Tuesday, June 11, 2013

அன்பின் பெயரால்...’ரிஷி

அன்பின் பெயரால்...
ரிஷியின்
ஆறாவது கவிதைத் தொகுப்பு




 புதுப்புனல் வெளியீடு




உரித்தாகும் நன்றிகள்


என் கவிதைகளை 
இன்றளவும் வெளியிட்டு வரும்
நவீன தமிழ் இலக்கியச் சிறுபத்திரிகையுலகிற்கு

ரிஷி


  

உள்ளடக்கம்

1)மணிமேகலைக்கு
2)அகழ்வு
3)பொம்மிக்குட்டியின் கதை
4)குகை என்பது ஓர் உணர்வுநிலை
5)மறுக்கப்படும் வாழ்க்கை
6)ஆயுதப்போர் முடியட்டுமே இன்று மாலைக்குள்...
7)சிலரின் கைகளில் விமர்சனம்
8) பலவீனம்
9) எழுதப்படா விதிகள்
10) முழங்கப் பழகுவோம்
11) மாஜிகளாகாத நாஜிகள்
12) பாவம் குடிமக்கள்
13) எப்பொருள் மெய்ப்பொருள்
14) தன்மை
15) நெஞ்சு பொறுக்குதில்லையே...
16) நினைக்கத் தெரிந்த மனம்
17) மக்கள் சேவை
18)ஆட்சித்திறன்
19) தெளிவுறவே அறிந்திடுதல்
20)எல்லோரும் இந்நாட்டு மன்னர்
21)தொலைக்காட்சி  1
22)தொலைக்காட்சி  2
23)நீர்நிலம்
24)நோய்நாடி
25)ஒரு புகைப்படத்தைப் பொருள்பெயர்த்தல்
.26)...கதைசொல்லும் தீபாவளி
27) 750ஆவது எபிஸோட்
28) யார் அறிவாளி?
29) போகிற போக்கு




1) மணிமேகலைக்கு
...
சிநேகிதியா...சகோதரியா...சின்னவளா... பெரியவளா....
மணிமேகலை_..
நீ யார் எனக்கு?

மனதிற்குள் அந்த வினா
மீண்டும் மீண்டும் விரியும்
ஒரு தொலைதூரக்கனவாய்...

காலம் விட்டுக் காலம் தாண்டி வந்து
தானமளிக்க வேறுசில கைகளோடு
என் கைகளையும் நீ தேர்ந்தெடுத்த காரணமென்ன..?
உண்மை-
இச்சைகளில் நாமெல்லோரும் பிச்சைக்காரர்களே.
மிச்சம் மீதி வைக்காமல் வாழ்க்கையை வாழ்ந்து பார்த்து விட
யாருக்கும் முடிவதில்லை.
தேரோட்டத்தில் சாரதியும்சக்கரக்கால்களில்
அரைபடுபவருமாய்
ஒரு என்றுமான இருவேடங்களில்
திரும்பத் திரும்ப அரங்கேறிக் கொண்டிருக்கிறோம்.
காட்சிகள் மாறுகின்றன
திரை  ஏறியவாறும் இறங்கியவாறும்...

முதலிரண்டு வரிசைகளில் அமர்ந்திருந்தவர்களுக்கு
அட்சயபாத்திரத்திலிருந்து அள்ளித் தந்தபடி
நீ என்னை நோக்கி முன்னேற -
எழுந்து ஓடிவிட வேண்டும் போலும்,
உன்னை எதிர்கொண்டு வணங்கவேண்டும் போலும்
மனதில் ஒரு பரிதவிப்பு...

புன்சிரிப்போடு நீ தந்த அன்பிற்கு
நன்றி சொல்லவும் மறந்து போய்
அமர்ந்தது அமர்ந்தபடியிருந்த என்
கண்கலங்கித் தழுதழுத்ததில்
கையில் நீ இட்டதைக் காண இயலவில்லை.
நீ வழங்கிய சோறு ஒரு குறியீடாக...

ஒருசேரக் குவிந்த என் உள்ளங்கைகளில்
நிரம்பியவை திடமோதிரவமோ அல்ல;
அருவங்கள்!
காற்றைப்போல் இருப்பு கொண்டவைஇழந்த பல
நேற்றுகளை மீட்டெடுத்துத் தருபவை!

நலங்கெடப் புழுதியில் எறியப்பட்ட வீணைகளெல்லாம்
தானாக இசைக்கத் தொடங்கிய தருணம் அது!
அரங்கின் இறுதிவரை அமர்ந்திருந்த அனைவருக்கும் நீ
அட்சயபாத்திரத்திலிருந்து அள்ளியள்ளித்
தரவேண்டும் என்ற விழைவு ஒரு வலியாக
என்னை ஊடுருவ,
என் முன்னம் கண்ட முதுகுகளின் மனங்களுக்குள்
எளிதாக நுழைய முடிவதாய் ஒரு உணர்வு
காடெனப் பரவியது உள்ளே!

அத்தனை நெருக்கத்தில் அட்சயப்பாத்திரத்தைப் பார்த்ததில்
பித்தானது நெஞ்சம்!

பாய்ந்து அதைப் பறித்துக் கொண்டு போய்
இல்லாதாருக்கெல்லாம் வேண்டுமளவு தரவேண்டுமென
பரபரக்கும் மனமே
பதிலுக்கு என்னால் உனக்குத் தர முடிவது.



  2) 
அகழ்வு
I
மும்முரமாக வெட்டப்பட்டுக் கொண்டு வருகின்றன குளங்கள்.
நவீனமானவை.
சாதாரணக் கண்களுக்கு எட்டாத அளவில்
செயற்கைச் செம்புலம், மஞ்சள் புலம், ஊதா புலம்
இன்னும் எண்ணிறந்த நுண்நிறங்களில் கட்டமைக்கப்பட்டு,
முன்புலமும், பின்புலமும் கெட்டிப்படுத்தப்பட்டு,
வெட்டி வேர் பரப்பப்பட்டு, கொட்டி நீர் நிரப்பப்பட்டு,
குளங்களாக்கப்படும் இவற்றில்
யாரும் குளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டாலும்
எல்லோராலும் தம்மைக் கழுவிக்கொள்ள இயலாது.
குளத்துரிமையாளருக்கு அறிந்தவர், தெரிந்தவர்,
ஊர்க்காரர், உறவுக்காரர்,
கார்க்காரர், காப்பித்தோட்டக்காரர், அறிவுச்சொத்துள்ள
கல்வியாளர், மில் முதலாளி, வல்வினை முடித்துத் தரும்
தொண்டரடிப்பொடியார்கள், துதிபாடிகள், சாமியாடிகள்,
ஏமாளிகள், கோமாளிகள், என்பாருக்கே... என்றாலுமென்ன?
குளக்கரைக்கண் அனைவருமே சமம்!
அதில் சிலர் அதிக சமம்.




II
சுற்றிலுமுள்ள படிக்கட்டுகளில் இறங்கியமர்வது
சுலபமாகச் செய்யக்கூடியதாகத் தோன்றினாலும்
உண்மை நிலவரம் அப்படியல்ல.
மேல்படிக்கட்டில் காலடியெடுத்து வைக்கும்போதே
வெளிவாயிற்காரர்கள்
விவரமாய் அளவெடுப்பார் தோதானவர் தானோ வென...
மட்டைப்பந்து மைதானம் போல்
உயர்ந்த கட்டணமும், தாழ்ந்த கட்டணமும்,
அவற்றிற்கேற்ற தனித்தனி அமருமிடங்களும்,
இருக்கைகளும், நிழற்குடைகளும், குளிர்பானங்களும்
வெளிப்படையாய் காணக்கிடைத்தால் கூட
வியாபாரத் தந்திரங்களாகப் புரிந்துகொண்டுவிட
முடியும்...ஆனால்
இந்தக் குளங்களின் வரையறைகளும், விதிமுறைகளும்
மறைகுறிப்புகளாய் ஒவ்வொரு படிக்கட்டின் உட்புறமும்
செதுக்கிவைக்கப்பட்டிருக்கின்றன. அவ்விதமாய்
அவற்றின் நவீனத்துவமும், தனித்தன்மையும்
அடிக்கோடிடப்பட்டு...
              
III

டிக்கு அடி சங்கேத வாசகங்கள்
படிக்கட்டுகளில் இறங்கிக் கொண்டிருப்பவர்களின் செவிகளுக்குள்
காற்றுத்தடமாய் இடம்பிடிக்க
விரைந்தவாறிருக்கிறார்கள் தூய்மையாளர்களும்
தூய்மையல்லாதோரும்
தமது எதிர்துருவ நிலைப்பாடுகளை என்றைக்குமாய்
குளத்தில் கரைத்து விட.
ஒன்றே குளம் என ஆயத்த சகோதரத்துவம் பாடியவாறு
செல்லுமவர்கள் வழியெங்கும்
காலுக்குக் கிடைத்தவரை – குறிப்பாக எளியவரை 
மிதித்துப் புடைத்தபடி.
வாய்மை யெனப்படுவது யாதெனில் என்ற
கேள்வியின் குரல்வளை
நேற்றே நெரிக்கப்பட்டுவிட்டது.

IV

சாலையோரங்களிலெல்லாம் பிச்சைக்காரர்கள்,
தொழுநோயாளிகள்,
நடைபாதைவாசிகள்
நலிந்த முதியோர்கள்
கதியற்ற குழந்தைகள்
குடிசைவாழ் மனிதர்கள்,
அதிகதிகமாய் சேர்ந்து
அப்பிய அழுக்கோடு துருவேறியவாறு..
அவர்களை மதித்துக் கைதூக்கிவிட்டு
குளத்துநீரில் குளிக்கச் செய்து தூய்மையாக்கி
அருகமர்த்திச் சமமாக்க முன்வந்தாரில்லை
யெவரும்
ஒன்றுமில்லாதானை சொந்தமாக்கிக் கொண்டு
எந்தக் கோட்டையைப் பிடிக்க...?
இன்னின்னது கொண்டு வந்து தருபவரே
கேளிர் காண்.
பெண்ணை வன்புணர்ச்சி செய்தாரேயாயினும்
தன்குளத்துறைவாரெனில்
தண்டனை குறைவு தான்.


V

வேண்டும்போது வெய்யிலைக் குளிராகப் பொய்யுரைத்து.
மீண்டும் இதோ ஒரு மெய்ப்பார்வை’ என்பதாய்
நீக்குபோக்காகப் பொருள்பெயர்க்கத் தேவையான
எடைக்கற்கள்
குளத்தையடையும் கீழ்நோக்கிய பயணத்தில்
பகுத்தறியும் கைகளிலும் புகுத்தப்பட்டு விடுகின்றன.
தரநிர்ணயங்களுக்கு இரட்டை அளவுகோல்கள்
ஏற்கெனவே மரபாக்கப்பட்டாயிற்று.
இந்த நவீன குளங்களின் படிக்கட்டுகளில் சற்றே
இளைப்பாற வேண்டி அமர்ந்துகொள்ளக்கூட
ஒருவர் தனது சுயத்தை
தலையைச் சுற்றி வீசியெறிந்துவிடவேண்டும் என்று
வரியிடைவரிகளாய்த் தெரியவந்தபோது
அதிர்ச்சியாயிருந்தது.
அதை வேசியின் கூச்சமின்மையாகப் பகுத்து
மூர்க்கமாய் கழுத்தைப் பிடித்துத் தள்ளிவிட்ட கரங்களின்
அணில்வரிகள்
காலத்தின் ஆழத்திலிருந்து மேலெழுந்து வரும்.



