Saturday, July 24, 2021

புதிரின் புதிர் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 புதிரின் புதிர்

 

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்) 


நிசப்தத்தின் சப்தம் அல்லது மௌனத்தின் வார்த்தை

எதுவாயிருந்தாலும் எல்லாவற்றுக்குமே

கேட்கும் எல்லை என்று ஒன்று உண்டு.

நாட்பட நாட்பட நினைவின் வயோதிகக் காதுகளில்

ஒலிபுகும் வழி குறுகிக்கொண்டே போகும்.

வயோதிகம் வருடங்களாலானதா என்ற கேள்வி

கூடவே வரும் எப்போதும்.

ஒரு புகைப்படம் காலத்தின் சிறு துணுக்கு;

அதுவே காலமாகிவிடாது. என்றபோதும்

காலமாகிவிட்ட காலத்துணுக்கைக்

காலமாக்கவும் காலமாகாமல் காக்கவும்

கால்பதியாக் காலத்தை கால் அரை முக்காலாய்

வாழ்ந்துபார்க்கவும்

காலங்காலமாய் அவரவர்க்கு அவரவர் காலம்

அடுத்தடுத்த இடமாக வாழ்வில் குடிபெயரும் நேரம்

விளக்கவொண்ணாதது தடமழியும் நினைவின் பாரம்

அளக்கமுடியாதது பிஎஸ்எஸ்பி பள்ளிக்கும்

வைரமுத்து வீட்டுக்கும் உள்ள இடைத்தூரம்

 

 

அடையாளமும் அங்கீகாரமும் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அடையாளமும் அங்கீகாரமும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
இத்தனையத்தனை யெனச் சொல்லவியலா
எத்தனையெத்தனையோ காக்கைகளில்
தனித்தொரு காக்கையாகத் தன்னை யாரும் பார்க்கவில்லையே
என்ற ஏக்கம்
எந்தக் காக்கையையும் தாக்கியிருக்காது
என்றே தோன்றுகிறது.
சக பறவைகள் இரைதேடப்
பறக்கவேண்டும்.
தூண்டில்களுக்கும் துப்பாக்கிகளுக்கும்
இரையாகாமல் தப்பிக்கவேண்டும்.
நிழல் தேடி நிறைய தூரம் செல்லவேண்டும்...
தன் கூடிருக்கும் மரம் தொலையாதிருக்கிறதா
என்று தொடர்ந்து கண்காணித்துவரவேண்டும்...
தானியமென்று சிறுகல்லை முழுங்கியதில்
ஏற்பட்ட உபாதைகளை
யாரிடம் பகிர்ந்துகொள்வது?
இதில் யாரை யார் புகழ்ந்துபோற்றுவது.....
அலகுகளின் நீள அகலங்களைத்
துல்லியமாக அளப்பதாய்
ஆளுக்கொரு அளவை வைத்திருக்க
வழியில்லை காக்கைகளுக்கு.
சினிமாவில் நடிக்கவைப்பதற்கென்று
ஃபோட்டோஷூட் நடத்தி
ஒரு காக்காயைத் தேர்ந்தெடுத்து
அழைத்து வந்து
நூறு வருடத் தொன்மை வாய்ந்த
ஆறு நட்சத்திர மரமொன்றின் கிளையில்
யாரேனும் இதுவரை தங்கவைத்ததாகத்
தெரியவில்லை.
அதற்காக அங்கலாய்ப்பதெல்லாம்
காக்கைகளின் வழக்கமில்லை.
காக்கையை அழகென்று போற்றிப்
பாடுவதில்லை யுலகு.
அதன் கரும்பட்டொளிர் பூமென்மைச்
சருமம் பற்றி யொரு வரியேனும்
இதுவரை பேசி யறியோம்.
இனிமையற்ற அதன் குரலின்
கரகரப்பை
எப்படியெல்லாம் பரிகசித்திருக்கிறோம்.
ஆகாயத்தோட்டி என்று குறிப்பிடுவதிலும்
ஓர் உட்குறிப்பு இருக்கத்தானே செய்கிறது.
கிளியின் அழகை
குயிலின் குரலினிமையை
மயிலின் எழில்நடனத்தை
குருவியின் குட்டியுருவை
யெல்லாம் எடுத்துக்காட்டிக்
காட்டிக்காட்டி
காக்காயைப் பழிப்பதுமட்டும்
ஒருநாளும் வழக்கொழிந்துபோகாததாய்….
சிறுகல்லைப் போட்டுப்போட்டு
நீர்மட்டத்தை உயர்த்தி
தாகம் தீர்த்துக்கொண்டதாய்
காக்காயின் அறிவுக்கூர்மைக்கு
கைவசமிருப்பது ஒரேயொரு கதை....
ஆனால்
பாட்டி சுட்ட வடையைத் தட்டிப்பறித்த
வில்லன் காக்காய்க்கு
பட்டிதொட்டியெல்லாம்
கரும்புள்ளி செம்புள்ளி
குத்தப்பட்டவண்ணமே
காக்கை காக்காய் காகம் – எல்லாமே
மனிதர்கள் சூட்டிய பெயர்கள்.
எனில்,
காக்கை காக்கைக்கு என்ன?
எண்ண நேரமின்றி
ஏதொரு அவசியமுமின்றி
என்றும்போல் காகங்களாகிய
காக்காய்களாகிய
காக்கைகள்
வலம் வந்தபடி வானிலும்
விளக்குக்கம்பத்தில் அமர்ந்துகொண்டும்…..
காக்கையின் வாழ்க்கைக்கு
நோக்கம் கற்பிக்க விரும்பும்
நம் அறியாமையை அறியாமலும்…..

