Friday, January 3, 2014

மௌனவோலம் ரிஷி [முதல் கவிதைத்தொகுப்பு அலைமுகம்-இலிருந்து]

மௌனவோலம்


ரிஷி
[முதல் கவிதைத்தொகுப்பு அலைமுகம்-இலிருந்து]


வழியெங்கும் சிதறியிருக்கின்றன வாளறுத்த யோனிகள்.
அப்பொழுதே அறுபட்டுக் குருதி பெருக்கி யிருப்பவை.
அனாதி காலந் தொட்டு ஆறாக் காய முற்றவை.
விழிநீரும் உதிரமுமாய் நிலைகுலைக்கும் பாதைகளில்
அடிக்கொன்றாய் மிதிபடும் முறிக்கப்பட்ட முலைகள்.
தெறித்துதிரும் கண்மணிகள் அலைகடலாழம் மூழ்க
துடிக்கத் துடிக்கப் பிடுங்கியெறியப்பட்ட பூந்தொடைகள்-
ஐந்து வயதிற்கும் அறுபதெழுபதுக்கும் இடைப்பட்டவை.
நைந்தழியும் கனவுகளை யெல்லாம் கழுகுகள்
கொத்திக் கொழிக்கும். கழுத்தில்
முடிச்சிட்டு மூச்சிறுக்கி மேளதாளத்துடன் கிழிபடுவன
வலிபொறுத்து விருப்பறுத்து வம்சவிருத்திக் கடன்
கழிக்கும்.
வறுமை யொரு வாளாய் விபச்சாரக் குழி வழிய
தழும்பணிந்த யோனிகள்.
யோனி பிளத்தல் இங்கே வீர விளையாட்டாக
காட்டு மேட்டிலும் கோட்டைக் கொத்தளங்களிலும்
மூலை முடுக்குகளிலும் முச்சந்திகளிலும் காலை
மாலை யெவ்வேளையும்
நாளை நிலாவிலும் நடக்கும்
மூர்க்கத் தாக்குதல்கள் – மீட்பறு வியூகங்கள்.
நாய்க்குதறலில் வேய்ங்குழல்கள் நொறுங்கிப்போக
ஆய கீதமெலாம் ஓயாக் கதற லொன்றே யாக
உள்ளொளி யடங்கிப் போக, ஊர்வாயமிலமாக
கொள் ளெண்ணம் செயல் எல்லாம் பெண்ணை
அந்நியமாக்கும் தன்னிடமிருந்தும்.
காணி நிலம் வேண்டவில்லை. அவள்
யோனியும் அவளுக்கில்லை.
அங்கிங்கெனாதபடி ஆணியறைந் தறைந்து
இந்திரக் கண்களாய் அவள் மேனி நிறையும்
யோனித் துளைகள் – ஈ ஊற, எறும்பூற.
திரைதோறும் தீராப் பகடை யுருளும்.
பிரபுதேவா அடவுகளில் பனிக்குடம் தடம் புரள
கருவறுக்கும் ’தில்லானா தில்லானா’க்கள். மாக்களாய்
பெண்டாலும் சண்டாளர்க்கு
எந்நாளும் புரியாது யோனிப் பரிபாஷைகள்.
வானவில்லாய்ப் பெறும் இன்னுறவை அருகழைத்து
உள்வாங்கிக் குழைந்துருகும் யோனிகளுமுண்டிங்கு.
முள் மலராகும் அந்த மூன்றாம்பிறைப் பொழுதும்
முதுகழுந்தும் சிலுவைகள்….. எங்கும்
தாக்க வாளும் துலாக்கோலுமாய்
பூக்கப் பூக்கப் பூ பொசுங்கும் நாற்றம்
தேக்கித் தேக்கி உயிர்ச்சூழல் பட்டுப்போக.
பண்டு தொட்டு கண்டதுண்டமாகிவிட்ட
யோனி மனம் ஊமை ரணம்;
யோனி நலம் உலக பலம்.




அகமும் புறமும்
ரிஷி
[முதல் தொகுப்பு அலைமுகம்-இலிருந்து]


‘ஹிட்லர்’ இறந்துவிட்ட பிறகும்
நகரும் வதைமுகாம்களில்
ஊன் கருகி யுடலங்களிலிருந்து பிதுங்கி
உயிர் தெறித்து விழுந்த ஐம்பதின் மேற்பட்டோர் தம்
அகில உலகப் பிரதிநிதிகளாய்.
பத்துத் துப்பாக்கிகளும் துக்கிரிகளும் இருந்தால் போதும்
சுத்த மொட்டைத் தலையன்களும்
சர்வாதிகாரியாகிவிட லாகும்.
நாளும் பட்டினியில் இறப்போர் புள்ளிவிவரங்களில்
கூட்டல் கழித்தல் திறம் கைவரப் பெறும்.
உறும் அதிநெருக்க உறவின் செக்குச்சுழற்சி யழிக்கும்
ஆசுவாசம் சாசுவதத்தின்
பேசுமொழியில் புரிபடாதொழியும் பெருங்
குறுங்கதைகள்
உன் என் கண் வழியாது இறுகிக் கிடக்கும்
கணங்களின் வாசப் பூவும் வீசும்
கையெறிகுண்டுகளிலுண்டு
தின்று தீராப் பாவம் ஆதாமும் ஏவாளும்
தத்தமது வழி மேவப் பிறந்திருக்காது
வையகம் போலும் கையகம் நாலிருக்க
நன்னுமோ ஒன்றிரண்டெனும் நம்பிக்கை
வழிநடத்த அக புறங்களி லகப்பட்ட உயிர்
மருளும் இருளும் பகலுமாய்
உருளும் பயணத்தில்
இங்குமங்குமாய் முளைக்கும் சில மயானங்கள்
சிதையிலிருந்து என் கை கிளம்பி
நெருப்பைத் தள்ளிய வாறு
தன்னைக் கிள்ளிப்பார்த்திருக்கும் தானே
யான பிறிதாய் சிறிதாய் பெரிதாய்
ஆட்சிகள் மாறி மாறி அரங்கேற்றும் எதிர்
பார்ப்புகளி லூறி வரும் ஏமாற்றம் என்றும்
அடிபட்டு மிதிபட்டுக் கைப்பற்றிய காசில்
வலிமறந்த கிரிக்கெட் தாகம்
கானல்நீராகும் சூதாட்டத்தில்
பாதாள உலகையும் படம்பிடிக்கும் தனியார்
அலைவரிசைகளில்
சாணம் மணப்பது தலைப்புச் செய்தியாகும்
கொலையுண்டு தேயும் இலங்கைத் தீவில்
பூச்சூடும் நினைப்புண்டாமோ பேதையர்க்கு?
யாதும் ஊர் யாவரும் கேளிரானதில்
அடித்துக்கொல்ல அனுமதி தேவையில்லை
இல்லாரும் இருப்பாரும் மலிந்த உலகில்
யானை வலையில் சிக்கிக் கொள்ள
பூனை எக்கித் தப்பிவிடும்.
ஒப்பித்தல் கலையில் தேர்ச்சி பெற்றால் போதும்
ஓஹோவென்றாகிவிட முடியும்.
படியுமென்றால் படியா நெஞ்சின் வசமாகும்
ஒரு துளி வானம் பூத்திருக்கும்
கனவில் கோணித் தெரியும்
திருமுகம் அரூபமாய்…..




சிதைவொழுங்கு ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

சிதைவொழுங்கு

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்

[முதல் கவிதைத் தொகுப்பு அலைமுகம்-இலிருந்து]


வானவில் ஏழு நிறம்
வான் கோழி கான மயில்
வாயு தென்றல் புயல்
வேகம்
ஆற்று நீரோடுமோடும்
ஆயிரங் கனாக்குமிழ்கள்
‘அப்பா பணத்தை எண்ணக் காணாது
அம்மா புடவையை மடிக்க லாகாது’.
வான் மண் ஏன் என்
னென்னெல்லா மெதிர்
கொண்டோர்
நேற்று இன்று
நாளை மற்றுமொரு நாளே
பெயர் மறந்த முகங்கள்
பெயரே யான முகங்கள்
பிரதிமை சாயை ரூப
அரூப
பின் பின் பின்
புண்ணாக்கு வைக்கோல் காளை மாடு
பசு கன்று தின்று
யாரை யார் என்று
ஏறாதோ வேப்பமரம் வேதாளம்
பாருக்குள்ளே நல்ல நாடு
Nutshellக்குள்
ஷெல்லிசொகம் வசந்தம்
வசம் தம் உம்….
கொள் மனம் கண்டதிஅயும்
கட்டுடைத்து
இல்லையிப்போதாக.



திக்குத்தெரியும் காடுகளும் 
செக்குமாடுகளும்!
     [சமர்ப்பணம்: பிரம்மராஜன் கவிதைகளுக்கு]

ரிஷி
[முதல் தொகுப்பு அலைமுகம் -ல் இடம்பெறுவது]






அத்தனை அக்கறையோடு 
குழந்தையைப் பராமரித்துக்கொண்டிருந்தான் அவன்
காணக் கண்கோடி வேண்டும்!
மழலையின் அழகு அடிநெஞ்சைத் தொட்டது.
அழுந்த மூடியிருந்தன உள்ளங்கைகள்.
விரலிடுக்குகளில் கசிந்தன வானவில்லின் துளிகள்.
அள்ளிக் கொண்டுவந்திருப்பவை வெள்ளிமீன்களாகத்தான் இருக்கும்.
நிறைவமைதி கூடக் கூட நின்றவன்
தோள்கண்டு தோளே கண்டு...

பறைமுழங்க வந்தார்கள் பிள்ளை பிடிப்பவர்கள்.
கத்தி, கபடா, வெட்டரிவாள், வீச்சரிவாள்,
பத்து நூறு கருங்கற்கள், பதினாயிரம் தோட்டாக்கள்
ஒவ்வொரு கோணிக்குள்ளும் பத்திரமாயிருந்தன.
சித்திரம் மட்டுமா கைபழக்கம்...?
குறிபார்த்துப் பின்மண்டையில் எறிந்தார்கள்.
தெரியும், தெறிக்கும் ஒவ்வொரு துளிக்கும்
துளிர்க்கும் தலை நூறு.
இருந்தும், அந்த முகுளப் பகுதி உதிரப்பெருக்கு
கதிகலங்கச் செய்யும்.
கட்டாயம் வலித்திருக்கும் அவனுக்கும்.
காட்டிக்கொள்ளாமல் மந்தமாருதத்தைக் கூட்டிவந்து
குழந்தைக்கு விளையாடத் தந்தான்.

தலைக்கனத்தைப் பார்”, என்று திரும்ப வளைத்தது கூட்டம்.
அண்டப்புளுகன் – ஆணறிவானோ ஈன்றெடுத்தலை?
அறிந்தாலும், அம்மணமாய் நடுவீதியில் பிரசவிக்காமல்
நான்கு சுவர்களின் இருளுக்குள் தாயாகிறவள்
பேயாகத்தான் இருக்கவேண்டும்;
பெற்றெடுத்ததும் குட்டிச்சாத்தான்.

வெட்டிச்சாய்த்திட வேண்டும் வேரோடு.
இருவரையும், இல்லை, ஒருவரையேனும்.
தாயற்ற பிள்ளை தறுதலை;
சேயற்ற சிவம் சவம்.
சங்கு முழக்கு .
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் நடக்கட்டும்.
அத்துவானக் காடு மேய்ப்பனை
மொத்தமாய் முடித்துவிடவும்.
தார்மீக தர்மமெல்லாம் யாருக்கு வேண்டும்?
பேர்பேராய்ச் சொன்னால் ஊர் நம்பித் தீரும்.
கற்ற வித்தையெல்லாம் காட்டிக் கூறும்:
சுற்றுச்சூழல் அவனால் கெட்டுப்போனது.
எட்டிய தொடுவானெல்லாம் எட்டாமலானது.
கட்டிவைக்க வேண்டும் அவனை முச்சந்தியில்.
முட்டிக்கு முட்டி தட்டினால் போதாது.
பட்டப் பகலில் கழுவேற்ற வேண்டும்.
அவன் மடியில் தவழ்ந்திருப்பது மதலையல்ல;
முதலை.
இரு, இரு – முதலை மூச்சுவிடும்.. வேண்டாம்.
பிறிதேதாவது.
புதைத்தால் பிழைத்தெழக் கூடும்...
சிதையேற்றலே உத்தமம்.

சொற்சுள்ளிகளைக் கட்டுகட்டாகக் கிடத்தி
சுண்ணாம்பு சுடுநெருப்பும் தடவி
தினமொரு வண்ணமா உஅவனைத் துன்புறுத்தித்
தொடரும் வன்முறைக் கும்பல்.

கண்ணுங்கருத்துமாய் எணியவாறிருந்தான் அவன்_
இன்னருங் குழவியின் இரண்டொன்றுமூன்றுகளை.
காலக்கடிகாரம் கண்சிமிட்டிக்கொண்டிருந்தது.
பாலுக்கழும் பிள்ளையின் பசிநேரம்
நாளும் மனப்பாடம்.
அன்பின் வழி அன்பே யறியும்...
முன்னிரவில்
சன்னக் குரலில் மென்மையாய் தாலாட்டிக்கொண்டிருந்தான்.
கோலால் நெட்டித்தள்ளியது காலாட்படை.

குழந்தையா இது? எங்கே, தோண்டித் தா விழியை.
குரலைத் தனியாக அறுத்துக் காட்டு”.
_விரல் மிதித்துச் சிரித்தார்கள்;
குதம் மிதித்துக் குதித்தார்கள்.

வாய் திறந்தால் வாயாடி;
வாளாவிருந்தால் வெறும் பேடி...

நாடி நமபெல்லாம் நிரம்புவதை நாடி
சின்ன உயிரின் அசைவுகளை ஒன்றுவிடாமல்
என்றும்போல் பழகிக்கொண்டிருந்தான்
ஆனந்தக்கூத்தாடி!

சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா
சூரிய சந்திரரோ... ஆராரோ, ஆரீரரோ...
ஆரடிப்பாரோ செல்லக்குட்டியை...!

வெல்லக்கட்டியிசை மெல்லத் தொட்டசைக்க
துள்ளிவந்தன புள்ளிமான்கள்!
புல்லர்க்குப் பொறுக்குமோ? கல்லெறிந்தார் மறுபடி மறுபடி.
மருண்டோடின சில. மற்றவை யங்கேயே.
திரும்பத் திரும்ப வலம் வந்தேகியபடி.

பட்சியிறகின் சிற்றிழைக்கும் வக்கிலாக் கூட்டம்
கொக்கரித்தது:
காண் கண், கேள் செவி யெல்லாம்
கட்டிப் போட்டாயிற்று. இனி
நட்டப்பட்டு நலிவுறுவான் இவன்.
கலி தீரும்! பிறகென்ன?
ஆளுக்குப் பிடிமண் அள்ளிப்
போட்டுவிட்டால் போயிற்று”.

கோமாளிக்கும் வாரிசு உண்டு;
கொலையாளிக்கும் வாரிசு உண்டு.
ஊரார் பிள்ளையை ஆட்டிவதைத்தால்
தன் பிள்ளை ஆன்றோனாகும்!
பழமொழியில் புதுமை பழகுவது மரபு....

தந்தைக்கும் குழந்தைக்கும் இடையேயான
இரும்புப்பூம் பாலத்தின் கனபரிமாணம்
தொப்புள்கொடி தாண்டி
நீலவான் அம்மா அப்பா புடவை பணமாக _
புளிக்கும் பழம்.
உடைத்துவிடல் எளிதெனக்
கடைவிரித்துக் காத்திருப்பார்
கயமை கிலோ என்ன விலை?
_வலித்தழும் கிள்ளை.
வாய்விட்டுச் சிரிக்கும் பிள்ளை!
உன் தலை!


Thursday, January 2, 2014

ஆனந்த நடனம் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

ஆனந்த நடனம்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

[சமர்ப்பணம் : வீனஸ் வில்லியம்ஸ்க்கு]
முதல் தொகுப்பிலிருந்து (அலைமுகம்)



ஒயிலார்ந்த ஒட்டகக் கங்காரு முயல் தன்
மயில்தோகையை விரித்தாடி விண்ணுயர்ந்த வண்ணம்
உன் நெஞ்சுணர்ந்த வெற்றிக்கணம் விரிபுன்
சிரிப்பில் அழகின் இலக்கணம் துலங்க
அன்று பிறந்ததாய் விகசித்த துலகம் கலகங்கள்
விலக சுமைதாங்கிக் கல் இனங்கண்ட
அமைதியுள் ளூற அவாவிய வாகையொரு
வலிநிவாரணமா யடுத்துப் பிறந்தாளைத் தடுத்துப்
பெற்ற வெற்றிச் சோக ரோகம் அகல
எத்தனை சிரித்தாய் ஏகமாய் ஆகிய
காலமும் மேலுமுன் கருப்பினம் நித்தம்
பெற்ற, பெறும் கசையடிகளுக்கு உற்ற களிம்பாய்
அற நேரமானாலும் உன்னரும் களி
உளி தோயா உன்னதச் சிற்பமாக
வலைப்பின்னல் மட்டைக்கும் வண்ணப்பந்துக்குமிடைப்
பட்ட பாதை நீ வளைந்தோடிய வேளை
கண்ணுறுத்த மறந்த குட்டைச்சட்டை மீறிய
கால்களில் மான்களின் காலாதீதம் தெரிய
ஆனமுட்டும் தேனொழுகிய மேனி துளிர்த்தோடிய
விலை யறு கலை யுரு வியர்வைக் கிளிஞ்சல்களை
கத்துங் கடலேறிப் பறந்துவந்த நான்
அள்ளிச்சேர்த்த விதம் அறியமாட்டா யாம்
கட்டாயம் சொல்லவேண்டும் வந்தனமுனக் கொரு
உயிர்த்துளி நல்கியருளி யிந்த முட்டாள்
பெட்டியில் கட்டிய திரிசங்கு சொர்க்கத்திற்கு.





0


உம்ராவ்ஜான்



ரிஷியின் கவிதை [முதல் தொகுப்பு அலைமுகம்-இலிருந்து]


உம்ராவ்-ஜான்
[*சமர்ப்பணம்: உம்ராவ்-ஜானுக்கு]

உருண்டிறங்கின ஒன்றிரண்டு.
உள்ளுறைந்ததுலகு.
விரல்களிடை நழுவு நீராய்
அறுபட்டும் உறுத்தும் சிறகு ஞாபகம்.
கரைகளற்ற சிறைவழியே விரையும்
பாவனைப் பயணம்.
திரும்பத் திரும்ப இறக்கும் மறுமுனை.
தேவகானம் பொழிந்த நஞ்சுண்ட கண்டம்.
முட்படல மேலாய்
கள்ளிழைத்த அபிநயங்கள்...
கண் ணொலித்த ஒப்பாரி...
அழகமிர்தம்!
வழியத் தந்தவளின்
ஜ்வாஜல்யங் கடந்து
ஆளரவ மற்றிருந்த ஆன்மக் கீறல்கள்.
அகலா வலி...
சொப்பு பொம்மையாய் சூழ்ந்தவரிடை
இருந்தது இருந்தபடி இடப்பெயற்சி
இடையறாது....
இடையிடையே நேர்ந்த மனங்கள் சில
இராத் தங்க மட்டுமாய்...
மூன் றொன்றாய் ஒன்று மூன்றாய் கண்டவளை
சந்தித்திருக்க வேண்டும்
வசந்தம் அருகிருப்பதாய் சொல்லிச் சென்றவனும்...

கம்பிகள் தெளிவாய்க் கண்ட அந்த
இறுதிப் பிரதிபிம்பம் பெறும்
பிரக்ஞையின் சிரத்சேதம்
காலப் பள்ளத்தாக்கில் எதிரொலித்துக் காததிர்கிறது.

ஆன்மத் தீக்கு  என்றும் உள பொந்துகள்.