Sunday, March 16, 2014

[Jul. 02  2013, மலைகள் டாட்.காம் ]




மைனஸ் ஒன் -1 என்ற தலைப்பே கவிஞரின் நவீன தமிழ்க்கவிதை ஆர்வத் திற்கும் வாசிப்பிற்கும் கட்டியங்கூறுவதாய் வெளியாகியுள்ள கவிதைத் தொகுப்பு இது. மொத்தம் 89 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. கவிஞர் நந்தாகுமா ரனைப் பற்றிய ரத்தினச்சுருக்கமான அறிமுகக்குறிப்பு இடம்பெற்றிருக்கிறது.

நவீனம் என்ற சொல் உருவம், உள்ளடக்கம் ஆகிய இரண்டையும் சேர்த்தே தரப் படும் அடைமொழியாகத்தான் இலக்கியத்திலும் வாழ்க்கையிலும் பார்க்கப்பட்டு வந்திருக்கிறது எனலாம். The best selection of words in the best order என்றும் செறிவான கவிதைக்கு இலக்கணம் வரையறுக்கப்பட்டிருக்கிறது. Best என்ற வார்த்தை ஓரளவு relative term தான் என்றாலும் ஒரேயடியாக relative term அல்ல. நவீன தமிழ்க்கவிதை இயக்கத்தின் போக்கில் உருவம் சார்ந்த பரிசோ தனை முயற்சிகள் அதிக நேரங்களில் எள்ளலும் எதிர்ப்புமாகவே எதிர்கொள்ளப் பட்டிருக்கின்றன. உருவம் சார்ந்த, மொழி ரீதியான பரிசோதனைகளில் ஒரு கவிஞர் இறங்கினால் உடனேநவீன தமிழ்க்கவிதை வெளிக்குப் புறத்தே இருப் பவர்களோடு சேர்ந்து நவீன இலக்கியப் பரப்பிற்குள் தம்மளவில் பங்காற்றி வருவோரும் கூட மேற்படி பரிசோதனை முயற்சியை எதிர்ப்பதும், தூற்றுவதும் வழக்கமாக நடந்தேறிக்கொண்டிருக்கும் காட்சிகள். பரிசோதனை முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் கவிஞர் தமிழ்க்கலாச் சாரத்திற்கு அந்நியப் பட்டவர், மேனாட்டு பாணிகளை ஈயடித்தான் காப்பி அடிப்பவர் என்பதாக, ஒட்டு மொத்தமாக முத்திரை குத்தப்பட்டு ஓரங்கட்டப்படு வதன் மூலம் அவர் கவிதை களில் இடம்பெறும்தமிழ் மண்வளம், கலாச்சார-இலக்கியப் பரிச்சயங்கள், அவற்றை அந்தக் கவிஞர் புதுவகையாக, நவீன வாழ்க்கையின் ஊடாட்டத்தோடு அணுகும் பாங்கு ஆகிய அனைத்தும் கவனம் பெறாமல், பேசப்படாமல் போய் விடும் அவலநிலையும் நீடிக்கிறது.

இந்த ஏசல்கள்,வசைபாடல்களால் சோர்ந்துபோய் தங்களுடைய மொழிரீதியான, வடிவம்சார்ந்த பரிசோதனை முயற்சிகளைக் கைவிட்டுவிடும் இளங் கவிஞர் கள் கணிசமாகவே உண்டு. ‘புரியவில்லைஎன்ற வார்த்தை கவிதையில் மொழி ரீதியான, நடை ரீதியான பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்கிறவர் களை முடக்க, புறமொதுக்க தொடர்ந்த ரீதியில் முன்வைக்கப்பட்டுவரும் [விதண்டா] வாதம். நவீன கவிதையின் உத்திகள், பரிசோதனை முயற்சிகள், நவீன கவிதை களைப் புரிந்துகொள்வதற்கான திறவுகோல்கள் முதலியவை குறித்த அகல்விரி வான, திறந்த மன விவாதங்கள், கருத்தரங்குகள், நூல்கள் இங்கே தொடர்ந்த ரீதியில் அமையவில்லை.

இன்னொரு பக்கம் நவீன கவிதை என்ற பெயரில்கதை சொல்லல்அல்லதுவரிக்கு நான்கு குறியீடுகளைக் குவித்தல், அப்பட்டமான உரைநடையை வரி வரியாக வெட்டித்தந்து கவிதை படைத்தல், மேலோட்டமாக சில நவீனச் சொல் லாடல்களைத் தூவுதல் போன்ற செயல்பாடுகளும் இடம்பெறுகின்றன.

