Monday, February 9, 2026

அவரவர் – அடுத்தவர் ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அவரவர் – அடுத்தவர்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

* சமர்ப்பணம்:
கவிதைப் பிதாமகர்களுக்கும்
‘க்ரிட்டிஸிஸ’ப் பீடாதிபதிகளுக்கும்
....................................


‘ஆவி பறக்கக் காப்பியருந்தினேன்’ என்று
அதிநவீனமா யொரு வரி எழுதியவர்
‘அருமையின் அரிச்சுவடியும் அகராதியும் இஃதே’ என்று
ஆட்டோகிராஃப் இட்டு முடித்தபின்
'தன் வலியை உலகக்கண்ணீராகப் புலம்பினால்
கவிதையாகிடுமா'வென
அடுத்த கவியை இடித்துக்காட்டி
‘நிலம் விட்டு நிலம் சென்றாலும்
நகம்வெட்டித்தானேயாகவேண்டும்’ என்று
தன் கவிதையின் இன்னுமொரு வரியை எழுதிவிட்டு.
பின்குறிப்பாய்,
‘கவிதைவரலாற்றில் க்வாண்ட்டம் பாய்ச்சல் இதுவென்றால்
ஆய்வுக்கப்பாலான சரியோ சரியது கண்டிப்பாய்’
எனச் சிரித்தவாறு முன்மொழிந்து வழிமொழிந்து
"வந்துபோன என் வசந்தம் தந்ததொரு தனி சுகந்தம் என்று
சொத்தை ‘க்ளீஷே’க்களைக் கவிதையாக்கி
தத்துப்பித்தென்று உளறி வதைக்கிறாரெ"ன
சக கவியைக் கிழிகிழித்து
சத்தான திறனாய்வைப் பகிர்ந்த கையோடு
"முத்தான முத்தல்லவோ, என் முதுகுவலி
உலகின் குத்தமல்லவோ" என
கத்துங்கடலாய்க் கண்கலங்கிப்
பித்தாய் பிறைசூடிப் பிரபஞ்சக் கவிதையாக்கி
மொத்தமாய் மேம்படுத்திக்கொண்டிருக்கிறார்
வெத்துக்காகிதத்தை!
(*தனிமொழியின் உரையாடல் – கவிதைத் தொகுப்பிலிருந்து)

அடியாழம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அடியாழம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

உண்மை சுடும் என்றார்கள்
உண்மை மட்டுமா என்று உள் கேட்டது
உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா என்றார்கள்
எதற்கு ஆக வேண்டும் என்று உள் கேட்டது.
ஊரோடு ஒத்துவாழ் என்றார்கள்
யாரோடுமா – அது எப்படி என்று உள் கேட்டது.
காரும் தேரும் வேறு வேறு என்றார்கள்
நான் சொன்னேனா ஒன்றேயென்று
என்று உள் கேட்டது.
மௌனம் சம்மதம் என்றார்கள்
உனக்கா எனக்கா என்று உள் கேட்டது.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்றார்கள்.
முற்பகல் செய்தா பிற்பகல் விளைகிறது என்று உள் கேட்டது.
தர்க்கம் குதர்க்கம் என சொற்கள் சரமாரியாக சீறிப்பாய
அர்த்தம் அனர்த்தத்தை அசைபோட்டபடி
உறக்கத்தில் ஆழத் தொடங்கியது உள்.
All reactions:
2

இதன் மூலம்…. ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 இதன் மூலம்….

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

மூல கவிதையில் ’குரல்வளையில் சிக்கிக்கொண்ட கனன்றெரியும் கங்கு’ என்றிருந்தது
மொழிபெயர்ப்பில்
’கனன்றெரியும் கங்கின் குரல்வளையில் சிக்கிக் கொண்டு’ என்றானதில்
ஏதும் தவறில்லை யென்பாரும்
எல்லாமே தவறாகிவிட்டதென்பாரும்
இதுவே மொழிபெயர்ப்பின் creativity என்பாரும்
இல்லையில்லை atrocity என்பாரும்
இஃதன்றோ மொழிபெயர்ப்பின் தனித்துவம் என்பாரும்
இதுவொரு கேடுகெட்ட தடித்தனம் என்பாரும்
கிசுகிசுப்பாய்த் தர்க்கித்தவாறிருக்க
நமுட்டுச்சிரிப்போடும்
நிஜமான வருத்தத்தோடும் சிலர்
மெல்ல நகர்ந்துவிட
இவையேதுமறியாது அருள்பாலிக்கும் அறியாமையில்
மொழிபெயர்ப்பாளர் ‘லைக்’குகளைக்
கணக்கிட்டுக் கொண்டிருக்க
அணைய வழியின்றி அந்தக் கங்கு
குரல்வளையில் இன்னமும் கனன்றெரிந்து
கொண்டிருக்கக் காண்போம் –
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்....

அன்புப்போலிகள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அன்புப்போலிகள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


எல்லோருக்கும் நல்லவராக இருப்பதாகக் காட்டிக்கொள்பவர்களிடம்
அன்பு ததும்பிக்கொண்டிருப்பதற்கு பதிலாக
தன் பெருந்தன்மை குறித்த கர்வமே அதிகம்.
கூடவே அதில் பாசாங்கும் பயமும்
பிழைப்பிற்கான யத்தனமும்.
எதிரியற்ற போரில் வெல்லும் பிரயத்தனமும்.
குதிரையை கழுதையென்றாலும் மறுத்துப்பேசத்
தடுத்துவிடும் தோழமை யென்ற
கணக்கும்.
எனத் தெரிந்து பல காலமாகிறது
எனக்கும் உனக்கும்.
முன்பும் பின்பும் அன்புப்பழமாக
அனைவருக்குமானவராக
நெஞ்சு நிமிர்த்தி புன்னகைத்துக்
கொண்டேயிருப்பவரிடம்
கேட்கவேண்டும்
பதில் கிடைத்துவிட்ட அந்த ஒரே கேள்வி:
நீங்கள் நல்லவரா? கெட்டவரா?

