Tuesday, November 15, 2011

பயணக்குறிப்புகள் - ரிஷியின் 10 கவிதைகள்

பயணக்குறிப்புகள்

                         _ ரிஷி
1
ஒருவர் ஒன்றை மொழிந்ததுதான் தாமதம்
அந்த இன்னொருவரின் கை
வழக்கம்போல் வீறிட்டெழுந்துவிடும்!
வெறிகொண்ட பரவசத்தில் அவர் உடல் துடித்தெழ
கூறப்பட்டதை தனக்குரிய விதத்தில்
பொருள்பெயர்த்துத் தந்துவிடும்
அவர் வாய்
பல வண்ணங்களில்
பிறழ்வாய்
பிறவாய்.
சகபயணிகளில் இது ஒரு வகை.
பரவலாய் காணக்கிடைப்பதுதான்.
ஒரு கேள்வியை இடைமறித்து
கச்சிதமாய் தவறான விடையளிக்கும்
பரிதாபத்திற்குரிய மே[ல்]தாவித்தனம்.
தம்மைக் கதிரோனாய்
 காவ்யாசானாய்
கருதிக்கொள்வதும் காட்டிக்கொள்வதுமாய்
இரவல் வெளிச்சங்கள் நம்மை வழிநடத்தப் பார்க்கும்.
விழிப்போடிருக்கவேண்டும்.


2
உன்னுடைய எண்ணங்களை கைபோன போக்கில் வெட்டி
கண்ணுக்குப் புலனாகாத தட்டொன்றில் பரப்பி
நீட்டுகிறாய் என்னிடம்.
ஆப்பிள்துண்டுகளாகவோ ஆரஞ்சுச்சுளைகளாகவோ
ஆர்வம்பொங்க அவற்றை நான்
அள்ளியெடுத்துக்கொள்ளவேண்டும்,
அதற்காய் காலத்திற்கும் நன்றியோடிருக்கவேண்டும்
என்பது உன் எதிர்பார்ப்பு.
எனக்குத் தெரியும்தான்.
அவ்விதம் செய்யாவிடில்
என்னையோர் எதிர்மறை கிளர்ச்சியாளராய் குற்றஞ்சாட்டி
நடுவீதியில் நாயாய் கல்லடி படச்செய்வாய்.
அதுவும் தெரியும்தான்.
என்றாலும்
மாற்றுச் சிந்தனைகள் தரும்
காற்றும் ஒளியும் ஊற்றும்
என்னுள்ளே
முகிழ்த்து மலர்ந்து மணம்வீசிக்கொண்டிருக்க
உன்னை மறுத்து முன்னேகுவதே
`என் னுயிரின் உயிர்ப்பாய்.


3
அவருடைய கால்களில் அவர் நடந்துகொண்டிருந்தார்.
தேடிச் சென்று இடைமறித்த வித்தகர்
முன்னவரின் கால்களைப் போலவே தனக்கும்
பாதங்கள் இரண்டும் பத்துவிரல்களும்தான் என்றாலும்
அவர் போகும் தொலைவும்
தான் போகும் தொலைவும் ஒன்றல்ல என்றார்.
”கண்டிப்பாக. பயண இலக்குகளுக்கேற்ப வேறுபடும் தொலைவும்; மேலும்
தொலைவின் தொலைவு கிலோமீட்டர்களில் அடங்காதது”, என்று
முன்னவர் மொழிய
’விவரம் தெரிந்த ஆசாமிதான் போலும்’ என்று
வழிவிலகிச் சென்று விட்டார் பின்னவர்
பின்னங்கால் பிடரியில் பட ஓட்டமாய் ஓடி!


4
குருவி தென்படாத இயற்கைச்சூழலினூடாய்
பயணித்துக்குக்கொண்டிருக்கும்போதும்
கவண்கல்லைக் கையிலெடுத்துக் குறிபார்த்துச் சென்றால்
கல் இடறி காலில் காயம்படத்தான் செய்யும்.
சுயநலம் கருதியேனும்
சகவுயிர்களை நல்லவிதமாக நடத்தப் பழகு.
’சகோதரத்துவம் மனிதரிடமே வராத போது
மிருகங்களிடம் எப்படி வரும்’ என்று எதிர்க்கேள்வி கேட்கிறயா?
பதில்சொல்லக் காத்திருக்கின்றன வழியெங்கும்_
புதைகுழிகளும் பேரழிவுகளும்.


5
கவியும் இருளில் சில சமயங்களில்
நிலாவாகிவிடுகிறேன் நான்!
இரு இரு –
கனிந்து மெழுகென உருகும் என்னிடம்
சந்திரனை இரவல் ஒளியாக உண்மையுரைத்து
எந்தப் புண்ணியமுமில்லை; புரிந்துகொள்.
ஒரு தண்ணணைப்பு அருள்பாலிக்க
பறக்கத் தொடங்குகிறேன்!
பரிகசிப்பதை சற்றே நிறுத்தி
முயன்று பார்.
மயிலாகிவிடக்கூடும் நீயும்!


6
நடக்கும் கால்களின் தாளகதியும்
ஓடும் கால்களின் தாளகதியும்
ஒருபோலல்ல.
புரிந்துகொள்ள
 நீ நடந்திருக்கவும் ஓடியிருக்கவும் வேண்டும்.
அல்லது, நடப்பவரை ஓடுபவரை பார்த்திருக்கவேண்டும்.
எதையுமே செய்யாமல் இயந்திரகதியில்
பரபரபர பப்பரவெனப் பயணமாகும் உனக்கு
பிடிபடுமோ இசையும் நடனமும்?


7
முன்னேகியவாறு இருப்பது மட்டுமே பயணம் என்று
சொன்னது யார்?
கைதவறிக் கீழே விழுந்துவிட்ட கைக்குட்டையைக் குனிந்து எடுக்க,
யதேச்சையாக அந்தக் குளத்தின் நடுவே தட்டுப்பட்ட
கண்கொள்ளாப் பூவை விழிவழியே போய் தீண்டிப் பரவசமாக,
என்றைக்குமாய் பிரிந்துசெல்பவர் முதுகை
இறுதியாய் இன்னொரு தடவை
இதயத்தில் பெருகும் வலியோடு பார்க்க,
தூர்த்துப்போய்விட்ட நீர்நிலையில்
வெள்ளம் பெருகிய நாளில்
மீண்டும் கால்நனைக்க,
அன்றொரு நாளின் ஆறாக்காதல் அரவணைப்பை
திரும்பவும்
அனுபவங்கொள்ள....
பின்னேகுவதும் பயணத்தின் ஓர் அம்சமாய்
ஊசலாடும் காலத்தின் ’பெண்டுலம்’ அசைந்தவாறு.


8
கும்மிருட்டு.
குறுகலான பாதை.
இருமருங்கும் நெருஞ்சிமுட்ப்புதர்கள்.
கைவிளக்கைக் கொண்டுவராமல் போய்விட்டோமே
என்று கலங்கி நிற்கையில்
எங்கிருந்தோ வந்த மின்மினி
கண்ணிமைப்போதில்
சன்னமாய் ஆறின் பரிமாணங்களை
அளந்துகாட்டிவிடுகிறது!
சில நேரங்களில் நெருப்புக்கோழியும் கூட!!


9
வலப்புறம் பிரம்மாண்டமான கோட்டையிருந்தது.
இடப்புறம் நீண்டு நெளிந்து சுழித்தோடிக்கொண்டிருந்தது ஆறு.
’எல்லா நீரும் ஒருபோல; எனில்,
ஒவ்வொரு கோட்டையும் தனித்தன்மையானது.
எனவே, கோட்டைக்குப் போய் பார்த்துவிட்டு வரலாம் என்றார் ‘இவர்’.
‘பாரபட்ச சமூகத்தைப் பறைசாற்றுவதைத் தவிர
வேறென்ன உண்டு கோட்டையில்?
எனில், பிரதிபலன் எதிர்பாரா ஆறு
தியாகத்தின் மறு உருவம்; நிரந்தரத்தின் நிதர்சனம்!
இயற்கை நமக்களித்திருக்கும் மகோன்னத ஆடி!
இன்னும் என்னென்னவோ...
ஆற்றங்கரையில் அமர்ந்தாலே போதும்- வாழ்க்கை
பொருளுடைத்தாகும்’
என்றார் ‘அவர்’.
பயணத்தையே வண்ணமயமாக்கிக்கொண்டிருக்கின்றன
கலைடாஸ்கோப் கோலங்கள்!


