Wednesday, May 9, 2012

போகிறபோக்கில் ரிஷியின் 8வது தொகுப்பிலிருந்து

போகிறபோக்கில் 
ரிஷியின் 8வது தொகுப்பிலிருந்து
[ஷாலினி புக்ஸ் வெளியீடு] 



கவிதை என்பது இலக்கியத்தின் ‘சபிக்கப்பட்ட பிரிவாகப் பார்க்கப்படும் காலகட்டம் இது. குறிப்பாக தமிழில். இலக்கியமே கவிதைவடிவில் இயங்கிவந்த மொழியிதில் இன்று அரசு நூலகங்கள் கவிதைத்தொகுப்புகளை ‘பீச்சாங்கை வீச்சாக’ புறமொதுக்கிவிடும் போக்கு நிலவுகிறது. [கடந்த சில வருடங்களாக அரசு நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கப்படவில்லை என்று கேள்வி] இருந்தும் கவிதை எழுதுகிறவர்கள் எழுதியவாறே... வாசிப்பவர்கள் வாசித்தவாறே....

அப்படி கவிதையில்- எழுதுவதிலும், வாசிப்பதிலும்  என்ன இருக்கிறது?

கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்

_ரிஷி





1]  தொடக்கப்புள்ளியிருந்து வெகுதூரம் வந்தாயிற்று-
போகவேண்டிய தூரம் அதிகம் என்ற தெளிவோடு.
சிறுகற்கள் மலைமுகடுகளாய் வழியடைத்த நிலை மாறி
பெரும்பாறைகளும் இன்று துகள்களாகிவிட்ட
ரசவாதம்!
கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்!!
புரியாமல்
கருத்துப்போர்வையில் கற்களைச் சுருட்டியெடுத்துவந்து
கைபோனபோக்கில் என் ஆறெங்கும் இறைத்துக்கொண்டிருக்கும் நீ
எப்போதுமே
ஐயோ பாவம்!



[2]
உன் உன்னும் என்னும் முன்னும் பின்னும்
ஒடுங்கும் ஒருமைக்குள்
எதிர்வினைக்கும் அறவுரைக்கும் இடையே நிறையும்
அகழி மறைத்துக்
கவியும் காரிருள்.
என் என்னும் உன்னும் இன்னும்
என்னென்னவும்
புதிரவிழ்க்கும் எல்லையின்மைக்குள்
இல்லையாகிவிடும் உன் எல்லாமும்!

 3
இருந்தாற்போலிருந்து
ஒரு காலாதீதத் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு
வேர்த்துவிறுவிறுவிறுத்துப் பாய்ந்துவந்து
வழியெங்கும் ஆர்ப்பரித்துக் கொட்டி முழக்குகிறது
அறியாமை புரையோடிய அந்த வரி:

இருண்மை தமிழுக்குப் புதிதோ புதிது

கேட்டு
சங்ககாலம் தொட்டு நவீன தமிழ்க்கவிதைவெளியெங்கும்
வாயார வயிறுகுலுங்க கவிகள் சிரித்துக்கொண்டிருப்பதைப் பார்க்க
எத்தனை மகிழ்ச்சியாயிருக்கிறது தெரியுமா?
காயப்படுத்தும் சூழலிலேயே வாழப்பழகியவர்கள்;
கழுவேற்ற மேடை வெகு பரிச்சயமானவர்கள்;
வதைமுகாம்களே வசிப்பிடமானவர்கள்
வடிகட்டிய பாழ் கண்டு
விழுந்து விழுந்து சிரிக்காமல் என் செய்வார்கள்?

இறந்துபோய்விட்டவர்களில் புதைக்கப்பட்டவர்கள்
கல்லறைகளில் புரண்டு சிரிக்க,
எரிந்துவிட்டவர்கள் திரும்ப எழுந்துநின்று
குதிக்கிறார்கள் “ஹே, இது என்ன புதுக்கதை என்று!

இருந்துவரும் கவிகளின் செவிப்பறைகளை அந்த உச்சபட்ச அபத்த வரி
சென்றடையும் நேரம்
நிச்சயம் சீறத்தொடங்கும் சில எரிமலைகள்.

சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா!

சொன்ன பாரதியாரை வெறும் பிரச்சாரக்கவி
என்பாரை
‘கல்லுக்குள் தேரை கவனித்துக் கொள்ளும்.

 மெல்ல
சன்னமாய் என் காதுகளுக்குள்ளும் ரீங்கரிக்குமாறு
சில்வண்டிடம் வேண்டிக்கொண்டு
தொடரும் என் பயணம்.

4

சாலையோரங்களில் சில வீடுகள்
சிலவற்றில் வெளியே அமர்விடங்கள் உண்டு.
இளைப்பாற வரும் வழிப்போக்கர்கள் பலவகை.
அடுத்தவருக்கு இடம் தராமல் தம்மை விரித்துப் பரப்பிக்கொள்ளும் சிலர்
‘அதனாலென்ன பரவாயில்லைஎன்று தரையமரும் சகபயணியை
சீடராக வரித்துக்கொண்டு சிட்சையளிக்கப் புறப்பட்டுவிடுவார்கள்.
[பீடம் கிடைக்க வேறேது கதி?]
இதற்கு கால்வலியே மேல் என்று எழுந்துகொண்டுவிடுபவரை
வழிமறித்து பிடித்திழுத்து செவிப்பறை கிழியக்கிழிய
சொல்லித்தருவார்கள் -
சொல்லும் சொல்பழகாதவர்கள்.

