Tuesday, December 31, 2024

இதுவும் கடந்துபோகும்

இதுவும் கடந்துபோகும்

https://www.youtube.com/watch?v=tznSYzIylWs

புது வருடத்திற்கு என்னால் சக மனிதர்களுக்கா கப் பகிரக் கூடிய இந்த எளிய பரிசு இன்னொருவ ரின் இசையில் இன்னொருவரின் வரிகளில் இந்தப் பாடலின் வழி வரவாகும் வாழ்வு குறித்த நம்பிக்கை, பற்றுறுதி, இன்னும் எத்தனையோ.


கொரானோ காலத்தில் வெளிவந்த பாடல் இது. எல்லாக் காலத்திற்குமானது.

உருவாக்கியவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

இன்று இந்தப் பாடலை
அண்ணா பல்கலைக் கழக மாணவிக்கும்,
பாதிப்புக்குள்ளான
இன்னும் பலருக்கும், இளந்தலைமுறையினருக்கும்,
எல்லா சக மனிதர்களுக்கும்
சமர்ப்பிக்கவேண்டுமென்று தோன்றுகிறது.

_ latha ramakrishnan

கையறுநிலைக் கவிதை - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 கையறுநிலைக் கவிதை

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
காதல் அரும்பும் பருவம்
காமம் வாழ்வியல்திறம்....

சிறு முத்தம் பகிரவும்
புதர்மறைவைத் நாடிச்சென்று
மனம் நிறைந்தவரோடு
தனித்திருக்கும் மரபில் வந்த
நாம்.....

சங்க காலந் தொடங்கி
யெத்தனையெத்தனையோ நாள்
ஒத்திகைபார்த்துக்கொண்டிருப்பார்கள்
உண்மைக்காதலர்கள்....

மறைவிலிருந்து உற்றுப்பார்த்துக்
கொண்டிருப்பார்கள்
பெண்ணை வன்புணர்வதே ஆண்மையென்றும், வண்டிவண்டியாகப் பணம் சம்பாதித்து வாழ்வாங்குவாழ்வதற்கான வழியென்றும்
பழிதீர்க்க மிக எளிய மார்க்கம் என்றும்
அதிகாரமுணர்த்தும் நோக்கத்தோடும்
துகிலுரியும் நாதாரிகள்
நரகமென்றொன்றிருந்தால் அதில்
தள்ளப்படவேண்டிய மாபாவிகள்....

மனம் பிடித்தவனுக்குத் தரும் ஒரு
சின்ன முத்தத்திற்கு,
அணுக்கமான தொடலுக்கு
விலையாய்
என்னவெல்லாம் கொடுமை இழைக்கப்படுகிறது
பெண்ணுக்கு....

பெண்ணுக்கு மட்டுமா...

இருளின் போர்வைக்குள் இருவரிடையே
என்ன நடந்திருக்குமென்று
போலி அக்கறையோடு விலாவரியாகப்
பேசிப்பேசியே
வருமானமீட்டும் யூட்யூபர்கள்...

யூட்யூபர்கள் மட்டுமா....

நடுநிலையாளர்களெனும் பதாகையின்
கீழிருந்து
ஒரு கட்சி சார்பாகவே செய்திகளைத் தரும்
பலப்பல 24 X 7 செய்திச் சேனல்கள்....

சேனல்கள் மட்டுமா .....

மண்ணோடு மண்ணாகாமல்
அந்த மாபாதகர்கள்
அன்றாடமிங்கே வலம்வந்து
கொண்டிருக்கக் கண்டு
வெட்கித்தலைகுனிந்து
வழியறியாது கலங்கிநிற்கும்
அன்புடை நெஞ்சம்தாம் கலந்த
அந்தச்
சின்னதொரு முத்தத்திலிருந்து
சிதறியவாறு கண்ணீர்த்துளிகளும்
குருதித்துளிகளும்
இன்னும் வேறும்
ஆறாது ஊறும்;
நாறும்...


பலாபலன்கள் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 பலாபலன்கள்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
கொடுங்கோலன் கையில்
அப்பாவிகளைப் பதம் பார்க்கும்
அது
நல்லவன் கையில்
நான் ஆணையிட்டால் பாட்டாகிப்
சுழன்றடிக்கும் கெட்டவர்களை.
நியாயத்தை நிலைநாட்டத் தன்னைத்தான் தண்டித்துக்கொள்ளும்
அகிம்சாயுதமாகும் சிலர் கைகளில்.
வரலாற்றின் விரிபரப்பில் சாட்டைக்கு
இடமுண்டு
சாட்டைக்குத் தொன்மமுண்டு
சாட்டைக்கும் ஆன்மா உண்டு.
அந்தச் சாமியும் உண்டு.
அடர்த்தி அதிகமோ, குறைவோ
சாட்டை வெறும் கயிறாவதில்லை.
புல் வனம் கல் குருவி மலை யருவி
சொல் மந்திரம் போல்
சாட்டையு மொரு குறியீடாக.....

