Monday, November 29, 2021

அண்மையும் சேய்மையும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ண்மையும் சேய்மையும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
இடையிடையே கிளைபிரிந்தாலும்
இந்த வாழ்வை ஒரு நீண்ட பயணமாகவே
பார்த்துப் பழகியிருந்தது
பேதை மனம்.
அதற்கான வழியின் அகலநீளங்களை
அளந்துவிடக்
கைவசம் தயாராக வைத்திருந்தது
எளிய கிலோமீட்டர்களை.
பத்துவருடங்களுக்கு முன்
நற்றவப்பயனாய்
பறவைபோல் வாராவாரம் சிறகுவிரித்துச்
சென்றடைந்த இடங்களும்
சந்தித்த சகபயணிகளும்
இன்று
ஏழு கடல் ஏழு மலை தாண்டியிருப்பதாய்
எட்டிப்போய்விட
தாற்காலிகக் குடியிருப்பாய் நகரும்
ஆட்டோக்கூட்டுக்குள்
பத்திரம் தொலைத்துச் சென்றவாறு
ஆயாசத்தில் அலைக்கழியும்
நேரம்
அறிவுக்குப் புலப்படும்
வயதின் அளக்கமாட்டா
தொலைதூரம்.

குழந்தையின் சச்சதுரக் கப்பல்களும் சூறையாடுங் கடற்கொள்ளைக்காரர்களும் - ரிஷி(லதா ராமகிருஷ்ணன்) -

           குழந்தையின் சச்சதுரக் கப்பல்களும்

சூறையாடுங் கடற்கொள்ளைக்காரர்களும்

 

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

(28.11.2021 தேதியிட்ட திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ளது)

ண்கள் மின்னும் சின்னக்குழந்தை யது

எண்ணிக்கையிலடங்காத வருடங்கள் அதன் வயது.


ச்சதுரங்களாகக் கப்பல்களை வரிகளில் உருவாக்கி

சில பல மனங்களில் கடல்களைக் கிளர்த்தி யது

ஓட்டிக்கொண்டிருந்தபோது

போகிறவர் வருகிறவரெல்லாம் கைப்போன போக்கில்

சின்னதாயும் சிதறுதேங்காயை வீசிப்போட்டுச் 

சிதறடிக்கச் செய்வதாயும்

குட்டிவிட்டுச் செல்வார்கள்.


சிலர் முதுகில் தட்டிக்கொடுக்கும் வீச்சில்

குழந்தையின் சின்ன தேகம் அதிர்வதைப் பார்த்து

அப்படி மகிழ்ந்து சிரிப்பார்கள்.


ரு தேக்கரண்டி நீர் சிற்றெறும்புக்கு நதியா கடலா

எப்படித் தத்தளிக்கிறது….


குழந்தையின் கன்னத்தில் வலிக்கக் கிள்ளுபவர்கள்

அதை எப்போதும் கொஞ்சலென்றே சாதிக்கிறார்கள்.


செல்லமே கொல்லும் வலி தரும்போது

கோப அறை குழந்தைக்குக் உயிர்வலியன்றி வேறென்ன?


குழந்தை பேசுபொருளாகும்,

ட்ரெண்டிங்கில் இடம்பெறும்

ஒருநாள்

அவர்கள் குழந்தையையும் அதன் சச்சதுரக் கப்பல்களையும்

அவை மிதக்கவென அது தன்னந்தனியே எப்போதும்

ஊற்றெடுக்கச் செய்துகொண்டிருக்கும்

சிற்றோடைகளையும்

சமுத்திரங்களையும்

தங்கள் குழுப்பெருமையைக் கொண்டாடுவதற்கான

இன்னொரு இனத்தை இழிவுபடுத்துவதற்கான

கச்சிதமான கருவியாகப் பயன்படுத்த வேண்டி

சொந்தங்கொண்டாடத்தொடங்குவார்கள்.


ப்பொழுதும் அவர்களுடைய இறுக்கமான அணைப்பிலிருந்து

திமிறிக்கொண்டிருக்கும் குழந்தை.

 

Tuesday, November 23, 2021

படைப்பும் பொறுப்பேற்பும் - லதா ராமகிருஷ்ணன்

 படைப்பும் பொறுப்பேற்பும்

லதா ராமகிருஷ்ணன்

( 21 நவம்பர் 202 தேதியிட்ட திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ளது)  

மூகப் பிரக்ஞை என்பது தங்களுக்குத்தான் இருக்கிறது என்பதுபோல் சில திரையுலகவாதிகள் முழக்கமிடுவது வாடிக்கை.

அரசியல்வாதிகளையே தொடர்ந்து குற்றஞ்சாட்டிக் கொண்டிருந்த ஒரு திரையுலக வாதிக்கான எதிர்வினையாய் ஒரு அரசியல்வாதி ‘நாங்களா வது ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை மக்கள்மன்றத்தின்முன் நிற்க வேண் டியுள்ளது. ஆனால் எங்களை ஒட்டுமொத்தமாகப் பழிப்ப தன் மூலமும் பகடி செய்வதன் மூலமும் தங்களை சமூகப் புரட்சியாளர்களாக நிறுவும் திரையுலகவாதிகளிடம் இருக்கும் பணம் எங்களில் பலபேரிடம் இல்லை’ என்று கூறியது ஞாபகம் வருகிறது.