சதுர நிலவின் மும்முனைகள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 சதுர நிலவின் மும்முனைகள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
தன் சதுர நிலவை
உள்ளங்கைக்குள் பொதிந்துவைத்திருந்தது குழந்தை.
வட்டமாயில்லாதது எப்படிச் சந்திரனாகும் என்று
கெக்கலித்துக் குற்றஞ்சாட்டி
கத்தித்தீர்த்த திறனாய்வாளரைப் பார்த்து
கன்னங்குழியச் சிரித்து
தன் ஒரு நிலவைப் பல வடிவங்களில்
பிய்த்துப்போட்டதில்
பெருகிய ஒளிவெள்ளத்தைக்
கைகுவித்து மொண்டு குடித்து மகிழ்ந்த குழந்தை
நாவறள நின்றிருந்தவரை அன்பொழுகப் பார்த்து
அவர் கையிலிருந்த தரவரிசைப்பட்டியல் தாளைத்
தன் சின்னக்கைகளால் விளையாட்டாய்ப் பறித்து
அதில் சிறிது ஒளிநீரை அள்ளி ஊற்றி
அவரிடம் குடிக்கச் சொல்லித் தந்த பின்
தன்போக்கில் துள்ளி முன்னேறிச் சென்றது.

வல்லமை தாராயோ…. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வல்லமை தாராயோ….

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
’கல்லடி பட்டாலும் சொல்லடி பட்டாலும்
நல்லபிள்ளைக்கழகு சிரித்துக்கொண்டேயிருப்பது’
என்று திரும்பத்திரும்பப் பரிந்துரைத்துக்கொண்டிருக்கிறார்கள்
நல்லவர்கள் சிலர்; நாலும் தெரிந்தவர்கள்…
ஏலாதய்யா எம்குலச் சாமிகளே……
என்ன செய்ய…
வாலைக் குழைக்கத் தெரியாத ஏழைக் கவிக்கு
வாய்த்த முதுகெலும்பு வளையாதது.
சூடு இருக்கிறது
சுரணையிருக்கிறது.
அரணையைப் பாம்பென்றால் ஆமாம்சாமி போட
’கீ’ கொடுத்தால் கைதட்டும் பொம்மையில்லையே கவி.
கருணைக்கொலை யென்ற பெயரில் காலங்காலமாய் பல கவிகளைக்
கைபோன போக்கில் கழுவிலேற்றிவருபவரின்
அருங்காட்சியகச் சுவர்கள் அரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன
அறம்பாடலால்.
பாதகஞ் செய்பவரைக் கண்டா லவர் முகத்திலுமிழ்ந்துவிடச் சொன்ன
பாரதி காற்றுபோல்;
யாரொருவரும் கக்கத்திலிடுக்கிக்கொண்டுவிட முடியாது.
அம்மையப்பனாய் அறிவார்ந்த நண்பனாய்
அன்பே உருவான வாழ்க்கைத்துணையாய்
மொழி யிருக்கிறது.
இம்மை மறுமைக்கு இதுபோதும் –
வேறெந்த ஆசானும் தேவையில்லை.
பொந்தில் வைத்த அக்கினிக்குஞ்சுகளும்
வெந்து தணியும் காடுகளும்
வளர்கதையாக _
விரியும் பாதை. செல்வழி தொலைவு
சொற்பநேரமே இருப்பு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
சாமி கவிதை.
சரணம் கவிதை.
வணக்கம் சொல்லி விடைபெறுகிறோம்
ஒரு சிறு பிரார்த்தனையோடு:
உம்மைப் பெண்டாளனென்றும் புல்லுருவியென்றும்
அம்பலத்தில் நாக்குமேல பல்லுபோட்டுப் பேசும்
நீசத்தனம்
யார்க்கும் வாய்க்காதிருக்கட்டும்.

Monday, January 26, 2026

சிறுகதை - அப்பா மாதிரி - அநாமிகா

சிறுகதை (திண்ணை இணைய இதழில் - January 5, 2026 - வெளியானது)

அப்பா மாதிரி

 அநாமிகா
God Father, Father Figure என்ற சொற்பிரயோகங்களை யெல்லாம் அவளும் கேள்விப்பட்டிருக்கிறாள். இலக்கியப் பாடம் படிக்கும் கல்லூரி மாணவி. அந்தச் சொற்றொடர்கள் குறிப்புணர்த்துவது என்ன என்று அவளுக்குத் தெரியும். அன்பு, அக்கறை, கரிசனம், காருண்யம்… 

ஆனால், ‘அப்பா மாதிரி’ என்று யாரையாவது குறிப்பிடும்போது அவளுக்கு ஆத்திரமாக வருகிறது. அதுவும், அவள் விஷயத்தில் அவள் படிப்புக்கு உதவி செய்யும் ஓரிருவரைப் பற்றி மற்றவர்கள் அப்படிக் குறிப்பிடும்போது ஆத்திரம் பன்மடங்காகிறது….

அவளுடைய அப்பா இப்போது இல்லை. குடும்பத்துக்கு எதுவும் சேர்த்துவைக்காத செலவாளி. பொறுப்பில்லமல் சிகடெட் புகைத்து சீக்காளியாகிவிட்டவர். ப்வாங்கினால் ‘ப்ளைமௌத்’ கார் தான் வாங்கவேண்டுமென்ற கனவில் சூதாட்டத்தில் கடனாளியாகி விட்டவர்….

எல்லாம் உண்மைதான். அதற்காக, அப்பா அப்பா இல்லை என்று ஆகி விடுமா? யார்வேண்டுமானாலும் அவளுடைய அப்பாவாகிவிட முடியுமா?

“அப்பா இல்லையேன்னு கவலைப்படாதீம்மா… அம்மா, தம்பியை தங்கையைக் காப்பாற்ற் இப்பவே வேலைக்குப் போறேன்னு கிளம்பிடாதே. நீ நல்லாப் படிக்கிற பெண். மேலே படி. செலவை நான் பாத்துக்கறேன்”, என்று நிஜமான அக்கறையோடு சொன்ன உறவுக்காரர் நிஜமாகவே நல்லவர்தான். அவருடைய மனைவியும் நண்பர்களும் அவர் இவளுடைய படிப்புக்கு உதவி செய்வதை கவனமாக நாலுபேர் காதுகளுக்குக் கொண்டுபோனார்கள். 

அவர்களில் இரண்டு பேர் தவறாமல் இவளிடம், “அவர் உன் அப்பா மாதிரி’ என்று சொன்னபோது சுள்ளென்று கோபம் மூண்டது. உடனே இன்னொருவர், “ஆதாவது, உன் மீதான அவருடைய அக்கறையில் என்று சொல்கிறோம். உன் அப்பா மாதிரி சூதாடுவார், சிகரெட் குடிப்பார் என்று நினைச்சுக்கிடப் போறே” என்று தெளிவாக்குவதாய் நக்கலாய் புன்முறுவலித்துக் கொண்டே கூற மற்றவர் பெரிதாகச் சிரித்தார். 