INSIGHT a bilingual blogspot for Contemporary Tamil Poetry 2019insight.blogspot.com OCT, NOV, DEC 2024

INSIGHT
 a bilingual blogspot for Contemporary Tamil Poetry
2019insight.blogspot.com
OCT, NOV, DEC 2024

















 

 

AN APPEAL

 உதவிகோரி.......


//ஃபேஸ்புக்கில் இருக்கும் திரு, Semmal Abethan இன் வேண்டுகோள் இங்கே பகிரப்படுகிறது. உங்கள் உதவி யால் நாளைய நம்பிக்கைக்குரிய வாசகர்களுக்குப் புத்தகக் கண்காட்சிக்குப் போய்வர முடியும். சில புத்தகங்களை வனக்கிப் படிக்கவும் முடியும்.//




//AN APPEAL FROM SEMMAL ABEETHAN//
...................................................................................................
வணக்கம்
வடசென்னை திருவொற்றியூர் பகுதியில் இருந்து அரசு பள்ளியில் பயிலும் கூலித் தொழிலாளர்களின், மாற்றுத்திறனாளி பெற்றோர்களின் பிள்ளைகளை புத்தகக் காட்சிக்கு அழைத்து வந்து குறைந்தது 200 ரூபாய் அளவிற்கு புத்தகங்களை வாங்க செய்து வாசிப்பு ஆர்வத்தை வளர்த்தெடுப்பதற்கான முயற்சியை மேற்கொள்ள உள்ளோம்... ஒரு குழந்தைக்கான புத்தகச் செலவு, பயணசெலவு, சிற்றுண்டி என 400 ரூபாய் தேவைப்படுகிறது... வாய்ப்புள்ள நல்லிதயங்கள் உதவிகளை நல்கி எம் முயற்சியில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்.

செம்மல் அபேதன்
கல்வி மேம்பாட்டிற்கான நண்பர்கள் குழு
செம்மல் அபேதன் கல்விக் கழகம்
1073, திருவெற்றியூர் நெடுஞ்சாலை,
திருவெற்றியூர், சென்னை 19
பணமாக அனுப்பினால் வாங்கிய பில் தங்கள் பேரில் அனுப்பலாம்... 9092294894

எங்களைப் பற்றி:
..............................................................
மார்கசிய அம்பேத்கர் பெரியாரிய அமைப்புகளில் செயல்படக் கூடிய 15 க்கும் குறையாத நண்பர்கள் இணைந்து கல்வி மேம் பாட்டிற்கான சிறு சிறு பணிகளை செய்து வருகிறோம்... விளிம்பு நிலையில் உள்ள குழந்தைகளின் பள்ளி பாட புத்தகங்கள், சீருடை கள் தேவையை பூர்த்தி செய்வது. இலவச இரவு பாடசாலை யில் படிக்கும் மாணவர்களை கல்வி மற்றும் அறிவியல் சுற்றுலா கொண்டு செல்வது. இலவச இரவு பாடசாலைகள் நடத்துபவர் களின் நிதி தேவையை தொடர்பில் உள்ளவர்களிடமிருந்து பெற்று தருவது என எங்கள் பணி உள்ளது.

தமிழ்க்கவிஞர் ஆத்மாஜீவுக்குத் தோள்கொடுப்போம்

கவிஞர் ஆத்மாஜீவின் சமீபத்திய கவிதையொன்று கீழே தரப் பட்டுள்ளது. சிறந்த கவிஞர். காலக்ரமம் என்ற இலக்கிய இதழை நடத்தியவர். சமீபகாலமாக உடல் நலிந்தும் உழைக்க இயலாம லும்  நிதி நெருக்கடியிலும் அவர் அனுபவிக்கும் வலிவேதனை களை அவருடைய கவிதைகள் பேசிவருகின்றன. முடிந்தவர்கள் அவருக்கு உதவ முன்வரவேண்டும். எத்தனையோ சமூக நல அமைப்புகள், அரசியல் அமைப்புகள் இருக்கின்றன. இவர்கள் கொஞ்சம் இந்தக் கவிஞருக்கு உதவிக்கரம் நீட்டினால் எத்த னையோ நன்றாயிருக்கும். இதுவும் இன்றியமையாத இலக்கியப் பணிகளில் ஒன்று. படைப்பாளியின் பசிப்பிணி போக்குவது.


