Wednesday, October 10, 2012

ஒளி-ஒலி ஊடகங்களும் பெண்முன்னேற்றமும்

எழுதியவர்: லதா ராமகிருஷ்ணன்

கண்ணாடி வீட்டிற்குள்ளிருந்து எத்தனை லாவகமாகதங்களுக்கு எந்தவிதச் சேதாரமுமில்லாமல் கல்லெறிந்து கொண்டிருக்கிறார்கள் என்று வெகுஜன ஊடகங்கள்குறிப்பாகதொலைக்காட்சி நிறு வனங்களைப் பார்த்து வியக்காமலிருக்க முடியாது. இப்படிச் சொல்வது நிச்சயம் வஞ்சப்புகழ்ச்சி என்பதில் யாருக்கும் சந்தேகம் ஏற்படத் தேவையில்லை.

பெண்ணை நுகர்பொருளாகவும் இரண்டாந் தரப்பிரஜையாகவும் 24x7 நேரமும்காட்டியவாறே,  இவ்வாறான பல வழிகளில் பெண்ணிடம் உருவேற்றப்பட்டுள்ளஉருவேற்றப்பட்டு வருகிற பெண் பிம்பங்களுக்காகபெண்ணைப் பற்றிய எதிர்மறைக் கருத்தாக்கங்களுக்காக பெண்ணு ரிமை பற்றியெல்லாம் ஓங்கிக் குரலெடுத்துப் பேசுவதையும் வெகு விமரிசையாக செய்துவரு கிறார்கள்.19.08.2012அன்றுநடைபெற்றவிஜய்தொலைக் காட்சி யின்  நீயா- நானா  நிகழ்ச்சியைப் பார்த்தபோது மேற்படி எண்ணம் மேலும் உறுதிப்பட்டது.

இதற்கு முன்பே ‘பெண் ஏன் மிகையாக ஒப்பனை செய்துகொள் கிறாள்?’ என்று ‘நீயா-நானா’ நவீனப் பட்டிமன்றம் நடத்தினார்கள். இப்பொழுதும் கிட்டத்தட்ட அந்த மாதிரி தலைப்புதான். சாலமன் பாப்பையா, லியோனி, ஞானசம்பந்தன் போன்றவர்களுக்கு பதி லாய் இதில் உளவியல் மருத்துவர் ஷாலினி, எழுத்தாள ரும் சமூகப்போராளியுமான ஓவியா ஆகிய இருவரும்சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டார்கள். இதற்கு முன்பு நடத்தப்பட்ட இதே போன்றதொரு நிகழ்ச்சி யில் ”அழுத்தமாக உதட்டுச் சாயம் தீட்டிக் கொள்ளப் பிடிக்கும்” என்று ஒரு பெண் கருத்துரைத்த போது“ அவ்வாறு செய்து கொள்வதே I am sexually active என்று தெரியப்படுத்துவதற்காகத் தான்” என்றார் உளவியல் மருத்துவர் ஷாலினி. உளவியலாய்வுக் கல்வி அவ்வாறு நிறுவுவ தாகவே இருக்கட்டும். அதற்காக அதை ஒரு பொதுமேடையில் அத்தனை ‘கொச்சையாக’த் தெரியப்படுத்த வேண் டுமா என்று தோன்றியது. ஒருவகையில் “ஆணின் உணர்ச்சிகளைத் தூண்டும் விதமாகப் பெண்கள் உடையணிவதால்தான் பாலியல் பலாத்காரம் நடக்கிறது” என்று பேசும் தொனியை இதிலும் கேட்கமுடிகிற தல்லவா. இத்தகைய கருத்தை ஓர் ஆணோ, சாதாரணப் பெண்ணோ கூறியிருந்தால் நிகழ்ச்சித்தயாரிப்பாளரும், நிகழ்ச்சித்தொகுப்பா ளரும் அதை அனுமதித்திருப்பார்களா? வடமாநிலங்களில், வெளி நாடுகளில் எத்தனையோ பெண்கள் இயல்பாக அழுத்தமான நிறத்தில் உதட்டுச்சாயம் தீட்டி அறிவார்ந்த பல துறைகளிலும் தங்கள் தனி முத்திரை களைப் பதித்த வண்ணம்  இருப்பது நடப்புண்மை.

அதேபோல், முதலில் குறிப்பிட்டஅந்த இரண்டாவது ’நீயா-நானா’  நிகழ்ச்சியிலும் accessories என்று சொல்லப்படும் காதணி வகைகள், முதலான பல்வேறு அலங்காரப் பொருட்களை அணிவது குறித்து பெண்கள் பேசும்போது, “இது ஆண்களைக் கவ ரவே. உங்களை நீங்களே நுகர்பொருளாக்கிக்கொள்கிறீர் கள்”, என்று உளவியல் மருத்துவர் கூறினார். “நீங்கள் சொல்வதைக் கேட்ட பிறகுதான் இந்தக் கோணத்தில் பார்க்க வேண்டும் என்பதே எனக்கு உறைக்கிறது”, என்று ஒரு பங்கேற்பாளர் கூற, “அதுதான் ‘நீயா-நானா” என்று மார்தட்டிக் கொண்டார் நிகழ்ச்சித் தொகுப்பாளர்.