’என் அப்பா மாதிரி சூதாடலை, சீட்டாடலைன்னா, ஒருவேளை என் அப்பா மாதிரி சீக்காளியோ என்று நறுக்கென்று கேட்கத் துடித்தது. அதிகப்பிரசங்கி என்ற பெயர் வரும். அம்மாவின் வளர்ப்பைக் குற்றம் சொல்வார்கள்… ‘ தன் அப்பாவை அவர்கள் கேலி செய்வது தனக்குப் பிடிக்கவில்லை என்று உணர்த்தும் இறுக்கமான முகபாவத்தை மறுபக்கமாய் திருப்பி மறைக்க முயன்று அங்கிருந்து அகன்றாள். 

அப்பா ஸைமன் டெம்ப்ளர் கதையும், ஹவுண்ட் ஆஃப் தி பாஸ்கர்வலீஸ் கதையும் சொன்னால் அலுக்காமல் கேட்டுக்கொண்டிருக்கத் தோன்றும். அப்பாவுக்கு உலகத்தி லுள்ள அத்தனை வகை நாய்களின் பெயர்களும், அவை அதிகமாக இருக்கும் நாடுகளின் பெயர்களும் தெரியும். 

ஒரு முறை அப்போதைய பாண்டிச்சேரிக்குச் சென்றபோது அங்கிருந்த அயல்நாட்டுப் பெண்ணிடம் ஆங்கிலத்தை அவர்கள் உச்சரிப்பிலேயே அப்பா பேசி கைகுலுக்கியபோது அவளுக்கு அத்தனை பெருமையாக இருந்தது! 

சிகரெட்டை வாயில் பொருத்திக்கொண்டு அண்ணாந்தபடி வளையம் வளையமாகப் புகைவிடுவதை அவளும் அவளுடைய தங்கையும் பார்த்துக் கொண்டேயிருப்பார்கள்!. 

காசு செலவில்லாத கடற்கரைக்குக் கூட்டிச்செல்லும் அப்பா கடலைப் பற்றி, அலைகளைப் பற்றி, வானத்தைப் பற்றி, அங்குள்ள கிரகங்கள், நட்சத்திரங்களைப் பற்றியெல்லாம் எவ்வளவோ விவரங்களை சுவாரசியமாக கதைபோல் சொல்லுவார். கிளிஞ்சல்களைக் கையிலெடுத்து அவற்றின் வகைகள் பற்றி, பயன்கள் பற்றி, சங்குகள், முத்துகள், மீன்கள் பற்றியெல்லாம் அள்ள அள்ளக் குறையாச் செல்வமாய் தகவல்களைத் தருவார்……சற்று பெரியவளாக வளர்ந்த பின், சமூகம் குறித்து நிறைய செய்திகள் மனங் கொள்ளுமாறு சொல்வார்.  

அட, இதெல்லாம் இல்லாமலேபோனாலும், அப்பா அப்பாதானே…..அன்பு என்பதை அளக்குங்கோலாக பணம் எப்படியாகும்? அதுவும், அப்பா என்னும்போது…. 

அவளுக்குப் படிக்கக்கிடைத்த ஜப்பானிய எழுத்தாளர் யாஸுநாரி காவாபாட்டாவின் கையடக்கக் கதைகளில் ஒன்றில் காதல்வயப்பட்டிருக்கும் இளைஞனிடம் அவனுடைய தாயார் கூறுவாள் – “நானும் காதலித்தேன். ஆனால், உன் தந்தையைக் கல்யாணம் செய்துகொள்ளும்படியாகியது. நீயாவது உனக்குப் பிடித்தவளைத் திருமணம் செய்துகொள்”. அந்தத் தகவலில் ஏதோவொரு விதத்தில் தன் பிறப்பு சம்பந்தப்பட் டிருப்பதாகக் கருதும் அந்த இளைஞன் தன் தாயைப் போலவே தானும் அறிமுக மில்லாத ஒருத்தியை மணந்துகொள்ள முடிவுசெய்வான். அந்தக் கதையில் புலனாகும் மனித மன நுண்ணுணர்வுகள் அவளை அயரவைத்தது. 

கல்லூரிப் படிப்புக்குத் தடங்கலில்லாமல் ஆன்லைன் வேலை ஒன்று தேடிக் கொண்டாள். தங்கைக்கு ஒரு தன்னார்வலத் தொண்டு நிறுவனம் மூலம் படிப்புக்கு உதவித்தொகை கிடைக்க வழியேற்பட்டது. 

கூடப் படித்த தோழியொருத்தியின் உறவினப் பெண்மணி யொருவர் அயல்நாட்டில் இருப்பதாகவும், இவர்கள் வசிக்கும் ஊரில் உள்ள சொந்த வீட்டை வாடகைக்கு விட்டால் காலி செய்யாமல் தொந்தரவுக்காளாக நேரிடலாம் என்ற அச்சம் காரணமாக பூட்டியே வைத்திருப்பதாகவும் கேள்விப்பட்டு எப்போது கேட்டாலும் காலிசெய்து கொடுத்துவிடுவதாக உறுதியளித்து குறைந்த வாடகைக்கு அந்த வீட்டில் தான், தன்னுடைய தாய், தங்கையோடு குடியேறினாள்.  

சமாளிக்க முடியும் என்ற தெம்பு ஏற்பட்டதும் படிப்புக்கு உதவிக் கொண்டிருந்த உறவினர் வீட்டுக்குப் போய் அந்த ஆறுவருடங்கள்  உதவியதற்கு மனமார்ந்த நன்றி தெரிவித்து ’இனி உதவ வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டாள். 

அந்த மனிதரும் அவருடைய மனைவியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார் கள். அந்தப் பெண்மணியின் முகத்தில் கொஞ்சம் இளக்காரமும் நிறைய நிம்மதியும். 

அங்கு வந்து அவர்களோடு உரையாடியவாறே காபி குடித்துக்கொண்டிருந்த இன் னொரு மனிதர் “இப்பத்தானே ஆன்லைன் வேலைக்குச் சேர்ந்திருக்கே. அதுக்குள்ளே இப்படிச் சொல்றே? இப்பல்லாம் இந்த மாதிரி உதவி செய்வதற்கு யார் முன்வராங்க? இவர் உன் அப்பா மாதிரி….அதாவது – “

அவர் முடிக்குமுன் குறுக்கிட்டவள் நிதானமாகக் கூறினாள் _”அதாவது, அன்பில், அக்கறையில்  – குடிக்கிறதில், காசைக் கரியாக்குவதில் இல்லே – அப்படித்தானே ஸார்? ஆனால், குடிச்சாலும், காசைக் கரியாக்கினாலும் அப்பா அப்பாதானே – அவருக்கு எங்கள் மீது அன்பில்லை, அக்கறை இல்லைன்னு ஆகிடுமா என்ன?”

