Monday, May 31, 2010

பொம்மிக்குட்டியின் கதை! _ ரிஷியின் கவிதைகள்

'ரிஷி'யின் கவிதைகள்

I

பொம்மிக்குட்டியின் கதை!


1
தலையாட்டி பொம்மைகளை யாருக்குத் தான் பிடிக்காது?
அதுவும், சின்னக்கண்ணனின் பொம்மை அத்தனை கலைவண்ண
கைநேர்த்தியோடு
கிடைக்கோடாய் அசைவதைத் தவிர்த்து
மேலுங்கீழுமாய் மட்டும் முகம் ஆட்டிக் காட்டும்!
எதைச் சொன்னாலும் கண்சிமிட்டிப் புன்சிரிக்கும்.
கைகால் இயக்கங்களெல்லாம் குழந்தைக் கண்ணனின் மனம்
போன போக்கில்; அல்லாது தலையாட்டி பொம்மைக்கு
ஏது தனிப்பட்ட இயக்கம்...?
குறும்புச் சிறுவனின் கைகளிலும், மடியிலும்
தயக்கமில்லாமல் பொருந்தியமர்ந்திருக்கும்.
தனக்குப் பிடித்தமான பெயரை தலையாட்டி பொம்மைக்குத் தந்து
அதைத் திரும்பத் திரும்பக் கூவியழைத்துக்
குதூகலிக்கும் குழந்தை...
"பொம்மிக்குட்டீ வா.. வா.. பூ பூவாய் முத்தம் தா..."
பஞ்சுப்பொதியாய் பொம்மையின் உடல்.
பிஞ்சுக் கைகள் மென்மையாய் வருடித் தரும்.
துஞ்சும் நேரமெல்லாம் பொம்மிக்குட்டியைத்
தன்னருகே பத்திரப்படுத்திக் கொள்வான் சின்னக் கண்ணன்.
ஆனா- ஆவன்னா, A B C, 1 2 3...


அவனுக்குத் தெரிந்தமெல்லாமும்
சொல்லித் தரப்படும் பொம்மிக்குட்டிக்கும்.

2

பள்ளிக்குப் போய் வந்து கொண்டிருந்த சின்னக்கண்ணன்
கூடப் படிப்பவர்களைப் பற்றியெல்லாம் தினமும்
வீடு திரும்பிய பிறகு
வண்டிவண்டியாய் பொம்மிக்குட்டிக்குக் தவறாமல் கதை சொல்வான்.
கண்கொட்டாமல் கேட்டுக் கொண்டிருக்கும் பொம்மிக்குட்டி.
அடிக்கொரு தரம் தலையை ஆட்டும் - மேலுங்கீழுமாய்.
"அச்சுதன் அடித்தான், அவனைத் திருப்பியடித்தேன் - சரிதானே?"
"ஆம், ஆம்". ஆனால்...
"முகுந்தன் என்னுடைய பென்சிலை உடைத்துவிட்டான் என்பதால்
அவனை நையப் புடைத்து விட்டேன்" என்று சின்னக் கண்ணன்
சொன்னபோது
செய்த குற்றத்திற்கு தண்டனை அதிகம் என்றுதோன்றியது
பொம்மிக்குட்டிக்கு. சற்றே தயக்கமாய்
தலையை ஆம் - இல்லையாய் ஆட்டியது பொம்மை.
உயிருள்ளது பொம்மை என்று நம்பும் சிறுவன் கொஞ்சம்போல்
திகைத்துச் சினந்தான்.
தகப்பன்சாமி தான் என்றாலும்
"எனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காய் தருணுடைய கையைக்
கடித்துக் குதறி விட்டேன், கத்தியாலும் வெட்டி விட்டேன்"
என்று பெருமைபீற்றிக்கொண்டபோது
பொம்மிக்குட்டியின் தலை தவிர்க்கமுடியாமல் இடவலமாய்
ஆட ஆரம்பித்ததைக் கண்டு
மட்டுமீறிப் புகைந்த கோபத்தில் சிறுவனின் கரம்
பொம்மிக்குட்டியின் சிகையைக் கொத்தாய்ப் பிடித்து
கதவிற்கு அப்பால் வீசியெறிந்தது.
'பதிலுக்கு புதிய பொம்மைகள்
காசு கொடுத்தால் கிடைத்துவிட்டுப் போகிறது...
அதுவும், ஓசியில் கிடைத்ததுதான் பொம்மிக்குட்டி.
போதாக்குறைக்கு, நிறைய நைந்துபோய் விட்டது.

