Saturday, November 27, 2010

விசாரணைகள் _ ரிஷியின் கவிதைகள்(புதியன-திண்ணையில் வெளியாகியவை)

ரிஷியின் கவிதைகள்:


விசாரணைகள்
1)     எனக்கான நீதி

அப்படியொரு மூர்க்கத்தோடு என்னைத் தாக்குகிறாய்.
அது காலத்தின் கட்டாயம் என்று தத்துவமாக்குகிறாய்.
நீக்குப்போக்குத் தெரிந்து நடந்துகொள்வதெனில் நான்
என்னை ஒரு கொலைகாரியாகப் புரிந்துகொண்டு நீ மூட்டும்
 தீக்கிரையாக்கிக்கொள்ள வேண்டும்
இன்றைய உன் மாடமாளிகைக்கும், கூடகோபுரங்களுக்கும் அருகேகூட
படுக்க இடமற்ற உண்ண உணவற்ற கணக்கற்றோர்.
எல்லாவற்றிற்கும் என்னையே காரணமாக்கி குற்றவாளிக்கூண்டில்
நிறுத்துகிறாய்
கரும்புள்ளி செம்புள்ளி குத்தி
கழுதைமேல் ஏற்றியனுப்ப
அரும்பாடு படுகிறாய்
விசாரணையற்ற உன் நீதிமன்றத்தில் என் பக்க நியாயத்தை
எடுத்துரைப்பது கூட எக்குத்தப்பான காரியமாகி
என் தண்டனை கூட்டப்பட்டுவிடும்
என்பது எனக்குத் தெரியும்தான்.
என்ன செய்ய
எனக்கான நீதியை நான் தானே
தேடிக்கொண்டாகவேண்டும்.

2)    வரைபடத்தின் இருப்பு

அழிப்பானைத் தேடிச் சிரமப்படாதே.
வரைபடத்திலிருந்து என்னை நானே விலக்கிக்கொண்டுவிட்டேன்
வழிதவறிப்போகாமல் கவனமாய் உன்னைக் காப்பாற்றிக்கொள்
காட்டுவழியில் கரடிகளும், புலிகளும், காட்டெருமைகளும் அதிகம்.
நீ எழுதுதாளில் ரத்தம்குடிப்பது வழக்கம்.
அவையோ உண்மையாகவே உன்னை இரையாக்கி விழுங்கிவிடும்.
விழிப்பாயிரு.
உதாரணங்காட்ட ஆள்தேவைப்படும்போது
என்னை நினைவுகூர வேண்டாம்.
நிதானமாய் சிந்தித்துப்பார்....
வரைபடத்தின் இருப்பே
உன் வருகைக்கு முன்னாலும் கடல்களும், பயணங்களும் இருந்தன
என்பதை உணர்த்தவில்லையா உனக்கு?
உண்மையிலேயே உன்னைப் பார்க்கப் பாவமாக இருக்கிறது.



3) அட்சர லட்சமும் அனேக கோடீசுவர்களும்
அட்சரம் லட்சம் பெறுமென்றால்
அநேக கோடீசுவரர்களை அடையாளங்காட்ட முடியும் என்னால்.
அடேடே, அவர்கள் வீடுகளைக் கொள்ளையடிக்கத் திட்டம்தீட்டும்
குறுக்குப்புத்தியைக்
காதைப் பிடித்துத் திருகி அடக்கிவை
அதையும் மீறிப்போனாலும் பாவம்
அதற்குத் தெரிந்த குபேர சம்பத்துகள் அங்கிருக்காது.
அந்த வீடுகளில் தரையிலும், பரணிலும், அட்டைப்பெட்டிகளிலும், தலையணகளின் கீழும், இன்னும் மனங்களின் மேற்பரப்பிலும், உள்ளாழங்களிலும்
நீண்டு, சுருண்டு கிடக்கும் விலைமதிப்பற்றவைகளை
கண்டாலும் எரிச்சலில் கண்ணுருட்டி உதடுபிதுக்கி அவற்றைக்
கால்களால் எத்தித் தள்ளிவதைவிட என்னசெய்துவிடுவாய் பெரிதாய்?

அதனதன் இடத்தில் அவையவை
கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்.


4)   முதிர்வயதின் மகத்துவம்

யாராலும் பார்க்கப்படாமல்
பார்க்கப்படுகிறோமோ என்ற
தர்மசங்கடவுணர்வோ
பார்க்கப்படவில்லையே என்ற
பரிதவிப்போ
இல்லாமல்
ஒரு சிற்றுண்டிவிடுதியில் வெகு இயல்பாய்
நுழைந்து
சீராகச் சுழன்றுகொண்டிருந்த மின்விசிறியின் கீழ்
எனக்கான இடத்தைத் தேடிக்கொண்டபோது
முதிர்வயதின் மகத்துவம் புரிந்தது.