அதுவே, நிகழ்ச்சி யில் பங்கேற்றிருந்த இன்னொரு பெண், “அப்படிப் பார்த் தால் அதேவிதமாய் உங்களை யும் கூற முடியும். எல்லாம் பார்க்கும் பார்வை யில் தான்”, என்று சொல்ல முற்பட்ட போது அவரை மேலேபேசவிடாமல் ‘மைக்’ ஐ கைமாற்றிவிட்டார் அவர். 

“பாண்டி பஜாரில் இத்தகைய ”அலங்காரப்பொருட்களை தேடியலைவதாகச் சொல்பவர் அதற்காய் எத்தனை அருமையான நேரத்தை இழக்கிறார் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்”, என்று கருத்துரைத்தார் ஓவியா. சம்பந்தப்பட்ட பெண் வாரத்தில் ஆறு நாட்கள் அய ராது உழைத்து ஏழாவது நாள் ஒரு நான்கு மணி நேரங்கள் தனக்குப் பிடித்தபொருளை வாங்கச் செலவழிப்பதால் அவருக்கு நேரத்தின் அருமை தெரியவில்லை என்று அறவுரைப் பது எவ்வளவு தூரம் சரி? [பொதுவாகவே நிகழ்ச்சித் தொகுப்பாளரும், சிறப்பு விருந்தினர்களும் நாட்டாமைத் தீர்ப்பு வழங்குவதும் பங்கேற்பாளர்களைக் குட்டுவதும் திட்டுவதும் இந்த நிகழ்ச்சியில் நிறையவே நடக்கிறது].

இதில் மிகமுக்கியமாக நாம் பார்க்கவேண்டியது எந்தமேடையில் மேற்படி அறிவுரை களெல்லாம், பெண்ணுரிமைக் கருத்துகளெல் லாம் தரப்படுகிறது என்பதைத்தான். விஜய் தொலைக் காட்சி ‘பெண்கள் சமூகத்தில் நுகர்பொருளாக்கப்படுகிறார்கள் இளந் தலைமுறையினர்  அது குறித்தவிழிப்புணர்வு இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள்’ என்றெல்லாம் விசனப்படுவது எத்தனை வடிகட்டின போலித்தனம்; அயோக்கியத்தனம்.

அதில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில்முன்வைக்கப்படும் பெண் பிம்பங்கள் எத்தகையவை? சூப்பர்சிங்கர் நிகழ்ச்சியில் இடம் பெறும் சிறுமி களிலிருந்து நிகழ்ச்சிகளைத் தொகுத் தளிக்கும் பெண்கள் வரை பெண்ணின் உடலை நுகர்பொருளாக உருவேற் றும்படியான ஆடைகளையும், ஒப்பனைகளை யும், அங்கசேஷ்டை களையும் தான் முன்னிலைப்படுத்துகிறார்கள். எல்லாவிதமான பாடல்களையும் பாடுவதுதான் திறமை என்று சொல்லிச் சொல்லி கேவலமான பாடல்களை, நாட்டிய அடவுகளைக் குழந்தைகளுக்கு திறனாற்ற லாக உருவேற்றுகிறார்கள்.

பிற தொலைக்காட்சி சானல்களிலெல்லாம் செய்திவாசிப்பு இடம்பெறுகிறது. ஆனால், விஜய் தொலைக்காட்சியில் அதுவும் கிடையாது.  கட்சி ரீதியான சானல் அல்லவென் றாலும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றியெல்லாம் நீயா-நானாவில் விவாதமே இடம் பெறாது. [ஆனால், அன்னா ஹஸாரேயைக் கோமாளியாக,  முட்டாளாகக் காட்டுவதே குறியாய் கட்டாயம் ‘நீயா-நானா’ நடத்தப்படும்].

கடுங்கோடையிலும் கோட்டு-சூட் அணிந்தபடிதான் விஜய் தொலைக்காட்சி ஆண்-தொகுப்பாளர்கள் காட்சியளிப்பார்கள். ஆனால், பெண்தொகுப்பாளர்களின் ஆடை யணி மணி களும், ஒப்பனைகளும்அவர்களைப் பண்டமாகக் கடை விரித்தபடி. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இடம்பெறும் பெண்கள், ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர்த்து, நடமாடும் வணிகவளாகங்களாக வலம் வரும்படி வகுத்துரைக்கப்பட்டிருக் கிறார்கள். இதுதானே இந்த ஒலி-ஒளி ஊடகங்களின் எழுதப்படாத சட்டமாக இருந்து வருகிறது.