ஆய் பொம்மை; பீத்த பொம்மி..'

3

காரிருள் கவிய விழுந்தது விழுந்தவாறு
கிடந்தது பொம்மிக்குட்டி.
முதுகெலும்பு முறிந்ததுபோல் ஒரு சுளீர் வலி படர
உயிர்ப்பின் அடையாளம் பொம்மைதானோ வென
தனக்கெட்டிய பட்டறிவில் படித்துக் கொண்ட
விடையே கேள்வியாக அனத்திக் கொண்டிருந்தது நெடுநேரம்.
பின், கனவே போல் காற்றுத் தடத்தில் கிளம்பிச் சென்று
கதவிடுக்கில் மனம்நுழைத்துப் பார்த்தது.
பரிச்சயமான அறை.
பழகிய சின்னக்கண்ணன் வழக்கம்போல்
கைகொட்டிச் சிரித்தவாறு கட்டளையிட்டுக் கொண்டிருக்க,
எதிரே
சாவிகொடுத்தால் ஓடும் பொம்மை_
சல்யூட் அடிக்கும் பொம்மை_
சிரியென்றால் சிரிக்கும் பொம்மை_
சீறிபாயச் சொல்லி தள்ளிவிட்டால்
சரவென்று நெளிந்தோடும் நாகப்பாம்பு பொம்மை_
குத்தினாலும், எத்தினாலும் சத்தமெழுப்பாமல்
சிறுவனின் வீரசாகச் செயல் என்பதாய்
பெருமையில் பூரிக்கும் கைதட்டி பொம்மை_
'வெல்கம்' பொம்மை,ரிம்-ஜிம் நாட்டிய பொம்மை_
பெருந்தனக்காரர் பரிசளித்த பொம்மை_
பல வருடங்களுக்குப் பிறகு சாவகாசமாய் ஊரைப்
பார்க்கத் திரும்பி வந்திருக்கும் உறவொன்று
வாங்கிவந்த பொம்மை_
விரல்சொடுக்கிற்கேற்ப விரைந்தோடி
சுவற்றில் முட்டி நிற்கும் பொம்மை_
அலங்கார பொம்மைகள்,அவதார பொம்மைகள்_
வைக்கோல் பொம்மைகள், வெண்கல பொம்மைகள்_
பைக்குள் போட்டுக் கொள்ளுவதற்கேற்ற சிறிய பொம்மைகள்_
பூதாகார கரடி பொம்மைகள்...

அறையில் ஒரே நெரிசலாயிருந்தது.

4

பிடிக்கவில்லை யென்று கடித்துத் துப்பியிருந்த பொம்மை
பரணிலிருந்து கீழே இறங்கி வந்திருந்தது.
பல ஆண்டுகளுக்கு முன் இன்னொரு குழந்தையின்
கைக்குப் போய்ச் சேர்ந்துவிட்ட பொம்மையும்
அருகமர்ந்து கொண்டிருந்தது.
கிழிந்த பொம்மைகள் சிலவற்றிற்கு
ஆயத்தஆடைகள் அணிவித்து
அழகுபார்த்துக் கொண்டிருந்தான் சின்னக்கண்ணன்.
சிறுவனின் கண்களே உதடுகளாய், வெளிப்பட்ட கூற்றுக்கு
மாற்று குறையாமல்
ஆடிக் கொண்டிருந்த தலைகள்
பொம்மைகளின் மேலும், கீழுமாய்.
காரியார்த்தமாய் வால்களைச் சுருட்டிக் கொண்டு
கூர்வளைநகங்களை செல்லப்பிராணிகளாய்
உள்ளிழுத்துக் கொண்ட வாக்கில்
அமர்ந்துகொண்டிருப்பவைகளைக்
காட்டும் அடையாளம் காலம்
எனப் பின்னேகி
பஞ்சுப் பிரிகளாய்
வெளியில் கலந்து திரியும்
பொம்மிக்குட்டியின் குரல் எட்டுமோ
உன்னை என்னை நம்மை...?