அந்த மனிதர் முகம் சிவந்தது. “”இந்த ரோஷத்துக்கு ஒண்ணும் குறைச்சலில்லை. உன் அப்பா அன்பா, அக்கறையா இருந்தா உங்களையெல்லாம் இப்படி தம்பிடி இல்லாம தெருவிலே விட்டிருப்பாரா? பெரிசா பேசறே? அப்பா மாதிரி அக்கறை காட்டறவருக்குக் காட்டும் நன்றி இதுதானா?””

 ”மன்னிக்கணும் ஸார். அந்த உதவிக்கான நன்றி மனசெல்லாம் நிறைஞ்சிருக்கு. என்றைக்கும் இருக்கும். ஆனால், உதவறவங்க எல்லாம் அப்பா ஆகிவிட முடியாது. இதோ. நீங்க ஸாரோட மனைவி கொண்டுவந்து கொடுத்த காபியைக் குடிச்சிட்டு இருக்கீங்க. அவங்க அன்பா, அக்கறையா கொண்டுவந்து கொடுத்ததாலே அவங்களை ‘உங்க மனைவி மாதிரி’ன்னு சொன்னா நல்லாவா இருக்கும்?”

அந்த மூன்று முகங்களும் அதிர்ச்சியில் வெளிற, அவள் விறுவிறுவென்று அங்கி ருந்து வெளியேறினாள்.

***

சாந்தம்மாவும் பரமேசுவரியம்மாவும் - சிறுகதை - அநாமிகா

 சிறுகதை ( * திண்ணை - December 22, 2025 - இணைய இதழில் வெளியானது)

சாந்தம்மாவும் பரமேசுவரியம்மாவும்

  • அநாமிகா

கோவிலுக்கு வழக்கமான நேரத்தில் வந்ததுமே பரமேஸ்வரியம்மாவின் கண்கள் சனீஸ்வரர் சன்னதியின் பக்கவாட்டில் இருந்த நீண்டாகின்ற மண்டபப் படிக்கட்டுகளைப் பார்த்தன வழக்கமாக இந்த நேரத்தில் அங்கே அமர்ந்திருக்கும் சாந்தமாவைக் காண வில்லை. போன சனிக்கிழமையும் வரவில்லை

 ’என்னவாயிற்று?’ என்று மனதிற்குள் கவலையோடு கேட்டுக்கொண்டார் பரமேஸ் வரியம்மா. முகம் அனிச்சையாக சனீஸ்வரர் சன்னதிக்கு வலப்புறம் இருந்த அம்பிகையின் சன்னிதானத்தை நோக்கித் திரும்பியது. கண்களை மூடி, கைகளைக் கூப்பி ஒரு கணம் சாந்தமாவுக்காகப் பிரார்த்தித்துக்கொண்டார். தனக்காகவும். பின், பிரகாரத்தைச் சுற்றி மூன்று முறை வலம் வந்தார். ஆங்காங்கே இருக்கும் பிள்ளையார் சன்னதி, முருகன் சன்னதி, சிவன் சன்னதி என்று நின்று நின்று பிரார்த்தித்துக் கொண்டார். கையில் இருந்த சில்லறைகளை கற்பூரத் தட்டுகளில் போட்டார். ’ராம ராம ராம, கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண, சிவ சிவ  சிவ -கடவுளே இந்த உலகத்தில் இருக்கிற எல்லோரும் நோய் நொடி எதுவும் இல்லாமல் நல்லா இருக்கணுமே, உலகத்தில் வறுமை போர் பஞ்சம் வன்முறை எதுவுமில்லாமல் எல்லாரும் ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பாய் இருக்கணுமே’ என்று எப்போதும்போல் மனம் ஒன்றி வாய் முணுமுணுக்க பெரிய சன்னதியில் விபூதி வாங்கிக்கொண்ட பின் மீண்டும் சனீஸ்வரர் சன்னதி பக்கம் வந்தபோதும் கண்கள்  அனிச்சைச்செயலாக அந்தப் படிக்கட்டுகளைப் பார்த்தன. சாந்தம்மாவை  அங்கே காணவில்லை.

 ’ஒருவேளை உறவுக்காரர் வீட்டுத் திருமணம் எதற்காவது போயிருப்பார் எதற்காவது போயிருப்பார்…. இன்று முகூர்த்த நாள் ஆயிற்றே…’ என்று எண்ணிக்கொண்டார் பரமேஸ்வரியம்மா. ஆனால், கொஞ்ச நாட்களாகவே சாந்தம்மாவைக் கோவிலில் பார்க்க முடியவில்லை. ‘உடம்புக்கு எதுவுமில்லாம இருக்கணும்’ என்று கவலையோடு எண்ணிக் கொண்டார்

கோவிலுக்கு வருவோர் பலவிதம். பக்தியோடு வருபவர்கள்; பராக்கு பார்க்க வருபவர்கள்; கண்ணீர் மல்க கடவுளை தரிசிப்பவர்கள்; கடவுள் சன்னதியிலும் தன்னை முன்னிலைப்படுத்தி ’பந்தா’ காட்டுபவர்கள்’ கண்ணை மூடி ஒரு கணம் பிரார்த்தித்து விட்டு பத்தோடு பதினொன்றாவது பக்தராக ஆரவாரமின்றி அடுத்த சன்னதிக்கு நகர் பவர்கள், கடவுளுக்கும் மற்ற பக்தர்களுக்கும் நடுவே தொடர்பு ஏற்படுத்தும் இடைத்தரகராய் தம்மை பாவித்துக்கொண்டு தடால் புடால் என்று நடந்து கொள்கிறவர்கள்; இந்தக் கோவிலில் கதாநாயகியை யார் கொல்ல சதி திட்டம் தீட்டுவதாய் காட்சியமைக்கலாம் என்ற கலாபூர்வமாக சிந்திப்பதற்காக வருகை தந்து அங்கேயிங்கே காமராக்கூர் கண்களால் கவனித்தபடி கோவில் கடையில் வடை, அதிரசம் வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருக்கும் ’மெகாசீரியல்’வாதிகள்; ஒரு மெகா சீரியலில் இரண்டு பிரதான கதாபாத்திரங்கள் கோவிலுக்கு வரும் கதாநாயகியை அவள் பிராகாரத்தைச் சுற்றி வரும்பொழுது மயக்க மருந்து தெளித்த கைகுட்டையால் முகத்தில் அழுத்தி அங்கு இருக்கும் சாக்குமூட்டையில் திணித்துக் கடத்திக்கொண்டுபோனால் அடுத்த வாரம் இன்னொரு மெகா சீரியலில் அதே கோவிலில் வில்லன் ஊர் தர்மகர்த்தாவை அந்தக் கோயிலில் அரிவாளால் வெட்டித்தள்ளுவார். ’மற்ற மதங்களின் வழிபாட்டு தலங்களை இந்த மெகா சீரியல்வாதிகள் இப்படியெல்லாம் பயன்படுத்தாமல் இருப்பது மெச்சத் தகுந்ததா? அச்சம் காரணமாகவா?’ என்றெல்லாம் நாற்சந்தி செய்திச் சேனலில் எந்த மக்கள் முறையீட்டு மாமன்றமும் நடப்பதில்லை செய்திச் சேனலோ, என்டர்டெயின்மென்ட் சேனலோ – தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொடர்பான அலசல் விமர்சன நிகழ்வுகளையெல்லாம் வெகு கவனமாக தவிர்த்துவிடுவதுதானே நடப்பு ண்மையாக இருக்கிறது… 

