Sunday, April 14, 2013


எனக்குப் பிடித்த என் கவிதைகள் – [5]
முதல் தொகுப்பிலிருந்து
(’அலைமுகம்’)




52. இரை விழுங்கித் திரை

உறுவாழ்க்கை வரமாக ஆர்யாபல்பு வேண்டும்.
பருவப்பெண்ணைத் துரத்தாதவன் பாதி ஆண்.
புலியைப் புள்ளிமானாக்கும் கான் கஸந்த்’.
கலிதீரும் கபில்தேவ் டேஸ்ட்சுவைக்கவும்.
நாலெட்டு ஐந்து நட்சத்திரங்களைப் பறித்து
வாயிலிட்டுக்கொள்ளாப் பிள்ளை வெத்துக்குப்பை.
நாலெட்டு கால்தேயாமல் நடக்க வேண்டும்_
நானூற்றுப் பதினெட்டு ரூபாய் செருப்பு. விருப்பு
வெறுப்புக்கு வெனிலாஎண்ணெய் பொறுப்பு.
பரு வராமல் காப்பதே பிறவிப் பெறும் பேறு.
பூசு ப்ளியரஸில். வேறு_
காசநோய் போக்கும் பாரு_
நேசமிக்க ஜிப்ஸி ஸோலா _ லாலல்லல்லல்லா......
பரிட்சையில் தேற, பெரிய வேலை சேரத் தேவை
வைட்டமின் ஆயிரங்கொண்ட வாலிக்ஸ்சேவை.
பெரியவரோ, சிறியவரோ _ துருப்பிடிக்கும் மூளை
பார்ன்மிட்டாஅருந்தாவிடில் நாளை,
நோகும் இடுப்புக்கு உண் டு நூறு தைலம்.
போக வரக் கிடைக்கும் அடுப்புக்கரித் துண்டு இனாம்.
சுகப்பிரசவமாகும் _ ’ஸின்சோப்பில் தோய்த்தால்.
செஸ்டஸேகாப்பியில் ஸப்தஸ்வரம் சங்கமம்.
தாய்எஸ்டேட்தேனீர் பருக
மாய்ந்துபோகும் மரணமும்.
இல்லறத்தின் சாரம் இளவரசியணியலங்காரம்.
அமரன் பட்டணிய அழியாப்புகழ் சேரும்.
கலங்கரை விளக்கமாகக் கண்மின்ன உண்பீர்
பொன்மிளகாய்ப்பொடியும், மசாலாப்பொடியும்.
பட்டிதொட்டியெங்கும் பறக்க உதவும்
குட்டியானைபபுள்கம்.
வாய்நாற்றம் அகல, விட்டு விலகும் நட்டமெல்லாம்_
வாங்குவீர் திக்கெட்டும் பரவிய கிருமிநாசினி புட்டி.
ஒரு நாளைக்குப் போதும் ஒன்று மட்டும். இள
முது நரை போக்கும் முடிச்சாயம் கொட்டித் தடவ
மறையும் மறுஜென்மக் கறை பல.
மூவாயிரம் ஷாம்பூக்களில் முக்காலமும் பிடிபடும்.
பகைதீரப் படியுங்கள் பேபியின் மடியில்’.
பகுத்தறிவைப் பெருக்கிக்கொள்ளச் சுற்றுவீர்
அதிர்ஷ்டச்சக்கரம்.
கதிமோட்சம் உஜாஜ், பஜாலா கைவசம்.
சுட்டுப்பொசுக்கும் வெயில் மசிய
எட்டு புட்டி ஜிஸ்னா குடித்து
கட்டிப்புரள வேண்டும், பேதி முட்ட
நட்ட நடு வீதியில்.
கற்க வேண்டும் கசடற
கலா கலா குலுக்கலா...
விலாவரியாய் துலங்கும் தொப்புள் கொப்புளங்களில்
விழியப்பிக்கொள்ளட்டும்.
எந்தக் குழி சுந்தரச் சுழி?
எழுதியனுப்புங்கள் இக்கணமே_
எக்கச்சக்கமாய் பம்ப்பர் பரிசுகளுண்டு_
உரல் முதல் விரல் வரை.....
_அரைகுறை வாழ்விதில்
இருள் பிரிந்தது முதல்
விரிவிரிந்த கண்களும் வினோபால்வெண்சிரிப்புமாய்
அரும்பெரும் அனர்த்தமாகும் ஒளியும் ஒலியும்.
தினம் அழுக்கூறி ஊஉறி ஊறி, ஐயோ_
மனம் வெளுக்க வழியில்லையே எங்கள் முத்துமாரி.