10
மலையிலும் சுவர்களிலும்
மின்சார ரயிலின் உட்புறங்களிலும்
கீறப்பட்ட பெயர்களை
சிரிப்பும் குறுகுறுப்புமாய்  வாசித்தவாறு
போய்க்கொண்டிருந்தனர் பயணியர்.
கவனமும் அக்கறையுமாய் தேடும் கண்களுக்கு
தட்டுப்படக்கூடும்
காற்றில் செதுக்கப்பட்டவையும்!
தென்றலும் புயலும் பேச்சும் மூச்சுமாய்
என் உன் வாழ்வெல்லாம்
காற்று வெளியிடை கண்ணம்மா....!


[நன்றி: திண்ணை]



Saturday, October 29, 2011

மகிழ்ச்சியைத் தேடி... _ ரிஷி

மகிழ்ச்சியைத் தேடி...
_ ரிஷி


ரம்பமும் முடிவும் காணலாகா வாழ்க்கையொன்று
என் கண் முன்.
அன்புமயமான அந்தத் தகப்பனின் கைபிடித்திருக்கும்
பிள்ளையோடு பிள்ளையாய் போகத் தொடங்குகிறேன்.
அவனை விட்டுப் பிரிந்துசென்ற மனைவியாகி
மீண்டும் அவனைத் தேடிவந்து முத்தமிடுகிறேன்.
அந்தக் கண்களில் குத்திநிற்கும் முட்களையெல்லாம்
வலிக்காமல் ஒவ்வொன்றாய் பிடுங்கியெறியும் வழிதான் தெரியவில்லை.
விரையும் வேகத்தில் ராணுவ வீரனின் பொம்மை கைநழுவி
சாலை நடுவில் விழுந்து விபத்துக்குள்ளாக,
பேருந்திலிருந்து ஏங்கித் திரும்பும் சிறுவனின் விழிகளில்
நிறையும் நிராதரவில், குற்றவுணர்வில், உறவைப் பிரிந்த தவிப்பில்
இன்றும் நேற்றும் நாளையும் சிறைச்சாலையாகிவிடுகிறது உலகம்.

கிழ்ச்சியைத் தேடி மகனை தோள்மீது சுமந்தபடி
நாளெல்லாம் ஓடித் திரிகிறான் க்ரிஸ்.
தினமும் தங்கவும் தூங்கவும் இடமில்லாமல்
அறைதேடி அல்லாடும் வழியெல்லாம் சிலுவைகள்.
அவரவர் உலகங்களை அன்பிணைக்க
இரத்ததானம் அளித்துப் பெறும் பணத்தில்
மகனுக்கு விருந்தளித்து மகிழ்பவன் மீண்டும் ஓடுகிறான்.
வேலை கிடைத்த மகிழ்ச்சியில் மகனை மார்போடணைத்து
ராஜகுமாரனாக்குகிறான்!
அடுத்தவேளை சோறுக்கே வழியில்லாத நாளிலும்
ஆளரவமற்ற இரயில் நிலையத்தில்
மகனுக்காக
டினோசார் வாழும் காட்டையே நிர்மாணித்தவனாயிற்றே!

கோள்கள் எத்தனை?”
ஏழு
இல்லை, ஒன்பது வனராஜா யார்?”
கொரில்லா
இல்லை, சிங்கம்

தந்தையின் கேள்விகளுக்கு தயங்காமல் பதிலளிக்கும் மகன்.
[
தவறாய் இருந்தால்தான் என்ன!]

னில், அன்றொரு நாள் மகன் கேட்கும் கேள்வியில்
கதிகலங்கி நிற்கிறான் தந்தை:
அம்மா என்னால் தான் பிரிந்து போனாளா?”
இல்லை, அம்மா தன்னால் தான் போனாள்”.
நீ விரும்பினால் குகைக்கே திரும்பிவிடலாம்”, என்று பரிவோடு
கூறுகிறது பிள்ளை.

வெறுமே கடற்கரைக்குச் சென்றோம்-
எல்லாவற்றிலிருந்தும் தொலைவாக;
ஏமாற்றத்திலிருந்து வெகுதொலைவாக
என் வாழ்க்கையின் இந்தப் பகுதி
இந்தச் சின்னஞ்சிறு பகுதியே
மகிழ்ச்சியென்று அழைக்கப்படுகிறது
என்கிறான் க்ரிஸ்.

ன்ன நடந்தாலும் சரி, நீ செய்தது அற்புதமான காரியம்
நல்லபடியாக கவனித்துக்கொள் உன்னை
என்றவரை
வேண்டி விரும்பி வழிமொழிகிறேன் நானும்.

காரணம் புரியாமல் விழிநிரம்பும் கண்ணீர்
க்ரிஸ்ஸுக்காகவும் எனக்காகவும் உங்களுக்காகவும்
கருணை செய்யட்டும் காலம்.
[* சமர்ப்பணம்: The Pursuit of Happy[i]ness திரைப்படத்திற்கும் அதில் நடித்த Will Smith மற்றும் அவருடைய மகன் Jade Smithற்கும்]

Friday, August 5, 2011

ரவீந்திர நாத் தாகூர் எழுதிய சிறுகதை - ஆங்கிலத்திலிருந்து தமிழில்- லதா ராமலிருஷ்ணன்

மொழிபெயர்ப்புச் சிறுகதை:
முன்பொரு காலத்தில் ஒரு மன்னன் இருந்தான்.
ஆசிரியர்: ரவீந்திரநாத் தாகூர்
ஆங்கிலத்திலிருந்து தமிழில் : லதா ராமகிருஷ்ணன்







