நிலவு.

“தேவைக்கு அதிகமாய்க் கதிர்களைக் கொட்டி உயிர்களைச் சூறையாடுகிறான் சூரியன்.”

“இது மிகவும் ஒருதலைப்பட்சமான மதிப்புரை.” என்று கோபமாகக் கூறியது சூரியன். “நான் பகலை உங்களுக்கு வரவாக்குவதில்லையா? பயிர் வளர்ப்பதில்லையா? எத்தனை செய்கிறேன் உங்களுக்கு.”

“அதெல்லாம் நீ எனக்கு ‘சலாம்’ போட்டால் தான் பட்டியலிடப்படும். சரி, அங்கே பார், அதோ ஆரோ கணித்திருப்பவர்கள் எத்தனை நிறங்களில் உடை தரித்திருக்கிறார்கள், சொல்.”

கூர்ந்து கவனித்துப் பார்த்துவிட்டு, பின், உதடு களைப் பிதுக்கியது சூரியன். “எல்லோரும் நிர் வாணமாய்த்தானே இருக்கிறார்கள்.”

“என்ன அநியாயம், எதைப் பார்த்தாலும் நிர்வா ணத்தையே நாடும் ‘மஞ்சள் பத்திரிகை’க் கண்கள் உனக்கு.”

“நான் நிர்வாணத்தைக் கேவலப்படுத்தவில் லையே.”

“அப்படியானால், நிர்வாணத்தை உயர்த்திப் பிடிக் கிறாய், அப்படித்தானே? அக்கிரமம்.”

“அவர்கள் உடையணிந்திருப்பதாய் நீ கூறுகிறாய். இல்ல என்கிறேன் நான். இதில் எதற்கு ஏதேதோ பேசுகிறாய்?”

“நீ ஒரு ஒளிக்கீற்றாய் இருந்தபோது நான் படம் பிடித்திருக்கிறேன். அந்தப் படம் ‘எக்ஸ்போஸ்’ ஆகிவிட்டது என்பது ஒரு விஷய மில்லை. ஆனால், உன்னை நான் பொருட்படுத்திப் புகைப் படம் எடுத்ததற்கான துளி நன்றியுணர்வு கூட உன்னிடமில்லையே,” என்று ’விமர்சனப் பேரொளி’ வினவ,

“எல்லாம் அந்த விமர்சனக் கழிவாளர் வெளி யேற்றிய நச்சுவாயுப் படலம்தான், நீங்காத கறை யாக என்மேல் படிந்துவிட்டது. சும்மாவா சொல் கிறார்கள், ‘துஷ்டர்களைக் கண்டால் தூர விலகிச் செல்’ என்று….”

“அப்படியே விட்டுவிடவும் முடியாதே. கேட்க ஆளில்லை என்று காட்டுச்செடியாய் வளர்ந்து விடுவார்கள். அவ்வப்போது சுட்டெரிக்க வேண்டி யதும் அவசியம். அதோ, அங்கே பார்…”

கதிரவன் கீழ்முகமாய் தன் ஒளிக்கீற்றைக் கொண்டு சுட்டிக்காட்டிய இடத்தில் ஓர் ‘இடை நிலை’ இதழின் நடுப்பக்கம் விரிந்துகிடக்க, அதன் அரைவட்டப்பகுதியில் ‘விமர்சன வீர்யன்’(ஓரள வுக்குப் பின்- நவீனமாக இருப்பதால் ‘விமர்சன விதூஷகர்’ புன்னகைத்துக்கொண்டிருக்க) என்ற வார்த்தைகளின் கீழான புகைப்படத்தின் வலப் புறமாய் கீழ்க்கண்ட வாசகங்கள் காணப்பட்டன:

“உலக விமர்சகன்! இவரைத் தேடி விண்ணு லகமே தரையிறங்கி வந்தது! ஆனால் சில தறுதலைகள் இவரை மறுதலித்துவருகிறார்கள். அவதூறு பரப்பியே தீருவோம் அவர்களைப் பற்றி. அதுவே எங்கள் இலக்கிய தர்மம். ‘அக்கப்போர்’ வெல்லும்.”

இதை வாசித்ததும் மூண்ட வெஞ்சினத்தில் விண் ணிலுள்ள கோள்களும் ஒளிமீன்களும் தங்களை மறுவரிசைப்படுத்திக் கொண்டதில், இங்கிருந்தே உற்றுப் பார்த்தாலும் போதும், தொலைநோக்கி யின் உதவியின்றியே நம்மால் படிக்கக்கூடிய அளவில் ஆகாயப்பரப்பில் காணத்தொடங்கி யுள்ள வார்த்தைகளே இந்தக் கதைக்குத் தலைப் பாக்கப்பட்டுள்ளன.




0

No comments:

Post a Comment