Friday, February 21, 2020

அன்புத் தமிழுக்கு என்றுமான நன்றி - ‘ரிஷி’

அன்புத் தமிழுக்கு என்றுமான நன்றி

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

மொழியின் மீதுள்ள மாறாக்காதலைச் சுமந்தபடி
வழிபோகிறேன்.

கைபர் கணவாய் எங்கிருக்கிறதென்று
எனக்குத் தெரியாது.
குமரிமுனையை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன்.

அடுத்தென்னவாகுமென்று அறியாத
அகால வாழ்விதில்
எனக்குத் தெரிந்ததெல்லாம் தமிழும்
கொஞ்சம் ஆங்கிலமும்.

தெரிந்த தமிழ் என்று நான் சொல்லக்கேட்டு
செல்லமாய்க் குட்டிச் சிரிக்கிறது தமிழ்!

கற்றது கையளவு; கல்லாதது கடலளவு.

நான் வந்த வழியெங்கும்
வாழும் வழியெங்கும்
அன்புத் தமிழின் அரவணைப்பே
திசைகாட்டியாக
திக்கற்றவருக்கான பாதுகாப்பு
அரணாக....

தன் தாயை உத்தமியென்றபடி
இன்னொரு தாயை அவிசாரி என்று
நடுத்தெருவில் வசைபாடுபவருக்கொப்பாய்
என் மொழியைப் போற்றிய கையோடு
இன்னொரு மொழியைத் தூற்ற மாட்டேன்.

செத்த மனிதர்கள் உண்டு.
செத்தமொழி என்று எதுவுமில்லை.

அவரவர் அன்பு அவரவருக்கு.

அவரவர் மொழியின் அருமை
அவரவரே அறிவார்.

அத்தனை பேரின் தாய்மொழிகளுக்கும்
உரித்தாகட்டும் நம்
அன்பு வணக்கம்.

படைப்பு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

படைப்பு
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)



'புத்தகம் எழுதினால் போதாது
அதை ‘ப்ரமோட்’ செய்யவேண்டும்'
என்றார்கள்.
’அல்டாப்பு’ப் புத்தகத்தை
’அல்டிமேட்’ இலக்கியமாகக் காட்டி
’ப்ரமோட்’ செய்ய
ஆயிரம் உத்திகளோடு அத்தனை பேர்
இயங்கிக்கொண்டிருக்க
அதையும் தாண்டி எதையாவது புதிதாகச்
செய்துவிட முடியுமா என்ன?’
கேள்வியில் கிளர்ந்த புன்னகையோடு
தனக்குத் தெரிந்த
எப்போதுமான ஒரே எளிய வழியில்
தன் படைப்பை ஒரு புட்டிக்குள் திணித்து
காலசமுத்திரத்தில் மிதக்கவிட்டு
தன் வழியே கிளம்பிச்செல்கிறாள்!

குடியுரிமை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

குடியுரிமை
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


கோவில் தேவாலயம் மசூதி என்று
எங்கும் காண முடியும் இவர்களை.
தங்கள் மதத்தினரா என்று பார்த்து
தர்மம் செய்பவர்கள் உண்டுதான்.
என்றாலும் பிச்சைக்காரர்கள் என்பதே
இவர்களது பொது அடையாளமும்
தனி அடையாளமும்.
இவர்கள் நம் நாட்டு மக்கள் என்பதைப் பற்றியோ
இவர்களுக்குப் பேச்சுரிமை கருத்துரிமை
வாக்குரிமை இல்லாதது பற்றியோ
மதவாதிகளோ அரசியல்வாதிகளோ
இலக்கியவாதிகளொ ‘இய’வாதிகளோ
பெரும்பாலும் பொருட்படுத்துவதில்லை.
’ஒரு பிச்சைக்காரரிடம் குறைந்தபட்சம்
பத்தாயிரம் ரூபாய் இருக்கும்’ என்று
வீதியோரம் சுருண்டு கிடந்த ஒரு மூதாட்டிக்குப்
பத்து ரூபாய் கொடுக்கப்போன
வெள்ளைக்காரரிடம் சொன்ன
நம்மூர்க்காரர்
வழிகாட்டி என்ற போர்வையில்
வழிபறிப் பகற்கொள்ளைக்காரராய்
நடமாடிக்கொண்டிருப்பவர்.
பிச்சைக்காரர்களின் பாதாள உலகத்தைப்
பற்றிப் படமெடுத்தவருக்கு
விருதுகள் கிடைத்தன.
வருமானம் கிடைத்ததா தெரியவில்லை.
‘பிச்சைக்காரிக்கு கர்ப்பம் ஒரு கேடா’
என்று கேட்கிறார்
மாபெரும் மனிதநேயவாதி ஒருவர்.
இவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் தெரியுமா
என்று கண்ணையுருட்டிக் கேட்டார்
இன்னொருவரை மொட்டையடித்து
விரைவில் திகில் படம் ஒன்றை
எடுக்கப் போகிறவர்.
திண்டுதிண்டாய் கைகாலிருக்கு,
வேலை செய்தால் என்ன என்று
குண்டுசட்டியில் குதிரையோட்டுபவரும்
கேட்கத் தவறவில்லை.
’இறப்பதற்குள் ஒரு முறையேனும்
தேர்தலில் வாக்களித்துவிடவேண்டும்’
என்று கூறிய பிச்சைக்கார முதியவரின் முகச்சுருக்கங்களுக்காகவாவது
ஏதேனும் ஓவியப்பள்ளி
மாடலாக அமர்த்திக்கொண்டு
அவருக்கு இருவேளை சோறுதந்தால்
எத்தனை நன்றாயிருக்கும்.
அன்ன சத்திரமா, எழுத்தறிவித்தலா
எது அதிகம் தேவை ஏழைக்கு
என்று பேச
பொன் மணி பட்டுப்புடவையில்
மின்னும் பலர்.
என்னவொரு மவுசு இங்கே
பட்டிமன்றத்துக்கும்
கண்டனக்கூட்டங்களுக்கும்!
உலகக்குடிகளாய் பலதும் பேசியபடியே
வீதியோரம் நலிந்தழிவோரைக்
கண்டுங்காணாமல்
இன்னும் பல நாட்கள் இப்படியே
கடந்துபோய்க்கொண்டேயிருப்போமாக.

