Monday, June 7, 2021

செயற்கைச் சிடுக்கு ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 செயற்கைச் சிடுக்கு

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)
(*ஜூன் 6, 2021 திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ளது)
சொல்லும் சொல்லுக்காய்
அடர்காட்டில் அனாதிகாலம்
ஆரவாரமற்று
ஒற்றைக்காலில் நின்றபடி
மோனத்தவமியற்றுபவன் சடாமுடியை
சினிமாவில் கண்ட ‘விக்’ என்று
சுலபமாகச் சொல்லி
நக்கலாய்க் கெக்கலித்துச் சிரிக்கும்
ஒலி
பெருங்காட்டின் நிசப்தப் பேரோசையிலும்
அருந்தவ ஆழ்மௌன ரீங்காரத்திலும்
வலுவிழப்பதே இயல்பாக………

மோசமான முன்னுதாரணங்கள் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மோசமான முன்னுதாரணங்கள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
இலக்கிய மாபெரும்வெளியின் நீள அகலங்களை
அளந்துகூறும் உரிமைபெற்றவர்
தான் மட்டுமே
என்ற நினைப்புள்ளவர்கள்;

துலக்கமான விமர்சனம் என்ற பெயரில்
வழக்கமான வன்மத்தூற்றலையே
கலக்கிக் குழப்பி வாரியிறைப்பவர்கள்;

பலமெல்லாம் தன் எழுத்தென்றும் சுகவீனமே
பிறர் படைப்பெனவும்
பலகாலமாய் நம்பிக்கொண்டிருப்பவர்கள்;

தன்னை முன்னிறுத்தாதவர்களின்
மௌனக்கடலில்
ஆனமட்டும் மீன்பிடித்து விற்பவர்கள்;

அதுவே வணிகவெற்றிச்சூத்திரமாக
அன்றாடம் கடைவிரித்துக்கொண்டிருப்பவர்கள்;

மாற்றுக்கருத்தாளர்களைக் மதிப்பழிப்பதற்கென்றே
மிகுகொச்சை வார்த்தைகளை
முடிந்துவைத்திருப்பவர்கள்;

மதிப்பார்ந்த சொற்களில் சதா கூர்வாளை
மறைத்துவைத்திருக்கும்
புன்மதியாளர்கள்;

பெருங்கடலின் நட்டநடுவில் தன்னால்
வெறுங் காலில் நிற்கமுடியும் என்று
உருவேற்ற முடிந்தவர்க்கெலாம்
உருவேற்ற முனைபவர்கள்;

ஒருமை பன்மை தன்மை முன்னிலை
யெல்லாமும்கூட
தன் காலடியில் தெண்டனிட்டு மண்டியிட்டுக் கொண்டிருப்பதாக
இன்கனா கண்டிருப்பவர்கள்;

ஒரு ரோஜா தன் எழுத்தால் தான்
ரோஜாவாகிறது என்று தன்னைத்தானே
தாஜா செய்துகொள்பவர்கள்;

”ஆஜா…. ஆஜா” என்றும் “வா வா வா” என்றும்
‘வாரே வாஹ்’ என்றும் WOW! HOW WONDERFUL!’ என்றும்
அறிந்த மொழிகளிலெல்லாம் தனக்குத்தானே
ஆரத்தியெடுத்துக்கொண்டிருப்பவர்கள்;

பளபள இலக்கிய பல்லக்கில் பவனி வந்தபடி
பல்லக்குத்தூக்கிகளின் பட்டியலை
கவனமாய் கண்காணித்துக்கொண்டிருப்பவர்கள்:
காலத்திற்குமாய் ஆவணப்படுத்திக்
கொண்டிருப்பவர்கள்;

படைப்பகராதியின் அத்தனை சொற்களையும்
அவற்றுக்கான பல்பொருள்களையும்
நடையாய் நடந்துநடந்து தானே கண்டுபிடித்துக்
கொண்டுவந்துசேர்த்ததாய்
தான் நம்புவதுபோல் எல்லோரும்
நம்பவில்லையே
என்று வெம்பிக்கொண்டிருப்பவர்கள்;

நல்ல இசையொன்றை இனங்கண்டு சொல்லி
கூடவே இன்னொரு நல்ல இசையை
நாராசமெனவும் சொல்லி
அதை அழகியல் அறிவியல் அருளியல்
அறவியல் சார் அரசியல் பேசி
அலசித்தள்ளி
அதி எளிதாய் அநியாயத்தை
நியாயமாக்கப் பார்க்கும்
அராஜவாதிகள்;

அடியில் புளி ஒட்டிய துலாக்கோலை
நியாயத்தராசாகப் பிடித்திருக்கும் அவர்தம்
கைகள்
HANDWASHஐ அடிக்கடி பயன்படுத்தி
கொரோனாத்தொற்றிலிருந்து மீள முடியும்….