5) ஒருவரைப் போல் ஏழு பேர்

இந்தத் தெருவில் நடக்கும்போதெல்லாம் நான்
இன்னொரு தெருவிலும் நடந்துபோய்க்கொண்டிருக்கிறேன்.
இதை எழுதும்போதெல்லாம்
நான் வேறொன்றையும் எழுதியபடியே.
இன்றைக்குத் தூற்றிக்கொண்டிருக்கையிலேயே
போற்றிக்கொண்டுமிருக்கிறேன் அன்றைக்கு.
அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்.
இன்று வந்ததும் அதே நிலா
ஊ லலலா.....
ஒருவரைப் போல் ஏழு பேர் இருப்பார்களாம்.
அவரவருக்குள்ளேயே தான் போலும்
எனக்கான தருணத்தில் ஒரு முழுமையாகிவிடலாம் நானும்.


6 இனியான என் காலம்

சுவர்களினால் கட்டப்படும் வரம்பெல்லைகள் புரியாத பருவம்.
அடுத்தவீட்டுக்குழந்தைக்கு என் வீட்டின் மூடிய கதவுகள்
பெரும்புதிராய்.
அதன் மென்கைகளால் சன்னமாய் தட்டுகிறது
சற்றே வன்மத்தோடு அடிக்கிறது.
தன் பிஞ்சு உடலை ஒரு பாறையாக்கி
மோதிப்பார்க்கிறது.
மழலைப்பேச்சில் அழைப்புமணியொலிக்கச் செய்கிறது.
எல்லாவற்றையும் கடைக்கண்ணால் கவனித்துக்கொண்டிருக்கும் தாய்க்கு
நான் சற்று நெகிழ்ந்தால்
தனக்கான தனியுலகத்தில் சற்றே இளைப்பாற முடியும்.
சற்றே என்பது சில பல மணிநேரங்களாக நீண்டதுண்டு
இதற்கு முன்பிருந்த வீடுகளில்.
இருந்தது இருந்தவாறு இருக்கிறேன்.
எனக்கான காலம் இன்னும் எவ்வளவு என்று
புரியாத பருவத்தில்.

7)

இந்த நள்ளிரவில் இந்தக் கவிதையை எழுதிக்கொண்டிருக்கும் நேரம்
தனலட்சுமி;
நாளைக்காலை கடன் அட்டைக்கான மாதாந்திரத்தொகையைக்
கட்டமுடியாமல் தவிக்கும்நேரம்-
தரித்திரலட்சுமி
தனமோ, தரித்திரமோ
லட்சுமி லட்சுமி தான்!



8

பெயரில் என்ன இருக்கிறது?
பெயரில்லாமல் என்ன இருக்கிறது?
எல்லாம் இருக்கிறது.
எதுவும் இல்லை
இவ்விரண்டிற்கும் இடையே தான் எல்லாமே
 இல்லாமலிருக்கிறது.




9

அது ஏனோ தெரியவில்லை
அடித்துப்போட்டு தரைசாய்த்த பின்னும்
திருப்தியாகாமல்
அடுத்த அரைமணிநேரமும்
அடித்துக்கொண்டேயிருக்கிறார்கள்.
 வலியின் வலியறியா
வெள்ளித்திரைவாசிகள்.



10

கடத்தப்பட்ட தந்தமும், சந்தனமும் என்னவாயிற்று?
காலாவதி மருந்து மாத்திரைகள், உணவுப்பொருட்கள்,
கள்ள வோட்டு, காசுக்கு வோட்டு
கல்வி கற்கக் கையூட்டு, பள்ளி கட்டக் கையூட்டு
கால் நூற்றாண்டுக்கும் மேலாக
நல்லமுறையில் இயங்கிவரும் கிராமப்பள்ளி
தொடர்ந்து நடக்கத் தரப்பட வேண்டும் ஒரு தொகை.
வகைவகையாய் வதைகள் வகுத்துரைக்கப்படுகின்றன
வறுமைக்கோட்டிற்குக் கீழே பெருகும் மக்கட்தொகை
நடுத்தர மக்களை விலையேற்றங்கள் ஏறிமிதிக்க-
நகைக்கடைகள் நிரம்பிவழிகின்றன
நாறும் சாக்கடைகளும்.


கடைசிக் கண்ணி கசாபை
தூக்கிலேற்ற வேண்டும் சீக்கிரமே என்ற முழக்கங்கள் கேட்கிறது.
முதல் கண்ணிகளை ?

எனக்காகும் கேள்விகள்
எல்லோருக்காகவும்.