"நீயும் பொம்மை, நானும் பொம்மை,
நினைத்துப் பார்த்தால் எல்லாம் பொம்மை"


II
சிலரின் கைகளில் விமர்சனம்

வெண்டைக்காய்த் துவையல் செய்வது எப்படி என்று
தான் கற்றுக் கொண்ட விதத்தை
சுருக்கமாக விவரித்தவாறே
தனது விமர்சனத்தைத் தொடங்குவார் அவர்-
பெரும்பாலும் 'தேறாது' என்ற
பிள்ளையார்சுழியோடு.
கையிலுள்ள கவிதைத் தொகுப்பிலிருந்து
அங்கொன்றும், இங்கொன்றுமாய் நாலைந்து வரிகளை
கைபோன போக்கில் கிள்ளியெடுத்து,
கால்பார்வையில் எடைபோட்டு,
"கடைவிரிக்கலாம்" என்று அனுமதி கொடுத்து
கூடவே "கொள்வாரிருக்க மாட்டார்" என்றும்
ஒரு மிதி மிதித்து
"நிச்சயமாய் நல்லாத் தான் எழுதியிருக்கார்" எனச் சொல்லி
உடனே
'கவிஞன் நிம்மதிப் பெருமூச்சு விடலாகுமோ வென
"கடனே யென்று எழுதிய கவிதைகள் சில,
சிவனே யென்று எழுதிய கவிதைகள் சில,
மாத்திரம் இல்லாதிருந்தால்-
மூத்திரம் என்ற சொல் மட்டும் சிறுநீர்
எனத் தரப்பட்டிருந்தால்,
காத்திரம் கூடியிருக்கும்", என்று
மீண்டும் தன் கூண்டுக்குள்ளிருந்து
காலத்தால் கந்தலான கவிதையொன்றை
ஞாலத்தினும் சாலப் பெரிதாய் எடுத்துக் காட்டுவார்.
"வடித்தால் சிற்பம்-
பொடித்தால் பல்பம்-
மடித்தால் பொட்டலம்-
விரித்தால் வரைபடம்-
என் எட்டாவது வகுப்பிலேயே கற்றுக் கொண்ட
வாழ்க்கைப்பாடம் இது"வென
அபசுரத்தில் ஆலாபனை செய்து
பல்லவி, அனுபல்லவி, சரணம் பாடி
நாத விற்பன்னர் ஆவார் நமது விமர்சகர்!
காதலோ, சாதலோ, பெண்ணியமோ, விண்ணியமோ-
ஆதலினால் அனைத்துக் கூட்டங்களிலும் முதல் வரிசையில்
நெஞ்சுயர்த்தி யமர்ந்தவாறு மேடையைக்
கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பார் இன்னொரு விமர்சகர்.
அவர் கடைக்கண்ணிலிருந்து எவரும் தப்ப முடியாது.
அதி முக்கியமாக, பணம் பதவியுள்ள படைப்பாளிகள்.
அதற்கும் மேல், இருக்கவே இருக்கிறது தொலைபேசி!
சக கவிகள் சொல்லாத சேதிகள் பலவற்றை
வீடு வீடாய், அரங்கு அரங்காய்ப் போய்த் திரட்டியெடுத்து,
தேவையான, தனதேயான
மேலதிகக் குறிப்புகளோடு தருவதற்கென்றே உண்டு
சில நீக்குபோக்கு மேம்போக்குக் கவிஞர்,கவிதாயினிகள்.
வேண்டும்போது அவற்றில் ஏழெட்டை
வெட்டி யொட்டி
விமர்சனமாய் சுட்டு வினியோகிப்பார்
வேறொரு விமர்சகர்.
வெகுண்டெழுவார் இன்னொருவர்:
"கப்பம் கட்டச் சொல்பவனும்
கவிதை கட்டச் சொல்வானோ..?
வெல்வானோ இக்கவிஞன்?
சொல்வேனோ நானும் இவனைக் கவியென...
நான் காணா வரியிடை வரிகளைக் காணும் கண்கள்
அவிந்து போகக் கடவது
அவனிவனென ஆயிரம் கவிஞர்கள்
யாரைச் சொன்னால் எனக்குப் பயனுண்டோ
அவர் பேர் கண்டிப்பாக இடம்பெறும்
என்றும் மாறியவாறிருக்கும் என்
தரநிர்ணயப்பட்டியலில்".
"பாரீஸ் இலக்கிய விழாவுக்குப் போகக் கிடைப்பது முதல்
பாரீஸ் கார்னரில் அலைந்து திரிந்து ஆரஞ்சுப் பழங்கள்
வாங்கித் தருவது வரை,
பெட்டி தூக்குவது முதல்
போற்றிப் பரவுவது வரை
பயனென்றால் ஒன்றா, இரண்டா - எடுத்துச் சொல்ல...?
திறனாய்வுப் பேராசானாய் நான் துதிக்கப்பட
தொண்டரடிப்பொடியார்கள் அதிகம் தேவை.
கவிதையெழுதுபவன் கவிஞன் எனில்
அவனையே எழுதுபவன் நான்;
அவன் கவிதை கவிதையாவதும் என்னால் தான்.
கோர்வையாய் நான்கு வார்த்தைகள் கிடைத்தாலும் போதும்
நாவாட சொல்லியா தர வேண்டும்...
ஆடுவேன், பாடுவேன், சுயங்கூடிய கவிஞர்களை
அடங்காப்பிடாரிகளென ஓட ஓட விரட்டுவேன்.
தடுக்கி விழுந்தாலும் பரவாயில்லை-
தாமதமில்லாமல் சாமரம் வீச ஆள் சேர்க்க வேண்டும்..."
கவிதையில் பூடகத்தன்மை யிருந்தால்
"அது கச்சடா" என்பார்.
அட கஷ்ட காலமே_
கருத்துரீதியாய் பொருதும் கதியற்று
இஷ்டதெய்வத்தைத் துணைக்கழைத்தவாறிருப்பார்
இன்னொரு விமர்சகர்.
மூலமே சூன்யமென்று ஞானம் பெற்றார் நம்
முன்னோர்கள் பலர்.
ஞானமே சூன்யமாகிப் போய் விட்டால்
நற்கதியேது ஆன்மாவுக்கு?
கொட்டு முரசே,திக்கெட்டும் கொட்டு முரசே!
தன்முனைப்புத் திறனாய்வாளர்கள் கொட்டம் அடங்கவே!
விட்டு விடுதலையாவோம் எனக் கொட்டு முரசே!
ஒற்றைக் குரல் விமர்சனம் ஒழிக ஒழிகவே!!