வாய்க்கரிசி வாங்கிக் கொண்டு போய்விட
தூண்டுகிறது காலம்.

வாசலில் வந்து நின்று கூப்பாடு போடுகிறது
கழுத்தை நெறிக்கும் கைகள்.

நெஞ்சக்கூட்டில் கழுவேறியவனின் குரல்
நிராதரவாய் ஒலிக்கிறது.

கற்றுப் புரியா வாழ்வின் பாடம்
மொழிதெரியாதவனின் சாபம்.

இணையாளின் கால்களுடன் இணைந்து
வெளியேறத் துடிக்கிறது உயிர்க்கால்கள்.

கட்டங்கடைசியில் மரணத்தைக் கையேந்தி
வாய்க்கரிசியை மென்றபடி பயணிக்கிறோம்.

எங்கோ காத்திருக்கிறது எங்களை
ஏற்றுக் கொள்ளும் நதி.


ஆத்மாஜீவ்

தொடர்புகொள்ள விரும்புவோர் அணுகவும்
வி.சி.ராஜேந்திரன் ஆத்மாஜீவ் அலைபேசி/வாட்சப் : 84385 44124

MODERN TAMIL POETRY - A MINIATURE CANVAS - VOL. 1 & 2

 

MODERN TAMIL POETRY - A MINIATURE CANVAS - 

VOL. 1 & 2

வெளியீடு : கலைஞன் பதிப்பகம்

ஒவ்வொரு தொகுப்பிலும் 150க்கு மேற்பட்ட சமகாலத் தமிழ்க்கவிஞர்களின் ஆளுக்கொரு கவிதை ஆங்கில மொழிபெயர்ப்பில் இடம் பெற்றுள்ளன.

முதல் தொகுதியிலுள்ள கவிதைகளை மொழி பெயர்த்தவர்:  திரு S.N.ஸ்ரீவத்ஸா

இரண்டாம் தொகுப்பிலுள்ள கவிதைகளை மொழிபெயர்த்தவர்: லதா ராமகிருஷ்ணன்

வாங்கவிரும்புவோருக்கான தொடர்பு எண்: 

திரு.ராஜா - +91 97104 22798



தன்வரலாற்றுப்புனைவு - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 தன்வரலாற்றுப்புனைவு