கத்திமுனைப் பயணம் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கத்திமுனைப் பயணம்

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

நிரந்தரம் என்பதும் தாற்காலிகம் என்பதும்

காலக்கணக்கு மட்டுமல்ல…..

காலின்கீழ் கத்திமுனை உறுத்திக்கொண்டே

யிருக்கிறது.

கணநேர சந்தோஷம் பாதங்களின் கீழ் பஞ்சை

அடர்த்தியாக நீட்டிப் பரப்பிவைக்கும் நேரங்களில்

கத்திமுனை காணாமல் போய்விடுகிறது.

சமயங்களில் கால்பதியும் குளிர்நீர்ப்பரப்பின் இதம்

முனை மழுங்கச் செய்கிறது.

இறங்கித் தான் ஆகவேண்டுமென்றாலும்

பறக்கும் பொழுதுகள் உண்டு.

தம்மைக் கிழித்துக்கொண்டு நமக்கு

மலர்க்கம்பளம் விரிக்கும் தருணங்கள்

ஆகப்பெரும் வரம்.

என்றாலும் _

எப்போதுவேண்டுமானாலும் அது சிந்தச்

செய்யலாகும் சில ரத்தத்துளிகள்

பிரக்ஞையில் ஒரு மூலையில்

சேகரமாகிக்கொண்டு.

போகப்போக பழகிப்போய்விடுமாயினும்

கத்திமுனையின் கூர்மை ஓர்மையில்

ஆழமாகக் குத்திக் கிழித்தபடியே

 

வளர்ந்த குழந்தைகளின் குட்டிக்கரணங்கள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வளர்ந்த குழந்தைகளின் குட்டிக்கரணங்கள்

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)

ஒரு குழந்தை தத்தித்தத்தி நடக்க ஆரம்பிக்கும்போது பார்ப்பவர்கள் பரவசமடைவது வெகு இயல்பு.
இரண்டடிகள் நடந்து பின்பு குப்புற விழுந்து தவழத் தொடங்கினாலும்
திரும்பவும் எழுந்து நிற்க முயற்சி செய்யும் என்று தீர்மானமாய்ச் சொல்வது
வழி வழியாய் வழக்கம்தான்.
எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடிக்கும் கரவொலி யெழுப்பி
குழந்தையை உற்சாகப்படுத்தும் படுத்தலில்
குழந்தை தன்னை மறந்து அகலக்கால் எடுத்துவைக்க
தொபுகடீர் என்று விழுந்து அழ ஆரம்பிக்கும்.
உடனே தூக்குவதற்கு ஒருவர்,
பிஞ்சுப்பாதத்தைத் தடவிக்கொடுக்க ஒருவர்
குழந்தையின் கண்ணீரை உறுத்தாத வழுவழு கைக்குட்டையால்
ஒற்றியெடுக்க ஒருவர்
குழந்தையின் கையில் சாக்லெட்டைத் திணிக்க ஒருவர்
என்று நிறைய பேர் குழந்தையை சூழ்ந்துகொள்வார்கள்.
ஓரிருவரே இருக்கும் நியூக்ளியர் குடும்பத்தில்
அந்த ஓரிருவரே பல பேராக மாறிக்கொண்டு்விடுவார்கள்.
குழந்தையை மகிழ்விப்பதே பெரியவர்களின் குறிக்கோள்.
அப்படித்தான் அவர்கள் இன்றளவும் நம்புகிறார்கள்…..
இன்று பிறந்திருக்கும் குழந்தையொன்று இதுவரையான மிகச்சிறந்த ஓட்டப்பந்தயவீரர்களின் ரெகார்டுகளை யெல்லாம்
இரண்டடி தத்தித்தத்தி நடந்தே முந்திவிட்டதாக முழுவதும் நம்பியும் நம்பாமலும்
வளர்ந்தவர்கள் பத்திபத்தியாய் எழுதிக்கொண்டிருப்பதைப் படிக்கும்போது
எளிதாகக் கலகலவென்று சிரித்து முடித்து தூக்கம்போட்டுவிட
நாம் குழந்தையாக இருக்கக்கூடாதா என்று
ஏக்கமாக இருக்கிறது.