"முன்பொரு காலத்தில் ஒரு மன்னன் இருந்தான்



நாம் குழந்தைகளாக இருந்தபோது அந்த தேவதைக் கதையில் வரும் மன்னன் யார் என்று அறிந்துகொள்ள வேண்டிய தேவையிருக்கவில்லை. அவன் ஷிலாதித்யா என்று அழைக்கப்பட்டானா அல்லது ஷாலிபான் என்று அழைக்கப்பட்டானா என்பதோ அல்லது அவன் காசியில் வாழ்ந்தானா அல்லது கனௌஜில் வாழ்ந்தானா என்பதோ ஒரு பொருட்டாக இருக்கவில்லை. ஒரு ஏழு வயதுச் சிறுவனுடைய மனதை ஆர்வத்திலும், உற்சாகத்திலுமாய் படபடக்க வைத்ததெல்லாம் இந்த ஒரேயொரு அப்பழுக்கற்ற உண்மை மட்டுமே: இந்த நிஜங்களிலெல்லாம் ஆகச் சிறந்த நிஜம்: முன்பொரு காலத்தில் ஒரு மன்னன் இருந்தான்”.
ஆனால், இந்த நவீன யுகத்தைச் சேர்ந்த வாசகர்களோ இன்னும் துல்லியமான வர்களாகவும், இன்னும் அதிகத் துல்லியத்தன்மையை விரும்புபவர் களாகவும் இருக்கிறார்கள். ஒரு கதைக்கு இப்படிப்பட்ட ஒரு ஆரம்பத்தைக் கேட்க நேர்ந்தால் உடனே அவர்கள் அது குறித்து எதிர்விமர்சனம் செய்யத் தொடங்கிவிடுகிறார்கள்; சந்தேகப்பட ஆரம்பித்துவிடுகிறார்கள். தொன்மத்தில் தோய்ந்த அதன் தெளிவின்மைக்குள் அறிவியலின் ஊடுருவும் விளக்கைப் பாய்ச்சி கேள்வியெழுப்பு கிறார்கள்: “எந்த ராஜா?
கதைசொல்லிகளும் தங்கள் பங்குக்கு இன்னும் கச்சிதத் தன்மையைக் கைக்கொண்டுவிடுபவர்களாக மாறியிருக்கிறார்கள். அவர்கள் இப்போதெல்லாம் அந்தப் பழைய ‘திட்டவட்டத்தன்மையல்லாத வாக்கியம், “முன்பொரு காலத்தில் ஒரு மன்னன் இருந்தான் என்று சொல்வதோடு திருப்தியடைந்துவிடுவதில்லை. அதற்கு பதிலாக, ஒருஆழ்ந்த அறிவை வெளிப்படுத்தும் தோற்றத்தைக் கைக்கொண்டவர்களாய்          “முன்பொரு காலத்தில் அஜாதசத்ரு என்ற பெயரைக்கொண்ட ஒரு மன்னன் இருந்தான்”, என்று கதையை ஆரம்பிக்கிறார்கள்.
 என்றாலும், நவீன கால வாசகரின் ஆர்வம் அவ்வளவு எளிதாக திருப்தியடைந்துவிடுவதில்லை. தனது விஞ்ஞானக்கண்ணாடியின் வழியாய் கதாசிரியரைப் பார்த்து மலமலங்க முழிப்பவன் மீண்டும் கேட்கிறான்: எந்த அஜாதசத்ரு?
பள்ளிமாணவன் ஒவ்வொருவனுக்கும் இந்த விவரங்கள் கட்டாயம் தெரிந்திருக்கும்”, என்று கதாசிரியர் தொடர்கிறார். “ அதாவது, மொத்தம் மூன்று அஜாதசத்ருகள் இருந்தார்கள். முதல் அஜாதசத்ரு கி.மு 20ஆம் நூற்றாண்டில் பிறந்து இரண்டு வயது எட்டு மாதங்களாகியிருக்கும்போது, அத்தனை இளம்வயதிலேயே இறந்துபோய்விட்டான். அவனுடைய ஆட்சியைப் பற்றிய விரிவான தகவல்களைப் பெற எந்தவொரு நம்பகத்தன்மைவாய்ந்த வழியும் இல்லை என்பதை மிகுந்த வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன். இரண்டாவது அஜாதசத்ரு வரலாற்றாசிரியர்களுக்கு அதிகம் தெரிந்தவன். நீங்கள் புதிதாக வெளியாகியிருக்கும் சரித்திரத் தகவல் களஞ்சியத்தைப் புரட்டிப் பார்த்தீர்களானால்...
 இதற்குள் நவீன கால வாசகரின் சந்தேகங்கள் தீர்க்கப்பட்டுவிடும். தனது கதாசிரியரை நம்பினால் பாதகமில்லை என்று அவன் எண்ணுகிறான். அவன் தனக்குத்தானே இவ்வாறு கூறிக்கொள்கிறான்: இப்போது நமக்கு ஒரு அறிவை வளர்க்கும், நல்ல படிப்பினையைத் தரும் ஒரு கதை கிடைக்கப்போகிறது”.
ஹா! ஏய்க்கப்படுவதை நாம் எத்தனை ஆர்வமாக விரும்புகிறோம்! அறியாமையில் உழலுபவர் எனறு நம்மை நினைத்துவிடுவார்களோ என்ற ஒரு ரகசியப் பீதி நம் ஒவ்வொருவர் மனதிலும் குடிகொண்டிருக்கிறது. எப்படியும் முடிவில் நாம் அறியாமையில் உழலுபவர்களாகத் தான் முடிகிறோம், அதை ஒரு நீண்ட, தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதான சுற்றுவழியில் அதைச் செய்திருக்கிறோம். அவ்வளவுதான்.
ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு: “என்னிடம் எந்தக் கேள்விகளையும் கேட்காதீர்கள், நானும் எந்தப் பொய்களையும் உங்களிடம் கூறமாட்டேன்”. ஒரு தேவதைக் கதையை, மாயாஜாலக் கதையை கேட்டுக்கொண்டிருக்கும் ஏழு வயதுச் சிறுவன் அந்தக் கதையைக் கச்சிதமாகப் புரிந்துகொள்கிறான்: கதை சொல்லப்படும்போது அவன் தனது கேள்விகளைத் தன்னிடமே வைத்துக்கொள்கிறான். எனவே, அதன் தூய்மையான, அழகிய பொய்மையனைத்தும் ஒரு மழலையைப்போல் அத்தனை நிர்மலமாக, அத்தனை நிர்வாணமாக நிலைத்துவிடுகின்றன; உண்மையின் மறூருவமேபோல் அத்தனை வெளிப்படையாக அமைந்திருக்கின்றன; புத்துணர்ச்சியோடு குமிழிட்டுக் குதித்தோடும் நீரோடையைப்போல் அத்தனை தெளிவாக அமைந்திருக்கின்றன. ஆனால், நம்முடைய நவீனர்களின் சிந்தனையாழம் மிக்க, கற்றுத்தேர்ந்த பொய் அதன் உண்மையான பண்புநலனைப் போர்த்தியும், திரையிட்டு மறைத்தும் வைக்கவேண்டிய தேவையை உணர்கிறது. பொய்மையினை, பாசாங்கினை எட்டிப்பார்த்து அறிந்துவிடக்கூடிய அதிசிறிய சிறுதுளை எங்கேனும் கண்டுபிடிக்கப்பட்டால், அவ்வளவுதான், வாசகன் ஒரு அறிவுசால் வெறுப்புடன் அப்பால் திரும்பிக்கொண்டுவிடுகிறான். கதாசிரியர் மதிப்பழிக்கப்படுகிறார்.
நாம் சின்னப்பிள்ளைகளாக இருந்தபோது இனிமையான விஷயங்கள் எல்லாவற்றையும் நம்மால் புரிந்துகொள்ள முடிந்தது. ஒரு தேவதைக்கதையின், மாயாஜாலக்கதையின் இனிமைகளை நமதேயான, பிழைசெய்யலாகாத ஒரு அறிவியலின் மூலம் நம்மால் ஒரு தேவதைக்கதையின் இனிமைகளைத் துருவிக்கண்டுபிடித்துக்கொள்ள முடிந்தது. அறிவுத்திறன் போன்ற பயனற்ற விஷயங்களை நாம் பொருட்படுத்தியதேயில்லை. உண்மையைப் பற்றி மட்டுமே நாம் அக்கறைகொண்டிருந்தோம். நவநாகரீகம் பழகாத நம்முடைய சிறிய இதயங்கள் உண்மையின் பளிங்குமாளிகை எங்கே இருக்கிறது என்பதையும் அதை எப்படிச் சென்றடையலாம் என்பதையும் நன்றாகவே அறிந்திருந்தன. ஆனால், இன்று நாம் உண்மைவிவரங்கள் அடங்கிய பக்கங்களை எழுதவேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறோம். ஆனால், உண்மை என்பது இது மட்டுமே தான்: முன்பொரு காலத்தில் ஒரு மன்னன் இருந்தான்”.