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
‘’ஸெலக்டிவ் அம்னீஷியா’வை செம தோதான அளவுகளில் வரிகளில்,
வரியிடை வரிகளில் சிந்தச்செய்து கொண்டேயிருக்கவேண்டும்
சூடாக அருவத் தம்பலர்களில் தன்முனைப்புச் சக்கரையிட்டு
செத்துப்போய்விட்ட சகமனிதர்களை சீரான தொனியில்
சகட்டுமேனிக்கு வசைபாடுவதே சிறப்பான இலக்கியத்துவமாக
பரபரவென்று தயாரித்து ஆவிபறக்கத் தரவேண்டும் – தளும்பத்தளும்ப.
மறவாமல் ஒருபக்க நியாயத்தை மறுபக்க நியாயமாகவும் மாற்றிக்காட்டப் பழகவேண்டும்.
மறுதலிப்போரை மானங்கெட்ட கூலிப்படையினராகக் கேலிசெய்யும்
ஞானமார்க்கந் தெரிந்து நடக்கப் பயிலவேண்டும்.
நான் அந்தத் தெருவில் அன்று நடந்தேன்
இந்தத் தெருவில் என்று நடந்தேன்
என்று முந்தி பிந்தி நடந்ததையெல்லாம்
சொந்தக்கால்களுக்குட்பட்ட பரப்பாக்கிக்கொள்ளவேண்டும்-
சௌகரியமானவற்றை மட்டுமே என்பதைச் சொல்லவும் வேண்டுமோ.
இருபது பேரிலோ அறுபது பேரிலோ ஒருவராக இடம்பெற்றிருந்ததை
இவரேயெல்லாமாய்த் திரித்துத் தன்னைப் பெரிதுபடுத்திக்கொள்ளத்
தெரியவேண்டும்.
மனதின் ஆழத்தில் மண்டிக்கிடக்கலாகும் மகா கண்றாவி
போர்னொகிராஃபிக் காட்சிகளை
திருத்தமாய் வெட்டியொட்டித் தகவமைத்துத் தந்து
தணிக்கைக்குத் தப்பத்தெரிந்த தரமான திரைப்பட வர்த்தகராய்
தன்னைத் தயாரித்துக்கொள்ளும் வித்தகத்தில் தேர்ச்சிவேண்டும்.
கிசுகிசுப்பாய் புறம்பேசித் திரிந்து அதையே
இலக்கிய ரசனை விகசிப்பாய்
அளந்துதரத் தெரியவேண்டும்.
புகழுக்கான தன் அலைச்சல் இலக்கியத் தேடல்
இன்னொருவருடையதோ நக்கிப் பிழைத்தல்
1, 2, 3, 4, 5, 6, 7, 8....... என்று வேறொருவர் 100 வரை எழுதிக்கொண்டேபோனால் அது பிரதியை இட்டுநிரப்பல்
அதையே 100, 99, 98, 97, 96, 95, 94.......
என்று பின்னோக்கி ஒன்று வரை தான் எழுதினால் அது
இலக்கியமாகிவிடுதல்
என்ற பிரிகோட்டுப் பார்வையைப் பெற்ற முக்கண்ணராயிருக்கவேண்டும்.
பதிலளிக்கும் பொழுதில்லாதவரை, வழியில்லாதவரை கதியில்லாதவரை
கும்மாங்குத்துக் குத்திக்கொண்டேயிருக்கவேண்டும்.
தெம்மாங்குப் பாட்டோ, திரைப்பாலட் மெட்டோ
பின்னணியிசையுமிருந்தால் பெரிதும் உகந்ததுதானே.
எதிர்வினையாற்ரும் நிலையிலில்லாதவரை குதித்துக் குதித்துப் பிடரியில் ஓங்கியடிக்கும்
மனிதநேயவாதியாகத் தன் தலை பெருத்து வீங்கவேண்டும்.
தனதாமெனில் தன்முனைப்பு அறமென்றும்
பிறருடையதெனில் அது அசிங்கம் அராஜகம் ஆணவமென்றும்
பிரதிக்கு உள்ளேயும் வெளியேயுமாய்
பொருள்பெயர்த்துக்காட்ட வேண்டும்.
கொலையே செய்திருந்தாலுமதைக் கலையாக்குவதோடு நில்லாமல்
கனகச்சிதமாய் நியாயப்படுத்திக் காட்டுவதே நிலைப்பாடாகக் கடவது.
உன்னிப்பாய்
பன்னிப்பன்னி யுரைத்தொரு
வன் கருத்தை
வெளிப்படையாகவோ உட்குறிப்பாகவோ பதிவுசெய்தல்
இன்றியமையாதது.
கொசு கடித்ததை பசுவின் பாலில் கொஞ்சம்போல் தண்ணீர்விட்டுக் காய்ச்சியதையெல்லாம்
உள்ளதை உள்ளபடிச் சொல்வதுமொரு பாவனையாக
சுயசரிதையாவதும் சொத்தைக்கதையாவதும் அவரவர் திறமாக
அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்க
ஒரு தன்வரலாற்றுப்பிரதியில் தனக்கென்ன கிடைக்குமென்று
பார்க்கும் வாசிப்போர்
யாசிப்போராய்
நிரம்பாத பிச்சைப்பாத்திரத்தோடு
வருந்தி நிற்பதே அவர் தலைவிதி
அல்லது எழுத்தூக்கலையின் நிர்க்கதி.
பிரதியின் முதலிலோ இறுதியிலோ
இந்த வரிகளுக்குத் தலைப்பாகவுள்ள
வரியை இடம்பெறச்செய்யவேண்டும்
மறவாமல் _
பொறுப்புத்துறப்பாக.

இந்தக் காலத்துப் பாடல்கள்.....

 இந்தக் காலத்துப் பாடல்கள்.....

இந்தக் காலத்துப் பாடல்கள் அந்தக் காலத்துப் பாடல்களைப்போல் இல்லை என்று ஒற்றைவரியில் தீர்ப்பளித்துவிடுபவர்கள் இங்கே நிறைய. ஆனால், எனக்கு என்றுமே அப்படித் தோன்றியதில்லை. இப்போதும் அருமையான பாடல்கள் நிறைய கேட்கக்கிடைக் கின்றன. எடுத்துக்காட்டாக இந்தப் பாடல். மனதையுருக்கும் வரிகள், இசை, குரல்.

