Wednesday, March 20, 2019


தேர்தல் களம்
எழுத்தாள-வேட்பாளர்கள்சில எண்ணப்பகிர்வுகள்
லதா ராமகிருஷ்ணன்

எழுத்தாளர்கள் தேர்தல் களத்தில் நிற்கிறார்கள் என்று நிறைய பேர் பெருமையோடு தங்கள் டைம்-லைனில் பதிவிட்டிருப்பதைப் படிக்கும்போது அப்படி அவர்கள் களமிறக்கப்பட்டிருப்பதற்கு அவர்கள் எழுத் தாளர்கள் என்பதே காரணமா என்ற, எதிர்மறை பதிலை உள்ளடக்கியிருக்கும் கேள்வியெழுவதைத் தவிர்க்கமுடியவில்லை.

சிலர் தேர்தலில் நிற்கும் இத்தகையோரைத் தங்களுக்குத் தெரியும் என்று பலவகையிலும் நயமாகக் குறிப்புணர்த்தியபடியே மற்றவர்கள் இந்த எழுத் தாள-வேட்பாளர்களோடு எடுத்துக்கொண்ட புகைப் படத்தைப் பதிவேற்றுவது குறித்து அங்கலாய்ப்பதும், கேலி செய்வதும் என்ன விதத்தில் சேர்த்தி என்றே தெரியவில்லை.

ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்திருப்பதாலேயே (சார்ந்திருப்பதாலேயே) படைப்பாளியாகப் பார்க்கப் படுபவர், படைப்பாளியாக்கப்படுபவர், படைப்பாளி யாக அடையாளங்காட்டப்படுபவர், உண்டு என்பதும் நடப்புண்மை.

இன்னுமொன்று, தங்கள் சொந்தத் தகுதியிலேயே படைப்பாளிகளாக இருப்பவர்களும்கூட தாம் சார்ந்த கட்சியின் ஊதுகுழல்களாகச் செயல்படுவது தான் அதிகமாக இருக்கிறதே தவிர எந்தவொரு விஷயத் தையும் நடுநிலை யோடு அலசியாராய்வதும், சுட்டிக் காட்டுவதும், சாடுவதும் அறவேயில்லை என்று சொல்லத் தக்க சூழலே நிலவுகிறது.

அவரவர் சாதி பார்த்து, ஊர் பார்த்து வாக்களித்து விட்டால் மட்டும் அப்படி வெற்றிபெறும் வேட்பாளர் கள் நமக்கான எல்லா நன்மைகளையும் சாத்திய மாக்கிவிடுவார்கள் என்று எந்த உத்தரவாதமும் இல்லை.

எழுத்தாளர்கள் பலவகை. மனிதர்களாகவும் அவர்கள் அப்படியே. எழுத்தாளர்கள் என்பதாலேயே அவர்கள் அப்பழுக்கற்ற அரசியல்வாதிக ளாகத்தான் இருப்பார்கள் என்று எந்தவிதத்திலும் உறுதியாகச் சொல்ல வியலாது.

தனிநபர்களுக்கு சில உடனடித் தேவைகள் பூர்த்தி செய்யப்படலாம். ஆனால், அரசியல்வாதி என்பவர் பலதரப்பட்ட மக்கட்பிரிவினரின் அடிப்படைத் தேவைகளை அறிந்தவராக, அவற்றைக் கணக்கி லெடுத்துக்கொண்டவராக, பெருவாரியான மக்க ளுக்கு நிலைத்த பயனையும் வாழ்வு மேம்பாட்டை யும் தரத்தக்க அளவில் திட்டங்கள் தீட்டுபவராக, அவற்றை செயல்படுத்துபவராக இருத்தலே முக்கியம்.

பதவி, அதன் விளைவாய் பெறும் அதிகாரம் என்பவை உருவாக்கி யிருக்கும் வர்க்கத்தைச்  சேர்ந்த வர்கள்  ஒருவகையான திட்டவட்டமான தனிப்பிரிவினர்.

முன்பு அடித்தட்டுப் பெண்களின் சமத்துவத்திற்காகப் பணியாற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனமொன்றில் சிலகாலம் Freelance மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினேன். அப்படி ஒருநாள் நான் மொழிபெயர்த்ததை எடுத்துக்கொண்டு அந்த அலுவலகத்திற்குச் சென்றபோது மதிய உணவு இடைவேளை. அந்த நிறுவன உரிமையாளரான பெண்ணும், உயர் அதிகாரிகளான வேறு சில பெண்களும் ஒருபுறமாய் மேஜையில் அமர்ந்து அவர்களுக்கென்று வரவழைக் கப்பட்டிருந்த உணவை உண்டுகொண்டிருக்க, அங்கே பணிபுரியும் ஆயாக்களும், மற்ற நாட்கூலி வேலைசெய்யும் பெண்களும், உதவிகேட்டு வந்தி ருந்த பாதிக்கப்பட்ட பெண்களும் வேறொரு மூலை யில் தரையில் அமர்ந்து அவர்களுக்காக வரவழைக்கப்பட்டிருந்த உணவைச் சாப்பிட்டுக்கொண்டிருந் தார்கள்.

(அதன்பின் அந்த வேலையி லிருந்து விலகிவிட் டேன்.)

தேர்தலில் வெற்றிபெற்று மக்களவை உறுப்பினரா கவோ, நடுவண் அரசின் அமைச்சராகவோ பதவி யேற்பவர்கள் பதவி தரும் அதிகாரத்தை மக்கள் நலனுக்காக மட்டும் பயன்படுத்த விரும்புகிறவர் களாகவும், மக்களுக்கான நிலைத்த பயன் தரும் திட்டங்களைத் தீட்டவும், செயல்படுத்தவும் மட்டுமே பயன்படுத்துபவர்களாகவும் காட்சிக்கு எளியராகவும் கடுஞ்சொல் அற்றவராகவும் இருக்கவேண்டியது அவசியம்.

அப்படிப்பட்டவர் எழுத்தாளரோ, வேறு எவரோ -  
அவருக்கு வாக்களிப்பதே சரி.

Ø