VI
காரியார்த்தமாய் குளத்திற்கு
 இருமுறை தமது தேரிலழைத்துச் சென்றவர்
தெய்வப்பிறவியாகிவிட
கல்லிலும் முள்ளிலும் கூடவந்தாள் தன் கருத்தாய்
சொன்ன ஒரு சொல்லில்
அவள் தலைகொய்யப்பட்டு நிலைநாட்டப்படும்
பேராண்மை இன்றளவும்.
பெய்யெனப் பெய்யா மழையில்
பத்தினித்தனம் பிழையாகிவிட _
பெண்மையைப் போன்றுதும், பெண்மையைப் போற்றுதும்;
புண்ணாக்கி, புன்மையாக்கி பெண்மையைப் போற்றுதும்;
மண்ணாந்தையாக்கியும்;
மண்ணோடுமண்ணாக்கியும்





VII
ஒரு முல்லைக்கு ஈடாமோ மூன்று பில்லியன் டாலர்கள்?
என்ற கேள்வி
வெறுமையாய் அலைந்துகொண்டிருக்கிறது
பால்வெளியில்.
குருத்துமூங்கில் தான் அன்பளிப்பாய் தரப்படுகிறது-
ரத்தினக்கல் பொருத்தப்பட்டு வைரத்தில் செய்தது...
நித்தம் நித்தம் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன
நவீனகுளங்களின் முப்பரிமாணக் காட்சிகள்.
ஆரங்கள் துவாரங்களாய்.
அரைவட்டங்கள் சேதாரச்சதுரங்களாய்,
கண்மயங்கிக் கெட
கீழேகீழே போய்க்கொண்டிருக்கும்
குளத்திலும் காத்திருக்கும்
பாழும்
புதைசேறும்
மூத்திரக் கழிவுகளும்
சுறாவும்
திமிங்கலமும்
வேறு
பல நூறும்...

காலம் மாறும்.     
     


3) 
பொம்மிக்குட்டியின் கதை!

[I]
லையாட்டி பொம்மைகளை யாருக்குத் தான் பிடிக்காது?
அதுவும்சின்னக்கண்ணனின் பொம்மை அத்தனை கலைவண்ண                
 கைநேர்த்தியோடு
கிடைக்கோடாய் அசைவதைத் தவிர்த்து
மேலுங்கீழுமாய் மட்டும் முகம் ஆட்டிக் காட்டும்!
எதைச் சொன்னாலும் கண்சிமிட்டிப் புன்சிரிக்கும்.
கைகால் இயக்கங்களெல்லாம் குழந்தைக் கண்ணனின் மனம்
போன போக்கில்அல்லாது தலையாட்டி பொம்மைக்கு                    
 ஏது  தனிப்பட்ட இயக்கம்...?
குறும்புச் சிறுவனின் கைகளிலும்மடியிலும்
தயக்கமில்லாமல் பொருந்தியமர்ந்திருக்கும்.
தனக்குப் பிடித்தமான பெயரை தலையாட்டி பொம்மைக்குத் தந்து
அதைத் திரும்பத் திரும்பக் கூவியழைத்துக்
குதூகலிக்கும் குழந்தை...
"பொம்மிக்குட்டீ வா.. வா.. பூ பூவாய் முத்தம் தா..."
பஞ்சுப்பொதியாய் பொம்மையின் உடல்.
பிஞ்சுக் கைகள் மென்மையாய் வருடித் தரும்.
துஞ்சும் நேரமெல்லாம் பொம்மிக்குட்டியைத்
தன்னருகே பத்திரப்படுத்திக் கொள்வான் சின்னக் கண்ணன்.
ஆனா- ஆவன்னா, A B C, 1 2 3...
அவனுக்குத் தெரிந்ததெல்லாமும்
சொல்லித் தரப்படும் பொம்மிக்குட்டிக்கும்.



II
ள்ளிக்குப் போய் வந்து கொண்டிருந்த சின்னக்கண்ணன்
கூடப் படிப்பவர்களைப் பற்றியெல்லாம் தினமும்
வீடு திரும்பிய பிறகு
வண்டிவண்டியாய் பொம்மிக்குட்டிக்குக் தவறாமல் கதை சொல்வான்.
கண்கொட்டாமல் கேட்டுக் கொண்டிருக்கும் பொம்மிக்குட்டி.
அடிக்கொரு தரம் தலையை ஆட்டும் - மேலுங்கீழுமாய்.
"அச்சுதன் அடித்தான்அவனைத் திருப்பியடித்தேன் - சரிதானே?"
"ஆம்ஆம்". ஆனால்...
"முகுந்தன் என்னுடைய பென்சிலை உடைத்துவிட்டான் என்பதால்
 அவனை நையப் புடைத்து விட்டேன்" என்று சின்னக் கண்ணன்
சொன்னபோது
செய்த குற்றத்திற்கு தண்டனை அதிகம் என்றுதோன்றியது
பொம்மிக்குட்டிக்கு. சற்றே தயக்கமாய்
தலையை ஆம் - இல்லையாய் ஆட்டியது பொம்மை.
உயிருள்ளது பொம்மை என்று நம்பும் சிறுவன் கொஞ்சம்போல்
திகைத்துச் சினந்தான்.
தகப்பன்சாமி தான் என்றாலும்
"எனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காய் தருணுடைய கையைக்
கடித்துக் குதறி விட்டேன்கத்தியாலும் வெட்டி விட்டேன்"
என்று பெருமைபீற்றிக்கொண்டபோது
பொம்மிக்குட்டியின் தலை தவிர்க்கமுடியாமல் இடவலமாய்
ஆட ஆரம்பித்ததைக் கண்டு
மட்டுமீறிப் புகைந்த கோபத்தில் சிறுவனின் கரம்
பொம்மிக்குட்டியின் சிகையைக் கொத்தாய்ப் பிடித்து
கதவிற்கு அப்பால் வீசியெறிந்தது.
'பதிலுக்கு புதிய பொம்மைகள்
காசு கொடுத்தால் கிடைத்துவிட்டுப் போகிறது...
அதுவும்ஓசியில் கிடைத்ததுதான் பொம்மிக்குட்டி.
போதாக்குறைக்குநிறைய நைந்துபோய் விட்டது.

ஆய் பொம்மைபீத்த பொம்மி..'

III
காரிருள் கவிய விழுந்தது விழுந்தவாறு
கிடந்தது பொம்மிக்குட்டி.
முதுகெலும்பு முறிந்ததுபோல் ஒரு சுளீர் வலி படர
உயிர்ப்பின் அடையாளம் பொம்மைதானோ வென
தனக்கெட்டிய பட்டறிவில் படித்துக் கொண்ட
விடையே கேள்வியாக அனத்திக் கொண்டிருந்தது நெடுநேரம்.
பின்கனவே போல் காற்றுத் தடத்தில் கிளம்பிச் சென்று
கதவிடுக்கில் மனம்நுழைத்துப் பார்த்தது.
பரிச்சயமான அறை.
பழகிய சின்னக்கண்ணன் வழக்கம்போல்
கைகொட்டிச் சிரித்தவாறு கட்டளையிட்டுக் கொண்டிருக்க,
எதிரே
சாவிகொடுத்தால் ஓடும் பொம்மை_
சல்யூட் அடிக்கும் பொம்மை_
சிரியென்றால் சிரிக்கும் பொம்மை_
சீறிபாயச் சொல்லி தள்ளிவிட்டால்
சரவென்று நெளிந்தோடும் நாகப்பாம்பு பொம்மை_
குத்தினாலும்எத்தினாலும் சத்தமெழுப்பாமல்
சிறுவனின் வீரசாகச் செயல் என்பதாய்
பெருமையில் பூரிக்கும் கைதட்டி பொம்மை_
'வெல்கம்பொம்மை,ரிம்-ஜிம் நாட்டிய பொம்மை_
பெருந்தனக்காரர் பரிசளித்த பொம்மை_
பல வருடங்களுக்குப் பிறகு சாவகாசமாய் ஊரைப்
பார்க்கத் திரும்பி வந்திருக்கும் உறவொன்று
வாங்கிவந்த பொம்மை_
விரல்சொடுக்கிற்கேற்ப விரைந்தோடி
சுவற்றில் முட்டி நிற்கும் பொம்மை_
அலங்கார பொம்மைகள்,அவதார பொம்மைகள்_
வைக்கோல் பொம்மைகள்வெண்கல பொம்மைகள்_
பைக்குள் போட்டுக் கொள்ளுவதற்கேற்ற சிறிய பொம்மைகள்_
பூதாகார கரடி பொம்மைகள்...

அறையில் ஒரே நெரிசலாயிருந்தது.




IV
பிடிக்கவில்லை யென்று கடித்துத் துப்பியிருந்த பொம்மை
பரணிலிருந்து கீழே இறங்கி வந்திருந்தது.
பல ஆண்டுகளுக்கு முன் இன்னொரு குழந்தையின்
கைக்குப் போய்ச் சேர்ந்துவிட்ட பொம்மையும்
அருகமர்ந்து கொண்டிருந்தது.
கிழிந்த பொம்மைகள் சிலவற்றிற்கு
ஆயத்தஆடைகள் அணிவித்து
அழகுபார்த்துக் கொண்டிருந்தான் சின்னக்கண்ணன்.
சிறுவனின் கண்களே உதடுகளாய்வெளிப்பட்ட கூற்றுக்கு
மாற்று குறையாமல்
ஆடிக் கொண்டிருந்த தலைகள்
பொம்மைகளின் மேலும்கீழுமாய்.
காரியார்த்தமாய் வால்களைச் சுருட்டிக் கொண்டு
கூர்வளைநகங்களை செல்லப்பிராணிகளாய்
உள்ளிழுத்துக் கொண்ட வாக்கில்
அமர்ந்துகொண்டிருப்பவைகளைக்
 காட்டும் அடையாளம் காலம்
எனப் பின்னேகி
பஞ்சுப் பிரிகளாய்
வெளியில் கலந்து திரியும்
பொம்மிக்குட்டியின் குரல் எட்டுமோ
உன்னை என்னை நம்மை...?
"நீயும் பொம்மைநானும் பொம்மை,
நினைத்துப் பார்த்தால் எல்லாம் பொம்மை"



4) குகை என்பது ஓர் உணர்வுநிலை

[I]
காற்றாடிகளாக முடியாத காகிதத் துண்டு
துணுக்குகள் என்றாலும்
சொடுக்கியிழுக்கும் கைகளின் பிடியில்
சிக்காத பூரணத்துவம் கொண்டவை.
தலைக்கு மேலே சுற்றிச் சுழன்று
தரையிறங்கிக் கொண்டிருக்கின்றன.
விழுந்த இடம் பொசுங்க
எழுந்த பிணவாடை
உனக்கு துர்நாற்றமென்றால்
எனக்கு சுகந்தம்.
அகராதியில் அடங்காது இந்த மாற்றம்;
 இரண்டறக் கலந்திருக்கும் இருட்குகையில்.


II
குகைவாயிலில் தினமும் மாலை
பீறிட்டுயரும் ஊற்றைப் பார்ப்பதில்
வரவாகும்
நீர்த்துப் போகாத பரவசம்.
அன்றும் பார்த்துக் கொண்டிருந்தபோது
செங்குத்தாய் உயர்ந்து விரிந்து பரவியது
செந்நிறத் தண்ணீர்.
வண்ண விளக்கைத் தேடிய கண்களுக்குத்
தட்டுப்பட்டது
வெட்டுண்ட மனமொன்று.
கிளம்பியது குருதியென்று விளங்கியதில்
கலங்கி
வலைச் சுருட்டிக் கொண்டு குகைக்குள்
ஒடுங்கிக் கொண்டது காட்டு விலங்கு.