 காவல்துறை உயர்அதிகாரி ஒருவர் சினிமாவில் கதாநாயகனாக வரும் காவல்துறை அதிகாரி தன்னந்தனியாகப் போய் வீரபராக்கிரமம் செய்து இருபதுபேர் அடங்கிய சமூக விரோதிகள் குழாமை நையப்புடைப்பதாய் திரும் பத் திரும்பக் காட்டப்படுகிறது. ஆனால், உண்மையில் ஒரு குழுவா கச் செயல்படுவதுதான் காவல்துறையின் வழக்கம். அப்படியில்லாமல் வெள் ளித் திரையில் காட்டப்படும் காவல்துறை வீரநாயக பிம்பங்களால் ஈர்க்கப்பட்டு தனியாகப்போய் இன்னலில் மாட்டிக்கொண்டவர்கள், இன்னு யிர் நீத்தவர்கள் உண்டு என்று தனது பேட்டி யில் சுட்டியிருந்தார்.

 சமூகப் பிரச்சினைகளை உண்மையான அக்கறையோடு அதற்கேற்ற கலா பூர்வமான நேர்த்தியோடு கையாண்ட தமிழ்ப்படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

 பெண்ணியம் பேசிக்கொண்டே பெண்ணை பண்டமாக பாவிக்கும் படங் கள்தான் அதிகம்.

மாற்று சினிமா என்பது வேறு பல மொழிகளில் குறிப்பிடத்தக்க தனியான இடத்தைத் தனக்கென நிறுவிக்கொண்டதைப்போல், ஒரு நீள்தொடர் முயற்சியாய் இருந்ததைப் போல தமிழில் இருந்ததில்லை; இன்றளவும் இல்லை. 

இன்னும் சொல்லப்போனால் தமிழில் black and white பாத்திரங்களே பரவா யில்லை என்னுமளவுக்குத்தான் grey shade பாத்திரங்கள் (உ-ம் நாயகன்) காணக்கிடைத்துள்ளன.

 இயக்குனர் பாரதிராஜா போன்றவர்கள் வீட்டுக்குள்ளேயே சோபாவில் அமர்ந்து கொண்டு கதாபாத்திரங்கள் பக்கம்பக்கமாக வசனம் பேசிவந்த வழக்கத்தை மாற்றி வெளிப்புறப் படப்பிடிப்பைக் கொண்டுவந்தார் என்ப தைத் தாண்டி கலாபூர்வமான படம் எதையும் எடுத்துவிடவில்லை.

மேலும், இவர்கள் காட்டிய கிராமங்களும் உண்மையான கிராமங்களை, கிராம வாழ்க்கையை பிரதிபலிக்கவில்லை என்ற விமர்சனமும் அவர்கள் கொடிகட்டிப் பறந்த காலத்தில் இருந்தது. கிராமத்து மக்களெல்லாம் வெள் ளந்தி மனிதர்கள் – பட்டணம் போனால் கெட்டுப்போய்விடுவார்கள் என்ப தான சித்தரிப்பே அதிகம் இருந்தது.

 படிப்பு, படித்தவர்கள் பற்றியெல்லாம் ஒரு எதிர்மறையான கருத்துக ளை யே இவர்களுடைய படங்கள் அதிகம் முன் வைத்தன. பாரதிராஜாவின் பட மொன்றில் பட்டதாரி இளைஞனிடம் வேலைக்கான நேர்காணல் என்ற பெயரில் அபத்தமாகக் கேள்விகள் கேட்கப்படும். ஆத்திரமுறும் நாயகன் தன் பட்டப்படிப்புச் சான்றிதழை யெல்லாம் கிழித்தெறிவான். இதேமாதி கே.பாலச்சந்தர் படத்திலும் உண்டு. ஒன்று, ஒரு வேலைக்கான நேர்கா ணல்கள் எல்லாமே இத்தனை அபத்தமாக நடத்தப்பட வழியில்லை. இன் னொன்று, அப்படியே ஓரிடத்தில் அபத்தமாக கேள்வி கேட்டாலும் அதற் காக தன் படிப்புச் சான்றிதழ்களைக் கிழித்தெறிய வேண்டுமா? 

அது யாரு க்கு நஷ்டம்?  அவர்களைப் படிக்கவைக்க அவர்களது வீட்டார் எத்தனை கஷ்டப்பட்டிருப்பார்கள். இப்படி ‘வெத்து ஆவேசக்காரர்களாக’ இளைய சமுதாயத்தினரைக் காட்டிக் காட்டியே, மாணவர்களென்றால் இப்படித் தான் இருக்கவேண்டும் என்று இப்படி உருவேற்றியே திரையுலக வாதிகள் தங்கள் கஜானாக்களை நிரப்பிக்கொண்டார்கள்.