 _ இளங் காதலர்கள் மரநிழல் அடர்ந்த மூலையாக பார்த்து அமர்ந்துகொள்வார்கள். அவர்களை வேடிக்கை பார்ப்பதே, வேவு பார்ப்பதே வேலையய சிலர் அங்கேயே சுற்றிச் சுற்றி வருவார்கள். கொஞ்சம் அத்துமீறினாலும் விரட்டியடிக்கத் தயாராய் பார்த்துக் கொண்டிருப்பார் கோயில் பாதுகாவலர். கண்ணில் நீர் கசிய நின்றுகொண்டிருப்பவர்கள் உண்டு; ’தனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை’ என்பதாய் ”கோவில் சிற்பங்களை பார்க்க வந்தேன்” என்ற அக்கம்பக்கம் இருப்பவர்கள் காதுகளில் விழும்படியாக உரக்கச் செல்பவர்கள் உண்டு. ’அவனின்றி அணுவும் அசையாது’, என்று மனமார நம்புகிறவர்கள் உண்டு. நிற்க நிழல் வேண்டுமென்று முறையிட்டுத் தொழுபவர்கள், நாலாவது சொந்த வீடு வாங்க வழி செய்ய வேண்டும் என்று அர்ச்சனை செய்பவர்கள், நோய் குணமாக வேண்டும் என்று மனம் உருக தொழுதேத்துவோர், என் எதிரி நோய் நொடியில் நொடித்துப் போக வேண்டும் என்று முகம் சிவக்க மனதிற்குள் சங்கல்பம் செய்வதாய் வேண்டிக் கொள்வோர்….

சமயங்களில் ’பாவம் சாமி’ என்று பரிதாபம் தோன்றும் பரமேஸ்வரியம்மாவுக்கு. தன்னைப் போன்ற, சாந்தம்மாவைப் போன்ற அதிக நிதி வசதி, உடல் வலு இல்லாத பலருக்கு கோவில் ஒரு கடற்கரை போல். காலாற நடந்துபோகலாம் அலையெனத் திரண்டிருக்கும் சக மனிதர்களைக் கண்ணாரக் கண்டுகளிக்கலாம். சிலரிடம் குசலம் விசாரிக்கலாம். சிலரிடம் நட்பு பாராட்டலாம். சிலரோடு அவரவர் கஷ்டங்களை பகிர்ந்து கொள்ளலாம்….

ப்படிப் பழக்கமானவர்கள்தான் சாந்தம்மாவும் பரமேஸ்வரியம்மாவும். ஒரு நாள் ”அம்பாளுக்கு அலங்காரம் எவ்வளவு நல்லா இருக்குல்ல!” என்று முகம் மலரக் கூறிக் கொண்டே கையில் இரண்டு தொண்ணைகள் நிறைய சர்க்கரைப் பொங்கலோடு வந்து ஒன்றை சாந்தமாவிடம் நீட்டினார் பரமேஸ்வரியம்மா. “ஏதோ யோசனைல உட்கார்ந்து இருந்தீங்க. அதான் பிரசாதம் வாங்க மறந்துடுவீங்களோனு உங்களுக்கும் சேர்த்து வாங்கிட்டு வந்தேன்”, என்று கனிவாகக் சிரித்தபடியே கூறிய பரமேஸ்வரியம்மாவை ஏறெடுத்துப் பார்த்தார் சாந்தம்மா. “நன்றிங்க. சில சமயம் க்யூ இருக்கும். நிறைய நேரம் நிற்க முடியாது. அதான் வாங்காம விட்டுடுவேன். அதோ, அந்தச் சின்னப் பொண்ணு வாங்கிட்டு போகுதே – அம்மா அப்பா இல்லை. வீட்டில் அண்ணா – அண்ணிதான். அண்ணி சரியா சோறு போட மாட்டாங்களாம்…. வளர்ற வயசு. அன்னைக்கு அழுதுட்டு சொன்னப்ப அப்படியே அடிவயிறு கலங்கிடுத்து. என் கையில் இருந்த பிரசாதத்தை அப்படியே கொடுத்துட்டேன்….”

அருகே அமர்ந்து கொண்ட பரமேஸ்வரியம்மா “ஏதோ, நமக்கு மூணு வேலையும் சாப்பிட வழி வைத்திருக்கிறார் ஆண்டவன். அவர் போயிட்டாரு… ஏதோ பென்ஷன் வருது அதுக்கு நன்றி சொல்ல தான் கோவிலுக்கு வரேங்க. அது வேணும், இது வேணும்னு கேக்கறதுக்கில்லே…  கோவிலுக்கு நடந்து வர்ற அளவுக்கு நோய் நொடி இல்லாம  இருந்தா – அஹ்டுவே போதும்…”

”என் கதையும் இதே தாங்க!  நானும் அதேதாங்க வேண்டிப்பேன்!” என்று கனிவாகக் கூறிப் புன்முறுவலித்தார் சாந்தம்மா. 

அப்படி ஆரம்பமான பழக்கம். மெதுமெதுவாய் அவரவர் குடும்பம் பற்றிய விசாரிப்புகள். 

”பையனுக்கு இப்பதாங்க கல்யாணம் ஆச்சு…”

 ”மருமக பாசமா இருக்காளா?”

