Wednesday, June 20, 2012

பட்டியலுக்கப்பால் பரவும் என் கவிதைவெளி சில பகிர்வுகள் _ ரிஷி


பட்டியலுக்கப்பால் பரவும் 

என் கவிதைவெளி


சில பகிர்வுகள்

_ ரிஷி

[1]


அலைமுகம் என்ற தலைப்பிட்ட என் முதல் தொகுப்பில் இடம்பெறும் என்னுரை [1.10.2002]யிலிருந்து....

சில நினைவுகூரல்கள்:

 அறிமுகம்:
இயற்பெயர்- லதா ராமகிருஷ்ணன். 80களிலிருந்து கவிதை எழுதிவருகிறார். பெரும்பாலான மாற்றிதழ்களில் இவர் கவிதைகள் வெளியாகியிருக்கின்றன. அநாமிகா என்ற பெயரில் சிறுகதைகளும், ரிஷி என்ற பெயரில் கவிதைகளும், ல.ரா என்ற பெயரில் கட்டுரைகளும்  எழுதிவருகிறார். மொழிபெயர்ப்புகளும் செய்வதுண்டு}

நன்றி:
80களிலிருந்து இதுகாறும் எனது கவிதைகளை வெளியிட்டுவரும் மாற்றிதழ்கள் மீட்சி, இனி, ஒரு, கனவு, யாதுமாகி, நிகழ், உன்னதம், புதுஎழுத்து, ஆரண்யம், சூர்யோதயா, காலச்சுவடு, காலக்ரமம், இங்கே-இன்று, நவீன விருட்சம், முன்றில், இந்தியா டுடே, கவிதாசரண்... மற்றும் விடுபட்டவை எல்லாவற்றிற்கும்.

ஒரு பிறவியில் பல பிறவிகள் வாழப்படுவதாய்த் தோன்றுகிறதுஇதில், கவிதை எழுதவேண்டிய தேவையை எப்பொழுது உணர்ந்தேன் என்று உறுதியாகச் சொல்லமுடியாமல் இருக்கிறது. கல்லூரி இலக்கியக் கூட்டங் களில், அலுவலகத் தோழர்கள் சார்பில் நடந்தேறும் இலக்கியக் கூட்டங்களில், சில மேடைக் கவியரங்கங்களில் கலந்துகொண்டு, தரப்பட்ட கருப்பொருள் அல்லது தலைப்புகளில் கவிதை வாசித்ததுண்டு.

சமூகத்தை முன்னிலைப்படுத்தி எழுதப்படும் கவிதைகளே இங்கெல்லாம் அதிகமான அளவு எதிர்பார்க்கப்பட்டது. அகவயமான கவிதைகளுக்கான தேவையை மனம் தொடர்ந்து உணர்ந்து வந்தாலும் தன்னைப்  பற்றிய சிந்த  னையே 'பூர்ஷூவா’த்தனமானதாக, ஒரு ‘சுயம்’ மறுக்கும்’ மனோபாவம்தான் சரியோ என்ற சஞ்சலம் மனதைச் சூழ்ந்திருந்த நேரம் அது. அதேசமயம், வறுமையைப் பற்றி எழுதுவதன் மூலமாக இல்லாதவர்களை இன்னொரு வகையான சுரண்டலுக்காளாக்குகிறோமோ, வறுமையை romanticize’ செய்கி றோமோ என்ற கிலேசமும் மனதில் கனமாக அழுத்திக்கொண் டிருந்தது. யதேச்சையாக கணையாழி பத்திரிகை கையில் கிடைக்க, அதிலிருந்த அகவய   கவிதைகள் மனதை ஆசுவாசப்படுத்தின. 1983 முதல் கணையாழியில் எனது சில கவிதைகள் வெளியாக ஆரம்பித்தன.அகவயத் தேவைகளுக்காக வே கவிதை எழுதுவது என்று மனதிற்குள் ஒரு தீர்மானம் வந்தது. கணையாழி ’முஸ்தஃபா’ பக்கத்தில் ‘இவர் கவிதையில் ஒரு பொறி தெரிகிறது’ என்று எழுதப்பட்டிருந்ததைப் படித்தபோதுதான் எத்தனை சந்தோஷம்! அது தொடங்கி மற்ற சிறு பத்திரிகைகளின் பரிச்சயம் ஆரம்பமாகி இன்றுவரை தொடர்கிறது.