ஒரு காலத்தில் பரிசோதனை முயற்சிகளாக, நவின உத்திகளாக இருந்தவை இன்றைய தமிழ்க்கவிதைகளின் உள்ளார்ந்த அம்சங்களாகிவிட்டன என்று சொல்லப்பட்டாலும் உருவ ரீதியாய், மொழி ரீதியாய்கவித்துவம் நிறைந்தபத்திகவிதைகள்என்ற ஒரு புதுவகையைத் தவிர மற்றபடி தமிழ்க்கவிதை யின் மொழிப் பயன்பாடு சார்ந்து வடிவம் சார்ந்து ஒருவகையான தேக்கநிலை ஏற்பட்டிருக்கிறது என்றே நினைக்கத் தோன்றுகிறது.

இந்தப் பின்னணியில் கவிஞர் நந்தாகுமாரனின் மைனஸ் ஒன் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள மொழிரீதியான பரிசோதனை முயற்சிகள் கவனம் பெறுகின்றன. கணினித்துறையில் பணிபுரிபவர், தனது பணிக்களம், தொழில் நுட்பம் சார்ந்த அறிவு, விவரங்கள், தகவல்கள், அனுபவங்களின் பின்புலத்தில், அந்தத் துறைக்கேயுரிய கலைச்சொற்களைப் பயன்படுத்தி, துறை சார் தகவல் களைக் குறியீடுகளாக்கி வாழ்வனுபவங்களையும் உணர்வுகளையும் கவிதைக ளாக்கியிருப்பதால் இவரது கவிதைகளில் நவீனத்தன்மை மேலோட்டமாக இல்லாமல் வேர்கொள்ள முடிந்திருக்கிறது.

இதுவரையான நவீன தமிழ்க்கவிதையின் போக்குகள், பாடுபொருள்கள், உத்தி கள் ஆகியவற்றை ஆர்வத்தோடு தன் வாசிப்பின் மூலம் பரிச்சயப்படுத்திக் கொண்டு, உள்வாங்கிக்கொண்டு அவற்றிலிருந்து தன் கவிதைகளுக்கான உரு வத்தையும் உள்ளடக்கத்தையும் கவிஞர் தெரிவுசெய்துகொண்டிருப்பதை இந்தத் தொகுப்பில் இடம்பெறும் கவிதைகள் உணர்த்துகின்றன. எடுத்துக்காட்டாக, பிரக்ஞாபூர்வமாக எளிய நடையில் ஒரு கவிதை எழுதி அதற்கு ‘user friendly’ என்று தலைப்பிட்டிருக்கிறார் கவிஞர்!

சில கருப்பொருள்கள் அவற்றின் அளவிலேயே நவீனமானவையாக இருக்கும். ஆனால், பலரும் பல காலமாய் பல்வேறு விதமாய் விவரித்துவிட்ட, விவரித்தபடியுள்ள ஒரு கருப்பொருளை புதுவிதமாய் கவிதையாக்குவது உண்மையிலேயே சவாலான விஷயம். கவிஞர் நந்தாகுமாரனின் மழை குறித்த கவிதை இந்தச் சவாலில் வெற்றியடைந்திருக்கிறது!

மழை கேட்டல்
வழக்கம் போலவே
அது விழுந்ததும்
விமர்சனங்கள் எழுந்தன
அக்கறையில்லாமல் அது
Asbestos Sheet களை
அவசரமாக வாசித்துக்கொண்டே போனது

நீரோடு நீர் மோதும்
குதூகலக் குரல்
ஒளிவடிவங்களாய் விரிந்தது
அடுத்த பாடல்
ஜன்னல் கண்ணாடியில் அரங்கேறியது
அதன் நோக்கமற்ற ஒழுகலின்
உராய்வு ஓசை கேட்க
என் காதுகளைத் தீவிரப்படுத்தினேன்
கடைசித் தீக்குச்சியைப் பற்றவைக்கும்
தீவிரத்தோடு.


கூடலும் கூடல் நிமித்தமும் என்ற தலைப்பிட்ட கவிதை ஆண்-பெண் உடலுறவைப் பற்றிய நயமார்ந்த கவிதை.

ஒரு கவிதை வார்த்தைகள் என்ற தலைப்பின் கீழ் இடம்பெறும் மூன்று கவிதைகளில் நிறைவான கவித்துவம் கொண்ட முதலாவது இது:

தானியங்கி தாலாட்டு பாடும்
எந்திரத் தொட்டிலில்
மிதந்தபடி
கனவில் எழுதப்படும் கவிதையில்
இவன் வேண்டிக்கொள்கிறான்
விடாமல் தலைகோதும்
எந்திரக் கை வேண்டும் என.