 இன்று இந்த ‘ட்ரெண்ட்’ தொலைக்காட்சி மெகா தொடர்களில் நீரூற்றி வளர்க்கப் பட்டுக்கொண்டிருக்கிறது. ஒரு தொடரில் டாக்டர் ஒருத்தி கொலை செய்வது உட்பட அனைத்துவிதமான கொடூரங்களையும் செய்கி றாள், செய்கிறாள், செய்துகொண்டே யிருக்கிறாள். 

ஒரு தொடரில் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றிய கதாபாத்திரம் அத் தனை கேவலமான வில்லி யாக வருகிறாள். 

இது போதாதென்று, எம்பிஏ படித்த பெண்ணை அவள் அண்ணன் படிக்காத ஒருவருக்குத் திருமணம் செய்துவிடுகிறார். இந்தப் பெண்ணை மாமியார் நேரம் கிடைக்கும் போதெல் லாம் படித்த திமிர் என்று குத்திக் கிழிக்கிறாள். 50 குடங்களுக்கு மேல் தண்ணீர் இழுக்கச் செய்கி றாள். மருமகளோ மாமி யாரிடம் நல்ல பெயர் வாங்க நாயாய் உழைக்கிறாள். 

இந்தத் தொடர்களிலெல்லாம் மிக குரூரமான வசைபாடல்கள் சர்வ சாதார ணமாகப் புழங்குகின்றன. இறுதியில் ’எல்லாம் உன் நன்மைக்காகத் தான் செய்தேன்’ என்ற ஒரே ‘அரைத்த மாவு’ வாசகத்தில் எல்லோரும் ஒன்று சேர்ந்துவிடுவார்கள். 

‘தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு’ என்று வள்ளுவர் சொன்னதைப் பற்றி யாருக்கு என்ன கவலை? வள்ளுவர் விழா கொண்டாட இந்த சேனல்களெல்லாம் தவறுவதேயில்லை.

 அதேபோல்தான் சாதி மறுப்பு பேசுவதான பாவனையில் ஒரு படத்தின் இறுதிக் காட்சியில் காதாநாயகி தன் கழுத்திலிருந்த சிலுவையையும் கதா நாயகன் தன் பூணூலையும் கழட்டிப் போட்டு கைகோர்த்து ஓடிவிடுவதா கக் காட்டப்படும். அதற்கு எதிர்வினையாக பன்னீர் புஷ்பங்கள் படத்தில் அப்படிச் செய்வதன் அபத்தங்கள் சுட்டப்படும்.

 மேடையில் ஒரு இளம் கதாநாயகி ஆங்கிலத்தில் பேசியதற்காக அங் கேயே அந்தப் பெண்ணைத் திட்டி அவமானப்படுத்திய பாரதிராஜா சமயம் கிடைக்கும்போதெல்லாம் ஆங்கிலத்தில் பேசுவதைத் தவறாமல் செய் வார்.

தமிழ் என்று முழங்குவார்கள், உழவு என்று முழங்குவார்கள், பண்பாடு, பாரம்பரியம் என்று பாட்டும் வசனமுமாகக் கலக்குவார்கள். ஆனால் அவர் கள் வீட்டுப் பிள்ளைகளையெல்லாம் அயல்நாட்டில் படிக்கவைத்துக் கொ ண் டிருப்பார்கள். ‘லேட்டஸ்ட் மாடர்ன் டிரஸ், ஃபேஸ் லிஃப்ட் சகிதம் வாழ்ந் துகொண்டிருப்பார்கள்.

வடக்கிலிருந்து தமிழே தெரியாத வெளுப்புப்பெண்களாகத் தேடிப்பிடித்து  கதா நாயகிகளாக்குவார்கள்.

‘மாஸ்டர்’ படம் பார்க்க நேர்ந்தபோது உண்மையிலேயே ‘நொந்து நூலா கிப்’ போனது என் மனம். இளங்குற்றவாளிகள் கஞ்சா கடத்தலுக்காகப் பயன்படுத்தப்படுவது பற்றிப் பேசும் படம். எத்தனை சமூகப்பிரக்ஞையோடு கையாளப்பட்டிருக்கவேண்டிய கதைக் கரு. 

ஆனால் வழக்கமான ‘கதாநாயகரின் வீரபராக்கிரம(இதில் அவ்வப்போது புட்டியைத் திறந்து மதுவருந்துவதும் அடங்கும்) அடிதடி கொலைக்குத்துக ளோடு சுபமாய் முடிந்துவிட்டது. இப்படித்தான் தமிழில் கதாநாயக வழி பாடே பிரதானமாக அமைகின்றன படங்கள்.

இந்தப் படங்களுக்கான ‘பிரமோஷன்’ வேலைகளை ஜரூராகப் பார்க்கஊட கங்கள், சமூக ஊடகங்கள் என எல்லாவற்றையும் பயன்படுத்திக் கொள் வார்கள். படைப்புச் சுதந்திரம் என்று முழங்குபவர்கள் அது குறித்த எதிர்-விமர்சனங்களை தர்க்கபூர்வமாக முன்வைக்கும் சுதந்திரமும் உண்டு என் பதை ஏன் ஏற்க மறுக்கிறார்கள்?