இதுபோக, இந்தத் தொலைக்காட்சிச் சானல்கள் நொடிக்கு நூறாக முன்வைக்கும் விளம்பரங்களில் பெண்கள் அலங்காரப் பொருட் களின் ஷோ-கேஸ்கள் தானே. இவ்வாறு இளந்தலை முறையினர் தொலைக்காட்சி சானல்கள் வழியாய் நாளும் மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள். இதில் கலாசாரத்தைப் பற்றியும் கிராமப்புற ‘வெள்ளந்தி மனிதர்களை’ப் பற்றியும் ஆவேசமாகப் புகழ் பாடுவதில் ஒன்றும் குறைச்சலில்லை.

முக்கலும் முனகலுமாய், அயல்நாட்டவர் களைவிடக் கேவலமாக மூக்கால் தமிழைப் பேசியவாறு தமிழ்மொழி அழிந்துபோகி றதே என்று பிலாக்கணம் பாடுகிறார்கள். பகுத்தறிவு வளரவேண்டும் என்று பேசிய வாறே மூடநம்பிக்கைகளை வளர்க்கும் அத்தனை முயற்சிகளிலும் ஈடுபடுகிறார்கள் விஜய்தொலைக் காட்சி யும் ஒளி-ஒலி ஊடகங்களின் இந்த நியமங்களையெல்லாம் இம்மி பிசகாமல் கடைப்பிடித்துவருகிறது.

இதுபோதாதென்று நடிகரின் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் பாரம் பரியத்’ தின் நவீன வடிவமாய் நடிகர்-நடிகையரை, திரைப்படக் கலைஞர்களை மாமனிதர்களா கக் காட்டி மூளைச் சலவை செய்வதும் மக்கள் தொலைக்காட்சி நீங்கலாக மற்ற தொலைக்காட்சி சானல்களில் இருப்பதைப் போலவே விஜய் தொலைக்காட்சியிலும் இடம்பெறுகிறது. ’குடி குடியைக் கெடுக்கும்’ என்று கூறிய வாறே இளைஞர்கள் குடிப் பதை வெகு சகஜ மான நடைமுறையாகத் திரும்பத் திரும்ப உருவேற்றும் திரைப் படங்கள், ஈவ்-டீசிங் என்ற பெயரில் வார்த்தை களாலும் செய்கை களாலும் காதல் என்ற பெயரிலும் ஈவ்-டார்ச்சரிங் செய்யும் கேடுகெட்ட வழக்கத்தை, உயிர் கொல்லி ‘ராகிங்’ என்ற அருவருக்கத்தக்கசெயலை மாணவர் சமுதாயத்தின், இளையதலைமுறையின் இயல்பான நடத்தையாக திரும்பத் திரும்பக்காட்டி உரு வேற்றிவரும் திரைப்படங் களும் தொடர்ந்து திரையிடப்படும் நிலையில் பெண் சமுதாயத்தில் நுகர்பொருளாக்கப்படுகிறாள், பண்டமாக, இரண்டாந்தரப் பிரஜை யாக பாவிக்கப்படுகிறாள் என்றெல்லாம் இந்த சானல்கள் அங்கலாய்ப்பது எத்தனை பெரிய மோசடி?  

நீயா-நானா என்றே னும் ‘ஒளி-ஒலி ஊடகங்களில் எத்தகைய பெண்பிம்பம் வைக்கப் படுகிறது என்பது குறித்து விவாதம் நடத்தமுன்வருமா? இந்த நிகழ்ச்சியில் சிறப்புவிருந்தினர்களாக தொடர்ந்த ரீதியில் பங்கேற்று எழுச்சிபெற்ற மனத்தினராகப் பெண்விடுதலைக் கருத்துகளை முழங்குபவர்கள் ஒளி-ஒலி ஊடகங்கள் குறித்த அத்தகைய அகல் விரிவான விவாதங்கள் இன் றைய அத்தியாவசியத்தேவை என்ற கருத்தை விஜய் தொலைக் காட்சியிடம் ஏன் முன்வைக்கலாகாது? வலியுறுத்தலாகாது?

முன்பு ஒருமுறை மாநகரப் பேருந்தில் பயணம்செய்துகொண் டிருந்த போது “லேடீஸ் நிக்கறாங்கப்பா, அந்தப்பக்கம் தள்ளிப் போங்கப்பா”, என்று பெண்களின் பாதுகாவலனாகக் குரலெழுப்பியவண்ணம் பெண்கள்பகுதியிலேயே உரசிக் கொண்டு நின்று கொண்டிருந்த ‘பெரிய மனிதனை’“முதலில் நீங்கள் தள்ளி நில்லுங்கள்”  என்று சொல்லியபோது அவன் முறைத்த முறைப்பு இருக்கிறதே...! விஜய் தொலைக்காட்சி ‘பெண் சமுதாயத்தில் பண்டமாக பாவிக்கப்படுகிறாள்’ என்று பேசக் கேட்டு மேற்குறிப்பிட்ட நிகழ்வு தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வந்தது.

