Wednesday, October 10, 2012

ஒளி-ஒலி ஊடகங்களும் பெண்முன்னேற்றமும்

எழுதியவர்: லதா ராமகிருஷ்ணன்

கண்ணாடி வீட்டிற்குள்ளிருந்து எத்தனை லாவகமாகதங்களுக்கு எந்தவிதச் சேதாரமுமில்லாமல் கல்லெறிந்து கொண்டிருக்கிறார்கள் என்று வெகுஜன ஊடகங்கள்குறிப்பாகதொலைக்காட்சி நிறு வனங்களைப் பார்த்து வியக்காமலிருக்க முடியாது. இப்படிச் சொல்வது நிச்சயம் வஞ்சப்புகழ்ச்சி என்பதில் யாருக்கும் சந்தேகம் ஏற்படத் தேவையில்லை.

பெண்ணை நுகர்பொருளாகவும் இரண்டாந் தரப்பிரஜையாகவும் 24x7 நேரமும்காட்டியவாறே,  இவ்வாறான பல வழிகளில் பெண்ணிடம் உருவேற்றப்பட்டுள்ளஉருவேற்றப்பட்டு வருகிற பெண் பிம்பங்களுக்காகபெண்ணைப் பற்றிய எதிர்மறைக் கருத்தாக்கங்களுக்காக பெண்ணு ரிமை பற்றியெல்லாம் ஓங்கிக் குரலெடுத்துப் பேசுவதையும் வெகு விமரிசையாக செய்துவரு கிறார்கள்.19.08.2012அன்றுநடைபெற்றவிஜய்தொலைக் காட்சி யின்  நீயா- நானா  நிகழ்ச்சியைப் பார்த்தபோது மேற்படி எண்ணம் மேலும் உறுதிப்பட்டது.

இதற்கு முன்பே ‘பெண் ஏன் மிகையாக ஒப்பனை செய்துகொள் கிறாள்?’ என்று ‘நீயா-நானா’ நவீனப் பட்டிமன்றம் நடத்தினார்கள். இப்பொழுதும் கிட்டத்தட்ட அந்த மாதிரி தலைப்புதான். சாலமன் பாப்பையா, லியோனி, ஞானசம்பந்தன் போன்றவர்களுக்கு பதி லாய் இதில் உளவியல் மருத்துவர் ஷாலினி, எழுத்தாள ரும் சமூகப்போராளியுமான ஓவியா ஆகிய இருவரும்சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டார்கள். இதற்கு முன்பு நடத்தப்பட்ட இதே போன்றதொரு நிகழ்ச்சி யில் ”அழுத்தமாக உதட்டுச் சாயம் தீட்டிக் கொள்ளப் பிடிக்கும்” என்று ஒரு பெண் கருத்துரைத்த போது“ அவ்வாறு செய்து கொள்வதே I am sexually active என்று தெரியப்படுத்துவதற்காகத் தான்” என்றார் உளவியல் மருத்துவர் ஷாலினி. உளவியலாய்வுக் கல்வி அவ்வாறு நிறுவுவ தாகவே இருக்கட்டும். அதற்காக அதை ஒரு பொதுமேடையில் அத்தனை ‘கொச்சையாக’த் தெரியப்படுத்த வேண் டுமா என்று தோன்றியது. ஒருவகையில் “ஆணின் உணர்ச்சிகளைத் தூண்டும் விதமாகப் பெண்கள் உடையணிவதால்தான் பாலியல் பலாத்காரம் நடக்கிறது” என்று பேசும் தொனியை இதிலும் கேட்கமுடிகிற தல்லவா. இத்தகைய கருத்தை ஓர் ஆணோ, சாதாரணப் பெண்ணோ கூறியிருந்தால் நிகழ்ச்சித்தயாரிப்பாளரும், நிகழ்ச்சித்தொகுப்பா ளரும் அதை அனுமதித்திருப்பார்களா? வடமாநிலங்களில், வெளி நாடுகளில் எத்தனையோ பெண்கள் இயல்பாக அழுத்தமான நிறத்தில் உதட்டுச்சாயம் தீட்டி அறிவார்ந்த பல துறைகளிலும் தங்கள் தனி முத்திரை களைப் பதித்த வண்ணம்  இருப்பது நடப்புண்மை.

அதேபோல், முதலில் குறிப்பிட்டஅந்த இரண்டாவது ’நீயா-நானா’  நிகழ்ச்சியிலும் accessories என்று சொல்லப்படும் காதணி வகைகள், முதலான பல்வேறு அலங்காரப் பொருட்களை அணிவது குறித்து பெண்கள் பேசும்போது, “இது ஆண்களைக் கவ ரவே. உங்களை நீங்களே நுகர்பொருளாக்கிக்கொள்கிறீர் கள்”, என்று உளவியல் மருத்துவர் கூறினார். “நீங்கள் சொல்வதைக் கேட்ட பிறகுதான் இந்தக் கோணத்தில் பார்க்க வேண்டும் என்பதே எனக்கு உறைக்கிறது”, என்று ஒரு பங்கேற்பாளர் கூற, “அதுதான் ‘நீயா-நானா” என்று மார்தட்டிக் கொண்டார் நிகழ்ச்சித் தொகுப்பாளர்.

