LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, March 8, 2015

(சமர்ப்பணம் _ சர்வதேசப் பெண்கள் தினத்தில்

சமர்ப்பணம் 
                                   சர்வதேசப் பெண்கள் தினத்தில் 

(*சர்வதேசப் பெண்கள் தினத்தில்  நான் பெரிதும் மதித்து அன்பு பாராட்டும் இரண்டு பெண்மணிகளுக்காக நான் முன்பொரு தருணத்தில் எழுதிய இந்தக் கவிதைகளை வெளியிடுவதில் நிறைவுணர்கிறேன். இந்தக் கவிதைகள் என்னுடைய ’மற்றும் சில திறவாக் கதவுகள்’ தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.)
_ ரிஷி.
*சமர்ப்பணம்: அம்மாவுக்கு

1. அம்மாவின் நிழலில்

வழியில் நேர்ந்த உறவுகளையே
விடாமல் பாடி வந்தேன்.
வண்ணத்துப் பூச்சிகளையும்
விண்மீன்களையும்
விழியகலப் பார்த்துநின்றேன்.
விடைகளுக்காய் கேள்விகளைத்
தேடிக் கண்டெடுத்தது என்றாலும்
குடைநிழலாய் கர்ணன் கவச குண்டலமாய்
கூடவரும்  உன்னைத்  தினம்
கொண்டாடும் வகையறியா அவசத்தில்
குன்றிக் கரையும் மனம்.

2. சிறகசைக்கும் சுமைதாங்கிக் கல்லும் சிறுமியும்

உணரும் காற்றின் அரூபமாய் உள்ளோங்கி
உலகளந்திருக்கும் ஒன்றை
என்னவென்று இனங்காட்டுவது….
இன்று நாளையாகு மந்த நுண் தருணக் குமிழை
கையிலேந்த முடிந்தாலும் ஏலாது
முன் சொன்னது.
பின்னும் அடையாளங்காட்டத்  தவிக்கும் மனதின் ஆழத்தில்
சுமைதாங்கிக் கல் லொன்று
அமைதியாய் சிறகசைத்தபடி….
உயரப் பறந்துவிடாதபடி
வானத்தை சுருட்டிவைக்க வேண்டும்.
நரையைக் கருமையாக்கி
வயதின் சுருக்கங்களை நீவிக் கொடுத்து
விழுந்துவிட்ட பற்களைத்  திரும்பப் பொருத்தி
பத்திரமாய் தரையிறக்கிவிடும்படி
இப்பொழுதே நிலவிடம் சொல்லிவைத்துவிட வேண்டும்.
மறுபடியொரு சிறுமியாய்
முழுவிழிப்புடன்  நானும் உன்னுடனே
இறந்தகாலத் தாழ் திறந்து
முதலிலிருந்து வாழ்ந்திட வேண்டும்
முள்ளும் கல்லும் அற.


சமர்ப்பணம் :பத்மினி Madamக்கு

1. அமரத்துவம்

காலத்தின் கடைசிப் படிக்கட்டில் நின்றவாறு
கடலையே அவதானித்துக்கொண்டிருந்தாள்
அந்த தேவமகள்.
இருகைகளின் பக்கங்களில் தோய்ந்துகிடந்தது
இயக்கம்.
என்ன வேண்டும் என்று வினவி வரச்சொல்லி
கடல் முன்னுந்தியது அலைகளைக் கனிவோடு.
முகமன் கூறிய நீர்ச்செல்வங்களை
மெல்ல வருடியது அவள் புன்முறுவல்.
அகமகிழ்ந்து தட்டாமாலையிட்டுத்  திரும்பின அவை
ஏதும் கேட்காமலே.
எட்டா உயரத்திலிருக்கும் தொடுவானம்
மட்டுமீறிய அன்பில் முதுகு வளைந்து
நடுக்கடலை உச்சிமோந்தது.
பரவிய பரிதிக்கிரணங்கள் வயதின் ரணங்களற்ற
காலாதீதக் கரையில்
நிச்சலனம் உறைய சித்தித்திருந்த புத்துடலில்
சிறகுகளாகியிருந்தது கத்துங்கடல்!


     2. நெல்லிக்கனி

அகலிகையின் அடிபணிந்த ராமனை
அறிமுகம் செய்தாய்.
ஜானகியின் கரம்பற்றிக் கானகமெங்கும் திரிந்த
காதல் மணாளனைப் பரிச்சியமாக்கினாய்.
நாதவெளியில் மிதக்கும் நற்றவம் கற்றுத் தந்தாய்.
பாதிப்பாதியாய் ஆளுக்கொரு முனையிலிருந்து
இழைபிரித்த கனவுச்சிடுக்குகள், நனவு முடிச்சுகள்
நிறையவாய்.
சிக்கவிழ்த்தோம் சில மார்க்கங்களின் திக்குகளை.
ஒருபோதும் அதிராத உன் அடிமனக் குரல்
எனக்கொரு பிடிமானமாய்.
அவரவர் வெந்தழலுக்குள் கனன்றபடி
நந்தலாலாவை சொந்தமாக்கிக்கொண்டோம்.
நிறைமாத கர்ப்பிணியின் எதிர்பார்ப்பும்
குறைப்பிரசவக் கையறுநிலையுமாய்
நம்முடைய கலந்துரையாடல்கள்
மூன்று புள்ளிகளோடே முற்றும் திறம்
வாகாய்ப் புரிய பெருகுமாக் கடலொரு
பரிசாய் உனக்கு என்றும்.
No comments:

Post a Comment

comments: