Wednesday, May 22, 2013


குழந்தைகளின் கல்விபெறும் உரிமை
மதிக்கப்படுகிறதா? மீறப்படுகிறதா?

ASER [Annual Status Of Education Report] 2012] வருடாந்தர கல்விநிலை ஆய்வறிக்கை தமிழ்நாடு நிலவரம் சென்னை, மியூஸிக் அகாதெமியில் 8.02.2013 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பெறப்பட்ட தகவல்கள்

 _லதா ராமகிருஷ்ணன்

*15 Apr, 2013 தேதியிட்ட திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ளது.



ஆரம்பக் கல்வி என்பது ஒருவருடைய வாழ்க்கையில் நிலைத்த தாக்கம் ஏற்படுத்தக்கூடியது. கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி எட்டாம் வகுப்பு வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைக்கச்செய்ய வேண் டியது அரசின் கடமை என்று வகுத்துரைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நடை முறையில் இது எத்தனையளவு சாத்தியமாகியிருக்கிறது? இலவசக் கல்வி, கட்டாயக் கல்வி மூலம் அடித்தட்டு வர்க்கக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தை கள், குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ளவர்களின் கல்வித்தரம் உயர்ந்திருக் கிறதா? இல்லையா? தாய்மொழியின் மாண்பு, தாய்மொழி வழிக்கல்வியின் தேவை ஆகியவை குறித்து மேடையில் முழங்கினால் மட்டும் போதாது. உண்மையிலேயே இன்றைய குழந்தைகள் தாய்மொழித் தேர்ச்சி பெற கல்விக் கூடங்கள் எந்த அளவுக்குத் துணைசெய்கின்றன, என்பன போன்ற விஷயங் களை அலசியாராயவும், மதிப்பாய்வு செய்யவும், கல்வி கற்பித்தலில் நிலவும் குறைபாடுகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், பரவ லாக்கவும் ப்ரதம் [Pratham] என்ற அரசு சாரா அமைப்பின் முன்முயற்சியின் பயனாய் கடந்த 2005-ம் ஆண்டு முதல் இந்தியா முழுவதிலுமுள்ள கிராமப்   புறப் பகுதிகளில் ‘அஸெர்சுற்றாய்வு மேற் கொள்ளப்பட்டுவருகிறது. ஐந்தாம் வகுப்பு மாணாக்கர்களில் இரண்டாம் வகுப்புப் பாடநூல்களைக்கூட படிக்க இயலாதவர்கள் இருக்கிறார்கள், தமிழ்மொழியின் எழுத்துகளைக்கூட அடை யாளங்காண முடியாதவர்களாய் பக்கம் பக்கமாக மிகுந்த பிரயத்தனத்துடன் எப்படியோ மனப்பாடம் செய்து ஒப்பேற்றிவருவதும், இந்த மாணாக்கர்கள் ஆசிரியர்களாலும், பள்ளி நிர்வாகத்தாலும் கல்வி சார் அனைத்துவிதமான செயல்பாடுகளிலும் ஒதுக்கப்பட்டுவரும் நிலையே நிலவி வருவதும் ASER சுற்றாய்வின் மூலம் தெரியவந்தபோது, பொறுப்பிலுள்ளவர்கள் அஸெர் ஆய்வறிக்கையைப் பொருட்படுத்தாமலிருக்கவே முயன்றனர். அஸெர் ஆய்வு முறையில் குறைகாணவே முயன்றனர். ஆனால், அஸெர் குழுவினர் கருமமே கண்ணாய் இந்தச் சுற்றாய்வை வருடாவருடம் மேற்கொண்டு வருவதும், மிகவும் வெளிப்படையாய் தங்களுடைய ஆய்வுமுறைகளையும், முடிவுக ளையும், அவை சார்ந்த உரையாடல்களையும் நடத்திவரும் காரணத்தால் இன்று நாடெங்கும் அஸெர் ஆய்வறிக்கை மீதான கவனம் அதிகரித்துவருகிறது.

கல்விபெறும் உரிமைச் சட்டம் எட்டாம் வகுப்பு வரை குழந்தைகள் கல்வி பெறு வதை அவர்களுடைய அடிப்படை உரிமைகளில் ஒன்றாக நிறுவி யுள்ளது. ஆனால், இது நடைமுறையில் எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டு வருகிறது? பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினராகத் திகழும் அடித்தட்டு மக்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைத்துவருகிறதா? இந்த விவரங்களைத் திரட்டி, பரவலாக்கி சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத் துடன் அஸெர் சுற்றாய்வு வருடாவருடம் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

வருடாவருடம் பள்ளிகளில் சேர்க்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறதா அல்லது குறைந்துகொண்டுவருகிறதா, பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்க விரும்பு கிறார்களா, அரசுப்பள்ளிகளில் சேர்க்கவிரும்புகிறார்களா, ஆங்கிலமொழி, தமிழ்மொழி, கணிதம் ஆகிய பாடங்களில் 5-16 வயதுப் பிரிவுகளில் மாணாக் ககர்களின் தேர்ச்சியும் பயிற்சியும் எப்படி உள்ளது, அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் எவ்வாறு உள்ளன, குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான விதிமுறைகள் சரிவரப் பின்பற்றப்பட்டு வருகின் றனவா போன்ற விவரங்கள் இந்தச் சுற்றாய்வின் மூலம் திரட்டப்படுகின்றன. இந்தியாவின் மாநிலங்கள் அனைத்திலும் தனித்தனியாக பெரிய அளவில் வருடாவருடம் நடத்தப்பட்டுவரும் சுற்றாய்வுகளில் இதுவும் ஒன்று.

இதை நடத்துவதில் ‘ப்ரதம் என்ற தன்னார்வ அமைப்பு முக்கியப் பங்கு வகித்துவருகிறது. 1994-ம் ஆண்டு மும்பை குடிசைப்பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கத் தொடங்கியது இந்த அமைப்பு. ஆரம்பித்த ஒரு வருடத்திற்குள்ளாகவே அவர்கள் நடத்திவந்த 150 பால்வாடிகள் 2000 அ அக உயர்ந்தன. விரைவிலேயே பள்ளிக்குச் சென்று கல்விகற்காத குழந்தை கள் ஒருவகையென்றால் இன்னொரு வகை ‘கண்ணுக்குப் புலனாகாதகல்வித் தேவை அந்தக் குழந்தைகள் மத்தியில் இடம்பெற்றிருப்பதை அவர் களால் உணர முடிந்தது. அதாவது, பள்ளிக்குச் சென்றும் பல்வேறு காரணங் களால், சூழல்களால், கற்பித்தல் சார் குறைபாடுகளால், கல்வித் திட்டத்தி லுள்ள குறைபாடுகளால் கற்கவியலாத நிலையில் உள்ள குழந்தைகள். எனவே, 2002-ல் ப்ரதம் அமைப்பு மேற்குறிப்பிட்ட வயதுப்பிரிவுகளைச் சேர்ந்த பள்ளி செல்லும் குழந்தைகள் மொழிப்பாடங்களிலும், கணிதப்பாடத்திலும் பெற்றிருக்கும் பயிற் சியை  சில எளிய, சுயமாக உருவாக்கப்பட்ட  கற்றல் சார் உபகரணங்களின் மூலம் கண்டறியும் முயற்சியை மேற்கொள்ளத் தீர்மானித் தது.

அஸெர் மற்றும் தரமான கல்வி அனைத்துப்பிரிவுக் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற ஒத்தநோக்குடைய வேறு சில தன்னார்வ அமைப்பு கள் ஒன்றிணைந்து இந்திய மாநிலங்களின் பல்வேறு மாவட்டங்களுக்குத் தங்கள் ஆய்வுக்குழுவை அனுப்பி அங்குள்ள கிராமங்களில் இருக்கும் ‘பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளைஅணுகி அவர்களோடு நட்பு முறையில் பேசி அவர்களைத் தங்களுடைய சுற்றய்வில் பங்கேற்கச் செய்து அதன்மூலம் அந்த மாணாக்கர்களின் கல்வி சார் தேர்ச்சிக்குறைபாடுகளையும், தேவைக ளையும் அறிந்துகொண்டுவருகிறார்கள். பின், அவற்றைக் களையத் தேவை யான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். பள்ளிகளுக்குச் சென்று இந்த சுற்றாய்வு மேற்கொள்ளப்படுவதில்லை. காரணம், பள்ளிகள் தங்களிடமுள்ள மாணாக்கர்க ளில் நன்றாகக் கற்பவர்களையே இத்தகைய ஆய்வுகளுக்கு அனுப்பித் தருவது வழக்கமாக உள்ளது. எனவே, பள்ளிகளில் நிலவும் உண்மையான கல்வித் தரத்தை, கற்றல்-கற்பித்தல் சார் தேவைகளை அறிந்து கொள்ள முடிவதில்லை.

2005-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடம் தேசிய அளவிலும், பல்வேறு மாநிலங்களின் அளவிலும் இந்த அஸெர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முடி வுகள் வெளியிடப்பட்டுவருகின்றன.

இந்த வருடம், பிப்ரவரி 8-ம் தேதி தமிழ்நாட்டைப் பொறுத்தவரையான 2012-ம் ஆண்டுக்கான அஸெர் சுற்றாய்வின் முடிவுகள் சென்னை மியூசிக் அகாதெமி வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வெளியிடப்பட்டன. தரமான கல்வி குழந்தைகளுக்குக் கிடைக்கவேண்டும், மாநிலத்தின் கல்வித்தரம் உயர வேண்டும் என்பதில் அக்கறையுள்ள, அதைநோக்கி அர்ப்பணிப்புடன் செயல் பட்டுவருகின்ற கல்வியாளர்கள், சேவை அமைப்புகள், சமூகப் பணியாளர்கள், அறிஞர்கள் அச்சு ஊடகம், ஒளி-ஒலி ஊடகங்களைச் சேர்ந்தவர்கள், பத்திரிகை யாளர்கள், சமூகப்பிரக்ஞை மிக்க வெகுமக்கள் ஆகியோர் இதில் பங்கேற் றனர்.
  
சிறந்த கல்வியாளரும் தன்னளவில் முன்மாதிரி ஆசிரியராகவும், தலைமை யாசிரியராகவும் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் திறம்படப் பணியாற்றி யவருமான, தரமான கல்விக்கான தேவையை, தரமான கல்வி  சமூகத்தின் நலிந்த பிரிவினருக்குக் கிடைக்கவேண்டிய தேவையை வலியுறுத்தி தொடர்ந்து எழுதி வருபவருமான திரு.எஸ்.எஸ்.ராஜகோபாலன் [இவருடைய சகோதரர் திரு எஸ்.எஸ். கண்ணனும் அவருடைய துணைவியாரும் பார்வை யற்ற மாணவர்களின் கல்விக்காக அரும்பணியாற்றியவர்கள்], எய்ட் இண் டியா என்ற அமைப்பின் தலைவரும் முன்னாள் மணோன்மணீயம் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான வசந்திதேவி அவர்கள், பத்திரிகை யாளரும் அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவருமான பரீக்‌ஷா ஞாநி, ‘தி ஹிந்துநாளிதழின் ஆசிரியரும், இருபதாண்டுகளுக்கும் மேலாக பொருளாதாரவியலைக் கற்பித்துவருபவ ரும் அது குறித்து பல எழுத்தாக்கங்களை வெளியிட்டிருப்பவருமான திரு.சித்தார்த் வரதராஜன், பீப்பிள்ஸ் வாட்ச் என்ற மனித உரிமை அமைப்பின் செயலாண்மைத் தலைவ ரான ஹென்றி டிபாக்னே [Mr.Henry Tipagne], எய்ட் இண்டியா அமைப்பின் தலைமை செயலாண்மைத் தலைவரும், செயலருமான திரு.பாலாஜி சம்பத், இந்த அமைப்பின் இணைச் செயலரான திரு. ரவிசங்கர் உட்பட பலர் இந்தக் கூட்டத் தில் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.

தரமான கல்விக்கான தேவையையும் நடப்பில் அது குறித்த கவனமும் அக்க றையும் கிடப்பில் போடப்பட்டிருப்பதையும் குறித்து உரையாற்றிய கல்வி யாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன், பல வருடங்களுக்கு முன்பு தான் ஒரு குக்கிராமத்தில் ஆசிரியராகப் பணியாற்றிவந்த காலத்தில் முறையாகப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் குறைவாகவே இருந்ததையும், மாணாக்கர்களில் பெரும்பாலோர் முதன்முறையாக பள்ளிக்கு வரும் தலைமுறையினராக இருந்ததையும் நினைவுகூர்ந்து அதையெல்லாம் மீறி அப்போது கல்வி தரமாக அமைந்திருந்த தன்மையை, ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு மனோபாவத்தோடு பணியாற்றிய தன்மையை எடுத்துரைத்தார். ஆனால் இன்று பள்ளிக்கூடங் களில் முறையாகப் பயிற்சிபெற்ற ஆசிரியர்களே பணியிலமர்த்தப்படுகிறார் கள். பள்ளிகளில் மேம்பட்ட உள்கட்டமைப்புவசதிகள் இடம்பெற்றிருக்கின் றன். இருந்தும் மாணாக்கர்களின் கற்றல்-திறன்  மேம்படவில்லை என்று வருத்தத்துடன் கருத்துரைத்த திரு. ராஜகோபாலன் இதற்காக மாணாக்கர் களைக் குறைகூறுவது சரியல்ல என்றார். ஒர் நியாய விலைக் கடை சரியாக இயங்கவில்லையென்றால் நாம் முனைப்பாகப் போராடுவதைச் சுட்டிக்காட் டிய திரு.ராஜகோபாலன் அதுபோலவே கல்வித்தரம் சரியாக இல்லாத போதும், பள்ளிகள் குழந்தைகளுக்கு, அதுவும்  நலிந்தபிரிவுகளைச் சேர்ந்த குழந்தை களுக்குக் கல்வி கற்பிப்பதில் முறையாக இயங்காதபோதும் அதை எதிர்த்துப் போராட வேண்டியதும் ஒட்டுமொத்த சமூகத்தின் கூட்டுப் பொறுப் பாகும் என்று வலியுறுத்திக்கூறினார்.

அஸெர் ஆய்வறிக்கை போன்று சுயமாக, சமூகப்பிரக்ஞையுள்ளவர்களால் மேற்கொள்ளப்படும் ஆய்வின் வழியாகப் பெறப்படும் முடிவுகளை கவனத் தில் எடுத்துக்கொள்ளவும், அவை தொடர்பான அத்தியாவசிய நடவடிக்கை களை, மாற்றுவழிகளை காலந்தாழ்த்தாமல், மேற்கொள்ளவும் மத்திய மாநில அரசுகள் முன்வரவேண்டும் என்று எடுத்துக்கூறிய அவர் இத்தகைய ஆய்வு கள் அரசு சார்பில் மேற்கொள்ளப்படும்போது அவை பெரும்பாலும் உண்மை நிலையை பிரதிபலிப்பதில்லை என்பதையும் தகுந்த ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டினார்.  அஸெர் ஆய்வு போன்று சுயமாக சமூக அக்கறையுடன் மேற் கொள்ளப்படும் ஆய்வுகளை அரசுகள் தங்களுக்கு எதிரான நடவடிக்கை களாய் பாவிக்கத் தேவையில்லை என்றும், மாறாக, அரசுப்பணிகள் சிறக்கச் செய்ய உதவிபுரிவதாய் அவற்றை பாவித்து, உரிய அளவாய் கவனத்தில் எடுத்துக் கொண்டு ஊக்குவிக்கவேண்டும் என்றும், அவற்றின் அடிப்படையில் தேவைப் படும் மாற்றங்களைக் கல்வித்துறையில் செயல்படுத்தவேண்டும் என்றும், அப்பொழுது தான் ‘மக்கள் நல அரசுஎன்ற சொற்றொடர் அர்த்தம்செறிந்ததாக அமையும் என்றும் கருத்துரைத்தார்.

மேலும், எப்பொழுதெல்லாம் அரசு மாறுகிறதோ அப்பொழுதெல்லாம் அதற்கு முந்தைய அரசு கொண்டுவந்த நல்ல செயல்திட்டங்கள் கூட கிடப்பில் போடப் பட்டுவிடுகின்றன என்பதை சுட்டிக்காட்டிய திரு.ராஜகோபாலன், இந்த அணுகு முறை தவறு என்றார். அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் போதுமான அளவு இருப்பதில்லை என்று குறிப்பிட்ட திரு.ராஜகோபாலன் மாவட்ட கல்வி அதிகாரிகள் போதுமான எண்ணிக்கை யில் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார். அஸெர் அறிக்கை போன்ற முன் முயற்சிகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசுகள் ஒரு கண்காணிப்புக்குழுவை அமைக்கவேண்டியது அவசியம் என்று குறிப்பிட்ட அவர் பள்ளிகளில் முறையான முன்னறிவிப்போடு மேற்கொள்ளப் படும் ஒரு ‘இன்ஸ்பெக்‌ஷனுக்கு மூன்று திடீரென்று முன்னறிவிப்பின்றி மேற்கொள்ளப்படும் இன்ஸ்பெக்‌ஷனுக்கு வழிவகுக்கப்பட்டிருக்கிறது  என்றா லும்  இந்த நடைமுறை பின்பற்றப்படுவதேயில்லை என்பதையும் சுட்டிக் காட்டிய அவர், அரசுகள் மனது வைத்தால்,அதிகாரத்திலுள்ளவர்கள் மனது வைத்தால் கட்டாயம் கல்வித்தரத்தை மேம்படுத்த முடியும் என்று எடுத்து ரைத்தார்.


முனைவர் வசந்திதேவி தன்னுடைய உரையில் தனிநபரையும், சமூகத்தை யும் மேம்படுத்துவதில் கல்விக்குள்ள முக்கியப்பங்கை வலியுறுத்திப் பேசி னார். அதிலும் ஆரம்பக்கல்வியின் மேலதிக முக்கியத்துவம் இன்னும் அதிகம் என்று குறிப்பிட்டவர் ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை ஆரம்பக் கல்வி யின் தரம் மிகவும் அவலமான நிலையில் இருப்பதாக அஸெர் சுற்றாய் விலிருந்து தெரிய வருவதாக வருத்தத்துடன் சுட்டிக்காட்டினார். தமிழகத்தில் இலவசக் கட்டாயக் கல்வி அரசுப்பள்ளிகளில் தரப்படும்போதிலும் அதிகதிக மான எண்ணிக்கையில் குழந்தைகள் தனியார் கல்வி நிறுவனங்களிலேயே சேர்க்கப்படுகின்றனர் என்ற நடப்புண்மையைச் சுட்டிக்காட்டிய வசந்திதேவி எதனால் இந்த நிலை என்ர கேள்வியை எழுப்பினார். தனியார் பள்ளிகளில் அளிக்கப்படும் கல்வியின் தரம் உயர்ந்ததாக இருப்பதாக ஒரு பிரமை மக்கள் மத்தியில் நிலவுவதாகவும் ஆனால், அஸெர் ஆய்வறிக்கை-2012 அது வெறும் பிரமையே என்பதைப் புலப்படுத்துவதாகவும் தெரிவித்தார். தனியார் பள்ளி களில் ஆங்கிலம் பயிற்றுமொழியாக இருத்தல் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை அதிகப் பணத்தைச் செலவழித்துச் சேர்ப்பதற்குரிய முக்கிய மான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது என்று சுட்டிக்காட்டியவர் அந்தப் பள்ளிகளில் சேர்த்தால் தங்களுடைய குழந்தைகளால் நன்றாக ஆங்கிலம் பேச முடியும் என்ற நினைப்பே பெற்றோர் களைத் தூண்டுவதாகவும், ஆனால், நடப்பில் பெரும்பாலான ஆங்கில வழிக் கல்வி தரும் பள்ளிகளில், குறிப்பாக கிராமப்புறப்பகுதிகளில் அமைந்துள்ள ஆங்கிலப் பள்ளிகளில் முறையான ஆங்கிலப் பயிற்சியோ, தேர்ச்சியோ இல்லாதவர்களே ஆசிரியர்களாகப் பணி புரிந்துவருகின்றனர் என்ற உண்மையை எடுத்துரைத்தார்.

ட்யூஷன்என்பது நம் கல்வியை, சமுதாயதைப் பீடித்துள்ள பெரும்பிணி என்று சுட்டிக்காட்டிய வசந்திதேவி அவர்கள் ட்யூஷன் வகுப்புகளில் சேரும் படி மாணாக்கர்கள் பலவழிகளிலும் கட்டாயப்படுத்தப்படுவதையும், ட்யூஷன் வகுப்பு என்ற பெயரில் அலைக்கழிக்கப்படுவதையும் எடுத்துரைத்தார்.

பள்ளிக்கட்டணமே எக்கச்சக்கமாக இருக்கும் நிலையில்அதோடுகூட தனியார் பள்ளிகளில் படித்துவரும் குழந்தைகள் ட்யூஷன் வகுப்புகள் என்ற பெயரிலும் கூடுதலாகக் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கிறது. அஸெர் ஆய்வறிக்கை 2012-ன்படி அரசுப்பள்ளி மாணாக்கர்களில் 15.7% பேரும், தனியார் பள்ளி மாணவர்களில் 26.7% பேரும் ட்யூஷன் வகுப்புகளுக்குச் செல்கின்றனர். ஆனால், அப்படிச் செல்லும் மாணாக்கர்கள் [முக்கியமாக, தனியார் பள்ளி மாணாக்கர்கள்] ட்யூஷன் வகுப்புகளால் மிகவும் குறைந்த அளவாகவே பயன் பெறுகிறார்கள் என்பதையே அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

குழந்தைகள் கல்விபெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வகுத்துரைக்கப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றுவதில் அகிலஇந்தியஅளவில் பிற மாநிலங்களை விட தமிழ்நாடு எத்தனையோ மேலாகத் திகழ்கிறது. அதுவும் 2012க்குப் பிறகு இந்த நிலை தொடர்ந்து மேம்பட்டுவருகிறது. என்றாலும், கல்வித்திறனாற் றல்களைப் பெறுவதில் நாட்டின் வளர்ந்த மாநிலங்களின் சராசரி யளவைக் காட்டிலும் அதிகஅளவு பின் தங்கியிருக்கிறது தமிழகம் என்பதையும் எண் ணிப்பார்க்க வேண்டியது அவசியம் என்று சுட்டிக்காட்டினார் வசந்திதேவி.

அரசின் அதிகாரத்திற்குக் கீழே இல்லாமல்சுயமாகச் செயல்படக்கூடிய உரிமை பெற்ற பள்ளி மேலாண்மைக் குழு ஒன்று அரசுப் பள்ளிகள் ஒவ்வொன்றிலும் அமைக்கப்படவேண்டிய தேவையை எடுத்துரைத்த அவர் அஸெர் கல்வி யாய் வில் பங்கேற்ற அனைத்து அமைப்புகளின் சார்பாகவும் இதற்கான விழிப்பு ணர்வுப் பிரச்சார இயக்கம் விரைவில் கொண்டுவரப்படும் என்று தெரிவித்தார்.


பத்திரிகையாளரும் சமூகப்போராளியுமான திரு ஞாநி பள்ளிகளின் கல்வித் தரம் பற்றிப் பேசும்போது ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் பற்றியே நாம் அதி கம் பேச வேண்டிய ஆராய வேண்டிய தேவையிருக்கிறது என்று சுட்டிக்காட்டி னார்.அஸெர் சுற்றாய்வு இந்த உண்மையைக் கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார். பள்ளிக் குழந்தைகளிடம் அஸெர் சுற்றாய்வு மேற்கொள்ளப்படும்போது ஓரிரு கேள்விகள் அவர்களு டைய ஆசிரியர்களைப் பற்றியதாகவும் இடம்பெறவேண்டியது அவசியம் என்றார் ஞாநி. கல்வி வணிகமயப்படுத்தப்பட்டுள்ள நிலையும் ஆசிரியர்களின் பங்காற்றலும் நம்முடைய ஆய்வலசலுக்கும் கூர்கவனிப்பிற்கும் உட்படுத்தப் படவேண்டியது மிகவும் முக்கியம் என்பதை பல்வேறு ஆதாரங்களை முன் வைத்து எடுத்துரைத்தார் அவர். மேலும், அர்ப்பணிப்பு மனம் கொண்ட, கடுமை யாக உழைக்கும் ஆசிரியர்கள் இருந்தாலும்கூட பொறுப்பேற்புடைமையும், பதிலளிக்கும் கடமையும் அவர்களுக்குக் கட்டாயமாக்கப்பட வேண்டியது இன்றியமையாதது என்று குறிப்பிட்டார். 

சரியான முன்னுதாரணங்கள் இல் லாத நிலைகாரணமாக இன்றைய குழந் தைகள் பெரும்பாலும் சின்னத் திரை, பெரிய திரை மனிதர்களையே தாங்கள் பின்பற்றத் தகுந்த ஆளுமைகளாக பாவிக்கும் அவலநிலை. சின்னதிரையும், பெரிய திரையும் முன்வைக்கும் கதா நாயக, கதாநாயகி பிம்பங்கள் எத்தகை யவை? கட்டுப்பாடற்ற வாழ்க்கையும், அறவே வாழ்வுமதிப்புகளற்ற போக்கும், வன்முறையும் அன்னபிறவுமேஇன்று வாழும்வழியாக உருவேற்றப்பட்டு வருகின்றன. எனவே, பள்ளிக்கல்வி சீர் திருத்தம் என்பதில் நாம் இவைய னைத்தையும் உள்ளடக்கிய முழுமையான தீர்வு ஒன்றை நாடவேண்டிய, வகுக்கவேண்டிய அவசியம் உள்ளது என்று கூறினார் திரு. ஞாநி.



திரு. சித்தார்த் வரதராஜன், தி ஹிந்து நாளிதழின் பொறுப்பாசிரியர், தன்னு டைய உரையில் சமூகத்தின் அடித்தட்டு மனிதர்களுக்கு அளிக்கப்படுவரும் கல்வி தரமானதாக இருப்பதை உறுதிப்படுத்த நாடுதழுவிய அளவில் அரசுகள் தவறிவிட்ட அவலநிலையை அஸெர் ஆய்வறிக்கை அழுத்தமாகப் புலப்படுத் துவதாகக் குறிப்பிட்டார். இந்தப் பிரச்னையின் தீவிரத்தை நாம் புறக்கணித்து விடலாகாது என்றும், உடனே உரிய நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட வேண்டும் நெறும் வலியுறுத்தினார் அவர். பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதி களைப் பொறுத்தவரை 20 வருடங்களுக்கு முன்பிருந்த நிலையை விட இன்று பன்மடங்கு முன்னேறியிருக்கிறோம் என்றாலும் இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம் என்பதை நாம் மறக்கலாகாது என்று குறிப்பிட்ட அவர், உள்கட்டமைப்புவசதிகள் முன்னேறியிருந்தாலும் குழந்தைகளுக்கு அளிக்கப் படும் கல்வியின் தரம்  ,இகவும் தாழ்ந்துபோயிருக்கிறது என்று சுட்டிக்காட்டிய திரு. சித்தார்த் வாதராஜன், எதனால் இந்நிலை என்ற கேள்வியை எழுப்பினார். ஆசிரியப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும், கல் விப்பணியில் தொடர்புடைய மற்ற அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும்  என்ன வகையான பயிற்சியும், ஊக்கு விப்பும், அளிக்கப்பட்டுவருகிறது என்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையை சுட்டிக்காட்டினார். ஆசிரியர்களின் கற்பித்தல் சார் தேர்ச்சி, பயிற்சி, குழந்தைகளை அவர்கள் நடத் தும் விதம், அவர்களுடைய மனப்போக்கு, அர்ப்பணிப்பு என பலவும் ஆழ்ந்த பரி சீலனைக்குட்படுத்தப்படவேண்டியது இன்றியமையாத ஒன்றாகும் என்றும் வலியுறுத்திக்கூறினார் அவர். அஸெர் ஆய்வறிக்கையும் அதில் இடம்பெற் றுள்ள தகவல்களும் அகல்விரிவா னவை என்று குறிப்பிட்ட அவர் இந்த அறிக் கையின் முடிவுகளை அரசுகள் பொருட்படுத்தவில்லையானால் நலிந்த பிரிவுக் குழந்தைகளுக்குத் தரமான கல்வி வழங்குவதில் அரசுகளுக்கு உண் மையான அக்கறை இல்லை என்றாகிவிடும் என்று சுட்டிக்காட்டினார்.


பீப்பிள்ஸ் வாட்ச் என்ற மனிதஉரிமைப் பாதுகாப்பு அமைப்பின் செயலாண் மைத் தலைவரான திரு.ஹென்றி டிபாக்னே [Mr.Henry Tiphagne], அஸெர் ஆய் வில் பங்கேற்ற 630 தன்னார்வத் தொண்டர்களுக்குத் தன் மனமார்ந்த வாழ்த்து களைத் தெரிவித்துக்கொண்டார்.

கடந்த சிலவருடங்களாக தங்களுடைய அமைப்பின்மூலம் ‘சமூகத் தணிக்கை யும் மண்டல அளவிலான பொதுவிசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருவ தாகக் குறிப்பிட்ட அவர் இதன் மூலம் முதன்முறையாக அரசு அதிகாரிகள் பொதுமக்களுக்கு பதிலளிக்கும் கடமையும் பொறுப்பும் தங்களுக்கு இருப்பதை உணர்ந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர் என்று சுட்டிக்காட்டி னார். மேலும், கிராமப்புறப் பள்ளிகளில் ஆசிரியர்கள் சரியான நேரத்திற்குப் பள்ளிக்கு வராத நிலையும் அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் பாதியி லேயே பள்ளியை விட்டு நின்றுவிடுவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று என்று தெரிவித் தார்.

பள்ளி மேலாண்மைக்குழு என்பது ஒரு மோசடி என்று குறிப்பிட்டதிரு ஹென்றி சடுதியில் இந்தக் குழுமங்கள் பல பள்ளிகளில் ஏனோதானோ என்று அதற்குரிய தகுதியோ, பயிற்சியோ, நுண்ணுணர்வோ அற்றவர்களை உறுப்பி னர்களாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுவிட்ட நிலையை எடுத்துரைத்தார். பள்ளிகளில் மாணாக்கர்களை அவமதிக்கும் வார்த்தைகள் அவர்கள் மீது சகஜமாக வீசப்படுவதாகவும், சாதி ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மாணாக்கர்களிடையே அதிகஅளவு பாரபட்சம் காட்டப்படுவதாகவும், மாற்றுத் திறனாளிகளாக உள்ள குழந்தைகள் விஷயத்தில் இது இன்னும் அதிக மாகக் காணப்படுவதாகவும் எடுத்துரைத்த திரு.ஹென்றி  மாணாக்கர்களை அடிப்பதும், உதைப்பதும்,கேவலப்படுத்துவதும் மிகப்பரவலாகப் பள்ளிகளில் நடந்துவருவது கவலைக் குரிய விஷயம் என்றார்.

உள்ளூராட்சி அமைப்புகளை கல்வித்திறன் சார் கண்காணிப்புவட்டத்திற்குள் கொண்டுவர வேண்டியது அவசியம் என்று எடுத்துரைத்த திரு.ஹென்றி பள்ளிக்கட்டிடங்கள் கட்டுவதற்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதி பள்ளி மேலாண்மைக் குழுவின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படவில்லை என்ப தைச் சுட்டிக்காட்டினார்.

ஓர் அரசுப் பள்ளியின் கணக்குவழக்குகளை மாதத்தின் கடைசி வார வெள்ளிக் கிழமையில் போய்ப் பார்வையிட யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், கல்வித் துறை இத்தகைய நியாயமான தலையீடுகளை வரவேற்பதில்லை, ஊக்குவிப் பதில்லை என்று குறிப்பிட்டவர் தன்னுடைய அதிகார எல்லைக்கு வெளியே உள்ள எந்த அதிகாரிகளையும் உள்ளே நுழைந்து கல்வித்துறையின் செயல் பாடுகளைப் பார்வையிட அரசுகள் அனுமதிப்பதில்லை என்று குறிப்பிட்டார். மேலும், அரசுப்பள்ளிகளில் சனிக்கிழமையும் மதிய உணவு போடப்படவேண் டும் என்றிருக்கிறது. ஆனால், அதற்கான கணக்குகள் பதிவேடுகளில் காட்டப் பட்டுவிடுகின்றனவே தவிர நடைமுறையில் இல்லை என்பதையும் சுட்டிக் காட்டினார் திரு.ஹென்றி.



 திரு.ரவிசங்கர், ஏய்ட் இண்டியா அமைப்பின் இணைச் செயலாளர் பேசுகை யில் அஸெர் ஆய்வு குறித்து ஆரம்பத்தில் கேலியாக சிலர் பேசினார்கள், இதனால் என்ன பயன் என்று கேட்டார்கள் என்றாலும் வருடா வருடம் இந்தக் கல்வியாய்வின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துக் கொண்டே வருகிறது என்றார். அதன் விளைவாகப் பெற்றோர்கள் தமது குழந்தைகளைக் காப்பாற்ற, அவர்களுக்கு தரமான கல்வியை சாத்திய மாக்க ஏதாவது செய்யச்சொல்லி எங்களை அதிகஅளவில் கேட்டுக்கொள்கி றார்கள் என்று தெரிவித்த திரு.ரவிசங்கர் கல்வித்துறை என்ற சிக்கலான இயந்திரத்தில் ஆசிரியர்கள் ஒரு பகுதி மட்டுமே என்று கருத்துரைத்தார்.

நகரில் அமர்ந்துகொண்டு கருத்தரங்குகளை நடத்துவதால் இந்தப் பிரச்னை தீராது என்று குறிப்பிட்ட அவர் கிராமப்புறப் பெற்றோர்கள் மத்தியில் அவர்க ளுடைய பிள்ளைகளுக்கு அளிக்கப்பட்டுவரும் கல்வியின் தரம் குறித்த அவசிய மான விழிப்புணர்வைப் பரவலாக்க இத்தகைய கருத்தரங்குகளும் கூட்டங்களும் கிராமப்புறங்களில் நடத்தப்படவேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார். சமூகத்திலுள்ள அனைவரும் இந்தப் பணியில்  பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


திரு.பாலாஜி சம்பத், ஏய்ட் இண்டியா அமைப்பின் நிறுவனர்-செயலர் தன்னுடைய உரையில் கடந்த ஏழு வருடங்களாகத் தொடர்ந்த ரீதியில் கல்வித்தரம் குறித்த தங்களுடைய அகல்விரிவான ஆய்வு களை நடத்தி அவற்றின் முடிவுகளை வெளியிட்டுவரும் போதும், அதன் மூலம் ஆரம்பப் பள்ளிகளில் அளிக்கப்பட்டுவரும் கல்வியில் நிலவும் அவலங்களையும், தவிர்க்கக்கூடிய குறைபாடுகளையும், அவை அதிகரித்துக்கொண்டேபோகும் போக்கையும், நிலைமையை சீர்செய்யவேண்டிய அவசியத்தையும், தொடர்ந்து கவனப்படுத்திவரும்போதும் அதிகாரப்பொறுப்பிலுள்ளவர்கள் அஸெர் ஆய்வறிக்கையைப் பொருட்படுத்தாமல் இருந்துவருவது வருத்தத் திற்குரியது என்று குறிப்பிட்டார். 

நம்முடைய குழந்தைகளுக்கு தாய்மொழி யில் கூட படிக்கவரவில்லை என்ற உண்மை நமக்குத் தெரியவந்தால் நாம் எத்தனை வேதனைப் படுவோம், எத்தனை விரைவாக அந்த நிலையை மாற்றுவதற்கான நிவாரண நடவடிக்கை களில் இறங்குவோம். ஆனால், ஏழைக்குழந்தைகளின் நலவாழ்வுக்கு அடித் தளம் அமைத்துத் தருகின்ற கல்வியைப் பொறுத்தவரை நாம் எத்தனை ஆதார பூர்வமாகச் சுட்டிக்காட்டியும் அதில் நிலவும் அவலங்களையும், குறைபாடுக ளையும் களைய அதிகாரப்பொறுப்பிலுள்ளவர்கள் ஆர்வம் காட்டாதது வேத னையளிக்கிறது”, என்று வருத்தம் நிறைந்த குரலில் கூறினார் திரு. பாலாஜி சம்பத்.

மேலும், இத்தனை இடர்ப்பாடுகளையும் மீறி நலிந்த பிரிவு மாணாக்கர்கள் பெருமுயற்சி செய்து படித்து முன்னேறிவிட்டால் உடனே அவர்களின் வெற்றி யில் சொந்தங்கொண்டாட, அதிகாரப்பொறுப்பிலுள்ளவர்கள் முண்டியடித்துக் கொண்டு ஓடுகிறார்கள். அந்த மாணாக்கரின் முன்னேற்றத்தில்  தங்களுக்கும் பங்குண்டு என்று உரிமைகோர பிரயத்தனம் செய்கிறார்கள். வெற்றி பெற்ற மாணாக்கருக்கே உதவி மேல் உதவியாகக் குவிக்கிறார்கள். ஆனால், சராசரி மாணவர்களைப் பற்றியோ, கற்கத் திணறும் மாணாக்கர் களைப் பற்றியோ நாம் அக்கறை கொள்வதேயில்லை. ஏனெனில், சிலருக்கு மட்டுமே கல்வி வரும் என்ற எண்ணப்போக்கு நம்மிடையே வேரூன்றிவிட்டது. வேறுவித மாகச் சொல்வதென்றால்,  அடித்தட்டு மனிதர்களின் பிள்ளைகள் படிக்கமாட் டார்கள் என்ற எண்ணம் நமக்குள் நிலைகொண்டுவிட்டது. இந்த மனப்போக்கு மாற வேண்டியது மிகவும் இன்றியமையாதது என்று சுட்டிக்காட்டிய திரு.பாலாஜி சம்பத்  தன் பொறுப்பிலுள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் கல்வி புகட்டவேண்டியது தனது கடமை என்ற எண்ணம் ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஏற்படவேண்டும்; நன்றாகப் படிக்கும் மாணவர்கள் மீது மட்டுமே அக்கறை காட்டலாகாது என்று வலியுறுத்திக் கூறினார். ”அதிக மதிப்பெண்கள் எடுக்கும் மாணாக்கர்களின் முன்னேற்றத்தில் மட்டுமே கவனம் செலுத்தும் போக்கும் கொள்கையளவில் மாறவேண்டியது அவசியம். தரமான கல்வி அனைத்து நலிந்த பிரிவு குழந்தைகளுக்கும் கிடைக்கவேண்டும்”, என்பதே நம் நோக்க மாக இருக்கவேண்டும் என்று சுட்டிக்காட்டினார் அவர்.

மொத்தத்தில், அஸெர் சுற்றாய்வு-2012ன் தமிழ்நாடு குறித்த விவரங்களை வெளியிடும் கூட்டம் நம் தேசிய அளவிலும், மாநில அளவிலும் நிலவும் கல்விச்சூழல் குறித்து பல உண்மைநிலவரங்களை உணர்த்துவதாய் அமைந் தது. நலிந்த பிரிவு மக்களுக்காகக் குரல்கொடுப்பதாகச் சொல்லிக் கொள் ளும் அரசியல் கட்சிகள் அந்தக் குழந்தைகளின் கல்வித்தரம் குறித்து ஏன் தொடர்ந்து பாராமுகமாக இருந்துவருகின்றன என்ற கேள்வி தவிர்க்கமுடியாமல் மனதிற்குள் எழுந்தது. இந்த அவலநிலையை மாற்ற சமூகம் எந்த அளவுக்குச் சிறப்பாகப் பங்காற்ற முடியும் என்பதை இந்தக் கூட்டம் எடுத்துக்காட்டியது.