III
குகை என்பது ஓர் உணர்வுநிலை


1)
காற்றாடிகளாக முடியாத காகிதத் துண்டு
துணுக்குகள் என்றாலும்
சொடுக்கியிழுக்கும் கைகளின் பிடியில்
சிக்காத பூரணத்துவம் கொண்டவை.
தலைக்கு மேலே சுற்றிச் சுழன்று
தரையிறங்கிக் கொண்டிருந்தன.
விழுந்த இடம் பொசுங்க
எழுந்த பிணவாடை
உனக்கு துர்நாற்றமென்றால்
எனக்கு சுகந்தம்.
அகராதியிலடங்காது இந்த மாற்றம்;
இரண்டறக் கலந்திருக்கும் இருட்குகையில்.

2)
குகைவாயிலில் தினமும் மாலை
பீறிட்டுயரும் ஊற்றைப் பார்ப்பதில்
வரவாகும்
நீர்த்துப் போகாத பரவசம்.
அன்றும் பார்த்துக் கொண்டிருந்தபோது
செங்குத்தாய் உயர்ந்து விரிந்து
பரவியது
செந்நிறத் தண்ணீர்.
வண்ண விளக்கைத் தேடிய கண்களுக்குத்
தட்டுப்பட்டது
வெட்டுண்ட மனமொன்று.
கிளம்பியது குருதியென்று விளங்கியதில்
கலங்கி
வாலைச் சுருட்டிக் கொண்டு குகைக்குள்
ஒடுங்கிக் கொண்டது காட்டுவிலங்கு.

3)
தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தது
தன்னைத் தானே.
கண்ணில் ததும்பிக் கண்ட வலியைக் கண்டு
வேடிக்கையாக இருந்தது.
காக்கைக் கொண்டாட்டமல்ல.
'உண்டென்றால் உண்டு; இல்லையென்றால் இல்லை'.
வலியும், இழப்பும், அவமானமும்
கையறுநிலையும் கூட
கடவுள் தான்.
குகையிருளில் பலவீனமாய் படுத்துக் கிடக்கும்
பெண்புலியின்
புண்பட்ட மென்மார்பை ரணப்படுத்துவதாய்
வீசியெறியப்படும்
எலும்புத் துண்டத்தால் எப்படி வயிறு நிறையும்?
தன்னையுந்திக் கொண்டு எழுந்து புறப்பட்டால்
தானே கிடைக்கும் பொழுதும் இரையும்.

4)
கண்களை இடுக்கிக் கொண்டு காத்து நின்றாள்
பார்த்த விழி பூத்து.
பூப்பெய்திய நாள் நினைவுக்கு வரவில்லை.
பசிக்கிறது என்றால் அதைக் கொச்சையாகப்
பொருள்பெயர்த்து
பெருங்குரலெடுத்துச் சிரிக்கத் தயாராய்
நாலாயிரம் பேர்.
ஊர் மறந்துவிட்டது.
நசநசவென்று பெய்யத் தொடங்கிவிட்டது
மழைமனம்.
வசவுச் சொற்களின் நிண ருசியை
வாய்க்குள் உணர்ந்தவளாய் மீண்டும் குகைக்குள் நுழைந்தவாறே
முனகிக் கொண்டாள் மூதாட்டி:
காசு தராமலே கிடைப்பாள் என்றாலும்
கிழப்பரத்தையைப் புறக்கணித்தல் தானே
குடும்பத்தலைவர்களுக்கு அழகு...