”திடீர்னு ஒரு ஒட்டு உறவு வரணும்னு நாம எதிர்பார்க்க முடியாதில்லே…” என்று தர்க்கபூர்வமாகக் கேட்ட சாந்தம்மா சற்றே வருத்தமாகச் சிரித்தார். சிறிது நேரம் இருவரும் மௌனமாயிருந்தனர். பின், “வந்ததுமே நான் அதுநாள் வரை சமைச்சுக்கிட்டு இருந்த பாத்திரம் பண்டம் எல்லாத்தையும்ம் எடுத்து பரண்மேல போட்டுட்டா… தன்னோட பாத்திரங்களைப் பயன்படுத்த ஆரம்பிச்சா… அவ வீடுன்னு பந்தம் உண்டாக்கிக்கறது நல்லதுதானேன்னு அறிவு சொன்னாலும் ’அப்ப, இவ்வளவு தான் நான் சாக்கடையிலயா சமைச்சிகிட்டு இருந்தேன்னு மனசுல ஒரு வேதனை குத்திக்கிட்டே யிருக்கு…” சாந்தம்மா தொண்டையடைக்கச் சொன்னார். கேட்க வருத்தமாக இருந்தது பரமேசுவரியம்மாவுக்கு.

”விடுங்க… அவங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பா இருக்காங்க இல்ல?”

”ஆ! அதுதான் நம்மால எதுவும் சண்டை வந்துடக்கூடாது என்று பார்த்து பார்த்து நடந்துக்கறேன்… ஆனாலும், சமயத்தில ’இங்க நம்ம யாரு?’ங்கற கேள்வி என்ன குடையுது,  பயமுறுத்துது….”

 இன்னொரு நாள் _ “இப்ப எல்லாம் மருமக கழுத்துல தாலியே இல்லை. அன்னைக்கு வந்திருந்த அவ சினேகிதி கேட்டதுக்கு ’ஆம்பளைக்கு என்ன அந்த மாதிரி அடையாளமா இருக்குது?’ன்னு கேட்டு பெரிசாச் சிரிச்சா. ’உன் மாமியார் எதுவும் சொல்ல மாட்டாங்களா’ன்னு சினேகிதிக்காரி கேட்டதுக்கு ’எங்க மாமியார் ரொம்ப நல்லவங்க. இதையெல்லாம் கண்டுக்க மாட்டாங்கன்னு அவளாவே சொல்றா… நான் எதுவும் சொல்றது இல்ல…” _  பரமேஸ்வரியம்மாவின் பக்கத்தில் அமர்ந்துகொண்ட பின் சற்று நேரத்தில் தனக்குத்தானே சொல்லிக்கொள்வது போல் சாந்தம்மா சன்னக்குரலில் கூறியதை கேட்டு பரமேஸ்வரியம்மாவுக்கு வருத்தமாயிருந்தது.

 பரமேஸ்வரி அம்மாவுக்கு இரண்டு பேரப்பிள்ளைகள் என்று விசாரித்து அறிந்து கொண்டதும் முகம் மலர்ந்தது சாந்தம்மாவுக்கு! “பேரப்பிள்ளைகள் பாசமா இருப்பாங்களா? ஒரு நாள் கோயிலுக்கு கூட்டிட்டு வாங்களேன்.”

பரமேஸ்வரியம்மா வருத்தங்களைக் கடந்த ஞானியாகச் சிரித்தார். “மகன் அமெரிக்காவில் இருக்கான். வாரம் ஒருநாள் வீடியோ கால் போட்டுப் பேசுவான். மருமகள் தலையை நீட்டி ’சாப்பிட்டாச்சா அம்மா’ என்று சம்பிரதாயமாகக் கேட்பாள். இரண்டு பேரப் பிள்ளைகள் எப்பவாவது ஒரு தடவை எட்டிப் பார்த்து “ஹலோ கிரான்மா!” என்று சொல்வார்கள். இரண்டு வருஷத்துக்கு ஒரு தடவை இந்தியா வருவாங்க. அப்பக் கூட பெரும்பாலும் ஹோட்டலில் தான் தங்குவாங்க. என் வீடு சௌகரியம் இல்லையாம்…. பேரப்பசங்க நம்மகிட்ட ஒட்டிக்க கூடாதுங்கறதிலே மருமக ரொம்ப கவனமா இருப்பா…”

 ”ஏன்?”

”ஏன்னா? அப்படித்தான்! நான் எதையும் கண்டுகொள்வதில்லை”, என்று பரமேஸ்வரியம்மா சொன்னபோது அதில் மறைந்திருந்த ஆதங்கத்தை சாந்தம்மாவால் உணர முடிந்தது

”அப்ப, இங்க யாரு கூட இருக்கீங்க?”

”தனியாத்தான் இருக்கேன். துணைக்கு ஒரு பெண் இருக்கா. அவளுக்கு என் பென்ஷன் ல இருந்துதான் மாசச் சம்பளம் கொடுக்கிறேன்….”

ன்று ஏதேதோ நினைத்தவாறு வழக்கத்தை விட அதிக நேரம் கோயிலில் இருந்து விட்டோம். பாவம் வீட்டில் வேலை செய்யும் அந்தப் பெண் அம்மு கவலைப்பட்டுக் கொண்டிருப்பாள்’ என்ற உணர்வோடு அவசர அவசரமாக எழுந்ததில் பரமேஸ்வரி யம்மாவின் முழங்கால்களும் இடுப்பும் ’சுள்’ளென்று வலித்தன. கோவிலை விட்டு வெளியேறி, அங்கே ஓரமாகக் கிடந்த செருப்பை அணிந்துகொள்ளும் முன் உள்ளே நேராகத் தெரிந்த பிள்ளையாரை மீண்டும் ஒரு முறை பார்த்து கண்களை மூடித் தொழுத கணம் மனம் தன்னிச்சையாக சாந்தம்மாவின் நலனுக்கும் பிரார்த்தித்துக்கொண்டது.

***

கலந்துரையாடலும் கலந்துறவாடலும் - சிறுகதை - அநாமிகா

சிறுகதை (திண்ணை இணைய இதழில் வெளியானது)

லந்துரையாடலும் கலந்துறவாடலும்

  • அநாமிகா

14 டிசம்பர் 2025

முதல் பார்வையில் அந்த நடுத்தர வயது பெண் யார் என்று தெரியவில்லை எனவே எந்த விதமான பரிச்சய பாவமும் வெளிப்படாமல் என் பார்வை அவளை விட்டு அகன்றது. ஆனால், ஏதோ உள்ளுணர்வில் மறுபடியும் பார்த்தபொழுது அவள் என் ஒன்றுவிட்ட அக்கா என்பதை அடையாளங்காண முடிந்தது. 20 வருட இடைவெளி. இன்று இறந்திருக்கும் எங்கள் பெரியப்பா ஒரு காலத்தில் அவளையும் அவளுடைய தம்பியையும் தன்னுடைய குழந்தைகளாக பாவித்து அவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வாங்கித் தந்து பேரானந்தம் அடைந்தவர்.

