Thursday, January 2, 2014

பளிங்கின் கலங்கல்

பளிங்கின் கலங்கல்

ரிஷி

[முதல் தொகுப்பு அலைமுகம்-இலிருந்து]


மாறிய வண்ணமிருக்கும் காட்சிகளில் ஒன்றில்
எனக்கானதை ஆற அமர உள்வாங்கு முன்
அடுத்ததில் அதைத்  தொலைத்து அழுதபடி யிருக்க
இரண்டாவதன் திரை விழுவதற்குள் எட்டாவதன்
பின்னணியிசை அலைக்க
பாத்திரப் பரிதவிப்பிலும் பார்வையாளப் பரிகசிப்பிலும்
அரங்கின் மேசை நாற்காலி முள்ளொடிந்த கடிகாரம்
பிற நானாவித தட்டுமுட்டுப் பண்டங்களி லெங்கும்
ஒட்டியுமெட்டியுமிருக்கு மென்னைத் தொட்டுணர முடிவதில்
துல்லியமாய்க் கொள்ளும் கள்வெறியில் உன்முகம் திரியச்
சூழும் சாராய நெடியில் பெருங்குமட்ட லெடுக்க
விட்டு விடுதலையாகும் போதையில் விண்முட்டுங் கப்பல்
கண்சிமிட்டலில் கரைதட்டப் பட்ட கால் உடைந்தும்
கடையடைக்கலா காது கண் காது
மூக்கும் நாக்கும் நாகாக்கலும் நடிப்பேயாக
யாதுமான ஊரில் கேளிர் யாவரும்
பாப புண்ணியப் பொதியப்பிய முதுகுகளோடு
அப்பப்பா நான் அப்பனல்ல ஆயியுமல்ல
நோயும் பேயும் நினைவும் சொப்பனமுமாக
உப்பளங்களிலெல்லாம் சேகரமாகும் சர்க்கரையில்
இக்கரையக் கரையில் வனையப் படுகையிலேயே
உருமாற்றங் கொளும் சிற்ப தர்மங்கள்
சைத்தான்களாயும் சாட்சாத் தெய்வங்களாயும்
போகவும் வரவும் எங்கே என்று
நின்று கொல்லும் நீர்க்குமிழிகளின்
மார்க்கண்டேயப் பொறுப்பாளி யாரோ என்ன பேரோ
என் உன் நானோ நீயோ அவனோ அவளோ
அதுவோ எதுவோ பொதுவோ தனியோ
இனிசெய் விதியோ சதியோ வென்றறியும் கதியற்று
காலாக்னிப் பிரவாகத்தில் அடித்துக் கொண்டோடும்
நாட்களின் தீரத்தில் நிறமிழந்து சிதையும்
ஏகமாய் உற்ற மதப்பும் மிதப்பும் மதியும்
தொலைதூரம் பதித்திருக்கும் பதைத்திருக்கும் காத்திருப்பு
வாராக் காலங்களுக்காய்
வந்த காலங்களில் நலங்கெடப் புழுதிசேர்
நாதோபாசனத்தில் சிலநேரம் வசமாகும்
ஞானம் போகுமாறில் பகலும் இரவும்
பிரிவும் இணைவும் பிரிவில் இணைவும்
இணைவில் பிரிவும் மாறி மாறி மாறி
ஆள்மாறி பால்மாறி சோமாறி கேப்மாறி
பூமாரி பொன்மாரி காரி ஓரி
பாரியாய் வாரி வாரி வழங்கும் காலம்
பளிங்கின்  சேர் கலங்கலாய்.













No comments:

Post a Comment