சகவாழ்வு - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 சகவாழ்வு

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

மயிலைப் பார்த்துக் காப்பியடிப்பதாய்
வான்கோழியை வசைபாடுவோம்.
வாத்துமுட்டையைப் பரிகசிப்போம்.
நாயின் சுருள்வாலை நிமிர்த்தப்
படாதபாடு படுவோம்.
கிளியைக் கூண்டிலடைத்து
வீட்டின் இண்டீரியர் டெகரேஷனை
முழுமையாக்குவோம்.
குதிரைப்பந்தயத்தில் பின்னங்கால்
பிடரிபட பரிகளை விரட்டித் துரத்தி
யோட்டி
பணம் பண்ணுவோம்.
காட்டுராஜா சிங்கத்தை நாற்றம்பிடித்த மிருகக்காட்சிசாலையில்
போவோர் வருவோரெல்லாம்
கல்லாலடித்துக் கிண்டலடிக்கும்படி
பாழடைந்து குறுகவிரிந்திருக்கும்
புழுதிவெளியில் உழலச் செய்வோம்.
வாழைப்பழத்தில் மதுபுட்டிக் கண்ணாடித்
துண்டைச் செருகி
யானைக்கு உண்ணத் தருவோம்.
பிடிக்காதவர்களைப் பழிக்க பன்னி என்று
பன்னிப்பன்னிச் சொல்லுவோம்.
அதுபாட்டுக்குப் போய்க்கொண்டிருக்கும்
கன்றுக்குட்டியின் முதுகில்
ஒரு தடித்த கழியால் ஓங்கியடிப்போம்.
எதிரேயுள்ள நடைமேடைச் சுவரின்
விளம்பரத்தாளை வாய்க்குள் இழுக்கப் படாதபாடுபட்டுக்கொண்டிருக்கும்
தாய்ப்பசுவின் கண்களில்
நீர் ததும்பக்கூடும்.
அதைப்பற்றி நமக்கு என்ன கவலை?
மனம் கசிந்து அழுபவரையும்
பழித்து இழிவுபடுத்த
தினந்தினம் உதாரணம் காட்டுவோமே
யல்லாமல்
மற்றபடி முதலையின் ரணம், சினம் கனம்
அது அதிகமாய்க் காணப்படும் சதுப்புநில
வனம்
அதற்கு இருக்கலாகும் மனம் பற்றி
என்ன தெரியும் நமக்கு?

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் பயிர் முளையிலே தெரியும்………… ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் பயிர் முளையிலே தெரியும்…………

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்
அநியாய அவதூறுகள்
அவமானகரமான வசைச்சொற்கள்
அமைதியிழக்கச்செய்யும் கெக்கலிப்புகள்
அசிங்கப்படுத்தும் அடைமொழிகள்
அக்கிரம வக்கிரச்சொலவடைகள்
பொச்சரிப்புப் பழமொழிகள்
பொல்லாங்குப் புதுமொழிகள் என
ஒருவருக்கு நாம் தந்துகொண்டிருக்கும் அத்தனையையும்
நமக்கு இன்னொருவர் தரக்கூடும்
இன்றே
இங்கே
இப்போதே
குளிர்காலம் வசந்தம் போல்
முற்பகல் பிற்பகல்
இரண்டின் இடைத்தூரம் சில மாதங்கள்
அன்றி சில நாட்கள்
அன்றி
சில மணித்துளிகள்
அன்றி சில கணங்கள்
அன்றி ஒரு கணத்திற்கும் மறுகணத்திற்கும் இடையிலான
நூலிழை அவகாசம்….
காலம் கணக்குத்தீர்க்கும்போது
அதைப் புரிந்துகொள்ளத் தவறியும்
புரியாததுபோல் பாவனை புரிந்தும்
ஆழ்ந்த யோசனையிலிருப்பதாய் அண்ணாந்துபார்ப்பதாலேயே
நம்மை ஆகாசம் என்று இன்னும் எத்தனை நாள்தான் நம்பிக்கொண்டிருக்கப்போகிறோம்….?

