Thursday, January 2, 2014

உம்ராவ்ஜான்



ரிஷியின் கவிதை [முதல் தொகுப்பு அலைமுகம்-இலிருந்து]


உம்ராவ்-ஜான்
[*சமர்ப்பணம்: உம்ராவ்-ஜானுக்கு]

உருண்டிறங்கின ஒன்றிரண்டு.
உள்ளுறைந்ததுலகு.
விரல்களிடை நழுவு நீராய்
அறுபட்டும் உறுத்தும் சிறகு ஞாபகம்.
கரைகளற்ற சிறைவழியே விரையும்
பாவனைப் பயணம்.
திரும்பத் திரும்ப இறக்கும் மறுமுனை.
தேவகானம் பொழிந்த நஞ்சுண்ட கண்டம்.
முட்படல மேலாய்
கள்ளிழைத்த அபிநயங்கள்...
கண் ணொலித்த ஒப்பாரி...
அழகமிர்தம்!
வழியத் தந்தவளின்
ஜ்வாஜல்யங் கடந்து
ஆளரவ மற்றிருந்த ஆன்மக் கீறல்கள்.
அகலா வலி...
சொப்பு பொம்மையாய் சூழ்ந்தவரிடை
இருந்தது இருந்தபடி இடப்பெயற்சி
இடையறாது....
இடையிடையே நேர்ந்த மனங்கள் சில
இராத் தங்க மட்டுமாய்...
மூன் றொன்றாய் ஒன்று மூன்றாய் கண்டவளை
சந்தித்திருக்க வேண்டும்
வசந்தம் அருகிருப்பதாய் சொல்லிச் சென்றவனும்...

கம்பிகள் தெளிவாய்க் கண்ட அந்த
இறுதிப் பிரதிபிம்பம் பெறும்
பிரக்ஞையின் சிரத்சேதம்
காலப் பள்ளத்தாக்கில் எதிரொலித்துக் காததிர்கிறது.

ஆன்மத் தீக்கு  என்றும் உள பொந்துகள்.



No comments:

Post a Comment