நல்லதோ அல்லதோ  நெட்டித்தள்ளும் காலவோட்டத்தில் சிறு பொழுது நம்மை உறையவைக்கும் கனக்குமிழ்களைச் சிற்பமாகச் செதுக்கப்பர்ர்க்கும், அதன் மூலம் வாழ்க்கையை நீட்டித்துக் கொள்ளப் பார்க்கும் ஒரு விழைவும் யத்தனமும் என் கவிதைகளை வழிநடத்துகின்றன. வாழ்க்கையின் சில வலி கூடிய கணங்களுக்கு வடிகால் தேடியும், சில வந்தனத்திற்குரிய, வரப்பிரசாத கணங்களை நிரந்தரமாக்கிக்கொள்ளும் விழைவிலுமாய் கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன். நானூறு பக்கப் புதினத்தை நாலு வரிகளில் அல் லது நாற்பது வரிகளில் சொல்லிவிட முடிகின்ற கவிதையின் வீச்சு என்னை சதா சர்வகாலமும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. கவிதையை எழுத ஆரம்பிக் கும்போது அது நாலு வரிக் கவிதையாகப் போகிறதா, நாற்பது வரிக் கவிதை யாகப்போகிறதா என்று நமக்கே தெரியாத நிலை. எத்தனை முறை சொன் னாலும் சொல்லித் தீராத விஷயங்களாய் சில உள்ளுக்குள் அபூர்வ ஆலா பனையாய் ரீங்கரித்துக்கொண்டே இருக்கின்றன. கவிதையின் ஆரம்பம் முதல் முடிவு வரை பிரக்ஞாபூர்வமாகவே இயங்குகிறேன் என்றாலும் பாசாங் கில்லாமலும் இயங்குவதை இலக்காகக் கொண்டிருக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை எளியார், வலியார் என்ற இரு பிரதானப் பிரிவுகளே உலகில் உள்ளன. இதில், பெண்களெல்லோரையும் அடக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் என்பதாய் ஒற்றை மொந்தையாக்கி ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து வைப்பது  நிறைய நேரங்களில் அவர்களது தனிமனித அடையாளமழிப்பதாகி விடுகிறது. தன்னைப் பற்றிய ஒரு கழிவிரக்கத்தை அவர்களுக்குள் திணிப்பதோடு தன்னுடைய பொறுப்பேற்பையும் பல நேரங் களில் தட்டிக்கழிக்கச் செய்துவிடுகிறது. கவித்துவ ரீதியாய் இத்தகைய பகுப்பு சாதாரணமானவர்களுக்கும் சலுகைகூடிய வழியில் ஒரு அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் அளிப்பதாகிவிடுகிறது. இன்னொரு வகையில் மறுபடியும் பெண்ணை பிரதான நீரோட்டத்திலிருந்து விலக்கி விளிம்படுத்த நிலைக்குத் தள்ளுகிறது. இது போக, பெண் புரவலர்களாகத் தங்களை முன்னிலைப் படுத்திக்கொள்ள முயல்வோருக்கு ஒரு மேடையமைத்துக் கொடுக் கிறது. பெண் எழுதும் கவிதையில் பால்பேதம் சார் புலம்பலும், பிரசவ வாடையும், பாலுணர்வுப் பீறிடலும், அன்னபிற கருப்பொருட்களே இடம்பெறவேண்டும் என்பதான வரையறைகளை பிறர் வகுத்துத்தர வழியமைக்கிறது. கவிஞரின் மனப்பண்பு அர்த்த நாரீஸ்வரமாக அல்லது அரவானியமாக இருக்கவேண்டும் என்பது என் எதிர்பார்ப்பும், அப்படித்தான் இருக்கும் என்பது என் நம்பிக்கையு மாதலால் என் கவிதைகளுக்கான இடமும் அங்கீகாரமும் அவற்றின் தரத்தின் அடிப்படையில் எனக்குக் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் ‘ரிஷி’ என்ற புனைபெயரில் எழுத ஆரம்பித்தேன்.

பாலுணர்வையும் பாலுறவையும் பற்றிக் கவிதை எழுதுவதுகூட சுலபம். ஆனால், மனதின் அழுக்காறுகளை, பகைமையுணர்வை, நபும்சகத்தனங்களை அம்பலமாக்குவதுதான் அசாத்தியம் என்று தோன்றுகிறது.

என்னைத் தாண்டி நான் வாழ்வது என்பது என்னால் நினைத்துப் பார்க்க முடி யாத ஒன்று என்பதாலும், என் கவிதைகளை இந்த உலகில் அனாதையாக விட்டுச்செல்லக் கூடாது என்ற ஒருவித இறுகிய பிணைப்புணர்வினாலும் இதுநாள் வரை என் கவிதை களைத் தொகுப்பாக வெளியிடுவதில்லை என்பதில் உறுதியாக இருந்தேன்.

பல்வேறு காலகட்டங்களில் தொகுப்பாகக் கொண்டுவரச்சொல்லி வலியுறுத்திய தோழர்களை தோழர்களை இன்று நெகிழ்வோடு நினைவுகூரத் தோன்றுகிறது. நிகழ் ஆசிரியர் கோவை ஞானி என் கவிதைகளை தொகுப்பாக்க விரும்பி முன்வந்தபோது வேண்டாமென்று சொல்லி விட்டேன். முன்றில் பத்திரிகையை நடத்திவந்த அரங்கநாதன் சாரும், அவர் மகன் குமாரும் கூட வெளியிட முன்வந்ததாக நினைவு.