அதுவே, நிகழ்ச்சி யில் பங்கேற்றிருந்த இன்னொரு பெண், “அப்படிப் பார்த் தால் அதேவிதமாய் உங்களை யும் கூற முடியும். எல்லாம் பார்க்கும் பார்வை யில் தான்”, என்று சொல்ல முற்பட்ட போது அவரை மேலேபேசவிடாமல் ‘மைக்’ ஐ கைமாற்றிவிட்டார் அவர். 

“பாண்டி பஜாரில் இத்தகைய ”அலங்காரப்பொருட்களை தேடியலைவதாகச் சொல்பவர் அதற்காய் எத்தனை அருமையான நேரத்தை இழக்கிறார் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்”, என்று கருத்துரைத்தார் ஓவியா. சம்பந்தப்பட்ட பெண் வாரத்தில் ஆறு நாட்கள் அய ராது உழைத்து ஏழாவது நாள் ஒரு நான்கு மணி நேரங்கள் தனக்குப் பிடித்தபொருளை வாங்கச் செலவழிப்பதால் அவருக்கு நேரத்தின் அருமை தெரியவில்லை என்று அறவுரைப் பது எவ்வளவு தூரம் சரி? [பொதுவாகவே நிகழ்ச்சித் தொகுப்பாளரும், சிறப்பு விருந்தினர்களும் நாட்டாமைத் தீர்ப்பு வழங்குவதும் பங்கேற்பாளர்களைக் குட்டுவதும் திட்டுவதும் இந்த நிகழ்ச்சியில் நிறையவே நடக்கிறது].

இதில் மிகமுக்கியமாக நாம் பார்க்கவேண்டியது எந்தமேடையில் மேற்படி அறிவுரை களெல்லாம், பெண்ணுரிமைக் கருத்துகளெல் லாம் தரப்படுகிறது என்பதைத்தான். விஜய் தொலைக் காட்சி ‘பெண்கள் சமூகத்தில் நுகர்பொருளாக்கப்படுகிறார்கள் இளந் தலைமுறையினர்  அது குறித்தவிழிப்புணர்வு இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள்’ என்றெல்லாம் விசனப்படுவது எத்தனை வடிகட்டின போலித்தனம்; அயோக்கியத்தனம்.

அதில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில்முன்வைக்கப்படும் பெண் பிம்பங்கள் எத்தகையவை? சூப்பர்சிங்கர் நிகழ்ச்சியில் இடம் பெறும் சிறுமி களிலிருந்து நிகழ்ச்சிகளைத் தொகுத் தளிக்கும் பெண்கள் வரை பெண்ணின் உடலை நுகர்பொருளாக உருவேற் றும்படியான ஆடைகளையும், ஒப்பனைகளை யும், அங்கசேஷ்டை களையும் தான் முன்னிலைப்படுத்துகிறார்கள். எல்லாவிதமான பாடல்களையும் பாடுவதுதான் திறமை என்று சொல்லிச் சொல்லி கேவலமான பாடல்களை, நாட்டிய அடவுகளைக் குழந்தைகளுக்கு திறனாற்ற லாக உருவேற்றுகிறார்கள்.

பிற தொலைக்காட்சி சானல்களிலெல்லாம் செய்திவாசிப்பு இடம்பெறுகிறது. ஆனால், விஜய் தொலைக்காட்சியில் அதுவும் கிடையாது.  கட்சி ரீதியான சானல் அல்லவென் றாலும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றியெல்லாம் நீயா-நானாவில் விவாதமே இடம் பெறாது. [ஆனால், அன்னா ஹஸாரேயைக் கோமாளியாக,  முட்டாளாகக் காட்டுவதே குறியாய் கட்டாயம் ‘நீயா-நானா’ நடத்தப்படும்].

கடுங்கோடையிலும் கோட்டு-சூட் அணிந்தபடிதான் விஜய் தொலைக்காட்சி ஆண்-தொகுப்பாளர்கள் காட்சியளிப்பார்கள். ஆனால், பெண்தொகுப்பாளர்களின் ஆடை யணி மணி களும், ஒப்பனைகளும்அவர்களைப் பண்டமாகக் கடை விரித்தபடி. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இடம்பெறும் பெண்கள், ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர்த்து, நடமாடும் வணிகவளாகங்களாக வலம் வரும்படி வகுத்துரைக்கப்பட்டிருக் கிறார்கள். இதுதானே இந்த ஒலி-ஒளி ஊடகங்களின் எழுதப்படாத சட்டமாக இருந்து வருகிறது.

இதுபோக, இந்தத் தொலைக்காட்சிச் சானல்கள் நொடிக்கு நூறாக முன்வைக்கும் விளம்பரங்களில் பெண்கள் அலங்காரப் பொருட் களின் ஷோ-கேஸ்கள் தானே. இவ்வாறு இளந்தலை முறையினர் தொலைக்காட்சி சானல்கள் வழியாய் நாளும் மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள். இதில் கலாசாரத்தைப் பற்றியும் கிராமப்புற ‘வெள்ளந்தி மனிதர்களை’ப் பற்றியும் ஆவேசமாகப் புகழ் பாடுவதில் ஒன்றும் குறைச்சலில்லை.