இப்போது கேட்கும்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதிப்புக்காளாகியிருக்கும் அந்த மாணவியை யும் அவருடைய அன்பிற்குரிய அந்த மாணவரை யும் மனம் எண்ணி வலியுணர்வதைத் தடுக்க முடியவில்லை.

Yuvan Shankar Raja - Oru Devathai (Lyrics) ft. Roop Kumar Rathod

https://www.youtube.com/watch?v=lnYblKWl-Vw

அரசியல் பார்வை -‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 //2019, DECEMBER 8 மீள்பதிவு//

அரசியல் பார்வை
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
மக்களாட்சி மிகவும் பொய்த்துப்போய்விட்டது என்றார்.
காரணம் கேட்டால்
காவல்துறை என் கைவசமில்லை;
சட்டமியற்றும் அதிகாரமும்
தீர்ப்பளிக்கும் அதிகாரமும் எனக்குத் தரப்படவில்லை
யென்றார்.
தப்பித்தால் போதுமென்று
தலைதெறிக்க ஓடலானேன்.

அண்ணா பல்கலைக்கழக அவல நிகழ்வு

 அண்ணா பல்கலைக்கழக 

அவல நிகழ்வு  



மிக மிக அவலமான நிகழ்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடந்தேறியிருக் கிறது.  ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட் டிருக்கிறாள். அதற்கான எதிர்ப்பு ணர்வின், வலிவேதனையின் அந்த அவல நிகழ்வு குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்கும் நோக்கத் தில் பாஜக தமிழகத்தலைவர் தன்னைத்தான் சாட்டையால் அடித்துக்கொண்டதை எள்ளிநகை யாடுவதில் ஆர்வங்காட்டும் எழுத்துலகப் போராளிகள் இந்த நிகழ்வு குறித்துக் கருத்து ரைப்பதை கவனமாகத் தவிர்க்கிறார்கள். இது வேதனைக் குரியது; வருந்தத்தக்கது. 


சென்னைப் புத்தகக் கண்காட்சியில் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலுமான பல்வேறு சமூக அநீதிகளுக்கெதிராக போராட்டக்குரல்கள், சிறுகூட்டங்கள், கையெழுத்து இயக்கங்கள், கையேடு விநியோகங்கள் நடந்திருக்கின்றன. இவ்வாண்டு அண்ணா பல்கலைக்கழக வளாகத் திற்குள்ளாக மாணவிக்கு இழைக்கப் பட்டிருக்கும் அநீதி சென்னைப் புத்தகக் கண்காட்சி யில் சிறிய அளவிலாவது எதிர்ப்புக்குரல் எழுமா?

அவரவர் உலகம் - ‘ரிஷி ’(லதா ராமகிருஷ்ணன்)

 //2018, DECEMBER 23 - மீள்பதிவு//

அவரவர் உலகம்
‘ரிஷி
’(லதா ராமகிருஷ்ணன்)



அந்த பிரம்மாண்ட விழாவில்
அலங்கரிக்கப்பட்ட மேடையில்
ஒருவர்
அரங்கதிர முழங்கிக்கொண்டிருந்தார்
”கூழாங்கல் வைரமாகிவிடுமா என்ன?”

சோப்புக்குமிழில் பிரபஞ்சத்தை நிறைத்து
ஊதிக்கொண்டிருந்த சிறுமி சொன்னாள்:

ஆகவே ஆகாது;
கூழாங்கல் எத்தனை அழகு!
அம்மாடியோ! என்னென்ன வண்ணம்!
எத்தனை வழுவழுப்பு!

தன்மதிப்பு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 //2019, DECEMBER 26 - மீள்பதிவு//