திரையுலகவாதிகள் SELF-APPOINTED CHAMPIONS ஆக மற்ற துறையினரை  யெல்லாம் கேள்விக்குட்படுத்துவார்கள், அவர்களைப் பற்றிய பொதுப்படை யான எதிர்மறைக் கருத்துகளை உருவாக்குவார்கள். மொந்தைகளாகச் சித்தரிப்பார்கள். 

ஆனால், தங்கள் துறை சார்ந்த அவலங்களை, அத்துமீறல்களை மறந்தும் பேசமாட்டார்கள்.

சினிமாத்துறை சார்ந்த ’அசிங்கங்களை’ சித்தரித்து, மேலோட்டமாக அல் லாமல் ஆழமாக அலசி படங்கள் வந்திருக்கின்றனவோ தமிழில்?

நாவினால் சுட்ட வடு

நாவினால் சுட்ட வடு


சொற்களை விட

அதிகக் காயமுண்டாக்கும்,

சேதமுண்டாக்கும்,

புண்படுத்தும்,

பிரிவினையேற்படுத்தும்,

ஆகப்பெரிய பாதிப்புண்டாக்கும்

மோசமான

கொடூர ஆயுதம்

வேறு உண்டா என்ன?


சொற்களால்
ஒரே மனதை
எத்தனை முறை
படுகொலை செய்ய முடிகிறது?

உலகின் பிரச்னைகளுக்கெல்லாம்
காரணம்
மண், பொன், பெண்
என்பார்கள்.

இல்லை,
வன்சொற்களே.
......................................................................................................
தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு
_ திருவள்ளுவர்

Wednesday, November 17, 2021

அணுகுமுறைகள் - லதா ராமகிருஷ்ணன்

 அணுகுமுறைகள்

லதா ராமகிருஷ்ணன்

சொல்லத்தோன்றும் சில’…என்ற தலைப்பில் 14.11.2021 தேதியிட்ட திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ள கட்டுரை)

(www.thinnai.com) 


(அ) தொலைக்காட்சிகளில் தலைவிரித்தாடும் குரூர நகைச்சுவை:

திருமதி ஹிட்லர் என்பது ZEE தமிழ் தொலைக்காட்சித் தொடர் ஒன்றின் தலைப்பு. நகைச்சுவை என்ற பெயரில் கிச்சுகிச்சு மூட்டினாலும் சிரிப்பு வராத திராபை காட்சிகள்; வசனங்கள்; கதாபாத்திரங்களின் முகபாவங்கள். ஆனால் ஹிட்லர் என்ற பெயரை எத்தனை சுலபமாக ‘நகைச்சுவைக்கான’ பெயராக்கி விட்டார்கள் என்பதைப் பார்க்கும்போது வருத்தமாயிருக்கிறது. இது அப்பட்டமான insensitivity யல்லாமல் வேறென்ன?

இப்படித்தான் ‘சுனாமி’ என்ற சொல்லை பலவிதமாய் சிரிப்புமூட்டப் பயன்படுத்து கிறார்கள். சுனாமியின் கொடூரத்தை அனுபவித்தவர்களுக்கு அதைக் கேட்கும்போது எப்படியிருக்கும்?

முன்பெல்லாம் பெண்களை குறிப்பாக வீட்டுவேலை செய்யும் பணிப் பெண்களை நகைச்சுவை என்ற பெயரில் கேவலப்படுத்துவதும், மாநிறமாக உள்ள பெண்களை மட்டந் தட்டுவதும் உடற்குறையுடையவர்களை, குறிப்பாக பார்வைக்குறைபாடு உடையவர்களை ‘வேடிக்கைப்பொருளாக்குவதும்’ வெகு இயல்பாய் வெகுஜனப் பத்திரிகைகளிலும் சினிமாக் களிலும் இடம்பெற்று வந்தன. இப்பொழுது ஓரளவு குறைந்திருக்கிறது எனலாம். ஆனால், அது சட்டத்திற்கு அல்லது சம்பந்தப்பட்ட மக்களின் எதிர்ப்புக்கு பயந்து என்பதாகத் தான் இருக்கிறதே தவிர அந்த மனப்போக்கு மாறி விடவில்லை. அது பலவிதங்களில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டேயிருக் கிறது. இன்றளவும் மாநிறத்தில் கதாநாயகியை இயல்பாகக் காட்டமுடியாமல்தானே நம் சின்னத்திரையும் பெரியதிரையும் குடம்குடமாக மேக்கப்பை அப்புவதிலேயே குறியாக இருக்கின்றன.

விஜய் தொலைக்காட்சியில் ஒரு நகைச்சுவை நடிகரை எல்லோரும் திரும்பத்திரும்ப நகைச்சுவையாக ’கேடி ராமர்’ என்று அழைக்கிறார்கள். விஜய் தொலைக்காட்சியில் பொதுவாகவே இந்துக்கோயில்களில்தான் மாமியாருக்கு எதிராக மருமகளும் மருமகளுக்கு எதிராக மாமியாரும் புதிது புதிதாய் சதித்திட்டங்கள் தீட்டுவார்கள்.

எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடிப்பவர்கள், தொட்டாற்சுருங்கிகள் என்று சொல்லி விடுவது சுலபம். ஆனால், தலைவலி தனக்கு வந்தால் தெரியும் என்ற கூற்று நினைவு கூரத்தக்கது.

சில வருடங்களுக்கு முன்பு இந்தியக் கலாச்சாரத்தை எடுத்துக்காட்டுவதாய் சில லட்சங்கள் GRANT வாங்கி எழுதப்பட்ட படைப்பு ஒரு குறிப்பிட்ட நிஜ ஊரில் குறிப்பிட்ட திருவிழாவின் இறுதி நாளன்று குழந்தையில்லா பெண்கள் மலைமேல் உள்ள கோயில்பக்கம் சென்று யாரோடு வேண்டுமானாலும் பிள்ளை பெறுவது வழி வழி வழக்கம் என்பதாய் கதையெழுதி அது எழுத்துச்சுதந்திரமாகப் பல அறிவு ஜீவிகளால் வகுத்துரைக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட ஊர்ப் பெண்களைப் பற்றி யாருக்கு என்ன கவலை?

எந்தவிதமான சுதந்திரத்திற்கும் பொறுப்பேற்பும் உண்டு. உண்மை சம்பவத்தை முழு ஆவணப்படமாக உண்மைத் தரவுகளின் பின்னணியில் உரியவிதமாய் எடுத்தால் அது பார்வையாளர்களிடம் ஏற்படுத்தவேண்டிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அப்படியில் லாமல் உண்மைக்கதையில் கற்பனை கலந்து தந்தால் பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம். சமீபத்தில் வெளியாகியுள்ள திரைப்படத்தைப் பற்றி ஒட்டியும் வெட்டியும் பலர் பேசுவதே அந்தப் படத்திற்கான மிகப்பெரிய விளம்பரமாகிவிட்டது.

***   ***   ***

(அ) ஜெய்பீமைப் பேசுவோம்மாடத்தியைப் பற்றி மூச்சுவிட மாட்டோம்…..

 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திரையுலகை எழுத்தாளர்கள் தாங்கிப் பிடிப்பதுபோல் ஒரு நாளும் திரையுலகினர் எழுத்தாளர்களை நடத்துவதில்லை. இது நடப்புண்மை. நாட்டின், உலகின் பிற பகுதிகளிலும் இதேதானா நிலைமை என்று எனக்குத் தெரியாது.

கொஞ்சம் நல்ல படமாக அமைந்துவிட்டால்கூட அதை அனேக தமிழ் எழுத்தாளர்கள் அக்குவேறு ஆணிவேறாக அலசத் தவறுவதில்லை. அவர்கள் பாராட்டும் அந்தப் படத்தை யாரேனும் வேறுவிதமாக எழுதினால் அதற்கு உடனே உள்நோக்கம் கற்பிப்பதும் நடக்கும்.

அப்படித்தான் இப்போது வெளியாகியிருக்கும் ஜெய் பீம் என்ற திரைப்படமும் தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் பரவலான கவனத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

உண்மை நிகழ்வு ஒன்றைப் பற்றிய படம் என்னும்போதே ஒரு கதை அல்லது படத்திற்கு ஒருவித ஆவணத் தன்மை வந்துவிடுகிறது. அதன் பிறகு உண்மை நிகழ்வைச் சுற்றி பின்னப்பட்ட கற்பனைக் கதை என்று நம் இஷ்டத்திற்கு விவரங்களை சேர்ப்பது எடுப்பது சரியல்ல.

 ஜெய் பீம் படத்திற்கு எழுத்தாளர்கள் மத்தியில் இத்தனை பரபரப்பான கவனம் தரப்படுவதைப் பார்க்கும்போது சமீபத்தில் வெளியான கவிஞர் லீனா கவிஞர் யவனிகா ஸ்ரீராம் பங்கேற்றிருந்த மணிமேகலையின் அருமையான படைப்பாகியமாடத்திகுறித்து பல மனிதநேய, சமூகப் பிரக்ஞை மிக்க எழுத்தாளர்களிடையே பரவலாக நிலவிய / நிலவும் கனத்த மௌனம் தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வருகிறது.

ஒட்டியோ வெட்டியோ ஏதொன்றையும் எழுதாமல் எளிதாக அந்தப்புறம் பார்த்தவாறு கடந்துபோய்விடுவதே இந்தப் படத்தைப் பொறுத்தவரையான சினிமா-ஆர்வல எழுத்தாளர்கள் பலரின் அணுகுமுறையாக இருப்பது ஏன்? தெரியவில்லை.

பெரிய நடிகர்கள் எவரும் இல்லாமலேயே முழுநிறை வாக எடுக்கப்பட்டுள்ள படம் அது. சமூகத்தில் இன்றும் நிலவும் தீண்டாமைக்கொடுமையின் இன் னொரு பரி மாணத்தை நுட்பமாக எடுத்துக்காட்டுகிறது. உலக அளவில் பல்வேறு அரங்குகளில் அகல்விரிவாக விவாதிக்கப்பட்டுவரும் படைப்பு மாடத்தி.

