Tuesday, June 20, 2023

பொம்மிக்குட்டியின் கதை! ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பொம்மிக்குட்டியின் கதை!

’ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)

(*ஆறாவது தொகுப்பான அன்பின் பெயரால் என்ற தலைப்பிட்ட தொகுப்பில் 

உள்ள கவிதை)


[I]

தலையாட்டி பொம்மைகளை யாருக்குத் தான் பிடிக்காது?

அதுவும், சின்னக்கண்ணனின் பொம்மை அத்தனை கலைவண்ண கைநேர்த்தியோடு

கிடைக்கோடாய் அசைவதைத் தவிர்த்து

மேலுங்கீழுமாய் மட்டும் முகம் ஆட்டிக் காட்டும்!

எதைச் சொன்னாலும் கண்சிமிட்டிப் புன்சிரிக்கும்.

கைகால் இயக்கங்களெல்லாம் குழந்தைக் கண்ணனின் மனம் போன போக்கில்;

அல்லாது தலையாட்டி பொம்மைக்கு

ஏது தனிப்பட்ட இயக்கம்...?

குறும்புச் சிறுவனின் கைகளிலும், மடியிலும்

தயக்கமில்லாமல் பொருந்தியமர்ந்திருக்கும்.

தனக்குப் பிடித்தமான பெயரை தலையாட்டி பொம்மைக்குத் தந்து

அதைத் திரும்பத் திரும்பக் கூவியழைத்துக்

குதூகலிக்கும் குழந்தை...

"பொம்மிக்குட்டீ வா.. வா.. பூ பூவாய் முத்தம் தா..."

பஞ்சுப்பொதியாய் பொம்மையின் உடல்.

பிஞ்சுக் கைகள் மென்மையாய் வருடித் தரும்.

துஞ்சும் நேரமெல்லாம் பொம்மிக்குட்டியைத்

தன்னருகே பத்திரப்படுத்திக் கொள்வான் சின்னக் கண்ணன்.

ஆனா- ஆவன்னா, A B C, 1 2 3...

அவனுக்குத் தெரிந்ததெல்லாமும்

சொல்லித் தரப்படும் பொம்மிக்குட்டிக்கும்.


II


பள்ளிக்குப் போய் வந்து கொண்டிருந்த சின்னக்கண்ணன்

கூடப் படிப்பவர்களைப் பற்றியெல்லாம் தினமும்

வீடு திரும்பிய பிறகு

வண்டிவண்டியாய் பொம்மிக்குட்டிக்குக் தவறாமல் கதை சொல்வான்.

கண்கொட்டாமல் கேட்டுக் கொண்டிருக்கும் பொம்மிக்குட்டி.

அடிக்கொரு தரம் தலையை ஆட்டும் - மேலுங்கீழுமாய்.

"அச்சுதன் அடித்தான், அவனைத் திருப்பியடித்தேன் - சரிதானே?"

"ஆம், ஆம்". ஆனால்...

"முகுந்தன் என்னுடைய பென்சிலை உடைத்துவிட்டான் என்பதால்

அவனை நையப் புடைத்து விட்டேன்" என்று சின்னக் கண்ணன்

சொன்னபோது

செய்த குற்றத்திற்கு தண்டனை அதிகம் என்றுதோன்றியது

பொம்மிக்குட்டிக்கு. சற்றே தயக்கமாய்

தலையை ஆம் - இல்லையாய் ஆட்டியது பொம்மை.

உயிருள்ளது பொம்மை என்று நம்பும் சிறுவன் கொஞ்சம்போல்

திகைத்துச் சினந்தான்.

தகப்பன்சாமி தான் என்றாலும்

"எனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காய் தருணுடைய கையைக்

கடித்துக் குதறி விட்டேன், கத்தியாலும் வெட்டி விட்டேன்"

என்று பெருமைபீற்றிக்கொண்டபோது

பொம்மிக்குட்டியின் தலை தவிர்க்கமுடியாமல் இடவலமாய்

ஆட ஆரம்பித்ததைக் கண்டு

மட்டுமீறிப் புகைந்த கோபத்தில் சிறுவனின் கரம்

பொம்மிக்குட்டியின் சிகையைக் கொத்தாய்ப் பிடித்து

கதவிற்கு அப்பால் வீசியெறிந்தது.

'பதிலுக்கு புதிய பொம்மைகள்

காசு கொடுத்தால் கிடைத்துவிட்டுப் போகிறது...