சொப்பனவாழ்வு ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 சொப்பனவாழ்வு

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
கனவாய்ப்போன கனவு
கனவாகிப்போகாமலிருக்கும் கனவில்
கனவாய்ப்போவதுதான் கனவின்
விதியும் நியதியுமென
கனவில் ஒலித்த அசரீரியின் கனவுப்
பாதையில் பின்னோக்கிச் செல்லத் தொடங்கும்
கால்களின் கனவில் தொலைவு தொலைந்துபோக
கருக்கலில் அலைமேல் நடந்துகொண்டிருக்கும்
நானெனும் ஆனபெருங்கனவின் ஒருமுனை
விழிப்பின் வெளிர்பழுப்பில் சிக்குண்டுகிடக்க
மறுமுனையொரு நெடுங்கனவாய் நீளும்
வானவில்லின் வர்ணஜாலங்களில்.

நாமாகிய நாம் ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நாமாகிய நாம்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

நாமுக்கு நிறையவே நியாயமான சந்தேகங்கள்.
நாம் எல்லா நேரமும் நாமாகத்தான் இருக்கிறோமா
நாம் நாமாகவும் அவர்கள் அவர்களாகவும்
நாம் அவர்களாகவும் அவர்கள் நாமாகவும்
நாம் நானாகவும் அவர்கள் தானாகவும்
ஆன போதுகள் ஆகும்போதுகள்
அன்றுமின்றுமென்றுமாய்
அங்கிங்கெனாதபடி……
நாமாகிய நாம் எப்போதெல்லாம் ஒருமையிலிருந்து
பன்மையாகிறோம்?
பன்மையிலிருந்து ஒருமையாகிறோம்?
நாம் என்பது அன்பு நிறைந்ததா?
அதிகாரம் நிறைந்ததா?
நாமுக்குள் அடங்கியோர்
தாமாக வந்தவர்களா _
திணிக்கப்படுபவர்களா?
நாமாகிய நாமிருப்பதுபோலவே
நாமாகாத நாமும் இருப்பதுதானே இயல்பு?
நாம் நயத்தகு நாகரிகப் பிறவியா?
நரமாமிசபட்சிணியா?
நாம் நானாகும் தருணங்களில் தம்மை அரியணைகளில் அமர்த்திக்கொண்டுவிடுபவர்கள்
அதற்குப்பின் கிடைக்கும் அவகாசத்தில்
மீண்டும் நாமை அருகழைத்து சாமரம் வீசச் செய்கிறார்கள்
என்றால் நாமாகிய அவர்கள் சண்டைக்கு வந்துவிடுவார்களோ?
எந்த சாமியைக் கும்பிடுகிறவர்களாயிருந்தாலும்
ஆசாமியைக் கும்பிடுகிறவர்களாயிருந்தாலும்
ஆமாம்சாமி போடும்வரை தான்
-அவர்கள் நாமுக்குள் நாமா
நாம் – அவர்கள் எனும் எதிர்நிலைகளில்
நாமை சிறைப்பிடித்து ஆயுள்கைதியாக்கி
அவர்களாகிய நாமின் அடிமையாக்கிக்
கசையடி தந்தவண்ணம்
நாமாகிய அவர்களுக்கு அதிகம் வலிப்பதாய்
நாளும் நெட்டுருப்போடுவதாய் சொல்லிக்கொண்டிருப்பது
நாமுக்குத் தெரிந்தும்
நாமால் ஏதும் செய்ய இயலாத கையறுநிலையில்
நாம்..
நாமின் சாதிமதபேதமற்ற நிலைக்கு
சந்தோஷப்பட வேண்டுமா சோகப்பட வேண்டுமா
நாம்?