Saturday, May 24, 2014


துளிவெள்ளக்குமிழ்கள்

’ரிஷி’



(1)
பட்டுப்போய்விட்டது என்று திட்டவட்டமாகத் தெரியும் நிலையில்
இட்ட தெய்வம் நேரில் வந்ததேபோல்
மொட்டவிழ்ந்து விரிந்திருந்தன மலர்கள் சில.
கண்வழி நுகரக்கிடைத்த நறுமணத்தின் கிறக்கத்தில்
கணத்தில் இடம் மாறி
வேண்டும் வரம் கேள்என்று இறைவனிடம் சொல்ல எண்ணி
அண்ணாந்தேன் நான்
ஆகாயமெங்கும் சிறகடித்துக்கொண்டிருந்தேன்!

(2)
முதன்முறையாய் பார்த்துக்கொள்கிறோம்
என்னிடம் பாய்ந்தோடி வந்தது குழந்தை.
விட்டகுறை தொட்ட குறையாய் இது என்ன ஒட்டுதல்?
அள்ளியெடுத்துப் பின் யாரோவாகிவிட்டால்
எத்தனை பெரிய நம்பிக்கை துரோகம்…
எப்படி எதிர்கொள்வது இந்த அன்பு பாராட்டலை?
அருகில் ஒரு கணம் நின்று ஏறிட்டுப் பார்த்தது குழந்தை.
என்ன எண்ணிக்கொண்டதோ?
அதன் பார்வையில் நான் வண்ணத்துபூச்சியோ காண்டாமிருகமோ….
இரண்டுமே உருமாறிக்கொண்டுவிடுமோ?
‘எண்ணம்போல் வாழ்வு’ என்று சொல்வதுபோல்
என்னைப் பார்த்துப் புன்சிரித்த பிள்ளை
கடந்தேகிவிட்டது காலத்தை எட்டிப்பிடிக்க!

(3)
”ஒருவழியாக தேர்தல் திருவிழா முடிந்துவிட்டது” என்று அலுப்போடு கருத்துரைத்தார் ஒருவர்;
“ஒலிபெருக்கிச் சப்தத்தில் காது செவிடாகிவிட்டதென சீறிச் சினந்தார் ஒருவர்.
யாராண்டால் என்ன? காசுக்குக் குடிநீரும் கழிப்பறையும் தொடரும் கதைதான்
என்றார் ஒருவர்.
தூசியாய் துரும்பாய் வீசியெறியப்பட்ட எச்சிலையாய் இதுகாறும் அடையாளமற்றிருந்தவன்
வாக்காளப் பெருமகனாகி
அகண்ட வீடாய் நாடு கிடைத்த தாக்கத்தில் தொண்டையடைக்க
அடுத்திருந்த துணிக்கடையின் தொலைக்காட்சிபெட்டியில்
அண்டை மாநிலச் செய்திகளில் கண்ட மக்கள்திரளில்
தன்னை உன்னிப்பாகப் பார்க்கத் தொடங்கினான்!

(4)
கனவுகண்டுகொண்டிருந்தபோதெல்லாம்
‘கனவு மெய்ப்படவேண்டும்’ என்று
ஒருசமயம் வேண்டிக்கொண்டும்
ஒருசமயம் வேண்டமறந்தும்
ஒரு சமயம் வேண்டலாகாதவாறும்
கழிந்தது புலர்பொழுது.       
கண்ட கனவுகள் ஆயிரமிருக்குமா?
ஆகாய விண்மீன்கள் எண்ணிலடங்காதன.
கனவும் நட்சத்திரம் எனில்
நினைவில் நிற்பது எண்ணிக்கையா, மினுமினுப்பா…?
காட்சியா? குறியீடா? ஒளியா? இருளா…..?
நிரந்தரமும் நிலையாமையும் நீண்டகால நண்பர்களாய்
வாழ்வுப்பாலத்தின் மீது கைகோர்த்து நடந்தவாறு.
அடியில் கரைபுரண்டோடிக்கொண்டிருக்கிறது காலவெள்ளம்.

(5)

’அன்னையர் தினம்’ அங்கங்கே கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது
அலங்கார விளக்குகள் தொங்கும் அதி யகன்ற அரங்குகளில்.
அதனால் என்ன?
அம்மாவும் சரி அன்பும் சரி
முகடுக்கும் அடிவாரத்திற்கும் இடையேயான அதலபாதாளத்தை வென்றுவிட்டது தெரிந்தது தானே!
கைத்தட்டலுக்காக மட்டுமே எழுதாதவரை எந்தக் கவிதையும் மட்டமல்ல.
_ தனக்குள் சொல்லிக்கொண்டவள்
வெளியே தெரியாத தன் எளிய தாய்க்கு
அவளறியாதவாறு பரிசளிக்க
சிறிய பொட்டலமாய் ஒரு புத்தம்புதுக் கவிதைக்குள்
பத்திரமாகப் பொதிந்துகொள்கிறாள்
தானாகிய கொத்துமலர்களை!





[*திண்ணை மே இணைய இதழில் வெளியானது]
0

No comments:

Post a Comment