 பெண் என்பதான எந்தவிதமான சலுகையும் தேவைப்படாத அளவு இதுவரையான எந்தவொரு பெரிய திரைப்பட உருவாக்குனரோடும் இணையாக கவிஞர் லீனா மணிமேகலை தன்னை நிலைநிறுத்திக்கொண் டிருக்கும் முழுநிறை வான மாற்று சினிமா மாடத்தி.

மாடத்தியின் கருப் பொருள் குறித்து மிகத் தெளிவான கருத்துகளைத் தன் பேட்டிகளில் தந்திருக்கிறார் அவர்.

சிலருடையதைப்போல் வெறும் name dropping அல்ல மாற்று சினிமா குறித்த அவருடைய அறிவும் ஆர்வமும் என்பது அவருடைய விரிவான பேட்டிகளிலிருந்து தெளிவாகவே புலப்படுகிறது.

நம் தமிழ் இலக்கிய வாதி ஒருவர் பல்வேறு இடையூறு களுக்கு இடையில் உருவாக்கி யிருப்பது. தங்கள் மௌனத்தால் எத்தனை எளிதாக இந்தப் படைப்பைக் கடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள் தமிழிலக்கிய அறங்காவலர்கள் என்ற திகைப்பிலிருந்து இன்ன மும் என்னால் மீள முடியவில்லை.

மாடத்தி வெளிவந்ததும் தாங்களும் காமராவைப் பிடித்துக்கொண்டிருந்த பழைய புகைப் படங்களையெல்லாம் தூசு தட்டிப் பதிவேற்றுவதில் (அவர்கள் இயங்குவதுமெயின்ஸ்ட்ரீம்திரைப்பட வெளியில்தான்அங்குகூட அவர்கள் தனிமுத்திரை எதையும் பதித்து விடவில்லை) சில படைப்பாளிகள் காட்டிய அதீத ஆர்வத்தைப் பார்க்க முடிந்தது.

 நல்ல சினிமா என்று பேசுபவர்கள் மாடத்தியை பேசுவதை ஏன் தவிர்க்க வேண்டும்?

மாடத்தி சங்கடமான சில கேள்விகளை எழுப்புகிறது. தீண்டாமை என்பது இன்னும் ஒரு படி மேலே போய் பார்க்கக்கூடாதவர்கள் என்ற ஒரு பிரிவை வளர்த்தி ருக்கும் அவலமான உண்மையை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.

எல்லாவற்றுக்கும் ஒற்றைக் காரணத்தைச் சுட்டி அவரவ ருக்கான தனிநபர் பொறுப்பேற் பிலிருந்து தப்பித்துக் கொண்டுவிடுவது சுலபம். ஆனால், சக மனிதர்களை அவமானப் படுத்துவதும் அதிகாரம் செய்வதும் பரவலாக எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. இதற்கு சாதி,மதக் கட்டுமானங்களை நாம் துணைக்கழைத்துக்கொள்கிறோம். இந்த உண்மையை போட்டுடைக்கிறது மாடத்தி.

கோயில் விழாவுக்காகப் பணம் வசூலிப்பதில் ஊர்த்தலை வன் கையாடல் செய்திருப்பது காட்டப்படுவதன் மூலம் தலைவர் எப்படியோமக்கள் அப்படி என்று கோடிட்டுக் காட்டப் படுகிறது.

 தலைவருக்குப் பாடம் புகட்ட அவருடைய மனைவி யைப் பெண்டாள்வது சரியான வழியாகப் பேசப்படுகிறது. எந்த சாதியானாலும் பெண் இழிவுபடுத்தப்படுவது என்ற நிலை அங்கே குறிப்பு ணர்த்தப்படுகிறது.

மாடத்தி தங்கள் ஊர் இளைஞர்களால் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டிருப்பதை அறிந்தும்கூட அந்த ஊர்ப் பெண்கள்பெண்ணுக்குப் பெண்என்ற அளவில் அதைப் பார்க்க முனையாத அவலம் முகத்திலறைவதாய் காட்டப்படுகிறது படத்தில்.

படத்தை எடுத்த விதம் அத்தனை நேர்த்தியாக அமைந்தி ருக்கிறது. இறுதிக் காட்சிகள் நிதி நெருக்கடி காரணமாக அடுத்தடுத்துக் காட்டப்படும் புகைப்படங்களாக அமைந்து விட்டனவா அல்லது அப்படித்தான் எடுக்க வேண்டும் என்ற பிரக்ஞாபூர்வமான தெரிவுடன் அப்படி எடுக்கப்பட் டனவா தெரிய வில்லை. படத்தின் இறுதிக்காட்சிகள் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டிருந்தால் அது பேசப்படும் பிரம்மாண்டமாய் சாதாரண ரசிக மனதுக்குக் கூடுதல் தாக்கம் ஏற்படுத்தக்கூடியதாய் அமைந்திருக் கும் என்று தோன்றுகிறது. ஆனால், அத்தகைய செயற்கையாய் உருவாக்கப்படும் அதீத தாக்கம் தேவையில்லை என்று படத்தை உருவாக்கியவர்கள் நினைத்திருக்கலாம்.