கல்கத்தாவில் அந்த தேவதைக்கதை ஆரம்பமான அந்த மாலைவேளை எனக்குத் துல்லியமாக நினைவிலிருக்கிறது. மழையும், புயலும் இடைவிடாமல் தொடர்ந்துகொண்டிருந்தன. நகரம் முழுக்க வெள்ளக்காடாக இருந்தது. எங்கள் சந்தில் முழங்கால் உயரத்திற்கு நீர் இருந்தது. அந்த மாலை என்னுடைய ஆசிரியர் கண்டிப்பாக என் வீட்டிற்கு வர மாட்டார் என்ற ஒரு உறுதியான நம்பிக்கையைப் பிடிவாதமாகத்தக்கவைத்துக்கொண்டிருந்தேன் நான். தாழ்வாரத்தின் மறுகோடியில் இருந்த முக்காலியில் அமர்ந்துகொண்டு சந்துக்குள் பார்த்தவண்ணமிருந்தேன். மனது படபத்துக்கொண்டிருந்தது. ஒவ்வொரு நிமிடமும் பார்வையை மழைமீது பதித்தவண்ணம் இருந்தேன். மழை குறையத்தொடங்குவதுபோல் காணப்பட்டாதும் என் சக்தியையெல்லாம் திரட்டிக்கொண்டு பிரார்த்திக்கத் தொடங்கினேன்: “ கடவுளே, ஏழரை மணியாகும்வரை தயவுசெய்து இன்னும்கொஞ்சம் மழையை அனுப்பிவை. ஏனெனில், கல்கத்தாவின் ஒரு மூலையில் ஒரு மாலைவேளையில் ஒரு அனாதரவான பையனை அவனுடைய ஆசிரியரின் பிடியிலிருந்து விடுவிப்பதைகத் தவிர்த்து மழைபெய்வதற்கான வேறு எந்தத் தேவையும் இல்லை என்பதை நான் தயங்காமல் நம்பத் தயாராக இருந்தேன்.
என்னுடைய பிரார்த்தனைக்கு பதிலளிப்பதற்காக இல்லையானாலும், வேறு ஏதோ இயற்கைநியதியின் அடிப்படைச் சட்டதிட்டத்திற்குக் கட்டுப்பட்டதாய் மழை பிடிவாதமாகத் தொடர்ந்து பொழிந்தவாறிருந்தது.
ஆனால், அடக் கடவுளே, என்னுடைய டியூஷன் வாத்தியாரும் தன்னுடைய பிடிவாதத்தில் உறுதியாக இருந்தார்.
குறித்த நேரத்தில் மிகச் சரியாக சந்தின் அந்த வளைவில் முன்னேறி வரும் அவருடைய குடையைக் கண்டேன்.
என் மனதில் துளிர்த்திருந்த அந்த நம்பிக்கையின் மகத்தான குமிழ் வெடித்துச் சிதற என் மனம் தகர்ந்துபோனது. உண்மையாகவே சொல்கிறேன், இந்தக் குற்றத்திற்கு ஏற்ற தண்டனை என்ற ஒன்று மரணத்திற்குப் பிறகு கிடைக்க வழியுண்டெனில் என்னுடைய ஆசிரியர் நானாகவும், நான் அவராகவும் பிறப்பது நிச்சயம்.
 அவருடைய குடையைக் கண்டதுமே ஏன்னால் முடிந்த அளவு வேகமாக என்னுடைய அம்மாவின் அறைக்கு ஓடினேன். என்னுடைய அம்மாவும், பாட்டியும் எதிரெதிராக அமர்ந்துகொண்டு விளக்கொளியில் சீட்டுவிளையாடிக்கொண்டிருந்தார்கள். நான் அறைக்குள் ஓடிச்சென்று படுக்கையில், என்னுடைய அம்மாவின் அருகில், விழுந்தபடி கூறினேன்:
அம்மா, டியூஷன் வாத்தியார் வந்துவிட்டார். ஆனால், எனக்கு தலவலி மண்டையைப் பிளக்கிறது. இன்று எனக்குப் பாடம் நடத்தவேண்டாமே”.
முதிர்ச்சியற்ற வயதிலான எந்தவொரு குழந்தையும் இந்தக் கதையைப் படிக்க அனுமதிக்கப்படாது என்று நம்புகிறேன். அதைப்போலவே, இந்தக் கதை எந்தப் பாடப்புத்தகத்திலும், அல்லது பள்ளிகளுக்கான ஆதாரப்புத்தகங்கள் எவற்றிலும் பயன்படுத்தப்படாது என்றும் மனமார நம்புகிறேன். ஏனெனில், நான் செய்தது மிகவும் மோசமான செயல். அதற்கு எந்தவொரு தண்டனையும் ஒருபோதும் எனக்குக் கிடைக்கவில்லை. மாறாக, என்னுடைய மோசத்தனத்திற்கு மகத்தான வெற்றி மகுடமாகக் கிடைத்தது.
அம்மா என்னிடம் கூறினாள்: “ அப்படியா, சரி.”. பின், பணியாளின் பக்கம் திரும்பி, “ ஆசிரியரிடம் அவர் வீட்டிற்குத் திரும்பிச் செல்லலாம் என்று சொல்லிவிடு”.
அம்மா என்னுடைய தலைவலி குறித்து பெரிதாகப் பொருட்படுத்தவில்லை என்பது மிகத் தெளிவாகவே தெரிந்தது. அவள் என் மீது மேற்கொண்டு கவனம் செலுத்த முற்படாமல் தன்னுடைய விளையாட்டைத் தொடர்ந்தாள். நானும், என்னுடைய முகத்தைத் தலையணையில் புதைத்துக்கொண்டு, மனங்கொள்ளா மகிழ்ச்சியில் சிரித்துத் தீர்த்தேன். நாங்கள் ஒருவரையொருவர் கனகச்சிதமாகப் புரிந்துகொண்டவர்களாயிருந்தோம். நானும், என்னுடைய அம்மாவும்.
ஆனால், ஒரு ஏழு வயதுச் சிறுவனால் நீண்டநேரம் நோயுற்றிருப்பதாகப் பாசாங்குசெய்துகொண்டிருக்கவியலாது, அது மிகவும் சிரமமான காரியம் என்பதை அனைவரும் கண்டிப்பாகத் தெரிந்துகொள்ளவேண்டியது மிகவும் அவசியம். ஒரு நிமிடத்திற்குப் பிறகு நான் பாட்டியைப் ப்டித்துக்கொண்டு, “எனக்கு ஒரு கதை சொல்லு பாட்டி”, என்று கேட்டேன்.
இதைப் பலமுறை நான் கேட்கவேண்டியிருந்தது. பாட்டியும், அம்மாவும் தொடர்ந்து சீட்டுவிளையாடிக்கொண்டேயிருந்தார்கள். என்னை சட்டைசெய்யவேயில்லை. இறுதியில் அம்மா என்னிடம் கூறினாள்: “ தொந்தரவு செய்யாதே பையா, நாங்கள் ஆட்டத்தை முடிக்கும்வரை காத்திரு”. ஆனால், நான் நச்சரிப்பதை நிறுத்தவில்லை.     பாட்டீ, கதை சொல்லு பாட்டி”, என்று திரும்பத்திரும்பக் கேட்டுக்கொண்டேயிருந்தேன். அம்மாவிடம் அவள் தன்னுடைய ஆட்டத்தை மறுநாள் முடித்துக்கொள்ளலாம் என்றும் ஆனால் பாட்டி அங்கே, அப்போதே எனக்குக் கதைசொல்ல அவள் கட்டாயம் அனுமதிக்கவேண்டும் என்றும் என்றும் கூறினேன்.
ஒரு வழியாக அம்மா தன் கையிலிருந்த சீட்டுகளை கீழே தூக்கியெறிந்தைவிட்டுக் கூறினாள்: “அவனுக்கு என்ன வேண்டுமே அதைச் செய்துவிடு. என்னால் அவனை சமாளிக்க முடியவில்லை”, என்றாள். ஒருவேளை, நாளை தன்னுடைய பிள்ளை எப்படியும் அந்த அபத்தப் பாடங்கள்க்குத் திரும்பிப்போய்த்தான் ஆகவேண்டும், ஆனால், தன்னை அப்படியொரு அலுப்பூட்டும் வாத்தியாரும், பாடமும் எதிர்கொள்ளப்போவதில்லை என்று மனதிற்குள் அவள் எண்ணியிருக்கக்கூடும்.