 ”ஸாரி வத்ஸலா, முதல்ல பார்த்தப்ப அடையாளம் தெரியல”, என்று கூறினேன். சாவு வீட்டுக்கு வந்திருப்பவர்களிடம் ’நீ நல்லா இருக்கியா’ என்று கேட்பது நன்றாக இருக்காது என்பதால் கேட்காமல் நிறுத்திக்கொண்டேன்.

 இலேசாகப் புன்முறுவலித்தபடியே கேட்டாள்: “சங்கர் வைஃப் நல்லாயிருக்காளா? அவளைப் பார்த்து நாளாச்சு”.

 ’அவளை மட்டுமா…… கல்யாணத்திற்கும் சாவுக்கும் தான் வருகை தருவது, சந்திப்பது என்று ஆகி பல நாட்களாகிவிட்டது. கல்யாணத்துக்கு கூட வராமலிருந்துவிடலாம் ஆனால், சாவுக்கு துக்கம் விசாரிக்க போகாமல் இருக்கவே கூடாது என்று வியாக்கியானம் செய்வார்கள்….

வருடக்கணக்கில் பார்த்துக் கொள்ளாதவர்கள், ஃபோனில் கூட பேசிக்கொள்ளாதவர் களுக்கு அப்படி என்ன துக்கமும் இழப்புணர்வும் ஒரு சாவில் ஏற்பட்டு விடப்போகிறது…? ஒரு சாவின் போது மட்டுமே நினைவோடையில் பின்னோக்கிச் சென்று நினைவுகூர்தல், நெகிழ்வடைதல் என்பது என்ன விதமான உறவு, பாசம், நேசம்….?

நிறைய பேருக்கு கல்யாண மண்டபமோ, இழவு வீடோ – எல்லாமே வம்புமடங்கள்.  ‘அந்த அயனாவரம் வீட்டை யார் பேருக்கு எழுதிவச்சிருக்கானாம்? இல்லை, எந்த தர்மகாரியத்துக்காவது தானம் செஞ்சுட்டானா?’ என்று இறந்தவரைப் பற்றி விமர்சித்துக்கொண்டிருப்பார்கள். ’எங்கப்பா செத்தப்போ ஆயிரம் பேருக்குக் குறையாம வந்தாங்க’ என்று ஜம்பமடித்துக்கொண்டிருப்பார்கள். அப்படியே யாராவது செத்துப்போனவரை எண்ணி நிஜமாகவே வருந்தி கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தால் . பிறந்தவங்க எல்லோரும் ஒரு நாள் போய்த்தானே ஆகணும்” என்று தத்துவ பேசுவார்கள்..

இப்போது ஆஜராகியிருக்கும் இவர்களையெல்லாம் பார்க்கவேண்டும் என்று இதோ இங்கே விழி மூடாமல் இறந்துகிடப்பவர் எத்தனை ஏங்கியிருந்திருப்பார்… இவர்கள் இப்போது தன்னை பார்க்க வந்திருப்பது இறந்தவருக்கு தெரியுமா… ‘வாராது போல வந்த மாமணியைப் பார்ப்பது போல் தன்னை பார்க்க வந்திருப்பவர்களை ஆசை தீரப் பார்ப்பது போல் இறந்தவரின் கண்கள் விரியத் திறந்திருந்தன. கண்கள் வழியாக உயிர் பிரிந்திருக்கிறது என்று சிலர் சொல்லிக் கொண்டார்கள். யாரும் அந்த அசைவற்ற கண்களை மூடிவைக்க முற்படவில்லை

சங்கரின் மனைவியினுடைய நலன் விசாரிப்பதற்குக் காரணம்  தெரிந்ததுதான். சங்கருக்கும் அவனுடைய மனைவிக்கும் விவாகரத்து நடந்துவிட்டது. இவர்களுக்கு தெரியாமலிருக்க வழியே இல்லை. உறுதிப்படுத்திக்கொள்ள இதுவொரு அரிய சந்தர்ப்பம். பின், அதைப் பற்றி அக்கு வேறு ஆணிவேராக ஆளாளுக்கு தோன்றியபடி அலசித்தீர்ப்பார்கள்.

வத்ஸலாவின் காதலுக்கு அவளுடைய பெற்றோர்களின் ஆரம்ப கால தீவிர எதிர்ப்பும் (அவள் மட்டும் அவனை கல்யாணம் செய்துகொண்டால் நாங்கள் தற்கொலை செய்துகொள்வோம்), பின், அரை மனதோடு அவர்கள் அதை ஏற்றுக்கொண்டு சம்மதம் தெரிவித்ததும் (அந்த மாம்பல ஜோசியர் கிட்ட போனோம். ‘கண்டிப்பா கல்யாண வேற ஜாதிக்காரனுடன்தான் நடக்கும், ஆனா, இரண்டு பேரும் அமோகமா வாழ்வாங்கன்னு சொன்னார்) நினைவுக்கு வந்தது.

“சங்கருக்கு போன வருஷமே டிவோர்ஸ் ஆயிடுத்தே” – வேண்டுமென்றேதான் சொன்னேன். வாயில் போட்டு மெல்லுவதற்கு ஏதாவது கிடைக்காதா என்று பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஏதோ என்னால் ஆனது…. அந்த விஷயம் அவர்களுக்கு ஏற்கனவே பல வழிகளில் கிடைத்திருக்கும் நம்மிடமிருந்து அதை உறுதிப்படுத்திக் கொள்ளவே  கேட்கிறார்கள். அது கல்யாண வீடாக இருந்தாலென்ன, இழவு வீடாக இருந்தாலென்ன… வெறும் வாய்களுக்கு மெல்லுவதற்கு எப்போதும் வேண்டும் – உமியாவது…

அதற்குப் பின், சங்கரும் அவனுடைய குடும்பமும் வந்தபோது, மிகவும் வாத்யல்யத்தோடு வத்ஸலாவும் அவளுடைய பெற்றோர்களும் அவனை எதிர்கொண்டழைத்து அருகில் அமர்த்திக்கொண்டார்கள்.  ’ஆடு நனைகிறதே என்று அழுகிறதாம் ஓநாய்’, ’முதலைக்கண்ணீர்’ என்று வழக்கமாகப் பயப்படுத்தப்படும் உவமான உவமேயங்களெல்லாம் தவிர்க்கமுடியாமல் நினைவுக்கு வந்தன.

உளவியலுக்குப் படித்து ஆன்லைனில் உளவியல் ஆலோசனைகள் வழங்குவதாக வத்ஸலா தெரிவித்தபோது ‘அப்படித்தான் விஷயத்தைப் போட்டு வாங்கணும்’ என்று ஏதோ ஒரு தருணத்தில் வெற்றிப்பூரிப்பில் ஏதோ வம்பு கிடைத்த விஷயத்தைச் சொன்ன அவள் முகம் பளபளத்து ஒளிர்ந்ததும் நினைவுக்கு வந்தது.