அஸெர் சுற்றாய்வு-2012 வெளியீட்டுக் கூட்டம் தொடர்பாக நான் முன்வைக்க விரும்பும் கருத்துகள் பின்வருமாறு:
  • முதலில், இந்தச் சுற்றாய்வு நகர் சார்ந்த பள்ளிகளையும் உள்ளடக்குவது அவசியம். ஏனெனில், நகர்ப்புறத்திலுள்ள அரசுப் பள்ளிகளிலும் மேற்கண்ட குறைபாடுகளும், அவலச்சூழல்களும் நிலவுகின்றன என்பது வெளிப்படை.
  •   ஒருபுறம், தமிழின் காவலர்களாகவும், புரவலர்களாகவும் தங்களைத் தம்பட்டமடித்துக்கொள்ளும் போக்கு. ஆனால், தமிழைப் படிப்பதில், தமிழில் தேர்ச்சி பெறுவதில் மாணாக்கர்களிடையே ஆர்வமுண்டாக்க எந்த நேரிய முயற்சியும் மேற்கொள்ளப்படுவதில்லை.
  • தனியார் பள்ளிகளில் கூட தாய்மொழியான தமிழை சரியாக வாசிக்கவும், எழுதவும் தெரியாத நிலை பரவலாக மாணாக்கர்களிடையே நிலவிவரு கிறது. ஆங்கிலத்தைப் பழிப்பதால் மட்டும் தமிழை வளர்த்துவிட முடி யாது.
  • மொழிப்பாடங்களில் பின் தங்கியுள்ள மாணாக்கர்களுக்கு உதவ சிறப்பு வகுப்புகள் நடத்தப்படலாம். ஆனால் போதிய கவனமோ அக்கறையோ இந்தக் குறைபாடை களைவதில் காட்டப்படுவதில்லை.
  • அதைவிட அவலம், மொழிப்பாடங்களில் பின்தங்கியுள்ள மாணாக்கர்கள் வேறு பல கல்வி சார் செயல்பாடுகளிலும் புறக்கணிக்கப்படுகிறார்கள். கணி னிப் பயிற்சியாகட்டும், சதுரங்க விளையாட்டுப் பயிற்சியாகட்டும், இந்தக் குழந்தைகள் ஓரங்கட்டப்படுகிறார்கள். இதன் விளைவாக இந்தக் குழந்தைக ளின் தன்னம்பிகையும், சுயமதிப்பும் பெரிய அளவு பாதிக்கப் படுகிறது. அவர் கள் பலவகையான மனபாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள்.  
  • பிள்ளைகளுக்கு தாய்மொழியைக் கற்பதில் ஆர்வத்தை உண்டாக்குவ தற்கு பதிலாக, மொழிகளில் தமிழோ, ஆங்கிலமோ அர்த்தத்தைப் புரிந்து கொண்டு வாசிக்கும்  எழுதும் திறனாற்றலை அவர்களிடம் வளர்ப்பதற்கு பதிலாக, பக்கம் பக்கமாக அர்த்தம் புரியாமல் மனப்பாடம் செய்து தேர் வில் எழுதும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் பிள்ளைகள். இது குழந் தைகளுக்கு மிகவும் மனச்சோர்வை ஏற்படுத்தக்கூடியது.
  • எந்தவொரு கணினிமையத்திற்குச் சென்றாலும் சரி தமிழ் எழுத்துருக் களே இருக்காது. இதனால், தமிழ் மட்டுமெ தெரிந்த பிள்ளைகளுக்கு கணி னியால் கிடைக்கக்கூடிய பயன்பாடுகள் மறுக்கப்படுகின்றன என்றால் மிகை யாகாது.
  • அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களுக்குக் கிடைக்கும் ஊதியத்தை நாம் பழிக் கத் தேவையில்லை. ஏனெனில், அது பல போராட்டங்களுக்குப் பிறகு சாத்தியமான வாழ்வூதியம். சொல்லப்போனால், தனியார் பள்ளிகளும், அரசு சாரா அமைப்புகளால் நடத்தப்படும் பள்ளிகளும் ஆசிரியர்களுக்கு முறையான ஊதியம் அளிப்பதில்லை என்பதே உண்மை. அதேசமயம், தங்கள் ஊதியத்திற்கு ஏற்ற அளவில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அர்ப்ப ணிப் பு மனோபாவத்துடன் பணியாற்ற வேண்டியது அவசியம். தவிர, அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தில் கையூட்டுக்கு இடமிருப்பதா கவும், அரசியல் தலையீடு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது மிகவும் அவலமான நிலை.
  • எட்டாம் வகுப்பு வரை மாணாக்கர்கள் தேர்வெழுதவேண்டியதில்லை என்பதால் அவர்களுடைய கற்றலின் தரமும் அளவும் எவ்வாறு உள்ளது என்பதை தொடர்ந்த ரீதியில் மதிப்பாய்வு செய்ய மாற்றுவழிகள் உருவாக்கப்படவேண்டியது அவசியம்.
  • அஸெர் ஆய்வறிக்கை வெளியீட்டு விழாவில் கிராமப்புறப் பிள்ளை களின் பெற்றோர்கள், ஆசிரியர்களும் இடம்பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
  • மேலும், அந்த ஆய்வறிக்கையின் பிரதிகள் கூட்டத்திற்கு வந்திருந்தவர் கள் அனைவருக்கும் கிடைக்க வழிசெய்யப்பட்டிருந்தால் உதவியாக இருந்திருக்கும்.
  • ஆய்வறிக்கை புள்ளிவிவரங்களையே அதிகமாகத் தந்திருந்தது. அவை சார்ந்த சில சிந்தனைகளையும், ஆலோசனைகளையும் அதில் இடம் பெறச் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
அஸெர் ஆய்வறிக்கை வெளியீட்டு விழாக் கூட்டம் முடிந்து அரங்கை விட்டு வெளியேறுகையில் மனதை ஆக்கிரமித்திருந்தது வேதனையோடு திரு.பாலாஜி சம்பத் முன்வைத்த அந்த ஒற்றைக் கேள்வி:

நம்முடைய குழந்தைகளுக்கு தாய்மொழியில் கூட படிக்கவரவில்லை என்ற உண்மை நமக்குத் தெரியவந்தால் நாம் எத்தனை வேதனைப்படு வோம், எத்தனை விரைவாக அந்த நிலையை மாற்றுவதற்கான நிவாரண நடவடிக்கைகளில் இறங்குவோம்?


_____________________________________________________________________________


அஸெர் ஆய்வறிக்கை 2012  சில முக்கியத் தகவல்கள்  குறிப்பாக, தமிழகத்தில் நிலவும் கல்வித்தரம் குறித்து
[ASER REPORT 2012 – Some important points to ponder with special reference to Tamil Nadu


அஸெர் – 2012 சுற்றாய்வு இந்தியா முழுமையிலும் நடத்தப்படுவது. அதன் 16 மாநிலங்கள் அமைந்துள்ள 567 மாவட்டங்களைச் சேர்ந்த 16,166 கிராமங்கள் இதில் இடம்பெறுகின்றன. மொத்தம், 5,96,846 குழந்தைகள் இந்த ஆய்வில் பங் கேற்றனர். தமிழகத்தை மட்டும் எடுத்துக்கொண்டால், இந்த மாநிலத்தைச் சேர்ந்த 28 மாவட்டங்களில் அமைந்துள்ள  811 கிராமங் களை உள்ளடக்கிய அளவில்,  22844 கிராமப்புறக் குழந்தைகள் இந்தச் சுற்றாய்வில் இடம்பெற்றனர். கீழே தரப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெறும் 21 தன்னார்வ அமைப்புகளிலி ருந்து   690 தன்னார்வப் பணியாளர்கள் இந்தச் சுற்றாய்வைத் திறம்பட நடத்தி முடித்தனர்.

1]Award Trust 
2] Foundation of His Sacred majesty 
3] Gramodaya Social Service Society 
4] Grass Roots Foundation 
5] Institute of Human Rights Education 
6] Jeeva Anbalayam Trust 
7] Manitham Charitable Trust 
8] NEEDS Trust 
9] New Life – Villipuram
 10] NEWS Trust 
11] Nilam Trust 
12] PRESS Trust 
13] Raise India Trust 
14] READ Trust 
15] RIGHTS Trust 
16] RWDT                  
 17] SODEWS 
18] Udhavum Manasu Trust 
19] Valarum Vandavasi 
20] VEPADA 
21] WORLD Trust.

இந்த்ச் சுற்றாய்வில் ஒன்றாம் வகுப்பில் படித்துவரும் குழந்தைகளுக்கு எளிய தமிழில் ஒரு பத்தி தரப்பட்டு அதை அவர்கள் சுலபமாகப் படிக்க முடிகிறதா என்று பார்க்கப்படுகிறது. அதேவிதமாய் இரண்டாம் வகுப்பு மாணாக்கர்களிடம் எளிய ஆங்கிலப் பத்தி தரப்பட்டு அதை வாசிப்பதில் அவர்களுக்கு உள்ள தேர்ச்சி - தேர்ச்சியின்மை அறியப்படுகிறது. இரண் டாம் வகுப்பு மாணாக்கர் க ளுக்கு இரண்டு இலக்க கழித்தல் கணக்குகள் தரப்பட்டு குழந்தைள் கணிதப் பாடத்தில் எந்த அளவுக்குத் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்பது அறியப்படுகிறது 

மதிப்பாய்வுத் தாள் 1-ல் தமிழில் சில எழுத்துகளும், இரண்டு எழுத்துகளைக் கொண்ட எளிய சொற்களும் தரப்படுகின்றன. மதிப்பாய்வுத் தாள் 2-ல் எளிய தமிழில் பத்துவரிகளைக் கொண்ட கதையொன்றும் 4 வரிகளைக் கொண்ட இரண்டு பத்திகளும் தரப்படுகின்றன.

அஸெர் 2012 ஆய்வறிக்கையில் கண்டுள்ள அளவில், தமிழகத்தில் முதல் வகுப்பில் படிக்கும் குழந்தைகளில் 43.4%  மட்டுமே தமிழ் எழுத்துகளை அடை யாளங்காண முடிந்தவர்களாய் இருக்கிறார்கள். இரண்டாம் வகுப்பில் படிக் கும் குழந்தைகளில் 43.6% மட்டுமே எளிய தமிழ் சொற்களை வாசிக்க முடிந் தவர்களாய் இருக்கிறார்கள். ஐந்தாம் வகுப்பில் படிக்கும் மாணாக்கர்களில் 29.9% மட்டுமே எளிய தமிழ்க் கதையை [இரண்டாம் வகுப்புப் பாடநூலில் இருக் கக் கூடிய]ப் படிக்கமுடிந்தவர்களாய் இருக்கிறார்கள்.

இந்தியா அளவில் எடுத்துக்கொண்டால் 3-5 வகுப்புகளில் படித்துவரும் பிள்ளைகளில் தாய்மொழியில் தரப்பட்டுள்ள எளிய பத்தியைப் படிக்கக்கூடிய வர்களின் எண்ணிக்கை கடந்த 5 வருடங்களில் 66.4% என்பதிலிருந்து 54% என்ப தாகச் சரிவடைந்திருக்கிறது.

தமிழகத்தில், 3-5 வகுப்புகளில் படித்துவரும் குழந்தைகளில் தாய்மொழியில் எழுதப்பட்டுள்ள எளிய பத்தியை சரியாக வாசிப்போரின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 49.2% என்பதிலிருந்து 48.9% என்பதாகச் சரிவடைந்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை மேற்குறிப்பிட்ட கற்றல்திறன் அளவுமட்டங்கள் கடந்த 5 ஆண்டுகளில் ஏறத்தாழ அதேயளவாய் [சுமார் 40% என்ற அளவில்] இருந்துவருகின்றன.

முதல் வகுப்பில் படித்துவரும் குழந்தைகளில் 53.9% பேர் மட்டுமே 1-9 வரை யான எண்களை சரியாக அடையாளங்காணக்கூடியவர்களாய் இருக்கிறார் கள்.

இரண்டாம் வகுப்பில் படித்துவரும் குழந்தைகளில் 54.2% பேரால் மட்டுமே 11 முதல் 99 வரையான எண்களை சரியாக அடையாளங்காண முடிகிறது.

ஐந்தாம் வகுப்பில் படித்துவரும் குழந்தைகளில் 13.0% பேரால் மட்டுமே வகுத் தல் கணக்குகளை சரியாகப் போட முடிகிறது.

இந்தியாவில், 3-5 வகுப்பில் படித்துவரும் குழந்தைகளில் எளிய கழித்தல் கணக்குகளை சரியாகச் செய்யக்கூடியவர்களின் எண்ணிக்கை கடந்த 5 வருடங்களில் 59.4% என்பதிலிருந்து 40.7% என்பதாகச் சரிவடைந்துள்ளது.

தமிழகத்தில் 3-5 வகுப்பில் படித்துவரும் குழந்தைகளில் எளிய கழித்தல் கணக்குகளை சரியாகச் செய்யக்கூடியவர்களின் எண்ணிக்கை கடந்த 5 வருடங்களில் 43% என்பதிலிருந்து 38.6% என்பதாகச் சரிவடைந்துள்ளது.

தமிழகத்தில், ஐந்தாம் வகுப்பில் படித்துவரும் பிள்ளைகளில் 57.1% பேரால் மட்டுமே எளிய ஆங்கில வார்த்தைகளை வாசிக்க முடிகிறது.

கல்விபெறும் உரிமைச் சட்டத்தில் வகுத்துரைக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளைப் பின்பற்றுவதில் _

மற்ற மாநிலங்களோடு ஒப்பிட, தமிழகத்தில் இந்த விதிமுறைகள் அதிகஅளவு பள்ளிகளில் பின்பற்றப்பட்டுவருகின்றன.

தமிழகத்தில் மாணவிகளுக்கான ’பயன்படுத்தத் தகுந்த அளவிலான கழிப்பறை வசதிகள் 2010-ல் 35.1% என்று இருந்த அளவு 2012-ல் 62.2% என்பதாக மேம்பட் டுள்ளது. அகில இந்திய சராசரி அளவோடு ஒப்பிடுகையில் தமிழகத்தின் அளவுமட்டம் குறிப்பிடத்தக்க அளவு அதிகமாக உள்ளது.

No comments:

Post a Comment