தம் முதுகிலுள்ள அழுக்கைப்பற்றிய சொரணையற்றவர்களிட மிருந்து, அதை யார் பார்க்கப்போகிறார்கள் என்ற துணிச்சலில் வெளிப்படும், வியாபார உத்திகளில் ஒன்றாகக் கொள்ளப்படும் சமூகப்பிரக்ஞையும் அக்கறையும் தான் சமூகச்சீர்கேடுகளிலெல் லாம் மிகவும் அபாயகரமானது.





Sunday, October 7, 2012

என்னுரை - டாக்டர். ஜி.ஜெயராமன்



[*ஊற்றுக்கண்கள் என்ற வெல்ஃபேர் ஃபவுண் டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் சார்பில் பார்வையற் றோருக்காக நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டி களில் பரிசுபெற்ற சிறுகதைகளை உள்ளடக்கிய நூலில் இடம் பெற்றுள்ளது]

பார்வையின்மை வாழ்வில் உண்டாகும் ஒரு நிலை. இது யாருக்கு வேண்டுமானாலும், எப்போ தும், எந்த அளவிலும் உண்டாகலாம். பார்வை யின்மையின் அளவையும், வாழ்வில் அது உண்டாகும் காலத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு இதனை நான்கு பெருங் கூறுகளாகப் பகுக்கலாம். அவையாவன: 

1] பிறப்பிலேயே உண்டாகும் முழு பார்வை யின்மை
2] பிறப்பிலேயே உண்டாகும் பகுதி பார்வை யின்மை
3] வளர்ந்த பின் உண்டாகும் முழு பார்வை யின்மை
4] வளர்ந்த பின் உண்டாகும் பகுதி பார்வை யின்மை


இந்த நான்கு பார்வையின்மை நிலைகளும் பல்வேறு வித்தியாசங்களைத் தோற்றுவிக்கக் கூடும் என்றாலும்,  எல்லோருக்கும் பொது வாகச் சில தடைகள் பார்வையின்மையால் உண்டாகிறது. அவை அனுபவம் பெறுதல், அனுபவ வெளிப்பாடு, வெளிப்பாட்டை எழுத் தில் வடித்தல், எண்ணியதை எண்ணிய உடனேயே எழுதமுடியாமைபோன்றவையாகும்.


தன்னுள்ளே பொங்கும் கடலாக, சீறும் ஊற்றாகத் தாக்கும் உணர்ச்சி அலைகளை வெளிப்படுத்த ஒரு படைப்பாளி பயன்படுத்தும் சாதனங்களில் எழுத்தும் ஒன்று. அந்த எழுத்து வர்ணனை,  வாதம்,  உணர்ச்சி ஆகிய மூன்றில் ஒரு முறையிலேயே அல்லது,  அந்த மூன்றில் எல்லாமே வெவ்வேறு அளவில் கலந்து படைக்கப்படுகிறது. ஆதிமனிதன் வாய்மொழியாக வெளிப்படுத்திய இதை காலத் தையும், இடத்தையும் வென்று, அவற் றைக் கடந்து, கொண்டுசெல்ல உருவானதே வரிவடிவம். இந்த வரிவடிவம் பார்வையை அடிப்படையாகக்கொண்டிருப்பதால் அதுவே பார்வையற்றவர்களின் படைப்புகள் வெளிப்படுவதற்கு ஒரு தடையாக விளங்குகிறது. பெருங்கவிஞன் மில்ட்டன் கூட இந்தத் தடைக்கு உட்பட்டே தன் பெருங்காப்பியத்தைப் படைக்கவேண்டியிருந்தது.ஆனால், இக்காலத்தில் புள்ளி எழுத்தும்[ப்ரெய்ல்] ஒலிநாடாவும், தட்டச்சும், கணினியும் இப்பிரச் னையை ஓரளவுக்குக் குறைக்கின்றன.


வர்ணனைகளுக்கு ஆதாரம் அனுபவம். ஊர்க்குட்டையைக் கண்டவுடன் கண்டவன் கடலைக் கற்பனை செய்யலாம். ஆயினும் அந்தக் கடல் உண்மையான கடலின் வேகத் தையும் ஆழத்தையும், ஆற்றலையும் முற்றிலுமாகக் காட்டுமா?  எல்லாவிதமான கற்ப னைகளுக்கும் அடிப்படைக் கூறுகள் அனுபவத்திற்கு உட்பட்டுத்தான் இருக்கின்றன.  எனவே, அனுபவக்குறை பார்வையற் றோர் படைப்புகளில் ஒரு தடைக்கல்லாகவே அமைகிறது.


நான் இதை உலகிற்குச் சொல்லியே ஆகவேண்டும் என்ற உந்துதல் பெருகும்போது படைப்பாளி அதற்கான சொற்களை,  கருத்தோவியங்களைத் தானாகவே படைத்துக் கொள்கிறார். இத்தகைய சொல்லாட்சிகள் மொழியை வளப்படுத்துகின்றன. பார்வை யற்ற படைப் பாளிகள் சில வேளைகளில் இத்தகைய அருஞ்சொற்கள் உருவாகக் காரண மாகலாம்.


வாதங்கள் அறிவின் அடிப்படையில் நடைபெறுகின்றன. [அப்படித்தான் நம்பப்படுகி றது].அவற்றுக்கு புத்தியின் தெளிவே அதிக முக்கியத்துவம் பெறக்கூடியது. அதில் பார் வையின்மை எந்தத் தடையையும் விதிக்கத் தேவையில்லை. பார்வையற்றவர்கள் அதிகம் உணர்ச்சிகளை அனுபவிப்பார்கள். வெவ்வேறு நிலைகளில் வெவ்வேறு அளவு களில் உணர்ச்சியால் தாக்கப்படுபவர்கள் அவர்கள். எனவே, உணர்ச்சிகளை வெளிப் படுத் துவதிலும் அவர்களுக்கு அதிகமான  தடைகள் இருக்கத் தேவையில்லை.


ஐந்து வயதுக்கு மேல் பார்வையிழப்பு உண்டானால், அது இடை யில் வந்த பார்வை யிழப்பாகவே கொள்ளப்படுகிறது. இதை பார்வை  உள்ளவனின் மரணம், பார்வையற் றவனின் பிறப்பு என்று அறிஞர்கள் கொள்கின்றனர். பிறப்பும் இறப்புமே மனிதனின் அடிப்படையான அனுபவங்கள். ஆனால், இதனைப் பற்றி சொல்லக் கூடியவர்கள் யாரு மில்லை. இரண்டுநிலைகளில் பேச்சுக்கோ,  எழுத்துக் கோ வழியில்லை. ஆனால், அந்த அனுபவங்களை வாழ்வில் [ஏறக் குறைய] அனுபவித்தவர்கள் தங்களது புனர்ஜென்மத் தின் இயல்பைப் பற்றி பேசமுடிந்தால் அது தனித்தன்மை கொண்ட ஓர் அனுபவமாக அமையும்.


 [* 30.09.2012 தேதியிட்ட திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ளது ]

மறக்க முடியாத மாமனிதர் டாக்டர் ஜி.ஜெயராமன்


மறக்க முடியாத மாமனிதர்
டாக்டர் ஜி.ஜெயராமன்
நிறுவனர்-தலைவர், வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட்(WELFARE FOUNDATION OF THE BLIND) [ஓய்வுபெற்ற பேராசிரியர், ஆங்கிலத்துறை, கிறித்துவக்கல்லூரி, தாம்பரம், சென்னை
13.05.1934 – 25-09.2012


_லதா ராமகிருஷ்ணன்


அதிராத குரல், நிதானம் தவறாத அணுகுமுறை, எல்லோரையும் அரவணைத்துக்கொண்டு போகும் பாங்கு,பார்வையற்றவர்களுடைய உரிமைகளுக்காகவும், நலவாழ்வுக்காகவும் ஓயாமல் உழைக்கும் ஆர்வம், மன உறுதி, பார்வையுள்ளவர்கள் பார்வையற்றவர்களுக்கு எதிரி என்று பாவிக்காத மனத்தெளிவும், புரிதலும் கொண்ட பண்பு, அறிவைப் பெருக்கிக்கொள்வதில் சலிக்காத தேடலும் ஆர்வமும், எல்லோரிடத்தும் அன்பு பாராட்டும் மனம்  இன்னும் எத்தனையெத் தனை மனித மாண்புகள் உண்டோ அத்தனைக்கும் சொந்தக்கார ராக சொல்லத்தக்க எங்கள் அன்புக்குரிய ஜெயராமன் சார் இன்று இல்லை. வயிற்றில் சிறு கட்டி வந்திருப்பதாகத் தெரியவந்து மருத்துவ மனையில் நான்கைந்து மாதங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டவர் வீடுவந்த பின் திரவ உணவையே உட்கொண்டுவந்தார். இந்த மாதம் மறுபடியும் வயிற்றில் உபாதை காரணமாக மருத்துவமனையில் சேர்க் கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒரு வார காலம் இருந்தவர் கடந்த 25ஆம் தேதி இரவு அமரராகிவிட்டார்.

ஆனால், உண்மையில் அவர் அமரத்துவம் பெற்றவர். பார்வையற்றவர்களுக்கும் சரி, பார்வையுள்ளவர்களுக்கும் சரி, அவர் ஒரு மிகச் சிறந்த வழிகாட்டி என்பதை அவரையறிந்த எல்லோருமே ஒப்புக் கொள்வார்கள். சக மனிதர்களை அவர்களுடைய சமூக, பொருளாதார அந்தஸ்தை சிறிதும் பொருட்படுத்தாமல் மதித்து நடத்துபவர். யாரையும் மனம் சுருங்கச் செய்யலாகாது என்ற கொள்கை கொண் டவர்.பிறரை மதிப்பழிப்பதே, மேலாதிக்கம் செலுத்துவதே தம்முடைய மேலாண்மையாக உலாவும் பகட்டு மனிதர்களிடையே ஜெய ராமன் சாரிடம்  பேசிக்கொண்டிருப்பது பொருளார்ந்த அனுபவமாய் நிறைவ ளிக்கும்.