இறந்துகிடந்தவரைப் பார்த்து அவர்கள் அழுததெல்லாம் பொய் என்று சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு இறப்பிலும் மற்றவர்கள் தங்கள் இறப்பைப் பார்க்கிறார்கள் என்று எப்போதோ படித்ததுண்டு. SHE IS GOOD BEING GONE என்று ஷேக்ஸ்பியரின் ஆண்டனி தனது மனைவி ஃபுல்வியாவின் இறப்பு குறித்துச் சொல்லும் முத்திரை வாசகம் நினைவுக்கு வந்தது

***

அடுத்த சந்திப்பில் ஷங்கரின் அம்மாவாகிய என்னுடைய இன்னொரு உறவுக்காரரை பார்த்தபொழுது அவள் வத்ஸலாவை வசைபாடித் தீர்த்தாள். “அந்த 13 நாட்களும் சங்கர் பக்கத்திலேயே உட்கார்ந்து அவனுடைய விவாகரத்து பற்றியே துருவித் துருவி கேட்டுக் கொண்டிருந்தார்கள் வத்ஸலாவும் அவள் புருஷனும்” என்று வெடித்தாள்.

”நாம உறவுக்காரங்களே கொஞ்சம் பேரு தான் – இதுல ஒருத்தருக்கு ஒருத்தர் நல்லா இருக்கியா என்று கேட்டுக்கொள்ளக்கூட போன்ல தொடர்பு கொள்றதில்லன்னா எப்படி” என்பான் சங்கர். ஆனால், அவனாக உறவுக்காரர்கள் யாருக்கும் போன் போட்டு பேசியதில்லை. எப்போதாவது அவர்கள் வீட்டுக்கு போயிருந்த தருணங்களிலும் ’ஆன்லைன் வேலை’ என்று அவனுடைய அறைக்குள் போய் தாழிட்டுக்கொண்டு விடுவான். அவன் மறந்தாலும் ”உனக்கு நிறைய வேலை இருக்கு போடா” என்று அவனுடைய அம்மா நினைவுபடுத்தி அனுப்பிவிடுவாள்.

சங்கரின் அம்மா ஆக்ரோஷமாகப் பேசிக்கொண்டேயிருந்தாள். “துருவித் துருவி வம்பு கேட்டார்கள் வத்ஸலாவும் அவளுடைய வீட்டுக்காரரும். அவளுடைய பிரெஞ்சு அண்ணி அவ்வளவு நல்லவளாம் – அதை நடுநடுவுல சொல்லிக்கொண்டேயிருந்தாள் மாமியாரை, அதாவது, வத்ஸலாவின் அம்மாவை எதிர்த்து ஒரு வார்த்தை பேச மாட்டாளாம். நூறு முறை அதையே சொல்லி சொல்லி பெருமையடித்துக்கொண்டார்கள் பிள்ளையும் மருமகளும் இருப்பது பாரீசில். இவர்கள் இருப்பது இங்கே. வருடத்திற்கு ஒரு முறையோ ரெண்டு வருடங்களுக்கு ஒரு முறையோ 21 நாட்கள் இந்தியா வந்து தமிழகத்தில் ஊர் பக்கம் எட்டிப் பார்த்து, ’ஃபேமிலி ட்ரீ’ துளிர்த்துத் தழைக்க இரண்டு வாளி அந்நிய நாட்டுப் பண்டங்களை கொட்டி முடித்து ’வெரி ஹாட் ஹியர்’ என்று மகனும் அதையே ப்ரெஞ்ச்சில் மருமகளும் சொல்லிவிட்டு ஊர்சுற்றிப் பார்க்க ஏஸி காரில் போய்விடுவார்கள். மாமல்லபுரம் மெரினா பீச், கபாலீஸ்வரர் கோவில் என்று ஊர் சுற்றி முடித்து பின் பயணத்திற்காக மூட்டை முடிச்சுகளை கட்டும் போது கூட மாமியார் மருமகள் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டால் சம்பிரதாயப் புன்முறுவலோடு சரி இதில் எதிர்த்து பேசுவதற்கோ மறுத்துப் பேசுவதற்கோ என்ன வழி….?”

 _ அந்தக் கல்யாணம் நடந்தபோது சங்கரின் அம்மாவும் அப்பாவும் என்னவெல்லாம் பேசினார்கள் என்பது நினைவுக்கு வந்தது. குடும்பம் கப்பலேறி விட்டதாக அப்படி அங்கலாய்த்தார்கள். அந்த கல்யாணத்திற்கு அழைப்பதற்காக வத்ஸலாவும் அவளுடைய தாயும் தந்தையும், அதாவது சங்கருடைய அம்மாவின் தம்பியும் தம்பி மனைவியும் போனபோது முகத்தை திருப்பிக் கொண்டார்கள்……



CONDITIONAL கருணையாளர்கள் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 CONDITIONAL கருணையாளர்கள்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
புறாவுக்காக தானியங்களைத் தனது கவிதை வரிகளெங்கும் தூவிவைப்பார்
சிற்றெறும்புக்கு சுவைக்கக் கற்கண்டு கிடைக்கவில் லையே
என்று கண்ணீர் உகுத்தவாறே
வீட்டிலிருக்கும் சர்க்கரை புட்டியின் அடியிலிருந்து
சுரண்டியெடுத்துப் போடுவார்
மதிய தேனீருக்கு இல்லையென்றால்
பரவாயில்லை என்றவாறே
வீதியோரம் அடிபட்டுக்கிடக்கும்
பூனைக்குட்டியைத்
தனது கவிதையின் சஞ்சீவி மூலிகைகளால் குணப்படுத்தி
கைகளில் எடுத்துக் கொஞ்சுவார்
சுவாசிக்கவும் மறந்து வாசிக்க வாசிக்க
நேசம் பெருக்கெடுக்கும்.....
ஆனால் தேசம் என்றால் மட்டும்
மோசக்காரா என்பார்.
ஊரையெல்லாம் நாசம் செய்வோரை
ஏசினால்
பேசாதே என்று சங்கியாக்கி சனாதனியாக்கி
மங்க்கியாக்கி
மொட்டையடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி
சமத்துவவாதியாய்
தன்னார்வல BOUNCER ஆக, BODYGUARD ஆகக்
காவல் காத்துக்கொண்டிருப்பார் என்னாளும்
‘SOME ARE MORE (MUCH MORE) EQUAL’
சிம்மாசனவாதிகளை