53. ரயில் ஸ்நேகம்

இடியின் முதுகில் என்னை எடுத்துச்செல்கிறது.
சில நேரம் சிங்கத்தின் உறுமற்சிறகுகளில்.
சமயங்களில் சாதுப்பாம்பாய், செல்லப்பூனையாயும்
சப்தமின்றி சீராட்டுகிறது.
ஜன்னல் கம்பிகளில் கண்பதித்துப் பார்க்க
என்னை யொரு மையப்புள்ளியாக்கிப்
பின்னுகிறது ஆரக்கால்.
கால் அரையாகும் வேகம் காண
வட்டம் முழுமையாய்_
நான் இருந்தவிடமே திரும்பிவிடுவேனாய்த்
தெரிகிறது.
திடுமென ராட்ஷஸன் கோட்டை மேல்
தடதடக்கிறது.
செவி நடுங்கும் அதிர்வில் கண்ட நேரம்
கொப்பளித்துப் பெருகுகிறது ஆறு_
வரண்டு வெடித்த படுகையிருந்து.
இலைகளே மலர்களாய் பூத்துக் குலுங்கும் திறம்
கலைநூதனம்; கண்மருந்து!
நுண்பச்சை நிறமாயிரம்; நூறாயிரம்.
காமிராக் கை மீறிய காற்றுப்பிரவாகம்.
ஸாரதாஸைஎள்ளிச் சிரித்த மனதில்
பிரமிப்பூட்டுகிறான் அயர்ன்ராண்ட்மனிதன்!
கையெட்டாத் தொலைவில் உதிர்கனவாய்
பறந்துசென்றது
பாப்பா மயில் போல் ஒன்று.
ஒவ்வொரு காட்சிவழியும் மின்னி மறைகின்றன
இளிந்திருக்கும் நட்சத்திர அட்சரங்கள்.
வாசிக்கப் புகின் விடுபடுகிறது காட்சி.
பார்க்கவே போதற்ற போது
வேர் கிளைகளுக்குள் போய்வருவதேது?
நிறையும் மனமெல்லாம் விரைவிரைச்சல் பிற
புரையேறித் ததும்பும் போதம்!
கரையெல்லாம் இருமருங்கும் கையசைப்புகளாகும்!
ஏழு கடல் ஏழு மலை தாண்டி
ஏகியபடி என் ரயில் _
பயணத்தின் முடிவு பயணமாக.


54. பயணம்

சுற்றமற்றவரின் சீரான ஸ்வாசவோசை சுற்றிலும்.
சுழலும் சக்கரங்களால் சாகரமாய் சப்தமிட்டுச்
சுருண்டோடும் சாலை.
எண்ணற்ற மரங்கள் கடுந்தவமியற்றுவதாய்
கண்ணயராது எனக்குக் கரமசைக்கக்
காத்து நின்றதுவாய்....
காற்சங்கிலி யறுத்தென் பின்னோடி வருகின்றன!
ஓசைகளை மீறிய நிசப்தமும் பேசுகிறது!
ஓட்டுபவனை ஊடுருவும் மனம்.
ஊருறங்கத் தேரிழுக்கும் அனாதையாய்,
ஆண்டையாய் அழவைக்கிறான் என்னை!
பழகிய ஓசைகளும் தடங்களும்
படுத்துமோ அவனையும்...?
நேர்ப்பார்வையில் இறுதியின்றிப் பெருகும்
தார்ச்சாலை ஜனனமாய்....
கனத்த இருள் உறவாய், தனிமையாய்....
ஒரு கண விருப்பில் அந்நிய ஸ்பரிசம் பிரியமாய் வருடும்.
இருவகை யுணர்வில் விழி நிறையும் கண்ணீர்.
அரிய, அறியாத நினைவுகள் அருகேகும்...
தூக்கம் கண்களைக் கீழிறக்க
தருணமிதைத் தொலைக்கலாகாத் தாக்கம்
தூக்கி நிறுத்த _
வழியும் பொழுதும் கழிந்தவாறு...கழிந்தவாறு.....


55. அரைவட்டங்கள்

வழி மறந்த குழந்தைகளாய் ஆனபோதும்
கற்களைக் கெந்தியும் காற்றுக்கு முகமேந்தியும்
மேற்பறக்கும் சிறகினந் தன்
நீள அகல நிறமாய்ந்தும்
தலைகீழ்க் கடலாய் வான் கண்டு
அலைநீந்தும் விண்மீன் காணப் புகுந்து
அங்கிங்கெனாதபடி
சூழலை ஆயபுலனனைத்தாலும் நீள
உள்ளிழுத்தபடி
நின்றும் திரும்பியும் நாசி சுருக்கியும்
கண்விரிந்தும் சென்றபடி யிருக்கின்றன
உள்செல் வழி சொல் நினைவு.
அள்ளிக்கொள்ளு முன் அகன்றேகி
துள்ளி ஒளிகிறது மரம் பல பின்_
கள்ளமாய் எனைப் பார்த்துக் கண்சிமிட்டியபடி.
ராதை யசோதை கண்ணன் குழலெனக்
குழம்பித் தளும்புகிறது மனம்.
எங்கோ ஒரு பானையில் வெண்ணெய் குறைகிறது.
ஏதோ ஒரு நதிக்கரையில் துணியைக் காணவில்லை.
சர்வமும் நானே என சவடால்பேர்வழியாய்
வளர்ந்துவிடலாகா தென் செல்லப்பிள்ளை....
காலாதி காலத்தில்
கண்கலங்கிப் பிரிவது காபூலிவாலாவுக்கு.
கைகொட்டித் திரிவது குழந்தைக்கு.

