Sunday, July 8, 2012

எனக்குப் பிடித்த என் கவிதைகள் - 3 - ரிஷி




எனக்குப் பிடித்த என் கவிதைகள்-3

- ரிஷி
[*முதல் தொகுப்பு-அலைமுகம்]


40] சுவர்க்கோழி
தினமும் பேசுகிறது, தூரதேசத்து
சங்கேத பாஷையாய்.
பரவும் பயம், போதம் பப்பாதி.
நெற்றிச்சுருக்கம், கண்ஜாடை
கண்டத்தந்தியதிர்வென
முனை கிடைக்கலாம் முகங்காட்டினா லாவது.
மறைவிடமே தெரியவில்லை.
நூறாயிரந் தூண்களுக்காய் ஓடியோடிக்
கரையுங் கால்.
ஒருபொருட்பன்மொழி_
இரட்டுற மொழிதல்_
முரந்தொடை, உருவகம்_
இலக்கண மென்ன இவ்வுரைக்கு?
கூக்குரல், கிசுகிசுப்பு, கேவல்
கானமழை_
இயல்பென்ன இந்தத் த்வனிக்கு?
கண்கட்டியிருக்கும் கறுப்புப்பட்டைக் கப்பால்
கலங்கித் தெரியும் காட்சி
காற்றுச்சாயை நீட்சியாய்.
பிளக்கக் கிட்டுவது சிமெட்டி, செங்கல்,
முடிச்சிட்ட நாளச்சிக்கு_
சுண்ணாம்பும் செந்நீரும்_
நிணக்குழம்பு மட்டும்...
வீடெங்கும் வியாபித்திருக்கிறது ரீங்காரம்.
மௌனவேளைகளில் கரைமீறும்
பிரவாகப்பேரிரைச் சலாய்.
அடர்காட்டின் எக்கிளையில் அடிமுடியாய்
ஆடும் யார் வருவாரோ
உதவிக்கு...?


41]வரைபடம்
காலுங் கையும் சூம்பிப் போனதாய்
ஏதோ ஒன்று காணக் கிடைத்தாலும்
அழித்துவிடலாம் அரைகுறை நிறைவோடு...
கண்டதெல்லாம் விண்ட புள்ளிகளும்
வரித்துகளுமாகையில்
கலைப்பதெங்ஙனம்...?
குரல்வளை நெரிக்கிறது கூவுங்காலம்.
‘கருவா என்ன? கலைத்துவிடு_
அறிவுறுத்துகிறது.
விரலுரியத் தேய்த்து விரட்டினாலும் போதாது.
பழக வேண்டும் பின்
விழி வயது மூன்றின்_
இழுகோடு இரண்டெட்டிருபதாக...
விழுபுள்ளி குரங்கு புலி கிளி கரடியாக...


42]அக்களோ-பட்சி
அளவு குந்துமணியோ, கோலிகுண்டோ_
குரல்வளைப்புறத் தொரு துளையிருக்க
காடுமலை மேடெல்லாம்
கண்ணெல்லாம் தொண்டையாகக் கரைந்து
திரிந்திருக்கும்.
திறப்படைக்கக் கரம் காலாக்கிப்
புரிந்திருக்கும் த்வந்தயுத்தம்.
வெளிப்போந்திருக்கும் நீர்
விரலிடுக்காய்.
அனல்தகிப்பில் ஆவியாக நீரை
வாங்கிக்கொள்ளப் பார்த்து
வானெழும்பியிருக்கும்.
நாநுனியோடே நீர்க்கனிவு
கந்தந்து பறிப்பதாய்.
அகழிதாண்ட லாகாது அலைபாய்ந்
திருக்கும் அங்கும்...
எங்கெலாம் தலைமோதி மூக்குராய்ந்து
அழுததுவோ யாரரிவார்?
என்னென்ன சொல்லி அரற்றியிருக்கும்...?
எத்தனையாவது ‘டார்ஜானாவது
அறிந்திருக்கக் கூடும்.
போன நேரங்களில் ஈனக்  குரலெழுப்பவும்
திராணியற்று
இறந்த சிறகுகளோடு சுருண்டிருக்கும்
ஒரு மூலையில்.
சும்மாயிருந்திருப்பானா சர்வாதிகாரி?
சிறு கல் சிறுவ னெறிய பெரியவன்
பொரித்துத் தின்றிருப்பான்.
ஒரு கையேனும் புனல் நுழைத்துப்
பயிர்தழைக்கப் பாய்ச்சியிருக்கலாம்...
வெருளாமலிருக்குமோ பறவையும்?
‘யாருக்கோ நீர்தராத் தண்டனை
யாரோ அனுபவிக்கிறான்
_அழுகுழந்தையை அடக்க
ஆய்தம் வீசுவாள் அம்மா.
சிறகுவரம் சிறையிலும்!
பறந்தது வானிலோ நானிலோ...
அழிந்துவிட்ட இனம் என்பார்கள்....
விழுந்து கிடக்கிறது வழியெங்கும்.