அப்படி அம்மா சொல்லி எனக்கு வழிவிட்டு விலகியவுடன் நான் பாட்டியிடம் பறந்துசென்றேன்! அவளுடைய கையைப் பிடித்துக்கொண்டு சந்தோஷம் தலைக்கேற ஆடியபடி அவளை என்னுடைய படுக்கையிலிருந்த கொசுவலைத் திரைக்குள் இழுத்துக்கொண்டேன். அங்கிருந்த திண்டுமெத்தையை எக்கச்சக்க மகிழ்ச்சியோடு என்னுடைய இரண்டு கைகளாலும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு மேலும் கீழுமாய் துள்ளிக்குதித்தேன். என்னுடைய பெரும் பரவசம் சற்றே நிதானத்திற்கு வந்ததும் < “ சரி பாட்டி, கதையை ஆரம்பி!”, என்றேன்.
பாட்டி கதை சொல்ல ஆரம்பித்தாள்: முன்னொரு காலத்தில் ஒரு ராஜா இருந்தார்.
பாட்டி கதையைத் தொடர்ந்தாள். “ அந்த ராஜாவுக்கு ஒரு ராணி இருந்தாள்”. இது நல்ல ஆரம்பம் தான். அந்த ராஜாவுக்கு ஒரேயொரு ராணி தான் இருந்தாள்.
தேவதைக்கதைகளில் வரும் மன்னர்களுக்குப் பொதுவாக ஏராளமான ராணிகள் இருப்பார்கள். இரண்டு ராணிகள் இருந்தார்கள் என்ற தகவலைக் கேட்டதுமே எங்கள் மனதில் உற்சாகம் மங்கிவிடும். ஏனென்றால் அவர்களில் ஒருத்தி கண்டிப்பாக துயரத்தில் ஆழ்ந்திருப்பாள். ஆனால், பாட்டியின் கதையில் மேற்படி அபாயம் கடந்துவிட்டது. அந்த ராஜாவுக்கு ஒரேயொரு ராணிதான் இருந்தாள்.
அடுத்து அந்த ராஜாவுக்கு பிள்ளைக்குழந்தையே இல்லை என்ற தகவல் நமக்குத் தரப்படுகிறது. ஏழுவயதில் பிள்ளைக்குழந்தை என்பதுஅத்தனை கவலையளிக்கக்கூடிய விஷயம் என்று நான் கருதவில்லை. அந்தப் பிள்ளை உருவாகிக்கொண்டிருந்திருக்கக் கூடும். அதேபோல், அந்த ராஜா தனக்கு ஒரு பிள்ளை பிறக்கவேண்டுமென்று பிரார்த்தித்து தவம் இயற்றுவதற்காகவும், பூஜைபுனஸ்காரங்கள் செய்வதற்காகவும் காட்டிற்குச் சென்றிருப்பதாகக் கிடைத்த தகவலும் என்னைப் பெரிதாகப் பரவசப்படுத்தவில்லை. என்னைக் காட்டிற்குள் அனுப்பிவைக்க ஒரேயொரு விஷயத்தால்தான் முடிந்திருக்கும். என்னுடைய டியூஷன் வாத்தியாரிடமிருந்து தப்பிப்பதுதான்!
ஆனால், அந்த ராஜா தன்னுடைய ராணியை அவளுடைய சின்ன மகளோடு தனியாக அரண்மனையிலேயே இருக்கவிட்டு தான் மட்டும் காட்டிற்குப் போய்விட்டார். அந்தச் சிறுமி ஓர் அழகான இளவரசியாக வளர்ந்திருந்தாள்.
பனிரெண்டு ஆண்டுகள் பறந்தோடிவிட்டன. இத்தனை காலமும் அந்த ராஜா தவநெறிகளில் மூழ்கியிருந்தார். தனது மகளைப் பற்றிய நினைப்பு அவரை அண்டவேயில்லை. அந்த இளவரசி யவனப்பருவத்தின் உச்சத்தை எட்டியிருந்தாள்.
அவளுக்குத் திருமண வயது கடந்துபோய்சிட்டது. ஆனாலும், ராஜா திரும்பிவந்தபாடில்லை. ராணி துயரமே உருவாக ஏங்கிச் சோர்ந்திருந்தாள். “என்னுடைய அன்புமகள் திருமணமாகாமலேயே இறந்துபோய்விடவேண்டுமா? அது தான் அவள் விதியா? என் நிலை எத்தனை கேடுகெட்டது. எல்லாம் என் தலைவிதி”, ” என்று வாய்விட்டு அங்கலாய்த்து அழுதாள்.
பின், அரண்மனையிலிருந்து ஆட்களை அனுப்பி ஒரேயொரு நாளாவது அரண்மனைக்குத் திரும்பிவந்து ஒரேயொரு இரவு தங்கிவிட்டு, ஒரேயொருவேளையாவது சாப்பிட்டுவிட்டுப் போகும்படி மன்னனை வேண்டிக்கேட்டுக்கொள்வதாக அவர்களிடம் சேதி சொல்லியனுப்பினாள்.
ராணி தன் கையாலேயே மன்னனுக்கு உணவு சமைத்தாள். மிகுந்த அன்போடும், அக்கறையோடும் அறுபத்துநான்கு உணவுவகைகளைத் தயாரித்தாள். ராஜா அமர்வதற்கென்று சந்தனத்தால் ஒரு இருக்கை தயாரிக்கச் செய்தாள். சமைத்த உணவுப்பண்டங்களை தங்கத்தட்டுகளிலும், வெள்ளிக்கிண்ணங்களிலும் பரிமாறிவைத்தாள்.  மன்னனுடைய இருக்கைக்குப் பின்னால் இளவரசி கையில் அழகிய மயில்தோகை விசிறியோடு நின்றாள். மன்னன், பனிரெண்டு வருடங்களுக்குப் பிறகு அரண்மனையில் இப்போது காலடியெடுத்துவைத்தார். இளவரசி, தன்னுடைய பேரழகால் அறைமுழுவதையும் ஒளிரச்செய்தவாறு, மயில்தோகையால்  அவருக்கு விசிறினாள். மன்னன் தன்னுடைய மகளின் முகத்தைப் பார்த்தார். பிரமிப்பில், உணவுண்ணவேண்டும் என்பதே அவருக்கு மறந்துபோய்விட்டது.
இறுதியில், ஒருவழியாகத் தன்னுணர்வடைந்தவராய் மன்னன் ராணியிடம் இவ்வாறு கேட்டார்: யார் இந்தப் பெண்? இவளுடைய அழகு பெண்கடவுளரின் திருவுருவாய் பிரகாசிக்கிறதே. இவள் யாருடைய பெண்?
ராணி தனது தலையில் அடித்துக்கொண்டு அழுதவாறே உரக்கக்கூறினாள்: “கடவுளே, எத்தனை கேடுகெட்டது எனது தலைவிதி! உங்களுக்கு நம்முடைய மகளையே அடையாளம் தெரியவில்லையா?
அதைக்கேட்டு ராஜா அதிர்ச்சியில் திக்குமுக்காடிப்போனார். இறுதியில், “என்னுடைய சின்னக்குட்டி மகள் ஒரு முழுப்பெண்ணாக வளர்ந்திருக்கிறாள்!”.
பின்னே... பனிரெண்டு வருடங்கள் உருண்டோடிவிட்டன என்பது உங்களுக்குத் தெரியாதா?
ஆனால், இவளுக்கு ஏன் நீ திருமணம் செய்துமுடிக்கவில்லை?”, என்று கேட்டார் ராஜா.
நீங்கள் இங்கேயில்லை. அப்படியிருக்கும்போது நான் இவளுக்கு எவ்வாறு சரியான மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுக்கமுடியும்?”, என்று பதிலளித்தாள் ராணி.
அதைக்கேட்டு ராஜாவுக்குக் கோபமும் பதற்றமும் ஏற்பட்டது. “ நாளைக்கு நான் அரண்மனையை விட்டு வெளியே வரும்போது என் கண்ணில் தென்படும் முதல் ஆள் இவளைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும்”, என்றார்.
இளவரசி தன்னுடைய அழகிய மயில்தோகை விசிறிக்கொண்டேயிருக்க, ராஜா சாப்பிட்டு முடித்தார்.
மறுநாள் காலை, ராஜா தன்னுடைய அரண்மனையை விட்டு வெளியே வந்தபோது ஒரு பிராம்மணரின் மகன் காட்டில் சுள்ளிகள் பொறுக்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தார். அந்தச் சிறுவனுக்கு ஏழு அல்லது எட்டு வயதிருக்கும்.
“என்னுடைய மகளை இவனுக்குக் திருமணம் செய்துவைப்பேன்”, என்று கூறினார் ராஜா.
ராஜாவின் கட்டளையில் யாரால் குறுக்கிட முடியும்? உடனே அந்தப் பையன் வரவழைக்கப்பட்டான். அவனும்  இளவரசியும் மாலைகளை மாற்றிக்கொண்டார்கள்.