56.காயலான் கடை

கல்லும் சிலையும் கணமொரு விலையும்
பூட்டும் சாவியும் ஸ்விட்சும் ஸ்பானரும்
சுத்தியலுமாய்
ஏதில்லை இங்கு தான்!
சட்டையும் வேட்டியும் ஈட்டியும் சாட்டையுமாய்
சூரியன்கீழ னைத்தும் உண்டு காண்!
பூட்டைப் பூட்டிக்காட்டப் பூட்டுகிறது;
திறக்கிறது. வாங்கிப்பூட்டத்
திறக்கிறது; பூட்டவில்லை; திறக்கவில்லை.
மார்பில் குத்தி  முதுகில் வெளிவரும் ஈட்டிக்கூர்வலி.
தொட்டுத் தடவப் பெறும் உதிரத்துளி
உத்தரவாதம்.
அந்தகாரத்தில் பதியும் கையிடமெல்லாம்
ஸ்விட்ச். அனாதிகால வெளிச்சம் கண்பறிக்கும்.
வாயில்களைத் தேடிச் செல்லும் திறவுகோல்கள்
கைகளைத் தவறவிடும். உருகலைத் திருகி
விடும் ஸ்பானர். ஆணியறைந்து
சாயுங் காலத்தை நிறுத்துப் பார்க்கும் சுத்தியல்.
நினைவில் கூர்மழுங்கியும் மழுங்காது மிருக்கும்
கத்தித் துரு காத்திருக்கும்
காயத்தைக் கீறவும், வடுவைத் திரும்பக்
கசியச் செய்யவும்.
தோள்களைப் பார்த்திருக்கும் சிறகுகளும், சிந்துபாத்
கிழவர்களும், சூட்சுமநாடிகளுக்காய்
சாட்டைகள், சட்டை, வேட்டி யுயிர்த்
திரைச்சீலையாய்...
சொப்பனப் பூக்களும், சொப்பு மாக்களும்
சொல்லக் கூடாதனவும், சொல்லி மாளாதனவும்
செய்யக் கிடைக்காதவையும், செய்து முடிக்காதவையும்
அள்ளியள்ளியள்ளி
எடுத்து நிறுத்து ஏற்றிக் குறைத்து
என்னை நானே கொண்டுங் கொடுத்தும்
ஏலத்தில் விட்டெடுத்த படி
பேரம் படியாமல் நேரம்
தறிகெட் டோடஓட
கடை மூடலாற்றாமல்
நாளுங் கூவும் சந்தைப் பாங்கு
நாவடங்காது மாதோ.

57. கூண்டுராஜ்யம்

எப்பொழுது வெளியேறினேன், எதனால்
எதுவொன்றும் நினைவில்லை.
கூண்டுராஜ்யம் துறந்து பரதேசியான
சோகம் மட்டும்
ஈரம் மாறா அனலாய்...
தூரத்தே தெரியும் கூண்டில்
பேரரசனும் பிரஜையுமாய் போரின்றி வாழ்ந்திருந்தேன்.
தூரத்தே தெரியும் என்  கூண்டு.
சேர வழியின்றி இடையோடும் வெளி.
முடிந்தாலும் கூண்டுக் கதவடைத்திருந்தால்...?
உடைத்துத் திறக்க உள்நுழைவார்கள் வழிப்போக்கர்கள்.
கூண்டற்ற கூண்டு வேண்டாதது.
கூண்டு நான் விட்ட இடத்திலேயே இருக்கிறதோ?
இல்லை, இடம்பெயர்ந்துவிட்டதோ அதுவும்?
நானில்லாமல் தானியங்காக் கூண்டு அது.
பின்னொடு அருவமாய் வருவதாய்...
திரும்பிப் பார்க்கிறேன்.
விரும்பினால் இங்கொரு கூண்டமைத்தும் இருக்கலாம். 
கூண்டு வருவது பின்தொடர்ந்தா? தொற்றிக்கொண்டா?
உறுத்துப்பார்க்க, உறுப்புகள் மறைந்து
வரிவரியாய் இரும்புக் கம்பியிட்ட கூண்டு விரைவதாய்...