அதுவும், ஓசியில் கிடைத்ததுதான் பொம்மிக்குட்டி.

போதாக்குறைக்கு, நிறைய நைந்துபோய் விட்டது.

ஆய் பொம்மை; பீத்த பொம்மி..'


III


காரிருள் கவிய விழுந்தது விழுந்தவாறு

கிடந்தது பொம்மிக்குட்டி.

முதுகெலும்பு முறிந்ததுபோல் ஒரு சுளீர் வலி படர

உயிர்ப்பின் அடையாளம் பொம்மைதானோ வென

தனக்கெட்டிய பட்டறிவில் படித்துக் கொண்ட

விடையே கேள்வியாக அனத்திக் கொண்டிருந்தது நெடுநேரம்.

பின், கனவே போல் காற்றுத் தடத்தில் கிளம்பிச் சென்று

கதவிடுக்கில் மனம்நுழைத்துப் பார்த்தது.

பரிச்சயமான அறை.

பழகிய சின்னக்கண்ணன் வழக்கம்போல்

கைகொட்டிச் சிரித்தவாறு கட்டளையிட்டுக் கொண்டிருக்க,

எதிரே

சாவிகொடுத்தால் ஓடும் பொம்மை_

சல்யூட் அடிக்கும் பொம்மை_

சிரியென்றால் சிரிக்கும் பொம்மை_

சீறிபாயச் சொல்லி தள்ளிவிட்டால்

சரவென்று நெளிந்தோடும் நாகப்பாம்பு பொம்மை_

குத்தினாலும், எத்தினாலும் சத்தமெழுப்பாமல்

சிறுவனின் வீரசாகச் செயல் என்பதாய்

பெருமையில் பூரிக்கும் கைதட்டி பொம்மை_

'வெல்கம்' பொம்மை,ரிம்-ஜிம் நாட்டிய பொம்மை_

பெருந்தனக்காரர் பரிசளித்த பொம்மை_

பல வருடங்களுக்குப் பிறகு சாவகாசமாய் ஊரைப்

பார்க்கத் திரும்பி வந்திருக்கும் உறவொன்று

வாங்கிவந்த பொம்மை_

விரல்சொடுக்கிற்கேற்ப விரைந்தோடி

சுவற்றில் முட்டி நிற்கும் பொம்மை_

அலங்கார பொம்மைகள்,அவதார பொம்மைகள்_

வைக்கோல் பொம்மைகள், வெண்கல பொம்மைகள்_

பைக்குள் போட்டுக் கொள்ளுவதற்கேற்ற சிறிய பொம்மைகள்_

பூதாகார கரடி பொம்மைகள்...

அறையில் ஒரே நெரிசலாயிருந்தது.


IV


பிடிக்கவில்லை யென்று கடித்துத் துப்பியிருந்த பொம்மை

பரணிலிருந்து கீழே இறங்கி வந்திருந்தது.

பல ஆண்டுகளுக்கு முன் இன்னொரு குழந்தையின்

கைக்குப் போய்ச் சேர்ந்துவிட்ட பொம்மையும்

அருகமர்ந்து கொண்டிருந்தது.

கிழிந்த பொம்மைகள் சிலவற்றிற்கு

ஆயத்தஆடைகள் அணிவித்து

அழகுபார்த்துக் கொண்டிருந்தான் சின்னக்கண்ணன்.

சிறுவனின் கண்களே உதடுகளாய், வெளிப்பட்ட கூற்றுக்கு

மாற்று குறையாமல்

ஆடிக் கொண்டிருந்த தலைகள்

பொம்மைகளின் மேலும், கீழுமாய்.

காரியார்த்தமாய் வால்களைச் சுருட்டிக் கொண்டு

கூர்வளைநகங்களை செல்லப்பிராணிகளாய்

உள்ளிழுத்துக் கொண்ட வாக்கில்

அமர்ந்துகொண்டிருப்பவைகளைக்

காட்டும் அடையாளம் காலம்

எனப் பின்னேகி

பஞ்சுப் பிரிகளாய்

வெளியில் கலந்து திரியும்

பொம்மிக்குட்டியின் குரல் எட்டுமோ

உன்னை என்னை நம்மை...?

"நீயும் பொம்மை, நானும் பொம்மை,

நினைத்துப் பார்த்தால் எல்லாம் பொம்மை"