Sunday, September 28, 2014

வாக்குமூலம் - கவிதை

கவிதை


வாக்குமூலம்

ரிஷி


ஊ….......லல்லல்லா…………ஊ…......லல்லல்லா…….......
ஊகூம், ஏலேலோ உய்யலாலா….

உளறிக்கொட்டிக்கொண்டிருப்பேன்;
உதார்விட்டுக்கொண்டிருப்பேன்
ஒருபோதும்
உனக்கொரு சரியான பதில் தர மாட்டேன்….

ஊ….......லல்லல்லா…………ஊ…......லல்லல்லா…….....
ஊகூம், ஏலேலோ  உய்யலாலா…..

வச்சிக்கவா? வச்சிக்கவா? வச்சிக்கவா வச்சிக்கவா….?
எச்சில் வழியக் கேட்பவன் இறுதியில்
‘‘உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ளே’  என்று சொல்லித்
தப்பித்துவிடும் உலகில்
பதிலளிக்காமல் போக்குக் காட்டுவதெல்லாம் மிக எளிது

ஊ….........லல்லல்லா……….ஊ…....லல்லல்லா…...........
ஊகூம், ஏலேலோ உய்யலாலா…

இணையற்ற என்னைப் பார்த்தா வினவத் துணிகிறாய்?
இல்லாத நூலிலுள்ள எழுதாத பக்கங்கள் எனக்கு  மனப்பாடம் தெரியுமா?
பார்த்தாயல்லவா – மார்க்வெஸ்ஸின் ஒரு வரியில்
(மாங்காய் மடையர்களிடம்) என்னை மேல்தாவியாக்கிக் காட்டும்
மேலான வித்தை  தெரிந்துவைத்திருக்கிறேன்.

ஊ…......லல்லல்லா………......ஊ…...லல்லல்லா…....... 
ஊகூம், ஏலேலோ உய்யலாலா

தர்க்கநியாயங்களை கணமேனும் எண்ணிப்பார்ப்பேன் என்றா நினைக்கிறாய்?
அநியாயம், அக்கிரமம் என்றே அலறுவேன் அரற்றுவேனே தவிர
தப்பித் தவறியும் தெளிவா யொரு பதிலைத் தரமாட்டேன்.
பின்வாங்கலை கடந்துபோவதாய் பொருள்பெயர்த்துவிட்டால் போயிற்று.

ஊ…........லல்லல்லா………..ஊ….லல்லல்லா…...............
ஊகூம்,ஏலேலோ உய்யலாலா

துணிவிருந்தால், தில்லாலங்கடியோ, கேட்டுப் பார் கேள்வியை
திரட்டிவைத்திருக்கும் கருத்துமொந்தைகளை
விறுவிறுவென விட்டெறிவேனே தவிர
மறந்தும் பதிலளிக்க மாட்டேன்.

ஊ….....லல்லல்லா………...ஊ…......லல்லல்லா….............
ஊகூம்,ஏலேலோ உய்யலாலா

மீண்டும் அறிவுறுத்துகிறேன், புண்ணாக்கு விடைவேண்டி
 வலியுறுத்தினாலோ
மளமளவென்று கிளம்பும் என் அய்யய்யோ வென்ற அலறல்கள்;
அதி வன்மம் நிறை உளறல்கள்.

ஊ….......லல்லல்லா………..ஊ….......லல்லல்லா…...........
ஊகூம்,ஏலேலோ உய்யலாலா

காலோ, அரையோ முக்காலோ, தெக்காலோ வடக்காலோ
எங்கெங்கு காணினும் தமிழ்க்கவிதைக் காவல்தெய்வம் நானாகி
ஊனாகி உயிராகி பேனாகி அரிக்கும் பணியில்
இருபத்திநான்குமணிநேரமும் என்னை இயக்கிக்கொண்டிருப்பது
வன்மம் என்பார் உன்மத்தர்கள் ஆம்

ஊ…........லல்லல்லா………  ஊ…......லல்லல்லா…...........
ஊகூம், ஏலேலோ உய்யலாலா…..

அடுத்தொரு கேள்வி கேட்டால் பின்னும் எட்டியுதைப்பேன் வெட்டிப் புதைப்பேன்….
இன்னும் பல செய்தவாறு செய்வதெல்லாம் நீயே என்பேன்
தின்பேன் என்னென்னவோ இவ் வின்னுலகம் உய்யவே.
என்னையா கேள்வி கேட்கிறாய் அப்போதைக்கப்போது?
இந்தா உனக்கொரு பெப்பே;. இப்போதைக்கு இது.

ஊ…........லல்லல்லா……….....ஊ…......லல்லல்லா…..........
ஊகூம்,ஏலேலோ உய்யலாலா ….




0

 (* திண்ணை இணைய தள 21,செப்டம்பர் 2014 இதஈல் வெளியாகியுள்ளது)

No comments:

Post a Comment