கலைக்கொலைகளும் பிறழ்சாட்சிகளும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


கலைக்கொலைகளும் பிறழ்சாட்சிகளும்
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


'அன்பே உருவான அவளைக் கொன்றுவிடலாம்' என்றான் ஒருவன்
'
அவளை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கி தற்கொலை செய்துகொள்ளச் செய்வது மேல்' என்றான் இன்னொருவன்.
ஆம் என்று ஆமோதித்தாள் சக பெண்ணின் வலியறிந்த பாவத்தில் ஒருத்தி, சிரித்தபடி.
'
அறிந்து ஓடோடிவரும் அவளது அம்மா இந்த நாட்டுப்புறப்பாடலைப் பாடி ஒப்பாரி வைக்கட்டும்' என்றார் அங்கிருந்த தமிழறிஞர் ஒருவர்.
அப்போது சமீபத்தில் பிரபலமாகியிருக்கும் திரைப்படப் பாடலைசன்னமாகப் பின்னணியில் ஒலிக்கச்செய்யலாம் என்றார் ஐந்தாமவர்.
அந்தப் பெண்ணின் உதட்டோரத்திலிருந்து ரத்தம் வழிந்தால் பார்க்க நன்றாயிருக்கும் என்றார் மேசையின் இடப்பக்க ஓரம் அமர்ந்திருந்தவர்.
உதட்டோரமா அல்லது முழங்காலின் கீழிருந்து வழிவதுபோலவா என்று கண்களால் குறிப்புணர்த்தி புருவத்தை உயர்த்தியபடி கேட்டார்
அவர்களில் மூத்தவர்.
அவ்வப்போது அங்கிருந்த நான்கைந்து தட்டுகளிலிருந்தசிப்ஸ்ஸை ஆளுக்கொரு கை அள்ளி வாயில் போட்டுக்கொண்டார்கள்.
அடுத்திருந்த சிற்றுண்டிவிடுதியிலிருந்து சற்றைக்கொருதரம் சூடாக காப்பி வர
அது வேண்டாமென்போருக்கு குளிர்சாதனப்பெட்டியில் அடுக்கிவைக்கப்பட்டிருந்தது லிம்க்கா, ஸ்ப்ரைட், செவன் அப், கொக்கோகோலா பெப்ஸி ஆவின் பாதாம் பால் அவை போல்
பிற வேறு.
புதிதாக அந்தத் தொலைக்காட்சி சேனலின்கதைக்குழுவில் வேலைக்குச் சேர்ந்தவனாய் கால்கடுக்க ஜன்னலோரம் நின்றிருந்தவன்
கண்களில் துளிர்த்த நீரை யாருமறியாமல் துடைத்துக்கொண்டான்;
அவனறியாத அந்தப் பெண்ணிடம் மனதுக்குள் மன்னிப்பு கேட்டுக்கொண்டான்.

முட்டாள்பெட்டியின் மூளை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


முட்டாள்பெட்டியின் மூளை
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)



TELE FACTORYயில் டஜன்கணக்காகத் தயாரிக்கப்படும் மாமியார்களின்
முறைத்த கண்கள்; முறம்போன்ற தடிமனான நகைகள்
எங்குபார்த்தாலும் ஒட்டுத்துணிகளும் பட்டுக்குஞ்சலங்களும்
கட்டுக்கடங்காத நிறச்சேர்க்கைகளுமாய் அவர்கள் படுக்கையிலும் அணிந்திருக்கும் கெட்டிச் சரிகைப் பட்டுப்புடவைகள்
மூச்சுவிடாமல் அவர்கள் வெளித்தள்ளும் சாபங்கள்
காச்சுமூச்சென்ற அவர்களின் பேச்சுக்கள் பழமொழிகள்
ஃபிலாஸஃபிகள் பிக்கல்பிடுங்கல்கள்பப்ளிமாஸ்முகங்கள்
புஸுபுஸு சிகையலங்காரங்கள்;
மேலும் மேலும் மேலும் மேலும் என நீளும்
அவர்களின் ஆர்வக் கிசுகிசுக்கள்; அவதூறுகள்
அழுகைகள்; அசிங்கம்பிடித்த சதித்திட்டங்களை
சகிக்கவும் ரசிக்கவும் எதிர்பார்க்கவும் போடவும்
நாமின் நானும் நானின் நாமுமாய் ப்ரோக்ராம்செய்யப்பட்டுவிட்டதில்
லாபம் முன்னூறு மடங்காகிவிட்ட முட்டாள்பெட்டித் தொழிற்சாலையின் கிளைகள்
மூலைமுடுக்கெங்கும் முளைக்க
24 X7
முடுக்கிவிடப்படும் இயந்திரங்கள் வெளித்தள்ளத் தொடங்குகின்றன
மூன்று வயது மாமியார்களையும்
முன்னூறு வயது மருமகள்களையும்
அவர்களின் மூவாயிரம் வழித்தோன்றல்களையும்.