5)
வெளியுலகின் இடையூறின்றி வேண்டுமட்டும் கூடிக்களிக்க
இந்தக் குகையைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட பெண்புலி.
பூனையாகி புதைந்து கொண்டது
அடுத்துப் படுத்துக் கிடந்த இணையின் அடிவயிற்றில். கண்துஞ்சிய நேரம் போக மீதி காலமெல்லாம்
நக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தது நேசமிகுதியில்.
ஆடாமல் அசையாமல் படுத்தவாறே
பங்கெடுத்துக் கொண்டிருந்த இணையின் மனதில்
நிலைகொண்டிருக்கக் கூடும்
அடுத்த வேளைக்கான இரையின் நினைவு.
சிந்தாநதியொன்று குகையின் அடியில் சீராக
ஓடிக் கொண்டிருந்தது.
பார்த்ததில்லை என்றாலும் அதன் ஒலிகேட்டுத்
தண்ணெனக் கனியும் பெண்மனம்.
குகைப்பாறையின் திண்மையைக் கொண்டாடுவதாய்
மறுபடி மறுபடி முகர்ந்து பார்க்கும்.
வினைமுடித்ததாய் வெளியேறி மறையும் இணையின்
தளதளவென்று பொலியும் வாலைப் பார்த்து
களிப்பு பெருகும்.
'பாவம், எவ்வளவு தொலைவு செல்ல வேண்டுமோ' என்று
தனக்குள் கேட்டுக் கொள்ளும்,
விசனமும், கரிசனமுமாய்.
திரும்பி வரும்போதெல்லாம் விருந்துண்ட கிறக்கமாய்
நாவைச் சுழற்றி மிச்ச ருசியை அசைபோட்டவாறிருக்கும்
இணையின் தரிசனத்தில்,
ஒரு துண்டு இறைச்சியும் தனக்குத் தரப்படவில்லை என்ற
நிதர்சனம் ஓரங்கட்டப்படும்.
திரும்பாமலே போகும் நாட்களில்
திரும்பாமலே போயிற்று ஒருநாள்.
இரண்டு மூன்று நான்காய் உருண்டோடிய பொழுதுகளில்
சுருண்டு கிடந்தது பெண்புலி, குகையின் ஒரு மூலையில்.
இதுநாள்வரை இருளிலேயே ஆனந்தமாய்க் கண்மூடி
மல்லாந்து கிடந்ததில்
கடந்துபோய்விட்ட காலத்தின் நீள்பரப்பு
சுருக்கென்று தைக்கிறது பிரக்ஞையில்.
சற்றே திரும்பிப் படுத்தபோது
பக்கவாட்டில் புதரொன்று முட்களோடு வளர்ந்திருப்பது
புரிந்தது.
அதிலிருந்து கேட்டுக் கொண்டிருக்கும் சீறலொலி
பிரமையாக இருக்கலாம், அல்லது,
பாம்பினுடையதாக இருக்கலாம்.
பலவீனம் மனம் உடலாக
மெதுவே எழுந்து நின்றது.
தலை படீரென்று இடித்தபோது தான்
குகையின் மேற்புறம் சரிந்திருப்பது தெரிந்தது.
மூச்சடைத்தது.
முன்னோக்கி எடுத்து வைத்த கால் பதிந்த இடம்
ஒரு பெரும்பள்ளத்தில் புதைய
பின்னுக்கிழுத்த வேகத்தில்
முதுகு சாய்ந்த இடத்திலிருந்த பாறை பெயர்ந்து
மோதித் தள்ளியது.
முன்மண்டையும், மூக்கும் நசுங்கி
குருதி பெருகத் தொடங்க
எப்படியாவது வெளியேறி விட வேண்டும் என்ற
விருப்பு ஒரு வன்மமாக
மீண்டும் புலியாகி
ஒரே பாய்ச்சலில் வெளியேறிக் கொண்டிருக்கும்
பெண்புலியின் உடலெங்கும் படரும்
தண்காற்று
இன்னொரு வாழ்வாய்.

ramakrishnanlatha@yahoo.com
Copyrightthinnai.com

No comments:

Post a Comment