Wednesday, June 25, 2014

கவிதை
விளைவு
ரிஷி

வலியறியா மனிதர்களின் விகார மனங்கள்
விதவிதமாய் வதைகளை உருவாக்கும்;
வண்ணமயமாய் வக்கிரங்களைக் காட்சிப்படுத்தும்.
சின்னத்திரையிலிருந்து வழிந்தோடும் உதிரம்
வீடுகளில் வெட்டப்படும் தலைகளில் இரண்டறக் கலக்கின்றது.
மெகா தொடர்களில் தொலைந்துபோய்க்கொண்டேயிருக்கும் குழந்தைகள்
கடற்கரை மணற்துகள்களை எண்ணிவிடக்கூடியதாக்கிவிடுகிறார்கள்.
அலைவரிசைகளெங்கும் யாராவது யாரையாவது அறைந்துகொண்டேயிருக்கிறார்கள் _ அன்பின் பெயரால்.
ஒரு கதாநாயகன் ஒன்பது கயவர்களை இருநூறாண்டுகளாக
ஓயாமல் உருட்டிப் புரட்டிக்கொண்டேயிருக்கிறான்.
தெருவோர டாஸ்மாக் கடையில், நெருங்கிய நண்பர்களில்
ஏழுபேர் கரங்கோர்த்து
மிதித்துக்கொல்கிறார்கள் எட்டாமவனை.
ஒளியூடகங்களில் ஆடல் என்ற பெயரில் பூமி அதிர அதிர
அங்கங்களைக் குலுக்கிப் பதறவைக்கிறார்கள்….. இதில்
எங்குபோய் முறையிடுவது தங்கமே தங்கம்?
தங்கையைக் கொன்றுவிடும் அளவுக்குப் பொங்கும்
அண்ணன் மனதில் வேரோடியிருக்கும் வன்முறை
தீரா மானுடக் கறையாகக்
கண்டுணர்வதும் எப்போது?
போரே பேராண்மையாய்ப் பாராண்ட மன்னர்கள்
இனியும் நமக்கு வழிகாட்டக் கூடாது.
ஈரம் விளைந்த மண் இது; வீரம் விளையாட்டாகாது.
கலை கலாசாரத்தின் பெயரால் காலந்தோறும் செய்யப்பட்டுவரும்
மூளைச்சலவையை மீறி
நாளையேனும்
மனம் வெளுக்கச் செய்வாயே எங்கள் முத்துமாரீ….