இந்தக் கட்டத்தில் நான் பாட்டியை இன்னும் நெருக்கமாக அண்டிக்கொண்டு ஒரே ஆர்வமாகக் கேட்டேன்: “ அப்புறம் என்னாயிற்று?
என் மனதின் அடியாழத்தில் அந்த அதிர்ஷ்டக்கார, சுள்ளிபொறுக்கும்,  பையனுடைய இடத்தில் நான் இருந்தால் எத்தனை நன்றாயிருக்கும் என்ற எண்ணம் முனைப்பாக எழுந்தது. அன்றைய இரவு இடைவிடாமல் தூறிக்கொண்டிருந்த மழையின் இன்னொலியால் ரீங்கரித்துக்கொண்டிருந்தது.என்னுடைய படுக்கையருகில் எரிந்துகொண்டிருந்த மண்விளக்கு மங்கலாக இருந்தது. அவள் அந்தக் கதையைக் கூறிக்கொண்டிருந்தபோது  என்னுடைய பாட்டியின் குரலும் ஒருவித தாளலயத்தோடு இசைப்பதாய் ஒலித்துக்கொண்டிருந்தது. இந்த எல்லா விஷயங்களும் ஒன்றுகூடி வியப்புமண்டிய , எல்லாவற்றையும் எளிதில் நம்பிவிடுகின்ற, என்னுடைய மனதை, இன்ன காலம் என்று தெளிவாகச் சொல்லமுடியாத ஒரு காலகட்டத்தில் யாரென்று அறியாத ஒரு மன்னனின் சாம்ராஜ்யத்தில் புலர்ந்திருக்கும் அதிகாலையொன்றில் சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டிருப்பது நானே என்று நம்பவைத்தது. மறுகணம் நானும், பெண்கடவுளரைப் போன்ற தெய்வீக அழகோடு இருந்த அந்த இளவரசியும் மாலைகளை மாற்றிக்கொண்டோம். அவள் தனது கூந்தலில் ஒரு தங்கவளையம் அணிந்திருந்தாள். காதுகளில் தங்கத்தாலான அணிகள் இருந்தன. கழுத்தில் தங்க அணியாரமும், கைகளில் தங்கக் காப்புகளும், இடுப்பில் தங்க ஒட்டியானமும், கணுக்கால்களில் தங்கத்தாலான கொலுசுகளையும் அணிந்திருந்தாள்.
என்னுடைய பாட்டி ஒரு கதையாசிரியராக இருக்கும்பட்சத்தில் இந்தச் சிறிய கதைக்கு அவள் எத்தனை விளக்கங்களை அளிக்கவேண்டியிருந்திருக்கும்! முதலில், ராஜா எதற்காக பன்னிரெண்டு ஆண்டுகள் காட்டிலேயே இருந்தார் என்று எல்லோரும் கேட்பார்கள். இரண்டாவதாக, அத்தனை காலமும் ராஜாவின் மகள் ஏன் திருமணமாகாமலேயே இருக்கவேண்டும்? இது அபத்தமான விஷயமாகத்தான் அனைவருக்கும் தோன்றும்.
அப்படியே பாட்டி, ஒரு கதாசிரியராக, இந்தக் கட்டம் வரை சண்டையெதுவுமின்றி வந்திருக்க முடிந்தாலும் இளவசியின் திருமணம் என்ர விஷயம் அதனளவிலேயே பெரிய சச்சரவுகளை எழுப்பியிருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. முதலில், திருமணம் நடக்கவேயில்லை என்ற விஷயம். இரண்டாவது, மறவர் குலமான ஷத்திரிய வம்சத்த்ல் பிறந்த இளவசிக்கும் மந்திரம் ஓதும் பிராம்மணர் குலத்தில் பிறந்த பையனுக்கும் எப்படி திருமணம் நடக்கமுடியும்? உடனடியாக, இப்படிக் கதையைக் கொண்டுபோவதன் மூலம் கதாசிரியர் நம்முடைய சமூக நியதிகளுக்கெதிராக மறைமுகமாக போதிப்பதாக வாசகர்கள் அனுமானித்துக்கொண்டிருப்பார்கள். அது குறித்து செய்தித்தாள்களுக்கு கடிதங்கள் எழுதியனுப்புவார்கள்.
எனவெ, என்னுடைய பாட்டி மீண்டும் பாட்டியாகவே பிறவியெடுக்க வேண்டுமென்றும், எந்தவொரு சாபத்தாலும் அவளுடைய அதிர்ஷ்டங்கெட்ட பேரனாகப் பிறவியெடுத்துவிடலாகாது என்றும் என்னுடைய மனமாரப் பிரார்த்தித்துக்கொண்டேன்.
என்னுடைய மனம் மகிழ்ச்சியிலும், உற்சாகத்திலும் வேகமாகத் துடித்துக்கொண்டிருக்க, பாட்டியிடம் கேட்டேன்: “ அப்புறம் என்னாச்சு பாட்டி?
பாட்டி கதையைத் தொடர்ந்தாள்: திருமணத்திற்குப் பிறகு அந்த இளவரசி மிகுந்த வருத்தத்தோடும், மன உளைச்சலோடும் தன்னுடைய குட்டிக் கணவனைத் தன்னோடு அழைத்துச்சென்று ஏழு இறக்கைகளைக் கொண்டு ஒரு பெரிய அரண்மனையைக் கட்டிமுடித்து அதில் அவனைமிகுந்த கவனத்தோடு பேணிப்பராமரித்துவந்தாள்.
நான் என்னுடைய படுக்கையில் மேலும்கீழுமாய் துள்ளிக்குதித்தபடி, முன்னெப்போதையும்விட அதிக இறுக்கமாக திண்டுமெத்தையைக் கையில் பிடித்தபடி, ஆர்வமாகக் கேட்டேன்: “ அப்புறம் என்னாச்சு?
பாட்டி கதையைத் தொடர்ந்தாள்: “ அந்தச் சிறுவன் பள்ளிக்குச் சென்று தனது ஆசிரியர்களிடமிருந்து நிறைய பாடங்களைக் கற்றுக்கொண்டான். அவன் பெரியவனாக வளர்ந்துவந்தபோது அவனுடைய வகுப்புத்தோழர்கள் அவனிடம் கேட்க ஆரம்பித்தார்கள்: “ ஏழு இறக்கைகளைக்கொண்ட அந்த அரண்மனையில் உன்னோடு வசித்துவரும் அந்த அழகிய பெண் யார்?”. அந்தச் சிறுவனுக்கும் அவள் யார் என்பதைத் தெரிந்துகொள்ள மிகவும் ஆர்வமாயிருந்தது. ஒருநாள் தான் சுள்ளி பொறுக்கிக்கொண்டிருந்ததும், அந்த சமயம் ஏதோ களேபரம் பெரிய அலவில் ஏற்பட்டதும் மட்டுமே அவனுக்கு நினைவிலிருந்தது. ஆனால், அதெல்லாம் நடந்து எத்தனையோ வருடங்களாகிவிட்ட காரணத்தால் அவனுக்குத் தெளிவாக எதையும் நினைவுகூர இயலவில்லை.