III
தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தது
தன்னைத் தானே.
கண்ணில் ததும்பிக் கண்ட வலியைக் கண்டு
வேடிக்கையாக இருந்தது.
காக்கைக் கொண்டாட்டமல்ல.
'உண்டென்றால் உண்டுஇல்லையென்றால்
இல்லை';
வலியும் இழப்பும் அவமானமும்
கையறுநிலையும் கூட
கடவுள் தான்.
குகையிருளில் பலவீனமாய்ப் படுத்துக் கிடக்கும்
பெண்புலியின்
புண்பட்ட மென்மார்பை ரணப்படுத்துவதாய்
வீசியெறியப்படும்
எலும்புத் துண்டத்தால் எப்படி வயிறு நிறையும்?
தன்னை யுந்திக் கொண்டு எழுந்து புறப்பட்டால்
தானே கிடைக்கும் பொழுதும் இரையும்.


IV
ண்களை இடுக்கிக் கொண்டு காத்து நின்றாள்
பார்த்த விழி பூத்து.
பூப்பெய்திய நாள் நினைவுக்கு வரவில்லை.
பசிக்கிறது என்றால் அதைக் கொச்சையாக
பொருள்பெயர்த்து
பெருங்குரலெடுத்துச் சிரிக்கத் தயாராய்
நாலாயிரம்பேர்.
ஊர் மறந்து விட்டது.
நசநசவென்று பெய்யத் தொடங்கி விட்டது
மழைமனம்.
வசவுச் சொற்களின் நிண ருசியை
வாய்க்குள் உணர்ந்தவளாய் மீண்டும்
குகைக்குள் நுழைந்தவாறே
முனகிக் கொண்டாள் மூதாட்டி:
"காசு தராமலே கிடைப்பாள் என்றாலும்
கிழப் பரத்தையைப் புறக்கணித்தல் தானே
குடும்பத் தலைவர்களுக்கு அழகு..."



V
வெளியுலகின் இடையூறின்றி வேண்டுமட்டும்
கூடிக்களிக்க
இந்தக் குகையைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட
பெண்புலி
பூனையாகிப் புதைந்து கொண்டது
அடுத்துப் படுத்துக் கிடந்த இணையின்
அடிவயிற்றில்.
கண்துஞ்சிய நேரம்போக காலமெல்லாம்
நக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தது
நேசமிகுதியில்.
ஆடாமல் அசையாமல் படுத்தவாறே
பங்கெடுத்துக் கொண்டிருந்த இணையின்
அடிமனதில்
நிலைகொண்டிருக்கக் கூடும்
அடுத்த வேளைக்கான இரையின் நினைவு...

VI
சிந்தாநதியொன்று குகையின் அடியில் சீராக
ஓடிக் கொண்டிருந்தது.
பார்த்ததில்லையென்றாலும் அதன் ஒலி கேட்டுத்
தண்ணெனக் கனியும் பெண்மனம்.
குகைப்பாறையின் திண்மையைக் கொண்டாடுவதாய்
மறுபடியும் மறுபடியும் முகர்ந்து பார்க்கும்.
வினைமுடித்ததாய் வெளியேறி மறையும் இணையின்
தளதளவென்று பொலியும் வாலைப் பார்த்து
களிப்பு பெருகும்.
'பாவம்எத்தனை தொலைவு செல்ல வேண்டுமோ..?'
என்று தனக்குள் கேட்டுக் கொள்ளும்
விசனமும் கரிசனமுமாய்.
திரும்பி வரும்போதெல்லாம் விருந்துண்ட கிறக்கமாய்
நாவைச் சுழற்றி
மிச்ச ருசியை அசைபோட்டவாறிருக்கும்
இணையின் தரிசனத்தில்
'ஒரு துண்டு இறைச்சியும் தனக்குத் தரப்படவில்லை
யென்ற
நிதர்சனம் ஓரங்கட்டப்படும்.

VII
திரும்பாமலே போகும் நாட்களில்
திரும்பாமலே போயிற்று ஒரு நாள்.
இரண்டு மூன்று நான்காய்
உருண்டோடிய பொழுதுகளில்
சுருண்டு கிடந்தது பெண்புலி குகையின்
ஒரு மூலையில்.
இதுநாள் வரை இருளிலேயே ஆனந்தமாய்
கண்மூடி
மல்லாந்து கிடந்ததில்
கடந்துபோய் விட்ட காலத்தின் நீள்பரப்பு
சுருக்கென்று தைக்கிறது பிரக்ஞையில்.
சற்றே திரும்பிப் படுத்தபோது
பக்கவாட்டில் புதரொன்று முட்களோடு
அடர்ந்து வளர்ந்திருப்பது
புரிந்தது.
அதிலிருந்து கேட்டுக் கொண்டிருக்கும் சீறலொலி
பிரமையாக இருக்கலாம்அல்லது,
பாம்பாக இருக்கலாம்..
VIII
லவீனம் மனம் உடலாக
மெதிவே எழுந்து நின்றது.
தலை படீரென்று இடித்தபோது தான்
குகையின் மேற்புறம் சரிந்திருப்பது தெரிந்தது.
மூச்சடைத்தது.
முன்னோக்கி எடுத்து வைத்த கால் பதிந்த
இடம்
ஒரு பெரும் பள்ளத்தில் புதைய
பின்னுக்கிழுத்த வேகத்தில்
முதுகு சாய்ந்த இடத்திலிருந்த பாறை பெயர்ந்து
மோதித் தள்ளியது.
 முன்மண்டையும் மூக்கும் நசுங்கி
குருதி பெருகத் தொடங்க
எப்படியாவது வெளியேறிவிட வேண்டும் என்ற
விருப்பு ஒரு வன்மமாக
மீண்டும் புலியாகி ஒரே பாய்ச்சலில்
வெளியேறிக் கொண்டிருக்கும்
பெண்புலியின் உடலெங்கும் படரும்
தண்காற்று
இன்னொரு வாழ்வாய்.



5) 
மறுக்கப்படும் வாழ்க்கை
I
 என் உடலின் இரத்தமெல்லாம் உறைந்து
சடலங்களாகி விட்ட எண்ணிறந்தோரின் குருதிப் பெருக்காய் கால்களின்கீழ் கொழகொழக்கிறது.
வழுக்கி விழுந்து தரையில் கைகளை ஊன்றி எழுந்து கொள்ளூம்போது
உயிர்பிரிந்து கொண்டிருப்பவர்களின் கனவுகள் சில
கைகளில் ஒட்டிக் கொண்டு விடுகின்றன.

கையறுநிலையடர்ந்த இருளுக்குள் தட்டுத்தடுமாறி
முன்னேகும் என் தலையை வாரிக் கொண்டு செல்கிறது
அன்றொரு நாள் அழையா விருந்தாளியாக வந்து
இன்றைக்கும் உன்னோடும் என்னோடும்
நிரந்தர வலியாகத் தங்கி விட்ட ஆழிப் பேரலை.

பதித்த சலவைக்கற்களும் பூந்திண்டு மெத்தைகளும் கூடவே
நொறுங்கிய கண்ணாடிகளும்,  குண்டு துளைத்த சுவர்களுமாய்ஒரு கணத்தில் தாற்காலிகப் பயணம் பல நிரந்தரமாக்கப்பட்டுவிட்ட அவலம் ஆன்மாவைத் துவளச் செய்வதாய்.

மெய்யாகி விட்ட போர்ச்சூழலிலிருந்தும்,இயற்கைச் சீற்றங்களிலிருந்தும்
நம்மைக் காத்துநிற்கும் இராணுவ வீரர்களை
'இந்திய நாய்கள்என்று முழங்குதல் இங்கே நுண்கவித்திறம்;
பரங்கியனைப் போற்றிப் பாடி சுகவாழ்வு பெறுதலின்றி
மண்ணுயர கவிபாடி வறுமையைப் பந்தாடி
 இளம்வயதிலேயே பல செய்து முடிந்து விட்ட பாரதியை
புதுச்சேரிக்கு ஓடிய பயந்தாங்கொள்ளியாக்கி 
ஆவலாதி பேசிவரும் ஓர் அறிஞர்குழாம்.

நாசவேலை செய்வோரின் உளவியலை கனிவாய் ஆராய்ந்து
கலந்துரையாடல் நிகழ்த்துவார் நாலுபேரின் கவனம்
அரிதாகவே திரும்பும் கழிப்பறை சுத்திகரிப்புப் பணியாளர்களிடம்.
சட்டத்திற்குக் கட்டுப்படுவோரெல்லாம் கோழைகள் என்றொரு கருத்தியல் கட்டமைக்கப்பட்டவாறு.

தினமும் அநாதைகளாக்கப்படுகின்றன ஆயிரமாயிரம் குழந்தைகள்;
வாழாமலே முடிக்கப்படுகின்றன நூறாயிரம் பிறவிகள்.

விளக்குத்திரியைச் சிறிதே உயர்த்தினாலும்
விண்சொரியும் குண்டுமழை.

பிழைபொறுத்தருள்வாய் நெஞ்சே என்றவாறு இன்றும்
நுழைந்துகொள்கிறேன் எனக்கான பதுங்கு குழியில்.

II
ஆட வரலாம், பாட வரலாம் – அவிழ்த்துப் போட்டும்
அடிவயிற்றின் கீழ் ஆட்டிக் காட்டியும் என,
கலவரத்தில் மாண்டவரையும் திருப்பிப் போட்டு, தருகிறார்கள்
ஊட்டச்சத்துப் பரிசுகள் பல.
மல மல மல் மருதமலை மட்டும் தான் 
சுதந்திர தினமாகட்டும், தொழிலாளர் தினமாகட்டும்.
ஆங்கில ஒளி-ஒலிச் செய்தி ஊடகங்களிலோ
அதிபயங்கர நிகழ்வுகளும் சரிஆறாத் துயரங்களும் சரி
நாடகம், கதையென மொழியப்படும் அவலம் பரவலாக்கம்.
சின்னத் திரையின் சதுரப் பரப்பின் மேற்பகுதியில்
வன்புணர்ச்சிக்காளாக்கப்பட்ட ஏழைப் பெண்ணொருத்தி
கண்ணீர்விட்டுக் கொண்டிருக்க
கீழ்ப்பகுதியில் குட்டிக்குட்டி ஆடையில்
குதித்துக்கொண்டிருப்பார் மல்லிகா ஷெராவத்.
·      கல்லூரியின் நுழைவாயிலில் காயம்பட்டுக் கிடந்தவனை
யார் அதிகம் அடித்துத் துவைக்கிறார்கள் என்றவொரு
பிரம்மாண்டப் போட்டி பார்வையாளர்களாய் காவலர்களையும்
பொதுமக்களையும் கொண்டு நடத்திவைக்கப்பட்டது.
தேவைப்பட்ட குண்டாந்தடிகளும், கூலிப்படைகளும்
சின்னத்திரையலைவரிசைகளின் இடையறாத் தொடர்நாடகங்கள்,
சிரிப்பு வெடிகளிலிருந்து வாடகைக்குப்
பெறப்பட்டவைகளாயிருக்கலாம்.
வெடிகுண்டு மழைபொழியலில் வயிறுவலிக்கச் சிரிக்கவைக்கப்
பழக்கப்படுத்தப்படுகிறார்கள் மக்கள்.
காதலியை நாகசாகியில் போடப்பட்ட அணுகுண்டு என
அன்பொழுக வர்ணிக்கும் அருந்திரைப்பாடலொன்று.
·      குண்டாந்தடிப் பிரயோகத்தில் ஒருவன்
குத்துயிராக்கப்படுவதை
திரும்பத்திரும்பக் காட்சிப்படுத்தி சில
தமிழ்த்தொலைக்காட்சியலைவரிசைகள்
நிறைய பேரை இருதயநோயாளிகளாக்கிவிட
தாஜ் எரியும் காட்சிகளைத் தருகிறோம் எனத்
தம்பட்டம் அடித்துக் கொண்டன சில.
சின்னத்திரையின் சித்திகள் சிவசக்திகளெல்லாம் வரையுங்
கோலங்கள் யாவும் கோணல்மாணலாய்;
கானல் நாளையை நோக்கி கட்டாயமாய் முன்னகர்த்தப்பட்டுக்
கொண்டிருக்கிறார்கள்
பாலையே வாழ்வாக்கப்பட்டிருப்பவர்கள்.

III
பின்னால் கேட்ட பாட்டில் மனம் லயிக்கத் தொடங்கியவேளை
செவிமடுக்கக் கிடைத்த வசவுக்குரல் விளக்கியது
நவீன ரதமொன்றின் 'ஓரம் போஎச்சரிக்கையொலியது என்று ;

நேற்றிலிருந்து  காத்துக் கொண்டிருக்கிறார்
அந்த முதியவர்,நாராசப் போக்குவரத்து சற்றே குறைந்து
சாலையைக் கடக்கக் கிடைக்கும் தருணத்திற்காய்.

ஆறாய்ப் பெருகும் வியர்வையைத் துடைக்கவும் நேரமற்று
விளைநிலத்தில் களைபிடுங்கிக் கொண்டிருக்கிறார் விவசாயி.
இனிமேல் தான் பணம் புரட்டி விதை வாங்கப் போக வேண்டும்
விமானத்தில் அண்டார்ட்டிகாவுக்கு.

தேர்தலுக்காக மொழியப்படும் வாக்குறுதிகள்
பங்குனி மாதக் குளிரில் கந்தலாடையோடு வீதியோரம்
பாதி செத்துக் கிடப்பவரை கூர்வாளால் தாக்கிச் சாய்த்து
வீறுநடை போடுகின்றன.

கடந்த சில நாட்களாகக் கொட்டிய மழையில்
கலந்து விட்டது குடிநீரும்சாக்கடை நீரும் சில பல தொகுதிகளில்.
கழிவறைக்குச் செல்லவும் கட்டணம் செலுத்த வேண்டிய கதி
விதியல்ல சதியென்ப தொரு சிதம்பர ரகசியமே.

தொன்றுதொட்டே அன்று வந்ததும் அன்றே வந்ததும் கூட
வெவ்வேறு நிலாக்களே-
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் பிடிக்குத் தப்பிய
ஏற்றத்தாழ்வுகளினாலே.
இருப்பவருக்கும்இல்லாதாருக்கும் இடையேயான விரிபரப்பில்
பனிச்சறுக்கு விளையாடிக் கொண்டிருக்கிறோம்.
திருப்பத்தில் காத்துக் கொண்டிருக்கிறது
 பயங்கரப் பள்ளமும்பனிப்புயலும்.


6) ஆயுதப்போர் முடியட்டுமே 
இன்று மாலைக்குள்...

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே. அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே - இதை
வந்தனை கூறி மனதிலிருத்தி என்
வாயுற வாழ்த்தேனோ - இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ.

அன்னை துப்பாக்கிரவைக்கு இரையாகியிருக்கக் கூடும்...
மென்னருங் குழந்தை அறைந்து கொல்லப்பட்டிருக்கக் கூடும்...
ஒன்றாஇரண்டா _
எண்ணிறந்த ஆண்டுகள்.
பறிகொடுத்த இன்னுயிர்களின் எண்ணிக்கை
பெருகிக் கொண்டே போகிறது.

பிறந்த மண்ணின் பெருமையை நன்குணர்ந்தவர்கள்
அன்புமிக்க ஈழச் சகவுயிர்கள்.
தாய்த்திருநாட்டை நோயென மொழியும்
புன்மை பழகாதவர்கள்.
இலங்கை மண்ணின் மைந்தர்கள்;
துலங்கும் தண்தமிழைக் கண்ணெனக் கொண்டவர்கள்!

எத்தனையெத்தனை பத்தாண்டுகள் பறிபோய்விட்டன
அவர்களுக்கு.
பாரபட்சங்களும்அடக்குமுறைகளும்போர்ச்சூழலுமாய்,
பெருமூச்சும்கண்ணீருமே வாழ்வாகும் அவலம்
இன்னும் எத்தனை நாளைக்கு?

ஒரு காலைக்குள் இருகாலை யிழக்க வைக்கும்
ஆயுதப்போர் முடியட்டுமே இன்று மாலைக்குள்...

பாலைக்கானலாய் வீணாகும் வாழ்க்கை
அவர்களுக்கு விதிக்கப்பட்டதல்ல;
யாருடைய வாழ்க்கையும் கதிகெட்டுப் போவது
பாருக்கு நல்லதல்ல.

வல்லமையல்ல அதிகாரப் போரும்
ஆயுதப்போரும்;
அது ஆறறிவின் அவமானச் சின்னம்.
அதுவும்பாதுகாவலரே ஆதரவற்றோர் மீது
குண்டுமழை பொழிதல்
இழிவிலும் இழிவாகும்;
அழியாப் பழி வந்து சேரும்.

கயமையே பேராண்மையாய்க் கொண்டோரின்
அறிவும் அதிபயங்கர ஆயுதமாய்...

அன்பை போதித்தவர் புத்தர்;
அடிப்படையைப் புரிந்து கொள்ளாமல்
பௌத்தத்தைக் கடைப்பிடித்தல்
வீண் வித்தகமாய் மலிவடையும்.

மாட்சிமை பொருந்திய ஆட்சியதிகாரம்
வாட்டி வதைப்பதற்கா?
மக்களை வெட்டிச் சாய்ப்பதற்கா?
சாட்சிபூதங்களாய் எத்தனை தலைமுறைகள்_
திக்கின்றிவிக்கித்துஆறாப் பெருந்துயரில்
சிக்கித் தவித்தவாறு...

சம உரிமைச் சமுதாயம் மலர
சகவுயிர்கள் ஏராளமாய்ச் செத்து மடிய வேண்டுமென்ற
சபிக்கப்பட்ட நியமம்
உலகின் தீரா அவலமாய்...

அளவில் சிறிய மூளை சிலரில்
அற்பமூளையாகும் காரணத்தால்
எண்ணிறந்த விழுதுகள் பழுதாகி
அறுபட்டுப் போகின்றன
வன்னிக்காட்டில் உழன்று கொண்டிருப்போருக்கு.

தாம் செய்யாத குற்றத்திற்காக
தூராதிதூரம் துரத்தப்பட்டு
ஓடியோடிக் களைத்த கால்கள்
இளைப்பாற வேண்டும் நலவாழ்வில்
இனியாகிலும்;
கொடுங்கனவின்றித் தூங்க முடிய வேண்டும்;
காலாற நடக்கவும்காதல் செய்யவும்
காலம் கனிய வேண்டும்...

என்னருங் கேளிர்
ஈழத் தமிழ்மக்கள்
சரிநிகர் சமானமாய்
சமாதான பூமியில்
வாழ்வாங்கு வாழ வேண்டும்
வருநாளெல்லாம்.                                                  


7) சிலரின் கைகளில் விமர்சனம்

வெண்டைக்காய்த் துவையல் செய்வது எப்படி என்று
தான் கற்றுக் கொண்ட விதத்தை
சுருக்கமாக விவரித்தவாறே
தனது விமர்சனத்தைத் தொடங்குவார் அவர்-
பெரும்பாலும் 'தேறாதுஎன்ற
பிள்ளையார்சுழியோடு.
கையிலுள்ள கவிதைத் தொகுப்பிலிருந்து
அங்கொன்றும்இங்கொன்றுமாய் நாலைந்து வரிகளை
கைபோன போக்கில் கிள்ளியெடுத்து,
கால்பார்வையில் எடைபோட்டு,
"கடைவிரிக்கலாம்" என்று அனுமதி கொடுத்து
கூடவே "கொள்வாரிருக்க மாட்டார்" என்றும்
ஒரு மிதி மிதித்து
"நிச்சயமாய் நல்லாத் தான் எழுதியிருக்கார்" எனச் சொல்லி
உடனே
'கவிஞன் நிம்மதிப் பெருமூச்சு விடலாகுமோ வென
"கடனே யென்று எழுதிய கவிதைகள் சில,
சிவனே யென்று எழுதிய கவிதைகள் சில,
மாத்திரம் இல்லாதிருந்தால்-
மூத்திரம் என்ற சொல் மட்டும் சிறுநீர்
எனத் தரப்பட்டிருந்தால்,
காத்திரம் கூடியிருக்கும்"என்று
மீண்டும் தன் கூண்டுக்குள்ளிருந்து
காலத்தால் கந்தலான கவிதையொன்றை
ஞாலத்தினும் சாலப் பெரிதாய் எடுத்துக் காட்டுவார்.

"வடித்தால் சிற்பம்-
பொடித்தால் பல்பம்-
மடித்தால் பொட்டலம்-
விரித்தால் வரைபடம்-
என் எட்டாவது வகுப்பிலேயே கற்றுக் கொண்ட
வாழ்க்கைப்பாடம் இது"வென
அபசுரத்தில் ஆலாபனை செய்து
பல்லவிஅனுபல்லவிசரணம் பாடி
நாத விற்பன்னர் ஆவார் நமது விமர்சகர்!

காதலோசாதலோபெண்ணியமோவிண்ணியமோ-
ஆதலினால் அனைத்துக் கூட்டங்களிலும் முதல் வரிசையில்
நெஞ்சுயர்த்தி யமர்ந்தவாறு மேடையைக்
கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பார் இன்னொரு விமர்சகர்.
அவர் கடைக்கண்ணிலிருந்து எவரும் தப்ப முடியாது.
அதி முக்கியமாகபணம் பதவியுள்ள படைப்பாளிகள்.

அதற்கும் மேல்இருக்கவே இருக்கிறது தொலைபேசி!
சக கவிகள் சொல்லாத சேதிகள் பலவற்றை
வீடு வீடாய்அரங்கு அரங்காய்ப் போய்த் திரட்டியெடுத்து,
தேவையானதனதேயான
மேலதிகக் குறிப்புகளோடு தருவதற்கென்றே உண்டு
 சில நீக்குபோக்கு மேம்போக்குக் கவிஞர்,கவிதாயினிகள்.
வேண்டும்போது அவற்றில் ஏழெட்டை
வெட்டி யொட்டி
விமர்சனமாய் சுட்டு வினியோகிப்பார்
வேறொரு விமர்சகர்.

வெகுண்டெழுவார் இன்னொருவர்:
"கப்பம் கட்டச் சொல்பவனும்
கவிதை கட்டச் சொல்வானோ..?
வெல்வானோ இக்கவிஞன்?
சொல்வேனோ நானும் இவனைக் கவியென...
நான் காணா வரியிடை வரிகளைக் காணும் கண்கள்
அவிந்து போகக் கடவது
அவனிவனென ஆயிரம் கவிஞர்கள்
யாரைச் சொன்னால் எனக்குப் பயனுண்டோ
அவர் பேர் கண்டிப்பாக இடம்பெறும்
என்றும் மாறியவாறிருக்கும் என்
தரநிர்ணயப்பட்டியலில்".