கவிதை எண் 00 என்ற தலைப்பிட்ட கவிதையின் கவித்துவம் மிக்க ஆரம்ப வரிகள் இவை:

காற்று ரெண்டு குட்டிக்கரணம் அடித்து
தலைமுடியைக் கலைத்தது.

4 டிகிரி செண்டிகிரேட் என்ற தலைப்பிட்ட கவிதையில் வரும் அருமையான விவரிப்பு:

பாறைக்குள் பறந்துகொண்டிருந்த என்னை
ஒரு புல்லாங்குழல் கண்டுபிடித்தது

ஒளி எரித்த திரை என்ற தலைப்பிட்ட கவிதையின் கவித்துவமும் நவீனத்துவமும் மிக்க இறுதி வரிகள் இவை:

ஜூபிட்டரின் பாதையில் குறுக்கே போனதாக
என் மீது மற்றொரு குற்றச்சாட்டு
எழுந்தது
ப்ளூட்டோவிலும் தான் நிகழ்கிறது பூரண
சூரிய கிரகணம்
கண்ணாடி அணிந்துகொள்ளுங்கள் என்னைப் போல
என்றேன்.

சாக்கடை என்பதும் நீர்நிலை என்ற நாலு வரி குறுங்கவிதை வடிவத்தில் வழக்கமானதே என்றாலும் சாரத்தில் அடர்செறிவானது.

கழுகுகள் ஊறும்
சாக்கடை வானில்
தனித்துத் தவழும்
கருடப் பறந்து

இந்தத் தொகுப்பின் பலமாக நான் கருதுவது கவிஞர் தனக்குப் பரிச்சயமான நவீன உலக கணினி தொழில்நுட்பத்தை, அதன் கலைச்சொற்களைத் தனது கவிதைகளின் விவரிப்புமொழியாக வரித்துக்கொண்டிருப்பது; அங்கிருந்து தனது உவமான உவமேய குறியீடுகளைத் தேர்ந்தெடுத்துக்கொண்டிருப்பது. பலவீன மாக எனக்குப் படுவது இந்தத் தொகுப்பின் கணிசமான அளவு கவிதைகள் கவிஞர் பிரம்மராஜனுடைய கவிதை வடிவை அபப்டியே பிரதியெடுத்திருப்பது போல் தோன்றுவது. நவீன தமிழ்க்கவிதை வெளியில் நுழையும் எவரும் புறக்கணிக்க முடியாத கவியாளுமை பிரம்மராஜன் என்பதில் இருவேறு கருத் துக்கு இடமில்லை. அதே சமயம் அந்தத் தாக்கம் இன்ஸ்பிரேஷன் என்ற அளவைத் தாண்டிவிடலாகாது.

உறுமும் பொழுதுகளில் சர்ரியலிஸம் என்று தலைப்பு மட்டும் நவீனமாக உள்ளடக்கம் சாதாரணமானதாக உள்ள கவிதைகளும் இத்தொகுப்பில் உண்டென்றாலும் இந்த அம்சம் இடம்பெறாத கவிதைத்தொகுப்புகளே இல்லை என்பது தானே உண்மை.

நவீனமான தலைப்புகளைக் கொண்ட கவிதைகள் இடம்பெறும் இந்தத் தொகுப் பில் கோடிட்டுக் காட்டத்தக்க கவிதைகள் கணிசமாகவே இருப்பதால் எனக்கு நிறைவான வாசிப்பனுபவம் கிடைத்தது. அறவுரை(unasked) தரத் தயாராயி ருக்கும் பலரில் ஒருவரோ ஒன்றுக்கு மேற்பட்டவரோ வரும் நாளில் ஒரு நாள் [இது நாள் வரை இல்லையெனில்] கவிஞரை அணுகிபுரியும்படி கவிதை எழுதச் சொல்லிபல்லாயிரக்கணக்கான [?!] கவிதை ஆர்வலர்களின் சார்பில் நைச்சியமாக வற்புறுத்த, மூளைச்சலவை செய்ய, ’புரியும் கவிதை எழுதுவது எப்படிஎன்று பாடம் எடுக்க முயற்சிக்கலாம். கவிஞர் நந்தாகுமாரன் அவற்றால் அலண்டுபோய்விடலாகாது. அதே சமயம், புரிந்துகொள்ள வேண்டும் என்ற உண்மையான அக்கறையோடு கேட்கும் வாசகர்களைப் பொருட்படுத்தாமல் அலட்டிக் கொள்ளவும் கூடாது!





000





மைனஸ் ஒன்
_ 1
நந்தாகுமாரனின் முதல் கவிதைத்தொகுப்பு
[வெளியீடு : உயிர்மை, முதல் பதிப்பு : டிசம்பர் 2012
பக்கங்கள் 112 விலை: ரூ.90



No comments:

Post a Comment