Thursday, January 2, 2014

வேண்டுதல்

ரிஷி
[முதல் தொகுப்பான அலைமுகம்-இலிருந்து]
[ந.பிச்சமூர்த்தி நூற்றாண்டு நிறைவு விழாவில் வாசிக்கப்பட்ட கவிதை]



 நடுத்தெருவா யிருந்தாலும் நள்ளிரவா யிருந்தாலும்
கொடுங்கதிரோன் நடுமண்டை பிளந்தாலும் நகராமல்
கடுந்தவமாய் நெடுநேரம் காத்திருந்து பார்த்திருந்து குடங்குடமாய் நீர்சுமந்து பொடிநடையாய் போய்வந்து
தடுக்கித் தடுமாறியவர் தேகநலன் பழுதடைந்து
கலங்கிக் கண்ணுயர்த்திக் கருமேகம் தென்படாது
பலநாளாய் எம்மக்கள் படுந்துன்பம் விடைபெறவே
தடையின்றி விரைவாய்ப் பெய்மழையே, பெருங்கொடையே!
உடைநனைய, உயிர்நனைய, ஊர்வினை யெல்லாம் உன்னால்
மறைந் தொழியட்டும் மிகுதயாபரியே, மழையம்மையே!

துளித்துளியாய் நீ வழியக் களிப்பெய்தும் குழந்தைகள்
குதித்துக் குதூகலிக்கும்.
தம் கறைபடியாக் கையேந்தி கனிவோடே நீ வழங்கும்
கவின்முத்து சேகரிக்கும்!
வெளிப்படையாய் சுழித்தோட மாட்டாத எம்போன்றோர்
கிளர்ந்திருப்போம் நீறுபூத்து.
வரமா யொரு சொல்வேண்டி வாழ்ந்திருக்கும் ஏழைக்கவி
திருமனதில் ஊன்றும் வித்தாய், உன்
அருமை பெருமையெலாம் அறிந்தே அழைக்கின்றோம்
வருவாய் மிகுதயாபரியே, மழையம்மையே!

பளிங்குச் சரமாய் நீ இறங்கக் கிறங்கும் உள்ளம் பல
கிளம்பித் தம் நனவோடையில் மெல்லப் பயணமாகும்.
புனைகதிஅயாய் இறந்துபடும் உறவுமுட்கள் கிழிக்கத் ஹ்டுடித்தெழும் கண்ணீர் உன்னில் இரண்டறத் தோய்ந்துவிடும்.
மனம் வெளுக்கவும் நீயொரு மார்க்கமாவாய் எமக்கு.
முகமறியா சிற்றிதழ் நட்பினர்தம் முழு உருவாய்
அகமெங்கும் பற்றி நின்றாய் ஆன்றதொரு ஒட்டுறவாய்!
முககதுவும் ஏசுவும் முத்துமாரி யம்மனுமாய்த்
திகழும் நீயல்ல்லால் வேறொரு தெய்வமில்லை யாதலினால்
பகற்கனவாகாது பொழிவாய் மிகுதயாபரியே மழையம்மையே!

காதம் பல கடந்திங்கே காரியமாற்ற வருவோரும்
வினைமுடித்த கையோடே வசைபாடுவார் எம்நகரை.
பூக்கடைப் பேருந்தில் வந்திறங்கிய வுடனே “சீச்சீ,
சாக்கடைச் சென்னை” யென்றே தூற்றுவார் எம்நகரை.
கான்கிரீட் வனமென்பார்; காயலான் கடையென்பார்.
வாக்குப் பொய்யானவர்கள் வாழுமிடம் என்றுரைப்பார்.
ஆக்கங்கெட்ட தாக்குதல்கள் ஆயிர மிருந்தாலும்
பார்க்குமிடத்திலெல்லாமான நந்தலாலாப் பசுமையாய்
நீக்கமற என்நெஞ்சில் நிறைந்திட்ட பட்டணத்தை
பாழ்வெளியாக்காது காப்பாய் மிகுதயாபரியே மழையம்மையே!

மடைதிறந்து அடைமழையாய் நீ கருணை சொரியும் நேரம்
குடையாய் விரியட்டும் உன் துளிகள் சில பின்னும் சில
குடிசைகளை கல்லுவீடுகளாக்கட்டும் பின்னும் சில
சாலையோர மாந்தர்க்குப் போர்வை நெய்யட்டும் பின்னும் சில
ஆறாத் தாகங்களை யடங்கச் செய்யட்டும் பின்னும் சில
தின்னச் சோறு தரட்டும் திக்கற்றோர்க்கு பின்னும் சில
உள்வெளி ஊனங்களைப் போக்கட்டும் பின்னும் சில
சொல்லவல்லாச் சோகங்களை மாய்க்கட்டும் பின்னும் சில
கல்லாத கேள்விகளில் வல்லமை சேர்க்கட்டும் பின்னும் சில
காசுபணத் தொல்லைகளைக் கரைத்தொழிக்கட்டும் பின்னும் சில
செய்யட்டும் இன்னும் பல; கையெட்டட்டும் தொடுவான.
மனிதத் தலைகள் மேல் முளைத்த கொம்புகளெல்லாம்
முறிந்துபோகட்டும். நாசமாகட்டும் பாசாங்குகளெல்லாம்.
இன்னும் பல உய்விக்கட்டும் உன்னை என்னை
இம்மண்ணை யெல்லாம்… ஐயோ, நாலும்
எண்ணியெண்ணித் தாளாமல் அனத்தியவா றிருக்கும்
என் மா பிச்சி மனம் கோரும் நாலாகிலும் நனவாக
பாலித்தருள்வாயே மிகுதயாபரியே மழையம்மையே!















No comments:

Post a Comment