நன்கைந்து வருடங்கள் இப்படியே ஓடிவிட்டன. அவனுடைய தோழர்கள் அவனிடம் எப்போதும் அதே கேள்வியைக் கேட்டுவந்தார்கள்: ஏழு இறக்கைகளைக்கொண்ட அந்த அரண்மனையில் உன்னோடு வசித்துவரும் அந்த அழகிய பெண் யார்?”.  அதைக் கேட்டு ஏதும் பதிலளீக்க இயலாதவனாய் அந்த குட்டிக்கணவன் தினமும் மாலையில் பள்ளியிலிருந்து வந்து வருத்தத்தோடு இளவரசியிடம் கூறுவான்: “ என்னுடைய தோழர்கள் என்னிடம் எப்பொழுதும் “ஏழு இறக்கைகளைக்கொண்ட அந்த அரண்மனையில் உன்னோடு வசித்துவரும் அந்த அழகிய பெண் யார்? என்று கேட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். எனக்கு எந்த பதிலையும் கூறத் தெரியவில்லை. தயவுசெய்து என்னிடம் சொல்லு. நீ யார்?
அவன் கேட்கும்போதெல்லாம் அந்த இளவரசி, இன்று வேண்டாம். இன்னொரு நாள் உன்னிடம் கண்டிப்பாக என்னைப்பற்றிக் கூறுகிறேன்”, என்று சொல்லிவிடுவாள். அந்த குட்டிக்கணவனும் தினமும் அதே கேள்வியை இளவரசியிடம் கேட்பான். “ நீ யார்?”. “ இன்று வேண்டாம். இன்னொரு நாள்  உன்னிடம் கண்டிப்பாக என்னைப் பற்றிக் கூறுகிறேன்”. இதேவிதத்தில் இன்னும் ஐந்தாறு வருடங்கள் கடந்துபோயின.
இறுதியில், குட்டிக்கணவன் அறவே பொறுமையிழந்துபோனான். “ அழகிய பெண்ணே, நீ மட்டும் எனக்கு இன்றே, இப்பொழுதே உன்னைப் பற்றிய விவரங்களைத் தெரிவிக்கவில்லையென்றால் ஏழு இறக்கைகளைக்கொண்ட இந்த அரண்மனையைவிட்டு நான் போய்விடுவேன்என்றான்.
நாளை என்னைப் பற்றி கண்டிப்பாகச் சொல்லிவிடுகிறேன்”, என்றாள் இளவரசி.
மறுநாள், அந்த இளஞன் பள்ளியிலிருந்து வந்ததுமே இளவரசியிடம், “ இப்போது சொல், நீ யாரென்று?”, எனக் கேட்டான். “ இரவு உணவு சாப்பிட்டுமுடித்த பிறகு, நீங்கள் படுக்கையிலிருக்கும்போது உங்களிடம் கண்டிப்பாகச் சோலுவேன்”, என்றாள்.
நல்லது”, என்று கூறிய அந்த இளைஞன் இரவு எப்போதடா வரும் என்று ஒவ்வொரு மணித்துளியையும் எண்ணத் தொடங்கினான்.
இரவுப்படுக்கையில் இளவரசி, மனதில் வண்ணமயமான கனவுகளோடு அந்தத் தங்கப்படுக்கையில் வெண்மலர்களைத் தூவிப்பரப்பி, அருகில் ஒரு பொன்விளக்கை நறுமணம் மிக்க எண்ணெய் ஊற்றி எரியவைத்து தன்னை ஓர் அழகிய நீலநிற ஆடையில் அலங்கரித்துக்கொண்டு, மிகுந்த ஆசையும், எதிர்பார்ப்புமாய் மணித்துளிகளை எண்ணத்தொடங்கினாள்.
அன்று மாலை அவளுடைய கணவனான அந்த இளைஞன் , ஆர்வத்தில் சாப்பிடவே முடியாதவனாய், ஒருவழியாய் உணவருந்தி முடித்தவுடன் தனது படுக்கையறைக்குச் சென்று அங்கு பொன்படுக்கையில் வெண்ணிறமலர்கள் துவிப்பரப்பட்டிருப்பதைப் பார்த்துத் தனக்குத்தானே கூறிக்கொண்டான்: “ இன்று ஏழு இறக்கைகளைக்கொண்ட இந்த அரண்மனையில் உள்ள இந்த அழகிய பெண் யாரென்று எனக்குக் கண்டிப்பாகத் தெரியப்போகிறது!”.
இளவரசி தனது உணவை சாப்பிட்டு முடித்தாள்.  பின், மெதுவாக படுக்கையறைக்குள் நுழைந்தாள். அன்றிரவு அவள் கண்டிப்பாக அந்தக் கேள்விக்கு விடையளிக்கவேண்டும். ஏழு இறக்கைகளைக் கொண்ட அந்த அரண்மனையில் வசிக்கும் அந்த அழகிய பெண் யார்?‘ என்ற கேள்விக்கு. அந்த விடையைச் சொல்வதற்காக அவள் படுக்கையிலிருந்த அந்த இளைஞனை நெருங்கிச் சென்றபோது தூவப்பட்டிருந்த மலர்களுக்கிடையிலிருந்து ஒரு பாம்பு வெளிப்பட்டு அவனைக் கடித்துவிட்டிருந்ததைப் பார்த்தாள். அவளுடைய குட்டிக்கணவன்மலர்ப்படுக்கையில் மரணத்தால் முகம் வெளிறிக் கிடந்தான்.
திடுமென, என்னுடைய இதயம் துடிப்பதை நிறுத்திவிட்டது. தொண்டையடைக்க, “அப்புறம் என்னாச்சு?என்று கேட்டேன்.
பாட்டி கூறினாள்: ‘அப்புறம்...
_ஆனால், கதையை மேலும்  தொடர்வதில் என்ன பயன்? இன்னுமின்னும் அசாத்தியமானவைகளுக்கே அது நம்மை இட்டுச் செல்லும். அந்த ஏழு வயதுச் சிறுவனுக்கு மரணத்திற்கு பிறகான இன்னும் சில ‘அப்புறம் என்னாச்சுகள் இருக்கின்றனவா என்பது தெரியாது. எந்தவொரு பாட்டியின் பாட்டியாலும் அதை நமக்குச் சொல்லவியலாது.
ஆனால், குழந்தையின் நம்பிக்கையும், விசுவாசமும் ஒருபோதும் தோல்வியை ஒப்புக்கொள்வதில்லை. அந்த இளைஞனை மீண்டும் உயிர்பெறச் செய்யவேண்டி மரணமேலங்கியையே இழுத்து அகற்றிவிடக் கூடியது. டியூஷன் வாத்தியாரில்லாத ஒரு மாலையில் கேட்கக்கிடைத்த இத்தகைய கதை இப்படி திடுமென ஒரு முடிவுக்கு வந்துவிடுவது பெரிய அநியாயமாகப் பட்டது சிறுவனுக்கு. எனவே, அவனுடைய பாட்டி தனது கதையை என்றும் மூடியிருக்கும் அறையாகிய அந்த மகத்தான ‘இறுதியிலிருந்து திரும்ப வரவழைக்கவேண்டியிருந்தது. ஆனால், அதை அவள் மிகச் சுலபமாகச் செய்துவிட்டாள். இறந்துவிட்ட அந்த இளஞனின் சடலத்தை ஒரு வாழைமரப்பட்டையின்மீது கிடத்ஹ்டி நதிநீரில் மிதந்துவரச்செய்து ஒரு மந்திரவாதியைக்கொண்டு சில உச்சாடனங்களை வாசிக்கச்செய்து அவனை மீண்டும் உயிர்ப்பித்துவிட்டாள்.