"பாரீஸ் இலக்கிய விழாவுக்குப் போகக் கிடைப்பது முதல்
பாரீஸ் கார்னரில் அலைந்து திரிந்து ஆரஞ்சுப் பழங்கள்
வாங்கித் தருவது வரை,
பெட்டி தூக்குவது முதல்
போற்றிப் பரவுவது வரை
பயனென்றால் ஒன்றாஇரண்டா - எடுத்துச் சொல்ல...?
திறனாய்வுப் பேராசானாய் நான் துதிக்கப்பட
தொண்டரடிப்பொடியார்கள் அதிகம் தேவை.
கவிதையெழுதுபவன் கவிஞன் எனில்
அவனையே எழுதுபவன் நான்;
அவன் கவிதை கவிதையாவதும் என்னால் தான்.
கோர்வையாய் நான்கு வார்த்தைகள் கிடைத்தாலும் போதும்
நாவாட சொல்லியா தர வேண்டும்...
ஆடுவேன்பாடுவேன்சுயங்கூடிய கவிஞர்களை
அடங்காப்பிடாரிகளென ஓட ஓட விரட்டுவேன்.
 தடுக்கி விழுந்தாலும் பரவாயில்லை-
தாமதமில்லாமல் சாமரம் வீச ஆள் சேர்க்க வேண்டும்..."

கவிதையில் பூடகத்தன்மை யிருந்தால்
"அது கச்சடா" என்பார்.
அட கஷ்ட காலமே_
கருத்துரீதியாய் பொருதும் கதியற்று
இஷ்டதெய்வத்தைத் துணைக்கழைத்தவாறிருப்பார்
இன்னொரு விமர்சகர்.
மூலமே சூன்யமென்று ஞானம் பெற்றார் நம்
முன்னோர்கள் பலர்.


8) பலவீனம்

என்னால் உருவாக்கவியலாத
ஒரு தாமரைப்பூ
தன்னால் பல்கிப் பெருகியவாறு.

நீரின் ஒரு துளியை
உள்ளங்கையில் திரட்டியெடுக்கலாகாமல்
திணறிக் கொன்டிருக்கிறோம்
இன்னமும்.
ஐந்து விரல்களை ஒரேயளவாய்
இயல்பாய் நீட்டிக் கொள்ள
முடியுமா உன்னால்...?

இத்தனை கையாலாகாத்தனத்தை ஒளிக்கவோ
வன்முறையைக் கைக்கொண்டு களிக்கிறோம்?


9) எழுதப்படா விதிகள்

தொழிலதிபர்களே ஆட்சியாளர்களாய்
ஆட்சியாளர்களே தொழிலதிபர்களாய்
வழிவழியாய் வந்த வண்ணம்...
முன்னமிருந்திருப்பார்களோ
காட்சிக்கு எளியர்கள்,
குடிசைவாழ் தலைவர்கள்...

இன்னமும்
நாள் குறித்துஆள் திரட்டி,
காரணங்கற்பித்து
ஆயிரக்கணக்காய் குடிகளை
காவுகொடுத்து
கெக்கலித்து வக்கரித்து
போரைப் பரவி வரும்
பெருந்தகையாளர்கள் பலர்
மெத்தப் படித்த மேற்குடியாளர்களாய்.

சாதிகளின் மேற்கவிந்த சாதிகளாய்
நிதியும் அதிகாரமும்
நலிந்தோரை மிதித்தபடி...

10) முழங்கப் பழகுவோம்

பேசத் தெரிய வேண்டும்
திருத்தமாக.
பொய்யென்றாலும் பரவாயில்லை-
கையிலடித்து சத்தியம் செய்யாத குறையாய்
உரைக்கப் பழக வேண்டும்.
கரைக்கக் கரைக்கக் கல்லும் கரையும்.
கரைத்தால் மட்டும் போதாது,
காணாமல் போய்விட வேண்டும்.
வையத்துள் ஆனானப்பட்ட வாழ்வு வாழ
கட்டாயமாய் கையகப்படுத்திக் கொள்வோம்
மேடைகளையும்ஒலிவாங்கிகளையும்,
மறவாமல் மசியையும்மின்னஞ்சல்
முகவரிகளையும்.
கூட்டிக் கழித்துப் பெருக்கிப் போட்டால்
வந்து விழ வேண்டும் நாம் விரும்பிய விடை.
காய் நகர்த்த வேண்டும் அதற்காய்
அயராது;
காலம் கனியும்.
கவைக்குதவாது-
வலிக்குமோ பிறர்க்கு என்ற கரிசனம்.
அவைநாயகர் நாமாதலே அவசரமும்
அவசியமும்.

11) மாஜிகளாகாத நாஜிகள்

யாருமே மனிதர்களில்லை
அவர்களைத் தவிர;
எதுவுமே உண்மையல்ல
அவர்கள் மொழிவதைத் தவிர.
மாஜிகளாகாத நாஜிகள்
நாள் முழுக்க நகர்வலம்
வந்துகொண்டிருக்கிறார்கள்.
மக்களை நலம் விசாரித்தவாறு.
வறுமைக்கோட்டை வரையும் நேரம்
துக்கம் தொண்டையை அடைத்ததாக
ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளின்
அதி ஆடம்பர அரங்குகளில்
அவர்கள் சொல்வதை
நாம் நம்பித்தானாக வேண்டும்.
பார்த்து பதவிசாக நடந்து கொண்டால்
பதவிகள்பரிசுகள் தேடி வரலாம்.
எதிர்த்துக் கேள்வி கேட்டால்
எவருக்கோ அடிவருடிகளாக்கப்பட்டு விடுவீர்கள்.
சுவரில்லாமல் வரைய முடியாதா என்ன?
அது தான் இருக்கவே இருக்கிறதே
ஏமாந்த சோணகிரிகளின் வெற்று முதுகுகள்...
"பத்திரம்கவனமாயிருங்கள்"என்று கூறியவாறே
கத்தியால் அழுத்திக் கீறி,
பீறிடும் அவருடைய ரத்தத்தைக் கொண்டே
பதமாய் சித்திரம் தீட்டிவிட
சொல்லியா தர வேண்டும்?

12) பாவம் குடிமக்கள்

உம்மை மேய்ப்பராகவும்
எம்மை வழி தவறிய வெள்ளாடாகவும்
அல்பகலாய் உருவேற்றியவாறு...
எமது சிந்திக்கும் திறனை எமக்கே எதிரியாக்கி
எம் சுயம் தன்வயமிழந்துபோய்
 உன் தலையாட்டி பொம்மையாகிவிட்டதும்
நாங்கள் முழுமனிதராகி விட்டதாய்
முன்மொழியப்படுகிறதுவழிமொழியப்படுகிறது.
திட்டவட்டமாய்
வட்டத்துள் எம்மை முடக்கிவிடும் திட்டம்
வெகு எளிதாய் பூர்த்தியாகி விட
வேர்த்து விறுவிறுத்து வகையறியாது
காலத்திற்கும் எம் மீதான எமதன்பை
நட்பைமதிப்பைமரியாதையை
கரிசனத்தைநல்லெண்ணத்தை
வேறெதையெதையெல்லாமோ
பிரிந்து விட்டவனாய்துறந்து விட்டவளாய்
உமது வாயிலிருந்து உதிரும் சொல்முத்துக்களை
அதிகதிகமாய் திரட்டத் தொடங்கி இன்று
கதிகெட்டு நிற்கிறோம்.
'பாவம் குடிமக்கள்என்று பாவனையாய்
கண்ணில் நீர்மின்ன,
எழுதித் தரப்பட்டதை மனனம் செய்து ஒப்பித்தவாறு
மளமளவென்று மேலேறிச் சென்றவண்ணம்,
அடிவாரத்தில் தளர்ந்து நின்றுகொண்டிருக்கும்
எம்மைப் பார்த்து
அவ்வப்போது எப்படி அத்தனை அன்போடு
புன்னகைக்கிறீர்கள்?!


13) எப்பொருள் மெய்ப்பொருள்

"பத்து நிறங்களைக் கொண்டது வானவில்!"என்றனர்.
"இருக்கலாம்" என்றேன்.
"பறவைகள் பேசுவதை எங்களால் புரிந்து கொள்ள முடியும்!" என்றனர்.
"நல்லது". என்றேன்.
'இல்லை என்ற சொல் எங்கள் அகராதியிலேயே இல்லை" என்றனர்.
"புண்ணியாத்மாக்கள் நீங்கள்!"என்றேன்.
"எண்ணியது எண்ணியாங்கு முடிப்போம்!" என்றனர்.
"என் கண்ணே பட்டுவிடப் போகிறது!" என்றேன்.
பழி நீங்க வாழ்வதே எங்கள் லட்சியம்" என்றுரைக்க
வழிகாட்டியாய் உம்மைக் கொள்வோம் நிச்சயம்"என்றேன்.

"அப்படியெனில்நாங்கள் சொல்வதையெல்லாம்
 நம்புகிறாய் தானே?"
"எப்படியும் மாட்டேனே!"


14 ) தன்மை

என் கழுத்தைச் சுற்றி
நாய்ப்பட்டையிட்டு
இழுத்துக்கொண்டு போகும் எத்தனம்
எந்நாளும் உங்களிடம்...
இயல்பான சுதந்திரவுணர்வோடு
திமிறி நழுவிச் சென்றால்
அன்று தந்த இரண்டு பிஸ்கோத்துகளை
சொல்லிக் காட்டி
"நன்றி கெட்டது"
என்று நாவால் கல் வீசுகிறீர்கள்.

கோழிக்கோகாக்கைக்கோபுறாவுக்கோ
ஏதோ ஒரு சமயம்
பிடி தானியம் இறைக்கிறீர்கள்.
நாய்க்கு சில நேரங்களில்
சில ரொட்டித்துண்டுகள்.
மிருகக் காட்சி சாலைக்குச் செல்லும்போது மட்டும்
குரங்குகளின் கூண்டுகளுக்குள்
கடலை பட்டாணிகள் சில...
என்னை நோக்கி மட்டும் ஏன்
எப்போதுமே வார்த்தைகளை
வீசியெறிந்தவாறிருக்கிறீர்கள்?

சம எடையற்ற அளவுகோல்களைக் கொண்டு
சந்தையில் கடைபரப்பும்
சக வியாபாரிகள் நாம்.
காய் அளப்பதில் சிலர்
கூடக்குறைய.
வேறு சிலர்
வாயளப்பதில்.
நாய்ப்பிழைப்பு நம் பிழைப்பு
என்பதாய்
ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டால் அது
ஆதங்கத்தில் விளைந்த வேதனைப் பகிரல் .
"நானே புனிதன்நீ புறம்போக்கு"
என்றால் அது
அநியாயப் புளுகல்.

"உன்னை வழிநடத்த நானே தகுதிவாய்ந்தவர்"
என்ற தன்னிலை விளக்கத்தோடு
கிளம்பி வருகிறீர்கள்
சேணமும் கடிவாளமுமாக.
அடிக்கச் சாட்டையுமுண்டு.
ராஜபாட்டையில் கூட்டிச் செல்வதாய்
என்னை வண்டியில் பூட்டப் பார்க்கிறீர்கள்.
அப்பால் விரையும்
என் கண்முன்னே கிளைபிரிந்து கிடக்கின்றன
ஆயிரம் பாதைகள்!
முளைக்கின்றன புதிதுபுதிதாய்!
காலம் ஓர் ஆரவாரமற்ற ஆசானாய்
கற்றுத் தருகிறது ஏராளம்.
உம் போன்றவர்களிடமிருந்தும் படித்துக்
கொண்டிருக்கிறேன்_
என் சுயாண்மையை.

ஓடும் பரவசத்திற்காய் ஓடிக் கொண்டிருக்கிறேன்!
ஓடும்போது கால்களில் கண்கள் திறக்கின்றன!
கூடுதல் இதயமொன்று துடிக்க ஆரம்பிக்கிறது!
கண்ணிமைப்போது அண்ணாந்து பார்க்க
என் ஆனந்தம் நீலவானில்
பிரதிபலிப்பதைக் காண முடிகிறது!
கால்களின் ரீங்காரம் வெளியெங்கும் பரவுகிறது!
ஓட்டம் பறத்தலாகி மிதத்தலாகும்
உற்சவப் பொழுதில்
பெருகும் இதம்
விருதுகளுக்கப்பால்!