முக்கலும் முனகலுமாய், அயல்நாட்டவர் களைவிடக் கேவலமாக மூக்கால் தமிழைப் பேசியவாறு தமிழ்மொழி அழிந்துபோகி றதே என்று பிலாக்கணம் பாடுகிறார்கள். பகுத்தறிவு வளரவேண்டும் என்று பேசிய வாறே மூடநம்பிக்கைகளை வளர்க்கும் அத்தனை முயற்சிகளிலும் ஈடுபடுகிறார்கள் விஜய்தொலைக் காட்சி யும் ஒளி-ஒலி ஊடகங்களின் இந்த நியமங்களையெல்லாம் இம்மி பிசகாமல் கடைப்பிடித்துவருகிறது.

இதுபோதாதென்று நடிகரின் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் பாரம் பரியத்’ தின் நவீன வடிவமாய் நடிகர்-நடிகையரை, திரைப்படக் கலைஞர்களை மாமனிதர்களா கக் காட்டி மூளைச் சலவை செய்வதும் மக்கள் தொலைக்காட்சி நீங்கலாக மற்ற தொலைக்காட்சி சானல்களில் இருப்பதைப் போலவே விஜய் தொலைக்காட்சியிலும் இடம்பெறுகிறது. ’குடி குடியைக் கெடுக்கும்’ என்று கூறிய வாறே இளைஞர்கள் குடிப் பதை வெகு சகஜ மான நடைமுறையாகத் திரும்பத் திரும்ப உருவேற்றும் திரைப் படங்கள், ஈவ்-டீசிங் என்ற பெயரில் வார்த்தை களாலும் செய்கை களாலும் காதல் என்ற பெயரிலும் ஈவ்-டார்ச்சரிங் செய்யும் கேடுகெட்ட வழக்கத்தை, உயிர் கொல்லி ‘ராகிங்’ என்ற அருவருக்கத்தக்கசெயலை மாணவர் சமுதாயத்தின், இளையதலைமுறையின் இயல்பான நடத்தையாக திரும்பத் திரும்பக்காட்டி உரு வேற்றிவரும் திரைப்படங் களும் தொடர்ந்து திரையிடப்படும் நிலையில் பெண் சமுதாயத்தில் நுகர்பொருளாக்கப்படுகிறாள், பண்டமாக, இரண்டாந்தரப் பிரஜை யாக பாவிக்கப்படுகிறாள் என்றெல்லாம் இந்த சானல்கள் அங்கலாய்ப்பது எத்தனை பெரிய மோசடி?  

நீயா-நானா என்றே னும் ‘ஒளி-ஒலி ஊடகங்களில் எத்தகைய பெண்பிம்பம் வைக்கப் படுகிறது என்பது குறித்து விவாதம் நடத்தமுன்வருமா? இந்த நிகழ்ச்சியில் சிறப்புவிருந்தினர்களாக தொடர்ந்த ரீதியில் பங்கேற்று எழுச்சிபெற்ற மனத்தினராகப் பெண்விடுதலைக் கருத்துகளை முழங்குபவர்கள் ஒளி-ஒலி ஊடகங்கள் குறித்த அத்தகைய அகல் விரிவான விவாதங்கள் இன் றைய அத்தியாவசியத்தேவை என்ற கருத்தை விஜய் தொலைக் காட்சியிடம் ஏன் முன்வைக்கலாகாது? வலியுறுத்தலாகாது?

முன்பு ஒருமுறை மாநகரப் பேருந்தில் பயணம்செய்துகொண் டிருந்த போது “லேடீஸ் நிக்கறாங்கப்பா, அந்தப்பக்கம் தள்ளிப் போங்கப்பா”, என்று பெண்களின் பாதுகாவலனாகக் குரலெழுப்பியவண்ணம் பெண்கள்பகுதியிலேயே உரசிக் கொண்டு நின்று கொண்டிருந்த ‘பெரிய மனிதனை’“முதலில் நீங்கள் தள்ளி நில்லுங்கள்”  என்று சொல்லியபோது அவன் முறைத்த முறைப்பு இருக்கிறதே...! விஜய் தொலைக்காட்சி ‘பெண் சமுதாயத்தில் பண்டமாக பாவிக்கப்படுகிறாள்’ என்று பேசக் கேட்டு மேற்குறிப்பிட்ட நிகழ்வு தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வந்தது.

தம் முதுகிலுள்ள அழுக்கைப்பற்றிய சொரணையற்றவர்களிட மிருந்து, அதை யார் பார்க்கப்போகிறார்கள் என்ற துணிச்சலில் வெளிப்படும், வியாபார உத்திகளில் ஒன்றாகக் கொள்ளப்படும் சமூகப்பிரக்ஞையும் அக்கறையும் தான் சமூகச்சீர்கேடுகளிலெல் லாம் மிகவும் அபாயகரமானது.





No comments:

Post a Comment