Monday, August 8, 2016

இறுதி ஊர்வலத்தில் எத்தனை பேர் வந்தாலென்ன? லதா ராமகிருஷ்ணன்

இறுதி ஊர்வலத்தில் எத்தனை பேர் 

வந்தாலென்ன?

லதா ராமகிருஷ்ணன்


நேற்று திரு. ஞானக்கூத்தனுக்கு அஞ்சலி செலுத்துவதற்குக் குறைந்தது நூறு பேர் வந்திருந்தார்கள். ஊர்த் தோழர்கள், பள்ளித் தோழர்கள், கசடதபற மற்றும் நண்பர்கள், பிற நண்பர்கள், வாசகர்கள், அசோகமித்திரன், வைதீஸ்வரன், க்ரியா ராமகிருஷ்ணன், . முத்துசாமி, சா. கந்தசாமி, பிரபஞ்சன், ஷங்கரநாராயணன், மொழிபெயர்ப்பாளர் கல்யாணராமன் உள்ளிட்ட மூத்த எழுத்தாளர்கள், பிற சிற்றிதழ் நண்பர்கள், பிற எழுத்தாளர்கள், கவிதையுடன் தொடர்பே இல்லாமல் வேடிக்கை பார்க்க மட்டும் ஓரிருவர் ஆகியோர் இதில் அடங்குவர். வெளியூர்களிலிருந்து வந்திருந் தார்கள்.”

_ இது கவிஞர் ஞானக்கூத்தனின் மறைவுக்கு அடுத்தநாள் அவருடைய மகன் தன்னுடைய முகநூல் பக்கத்தில்             பதிவிட்டிருந்த நெகிழ்ச்சியான ்நன்றியின் ஆரம்பப் பகுதி.

ஆனால், 7.8.16 தேதியிட்ட ஜூனியர் விகடனில்கடவுள் முதல் கவிஞன் வரைஎன்ற தலைப்பிட்ட கட்டுரையின் ஆரம்ப வரிகள் பின்வருமாறு::

அதே திருவல்லிக்கேணி. அதேபோல 20 பேர் என எழுதி யிருந்தார் கவிஞர் மனுஷ்யபுத்திரன். பாரதியின் இறுதி ஊர்வலத்தில் நடந்த அதே அவலம். ஞானக்கூத்தன் இறுதி ஊர்வலமும் அப்படித்தான் நடந்தது. எழுத்தாளர்களை யானை மீது ஊர்வலம் அழைத்துச்சென்று கொண்டாட வேண்டும் எனப் பிரியப்பட்டவரின் இறுதி ஊர்வலம் அது.'

_இறுதி ஊர்வலத்தில் எத்தனை பேர் வந்தார்கள் என்பதிலா மாற்றுப்பாதையை ஏற்றுக்கொண்டவர்களின் மனநிறைவு அடங்கியிருக்கிறது? பாரதி நினைத்திருந்தால் எட்டயபுரம் மகாராஜாவையோ ஆங்கிலேயர்களையோ போற்றி எழுதி பெயரும் புகழும் பெற்றிருக்க முடியாதா? ஏன் செய்ய வில்லை? வாழ்ந்த காலத்தில் இந்திய விடுதலை இயக்கத் தலைவர் களோடு சரிசமமாகப் பழகியவர் பாரதி.

அதேபோல், ஞானக்கூத்தன் நினைத்திருந்தால் வேறுவித மாகக் கவிதை எழுதியிருக்க முடியாதா என்ன? அப்படிச் செய்யா திருந்ததுதான் அவருக்கும் நிறைவளித்தது; அவரையும் நிறைவான கவிஞனாக அடையாளப்படுத்தியது.

அது சரி, ஞானக்கூத்தன் போன்ற சிறந்த கவியை மக்கள் அறிய வில்லையே, அங்கீகரிக்கவில்லையே, அரசு அங்கீகரிக்கவில் லையே, மரியாதை செய்யவில்லையே என்று  அங்கலாய்க்கும் ஜூனியர் விகடன் போன்ற பத்திரிகைகள் அதற்கான என்ன முயற்சி எடுத்தன? நினைத்திருந்தால் ஞானக்கூத்தன் உயிரோடு இருந்தபோதே அவருக்கு பிரம்மாண்ட விழா எடுத்திருக்க முடியாதா என்ன?

மக்களைச் சொல்லித் தப்பிக்க முடியாது. தங்களிடமிருக்கும் பண பலத்தைக் கொண்டு ஒருவித மொண்ணைத்தனமான ரசனையையே வாசகர்களிடம் உருவேற்றுவதில்    முனைப்பாக இருந்தபடியே நல்ல எழுத்தாளர்களை நாடு மதிக்க வில்லையே என்று அங்கலாய்ப்பது வெறும் பரபரப்புச் செய்தி தரும் ஆர்வமே தவிர நல்ல எழுத்தின் மீதான உண்மையான அக்கறையல்ல.