தன்மதிப்பு
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
நாங்கள் ஆளுக்கு நான்கு பிரம்மாண்டக் கப்பல்களின் அதிபதிகள் என்கிறார்கள்.
அப்படியா என்று கேட்டு அப்பால் நகர்கிறேன்.
அவர்களில் ஒருவருக்குத் தலைசுற்றுவதுபோலிருக்கிறது.
இன்னொருவர் அதிர்ச்சியில் தடுக்கிவிழப் பார்க்கிறார்.
மூன்றாமவர் என்னை அப்படி முறைக்கிறார்.
நான்காமவர் நிதானமிழந்து வேகவேகமாய்த் தொடர்ந்துவந்து
ஆகாயவிமானங்கள் கூட எங்களிடமிருக்கின்றன என்கிறார்.
ஆளுக்கு நாலாயிரமா என்று கேட்கிறேன்
சலிப்பையும் சிரிப்பையும் அடக்கிக்கொண்டு.
அத்தனை மண்டைகனமா என்று ஆத்திரத்துடன் கேட்டபடி
அடிக்கவருகிறார்கள்
அப்படியில்லை, என்னிடமிருப்பதை நீங்கள் அறியவில்லையே என்ற ஆதங்கம் என்கிறேன்.
”அப்படி யென்னதான் வைத்திருக்கிறாய் பெரிதாக?”
”என்னை” யென்றபடி பிரதிசெய்யமுடியாத
வரிரூபமாகிறேன்

’ஷெர்லாக் ஹோம்ஸு’ம்(நானே!) ’வாட்ஸனு’ம்(நானே!) - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 //2016, DECEMBER 26 - மீள்பதிவு

’ஷெர்லாக் ஹோம்ஸு’ம்(நானே!) ’வாட்ஸனு’ம்(நானே!)

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

நகசமும் நகரசமும் 'தும்பிக்கை-தந்த'ப் பிராணியின்
ஒருபொருட்பன்மொழியாக, பல்பொருளொருமொழியாகும்
நகாயுதம் குறிக்கும் பறவைகளிலும் விலங்குகளிலு முள
கொம்பும் வாலும் கடைவாய்க் கூர்பல்லும், வளைநகமும்,
வண்ணச்சிறகும் இன்னென்னவும் பதிலியாகுமோ உன் என் ஒரு சொல்லுக்கு?
நகுலன் சிவனும் அறிஞனும் பஞ்சபாண்டவர்களில் ஒருவனும் மட்டும்தானா? நல்ல கவியும்தானே!
நகிலம் நக்கிதம் நசலுண்டாக்க,
நிழல்யுத்தம் செய்தவன் மன நகுலம் மூச்சுத்திணறும் நாகமின்றியே.
நகதியன்ன நல்வார்த்தைகள் சொல்பித்து நசைநர்
நகுதத்தினடியில் வழிநடத்திக் கிடத்த,
அந்த நக்கவாரப் பக்கவாட்டுகளி லுள்ள நீர்நிலைகளில்
நக்கரமுண்டா வென்றறியும் நகுதாவும் உண்டோ?
நகேசனின் உள்ளாழத்தில் நடுங்கத்தொடங்கிவிட்டதோ நிலம்?
என் நகரூடத்திற்கும் நகாசிக்கு மிடையே உள்ளோடும் நரம்புகளின் சிக்குகளை சிடுக்குகளை நானே நேரிடையாய் காணமுடியுமோ?
நக்கிரை, நக்குடம் என்றே நாசியைச் சுட்டும் நகாசுவேலை
நவீனமா? புராதனமா?

............................................................................................
(பி.கு: தமிழ்-தமிழ்-ஆங்கில அகராதி ஒன்றின் பக்கங்களைப் புரட்டிப்பார்க்க நேர்ந்தபோது ‘ந’ என்ற எழுத்தின் பக்கங்களில் கீழ்க்கண்ட பல வார்த்தைகளையும், அவற்றிற்கான அர்த்தங்களையும் படித்தேன். மலைப்பாக இருந்தது! அதன் விளைவே இக்கவிதை! – ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)
நகரூடன் – மூக்கு
நக்கிரை – மூக்கு
நக்குடம் - மூக்கு
நகாசி – நெற்றி
நகதி – பொன்கட்டி, கருவூலம்
நகரசம் – யானை
நகசம் – யானை
நகாசுவேலை – பொற்கொல்லர்களால் செய்யப்படும் நுணுக்கமான பொன்நகை வேலைப்பாடு
நகாயுதம் – சேவல், சிங்கம், புலி, கருடன், கழுகு
நகிலம் – பெண்ணின் மார்பகம்
நகுலம் – கீரி
நகுதா – மாலுமி
நகுத்தம் – புங்கமரம்
நகுலன் – சிவபெருமான், அறிஞன், பஞ்சபாண்டவருள் ஒருவன்
நகேசன் – மலைகட்குத் தலைவனாகிய இமயமலை.
நக்கரம் – முதலை
நக்கவாரம் – ஒரு தீவு, வறுமை
நக்கிதம் – இரண்டு
நசலாளி – நோயாளி
நசல் – நோய்
நசைநர் - நண்பர்கள்