15) நெஞ்சு பொறுக்குதில்லையே...

தாயுமானவன்தந்தையானவன் நான்.
தீர நேசிக்கிறேன் என் சேய்களை.
அதனால் தான்ஆயகலைகள் கற்கவும்
அவர்களை அனுமதிக்க மறுக்கிறேன்.
திறன் வளர்க்க அவர்கள் புறப்பட்டுப் போய்விட்டால்
அந்தப் பிரிவை என்னால் தாங்க முடியாது.
நாய்களைப் போல் நடத்துகிறேனா?
வாய்க்கு வந்தபடி பேசாதீர்கள்.
உங்களைத் தான் உள்ளே வரவே விடவில்லையே நான்.
என்னபடமனுப்பியிருக்கிறார்களா இங்கிருப்பவர்கள்?
அடங்காப்பிடாரிகள்.
ஏய்யாரங்கே-
அடித்து நொறுக்குங்கள் அவர்களை.
அப்படியாவது அவர்கள் நல்ல வழிக்கு வரட்டும்.
கழியைப் பிரயோகிக்காமல் விட்டு விடுவது சரியல்லவே.
உரிமை பேசும் தறுதலைகளாக வளர்ந்துவிட்டால்
பின்ஐயோபழி வந்து சேருமே.
அருமையாக வளர்க்க வேண்டும் என் பிள்ளைகளை.
 எத்தனைக்கெத்தனை அதிகம் அடிக்கிறேனோ
அத்தனைக்கத்தனை உன்னதப் பெற்றோராவேன்!
பிரிவாற்றாமை என்னை உருக்கிக் குலைத்து விடுமே
என்ற அச்சம் வருத்த
குறும்புக் கண்ணனை யவன் வளர்ப்புத்தாய்
உரலில் கட்டி வைத்ததைப் போலவே
நான் மின்கம்பிவேலியிட்டு
பத்திரப்படுத்தியிருக்கிறேன்.
தத்துப் பிள்ளைகளா அவர்கள்
அல்லவேயல்ல
என் வித்துகள்;
புத்திரச் செல்வங்கள்.
ரத்தம் பெருகும்படியாக
எத்தித் தள்ளுவேன்.
படித்ததில்லை நீங்கள்?
அடிக்கிற கை தான் அணைக்கும்.
எனவே தான்நான் இன்னும் அடித்து முடிக்கவில்லை.
அத்தனை உறுதி வாய்ந்தது என் அன்பு-
புரிந்து கொள்ளுங்கள்.
எத்தனை வேண்டுமானாலும்
துண்டாடித் தோரணம் போடுவேன்.
பொத்திக் கொண்டு போய்விட்டால்
உங்களுக்கு நல்லது.
குளோபல் வில்லேஜ்ஹியூமன் ரைட்ஸ் என்றெல்லாம்
தத்துபித்தென்று கத்த முற்பட்டீர்களோ
வெட்டி விடுவேன் வெட்டி.
கைப்பற்றிய ஆயுதங்களும் இப்போது என்னிடம் குவிந்திருக்கிறது
கவனமிருக்கட்டும்.
ஏற்கனவே அறுத்தெறிந்தாகி விட்டது
என் பிள்ளைகளின் கைகளை
நாவை
கண்களை
சிறகுகளை
நாட்களை
நம்பிக்கைகளை
நல்லுயிரை...
"பல்லாண்டு வாழ வேண்டிய" என்பதையும்
சேர்த்துக் கொள்ளுங்கள். எனக்கு அது ஒரு பொருட்டில்லை.
இரண்டாம் நூற்றாண்டாகட்டும்,
இருபத்தியோராம் நூற்றாண்டாகட்டும்,
மக்கள் நலன் காக்கவென்றே
வரம் வாங்கிக் கொண்டு வருவோர்
 பெரும்பாலும்
சாமானியர்களின் தொண்டைக்குழியை அறுத்தவண்ணமே தான்
அவர்களுக்காகக் குரல்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
என்னிடம் மட்டும் ஏன் தப்பு கண்டுபிடிக்கிறீர்கள்?
அகண்ட உலகமே அக்கடா என்று பார்த்துக் கொண்டிருக்க
உங்களுக்கு மட்டும் ஏன் இந்த துக்கிரித்தனம்?
யாம்
எம் மக்களைக் குட்டுவதும்
வெட்டுவதும்
நசுக்குவதும்
பொசுக்குவதும்
மதிப்பழிப்பதும்
மிதித்தழிப்பதும்
யாவும்
அதியன்பினால் மட்டுமே.
திரும்பத்திரும்ப நான் திட்டவட்டமாய்ச் சொல்லியும்
நம்பாமல் உள்ளே எட்டிப்பார்க்க முயற்சித்துக் கொண்டிருப்பவர்கள்,
நடப்புண்மை அறிய முயலும் கயவர்கள்
காவுகொள்ளப்பட்டு விடுவர்.
அச்சுறுத்துவதாக எண்ண வேண்டாம்.
அக்கறையோடு எச்சரிக்கிறேன்_
அன்பின் பெயரால்...                                


16) நினைக்கத் தெரிந்த மனம்

குற்றவுணர்வு கொள்ள வேண்டியவற்றிற்கான பட்டியல்
நீண்டுகொண்டே போகிறது.
நினைக்கத் தெரிந்த மனம்
நியாயம் புரிந்த மனம்
நிம்மதியாய் எப்படியிருக்கவியலும்?

அலைந்து களைத்து வந்து உண்ணத் தொடங்கினால்
கண்முன்னம் தொலைக்காட்சியில்
பின்பக்கமாய் கை கட்டப்பட்ட நிலையில்
உன்னையும் என்னையும் அம்மணமாக்கி
நெட்டித் தள்ளியவாறே
குறிபார்த்துப் பின்மண்டையில் சுட்டுக் கொல்கிறார்கள்.
அதற்கு முன்பாக உனது குறியையும்
எனது முலையையும்
திருகியெறிந்துவிட்டார்களோ ?
அல்லதுவெட்டியெடுத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்களோ...
இருட்டிக் கொண்டு வருகின்றன கண்கள்.
எர்கிறது உடலெங்கும்.

நினைக்கத் தெரிந்த மனம்
நியாயம் தெரிந்த மனம்
நிம்மதியாய் எப்படியிருக்கவியலும்?

அந்தத் திறந்த வெளிகளில்ரகசியச் சிறைகளில்
அனுதினமும் நடந்தேறிக் கொண்டிருக்கும் அக்கிரமங்களைக் கண்டு
இயற்கையும்இறகுடை பறவைகளும்
ஊர்வன பறப்பன வேறென்னென்னவும்
அதிர்ந்துபோய் வீறிடத் துவங்க
அணில் டினோசாராகவும்
குருவி வல்லூறாகவும்
துரிதகதியில் உருமாறி
விரைந்து முன்னேகி,
கெக்கலித்தவாறே ரத்தம் கொப்பளிக்கச் செய்துகொண்டிருக்கும் சீருடையாளர்களை
சீறித் தாக்கத் தொடங்கின்றன.
மடைதிறந்த வெள்ளமாய் அந்த
ஐந்தறிவு உடன்பிறப்புகளிடமிருந்து பெருகும் அன்பில்
மதிப்பழிந்து மந்தைகளாய் மின்கம்பிவேலியிட்ட கொட்டகைக்குள்
அடைபட்டுக் கிடப்பவர்கள்அல்லலுற்றுக் கிடப்பவர்கள்
மீண்டெழட்டும்புண்களும் காயங்களும்
பூண்டோடு அழிய.
போயும் போயும்,
அரும் உயிர்களின் அழிவை வெறும்
புள்ளிவிவரக்கணக்காக மட்டுமே பொருட்படுத்திக் கொண்டிருக்கும்
காரியவாதிகளிடம் முறையிட்டுக் கண்டதென்ன?
ஆறறிவில்லையானாலும்
நாயும் பேயும் கூட மேலானவையே என்பதில் ஐயமென்ன?
ஆய தொலைநோக்குப் பார்வையோடு
கொள்கைத் திட்டங்கள் தீட்டவும்
கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யவும்
விறுவிறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன
சர்வதேசங்களும்.
நாசங்கள் பாட்டுக்கு நடந்து கொண்டிருக்கட்டும்.
அடிப்படை உரிமைகளும் பறிக்கப்பட்டு
நிரம்பி வழியும் கழிவறைகளும்
நிதம் அழியும் இளந்தலைமுறையினருமாக
கலங்கிக் காலங்கழித்து வரும்
பழிபாவமறியா அப்பாவி மக்களுக்கு
தப்பாமல்தாமதியாமல் உதவி செய்ய
அதிகாரப் பொறுப்பிலுள்ளவர்களுக்கு எப்போதாகிலும் நேரமிருக்குமா தெரியவில்லை.
எனவே தான் இறுதிமுயற்சியாய் உங்களை நாடி வந்துள்ளோம்.
ஊர்வனவேபறப்பனவேநாற்கால்-ஆறுகால் உயிரினங்களே
கதிரேகாற்றேகடலேமலையே,  -
அடிபட்டு மிதிபட்டு கதிகெட்டு விதியற்று
ஆற்றொணாத் துயர் மண்டி
புழுதி படிந்து பட்டுப்போய்க் கொண்டிருக்கும்
எம் முன்னோர்களுக்குவழித்தோன்றல்களுக்கு
மானுடவாழ்வை உறுதி செய்யுங்கள்.
மன்றாடிக் கேட்கிறோம்.
மீண்டும் மீண்டும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது மாபாதகம்.
நினைக்கத் தெரிந்த மனம்
நியாயம் புரிந்த மனம்
நிம்மதியாய் எப்படியிருக்கவியலும்?


17)  மக்கள் சேவை

பட்டினியால் துடித்துக்கொண்டிருந்த வயிறுகளைத்
திரட்டியெடுத்து,
அலங்கார வேலைப்பாடுகள் கொண்ட
அழகான உறைகளில் மடித்துப்போட்டு,
அவசரம் என்று மேற்புறம் அடிக்கோடிட்டு,
ஆற அமர விலாசம் எழுதி
அனுப்பிவைத்துக் கொண்டிருக்கிறார்கள்
அயல்நாடுகளுக்கு.
இப்படிச் செய்வதன் மூலம்
பாதிக்கப்பட்ட மக்கள் அதிக எண்ணிக்கையில்
 பயன் பெறுவார்கள்
என்று காரணங் கூறப்பட்டது.
வயிறில்லாத நிலையில்
பசியால் இனி அவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்
என்று ஆறுதல் கூறப்பட்டவர்களாய்,
நம்பிக்கையளிக்கப்பட்டவர்களாய்
அப்பாவி மக்கள்
வயிற்றுப் பகுதியின் வெற்றிடத்திற்குள்
செயலற்று முடங்கிக் கிடக்க,
வாகாய் துண்டாடப்பட்ட அவர்களுடைய
சிறுகுடல்கள்பெருங்குடல்கள்கணையங்கள்
கல்லீரல்களெல்லாம்
கடல் கடந்தும் கடக்காமலும்
கொழுத்த லாபத்திற்குக்
கடைவிரிக்கப்பட்டவண்ணமே...