என்னுடைய கவிதைகளைப் பிரசுரித்த சிறுபத்திரிகைத் தோழர்கள் பாரை இன்றுவரை நான் பார்த்ததில்லை. என் கவிதைகளை, அவற்றிலிருந்த ஏதோ சில பொருட்படுத்தத்தக்க அம்சங் களுக்காய் தொடர்ந்து பிரசுரித்துவரும் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரி வித்துக் கொள்கிறேன்.

சிறு பத்திரிகையில் நம் கவிதையொன்று பிரசுரமாகக் கண்டு வரவாகும் ஆனந்தமும், அதில் அச்சுப்பிழைகள் இருப்பின் அவை தரும் வலியும் ரூபாய்-டாலருக்கு அப்பாற்பட்ட வரவு -செலவுக் கணக்கு!

வலுக்கட்டாயமாக எதையும் எழுதியதில்லை. எழுதத் தோன்றும்போது, சில அகவயக் காரணிகளால் எழுதத் தூண்டப்படும்போது, அதற்கான காலமும், இடமும் அமையும்போது எழுதுகிறேன். இந்த பாணியில்தான் எழுதவேண்டும் என்று முன் நிபந்தனை எதுவும் எனக்கு நானே விதித்துக்கொண்டதில்லை. அந்த சமயத்தில் எடுத்துக்கொண்ட விஷயத்திற்கு அதனளவில் கூடிவரும் நடையில் எழுதுகிறேன். சில சமயம் மொழிரீதியான பரிசோதனை முயற்சிக ளிலும் இறங்குவதுண்டு. இவற்றில் வெற்றி-தோல்விகள் பப்பாதி என்பதாய் உணர்கிறேன்.

எந்தவகையான ‘பின்பக்க’க் கதவின் வழியாகவும் நுழைந்து கவிதையுலகில் எனக்கொரு இடத்தை ‘குறுக்குவழி’யில் சுலபமாகத் தேடிக்கொள்ள முயன்ற தில்லை. யார் தயவிலும் என் கவிதைகளை ஏற்றிப்பிடிக்க முயன்றதில்லை. ஒருநாளும் கவிதையை உலகாயுத ஆதாயமெதையோ பெறுவதற்கான கருவி யாக, படிக்கல்லாகப் பயன்படுத்தியதில்லை என்பது ஒரு கவிஞனாகவும், மனிதனாகவும் என்னைப் பற்றி நான் நிறைவாக உணரும் விஷயங்கள்.

வழக்கம்போலவே, ‘ஒரு வாசகனாக’ எனக்குத் திருப்தியளிக்காத என் கவிதை களையும் இந்தத் தொகுப்பில் இடம்பெறச் செய்துள்ளேன். வாசகன் என்ற சொல்லை ஒற்றைப் பரிமாண வரையறைக்குள் எதற்கு அடைக்கவேண்டும்?

என் கவிதைகளை தொகுப்பாக்கி வெளியிட முன்வந்த கலைஞன் பதிப்பகத்தாருக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறுபத்திரிகையுலகம் என்ற ஒரு ‘வெளி’ இல்லாவிடில் கவிதை வழியான வடிகாலும், நிவார ணமும் குமிழ்ச்சிற்பத் தருணங்களும் எனக்கு வாய்க்க வழியில்லாமல் போயிருக்கும். எனவே, எனது இந்த முதல் கவிதைத்தொகுப்பை சிறுபத்திரிகையுலகிற்கு சமர்ப்பணமாக்கியுள்ளேன்.

[இன்னுமுண்டு]



பட்டியலுக்கப்பால் பரவும் 

என் கவிதைவெளி - 2


காலத்தின் சில தோற்றநிலைகள் என்ற தலைப்பிட்டு காவ்யா பதிப்பக வெளியீடாக 2005இல் வெளியான என்னுடைய நான்காவது கவிதைத் தொகுப்பிற்கு எழுதியது

சொல்லவேண்டிய சில...

காலாதிகாலம் குடுவைக்குள்ளிருந்து வரும்
பூதம்.
மூச்சுத்திணறி விழி பிதுங்கி
வெளிவந்தாக வேண்டிய நாளின்
நிலநடுக்கங்களை
நன்றாக உணர முடியும் அதன்
நானூறு மனங்களால்.
முதலில் தகரும் குடுவையின்
உறுதியை
அறுதியிட்டபடி நகரும்
பகலிரவுகள்.
பாவம் பூதம்குடுவைகாலம்நான்
நீ யாவும்....