சொக்கப்பித்தளை யிளிப்பை
சொல்ல வல்லாயோ கிளியே...


[5]
அன்பிற்காகும்;
அவதூறுக்காகும்.
ஆசுவாசத்திற்காகும்;
அக்கப்போருக்காகும்.
அறிவுக்கூடமாகும்;
அதிகாரபீடமாகும்......

அகழ்வாரைத் தாங்கும் நிலம்.

அதுதானோ திண்ணையும்?

 6

செல்வழியெங்கும் பாய்ந்தோடிக்கொண்டிருக்கிறது
சிந்தா நதி யொன்று!
படகில்லை,
நீந்தத் தெரியாது,
சிறகில்லை,
பறக்கமுடியாது....
ஆனாலுமென்ன?
ஏழு கடல் ஏழு மலை தாண்டி
அந்தப் பச்சைக்கிளியைக் கண்டடைவதுதானே
வழிச்செலவின் வரவு
என்று
சுழித்தோடியவாறு அறிவுறுத்துகிறது ஆறு!

7
தெம்மாங்குப் பாட்டு தெரியாது.
கர்நாடக இசை படித்ததில்லை.
இந்துஸ்தானி, ஜாஸ், ராக், கஸல்
 என்று எத்தனையெத்தனை  உலகில்!
எதிலுமே பயிற்சியில்லை.
ஆனபோதும், குரலெடுத்துப் பாடவேண்டுமாய் எழும்
இந்தத் திருத்தினவை என்செய்ய....?
மெய்யோ பொய்யோ
உளதாம் குரல்வளம்;
உறுதியாய் கிளம்பும்தான் சுருதிபேதம்.
உச்சஸ்தாயியை எட்டமுடியாது;
பிசிறு தட்டும்.
நிச்சயமாய்த் தெரிந்தாலும்
இச்சமயம் வனாந்திரத்தில் எதிரொலிக்கும் குரலாய்
விரியும் இந்தப் பெருங்கனவை என்செய்ய?
பாடிவிடவேண்டியதுதான்!


 8
அதெப்படியோ தெரியவில்லை
அயர்வையெல்லாம் மீறி
அவ்வப்போது என் நடையொரு துள்ளலாக
மாறிவிடுகிறது!
தேர்க்கால்களாக
புரவிப்பாய்ச்சலாக
அவ்வளவு ஏன்
சற்றுமுன்னர் தான் சிந்நேரம்
மின்னலாகியிருந்தேன்!

 9
 உனக்கு நீயே என்ன பிதற்றிக்கொண்டு போகிறாய்?
_தாழப்பறந்துவந்து அன்போடு என் தலைதட்டிக் கேட்டது கொக்கு.
மழலைப்பேச்சு மற்றவருக்குப் புரியாது மக்கு! மக்கு!
என்று செல்லமாய் அதன் நீள்மூக்கை நீவிவிட்டபடி கூறினேன்.
இன்னுமா பாதைக்குப் பக்குவப்படவில்லை? என்று கடிந்துகொண்டது
கரையோர முதலை.
காத்திரு என்று வேண்டிக்கொண்டேன்.
நாளை மற்றுமொரு நாளாகாத நாளில் தருவேன்
நல்லதோர் பதிலை.



 10
 அருகேயொரு வண்ணத்துப்பூச்சி பறந்துகொண்டிருக்கிறது-
அற்புதச் சிறகுகளோடு!
ஆனால், எனக்கு ஆறறிவு இருக்கிறது!.
அந்த அசோகமரம்தான் எத்தனை உயர்ந்தோங்கி
வளர்ந்திருக்கிறது!
ஆனால், எனக்கு ஆறறிவு இருக்கிறது.
வழியில் காணக்கிடைத்த ஆமையின் ஓடு
அத்தனை உறுதியானது!
ஆனால், எனக்கு ஆறறிவு இருக்கிறது.
கருங்கல்லின் சொரசொரப்பும் கூழாங்கல்லின் வழுவழுப்பும்
தொடுவுணர்வின் நல்வினைப்பயனாகிறது!
ஆனால், எனக்கு ஆறறிவு இருக்கிறது.
நாயின் மோப்பசக்தி எத்தனை நம்பிக்கைக்குரியது!
ஆனால், எனக்கு ஆறறிவு இருக்கிறது.
சிலந்திவலையின் தொழில்நுட்பம்
சொல்லிலடங்காது!
ஆனால், எனக்கு ஆறறிவு இருக்கிறது.
ஆனால்... ஆறறிவில் என்ன இருக்கிறது.....?

11
வீதியெங்கும் சிதறிக்கிடக்கின்றன _
 வெட்டரிவாள்கள்;
வறுமையின் பரிமாணங்கள்;
பாதிக்கால்கள்;
பலியான நீதிநியாயங்கள்
பிய்த்தெடுத்த நகக்கணுக்கள்;
பொய்த்துப்போன வாக்குறுதிகள்;
வெறியின் விரிவுகள்;
வேறுபலவும் நிரம்ப
உலர்ந்தும் உலராமலும் பெருகியவாறிருக்கும் குருதியில்
மொய்த்திருக்கும் ஈக்கள் நோய்க்கிருமிகளைப் பரப்பியவாறு...
கடந்துசெல்ல இயலவில்லை-
நினைப்பிலும் நடப்பிலும்.
பயணத்தில் இந்தக் கையறுநிலை நேராதிருந்தால்
எத்தனை நன்றாயிருக்கும்....
ஆறாது ஏங்கிச்சோரும் பித்துமனதைக்
 காக்க காக்க கவிதை காக்க.....











No comments:

Post a Comment