பிறரைப்பழித்தோ, கேலி செய்தோ ஒரு வார்த்தையும் அவர் பேசியதில்லை. ஆக்கபூர்வமான, உத்வேகம்அளிக்கும்படியான ஆலோசனைகளையும்,அறிவுரைகளையும்தந்துஎத்தனையோ பேருடைய வாழ்க்கையை சீரமைத்துத் தந்தவர் ஜெயராமன் சார். இலக்கிய வுலகில் புழங்கும் காரணத்தால் பார்வையற்றவர்களின் பிரச்னை களையும், திறன்களையும் வெளிப்படுத்தும் எழுத்தாக்கங்களையும், பார்வையற்றவர்களின் படைப்பாக்கத்திறனை வெளிப்படுத்தும்  எழுத்தாக்கங்களையும் நம்முடைய சங்கத்தின் மூலம் வெளியிடலாமே என்று சாரிடம் கேட்டுக்கொண்டபோது உடனடியாக அதற்கு ஒப்புதல் அளித்தார். அதுமுதல் கடந்த சில வருட  ங்களாய் ஒவ்வொரு ஆண்டு விழாவின் போதும் அத்தகைய நூல்கள் சிலவற்றை வெளியிட்டு வருவதை வழக்கப் படுத்திக் கொண்டோம். கடந்த ஏழெட்டு வருடங்களில் அவ்வாறு ஏறத்தாழ இருபது நூல்கள் வெளியிட்டிருக்கிறோம். சமீபத்தில் சந்தியா பதிப்பகம் வெளியிட் டுள்ள மொழிபெயர்ப்பின் சவால்கள்என்ற நூலில் இடம்பெறும் கட்டுரைகள் அவரும் நானும் ஆளுக்கு ஆறு என்ற அளவில் மொழிபெயர்த்தவை. எத்தனை ஆர்வமாக குறித்த நேரத்தில் முடித்துக் கொடுத்துவிட்டார் ஜெயராமன் சார் என்று எண்ணி யெண்ணி வியந்திருக்கிறேன்.

கவிஞர் கோ.கண்ணனின் கவிதைத்தொகுப்பு போன்றவற்றை நாங்கள் வெளியிட்டதைத் தொடர்ந்து வேறு சில பதிப்பகங்களும் பார்வையற்றவர்களின் படைப்பாக்கங்களை வெளி யிட முன்வந்தன. கோ.கண்ணனின் இரண்டாவது கவிதைத்தொகுப்பான மழைக்குடை நாட்   களை நவீன விருட்சம் பதிப்பகம் வெளியிட்டது. அதேபோல் மு.ரமேஷ் என்பவரின் கவிதைத்தொகுப்பான மழையில் நனையும் இரவின் வாசனையை புதுப்புனல் பதிப்பகம் வெளியிட முன்வந்தது. தவிர, பார்வையற்ற மற்றும் பார்வையுள்ள படைப்பாளிகள், மொழி பெயர்ப்பாளர்கள் இணைந்து பங்கேற்ற ஒரு மொழிபெயர்ப்புப் பட்டறை, கவிதை வாசிப்பு நிகழ்வு என ஒருங்கிணைந்த முயற்சிகளும் எங்கள் சங்கத்தில் மேற்கொள்ளப்பட்டன. வருடா வருடம் பார்வை யற்றவர்களின் நண்பன்’[FRIENDS OF THE BLIND] என்ற விருதை எங்கள் சங்கம் அளித்துவருகிறது. இவ் வாறு பார்வையற்றவர்களின் எழுத்தாக்கங்களை வெளியிட்ட பதிப்பகங்களுக்கும் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

திரு.ஜெயராமனின் மனைவி வசந்தா அவருடைய பார்வையாகச் செயல்பட்டவர்என்றால் மிகையாகாது.ஜெயராமன்சாருக்கும்  சங்கத்திற்கும் உறுதுணையாக பக்கபலமாகத் திகழ்ந் தவர். பார்வையற்றவர் களுடைய பிரச்னைகள், திறமைகள் குறித்த விழிப்புணர்வைப் பரவ லாக்கும் முயற்சியில் ஜெயராமன் சார் மேற்கொண்ட பயணங்கள், செயல்பாடுகள் அனைத் திலும் அவரை அழைத்துக் கொண்டுபோவது முதல் அத்தனை வேலைகளிலும் துணை நிற்பவர். தவிர, பார்வையற்றவர்கள் அத்தனை பேரிடமும் ஆத்மார்த்தமாக அன்பு செலுத்து பவர். சாருடைய இரண்டு மகள்கள், ஒரு மகன் மூவரும் பார்வையுடையவர்கள். அப்பாவிடம் அன்பும் மதிப்பும் நிறைந்தவர்கள்.

சில பேரைப் பார்த்தாலே மனம் அமைதி பெறும்; உறுதிபெறும்; பக்குவமடையும். ஜெயராமன் சார் அத்தகையவர். அவரைப் பற்றிய சிறுகுறிப்பு கீழே தரப்பட்டுள்ளது.
So long Sir…..

13.05.1934இல் பிறந்தவர் திரு.ஜி.ஜெயராமன்.  தந்தை பெயர் திரு.T.K.கோபால  ஐயர்.  திருமதி நாகலட்சுமி அம்மாள். எட்டு வயதில்ஒரு சமயம் காய்ச்சல் ஏற்பட்டதில்,  எதனால் என்றே தெரியா மல் அவருக்கு முழுமையாக பார்வை பறி போய்விட்டது. எத்தனையோ மருந்து மாத்திரைகள்சிகிச்சைகள் அளித்தும் பயனில்லை. பார்வையிழப்பு அவருடைய பள்ளிப் படிப்புக்கு முற்றுப் புள்ளி இட்டுவிட்டது. 

வீட்டிலேயே அவருடைய தந்தையின் ஊக்கத்தாலும் விடாமுயற்சி யாலும் கல்வி பயின்று வந்த சிறுவன் ஜெயராமன் பின்னர் பூவிருந்தவல்லி பார்வையற்றோர் பள்ளியில் சேர்ந்து ஒரே வருடத்தில்  ESLC தேர்வும்இசை உயர்படிவத் தேர்வும் எழுதி தேர்ச்சி பெற்று விட்டான். சென்னைப் பல்கலைக்கழகத்தில் கணிதமும்அறிவியலும் முதன்மைப் பாடப் பிரிவுகளாகக் கொண்டு மெட்ரிகுலேஷன் தேர்வெழுதி அதன்பின் தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியில் அதே பாடப் பிரிவுகளில் பயின்று மிகச் சிறந்த மதிப்பெண்களோடு P.U.C-யில் தேர்ச்சி பெற்றார். பின் ஆங்கில இலக்கியத்தில் சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும்முதுகலைப்பட்டமும் பெற்றார். 

பார்வையற்றவர்களுக்குக் கல்வி கற்பிக்கவேண்டும் என்ற பேரார்வத்தால் உந்தப்பட்டவராய் பாஸ்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பெர்க்கின்ஸ் கல்வி நிறுவனத்தில் அதற்குரிய சிறப்புப் பயிற்சி கற்றார். பின்பிரிட்டிஸ் கௌன்ஸி'வால் தேர்ந்தெடுக்கப்பட்ட அறிஞர் என்ற வகையில் இரண்டு மாதங்கள் இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்டு அங்கேயுள்ள பார்வை யற்றோருக்கான நலப்பணிகள் குறித்து ஆய்ந்தறிந்தார். 

பார்வையற்றோர் பள்ளியில் இரண்டு வருடகாலம் கற்பித்த பின் பாளையங்கோட்டையி லுள்ள Pilot Demonstration Rehabilitation Centre for the Blindல் கண்காணிப்பாளரால் பணிபுரிந்தார்.  அங்கு மூன்று வருடகாலம் பணிபுரிந்த பின் தாம்பரம் கிறித்துவக் கல்லூரியில் வேலைக்கு சேர்ந்தார்.  ஏறத்தாழ 20 வருடங்களுக்கும் மேல் அங்கே ஆங்கிலத் துறையில் பேராசிரியராக சீரிய முறையில் பணியாற்றியவர் 1992ல் வேலையிலிருந்து ஒய்வு பெற்றார்.

தனது மாணவர் பருவத்திலிருந்தே பார்வையற்றோருக்கான மறுவாழ்வுப் பணிகளை மேற் கொள்வதில் டாக்டர் ஜெயராமனுக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. கிறித்துவக் கல்லூரியில் பார்வையற்ற மாணவர் களுக்கான வாசிப்பு மையம் உருவாகக் காரணமாக இருந்தவர். அதன் செயலாளராகவும் பின்னர் கல்லூரியில் பணிபுரிந்த காலத்தில் அதன் உப – தலைவராகவும் செயல்பட்டார். திரு. கே.எம்.ராமசாமிதிரு. ஆசிர் நல்லதம்பி ஆகியோருடன் இணைந்து 60க ளின் பிற்பகுதிகளில்  Tamil Nadu Association of the Blind ( TAB) என்ற அமைப்பை உருவாக்கினார். 