 இந்த மதம் அந்த மதம் என்றில்லாமல் மாடத்தி கடவுள் நம்பிக்கையை, இன்னும் குறிப்பாகச் சொல்வதென்றால்கடவுள் மீதான பயம், நம்பிக்கை என்று மக்கள் சொல்லிக்கொண்டிருப் பதைக் கேள்விக்குட்படுத்துகிறது. கடவுளைக் கும்பிடுகிறோம். அநியாயம் செய்வதற்கும் அப்படிக் கும்பிட்டுவிட்டு செயல்படத் தொடங்குகிறோம் . அப்படியென்றால்.....? கடவுள் அன்பு மயம் என்கிறோம் - திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்கிறோம் - ஆனால், ஆதரவற்ற வர்களைத்தான் அவர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்களும் ஏறி மிதிக்கிறோம். அப்படி யென்றால்.....? தாத்பர்யம் புரியாமல் செய்யும் சடங்குகள் எப்படி கடவுளாகும்? என பலப்பல கேள்விகளை மாடத்தி கிளர்த்துகிறாள்.

 மாடத்தியில் ஜோதிகாவோ நயந்தாராவோ முதன்மை கதாபாத்திர வேடத்தில் நடித்திருந் தால் அந்தப் படம் இன்னும் பேசப்பட்டிருக்குமோ? இந்த அருமையான படத்தை எடுத்திருப்பது கவிஞர் லீனா மணிமேகலை என்பதும் படம் பெரும்பாலான தமிழ்ப் படைப்பாளிகளால், பேசப்படாமல் புறக்கணிக்கப்படுவதற்கு ஒரு முக்கியக் காரணமோ?

கையாளப்பட்டிருக்கும் கதைக்கரு, எடுக்கப்பட்டிருக்கும் விதம் என எல்லாவற்றிலும் குறிப்பிடத்தக்க அளவு தனித்துவம் வாய்ந்த படைப்பாக உருவாகியிருக்கும் மாடத்தி திரையுலகினரால், நல்ல சினிமா ரசனையுடை யவர்களாகத் தங்களைப் பறைசாற்றிக் கொள்ளும் தமிழ்ப் படைப்பாளிகளால் போதிய அளவு பேசப்படவில்லை, இல்லை, பேசப்படவேயில்லை என்ற உண்மையின் பின்னுள்ள அரசியல், என்ன? அதிகாரம் என்ன? என்று இன்னமும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

 ***  ***  ***

மாணவிக்கு நடந்த அநீதியும் நாமாகிய கூட்டுப்பொறுப்பாளிகளும்

இந்த இரண்டு நாட்களில் மூன்று செய்திகள் – சிறுமிகளைப் பாலியல் வன்புணர்வுக் காளாக்கப்படுதல் தொடர்பானவை. திருமணம் செய்துகொள்கிறேன் என்ற வாக்களித்து 13 வயதுச் சிறுமியைக் கெடுத்து கர்ப்பமாக்கியிருக்கிறான் ஒருவன். உறவுக்காரனாம். தந்தைக்கு விஷயம் தெரிந்தும் புகார் செய்ய முன்வரவில்லையாம். பெண்கள் அமைப்பினர் விஷயத்தைக் கையிலெடுத்து புகார் செய்திருக்கிறார்கள். அந்தச் சிறுமிக்கு ஒரு குழந்தை பிறந்துவிட்டது. இன்னொரு வழக்கு தகப்பனே மகளிடம் தவறாக நடந்துகொண்டதாக தாயும் மகளும் புகார் தந்திருப்பது. தகப்பன் சில வருடங்கள் சிறைத்தண்டனையும் அனுபவித்த பிறகு இப்போது சரியான ஆதாரங்களே இல்லை என்றும், மனைவி கணவன் மேல் கொண்ட கோபத்தில் அப்படி குற்றஞ்சாட்டினார் என்றும் நீதிபதி குறிப்பிட்டு இத்தகைய போக்கு மிகவும் ஆபத்தானது என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இப்போது கோவையில் ப்ளஸ் 2 மாணவி ஒருத்தர் தன்னிடம் ஆசிரியர் சில மாதங்க ளாக தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் தலைமையாசிரியையிடம் புகார் செய்தும் அவர் அந்த மாணவிக்குப் பாதுகாப்பளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அந்த மாணவி தற் கொலை செய்துகொண்டுவிட்டார். இப்போது அந்த ஆசிரியையும் தலைமையாசிரியையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்திருக்கிறார்கள். இத்தகைய விஷயங்களில் பாதிக்கப் படுபவர் செத்தால்தான் நியாயம் கிடைக்கும் என்றவிதமான அணுகுமுறை மாறவேண்டி யது அவசியம்.