நானே குடுவையாய், நானே பூதமாய், எதுவோ தகர்ந்து,  எதுவோ விடுதலையாகி எழுதப்படும் என் கவிதைகளில் எதிரொலிப்பதும் பிரதிபலிப்பதும் ஒரு மனமா? நானூறு மனங்களா? எல்லாம் என்னுடையவையாஒரு மனதின் கிளைகளோ,  வெவ்வேறு மனங்களின் கூட்டிணைவோ  _  கவிதையை எழுதிமுடித்த பின் எதையும் தெளிவாக வரையறுத்துச் சொல்ல இயலவில்லை. கவிதையை  அபோத’ நிலையில் எழுதுகிறேன் என்பதல்ல. முழுப் பிரக்ஞையோடு தான் எழுது கிறேன்.ஆனால், அந்தப் பிரக்ஞைநம்முடைய பொதுவான பிரக்ஞையிலிருந்து ஏதோ  ஒரு விதத்தில் துல்லியமாக வேறுபட்டிருக்கிறது என்று தோன்றுகிறது. அதனால்தானோ என்னவோ, என் கவிதையை நானும் ஒரு வாசகராகவே படிக்கும் தருணங்களே அதிகம்.

ஒரு விஷயம் அல்லது உணர்வு பூதமாக மனதில் அடைபட்டு மூச்சுத்திணறலை அதிகரித்துக் கொண்டேபோகும்போது அதை எப்படியாவது வெளியேற்றிவிட வேண்டிய அவசரத்தேவையை மனம் அழுத்தமாய் உணர்ந்து அதன்விளைவாய் கவிதை எழுதப்படுகிறது. அல்லதுஓர் உணர் வின் தாக்கத்தில் நாமே பூதமாகி விசுவ ரூபமெடுக்கிறோம் கவிதையில். அல்லதுநானாகியஎனதாகிய இந்த அன்பிற்குரிய பூதம் அத்தனை ஆனந்தமாய்  பீறிட்டு வெளியேறி குமிழ்களை யும்வானவிற்களையும் தன் மொழியால்,  தீண்டலால்,  நிரந்தரமாக்கிக் கொண்டே போகிறது. அதாவதுபோக முயற்சிக்கிறது. அப்படிச் செய்வதன் மூலம் அதனுடைய  பூதகணங்களும்,  குணங்களும்கூட   தாற்காலிகத்தைத் தாண்டிய அடுக்கில் இடம்பிடிக்கின்றன. மேலும்மிகத் தனியாக இந்த பூதம் ஒரு சுமைதாங்கிக் கல்மேல் அமர்ந்துகொண்டு வேறொரு பூதத்தின் வரவைத் தனக்குள்ளிருந்தே எதிர்நோக்கியும்தனக்குள் தானே பழையபடி புகுந்து கொண்டும் கவிதையாய் காலங்கழித்துவருகிறது.

நுண்கணங்களின்  கணக்கெடுப்பே கவிதை என்று சொல்லத்தோன்றுகிறது.   யாராலும்  திட்ட வட்டமாய் எண்ணிச் சொல்ல முடியாத ஒன்றைஉணர்வார்த்தமாய் வகை பிரித்துஅவற்றின் உள் கட்டுமானங்களையும் பகுத்துக்காட்ட மனம் மேற்கொள்ளும்  காலத்திற்குமான பிரயத் தனமே கவிதை. இந்த முயற்சியின் வழி புதிய கருத்துருவாக்கங்கள் சில இயல்பாய் வரவாக லாம். ஆனால்கருத்துருவாக்கங்கள் மட்டுமல்ல  கவிதை. அரூபக்கவிதைகள் என்று எள்ளி நகையாடப்பட வேண்டியவையல்ல. அவை ஒரு மனதின் வழித்தடங்களை முன்வைக் கின்றன. தூலமாக இருப்பவர் கவிஞர் என்னும்போது அவர் எழுதும் கவிதைகள் எப்படி அரூபக் கவிதை களாகி விட முடியும்?

என் கவிதைகள் காலங்கடந்து வாழுமா என்பது பற்றி எனக்கு அக்கறையில்லை. என் காலத் திலேயே அவை பேசப்படுமா என்பதும் எனக்கு ஒரு பொருட்டில்லை.எழுதுவதில் கிடைக்கும் மனநிறைவும்,வலி நிவாரணமும்கலைடாஸ்கோப் காட்சிகளுமே பிரதானம். தனிஆவர்த்தனமே  சேர்ந்திசையாகவும் ஒலிப்பதை என் சக-கவிஞர்கள் பலருடைய கவிதைகளில் உய்த்துணர்ந் திருக்கிறேன். அப்படி என் தனி ஆவர்த்தனமும்  ஒருவேளை சேர்ந்திசையாகலாம்.






No comments:

Post a Comment