 அந்த மழையிரவிலும், அந்த மங்கலான விளக்கொளியிலும் மரணம் அந்தச் சிறுவனின் மனதில் தனது பயங்கரங்கள், குரூரங்களையெல்லாம் இழந்துவிடுகிறது. ஒரு இரவில் நேரும் ஆழ்ந்த உறக்கம் என்றவிதமாக மட்டுமே அது அந்தச் சிறுவன் மனதில் அர்த்தமாகிறது. அதைத் தாண்டி எதுவுமில்லை. கதை முடிகையில் அந்த களைத்த கண்ணிமைகளைத் தூக்கம் கவ்வியிழுக்கிறது. இவ்வாறாகவே நாம் உறக்கத்தின் முதுகில் மிதந்துவரும் குழந்தையின் சின்ன உடலை காலம் என்ற அசையா நீர்ப்பரப்பின்மேலாய் அனுப்பிவைக்கிறோம். காலையில் சில மந்திர உச்சாடங்களை வாசித்து மீண்டும் அவனை வாழ்வும், ஒளியும் நிறைந்த உலகிற்குள் மீட்டுக்கொண்டுவருகிறோம்..



Sunday, July 3, 2011

உயிர் அறிய....

உயிர் அறிய....

_அநாமிகா



ஆற்றுக்கு மேலாக நீண்டுபோகும் அந்த ரயில்வண்டித் தண்டவாளங்களில் வழக்கம்போல் அன்றாடம் ஊற்றெனச் சுரந்தவாறிருக்கும் எண்ணங்களின் துணையோடு நடந்துகொண்டி ருந்தான். தன்னந் தனியாக மேலே ஆகாயமும், கீழே சுழித்தோடும் ஆறுமாக நடந்துபோகும்போது மனதிற்குள் தளும்பும் எண்ணங்கள், அவை எத்தனை சாதாரண விஷயங் களைப் பற்றியதாக இருந்தாலும், ஒருவித உன்னதத் தன்மை கொண்டு விளங்கும்.
உன்னதம் என்பதே ஒரு கற்பிதம்தான்என்பான் அருமை நண்பன். நம் வாழ்க்கையில் மீள முடியாத இயந்திரத்தனத்தால் மீட்சியற்று அமிழ்ந்து போய் விடாமலிருப்பதற்காக நமக்கு நாமே உருவாக்கிக் கொண்ட ஒரு கற்பனை தான் உன்னதம்.
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. ஒரு குழந்தை சிரிப்பதைப் பார்க்கும் போது ஏற்படும் பரவசநிலை, மழைச்சாரல் மேலே படும்போது, அருமையான இசையைக் கேட்கும்போது, ஒரு அரிய வகைப் பூவைப் பார்க்கும்போது, ஏன், சிட்டுக்குருவியை, குட்டி முயலைப் பார்க்கும் போதுகூட மனதில் பொங்கும் ஒருவித மகிழ்வும், நெகிழ்வும் உன்னதநிலை தான். மொழியிலும், உள்ளடக்கத்திலும் தேர்ந்த ஒரு கவிதையைப் படிக்கும்போது அதன் வரியிடை வரிகளில் அமிழும்போது நமக்குள் ஏற்படும் உணர்வுகூட உன்னதம்தான்...
இதையெல்லாம் நான் ஏற்கவில்லைஎன்பது போல் நண்பன் மெதுவாகச் சிரிப்பான். ஆனால், ஒரு போதும் விவாதத்தை, எதிர்க் கருத்தை அதன் ஆரோக்கியமான நிலையிலிருந்து வாய்ச் சண்டை யாக, கருத்துச் சுதந்திர மறுப்பாகக் குறுக்கிவிட மாட்டான், கொச்சைப்படுத்திவிட மாட்டான். நாம் மாறுபடுகிறோம் என்பதை மனதார ஏற்கிறோம்என்று மென்முறுவல் பூத்தவாறு சொல்லி வேறு விஷயத்தைப்பற்றிப் பேச ஆரம்பித்து விடுவான்.
எத்தனையோ விஷயங்களில் மாறுபட்ட கருத்து உடையவர்களாக இருந்தும் எப்படி இருவரும் இத்தனை வருடங்கள் ஒருவருக்கொருவர் அன்பும், மரியாதையும் தந்தவண்ணமிருக்கும் நட்பினராக இருக்கிறோம் என்று இவனுக்கு சமயங்களில் ஆச்சரியமாக இருக்கும். யோசித்துப் பார்த்தால் எந்தவொரு விஷயத்திற்கும் ஒன்றுக்கு மேற்பட்ட கோணங்கள், பார்வைகள் இருக்க வழியுண்டு என்ற அடிப்படையான புரிதல் தங்களிடம் இருந்தது தான் தங்களுக்கிடையேயான நட்பு நீடித்து வருவதற்குக் காரணம் என்பது விளங்கும். இந்த அடிப்படை விஷயம் குறித்துக்கூட அவர்கள் காரசாரமாக விவாதிப்பது உண்டு.
எந்தவொரு விஷயத்திற்கும் ஒன்றுக்கு மேற்பட்ட பார்வைகள், கோணங்கள், அர்த்தச் சாத்தியப்பாடுகள் உண்டு என்பது உண்மைதான். எனக்கு நியாயமாகத் தெரிவது இன்னொருவருக்கு அநியாயமாகக்கூடத் தெரியலாம். அதே சமயம் அடிப்படையான நியாயம், நீதி, நேர்மை என்பது ஆளுக்கு ஆள் மாறுபடவியலாதது. மாறுபடலாகாதது என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும், என்று ஒரு தீவிரதொனியில் கூறுவான் நண்பன்.
வேலை நிமித்தம் இரண்டு வருடங்களுக்கு முன்பு வடநாட்டின் வடகோடிக்கோ, தென்கோடிக்கோ ரயிலேறிச் சென்றவன். சமவயதினர் என்பதால் மட்டும் ஒருவரோடு சிநேகமாகிவிட முடிகிறதா என்ன? நண்பன் இடம் அவனால் மட்டுமே இட்டு நிரப்பப் படக் கூடியதாய், அவனுடைய மின்னஞ்சல்களாலும், கைபேசிக் குறுஞ்செய்திகளாலும், சமயங்களில் அவனுடைய மௌனங்களாலும்கூட இட்டு நிரப்பப் பட்டுக் கொண்டிருந்தது.
இன்றோ, நாளையோ ஒரு வாரம் விடுமுறையில் ஊருக்கு வருவதால் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான் காலையில். குறுஞ்செய்தியைப் படித்தது முதல் மன திற்குள் ஒரு பரபரப்பும், தழுதழுப்பும் நெகிழ்வாகி யிருந்தது. அத்தகைய அரிய மனநிலை உருவாகும் போதெல்லாம் அவன் இந்த ஆற்றுப் பாலத்தின் மீது நடக்க ஆரம்பித்துவிடுவான். அவ்வேளையில் இதுவும் ஒரு உன்னத உணர்வுதான். அப்படி நடக்கும் போது சில சமயங்களில் ரயில் வரும் ஓசை கேட்கும். உடனே பாலத்தில் பக்கவாட்டுப் பகுதிகளில் குறிப்பிட்ட இடைவெளிகளில் இருக்கக்கூடிய சதுரவடிவ, மூன்று பக்கங்களிலும் கம்பிக் கிராதியிட்ட மேடையில் ஏறி நின்றுகொண்டு விடுவான். அண்மையேகி வரும் ரயில் தன்னைக் கடந்து போகும்போது அடி முதல் முடி வரை அதிரும். பாதுகாப்பாய் நின்று கொண்டிருக்கிறோம் என்ற தெளிவில் அந்த அதிர்வு கூட அச்சத்தைத் தராமல் ஆனந்தமாக இருக்கும்.
இப்பொழுதுகூட ரயில் வரும் நேரம்தான். ஆற்றுப் பாலத்தைக் கடந்து போனால் சிறிது தொலைவில் வரக்கூடிய ரயில் நிறுத்தத்தில் ஐந்து நிமிடங்கள் நின்றுவிட்டுச் செல்லும் அந்த வண்டியில்தான் நண்பன் வரக்கூடும். ஆற்றுப்பாலத்தின் பக்கவாட்டிலுள்ள சதுர வடிவ மேடையில் மேலே ஆகாயமும், கீழே ஆறுமாக தான் நின்று கொண்டிருக்க தன்னைக் கடந்து போகும் ரயிலிலிருந்து நண்பன் எட்டிப் பார்த்து ஆச்சரியத்தில் கூவியவாறு தலையசைப்பதாய்க் கற்பனை செய்து கொண்டான். புன்னகையோடு சதுரவடிவ மேடைக் காய்த் திரும்பிய போது தான் சுரீரென உறைத்தது.
இருப்புப் பாதையின் பக்கவாட்டுப் பகுதிகளில் அந்தச் சதுரவடிவ மேடைகள் எங்கேயும் இல்லை. சே, காலையில் தான் ஊரெங்கும் ஒலி பெருக்கியில் அறிவித்துவிட்டுச் சென்றார்கள். ஆற்றின் மேலுள்ள இருப்புப்பாதை வழியாக யாரும் போக வேண்டாம். பலவீனப்பட்டுப் போயுள்ள சதுரவடிவ மேடைகள் அகற்றப்பட்டுள்ளன. நாளை அல்லது மறுநாள் புதிய, உறுதியான மேடைகள் பொருத்தப்பட்டுவிடும். அதுவரை சுற்றுவழிச் சாலையைப் பயன்படுத்தவும். ஒத்துழைப்பைத் தரவும்.
இப்பொழுது அந்த வாசகங்கள் அத்தனை தெளிவாக, அட்சர சுத்தமாக உட்செவியில் கேட்டது. உடலெங்கும் வியர்க்க ஆரம்பித்தது. உதறலெடுக்க ஆரம்பித்தது. சே, இதை எப்படி மறந்து போனோம். திரும்பிவிடலாமா என்று பின்னால் திரும்பிப் பார்த்தான். பாதிவழி வந்தாயிற்று. எந்நேரமும் ரயில் வந்துவிடும். திரும்பிச் சென்றாலும் ஆபத்து, முன்னேறிச் சென்றாலும் ஆபத்து. என்ன செய்வது...
கால்கள் நடுங்க ஆரம்பித்ததில் நடை தடுக்கியது. பக்கவாட்டு மேடை இருக்கும் பாதுகாப்புணர்வு தரும் தெம்பில் இருப்புப் பாதையின் இடையிடையே அமைந்துள்ள சிறு இடைவெளிகளை அநாயாசமாகக் கடக்க முடியும். இப்பொழுது அந்த இடைவெளி களினூடாய்த் தெரிந்த ஆறு ஏதோ ஒரு பயங்கர காந்த சக்தியோடு அவனுடைய பாதங்களைக் கீழிழுப் பதிலேயே குறியாக இருந்தது. வளைவில் ரயில் வந்து விட்டால் பின் இவனிருக்குமிடம் வர இரண்டு நிமிடங்கள்தான். வளைவில் அதன் இரும்பு முகம் எந்த நிமிடத்திலும் தெரியும்.
என்ன செய்வது... அப்படியே கட்டையாக இருப்புப் பாதையின் நடுவில் கண்களை இறுக மூடிப் படுத்துக் கொண்டு விட்டால்... திரைப்படங்களில் காண்பிப்பது போல் தப்பித்துவிட முடியுமா...? அல்லது, நடுவிலுள்ள கட்டையை அடிப்புறத்திலிருந்து இறுகப் பற்றியவாறு தொங்கினால்...? கையும், விரல்களும் தாங்குமா... மடமடவென்று கயிறு கட்டித் தொங்கினால்...? இடுப்பில் அரைஞாண்கயிறுகூட இல்லை. என்ன செய்வது... கைபேசியை எடுத்து யாருக்கேனும் விவரம் தெரிவிக்கலாமா... என்னவென்று தெரிவிப்பது... கைபேசி காற்சட்டைப் பையில் இருக்கிறதா, இல்லையா...
யோசிக்க நேரமில்லை. இந்தத் தருணத்தை நடந்து தான் கடக்க வேண்டும். பறக்க வழியில்லை. ஆற்றில் குதித்தால்... நீந்தவும் தெரியாது... ஆற்றில் பாறைகள் நிறையவுண்டு எனவும் கேள்விப்பட்டிருக்கிறான்...
உடல் வேகமாக உதறலெடுக்கத் தொடங்கியதில் ஓரெட்டு எடுத்து வைப்பதே பிரயத்தனமாகிவிட்டது. என்ன செய்வது... யோசனையில் நிற்கலாகாது... நடந்து தான் கடக்க வேண்டும் இந்த இக்கட்டான தருணத்தை... கடப்பேனோ... காவு கொள்ளப்படுவேனோ... கடவுளே...! நான் யாருக்காவது, ஏதேனும் தவறு செய்திருந்தால் என்னை மன்னித்துவிடு. எனக்காகவும், மற்றவர்களுக் காகவும் நான் வாழ எனக்கிருக்கும் நாட்கள் இல்லா மலாகிவிடக் கூடாது...
உயிர் வெல்லம்என்பான் நண்பன். உயிர் அதைவிட மேல்... உயிர் அனையஎன்பார்கள். எல்லாமே உயிர் அறியத்தான்... நான் வாழ வேண்டும். என் மனவீச்சில் ஏதோ காரணத்தால் அந்த ரயில் தாமதமாகி விடலாகாதா... நான் வாழ வேண்டும்... நான் வாழ வேண்டும்...
ஒரு அரைமயக்க நிலையில் ஆற்றின் மேலிருந்த இருப்புப் பாதையைக் கடந்து கீழிறங்கி அதீதக் களைப்பை மனமும், உடலும் துல்லியமாக உணர வீடு நோக்கி நடக்க ஆரம்பித்து, வீட்டின் வாசலை அடையும் போதுதான் அவன் அறிவு மீண்டும் இயங்கத் தொடங்கியது. ஏன், அந்த ரயில் வர வில்லை... எதனாலோ தாமதமாகியிருக்கிறது. நான் தப்பித்தேன்... உயிர் அறிய நான் பிழைத்திருக்கிறேன்... வாழப் போகிறேன்.
வீட்டினுள் நுழையும்போது கூடத்திலிருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் தென்னிந்திய ரயில் வண்டி ஒன்றில் வெடிகுண்டு வெடித்து ரணகளமாகி விட்டதாகச் செய்தி அலற ஆரம்பித்தது.


[*19 மே 2011 10:43, தேதியிட்ட உங்கள் நூலகம் இதழில் வெளியான சிறுகதை]