இந்த அநியாயம் தொடர்பாய் கோவையில் நடக்கும் போராட்டங்களை சில குறிப்பிட்ட தொலைக்காட்சிகள் ஒரு குறிப்பிட்டவிதமாக அணுகுவதும் வெளிச்சம் போட்டுக் காட்டுவ தும் ஏன் என்று தெரியவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணின் படத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஊடகங்களும் இருக்கின்றன. இது சட்டப்படி தப்பு என்று தெரியாதா?

போராடுபவர்களில் ஒரு பெண் ‘இது ஆர் எஸ் எஸ் – பிஜேபி கூட்டுச்சதி. பார்ப்பனீயப் போக்கு என்று சகட்டுமேனிக்குக் கருத்துரைப்பது திரும்பத்திரும்ப சில தொலைக் காட்சி சேனல்களில் காட்டப்பட்டது. சம்பந்தப்பட்ட பள்ளி சின்மயா வித்யாலயா. ஆனால் தலைமையாசிரியர் பெயர் மீரா ஜாக்ஸன். மாணவியிடம் முறைகேடாக நடந்துகொண்ட ஆசிரியர் பெயர் மிதுன் சக்கரவர்த்தி. தற்கொலை செய்துகொள் வதற்கு முன் அந்த மாணவி எழுதிவைத்துள்ள கடிதத்தில் ரீடாவின் தாத்தா, எலிஸா வின் அப்பா இந்த ஆசிரியர் யாரையும் விடக்கூடாது என்றவிதமாக எழுதியிருக் கிறாள். இவர்களெல்லாம் யார் என்பது இனிமேல்தான் தெரியவரும்.

குற்றமிழைத்தவர்கள் ஒரு சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் என்று காட்டப் படும் போக்கு எப்படி சரியாகும்? இதில் உள்ள ‘அரசியல்’ அசிங்கமானது.

பல வருடங்களுக்கு முன்பு தமிழகக் கல்லூரியொன்றில் மாணவிகள் போதைமருந்து உட் கொள்ளும் பழக்கத்திற்கு ஆளாக்கப்படுவதாகவும் கிராமங்களிலிருந்து வரும் மாணவி களுக்கு சின்னச்சின்ன வசதிகள் செய்துகொடுத்து அவர்களை கல்லூரியின் மூத்த மாணவி கள் சிலரின் உதவியோடு இந்தப் பழக்கத்திற்கு அடிமையாக்கி விடுவதாகவும், நாளடை வில் அவர்கள் விபச்சாரத்திலும் ஈடுபடுத்தப்படுவதாகவும் அந்தக் கல்லூரியில் வேலை பார்க்கும் ஒருவருக்குத் தெரியவந்தபோது எல்லா மகளிர் கல்லூரிகளிலும் போதைமருந்து குறித்த விழிப்புணர்வுக் கூட்டங்கள், சொற்பொழிவுகள் நடத்தப்பட மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளெதையும் கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. 

சில வருடங்களுக்கு முன்பு அரசுப் பள்ளி யொன்றில் எட்டாம் வகுப்பு மாணவியொருவர் சிறுநீர் கழிக்க மிகவும் சிரமப்படுவதாக அவருடைய தோழிகள் வகுப்பாசிரியரிடன் தெரிவிக்க அந்தப் பெண்ணை அழைத்துக் கேட்டதில் அவளுடைய வீட்டில் தாத்தா, சித்தப்பா என மூன்று பேர் அவரை பாலியல் துன்புறுத்தலுக்குத் தொடர்ந்து ஆளாக்கி வருவதும் வீட்டிலுள்ள பாட்டிக்கும் அது தெரியும் என்பதும் தெரியவந்தது என அந்தப் பெண்ணுக்கு உதவிய ஒரு பெண்மணி கூறியது அதிர்ச்சியாக இருந்தது. பள்ளியில் பயிலும் பெண்களுக்கு இது குறித்து உதவிக்கு தைரியமாக அணுக நிறைய ஆலோசனை மையங்கள் கட்டாயம் தேவை. யாரேனும் ஒரு மாணவி உயிரை நீத்தால் தான் இதுகுறித்தெல்லாம் கவனம் செலுத்துவோம் என்ற போக்கும். இத்தகைய அநீதிகளை ’அரசியல் ஆதாயத்திற்கும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை, அரசியல்கட்சியைப்பழிக்கவும் ’பயன்படுத்திக் கொள் வோம் என்ற போக்கும் அநாகரீகமானவை; ஆபத்தானவை.

பெற்றோர்கள் சங்கம் இன்னும் முனைப்பாகச் செயல்பட வேண்டும். இத்தகைய அத்து மீறல்கள் குறித்து அனைத்துப் பள்ளிகளிலும் விழிப்புணர்வும் தொடர் கண் காணிப்பும் இன்றியமையாதது. இத்தகைய இன்னல்களுக்கு ஆளாகும் பெண்கள் தைரியமாக அணுகத் தோதாய் சேவை மையங்கள் ஆங்காங்கே அமைக்கப்பட வேண்டும்.