18) ஆட்சித்திறன்

எழுதுகோல்களால் நிரப்பட்டுவருகின்றன சிறைகள்.
முனைகள் முறிக்கப்பட்டவை,
ஒரு துளியும் மிச்சமின்றி
மசி வெளியேற்றப்பட்டவை,
வெள்ளைத்தாள்களுக்கு
வெகுதூரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டவை...
கூடவேவெட்டியெறியப்பட்ட சில
கட்டைவிரல்களும்,
ஆள்காட்டிவிரல்களும் கூட
விசியெறியப்பட்டிருந்த அந்த இருட்பெட்டியறையில்
காலத்தின் தூசி வேகமாகப் படர ஆரம்பித்துவிட்டது.
வாடிக்கையாக அவற்றைக் கணக்கெடுக்க வரும்
மேற்பார்வையாளர்
அசைவற்றுக் கிடந்த அவற்றை நோக்கி
வசைமொழிந்தார் எள்ளலோடு:
வாளை விட வல்லவராமே நீங்களெல்லாம்!
நல்ல வேடிக்கை!
பின்-
தன் அன்றைய அலுவலை முடித்துக் கொண்டு கிளம்பியவரின்
கால்கள் நகரவியலாமல் பின்னுக்கு இழுக்கப்பட,
திரும்பிப் பார்த்தார்.
கட்டைவிரல்களும்ஆள்காட்டிவிரல்களும்
இறுகக் கோர்த்து இரு வளையங்களாகி
அவருடைய கணுக்கால்களைப் பிணைத்திருக்க,
இறைந்துகிடந்த எழுதுகோல்முனைகள்
ஒன்றன்மேலொன்றாய்ப் பொருந்தி
ஆர்த்தெழுந்து கொண்டிருந்தன அரிய
எறிகணைகளாய்!


19) தெளிவுறவே அறிந்திடுதல்

மொழியால் கட்டமைக்கப்பட்ட ஆய்வுக்கூடத்தில்
மக்களுக்காகமக்களின் பெயரால்
அயராமல் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன பரிசோதனைகள்.
பன்றியாய் அறுக்கப்படுபவர்கள்,
மனிதர்களல்ல’ என்று அறிவிக்கப்பட்டு
புழக்கடையில் வீசியெறியப்படுகிறார்கள்.
நுரைத்துக் கொதித்துக் கொண்டிருக்கும்
அமிலக் கரைசலில் இடப்படுவதற்கு முன்
நீட்டப்படும் வெற்றுத்தாள்களில்
கைரேகை பதிக்க மறுத்துக் கேள்வி கேட்பவர்கள்
கையூட்டு பெற்றவராகச் சித்தரிக்கப்படுகிறார்கள்.
போட்ட விதைகள் மழையில்லாமல் முளைப்பதேது’,
என வாட்டத்துடன் வழிசெல்லும் ஏழை விவசாயியையும்
கோழையேஇந்தியன் என்று சொல்லிக் கொள்கிறாயேகேவலம்
என நாவினால் சுட்டுப் பொசுக்குவார்கள் நல்லருஞ் சிந்தனையாளர்களும்.
இந்தியரெனில் நீர் மனிதராக இருக்கவியலாது’ என்பாரிடம்
மந்தையாக அன்றி மனிதராக
எப்பொழுது எவரும் இருக்கவிட்டிருக்கிறீர்கள் எம்மை?’
என்றவாறு வழி சென்றவாறு.




20) எல்லோரும் இந்நாட்டு மன்னர்...

மாதம் மும்மாரி பொழிகிறது என்கிறார்கள்
தம் மாளிகையில் சொகுசாய்
செயற்கை மழை பொழியச் செய்தவண்ணம்...

விளைச்சல் அமோகம் என்கிறார்கள்
வேளாண்நிலங்களில் களைபெருக
செயற்கையுரங்களைத் தாராளமாய்த் தூவியபடி....

மேவிய ஆறு பல ஓடும் மண் என்கிறார்கள்
பன்னாட்டு நிறுவனங்களுக்கு நதிநீர்களைத்
தாரைவார்த்தபடி.

மக்கள் நலவாழ்வு உறுதியாகிவிட்டது என்கிறார்கள்
கட்டணக் கழிப்பறைகளில்
மலசலம் வழிய.

குடிசைகளே இல்லாமல் செய்துவிட்டோம் என்கிறார்கள்
சேரிப்பகுதிகளை நொடிப்பொழுதில் இடித்துத் தள்ளி
காரியம் முடித்தபடி.

மாற்றிட வசதிகள் தரப்படுகின்றன தொலைதூர வனாந்திரங்களில்.
மீண்டும் முதல் எட்டிலிருந்து பட்டுத்தீர வேண்டும்
அனாதரவான மக்கள்.

இருக்கும் வரை மதிக்கப்படாத மக்கள் உயிருக்கு
விபத்தில் இறந்துபோனால் விலைநிர்ணயம் செய்கிறார்கள்.
பேருந்து எனில் சில ஆயிரங்கள்விமானத்திற்கு சில லட்சங்கள்.

திக்கற்ற மக்களுக்குத் துணை நாமே என்கிறார்கள்
மின்கம்பிவேலிக்குள் பிணைத்துவைத்து
உக்கிப் போகச் செய்தவண்ணம்.

எல்லாரும் இந்நாட்டு மன்னர்களே என்றவாறு
முற்றுகையிட்டு அழித்தொழித்துக் கொண்டிருக்கிறார்கள்
மாமன்னர்களும் மகா-மெகாச் சக்கரவர்த்திகளும்.                       

21)  தொலைக்காட்சி- 1

குளிரூட்டிய அறையில்,
உலக நடப்புகளை அலசியாராயும்
செய்தி அலைவரிசை நிகழ்ச்சியொன்றில்,
நான்கு ஆண்களும் இரண்டு பெண்களும் பங்கேற்றுப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
கையுறை அணியாத குறையாய் ஆண்களெல்லாம்
கழுத்து முதல் கால் வரை குளிருக்கு வாகாய்
இழுத்துப் போர்த்துக் கொண்டு
அறிவே உருவாய் அமர்ந்திருக்க,
பெண்களிருவரும்
ஒலி-ஒளி ஊடகங்களின்
கர்ணகடூர கலாச்சாரப் பேருரைகளுக்கப்பால்
நுகர்வுப் பண்டங்களாக்கப்பட்டவர்களாய்
எத்தனை முடியுமோ அத்தனை திறந்தமேனியராய்
அமர்ந்திருந்தனர்
அல்லது
அமர்த்தப்பட்டிருந்தனர்.
தன் அழகை மற்றவர்கள் ஆராதிப்பதாய்
 இறுமாந்து அமர்ந்திருந்தவளுக்கு
அல்லது
மூளைச்சலவை செய்யப்பட்டிருந்தவளுக்கு
உறைக்காத குளிர்
மற்றவளுக்கு முதுகுத்தண்டில் சில்லிட்டது.
வேலைக்குச் சேர்ந்த இடத்தில் தனக்கு ‘நிமோனியா’ வரச் செய்ய
சதித்திட்டம் தீட்டப்பட்டதாய் கருத்து தெரிவித்து
பணியிடச் சூழல் பாதுகாப்பு குறித்து
வழக்குத் தொடர முடிவெடுத்து
எழுந்து நடந்தாள் திரைக்கப்பால்.


 தட்டில் கல்லொன்று
ஒரு தட்டில் முள்ளொன்று
ஒரு தட்டில் பல்லொன்று
ஒரு தட்டில் சொல்லொன்று
என ‘ஹாட் க்ராஸ் பன்’ பாடிக் கொண்டே வைத்தாள்.
பின்
இந்தக் கல் தான் அணுகுண்டு-
இந்தத் தட்டில் சாப்பிடுபவரைத் தலைவெடித்துச்
சிதறடிப்பதற்கு;
இந்த முள் நச்சு முள்-
இந்தத் தட்டில் சாப்பிடுபவரின் தொண்டையில் சிக்கி
நீலம் பாரிக்கச் செய்வதற்கு;
இந்தப் பல் இஷ்ட தெய்வத்திற்கு
(அம்மா – நம் இஷ்ட தெய்வம் எது – சொல்லேன்)
பலி கொடுத்துச் செய்வினை செய்யப்பட்டது.
இந்தத் தட்டில் சாப்பிடுபவர் இருதய நோயால் இறந்துபோவார்.
இந்தச் சொல் இனியான மொழியின் ஆனா.
இந்தத் தட்டில் சாப்பிடுபவருக்கு இனி ’கெட்ட’ வார்த்தைகளே
நல்லவையாகும்.
உம், சீக்கிரம் சாப்பிடுங்கள்
நான் பார்க்க வேண்டும்”, என்றாள்
வண்ணத்தொலைக்காட்சி நாடகங்களினூடாய் வளர்ந்துவரும்
சின்னஞ்சிறுமி.

22.தொலைக்காட்சி - 2
 
உணவருந்தும் மேஜையில்
எல்லோரும் வட்டமாக அமர்ந்து சாப்பிட வேண்டும்
என்று அடம்பிடித்தாள் சிறுமி.
சதுர வடிவ மேஜையை எப்படி வட்டமாக்குவது என்று
வேடிக்கையாகக் கேட்டவரிடம்
சதுரத்திற்கு சதுரம் தான் வட்டம் என்றாள் திட்டவட்டமாய்.
அறிவுள்ள பெண் தான்!
எல்லோரும் அமர்ந்ததும்
ஒருஞானமே சூன்யமாகிப் போய் விட்டால்
நற்கதியேது ஆன்மாவுக்கு?

 கொட்டு முரசே,திக்கெட்டும் கொட்டு முரசே!
தன்முனைப்புத் திறனாய்வாளர்கள் கொட்டம் அடங்கவே!
விட்டு விடுதலையாவோம் எனக் கொட்டு முரசே!
ஒற்றைக் குரல் விமர்சனம் ஒழிக ஒழிகவே!!

23)  நீர்நிலம்

முப்பதாண்டுகளுக்கு முன்பு கல்லூரிச் சுற்றுலா;
 கோனை ஃபால்ஸ்.
அருவியின் தோற்றுவாய் காண மலையேற்றம்.
போகும் வழியெங்கும் பொடிக்கற்கள் இடறிவிட,
கவ்வும் பேரச்சம்.
மீள இறங்கும் நேரம் காற்று உந்த,
சிறு கற்களால்
மேலும் சீர்குலைந்தது பாதங்களின் பிடிமானம்.
ஒருவழியாக அடிவாரம் அடைந்து
தரையில் கால் பதித்ததும்
பால் வார்த்தது நெஞ்சில் அதன் திடம்.
நிலத்தை திடமென நம்பியிருந்தோம் ஒரு காலம்......

  23) நோய்நாடி

மின்ரயில்வண்டி நிலையத்தில்,
படியேறியிறங்கும் சந்திப்புப் புள்ளியில்
படுத்திருந்தாள் ஏழை மூதாட்டி.
இரு மார்பகங்களும் இரண்டறக் கலந்தொரு
பெரும்பாறைக்கட்டியாய் உருவெடுத்திருந்தன.
போவோர் வருவோர் பார்வைகளெல்லாம் பதறி
அப்பால் திரும்பிக்கொண்டிருந்தன அவசரவசரமாய்.
தன் மூடிய கண்களால் காலங்காலமாய்
உலகத்தை இருளச்செய்கிறது பூனை.
ஏழைகளை நோய் தின்றாலென்ன?
கொன்றாலும்தான் என்ன?
தெம்புடல் கொண்டிருந்த இன்னருங்காலத்தில்
யாருக்கு வாக்கப்பட்டாளோ? எத்தனை பிள்ளை பெற்றாளோ?
அன்பான மனைவியோ? அடங்காப்பிடாரியோ?
என்னவான மருமகளோ? ஏதான மாமியாரோ?
போங்காலத்தே விடாமல் துரத்திக்கொண்டுவரும்
விடையறியாக் கேள்விகள் இன்னும் நூறாயிரமோ,
இல்லை, விண்மீன்களின் எண்ணிக்கையாமோ...?
நோயில் வீங்கிப் பெருத்துக்கொண்டே போகும் முலைபாரம்
இல்லாமையிலும் இயலாமையிலும் பன்மடங்காய் வலிசேர்த்து சோர்ந்துபோகச் செய்ய,
மின்னும் நிராசைக்கண்களோடு படுத்துக்கிடந்தவளை
யார் சுமந்தாரோ? செல்வனோ? அந்நியனோ?
வண்டியைப் பிடிக்கும் அவசரத்திலும்,
வாழ்வைப் பிடிக்கும் அவசத்திலுமாய்
அவளைக் கடந்துசென்ற கால்கள் அனேகமனேகம்.
அவற்றிலிரண்டிற்குச் சொந்தக்காரி தான் இந்தக்
கவிதையை எழுதிக்கொண்டிருக்கும் நான்.