தமிழ்நாட்டிலேயே பார்வையற்றுருக்காகத் தொடங்கப்பட்ட முதல் அமைப்பு இதுவாகும். Natinonal Federation of the Blind என்ற அமைப்பின் தமிழகக் கிளையின் உபதலைவராகவும் செயலாற்றியுள்ள திரு. ஜெயராமன்அவ்வமயம் அந்தச் சங்கம் வெளியிட்டு வந்த ' பார்வையற்றோர் குரல்என்ற பத்திரிக்கையின் முதன்மை ஆசிரிய ராகவும் இயங்கி வந்தார்.   National Federation of the Blind India-வின் வெளியீடான ' Visionary ' என்ற ஆங்கில இதழின் ஆசிரியர் குழுவிலும் இடம் பெற்றிருந்தார்.  தமிழில் ' Braille Contractions ' உருவாக்கும் பணியில் ஈடு பட்டிருந்த திரு.ஜெயராமன் தமிழக அரசின் State Resource Centre தொடர்ச்சியாகத் தயாரித்த ப்ரெய்ல் புத்தகங்களின் உருவாக்கத்திலும் சீரிய பங்காற்றினார். 

பதினைந்து வயதிருக்கும்போது ஒரு விபத்து காரணமாய் திரு. ஜெயராமனின் இடதுகால் அகற்றப்படவேண்டியதாகியது.  படுக்கையில் இருந்தபடியே 'கண்ணன்என்ற சிறுவர் பத்திரி கைக்கு ஒரு சிறு கதை எழுதி அனுப்பி வைத்தார்.  அதற்கு பரிசும் கிடைத்தது. அதன் பின்னர் அதே பத்திரிகையில் அவருடைய 50க்கும் மேற்பட்ட சிறுகதைகள் வெளியாயின. 1956இல் கண்ணன் பத்திரிகை நடத்திய தொடர்கதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றார்.

அவருடைய ' மஞ்சள் பங்களா ', ' இரட்டைக் கிளி ' ஆகிய இரண்டு குறுநாவல்கள் அதே இதழில் பிரசுரமாகி கணிசமான வரவேற்பைப் பெற்றன.

பார்வையற்றோர் குறித்த திரு.ஜெயராமனின் ஆய்வுத் தாள்களில் அவர் அமெரிக்காவில் இருந்த போது எழுதிய _

1)  ' Schools for the Blind in Madras State '(சென்னை மாநிலத்தில் பார்வையற்றோருக்காள பள்ளிகள்). 
2)  IGNOU  செயல்திட்டத்திற்காக எழுதிய  ' Distance Education in the Education of the Blind' (பார்வையற்றோருக்கான கல்வியில் தொலைதூரக் கல்வி) 
3)  Vision என்ற தலைப்பிட்ட ஆங்கில படைப்பு (குறுநாவல்) IGNOU  செயல்திட்டத்திற்காக எழுதப்பட்டது.
4)  The Effect of Visual Handicap on Creative Writing (படைப்பாற்றலில் பார்வையிழப்பின் தாக்கம் ) என்ற தலைப்பிட்ட முனைவர் பட்ட  ஆய்வேடு
5) 'காணாத உலகில் கேளாத குரல்கள்என்ற தலைப்பில் பார்வையற்றோரின்பிரச்சினைகள்அவர்கள்    சந்திக்கும்   சவால்கள் குறித்து எழுதப்பட்ட நூல் –  முதலியவை குற்ப்பிடத்தக்கன.

1991இல் Welfare Foundation of the Blind என்ற ' பார்வையற்றோர் நன்நல அமைப்பை நிறுவினார். படித்த பார்வைக்குறையுடைய வர்களை முக்கியப் பதவிகளில் கொண்டுள்ள இந்தச் சங்கம் பார்வையற்றோரின் பிரச்சினைகள்திறனாற்றல்கள் குறித்த விழிப்புணர்வை சமூகத்தில் பரவலாக்குதல்பார்வையற்றோருக்குத் தேவையான ஆலோசனைகளையும்வழிகாட்டுதல் களையும் வழங்குதல், பார்வையற்றோருக்கான பிற அமைப்புகளோடு இணைந்து மேம் பாட்டுப் பணிகளை மேற்கொள்ளுதல் முதலிய பல்வேறு நோக்கங்களையும்செயல்பாடு களையும் கொண்டு இயங்கிவருகிறது. இந்த அமைப்பு டாக்டர் ஜெயராமனின் வழிகாட்டலில் கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக சீரிய முறையில் இயங்கி வருகிறது. 

கர்நாடக இசையில் ஆர்வமும்தேர்ச்சியும் பெற்றவர்.  டாக்டர் ஜெய ராமன்.  அருமையாக புல்லாங்குழல் இசைப்பார்.  1992ஆம் வருடம்  Best Handicapped Employee என்ற தேசிய விருதைப் பெற்றார்.  

[* 30.09.2012 தேதியிட்ட திண்ணை இணைய இதழில் இடம்பெற்றுள்ளது]