43]முட்டாள்பெட்டியின் மடியில்...
‘ஒரு வாய் நிறைய வானத்தில்* பிறக்கிறது அசரீரி:
“பழிதீர்ப்பானா, மாட்டானா அபிமன்யூ?
அழும் மழலையின் அனாதரவு அடிமனம்
பழுக்கக் காய்ச்சிய கம்பியாய் பாய
தாயிடம் பீறிடுங் கண்ணீர் திரைமீறும்.
தீர்ந்து கிடந்த அடிமகள் உதிரம்
யாரையும் உறுத்தாதது அகம் வருத்தும் அதிகம்.
ஆணவத் தந்தையின் தானறு நிலை
ஆனந்த மளிக்கவில்லை.
மீண்டும் உரத்துக் கிளம்புகிறது குரல்:
“பழிதீர்த்துக்கொள்வானா அபிமன்யூ?
முந்திச் சொல்வோர்க்கு முன்னூறு பரிசுகள்.
இரவு பகல் இருபது நாட்கள்
களித்திருக்கலாம் கோவாக் கடற்கரையில்.
விதிமுறைகளை எடுத்துரைக்கும்
இரவல் குரல் இரைய
கிளரும் துளி சபலம்.
‘வரவு செலவுக்குள் அடங்கும் யாவும்-
புரியும் வரியிடை வரிகள்.
இடைமறிக்கும் கேள்விகள் இருந்தும்.
‘இந்தக் கணங்கள் தருவது எந்தச்
சந்தையிலிருக்கும்?
‘இன்னும் கேவிக்கொண்டிருக்கும் பிள்ளைக்குரல்
நிழலா? நிஜமா?
ஜம் ஜம் குதிரை, ஜாராட்டும் குதிரை...
‘காட்சியின் நிஜமெல்லாம் கமர்ஷியல் வரை...

*  a mouthful of sky என்ற தொலைக்காட்சித்தொடரின் ஒரு காட்சியைப் பார்த்ததில் உருவான கவிதை

44]எண்ணின் பின்னங்கள்
உருகியுருகி அஞ்சலி செய்யும்
குரலருவிக்குள்
கூடு விட்டுக் கூடு பாய்கிறது மனம்.
செதுக்கப்படவேண்டியது இக்கணம்.
விதிக்க்ப்பட்ட உளி வரிகளாக_
மறுகும் உள்.
திரும்பத் திரும்ப வரைந்தென்ன?
அரைவட்டங்களே நிறைகின்றன.
பருகும் உதடுகளுக்கும் பழக்கோப்பைகளுக்குமான
இடைத்தூரம் ஏழு கடல் மலையாக
வாதப்பிரதிவாதங்களுக்குள்  அடங்கா
வழக்காழம் மொழிநழுவிப் போக
விட்டு விலகியவாரிருக்கும் வட்ட
முழுமை, யதன்
உட்புள்ளி, வெளிச்சுற்று
பரப்பெல்லை, ஆரம், வட்டம், வடிவம்
நிறம்_
வேறேதும் ஒருபோதும்
உள்ளது உள்ளபடி சொல்ல வல்லாமல்
களைத்துச் சோரும்
கை வடித்திருக்கும்
காலந் தோறும்.


45]குருவியும் காபூலிவாலாவும்
வளர வளர வெட்டுப்படும்
சிட்டுக்குருவியின் சிறகுகள்.
கால்கட்டிப் பறக்கவிட்டுச்
சுண்டியிழுக்கும் காலம்.
இனி காற்றின் கதை கேட்க
வரமாட்டான் குட்டித்தோழன்.
வரவர குறுங்கொம்பும், வாயுலகும்
வாலும் விடைபெறும்.
நாலிரண்டில் தரை தட்டும் நடை
பழகவேண்டும் தோள்சுமை.
“விளையாட்டில் எல்லாம்தான் உண்டு!
_எளிதாகப் பகர்ந்தார் நகர்ந்தார்.
தெளிந்தும் களைத்திருக்கும் அகம்.
கன்னிப்பெண்ணுக்குச் சின்ன பொம்மை
கொண்டுதரும் அன்பு
கையறுபடும்.
வில்லடியும் கல்லடியுமான வாழ்வில்
சொல்ல வல்லாமல்
இட்ட கோட்டின் இப்புறமாய் சில
காபூலிவாக்கள்.

No comments:

Post a Comment