25) ஒரு புகைப்படத்தைப் பொருள்பெயர்த்தல்

பனி கனத்துப் படர்ந்திருக்கும் கடற்கரைச் சாலையில்
அவர்களிருவரும் நடந்துகொண்டிருக்கிறார்கள்...
இரண்டு ஆண்கள் அல்லது ஓர் ஆண் ஒரு பெண்....

மொட்டைமரங்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் உறைபனி
ஆயிரங்காத தூரத்திற்கப்பால்
இங்கு விறைத்துப்போகச் செய்கிறது கைகால்களை.
வழக்கம்போல் எதிர்வினையாற்றும் மனம்
நுரைத்துப்பொங்குகிறது.

உலகம் உருண்டை என்பது பொய்;
அது ஒரு நீள்பாதை.
எதிரும்புதிருமாய் நாம் வந்துபோய்க் கொண்டிருக்கிறோம்
ஒரேமுறையான சந்திப்பில்.
இன்று நீ படுகொலை செய்யப்படுவதை நான்
பார்க்கநேராதிருந்ததற்காகவும்
நாளை ஒரு கடுஞ்சொல்லில் என் தலை கொய்யப்படப்போவதை
நீ அறியாமலிருப்பதற்காகவும்
நம் நன்றிகள் உரித்தாகட்டும்
நமக்கும் பிறர்க்கும்.

நாம் எட்டவிரும்பும் இலக்கு
இறந்துவிட்டவர்களின் உறைவிடங்களைக் கண்டறிவதும்
அவர்களை மீண்டும் இளமையாக்குவதும் தவிர்த்து
வேறு என்னவாக இருக்கவியலும்?

நிலவில் நீரிருக்கிறதா என்று பார்ப்பதை விட அவசியம்
அதற்கு வேறுவிதமான காலப்ரமாணம் உள்ளதா என்பதைக் கண்டறிவதும்,
அதை செப்பு, தங்க நாணயங்களும் , கரன்சியும், காசோலைகளும்
கட்டுப்படுத்தவியலாதவண்ணம் கட்டமைப்பதும்,
பல்லுயிர்களும் முழுவிழிப்போடு மரணத்திற்குள் மூழ்கி மீள
வழிசெய்வதும்,
வனவிலங்குகளும் மனிதர்களும் அருகருகாய்
இருந்துவருவதும்....

இன்னமும்
பனிகனத்துப் படர்ந்திருக்கும் கடற்கரைச்சாலையில் 
           அவர்கள் அடுத்த அடி  எடுத்துவைக்கவில்லை.                             

26)...கதைசொல்லும் தீபாவளி

உடலின் உபாதை மனதைப் பேதுறச்செய்கிறதோ....
மனதின் வேதனை உடலைப் பிடித்தாட்டுகிறதோ......
இருந்தாற்போலிருந்து
இனமறிந்தும் அறியாமலுமாய் ஒரு இருண்மையில்
குரல்வளைக்குள் திரளும் கண்ணீர்...

இன்று புதிதாய் பிறக்கவே விரும்பினாலும்
காலப்புழுதி மண்டித் தடமழித்துக் கிடக்கும் கடந்தகாலமும்
கடக்கவேண்டிய காலமும்,அவ்வப்போது வாழ்வின் காலடியில்
தொடர்ச்சியை விரித்துநீட்டத் தவறுவதில்லை.

தீப ஒளித் திருநாளின் முன்னும் பின்னும் மூச்சுமுட்டச் செய்யும்
ஒளி-ஒலியில் திணறியழுதுகொண்டிருக்கும் அன்றைய சிறுமி
தன்னை யெதிரொலித்தவாறு அழுதுகொண்டிருக்கும்
இன்றைய குழந்தைகளின் செவிகளிலெல்லாம் மென்பஞ்சை
இதமாய்ச் செருகும் பெருவிருப்பிடம் தஞ்சமடைந்திருக்கிறாள்.

சுனாமியை நகைச்சுவையாக்கும் ’விவரமான குரூரக்கலைஞர்கள்’ ஒருபுறமென்றால்
குழந்தையை அவமானப்படுத்துகிறோம் என்பது புரியாமலே அதன் அழுகையில் ஆனந்தங்காண்பவர்கள் எத்தனையெத்தனை...

வெடிகுண்டுகளின் பிடியில் உழன்று அதையே கனாக்கண்டிருக்கும் குழந்தைகள்
பட்டாசுச் சப்தத்திற்கு என்னவிதமாய் எதிர்வினையாற்றும்?

போன வருட தீபாவளிக்கும் இந்த வருட தீபாவளிக்கும் இடையே
உருண்டோடிய தலைகள் எத்தனை?
இறந்துவிட்ட தலைமுறைகள் எத்தனை?
மெய்யுருவில் இருப்பதைவிட தெய்வ உருவில் வலம் வருவதே
நலம் பயப்பது என்பதை அறியாதவர்களல்லவே அரக்கர்கள்...

வியாபாரத்தந்திரங்கள் தெரியாதுதான் என்றாலும்
ஒரு பட்டாசுக் கடை விரிக்கும் பெருவிருப்பு
எனக்குள் விசுவரூபமெடுக்கிறது.
அதில் வாங்கப்படும் பட்டாசுகளின் திரிகளில் தீயிட, பீறிட்டுக் கிளம்பும்
இன்னிசையில் மனம் வெளுக்க வழிசெய்திருப்பாள் முத்துமாரீ!
மத்தாப்புகளின் வர்ணஒளிர்வில் துலங்கும் ஞானக்கண்கள் !
ஏழைச் சிறுவனின் கையில் தொங்கிக் கொண்டிருக்கும் ’சாட்டையின்
கீழ் நுனி தகதகத்து எரிய இன்னும் எரியாதிருக்கும் பகுதி
நீண்டுகொண்டே போகும் !
ஒரு இன்சொல்லுக்கும், புன்சிரிப்புக்கும் இலவசமாய்த்
தரப்படும் தின்பண்டங்கள் !

விறுவிறுவென ஏறும் ஜன்னியாகும் எண்ணங்கள்
இன்னும் பலவாய்….
இன்னும் பலவாய்....

உடலின் உபாதை மனதைப் பேதுறச்செய்கிறதோ….
மனதின் வேதனை உடலைப் பிடித்தாட்டுகிறதோ….
இருந்தாற்போலிருந்து
இனமறிந்தும் அறியாமலுமாய்
ஒரு இருண்மையில்
குரல்வளைக்குள் திரளும் கண்ணீர்...

27)  750ஆவது ‘எபிஸோட் !

புதிதாக எதையாவது செய்தேயாக வேண்டும்.
அப்பொழுது தான் 750ஆவது எபிஸோடைக் கொண்டாட முடியும்.
இது குழந்தைகள் உலகம். குழந்தைகளே எதிர்காலம்.
பத்து வயதுச் சிறுமி மனைவியாகலாம் என்றால்
மாமியாராக முடியாதா என்ன?

இம்மி தர்க்க அறிவோடு
எப்படி முடியும்?” என்று எதிர்க்கேள்வி கேட்ட
உதவியாளரிடம்
நான் – லீனியர் இயக்குனர் கூறினார்:
முற்பிறவி மாமியார் இப்பிறவிச் சிறுமியானாள்!

பகுத்தறிவாளர்களின் சின்னத்திரைகளிலும்
பேய்நடனம் தான் என்றைக்கும்.


28)  யார் அறிவாளி?

ஒரே ஒரு ஊரிலே ஒரு அம்மா, ஒரு அப்பா.
ஓர் அம்மா, ஓர் ஊரு? அது வேறு!
இந்த அம்மா, அப்பாவுக்கு நான்கு பெண்கள்.
ஆக மொத்தம் (ஆளுக்கு) எட்டு கண்கள் கூடுதலாய்!
தீராத் திருமண ஏக்கத்தைத் தேக்கிய திருமஞ்சன விழிகள்
எப்பொழுதும் படபடத்தவாறிருக்க
அப்பழுக்கற்ற பொருத்தத்தில் அணிந்திருக்கும் புடைவையும்,
ரவிக்கையும்,
தப்பாமல் தினம் பழுதடையும் வாழ்க்கையுமாய்,
இரவல் குரல்களில் புலம்பித் தள்ளிக் கொண்டிருக்கும்
அந்த நால்வரில்
யார் அறிவாளி?
யாருக்கு நல்ல கணவன் அமைவான்?
இந்த இரு கேள்விகளுக்கும் சரியாக விடையளிப்பவர்
வீடு தேடி வரும் ___________________ !

யாருமில்லை
யாருக்கும் அமையாது
என்று மிகச் சரியாக விடைகளையெழுதிய கையோடு
கோடிட்ட இடத்தையும்
சீரியல் (கில்லர்) நாடகத்தார் சார்பாய்
இட்டு நிரப்பி அனுப்பிவைத்தேன்:

ஐந்தாவது பெண்ணின் அவலமும், அழுகையும்.

29) போகிற போக்கு...
வீதியெங்கும் மன்னர்கள் _
வெண்கொற்றக்குடையிழந்து
விரைந்தேகிக் கொண்டிருக்கிறார்கள்
வயிற்றுக்குச் சோறிட.

சோறு என்பதன் பொருள் சிலருக்குக்
கால்வயிற்றுக் கூழாகவும், இன்னும் சிலருக்கு
மூன்று வேளை உணவாகவும்,
மேலும் சிலருக்கு சோறை மீறிய
சிறு சிறு சொத்துக்களாகவும்,
மிகப் பெரும் செயலாட்சிப் பரப்பெல்லைகளாகவும்.....

வாகனங்கள் பெருகப் பெருக
சிறுத்துக்கொண்டே வரும் சாலைகள்
உருமாறிவிடக்கூடுமோ ஒரு நாள்-
எறும்புப்புற்றுகளாய்...?

நடைபாதைகளும் இருசக்கர வண்டிகளுக்கென்றான பின்
பாதசாரிகள் பதுங்குகுழிகளைத் தேடியலைந்தவாறு...

புதையுண்ட மனிதர்கள் நிரம்பிப் புதையுண்ட பதுங்குகுழிகளை
பின்னொரு காலத்திலேனும் அகழ்வாராய்ச்சியாளர்கள்
கண்டெடுக்கக் ஏலுமோ?

நகரும் வதைமுகாம்களாய் பேருந்துகள்.

வலப்புறம் அமர்ந்திருக்கும் வாலிபப் பெண்களின் செவிகளில்
வேரோடியிருக்கின்றன கைபேசிகள்.

சாலைவிதிகள் மீறப்படுவதே வாழ்க்கையான சூழலில்
மனித உரிமைகளும் ஆழக் குழிதோண்டிப்
புதைக்கப்பட்ட வண்ணம்...