அடிமுடியெங்கும் ஆழப் பற்றியிருக்கும்
தானான நோய்த்தொற்றிலிருந்து
சற்றும் மீள முடியுமோ…?

பூடகமாகச் சொல்வது ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 பூடகமாகச் சொல்வது

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
(*ஜூன் 6, 2021 திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ளது)



’நாடகமாடுகிறார்கள்’ என்றார்.
’நாடகம் நாட்டியமல்லவே’ என்றேன்.
’ஓபரா தெரியாதோ?’ என்றார்.
’ஒருமாதிரி ’காப்ரா’வாகத்தானிருக்கிறது’ என்றேன்.
’கவிதையே தெரியாதுனக்கு’ என்றார்.
’உங்களிடமிருந்து இப்படியொரு நேர்மறையான பாராட்டு கிடைத்ததில்
அமோக மகிழ்ச்சி யெனக்கு’ என்றேன்.
’வஞ்சப்புகழ்ச்சியா?’ என்று சீறினார்.
’பூடகமாகச் சொல்வது படைப்பூக்கமல்லவென்று
சொல்லியிருக்கிறீர்களே, என்ன செய்ய?’ என்று
என்னை மீறி அங்கலாய்க்க,
’கலாய்க்கிறாயா, நீயெல்லாம் அற்பம்’ என்று
அங்கிருந்து அமைவிடம் சென்ற விற்பன்னர்
சொற்ப நேரமே சும்மாயிருந்து பின்
சுடச்சுட இன்னொரு திறனாய்வுக் கட்டுரை
சமைக்கத் தொடங்கினார்.

சில்லறை விஷயங்கள் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 சில்லறை விஷயங்கள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
(6 ஜூன் 2021 திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ளது)
ஒருகாலத்தில் பத்துபைசாவுக்கு மூன்று பட்டர் பிஸ்கெட்டுகள்
சுடச்சுட கிடைக்கும் பேக்கரியிலிருந்து.

இன்று ஒரு ரூபாய் நாணயமே சில்லறை.

”இந்தா சில்லறைப்பணம் போகும் வழியில் யாருக்கேனும் தருவாயே”
என்று அன்போடு என்னிடம்
சில ஐம்பது ரூபாய்த் தாள்களைத் தரும்
நல்ல முதலாளி இன்றில்லை.

சில்லறையில்லையென்று பேருந்திலிருந்து
இறக்கிவிடப்பட்ட முதியவர்களில் யாரேனும்
இருபதடி வேகாத வெயிலில் நடந்து
இரண்டாக மடிந்து விழுந்து
மாரடைப்பால் இறந்திருக்கக்கூடும்.

கடலலையில் கால் வைத்து மகிழ்வது
சில்லறை விஷயமாயிருக்குமா?
சரியாகத் தெரியவில்லை.

சில்லறை நாணயத்தைச் சுண்டித்தான்
பூவா தலையா பார்க்கமுடியும்.

காயா பழமா வளர்ந்தவர்களுக்கு சில்லறை விஷயம்
குட்டிப்பெண்ணுக்கு உயிர்வலி.

கோயில் உண்டிகளை நிரப்புவது
இரண்டாயிரம் ரூபாய்த் தாள்களை விட
எளிய மக்கள் முடிந்துவைத்துக்
கொண்டுவந்து போடும்
சில்லறைகளே.

கண் தெரியாத பாட்டியொருவர் தள்ளாடி தட்டுத்தடுமாறி
வந்துகொண்டிருந்தார்.
வாய் மட்டும் விடாமல் முனகிக்கொண்டிருந்தது.
யாராவது ஒரு ரூபாய் தர்மம் தாங்கய்யா
_ ஒரு கப்பு டீத்தன்னிக்கு ஒரு ரூபாய் குறையுதும்மா….”

சில்லறைகளை மட்டுமே சேமிக்கமுடிந்த கட்டுமானப்பணித் தொழிலாளி
யொருவரின் மனதில்
ஐந்துநட்சத்திர ஹோட்டலின்
'சில்'லறையில்
உறங்கவேண்டும் என்ற
தாகம் தகித்துக்கொண்டிருக்கிறது.

ஒருவகையில் கல்லறையும்
'சில்'லறையே.
சௌந்தர்யலட்சுமி வங்கி விளம்பரம் சொல்லும் _
”சிறுதுளி பெருவெள்ளம்”

சில்லறையைக் களவாடினால் திருடன்;
கோடிகளை விழுங்கியவர் திருவாளர் கள்ளர்.

கதையைத் திருடுதல் சில்லறை விஷயம் சிலருக்கு
கையுங்களவுமாகப் பிடிபட்டால்
அவமானம் அவர்களுக்கா சில்லறைக்கா?

சிலருக்கு கவிதை சில்லறை விஷயம்

சிலருக்கு சகவுயிர்கள் சில்லறை விஷயம்

சில்லறை யில்லையென்றால் இந்தப் பிச்சைக்காரர்களே யிருக்க மாட்டார்கள்
என்று முகஞ்சுளித்துச் சொல்வாரும்,
சில்லறையா? இவர்களெல்லாம் ஸ்விஸ் வங்கியில் பணம் வைத்திருப்பார்கள் என்று பல்லைக் கடித்துக்கொண்டு சொல்வாருமாய் _

எல்லோரோடும்தான் வாழ்ந்தாகவேண்டியிருக்கிறது....

பொல்லா இலக்கியவுலகு மட்டும்
விதிவிலக்கா என்ன?

கவித்துவம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

  கவித்துவம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
கணம் வருடம்
காற்று இரும்புமரம்
வனம் உள்
வெளி ஊஞ்சல்
ஈர மனம்
நீரதன் மேல் நெளியும் கனவு
இல்லாத அகராதிகளின்
சொல்வளம்
முந்தும் உணர்வழுத்தச்
சிந்தனைத்திறன்
அழுகையின் புன்னகை
ஆனந்தக்கண்ணீர்
ஒருவரில் பலர்
பலரில் ஒருவர்
என்றோ இறந்தும்
இன்று புதிதாய் பிறப்பதுபோலவே
இன்று அழிந்தும்
நாளை நிகழும் பிறப்பு
முதுகின் இருவிழிகள்
மூக்கின் மூன்றாம் துவாரம்
மூளைக்கிளி
மனக்குறளி
முனகாப் பேரோலம்
முணுமுணுப்பின் இடிமுழக்கம்
அந்தரத்தில் நடைபழகும்
ஆயிரங்கால் உயிரி
வசப்படும் வானம்
விரல்களுக்கிடையில்
நழுவும் காலம்
அர்த்தார்த்தம்
அன்புமயம்.

(சமர்ப்பணம்: கவிதைக்கும், சக கவிஞர்களுக்கும்)

இலக்கிய ஆர்வலர் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

  இலக்கிய ஆர்வலர்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

நீங்கள் என்ன புத்தகங்கள் எழுதியிருக்கிறீர்கள்
என்று கேட்டார்
என் புத்தகங்களைக் கேட்டுச்சொல்கிறேன்
என்றேன்
என்ன பதில் இது என்று விசித்திரமாய்
என்னைப் பார்த்தவர்
இலக்கியக்கூட்டங்களில் உங்களை நான் பார்த்ததேயில்லை என்றார்
நான் பங்கேற்ற இலக்கியக்கூட்டங்களின் போது
அவர் பிறந்திருக்கக்கூடும்.
பட்டியலிடும் உத்தேசமில்லாததால்
’பார்த்திருக்க வாய்ப்பில்லை’யென்று மட்டும்
சொல்லிவிட்டு நகர்ந்தேன்.
நின்று திரும்பி
நீங்கள் என்னைப் பார்க்கவில்லையென்பதால்
நான் இந்த உலகத்தில் இல்லையென்றாகிவிடாது
என்று சொல்லத்தோன்றியது.
சோம்பலாயிருந்ததால் சும்மாயிருந்துவிட்டேன்!

விரிவு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


விரிவு


‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)




 நூலின் ஒரு முனை என் கையில் 

சுற்றப்பட்டிருக்க

அந்தரத்தில் அலைகிறது காற்றாடி

செங்குத்தாய்க் கீழிறங்குகிறது;

சர்ரென்று மேலெழும்புகிறது

வீசும் மென்காற்றில் அரைவட்டமடிக்கிறது

தென்றலின் வேகம் அதிகரிக்க

தொடுவானை எட்டிவிடும் முனைப்போடு

உயரப் பறக்கத்தொடங்கிய மறுகணம்

அருகிலிருக்கும் அடுக்குமாடிக் கட்டிடமொன்றின் பலகணிக் கம்பிகளில்

சிக்கிக்கொண்டுவிடுகிறது.

எத்தனை கவனமாக எடுத்தும்

காற்றாடியின் ஒரு முனை கிழிந்துதொங்குவதை

ப் பார்க்கப் பரிதாபமாயிருக்கிறது.

ஆனாலும் தரைதட்டாமல் தன் பறத்தலைத் 

தொடரும்

காற்றாடியின் பெருமுயற்சி

கையின் களைப்பை விரட்டியடிக்கிறது.

காற்றாடிக்காக வானம் மேலே மேலே போவது போலவும்

கீழே கீழே வருவது போலவும்

கண்மயங்கிய நேரம்

நூலின் ஒரு முனையைப் பிடித்திருக்கும் கை

வாழ்வாக மாற

காற்றாடியாகிறேன் நான்.

 

 

கவிதையின் விதிப்பயன் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கவிதையின் விதிப்பயன்

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

நீங்கள் மர்மம் என்றால் அது மர்மம்;

அதுவே இன்னொருவர் சொன்னால்

அதர்மம்.

மர்மமெனக்கோருணர்வென்றால்,

மனநிலையென்றால்

உங்களுக்கு அது கத்தி கபடா கொலை

துப்புத்துலக்கலாக

இருக்கக்கூடாதா என்ன?

உயிரின் ஊற்றுக்கண் ஆகப்பெரிய

மர்மமென்றால்

பர்மா நீரல்ல நிலமென்கிறீர்கள்!

கவிதையின் சர்வமும் நானே என்று

எத்தனை தன்னடக்கத்தோடு

கர்வங்கொள்கிறீர்கள்!

அதைக் கண்டு மலைத்துயர்ந்த

என் இருபுருவங்களும்

இன்னமும் இறங்கி இயல்புநிலைக்குத்

திரும்பியபாடில்லை.

கர்மம் கர்மம் _

இல்லையில்லை உங்களைச்

சொல்லவில்லை.

வர்மக்கலை பயின்ற நல்லறிவாளி நீங்கள்

நயத்தக்க வார்த்தைகளால்

வையத்தொடங்கினாலோ

நான்கைந்து வட்டுகள்

நிச்சயமாய் நகர்ந்துவிடும் முதுகெலும்பில்

நன்றாகவே அறிவேன்

மற்றெல்லோரையும் முட்டாள் எனச்

செல்லமாகவும் சினந்தும் குட்டியும்

இட்டுக்கட்டியும்

தன்னைத்தானே அரிதரிதாமெனக் கட்டங்கட்டிக்

காட்டுவோர்

பலரையும்கூட பரிச்சயமுண்டெனக்கு

என்பதுதான் பிரச்சினையே.

கர்மவினையென்று கேள்விப்பட்டிருப்பீர்கள்தானே

நான் குறிப்பிடும் கர்மமும் அதுவேயென்று

எங்குவேண்டுமானாலும்

துண்டுபோட்டுத் தாண்டிவிடுகிறேன்.

பயன்படுத்திய பழையது போதுமா?

புதிதாக வாங்கவேண்டுமா?

நிர்மலமும் மலமும் வேறுவேறென்று

உறுதியாகத் தெரியுமென்றாலும்

கர்மமும் கருமமும் ஒன்றா அல்லவா என்று

சொல்லமுடியாதிருக்கிறது.

துர்மரணமோ கல்யாணச்சாவோ _

இருத்தலும் இருபதுவரிக் கவிதை

இயற்றலும்..

திருத்தமான இருபதுக்கும்

குறியீடாகும் இருபதுக்குமிடையேயான

பிரிகோடுள்ள வரை _

எவர் மறுத்தால் என்ன?

அவரவர் மர்மம் அவரவருக்கு.